திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி யரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையு ளனலும் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

நம் தலைவனாராகிய ஐயாறனார் , சடையில் கங்கையையும் ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு பார்வதி பாகராய் , மான்குட்டியையும் , மழுப்படையையும் , உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார் .

குறிப்புரை :

சடையுள் கங்கையும் பாம்பும் திங்களும் திகழ வைத்தார் . எல்லாத் திசையிலும் ( எல்லாவுயிர்களும் ) தொழ வைத்தார் . மங்கையை இடப்பால் வைத்தார் . மான் கன்றும் மழுப் படையும் தீயும் திருக்கையில் வைத்தார் . ` மான் மறியும் மாமழுவும் அனலும் ஏந்துங் கையானே ` ( தி .6 ப .62 பா .7.) ஐயன் ஐயாறனார் :- ஒருமையும் பன்மையும் மயங்கின அல்ல . இது வழக்கினாகிய உயர் சொற் கிளவி ; ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி .

பண் :

பாடல் எண் : 2

பொடிதனைப் பூச வைத்தார் பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

ஒளி விளங்கும் பூணூலை அணிந்து , கொடிய நாகத்தைப் பூண்டு , கூற்றுவனை உயிர்கக்குமாறு உதைத்து , அழகிய பார்வதியை ஒரு பாகமாக மார்பில் வைத்து ஐயாற்றுத் தலைவராம் பெருமான் அடியவர்கள் திருநீற்றைப்பூசித்தம் திருவடிகளைத் தொழுமாறு வைத்தவராவார் .

குறிப்புரை :

திரு வெண்ணீற்றைப் பூசிப் பாசந்தீர வீடுபெற உயிர்களிடத்துக்கொண்ட பேரருளால் சிவாகமங்களில் விதி வகுத்தார் . பூசப் பொடியை வைத்தாருமாம் . பொங்குவெண்ணூல் - பொங்குகின்ற வெள்ளைப் பூணுநூல் . கடும்பாம்பு . காலனை ( உயிர் ) கக்க வைத்தார் . ` வடிவுடை மங்கை ` திருத்தலத்துநாயகி , மார்பில் ஓர் பாகம் வைத்தார் :- மலைமகள் கைக்கொண்ட மார்பு ` ( தி .4 ப .2 பா .7) முதலிய பிற இடத்தும் ` மார்பு ` என்றதுணர்க . அடியிணை - திருவடித்துணை ( இரண்டு ) ` பாதங்கள் ` பரவ வைத்தார் ` ( தி .4 ப .38 பா .9).

பண் :

பாடல் எண் : 3

உடைதரு கீளும் வைத்தார் உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர வருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

கீளொடு கோவணம் அணிந்து , உலகங்களை நிலை நிறுத்தி , மழுப்படை ஏந்தி , பாய்கின்ற புலியின் தோலை உடுத்து , காளை எழுதிய கொடியை உயர்த்தி , வெண்புரிநூல் அணிந்து அடியார்கள் தம்மை அடைய அருள்புரிபவர் ஐயாறராகிய நம் தலைவராவார் .

குறிப்புரை :

உடைதருகீள் :- கிழி - கீழ் - கீள் , மரூஉ . ` சடையும் பிறையும் சாம்பற்பூச்சும் கீளுடையுங் கொண்டவுருவம் ` ( திருக் கோலக்கா ). உலகங்கள் அனைத்தும் வைத்தார் :- ( தி .4 ப .34 பா .6) ` எல்லா வுலகமும் ஆனாய்நீயே ` ` இறையவன்காண் ஏழுலகும் ஆயினான் காண் `, படை தருமழு - எதிர்த்தோரைப் படுத்தலைத் தரும்மழு . தடுத்தல் - தடை ; கொடுத்தல் - கொடை ; படுத்தல் - படை . விடைதரு கொடி - எருதுரு எழுதிய கொடி . வெண்ணூல் , புரிநூல் , அடைதர - அடைய .

பண் :

பாடல் எண் : 4

தொண்டர்க டொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்க ளேத்து மையனை யாற னாரே.

பொழிப்புரை :

எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் வழிபடும் தலைவராகிய ஐயாறனார் , சடையில் தூய பிறையைச் சூடி , முடி மாலையை விளங்க வைத்து , வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய பார்வதி பாகராய் , அடியார்கள் தம்மைத் தொழவும் அடியவராகிய எங்களுக்கு என்றும் இன்பம் பெருகவும் வாய்ப்பு அளித்துள்ளார் .

குறிப்புரை :

பத்தர்கள் பணியவைத்தார் ( தி .4 ப .38 பா .9) தொழவும் என்ற உம்மையாற் பிறவழிபாடுகளும் கொள்ளப்படும் . தூமதி :- வெண்டிங்கள் . இண்டை :- சிவலிங்கத்திற்கு இன்றியமையாததொரு மாலை . இலையும் பூவும் இடையிட்டுத் தொடுக்கும் வகையது . ` இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம் ... கேதாரம் ( சம்பந்தர் ). ` முருகார் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் ` ( தி .4 ப .113 பா .2). ` இந்திரன் வனத்து மல்லிகை மலரின் இண்டை சார்த்தியதென நிறைந்த சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோணசைலனே கைலைநாயகனே `. ( தி .4 ப .6 பா .6) எமக்கு இன்பம் என்றும் வைத்தார் :- ` இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ` அண்ட வானவர்கள் - அண்டங்களில் வாழும் வானோர்கள் .

பண் :

பாடல் எண் : 5

வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை யைந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் வானவர் தம்மை வணங்கச் செய்தவராய் , அடியார்களுடைய கொடிய வினைகளை அழிய வைத்தவராய் , சுடுகாட்டிடைக் கூத்து நிகழ்த்துபவராய் , மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு செய்து , பசுவினிடைப் பஞ்ச கவ்வியத்தை அமைத்து அதனால் தம்மை அபிடேகிப்பவருக்கு அருள் செய்து , யானைத்தோலைப் போர்த்திக் கொண்டவராவார் .

குறிப்புரை :

வானவர்கள் :- தேவர் ; பேரின்பம் எய்தியவர் . வல்வினை :- ஆகாமியம் ; சஞ்சிதம் ; பிராரத்தம் . மாய - மறைய ; அழிய . கான் - சுடுகாடு . நடம் - திருக்கூத்து . காமன் - கருவேள் . கனல் ஆ - தீ ( ய்ந்து சாம்பர் ) ஆக . ஆனிடையைந்து :- ஆவினிடத்துக் கொள்ளப்படும் பால் , தயிர் , நெய் . ` ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர் `. ஆட்டுவார்க்கு - திருவபிடேகம் புரியும் அன்பர்க்கு . அருள் - வேண்டுவார் . வேண்டுவ - ஈவன . உரிவை - தோல் .

பண் :

பாடல் எண் : 6

சங்கணி குழையும் வைத்தார் சாம்பர்மெய் பூச வைத்தார்
வெங்கதி ரெரிய வைத்தார் விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் சங்கினாலாகிய காதணியை அணிந்தவராய் , அடியவர்களும் திருநீறு அணிய வைத்தவராய் , சூரியனை வெயிலை வெளிப்படுத்துமாறு செய்தவராய் , எல்லா உலகங்களும் படைத்தவராய் , இரவையும் , பகலையும் தோற்றுவித்தவராய் , கொடிய வினைகளைப் போக்கும் வழிகளை உலகுக்கு அறிவித்தவராய் , வேதாங்கங்கள் ஆறினையும் ஓதி உணர வைத்தவராய் உள்ளார் .

குறிப்புரை :

சங்கு அணி குழை - சங்கறுத்துச்செய்த அழகிய குழை , சாம்பர் :- சாம்பற்பூச்சு . வெங்கதிர் - சூரியன் . எரிய - காய ; வெயில் செய்ய . விரிபொழில் அனைத்தும் வைத்தார் :- ( தி .4 ப .28 பா .6.) கங்குலும் பகலும் வைத்தார் :- ` வெங்கதிர் எரியவைத்தார் ` என்றது ஏது . இது பயன் . கடுவினை களையவைத்தது உயிர்கட்கு . அங்கமது :- வேதாங்கம் ஆறு ஆயினும் , அங்கம் என ஒன்றாதல் பற்றி அங்கமவை என்றிலர் . குரு முகத்துணரற்பாலன என்பார் . ` ஓதவைத்தார் ` என்றார் . இது மும்மலம் நீக்கும் அருள் வழியைத் தெளிவிக்கின்றது

பண் :

பாடல் எண் : 7

பத்தர்கட் கருளும் வைத்தார் பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை யொன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியி னுரிவை வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் பத்தர்களுக்கு அருள்பவராய் , காளையை ஏறியூர்பவராய் , அடியவர் மனத்தை ஒருவழிப்படுத்துபவராய் , அம்மனம் சிவனையே நினைக்குமாறு செய்பவராய் , அடியார்களுக்கு முத்தி நிலையை முழுதுமாக வைத்தவராய் , அந்நிலை எய்துதற்குரிய வழிகளை அமைத்தவராய் , யானைத்தோலைப் போர்வையாகக் கொண்டவராய் உள்ளார் .

குறிப்புரை :

பத்தர்கட்கு அருளும் வைத்தார் :- ` ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் `. ( தி .4 ப .38 பா .5), ` சித்தத்தை ஒன்றவைத்தார் `:- ` சிந்தையுள் ஒன்றிநின்று ` ( தி .4 ப .48 பா .8) ` ஒன்றியிருந்து நினை மின்கள் ` ` சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன் `. சிவமதே நினைய வைத்தார் :- ` சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சு ` ( காஞ்சிப் புராணம் ), நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் . முத்தி - பாசவீடும் சிவப் பேறும் . முற்ற - இன்ப நிறை வெய்த . விடுதலும் பெறுதலும் முற்ற . ` பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கே முற்றவரும் பரிசுந்தீபற முளையாது மாயை என்றுந்தீபற `. ( தி .4 ப .4 பா .2.) முறை முறை நெறிகள் வைத்தார் :- ` புறச்சமய நெறி நின்றலும் ... ... சிவனடியைச் சேர்வர் `. ( சித்தியார் 263 ) அத்தி - யானை . உரிவை ( தி .4 ப .38 பா .5). ` சித்தரை ` எனல் சிறந்தது .

பண் :

பாடல் எண் : 8

ஏறுகந் தேற வைத்தார் இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமு மரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் தாம் விரும்பி இவரக் காளை வாகனத்தை உடையவராய் , இருப்பிடமாக இடைமருதூரைக் கொண்டவராய் , நறுமணங்கமழும் கொன்றைப் பூவைச் சூடியவராய் , இடையில் பாம்பினை இறுகக்கட்டியவராய் , பார்வதிபாகராய் , கொல்லும் புலியின் தோலை ஆடையாக உடையவராய்க் கங்கையைச் சடையில் சூடியவராய் உள்ளார் .

குறிப்புரை :

ஏறு உகந்து ஏறவைத்தார் :- ( தி .4 ப .4 பா .3) இடை மருது - திருவிடைமருதூர் . இடம் - திருக்கோயில் . நாறு பூ - மணம் நாறும் பூ . நாகம் - பாம்பு , அரை - இடை , கூறு - இடப்பால் , உமை - உமா தேவியார் , ஆறும் - கங்கையையும் , நாகமும் என்றதால் அக்கும் , புலித் தோலும் என்றதால் யானைத்தோலும் , மான்றோலும் , ஆறும் என்றதால் இளம்பிறை முதலியனவும் கொள்ள வைத்தார் அப்பர் . ` மருதிடமும் ` என்றது வேறுள்ள சிவதலங்களையும் வைத்ததைக் குறித்த உம்மை , தலைமருதும் புடை மருதும் குறித்த உம்மையுமாம் . புடைமருது - திருப்புடை மருதூர் . தலைமருது - திருவிடைமருதூர் .

பண் :

பாடல் எண் : 9

பூதங்கள் பலவும் வைத்தார் பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியு மந்தம் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் பல பூதகணங்களை உடையவராய் , ஒளிவீசும் வெண்ணீறு அணிந்தவராய் , இசைப்பாடல்களை அடியவர் பாட வைத்தவராய் , இசைக்குச் சிறப்பிடம் வழங்கியவராய் , தம் திருவடிகளை அடியவர்கள் முன் நின்று போற்றி வழிபடச் செய்பவராய் , தம்மையே ஆதியும் அந்தமுமாக வைத்தவ ராய் உள்ளார் .

குறிப்புரை :

பூதங்கள் பலவும் :- ` பூதப் படையான் `. பொங்கு வெண்ணீறு :- திருநீற்றின் வெண்மை பொங்குதல் குறித்தது . பொல் + கு = பொங்கு , ( மரூஉ ). பொலிவு , திருநீற்றுப் பொலிவு , மிகுதிப் பொருட்டாதற்கும் இதுவே காரணம் . கீதங்கள் - பாட்டுக்கள் . சாமகீதம் முதலியன . கின்னரம் - பாடல் , இசை . ( தி :-4 ப .38 பா .6, ப .35 பா .5,7, ப .38 பா .2,4.)

பண் :

பாடல் எண் : 10

இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயனை யாற னாரே.

பொழிப்புரை :

தலைவராகிய ஐயாறனார் , பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய் , அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய் , நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய் , பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய் , இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார் .

குறிப்புரை :

இரத்தல் புரத்தல் இரண்டும் மறுதலைப் பொருளன . ` இரவலர் புரவலை நீயும் அல்லை . ( தி .4 ப .16 பா .7) புரவலர்க்கு இரவலர் இல்லையும் அல்லர் . இரவலர் உண்மையும் காண் இனி . இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி `. ` நாளும் புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை உரைசால் நெடுந்தகை `. ( புறநானூறு , 162, 329 ) ` புரவுக் கடன் ` ( ? . 149) போல இரவுக் கடன் என வேண்டாமையாலும் மறுதலை என்பது புலனாகும் . புரப்பவர் இரப்பவர்க்கு ஈயவைத்தல் , ஈயப் பல பொருள்களை வைத்தல் , ஈய இரக்கம் வைத்தல் முதலிய பலவும் ஈண்டுக் கருதுக . ஈபவர்க்கு - இரப்பவர்க்கு ஈந்து புரப்பவர்க்கு . அருள் :- ` வல்லா ராயினும் வல்லுநராயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி ` வழங்குதற்கு ஏதுவான அருள் . ( புறம் . 27 ). ` எத்துணை யாயினும் ஈத்தல் நன்று என மறுமை நோக்கின்றோ அன்றே பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே ` ( புறம் . 147 ) என்ற நோக்கு ( கருத்து ) டையார்க்கு எழுமையும் உதவும் அருள் . கரப்பவர் - ஈயாது மறைப்பவர் . கரப்பவர்க்குக் கடுநரகங்கள் வைத்தார் என்றது நோக்கின் , ஈபவர்க்கு வைத்த அருள் இறைவன் திருவருளே ஆகும் ; ஈவோர் நெஞ்சிரக்கம் அன்று எனல் இனிது விளங்கும் .
சிற்பி