திருமறைக்காடு


பண் :

பாடல் எண் : 1

தேரையு மேல்க டாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையு மேலு ணரா வாண்மையான் மிக்கான் றன்னைப்
பாரையும் விண்ணு மஞ்சப் பரந்ததோள் முடிய டர்த்துக்
காரிகை யஞ்ச லென்பார் கலிமறைக் காட னாரே.

பொழிப்புரை :

செழிப்பு மிக்கமறைக்காடனார் , யாரையும் தனக்கு மேம்பட்டவராக மதிக்காதவனும் ஆளுந்தன்மையால் மேம்பட்டவனுமான இராவணன் கயிலாய மலைக்கு மேலும் தேரைச் செலுத்துமாறு தேரோட்டியை ஏவி அவன் அஃது இயலாமையைக் குறிக்க அவனை அதட்டிக் கடுமையாக நோக்கிக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் மண்ணும் விண்ணும் அஞ்சுமாறு பரந்த அவனுடைய தோள்களையும் முடிகளையும் நசுக்கிப் பார்வதியை அஞ்சேல் என்று அமைதியுறுத்தினார் .

குறிப்புரை :

கடாவி - செலுத்தி , திண்ணமா - உறுதியாக , வலியாக . தெழித்து - அதட்டி , சினந்து . ` தெளித்து ` என்பது ஏட்டிற் கண்டது , யாரையும் - மண்ணோர் விண்ணோர் முனிவர் முதலிய எவரையும் மேல் உணராமை - தனக்கு மேலானவர் என்று மதியாமை . ஆண்மை - அம்மதியாமைகட்கு ஏதுவான வலிமை ; வீரம் , ஆண்மை ( ஆள் + மை ) ஆள் ( ஆண் ); + ஆள் + தூஉ = ஆடூஉ . பெள் + தூ உ = பெண்டூஉ . மகள் + தூஉ = மகடூஉ என்பவற்றை நோக்கி , ஆளின் தன்மை ஆண்மை . எனல் சிறந்தது . ஆளுந்தன்மை எனின் , ` ஆள் ` என்பது வினையாகும் . தமிழில் மை என்பது வடமொழியில் ` துவம் ` என்று போல்வது , பண்புணர்த்துவது . தத்துவம் - அதனியல்பு . பாரையும் - மண்ணையும் ; இடவாகு பெயரால் மண்ணில் வாழ்வோரைக் குறிக்கும் . ஐயுருபினை விண்ணுக்கும் ஏற்றியுரைக்க . தோள்முடி உம்மைத்தொகை . காரிகை - உமாதேவியார் . முற்பதிகத்துள் மாமறைக் காடனார் என்று ஓரடையும் இப்பதிகத்துள் ஏழு வேறடையும் கொடுத்தவாறறிக . அம் ` மா ` என்றதன் விளக்கம்போலும் .

பண் :

பாடல் எண் : 2

முக்கிமுன் வெகுண் டெடுத்த முடியுடை யரக்கர் கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த வெந்தை
அக்கர வாமை பூண்ட வழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகண் மோதுந் திருமறைக் காட னாரே.

பொழிப்புரை :

நீரைத் தம்மாட்டுக் கொள்கின்ற அலைகள் கரையை நோக்கி மோதும் திருமறைக்காடனார் , தன் முழுவலியையும் பயன்படுத்தி முந்திக் கொண்டு கோபத்தோடு கயிலையைப் பெயர்த்த , முடியை அணிந்த இராவணனைச் சிரித்தபடியே கால் விரலை ஊன்றி நசுக்கியவராய் , பிறைசூடிய எம் தலைவராய் , எலும்பு , பாம்பு ஆமையோடு இவற்றை அணிந்த அழகராய்த் தம் விருப்பினாலே மறைக்காட்டை இருப்பிடமாகக் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

முக்கி :- முற்கி என்பதன் மரூஉ . வெகுண்டு - சினந்து நக்கு - நகைத்து . ஊன்றி - ( கால் விரலால் ) ஊன்றி ( பா .7) ஊன்றிக் காடனார் என்க . ஊன்றிவைத்த எந்தை எனின் , ` சென்னி ` இராவணனது ; நாண்மதி வைத்தது :- பிறை போலுங் கீற்றைத் திருக்காற் பெருவிரலால் ஆக்கியது . அரக்கர்கோனை ஊன்றிச்சென்னியில் மதியைவைத்த எந்தை எனின் , நக்கிருந்து ஊன்றியதும் மதிவைத்ததும் முன் பின் நிகழ்ச்சி எனவும் இராவணன் தலையில் விரலும் தன்தலையில் மதியும் சிவன் வைத்தான் எனவும் வேண்டும் . அவ்வாறுரைத்தல் பொருந்தாது . அக்கு - எலும்பு உருத்திராக்கமும் ஆம் எனினும் அஃது அரவு ஆமையுடன் கூறற்பாற்றன்று . அழகனார் காடனார் என்றும் கருத்தினாலே காடனார் என்றும் இயைக்க .

பண் :

பாடல் எண் : 3

மிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவி
அகப்படுத் தென்று தானு மாண்மையான் மிக்க ரக்கன்
உகைத்தெடுத் தான்ம லையை யூன்றலு மவனை யாங்கே
நகைப்படுத் தருளி னானூர் நான்மறைக் காடு தானே.

பொழிப்புரை :

மிகப்பெரிய உருவினனாய் எங்கும் சஞ்சரிப்பவனாய் உள்ள இராவணன் நகைத்துத் தேரோட்டியை அதட்டி , மலையை மேவித் தேரைச் செலுத்தென்று நிர்ப்பந்திக்க , அஃது இயங்காமையால் தன் மிக்க வலிமையை முழுதும் கொண்டு செலுத்தி மலையைப் பெயர்க்கத் தன் உடம்பினைச் செயற்படுத்திய அளவில் அவனை அவ்விடத்திலேயே சிரிக்கப்படுதலுக்கு உரியனாய் நசுக்கியவருடைய ஊர் நான்கு வேதங்களும் வழிபட்ட மறைக்காடாகும் .

குறிப்புரை :

பெருத்து . மிகப் பெருத்து . உலாவமிக்கான் . நக்கு :- பா .2. கடாவி :- பா .1. அகப்படுத்து - உட்படச்செய் . பாகனை ஏவியது . அரக்கன் ( இராவணன் ) தானும் ஆண்மையான் மிக்கு மலையை உகைத்து எடுத்தான் . தன்தேர்ப்பாகனை அகப்படுத்து என்றதொடு தானும் எடுத்தான் என்க . அவனை ஆங்கே ( அவ்விடத்து அப்பொழுதே ) ஊன்றலும் நகைப்படுத்தருளினான் சிவபிரான் . அருளினவன் ஊர் திருமறைக்காடு . தான் ஏ :- ஆசை .

பண் :

பாடல் எண் : 4

அந்தரந் தேர்க டாவி யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை யூன்றலு மொள்ள ரக்கன்
பந்தமாந் தலைகள் பத்தும் வாய்கள்விட் டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார் திருமறைக் காட னாரே.

பொழிப்புரை :

வானத்திலே தேரைச் செலுத்தி அதன் செலவு தடைப்பட்ட அளவில் அதனைத் தடைப்படுத்தியவன் யாவன் என்று வினவிக் கோபத்தால் உந்தப்பட்டு இராவணன் அப்பெரிய கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் , அவன் உடம்பில் இணைந்த பத்துத்தலைகளும் வாய் திறந்து அலறித் தரையிலே சாயுமாறு திருமறைக்காடனார் திருவுள்ளத்தில் நினைத்துச் செயற்பட்டார் .

குறிப்புரை :

அந்தரம் - ஆகாயம் . ` ஆர் இவன் ?` என்பது இராவணன் மதியாது வினாவியது . ஒண்மை :- உறங்கும் ஆயினும் , கறங்கு வெண்டிரை வையகங் காக்கும் மன்னவனொளி எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது . பந்தம் - கட்டு ; பத்துத் தலைக்கட்டு , பத்து வாய்கள் , வாய்கள் விட்டு அலறிவீழச் சிந்தனை செய்து விட்டார் . விட்டவர் காடனார் என்க . ` பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமதத்துவன் ` ( தி .6 ப .78 பா .10) ` பத்து வாய் இரட்டிக் கைகள் உடையவன் ` ( தி .4 ப .35 பா .7)

பண் :

பாடல் எண் : 5

தடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலி யுடைய னாகிக்
கடுக்கவோர் தேர்க டாவிக் கையிரு பதுக ளாலும்
எடுப்பனா னென்ன பண்ட மென்றெடுத் தானை யேங்க
அடுக்கவே வல்ல னூரா மணிமறைக் காடு தானே.

பொழிப்புரை :

விரைவாகப் புட்பகவிமானத்தைச் செலுத்திச் சென்ற வழியில் அதன் செலவினைக் கயிலை மலை தடுக்க அதனைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தால் மிக்க வலிமையை உடையவனாகி , ` இதுவும் ஒரு பண்டமா ? இதோ கையால் பெயர்த்து எறிந்து விடுகிறேன் ` என்று கயிலையைப் பெயர்த்த இராவணனை வருந்துமாறு செய்யவல்ல சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலம் அழகிய மறைக்காடு ஆகும் .

குறிப்புரை :

தடுக்கவும் தாங்கவும் ஒன்றாத வலி இராவணனது . ஒண்ணா - ` ஒன்றா ` என்பதன் மரூஉ . கடுக்க - விரைய . கையிருபதுகள் :- ` இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டிக் கந்திருவங்கள் கேட்டார் கடவூர் வீரட்டானாரே .` ` நான் எடுப்பன் ` ` என்ன பண்டம் ?` என்பன இராவணன் கூற்று . ` என்ன பண்டம் ?. என்றது அவன் சிவனது திருக்கயிலைப் பெருமலையை ஒரு பொருளாக மதியாமை குறித்தது . என்று எடுத்தான் - என்று சொல்லி மதியாது தூக்கியவன் . ஏங்க - ஏக்கம் உற . அடுக்க - மாய்க்க . அணி மறைக்கும் உரித்து ; காட்டிற்கும் உரித்து .

பண் :

பாடல் எண் : 6

நாண்முடிக் கின்ற சீரா னடுங்கியே மீது போகான்
கோள்பிடித் தார்த்த கையான் கொடியன்மா வலிய னென்று
நீண்முடிச் சடையர் சேரு நீள்வரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காட னாரே.

பொழிப்புரை :

ஒவ்வொரு நாளையும் முடிக்குஞ் சிறப்புடைய சூரியன் ஒடுங்கிக் கொண்டு இலங்கையின்மேல் செல்லாதபடி ஏனைய கிரகங்களையும் தன் ஆணைக்கு உட்படுத்திய செயலினனாய்க் கொடியவனாகிய இராவணன் தான் பெருவலிமை உடையவன் என்று செருக்கி நீண்ட சடைமுடியை உடைய சிவபெருமானுடைய மலையைப் பெயர்க்கத் தொடங்கிய அளவில் பழைய மறைக்காட்டுப் பெருமான் அவனுடைய தோள்களும் தலைகளும் நசுங்குமாறு செய்துவிட்டார் .

குறிப்புரை :

நாள் முடிக்கின்ற சீரான் - செங்கதிரோன் . நாளிறு என்றதன் மரூஉவே ஞாயிறு . நாளன்று என்றது ஞான்று என மருவியதும் ஈண்டுக் கருதுக . ` மகரஞாயிற்று ரேவதி ஞான்று ` என்ற கல்வெட்டுத் தொடரால் அது விளங்கும் . ` நாளன்று போகிப் புள்ளிடை தட்ப ` என்னும் புறப்பாட்டின் அடியால் , நாளன்று என்பது தொல்வழக்காதல் புலப்படும் . அவ்வழக்கு ஞான்று என்றாதலில் வியப்பில்லை . செங்கதிர்த் தோற்றத்தை அடியாகக் கொண்டு கணக்கிடுவதே நாள் . நாள் இறுதற்கும் அதுவே அடியாகும் . அதனால் , அக் கதிரை நாளிறு என்றனர் செந்தமிழர் . அது ஞாயிறு என்று மருவிற்று . உறு - ஊறு . ( இடையூறு ) இறு - ஈறு . நாளீறு - நாளிறு - ஞாளிறு - ஞாயிறு . நடுக்கமும் போகாமையும் ஞாயிற்றின் தொழில்கள் . மீது - இலங்கையின் மேலிடம் . மேல் மிகல் என்பதன் மரூஉ . மிகு + து = மீது ( மரூஉ ). இருசுடர் மீது ஓடா இலங்கை என்று ( தி .6 ப .39 பா .10) ஆசிரியரே பின்னர்க் குறித்தருளியதால் , வெண் கதிரும் இலங்கைக்கு நேரே விண்ணிற் செல்லாதபடி தடுத்தவன் இராவணன் என்பது வெளி யாம் . மண் விண் பாதலம் ஆகிய திரிலோகத்துக்கும் ( இலங்கையி னளவு ) அதிபதி யாதலின் , இருசுடராட்சிக்கு இடங் கொடாது தன் இடத்தைப் பொதுவறப் புரிந்தான் . கோள்பிடித்து ஆர்த்த கையான் :- ` சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்து உடையான் ` ( தி .5 ப .21 பா .10). கொடியன் - கொடுமை செய்பவன் . மாவலியன் - பெருவலிமையுடையவன் . என்று (- என்று தன்னை வியந்து தருக்கி ) எடுக்கலுற்றான் நீள்வரையை , உற்றான் தோள்முடி - உற்றவன் தோள்களும் முடிகளும் . தோண்முடி :- உம்மைத் தொகை .

பண் :

பாடல் எண் : 7

பத்துவா யிரட்டிக் கைக ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செய்த பொருவலி யரக்கர் கோனைக்
கத்திவாய் கதற வன்று கால்விர லூன்றி யிட்டார்
முத்துவாய் திரைகண் மோது முதுமறைக் காட னாரே.

பொழிப்புரை :

முத்துக்களைத் தம்மிடையே கொண்டனவாய் அலைகள் மோதும் பழைய மறைக்காட்டுப்பெருமான் , பத்து வாய்களையும் இருபது கைகளையும் உடைய இராவணன் தான் மிக்கவலிமை உடையவன் என்ற செருக்கால் சத்தப்படாமல் தீவினைகள் செய்பவனாய்க் கயிலையைப் பெயர்த்தலாகிய தீவினையைச் செய்ய அவன் வாயினால் பெரிய குரலில் கதறுமாறு தம் கால்விரலால் அழுத்தி அவனை நசுக்கிவிட்டார் .

குறிப்புரை :

பத்துவாய் உடையான் . இரட்டிக் கைகள் :- அப்பத்து இரட்டி ( இருபது ஆகிய கைகளை உடையன் ). மாவலியன் :- பா .6, என்று வாய்பொத்தி :- மேற்பாட்டில் உரைத்தாங்கு உரைத்துக் கொள்க . வாய்பொத்தல் :- ஓசைபடாது தீவினையாற்றல் குறித்தது . பொருவலி :- ( ஏதுப் பெயர்கொண்ட ) வினைத்தொகை . பொத்திவாய் கத்திக்கதற ஊன்றியிட்டார் . முத்துவாய் திரைகள் :- முத்துக்கள் வாய்ந்த அலைகள் ; ( முத்துப் போலும் வெண்ணிறம் வாய்ந்த அலைகள் .) மோதும் - முழுத்தும் .

பண் :

பாடல் எண் : 8

பக்கமே விட்ட கையான் பாங்கிலா மதிய னாகிப்
புக்கனன் மாமலைக் கீழ்ப் போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு வீரமு மிழந்த வாறே
நக்கன பூத மெல்லா நான்மறைக் காட னாரே.

பொழிப்புரை :

ஒவ்வொரு பக்கமும் பத்துக் கைகளை உடைய இராவணன் தன் தீச்செயல் விளைவுகளைப் பற்றி அறியும் அறிவு இல்லாதவனாய் மலையின் அடியில் புகுந்து வெளியே வரும் வழியை அறிய இயலாதவனாய் மேம்பட்ட அறிவும் கெட்டு வீரத்தையும் இழந்த நிலையைக் கண்டு மறைக்காட்டுப் பெருமானுடைய பூத கணங்கள் சிரித்தன .

குறிப்புரை :

பக்கமே - பக்கத்தில் , ஏகாரம் ஏழனுருபின் பொருட்டு . ` பக்கமே பாரிடங்கள் சூழ ` ( தி .4 ப .19 பா .2) என்புழியும் இது பெறப்படும் . விட்ட - ( கிளைக்க ) விட்ட . பாங்கு இலாமதியன் - முறைமையில்லாத அறிவினன் . ( பால் + கு = பாங்கு . நால் + கு = நான்கு , நாங்கு ) போதும் ஆறு - பின்னர்ப் புகுதும் வண்ணம் ` , மேல்வரும் கதியை என்றபடி . ` மிக்கமா மதிகள் கெட்டு ` என்றதால் , அவனுடைய மதிகளின் மிக்க பெருக்கம் விளங்கும் . வீரமும் இழந்தவாறே பூதமெல்லாம் நக்கன . ஆறே - வண்ணத்திலே . ஈண்டும் ஏகாரம் அப்பொருட்டு . நகுதல் - சிரித்தல் .

பண் :

பாடல் எண் : 9

நாணஞ்சு கைய னாகி நன்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன் னிழந்து பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தா ( அ ) னுணரா நின்றெடுத் தானை யன்று
ஏணஞ்சு கைகள் செய்தா ரெழின்மறைக் காட னாரே.

பொழிப்புரை :

இருபது கையனாய்ப் பத்துத் தலைகளை உடைய இராவணன் , நைந்து சாமகீதம் பாடும் எண்ணத்தை விடுத்து . தனக்குத் துணையாக உதவாத அறிவினால் , பெரும்பயன் தரும் திருவைந்தெழுத்தைத் தியானம் செய்யாது , கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக , இனி இந்தக் கைகள் எழுச்சியோடு எந்தச் செயலையும் செய்ய முடியாது போய்விடுமோ என்று அவன் அஞ்சுமாறு அழகிய மறைக்காடனார் அவன் கைகளை நசுக்கினார் .

குறிப்புரை :

நாணஞ்சு ( நாலஞ்சு ) கையன் . நாண் - வில்லின் நாண் . நஞ்சு - நைந்த எனலும் ஆம் . அஞ்சுமுன் பாண் இழந்து - திருக்கயிலையை ஊன்ற வலிகெட்டு , உடல் கெட்டு , உயிர் போய்விடுமோ என்று அஞ்சுதல் முன்பு சாமகீதம் பாடுதலை இழந்து . அஃதாவது அஞ்சிய பின்னரே பாடினான் . பாடியெடுத்திருந்தாற் கேடுறான் என்றவாறு , அது செய்யும் பாங்கில்லாமதியன் என்க . நீணஞ்சு :- நீள் + நஞ்சு = நீண்ட நைந்து , நீடிய உருக்கம் . நீண் அஞ்சு - நீள நினைத்தற்குரியதாய திருவைந்தெழுத்தினை , நீளுதல் - ` நீணுதல் ` ஏண் - வலிமை . இத் திருப்பாடலின் எதுகைத் தொடர்கள் விளங்காப் பொருள . நாள் - அறும் நாளில் . நஞ்சு ( நந்து ) கையன் மீண்டும் வளருங்கையன் . நந்தல் - வளர்தல் . முடிகளையும் பாணங்களையும் இழந்த வரலாறு குறித்துமாம் . நாண் - நாணம் . அஞ்சு - அஞ்சி அகலுதற்கு ஏதுவான கையன் - தீயொழுக்கத்தினன் எனலும் ` நாலஞ்சுகை ` என்றதன் திரிபுமாம் . அஞ்சியபின் பாடிய பாண் ( சாமகானம் ), விரலூன்றப் பெற்ற அஞ்சு முன் பாடுதலை இழந்து . பாடி எடுத்திருப்பனேல் , நெருக்குண்ணான் . பாண் அஞ்சும் - ஐந்து நாதமும் ஆம் . ( சூடாமணி நிகண்டு , 12:-43 ) நீள் + நஞ்சு :- இறைவன் நஞ்சுண்டும் சாவாத ஒருவன் என்பதை உணராமல் , மலையெடுத்த கைகளைத் திண்மை நைந்த கைகளாக்கினார் . ஏண் - திண்மை . நஞ்சு - நந்து ( போலி ). நஞ்சுகை - வினைத் தொகை . விரலால் அழுத்தக் கைகள் நசுக்குண்ட வரலாறுணர்க .

பண் :

பாடல் எண் : 10

கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலு மங்கை யூடத்
தென்கையான் றேர்க டாவிச் சென்றெடுத் தான்ம லையை
முன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவா ளருளி னானூ ரணிமறைக் காடு தானே.

பொழிப்புரை :

கங்காதேவியைச் சிவபெருமான் சடையில் வைத்திருந்ததைக் கண்ட பார்வதி ஊடல் கொண்ட நேரத்தில் , தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக , பெருமான் கால்விரல் ஒன்றினால் அவனைக் கயிலை மலையின் கீழ் நசுக்க , அவன்தன் நரம்புகளை எடுத்து யாழ் அமைத்து யாழ் இசையோடு வேதத்தைப்பாட அதனால் உள்ளம் மகிழ்ந்து அவனுக்குத் தாம் கையில் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாளினை அருளினார் . அப்பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலம் அழகிய திருமறைக்காடாகும் .

குறிப்புரை :

கங்காதேவியைச் சடையுள் மறைத்து வைத்ததும் உமாதேவி கண்டுவிட்டாள் . கண்டவுடன் ஊடல் கொண்டாள் . தென் கையான் - தென்னிலங்கை மன்னன் , அழகிய கையால் எனலுமாம் . தேர்கடாவிச்சென்று மலையை எடுத்தான் . மாநரம்பு :- யாழ் . இருக்கு இசை :- ` சாமகானம் `. கைவாள் அருளினான் :- ` கொடுத்தனன் கொற்றவாளொடு நாமம் ` ( தி .5 ப .87 பா .10).
சிற்பி