திருவிடைமருதூர்


பண் :

பாடல் எண் : 1

காடுடைச் சுடலை நீற்றர் கையில்வெண்டலையர் தையல்
பாடுடைப் பூதஞ் சூழப் பரமனார் மருத வைப்பில்
தோடுடைக் கைதை யோடு சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
ஏடுடைக் கமல வேலி யிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து , கையில் வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தி , பக்கத்தில் தம்மைச் சார்ந்த பூதங்கள் சூழ மேம்பட்ட சிவபெருமான் , மருதநிலத்தில் , மடல்களை உடைய தாழைகளோடு சூழும் அகழியைச் சூழ்ந்து தாமரை வேலியாய் அமையும் திருவிடைமருதூரை இடமாகக் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

காடுடைச் சுடலை நீற்றர் :- ` காடுடைய சுடலைப் பொடி ` பூசியவர் . தையல் - உமாதேவியாரை . பாடு - பக்கத்தில் ( உடைப் பரமனார் ). மருதூர் :- மருதவைப்பு , தோடு - இதழ் , கைதை - தாழை , கிடங்கு - அகழி , ஏடு - இதழ் , கமலவேலி - தாமரை வேலி , மருதை இடமாகக் கொண்டார் .

பண் :

பாடல் எண் : 2

முந்தையார் முந்தி யுள்ளார் மூவர்க்கு முதல்வ ரானார்
சந்தியார் சந்தி யுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தை யுள்ளார் சிவநெறி யனைத்து மானார்
எந்தையா ரெம்பி ரானா ரிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

எம்தந்தையாராய் எம் தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய் , அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய் , அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய் , தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய் , மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய் , இடைமருதை இடங்கொண்டவராவர் .

குறிப்புரை :

முந்தையார் முந்தியுள்ளார் - ` முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் ` ஆகி என்றும் இருப்பவர் . மூவர்க்கும் முதல்வர் ஆனார் - அயன் , அரி , அரன் என்னும் மூவர்க்கும் முதற்பொருளானவர் . ` முன்னானை மூவர்க்கும் ` ( தி .8 திருவாசகம் 193) சந்தியார் சந்தியுள்ளார் - சந்தியாவந்தனம் புரிபவரது சந்தியா தியாநத்திலும் அச்சந்தியிலும் விளங்குந் திருவருளுருவினராய் இருப்பவர் . சந்தியார் :- சந்தியாதியாநத்தைச் செய்யும் வேளையாகிய சந்தியையுடையவர் என்று சரியையாளர் , கிரியையாளர் , யோகியர் , ஞானியர் ஆகிய நால்வகையரையும் குறித்தது . ` சந்தியானைச் சமாதி செய்வார் தங்கள் புந்தியானை ` ( தி .5 ப .44 பா .2) தவநெறியைத் தாங்கி நின்றவர் . சிந்தையார் சிந்தையுள்ளார் - ` சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப்பொழிய ` அவரது சிந்தையிலுள்ளவர் . சிவநெறி அனைத்தும் ஆனார் - சிவநெறி யெல்லாமாய் விளங்குகின்றவர் . ` மேல்நெறி யெலாம் புலம் ஆக்கிய எந்தை ` ( தி .8 திருவா .) எந்தையார் - என்னைத் தந்தவர் , பன்மை யாயும் உரைக்கலாம் . எம்பிரானார் - எம் பிரியத்துக்குரியர் . ` பிரியன் ` என்பதன் மரூஉ ` பிரான் ` என்பது ( சேந்தன் செந்தமிழ் பா . 348 ) இடங்கொண்டாரே உள்ளார் , ஆனார் , உள்ளார் , நின்றார் , உள்ளார் ஆனார் எந்தையார் பிரானார் என்று கொள்க .

பண் :

பாடல் எண் : 3

காருடைக் கொன்றை மாலை கதிர்மணி யரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதி யாய
போருடை விடையொன் றேற வல்லவர் பொன்னித் தென்பால்
ஏருடைக் கமல மோங்கு மிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

காவிரியின் தென்கரையில் அழகிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார்காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய் , அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார் .

குறிப்புரை :

கார் ... மாலை :- ` கண்ணி கார் நறுங்கொன்றை ` கதிர் மணி - மாணிக்கம் . மாலையைப் பாம்பினொடு சடையுள் வைத்த நீதியார் . கங்கை நீர் உடைச்சடை . நீதி ஆய விடை :- அற விடை , ( தருமரூப ரிடபம் ) போர் உடை விடை :- சாதியடை . ` விடையொன்று ஏறவல்லார் ` ( தி .4 ப .44 பா .4.) பொன்னி - காவிரியாறு . நீர் பொன்னிறத்தது . நீருட் பொன்னொடு மணல் உடையது . திருவிடை மருதூர் காவிரிக்குத் தென்பால் ஓங்குவது . ஏர் - அழகு எழுச்சி . கமலம் - தாமரை . ( தி .4:- ப .35 பா .1,10.)

பண் :

பாடல் எண் : 4

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கு மங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவந் தீர்க்குங்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமற் காய்ந்த
எண்ணினா ரெண்ணின் மிக்க விடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

அடியவருடைய எண்ணத்தில் மேம்பட்ட , இடைமருதை இடங்கொண்ட பெருமானார் தேவருலகை உடையவராய் , அதனினும் மேம்பட்டவராய் , நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் உலகறியச் செய்தவராய் , பண்ணில் மேம்பட்ட பாடல்களை உடையவராய் , அடியவர்களுடைய பாவங்களைப் போக்கும் கருத்து உடையவராய் , மேம்பட்ட நெற்றிக்கண்ணராய் மன்மதனை வெகுண்ட பெருமானாய் உள்ளார் .

குறிப்புரை :

விண்ணையுடையவர் . விண்ணினும் மேலிடத்தவர் . நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் படைத்தவர் . ( தி .4 ப .36 பா .1) பண்ணில் மிக்க பாடலை யுடையவர் ; சாமகீதர் , அடியர் பாவங்களைப் போக்கும் கருத்துடையவர் . கண் - கருத்து . சூரிய சந்திர நேத்திரங் களைக் குறித்துக் கண் எனலும் பொருந்தும் . கண் .... நுதலினார் :- நுதல் - நெற்றி , நெற்றித் தீவிழியர் . நுதலல் - கருதல் . நுதல்விழி - ஞான நாட்டம் , காமற்காய்ந்த எண்ணினார் - மன்மதனை எரித்த யோகியார் . எண்ணம் - யோகம் . ` உளன் எங்கும் இவன் இங்கும் உளன் என்பார்க்கும் விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல் மந்திரத்தில் வந்து உதித்து மிகும் ` ( சித்தியார் சூ .12. பா .4 ) எண்ணின் மிக்க - மதிப்பிற் சிறந்த ; அடியவர் எண்ணத்தில் மேம்பட்ட .

பண் :

பாடல் எண் : 5

வேதங்கள் நான்குங் கொண்டு விண்ணவர் பரவி யேத்தப்
பூதங்கள் பாடி யாட லுடையவன் புனித னெந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்க டங்கண் மேலை
ஏதங்க டீர நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழப் பூதங்கள் பாடக் கூத்தாடுதலை உடைய தூயராகிய எம் தலைவர் , தம் திருவடிகளை முன் நின்று துதித்த அடியார்களுடைய பழைய வினைகளையும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதை இடங் கொண்டுள்ளார் .

குறிப்புரை :

விண்ணிலுள்ளவர்கள் ( இம் மண்ணில் வந்து ) நான்கு வேதங்களையுங்கொண்டு வாழ்த்தி வழிபடப் பூதங்கள் பாடி ஆடலை உடையவன் . புநிதன் - தூயன் . ` எண்ணான் சிவன் ` ( சிவஞான போதவெண்பா உரை ) - ` தூயதன்மையன் என்னும் பொருட்டாய் அசத்தை எண்ணாமைக்குரிய இயைபுணர நின்றது `. இதனாற் சிவசத்தத்திற்குப் புநிதமென்னும் பொருளுண்மை புலப்படும் . சோமசம்புபத்ததி , சிவதத்துவ விவேகம் இரண்டனுள்ளும் அப்பொருள் கூறப்பட்டமை சிவஞான போதவுரையுட் சிவஞான முனிவர் எழுதியதால் அறியலாம் . எந்தை , நுந்தை , தந்தை என முறையே முன்னிலை படர்க்கைகட்கு உள்ளவாறு தன்மைக்குள்ளது இது . என் + து + ஐ = எந்தை எனதுஐ - எனது முதல் என்னும் பொருட்டு , என்னப்பன் , என்பிரான் ` ( தி .4 ப .35 பா .2), நுன் + து + ஐ = நுந்தை , தன் + து + ஐ = தந்தை . மூன்றும் மரூஉச் சொல் . திருப்பாதங்களை வாழ்த்திப் பிறவியற்று நிலைத்த தொண்டர்களுடைய மேலை ஏதங்கள் தீர்ந்துவிடத் திருவிடைமருதூரிடத்தைக் கொண்டு நின்றார் . உடையவன் புனிதன் என்னும் ஒருமையை நோக்கின் , நின்றார் கொண்டார் என்பவற்றில் உள்ள ஆரீறு , ` ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி ` க்குரியதாதல் புலப்படும் . தி .4 ப .13 பா .3; ப .36 பா .4 முதலியவற்றிலும் இவ்வாறே கொள்க . ஆண்டு முன்னிலை படர்க்கை மயக்கமும் தோன்றும் . மேலைஏதங்கள் :- ( தி :-4 ப .10 பா .5, ப .90 பா .3, தி :-5 ப .5 பா .4, ப .5 பா .8, ப .14 பா .5, ப .7 பா .11, ப .64 பா .7, ப .59 பா .6, ப .97 பா .23.)

பண் :

பாடல் எண் : 6

பொறியர வரையி லார்த்துப் பூதங்கள் பலவுஞ் சூழ
முறிதரு வன்னி கொன்றை முதிர்சடை மூழ்க வைத்து
மறிதரு கங்கை தங்க வைத்தவ ரெத் திசையும்
எறிதரு புனல்கொள் வேலி யிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

புள்ளிகளை உடைய பாம்பினை இடையில் இறுகச் சுற்றிப் பூதங்கள் பலவும் தம்மைச் சூழ்ந்திருக்கத் தளிரை உடைய வன்னி , கொன்றை என்பனவற்றைச் செந்நிறம் மிக்க சடையில் கங்கை வெள்ளத்தில் முழுகுமாறு சூடிய பெருமான் நாற்றிசைகளிலும் அலைவீசும் நீரோடு கால்களை எல்லையாக உடைய இடைமருது இடங்கொண்டார் .

குறிப்புரை :

பொறி - படப்புள்ளிகள் . அரவு ( பாம்பு ) அரை ( இடை ) யில் ஆர்த்து (- கட்டி ). பல பூதங்களும் சூழ . முறி - தளிர் . வன்னியும் கொன்றையும் சடையுள் மூழ்க வைத்து . மறிதரல் - கீழ்மேலாதலைத் தருதல் . வீழ்தரல் . ஆர்த்துச் சூழ வைத்துத் தங்க வைத்தவர் என்று இயைக்க . எறிதருபுனல் :- ` அலைபுனல் ஆவடுதுறை `. இடை மருதிடத்தின் நீர்வளம் உணர்த்தியது . எறிதரல் - வீசுதல் . எற்றல் . புனல் எத்திசையும் எறிதல் ; புனல் கொள்வேலி எத்திசையும் உடைமையுமாம் .

பண் :

பாடல் எண் : 7

படரொளி சடையி னுள்ளாற் பாய்புன லரவி னோடு
சுடரொளி மதியம் வைத்துத் தூவொளி தோன்று மெந்தை
அடரொளி விடையொன் றேற வல்லவ ரன்பர் தங்கள்
இடரவை கெடவு நின்றா ரிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

இடைமருது இடங்கொண்ட பெருமான் ஒளி வீசும் சடையிலே பரவும் நீரை உடைய கங்கை , பாம்பு , ஒளி வீசும் பிறை எனும் இவற்றைச் சூடித் தூய செந்நிறத்தோடு காட்சி வழங்கும் எங்கள் தலைவராய் , பகைவர்களை அழிக்கும் பிரகாசமான காளையை ஏறி ஊர வல்லவராய் , அன்பர்களுடைய துயரங்களைப் போக்கவல்லவருமாய் உள்ளார் .

குறிப்புரை :

படர் சடை . ஒளி படர் சடை . பாய் புனல் :- கங்கையின் வேகம் குறித்து நின்றது . அரவு மதியத்தொடும் சடையினுள்ளால் அடங்கிய புனல் என்றதுணர்க . சுடர் ஒளி - சுடரும் ஒளி . ஒளிமதியம் - ஒளியையுடைய பிறை . தூவொளி - தூய ஞானப்பிரகாசம் ; சிவப் பிரகாசம் . ஒளியாகத் தோன்றும் எந்தை . அடர் ஒளி விடை - அடர்ந்த வெள்ளொளியையுடைய எருது ( ஊர்தி ). ( தி .4 ப .35 பா .3) ` சோதி யேற்றினார் ` ( தி .4 ப .36 பா .8.) அன்பர் தங்கள் இடரவை கெடவும் என்றதில் , உம்மை எதிரது தழீஇயதாய் , இன்பம் ஆகவும் என்னும் பொருள்கொள்ள நின்றது . இடரவை கெடவும் இன்பவை ஆகவும் நின்றார் ..... கொண்டார் .

பண் :

பாடல் எண் : 8

கமழ்தரு சடையி னுள்ளாற் கடும்புன லரவி னோடு
தவழ்தரு மதியம் வைத்துத் தன்னடி பலரு மேத்த
மழுவது வலங்கை யேந்தி மாதொரு பாக மாகி
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த விடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை , பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் பார்வதிபாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் உள்ளார் .

குறிப்புரை :

கமழ்தரு சடை :- கொன்றைமலர் மணம் ( முதலியன ) வீசுகின்ற சடை . கடும்புனல் :- மேல் ( தி .4 ப .35 பா .7) உரைத்தாங்கு உரைத்துக் கொள்க . தவழ்தருமதியம் :- வான் தவழ் மதியம் `. தன் அடி - தன் திருவடி . மழுவது ( மழு + அது ). ஈண்டு அது சுட்டுப் பெயரன்று ; பகுதிப் பொருள் விகுதி . வலங்கை வலப் பக்கத்துக்கையில் . மாதொருபாகம் : ` அர்த்த நாரீசுவரன் `. எழில் - அழகு , எழுச்சி .

பண் :

பாடல் எண் : 9

பொன்றிகழ் கொன்றை மாலை புதுப்புனல் வன்னி மத்தம்
மின்றிகழ் சடையில் வைத்து மேதகத் தோன்று கின்ற
அன்றவ ரளக்க லாகா வனலெரி யாகி நீண்டார்
இன்றுட னுலக மேத்த விடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

பொன்போல ஒளிவீசும் கொன்றைப்பூமாலை , கங்கை , வன்னி இலை , ஊமத்தம் எனும்இவற்றை ஒளிவீசும் சடையிற் சூடி , ஏனைய தேவர்களின் மேம்பட்டுத் தோன்றுகின்ற பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் அடிமுடி காணமுடியாதபடி தீத்தம்பமாகக் காட்சி வழங்கிய பெருமான் இப்பொழுது நன்மக்கள் துதிக்குமாறு இடைமருதில் உறைகின்றார் .

குறிப்புரை :

பொன்திகழ் - பொன்னிறம் விளங்கும் . புதுப்புனல் :- கங்கை வெள்ளம் . வன்னிமத்தம் - வன்னியும் ஊமத்தமும் , ( தி .4 ப .35 பா .6) மின் - மின்னொளி , மேதக - மேன்மை தகும்படி , தோன்றுகின்ற என்னும் பெயரெச்சம் நீண்டார் என்னும் வினைப்பெயர் கொண்டு முடந்தது . ( தி .4 ப .37 பா .1) அவர் மாலும் அயனும் , அன்று - மேலை முடியோடு பாதம் அறியாமை நின்று நெடுந் தடுமாற்றம் அடைந்த காலத்தில் , அளக்கல் ஆகாஅனல் எரி - அளத்தற்கு ஆகாத அனன்ற தீ . இன்று - இந்நாளில் , உடன் - அவ்விருவருடன் . உலகம் - உலகத்தாரும் ( ஏத்தக் கொண்டார் ). ` அன்று அவர்க்கு அளப்பரிய பாழியார் ` ( தி .4 ப .36 பா .5). பாழியார் பாவந்தீர்க்கும் பராபரர் என்பதை நோக்கின் , திருப்பதிகம் . 32 இல் , ஏழாவது திருப்பாடலில் பாவியாய்ப் பாவந் தீர்ப்பார் என்ற பாடம் பிழையுடையது என்று தெளியலாம் . ` பாவியர் பாவம் தீர்க்கும் பரமன் ` என்பதே உண்மைப் பாடம் என்று சிறிதும் ஐயமின்றித் துணியலாம் . ( தி .4 ப .32 பா .7, தி . 4 ப .36 பா .5) இரண்டும் ஒருங்கு வைத்து நோக்கி உணர்க .

பண் :

பாடல் எண் : 10

மலையுடன் விரவி நின்று மதியிலா வரக்க னூக்கத்
தலையுட னடர்த்து மீண்டே தலைவனா வருள்க ணல்கிச்
சிலையுடை மலையை வாங்கித் திரிபுர மூன்று மெய்தார்
இலையுடைக் கமல வேலி யிடைமரு திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

கயிலைமலையை அடைந்து அறிவற்ற அரக்கனாகிய இராவணன் அம்மலையைப் பெயர்க்க முற்பட அவனைத் தலை உட்பட உடல்முழுதும் துன்புறுத்தி மீண்டும் அவன் வேண்ட அவனுக்குத் தலைவராய் இருந்து அவனுக்குப் அருட்பேறுகள் பலவற்றை விரும்பி அளித்து , மலையாகிய வில்லை வளைத்து வானில் திரிகின்ற மும்மதில்களையும் எய்து அழித்த பெருமான் இலைகளோடு கூடிய தாமரைமலர்கள் ஊர் எல்லையில் பூத்துக் குலுங்கும் திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவராவார் .

குறிப்புரை :

மலை - திருக்கயிலை . விரவி - கலந்து . மதியிலா அரக்கன் :- ` பாங்கிலாமதியன் ` ( தி .4 ப .34 பா .9.) தலையுடன் ( கைகளையும் ) அடர்த்து . மீண்டே - மீண்டும் , தலைவன் ஆ - தலைவன் ஆக , அருள்கள் :- வாள் , நாள் , பெயர் முதலியவை , நல்கி - கொடுத்து , நல்கல் கொடைக்கே , உரிய சொல் . நல்க ஊர்தல் என்பதன் மரூஉவாகிய நல்கூர்தல் என்றதாலும் அது புலப்படும் . சிலை உடை மலை - தான் சிலையாக உடைய மேரு மலையை , சிலை கல்லும் ஆம் . வாங்கி - வளைத்து , திரிபுரம் ( மூன்றும் ) - திரியும்புரம் , வினைத் தொகை . ` திரியும் மும்மதிள் ` ` திரியும் மூவெயில் ` ` திரியுமுப்புரம் செற்றதும் ` ( தி .4 ப .20 பா .7) குறிப்பு அறிக . ` இலையுடைக் கமலவேலி `:- ( தி .4 ப .35 பா .1.)
சிற்பி