திருக்கடவூர் வீரட்டம்


பண் :

பாடல் எண் : 1

பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி யுணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

துவாரங்கள் பல உடைய உடம்பெனும் மாயப் பண்டங்களாயப் போகந் தரும் சாதனங்களான மாதர் தொகுதியில் ஏற்படும் பற்றை அறவொழிக்க வேண்டில் சிவபெருமானுக்குத் தீபம் ஏற்றித் தூபம் இட்டு வழிபடும் திருத்தொண்டுகளை விரும்பி மேற்கொள்ளுங்கள் . உள்ளமாகிய தகழியிலே உயிராகிய திரியை முறுக்கியிட்டு ஞானமாகிய தீபமேற்றிக் கொண்டிருந்து உணரு மாற்றால் உணரவல்லவர்களின் கொடுமைகள் அனைத்தையும் போக்குவர் திருக்கடவூர்ப் பெருமான் .

குறிப்புரை :

பொள்ளத்த - துளைகளையுடைய . ` பொள்ளல் ` என்பதன் அடியாக ` பொள்ளத்த ` என்ற பெயரெச்சம் அமையாது . பொள்ளம் - துளை . காயம் - உடல் . மாயப் பொருள் - பொய்ப் பொருள் . போகமாதர் - போகத்திற்குத் துணையாகிய மகளிர் . வெள்ளம் - மிகுதி . ` போக ` என்று வினையெச்சமாகக் கொண்டு , ` புலன்களைப் போகநீக்கி ` ( தி .4 ப .32 பா .9) ` பங்கத்தைப் போகமாற்றி ` ( தி .4 ப .75 பா .8) ` மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப் போகமாற்றி ` ( தி .6 ப .5 பா .1) என்புழிப்போல உரைத்தலுமாம் . விளக்குத் தூபம் :- உம்மைத் தொகை . ` தூப தீபம் `. உள்ளத்த திரி - உள்ளமாகிய தகளியின்கண் உள்ள உயிராகிய திரி . உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிர் எனும் திரி மயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் , கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே ` (தி .6 ப .5 பா .4) என்பதில் ஞான விளக்கிற்குரியன அனைத்தும் உணருமாறுணர்த்தலும் காண்க . கள்ளம் :- (தி .6 ப .45 பா .1 கொடுமை . (தி .6 ப .31 பா .3. ` நறப்படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறுஞ்சாந்தம் கொண்டேத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவாரூர் ` ( தி .6 ப .30 பா .5).

பண் :

பாடல் எண் : 2

மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி யாடிடும் பத்தர்க் கென்றும்
கண்ணிடை மணியர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

இந்நிலவுலகிலே உமக்குக் கிட்டியுள்ள மனித உடம்பாகிய கூட்டினைப் பெருமையாகக் கருதி நீங்கள் மயக்கந்தரும் இவ்வுலக வாழ்வில் ஈடுபடுவீராயின் , யமலோகத்திலுள்ள தருமராசர் உம் உடம்பிலிருந்து உயிரைப் பிரிக்க விரும்பினால் அதனை அப்பொழுது தடுக்க வல்லவர் யாவர் உளார் ? பண்களோடு சுவையாக எம்பெருமான் புகழைப் பாடிக் கூத்தாடும் அடியவர்களுக்கெல்லாம் கண்மணியைப் போன்றிருந்து அவர்கள் உய்ய வழிகாட்டுகிறார் கடவூர் வீரட்டனார் .

குறிப்புரை :

மண்ணிடை - ( இந் ) நிலவுலகில் , குரம்பை - கூடு ; இங்கு உடற்கூடு . ` பிணிமேய்ந்திருந்த இருகாற் குரம்பை இது நான் உடையது ` ( தி .4 ப .113 பா .2). ` மண்ணாய மாயக்குரம்பை ` ( தி .6 ப .12 பா .5). மதித்து - பொருளாகக் கருதியுணர்ந்து . மையல் - மயக்கம் ; செருக்கு . தரும ராசன் :- ` எமதருமன் ` ( தி .1 ப .49 பா .2). விலக்குவார் ஆர் - உடலையும் உயிரையும் கூறுபடுத்தல் வேண்டா என்று தடுத்துக் காப்பவர் எவர் ? திருக்கடவூர் வீரட்டானர் அன்றி வேறு ஒருவரும் இலர் . பத்தர்க்குப் பாட்டும் ஆட்டும் பண்ணின்பமும் உரிமையாதலை உணர்க . ` கண்மணி போலும் :-` அண்மையும் எளிமையும் இன்றியமை யாமையும் ஒப்புயர்வில்லாத வண்மையும் பிறவும் குறித்த உவமம் . ` கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் காவாய் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம் `. ` அணியாய்த் திருநீறணிவார்கள் கண்ணின் மணியே ... ... பணியத் தொடும் போது மூர்ச்சை துயர் அகல நீற்றை இடும்போதகல்வாய் இதென் `? ( சன்மார்க்க சித்தியார் .6 ) ` முகத்தே இருகண் ... ... சிவாய அருட்குருவே ` ( நிட்டை விளக்கம் . 23 ) ` உலகவுயிர்க்கெல்லாம் ஒரு கண்ணே ` ( இருபா இருபஃது . 20 ).

பண் :

பாடல் எண் : 3

பொருத்திய குரம்பை தன்னுட் பொய்ந்நடை செலுத்து கின்றீர்
ஒருத்தனை யுணர மாட்டீ ருள்ளத்திற் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறு தன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினி லிருப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

உயிரைத் தன்னுள் பொருந்தச் செய்த மனித உடம்பில் இருந்து பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர் . உணர வேண்டிய ஒப்பற்ற கடவூர் வீரட்டராகிய அவரை உணர்ந்து , பெருமானாரை உணராதீராய் மனத்தில் ஏற்பட்டுள்ள தீங்கான எண்ணங்களை நீக்காதீராய் உள்ளீர் . தம்மைத் துன்புறுத்தும் ஐம்பொறிகளாகிய களிறுகளைச் செயற்படாதொழியச் செய்யும் வழியிலே முயன்று அவற்றை அடக்கிய ஞானியருடைய கருத்தில் எப்போதும் உள்ளார் கடவூர் வீரட்டனார் .

குறிப்புரை :

பொருத்திய - உயிரைத் தன்னுட் பொருந்தச் செய்த . குரம்பை (- குடில் ) தி .4 ப .25 பா .6; ப .31 பா .2; ப .42 பா .1; ` முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடுகுரம்பை ` ( தி .4 ப .54 பா .3). பொய்ந்நடை :- மலநடை . அருள் நடை செலுத்தல் வேண்டும் என்றவாறு . ஒருத்தன் - ` ஏகன் ` ` ஒன்றலா வொன்று ` ` ஈறலாவொன்று `. வருத்தின களிறு :- ஐம்புலக்களிறு . ` தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி ... ... வழிபாடு செய்யும் இடம் `. வருத்தும் ஆ - வருத்தஞ்செய்யும் ஆறு . அக்களிற்றை வருத்தும் வன்மை சிவனடியார்க்குள்ளது . வல்லார் - பொறிவாயிலைந்தவித்த ஞானநெறியார் . ` புலன் அடக்கித் தம்முதற்கட் புக்குறுவர் போதார் தலனடக்கும் ஆமைதக ` ( திருவருட்பயன் . 94 )

பண் :

பாடல் எண் : 4

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

வைகறையாமத்தில் நீராடிப் பெருமானிடத்தில் பத்தர்களாகி அரும்புகளையும் மலர்களையும் முறைப்படி பறித்துக் கொண்டு உள்ளத்தில் அன்பை ஆக்கி விருப்பத்தோடு நல்ல விளக்குகளையும் தூபங்களையும் முறைப்படி இட்டு வழிபடவல்ல அடியவர்களுக்குக் கருப்பங்கட்டி போல இனிப்பவராவார் கடவூர் வீரட்டனார் .

குறிப்புரை :

பெரும்புலர்காலை :- தி .4 ப .3 பா .8. இரவின் நான்காவது கூறு . பித்தன் - தம் திருவடிக்கே பித்துண்டாக்குமவன் . ` பித்துப் பத்த ரினத்தாய் ` விளைப்பவரும் ஆம் . பத்தர் - தொண்டர் . பித்தரென்பதும் பாடம் . அரும்பொடு ... கொண்டு :- ` அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணாவூரும் ... ஊரல்ல அடவிகாடே ` ( தி .6 ப .95 பா .5). ஆர்வம் - பெறக்கருதிய பொருள்மேற் செய்யும் பற்று . ` விரும்பிநல் விளக்குத் தூபம் ` :- பா .1 ( காஞ்சிப் . சிவ புண்ணியப் . 65 ). விதி - வேதாகமவிதி . இடவல்லார் - இடுதற்குப் பொருள் வலிமை , துணை வலிமை , மன வலிமை முதலிய பலவும் உடையவர் . கரும்பினிற் கட்டி :- கருப்பங் கட்டி . கரும்பினது இனிய கட்டி . ` திருப்புத்தூரனைச் சிந்தை செயச் செயக் கருப்புச் சாற்றினும் அண்ணிக்கும் காண்மினே ` ( தி .5 ப .61 பா .5). தி .6 ப . 66 பா . 9, தி .5 ப .93 பா .7 பார்க்க .

பண் :

பாடல் எண் : 5

தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே விளக்கத்திற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கடவூர் வீரட்டனீரே ! நாணத்தக்க செயல்களையே செய்து வாழ்நாளைக் கடத்தி , ஏற்ற செயல் எதுவும் செய்யாமல் , தவறு செய்வதைத் தடுத்து நல்வழிப்படுத்துவாரும் ஒருவரும் இல்லாமையால் , செஞ்சுடர் விளக்கத்தில் தானே கூவித் தானே அடங்கும் கோழியைப் போல உள்ளேன் . என் மனத்தினுள்ளே ஐம்பொறிகளும் கலக்கத்தைத் தருகின்றன . யமனுடைய ஏவலர்கள் வந்து கலக்குதலால் யான் யம பயத்தாற் கலங்குகின்றேன் .

குறிப்புரை :

தலக்கம் - இலச்சை ; நாணம் ; வெட்கம் . ` தலக் கற்றுச் சொல்லும்படியான ஆற்றாமை ` ( திருவாய்மொழி . ஈடு . 10. 10 ). தலக்கமே - வெட்கப்படத்தக்க இழி செயல்களையே ; ஆகுபெயர் . ` தக்கவாறு ஒன்றும் இன்றி ` என்றமையாற் செய்து வாழ்ந்தவாறு தகாதவாறு என்பது புலனாயிற்று . அது ` தலக்கமே செய்து வாழ்ந்தது ` ஆகும் . தகாததாதலின் விலக்குதல் வேண்டிற்று . விலக்குவாரிலர் . ` விளக்கத்திற் கோழி போன்றேன் ` என்று இறந்தகாலத்தாற் குறித்தார் . ` செய்து வாழ்ந்து என்றதும் அக்காலத்தே . தக்கவாறு ஒன்றும் இன்று என்று தீர்த்துரைத்தார் . தகாதவாறு செய்தலை விலக்குவாரிலர் என்று தெளிவித்தார் . இவற்றை நோக்கின் , கோழியை விட்டிலாகக் கொண்டுரைத்தல் பொருந்தாதெனல் புலப்படும் . கோழிக்கு விட்டில் என்ற பொருளில்லை . செஞ்சுடர் விளக்கத்திற் கூவுங் கோழியை விலக்குவார் உளரோ ` கோழி தானே கூவித் தானே அடங்கும் . அவ்வாறே தாம் தகாதவாறு செய்தலை விலக்குவாரின்மையால் தாமே செய்து தாமே தவிரற்பாலராயிருந்ததை அறிவித்து , கலக்க வந்த காலனார் தமர்களை விலக்கி மார்க்கண்டேயரைக் காத்ததுபோல , அத்தகாத செயலின் விலக்கித் தம்மையும் காத்தருள வேண்டினார் . மலங்கல் , மலக்கல் , மலக்கம் . ` ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய ` ( தி .8 திருவாசகம் . 1). ` மலக்கிட்டு ( தி .4 ப .1 பா .8). மலக்குவார் - கலக்குவார் . ( திருவிருத்தம் . 57; திருவாய்மொழி . 6.4.9 ). ` கலக்குகின்றேன் ` எனல் பொருந்தாது . ` வீரட்டனீரே ` என்று முன்னிலையாக தி .4 26 ஆவது திருப்பதிகத்திற் கூறியதுபோல இது முதலிய நான்கனீற்றிலும் உளது .

பண் :

பாடல் எண் : 6

பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரி றைத்து
வழியிடை வாழ மாட்டேன் மாயமுந் தெளிய கில்லேன்
அழிவுடைத் தாய வாழ்க்கை யைவரா லலைக்கப் பட்டுக்
கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கடவூர் வீரட்டனீரே ! குறைபாடுகள் யாவும் உள்ள இந்த உடம்பாகிய பயன் அற்ற பாழ் நிலத்தில் , பயன்படும் நீரை வீணாகப் பாய்ச்சி , நேரிய வழியில் வாழ மாட்டாதேனாய் , இவ்வுலக வஞ்சனையை உள்ளவாறு தெளிந்து உணரமாட்டேனாய் , பாழாகும் வாழ்க்கையை உடைய ஐம்பொறிகளால் பலவாறாக வருத்தப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணி போல உள்ளேன் .

குறிப்புரை :

பழியுடையாக்கை :- பொய்யுடல் , புலாலுடல் , அழியுடல் , சோற்றுத் துருத்தி , புழுக்கூடு , வீறிலிநடைக்கூடம் என்பன முதலியவாகப் பழிக்கப்படும் உடம்பு . பட்டினத்தார் அருளிய அகவற்பாக்களை இங்கு நோக்குக . பாழுக்கே - பாழான நிலத்துக்கே . விளை பயனில்லாதது பாழ் எனப்பட்டது . ` ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே ` ( தி .8 திருவாசகம் . 325). ` பாழுக்கே நீர் இறைத்தேன் ` ( தி .4 ப .33 பா .8; ப .52. பா .9). வழியிடை - வேதாகமங்களில் விதித்த வழியில் ; அருள் நெறியில் ; ` நிலை நிலையாப் பொருளுணர்ந்து பற்றிகந்து கரணம் ஒரு நெறியே செல்லப் புலனெறி நீத்து அருள் வழிபோய்ப் போதமாந் தன்வலியைப் பொத்தி நின்ற மலவலி விட்டு அகல அரா உமிழ்ந்த மதிபோல் விளங்கி மாறியாடுந் தலைவனடி நிழல் பிரியாப் பேரின்பக் கதி அடைந்தான் `. ( திருவிளையாடல் . 27-28 .) மாயம் - மயக்கம் . தெளிவுக்கு மறுதலை அது . வாழ்க்கை நிலையில்லாதது . அழிவு :- காரியத்துவம் நீங்கிக் காரணத்துவம் உறுதல் . ஐவர் :- ` காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றலொட்டார் மாயமே என்றஞ்சுகின்றேன் ` ( தி .1 ப .50 பா .7). ` அஞ்சினால் அடர்க்கப் பட்டிங்குழிதரும் ஆதனேன் ` ( தி .4 ப .26 பா .3). ` கழியிடைத் தோணி போன்றேன் `:- கரையேறாமலும் கடலிடை யாடாமலும் இருக்குந் தோணிபோல உடலிடை இனிது நில்லாமலும் உன் திருவருள் வெள்ளத்தில் முழுகாமலும் உள்ளேன் .

பண் :

பாடல் எண் : 7

மாயத்தை யறிய மாட்டேன் மையல்கொண் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தா னினைய மாட்டே னீதனேன் நீசனே னான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

தலைக்கோலம் அணிந்தவனே ! பிறப்பில்லாதவனே ! கடவூர் வீரட்டனே ! பொய்ப்பொருளைப் பொய்ப்பொருள் என்று அறியமாட்டாதேனாய் மயக்கம் பொருந்திய மனத்தேனாகிப் பேயை ஒத்து அலைந்து திரிந்து , கோட்டானைப் போலத் தெளிவின்றிக் கலங்குகிறேன் . அன்போடு உன்னைத் தியானிக்க ஆற்றல் இல்லாத , கீழாருள் கீழேனாகிய அடியேன் , இவ்வுடம்பை இழப்பதற்கும் மனம் இல்லாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

மாயத்தை அறியமாட்டேன் - பொய்ப் பொருளைப் பொய்ப் பொருள் என்று ( ம் மெய்ப்பொருளை மெய்ப் பொருள் என்றும் ) அறியவலியில்லேன் . மையல் - மயக்கம் . பேய் ஒத்தல் அலைந்து திரிதலால் . கூகையாதல் தெளிவின்றிக் கலங்குதலால் . கூகை :- கூவுதலுடையது என்னும் காரணப் பொருளது . கோட்டான் . பிஞ்ஞகன் :- தலைமுடியழகினன் . ` பிறவா யாக்கைப் பெரியோன் ` ( சிலப்பதிகாரம் ). நேயம் - அன்பு . ` நீதனேன் ` ( தி .4 ப .54 பா .6,8) என்று பாடம் இருந்ததோ ? நீதனே என்றல் பொருந்தாது . காயம் - உடல் .

பண் :

பாடல் எண் : 8

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.

பொழிப்புரை :

கடவூர் வீரட்டனீரே ! சிவனடிப் பற்றில்லா வாழ்க்கை வாழ்ந்து பயனற்ற பாழ் நிலத்துக்கு நீர் இறைப்பாரைப் போல அறிவு ஆற்றல்களை வீணாக்கிவிட்டேன் . அநுபவித்தால்தான் கீழ்மக்களுக்கு உண்மை புலப்படும் என்னும் பொருள் பொதிந்த வார்த்தைக்கு இலக்கியமாக உள்ளேன் . யான் எதற்காக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ! யான் யாது செய்ய வல்லேன் ! ஐம்பொறிகள் வசப்பட்டு வருந்தும் துயரத்தாலே ஞான நூல்களை ஞானதேசிகர்பால் உபதேச முறையில் கற்கவில்லை . ஆதலின் அடியேனுக்குப் பற்றுக் கோடாக இருப்பார் ஒருவரையும் காணேன் .

குறிப்புரை :

பற்று - சிவனடிப் பற்று . பற்றிலா வாழ்க்கை - பாசப் பொருட்டொடர்பும் பசுத்துவமும் உடையதாய் இன்ப துன்பங்களை நுகர்ந்து செல்லும் உயிர் வாழ்க்கை . பாழுக்கே நீர் இறைத்தேன் :- பா . 1 குறிப்பு நோக்குக . உற்றலாற் கயவர் தேறார் - பட்டல்லாமல் கீழோர் தெளியார் . உற்ற போதல்லால் உறுதியை உணரேன் ` ( தி .7 ப .14 பா .3). பட்டறி , கெட்டறி , பத்தெட்டு இறுத்தறி என்பது பழமொழி . கட்டுரை - உறுதி பயக்குஞ் சொல் ; பழமொழி ; சொற்றொடராக அநுபவத்தினைக் கட்டியுரைப்பது . எற்று - எத்தன்மையது . இடும்பை - ` இடும்பைக்கு இடும்பை ` ` இடும்பைக்கு இடும்பை படுப்பர் ` ( குறள் ). ஞானம் - ஞானநூல்கள் . ஆகுபெயர் . ஏதும் - ஒன்றும் ( சிறிதும் ). பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கேநீர் இறைத்தேன் :- கடவுள் திருவடிப் பற்று இல்லாத பாசப் பற்றுடைய துன்ப வாழ்க்கையே கொண்டு , மீண்டும் மீண்டும் உடல் எடுக்கும் பாழ்த்த பிறவிக்கே வழிதேடினேன் . அதனால் ஒரு பயனும் இல்லை . நெல் முதலியவற்றிற்கு நீர் இறைத்துப் பயன் பெறாமல் , பாழ் நிலத்திற்குப் பாய்ச்சிப் பயனொன்றும் அடையாமையை ஒத்தது அது . குறிப்பு . பா .6. பார்க்க .

பண் :

பாடல் எண் : 9

சேலினே ரனையகண்ணார் திறம்விட்டுச் சிவனுக்கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய்யோடு பலபல வாட்டியென்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கடவூர் வீரட்டனார் , சேல்மீன் போன்ற கண்களை உடைய மகளிரிடம் ஈடுபடும் செயலை விடுத்துச் சிவபெருமானுக்கு அன்பனாய் எம்பெருமானை பஞ்சகவ்வியம் முதலியவற்றால் அபிடேகித்து உலகமயக்கத்தைப் போக்கிச் சிவ வழிபாட்டில் நிலை பெற்ற மார்க்கண்டேயனுக்காகக் கூற்றுவனை உதைத்தவர் .

குறிப்புரை :

சேலின் நேர் அனைய - சேல் மீனை நிகர் ஒத்த . கண்ணார் திறம் - கண்ணையுடைய மகளிர் காமத் திறம் சிவனுக்கு அன்பு - ` சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சு `. ` அன்பலாற் பொருளும் இல்லை `. பால் தயிர் நெய் :- ` நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்யலுற்றார் `. அவற்றொடு பல பல என்றது அபிடேகத்துக்குரிய பிற பொருள்களை . மால் - மயக்கம் . தவிர - நீங்க . நின்ற - சிவபூசையை விடாது செய்து நிலைபெற்ற . அன்று - மார்க்கண்டேயரது பதினாறாவதாண்டு நிறைவில் . ` கட்டிலங்கு பாசத்தால் வீசவந்த காலன்றன் காலம் அறுப்பார் ... ... வெண்ணி ... விகிர்தனாரே ` ( தி .6 ப .59 பா .7)

பண் :

பாடல் எண் : 10

முந்துரு விருவ ரோடு மூவரு மாயி னாரும்
இந்திர னோடு தேவ ரிருடிக ளின்பஞ் செய்ய
வந்திரு பதுக டோளா லெடுத்தவன் வலியை வாட்டிக்
கந்திரு வங்கள் கேட்டார் கடவூர்வீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

ஐந்தொழிற் கருத்தாக்கள் நிரலில் முற்படக் கூறப்படும் அயன் , அரி எனும் இருவருடன் உருத்திரன் , மகேசன் , சதாசிவன் என்போரும் கூடி அமையும் ஐவராகவும் தாம் ஒருவரே இருந்து கொண்டு , இந்திரனும் தேவர்களும் முனிவர்களும் தம்மை வழிபட்டு இன்பத்தை விளைக்கவும் , கயிலையை நெருங்கி வந்து அதனை இருபது தோள்களாலும் பெயர்த்த இராவணனுடைய வலிமையை அழித்து அவன் வாயினால் இசைப் பாடல்களைக் கேட்டு அருளினார் கடவூர் வீரட்டனார் .

குறிப்புரை :

முந்து உரு இருவர்:- படைத்தல் காத்தல் செய்யும் உருவத்தையுடைய அயன் அரி. மூவர் - உருத்திரன், மகேசன், சதாசிவன், வீரட்டனாரே இருவரோடு மூவரும் ஆயினாரும் கந்திருவங்கள் கேட்டாருமாவார். ஆயினாரும் கேட்டாரும் வீரட்டனாரே என்றியைத்தலும் பொருந்தும். கேட்டார் என்பதொடும் உம்மை கூட்டுக. இந்திரனும் தேவர்களும் இருடிகளும் சிவபிரானை வழிபட்டு இன்பத்தை விளைக்க, இராவணன் வந்து மலையை எடுத்து அம்பிகை நடுங்குதலாகிய துன்பஞ் செய்தது அடாதது. அதனால், அவன் வலியை வாட்டினார். வாடியவன் வாட்டந் தீர்க்கப் பாடிய இசைகளைக் கேட்டு இரங்கி அருள் செய்தார். கந்திருவங்களைக் கந்திரம் என்றார் முன்னர். காந்தாரத்தைக் கந்தாரம் என்றதுபோலக் கந்திரம் என்றார் எனலும் கூடும். தி.4 ப.33 பா.1 பார்க்க. `இருபதுகள்தோள்` என்பதில் விகுதி பிரித்துக் கூட்டித் தோள்கள் என்க.
சிற்பி