திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லை
கானலா தாட லில்லை கருதுவார் தங்க ளுக்கு
வானலா தருளு மில்லை வார்குழன் மங்கை யோடும்
ஆனலா தூர்வ தில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

நம் தலைவராகிய ஐயாறனார் தொடர்பின்றி உலகங்களின் நிலைபேறு இல்லை . உலகங்களிலுள்ள ஆன்மாக்களைத் தவிர வேறு அடிமைகள் அவர்க்கு இல்லை . சுடுகாட்டினைத் தவிர வேறு கூத்தாடும் இடம் இல்லை . தம்மை உண்மையால் தியானிப்பவர்க்கு வீடு பேற்றைத் தவிர வேறு சிறு சிறப்புக்களை அவர் அருளுவதில்லை . நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடும் இவர்ந்து செல்வதற்குக் காளையைத் தவிர வேறு வாகனமும் அவர்க்கு இல்லை .

குறிப்புரை :

தான் அலாது உலகம் இல்லை :- (1) ` அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது . (2) எல்லாவுலகமும் ஆனாய் நீயே ` (3) ` நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீ அலாற் பிறிது மற்றின்மை `. (4) ` ஒன்றும் நீ அல்லை அன்று ஒன்று இல்லை `. சகம் - தோன்றி யழிவது ; உலகம் ; காரியம் . மாயை காரணம் ` சகன் என்றது நிலவுலகத்தை `. ` சகக் கடவுள் ` ` சகத்தின் கண் உளனாகிய குரவன் ` ( சிவ போ . சூ . 8. அதி . 2. வெண்பா . 2 ) அவை உடைமை ஆளாம் நாம் . `( சிவ . போ . சூ . 2. அதி . 4, வெ .1 )` பாய ஆருயிர் முழுவதும் பசுபதி அடிமை ; ஆய எவ்வகைப் பொருள்களும் அவனுடைப் பொருள்கள் ` ( தணிகைப் புராணம் ). ` உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும் . அவற்றுள் உயிர்வருக்கமெல்லாம் இறைவனுக்கு அடிமை யெனவும் மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க `. ( சிவ . போ . அவை யடக்கம் ), ` படிகம்போலச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் ஆன்மா மலமுழுவதும் நீங்கித் தன்னறிவு வியாபகமாய் விளங்கிய வழியும் தன்னாற் சாரப்பட்ட சிவத்தை மாத்திரம் அறிதலன்றி மற்றொன்றனை அறிதல் செல்லாதென்பதூஉம் , இது பற்றியன்றே சிவனுக்கு அடிமை எனப்பட்டது என்பதூஉம் , இன்னோரன்னவை பிறவும் அறிந்து கொள்க `. ( சிவ . போ . சூ . 6, அதி . 2. மாபாடியம் ) என்பவற்றால் , ` சகம் ` இடவாகுபெயராய் உயிர்களை உணர்த்திற்று என்றும் அவையே அடிமைகள் என்றும் உணர்க . தி .4 ப .40 பா .8. கான் அலாது ஆடல் இல்லை ; ? பா .3. ` கள்ளி முதுகாட்டில் ஆடிகண்டாய் `. வான் - சிவஞானமுத்திநிலை , வார்குழல் மங்கை :- ` அரியலாற்றேவியில்லை ` ? பா .5 ஆன் - ஆனேறு .

பண் :

பாடல் எண் : 2

ஆலலா லிருக்கை யில்லை யருந்தவ முனிவர்க் கன்று
நூலலா னொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலா லமுத மில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்குக் கல்லால மரத்தைத் தவிர வேற்றிடம் உபதேச பீடமாக அமைவதில்லை . பெருந்தவத்தையுடைய முனிவர்களுக்கு அப்பிரானார் நுண்பொருளாய்வு செய்து வேதாகமப் பொருள்களைத் தவிர வேற்றுப் பொருள்களை உபதேசிப்பதில்லை . திருமாலும் பிரமனும் கூடித் தம் மலர்போன்ற திருவடிகளை வணங்க அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கித் தாம் உட்கொண்ட கடல் விடத்தைத் தவிர அவருக்கு உணவு வேறு இல்லை .

குறிப்புரை :

ஆல் - கல்லால் நிழல் . நூல் - வேதகாமப் பொருள் . நொடிவது - உபதேசித்தருள்வது . நொடிமையினார் - உபதேசிக்குந் தன்மை யுடையார் ` உள்வேர் போல நொடிமையினார் ` திறம் கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் ( தி .1 ப .54 பா .3). சிவபெருமான் கல்லால் நிழலில் வீற்றிருந்து சின்முத்திரைக்கையாற் சொல்லாது சொன்ன கையின் நிலைமை நொடிமை எனப்பட்டது . நொடிமை என்பது கைந் நொடித்தர்க்குரிய விரலிரண்டும் உபதேசத்தின் கண்ணும்சேர்வது பற்றிய காரணப்பெயர் . நுண் பொருள் ஆய்ந்து கொண்டு நூல் அல்லால் நொடிவதில்லை , மாலும் நான்முகனும் வணங்க , வேலை ஆல் ( பாற்கடல் நஞ்சு ) அல்லால் அமுதம் இல்லை . வணங்க என்னும் எச்சத்தை முடிக்க , வணங்க உண்ட அமுதம் ஆல் அல்லால் இல்லை என்க . ஆல் - ஆலகாலவிடம் . ` ஆலானைந்தாடல் உகப்பார் போலும் ` ( தி .6 ப .21 பா .7) ஆலும் ஆனைந்தாடலும் .

பண் :

பாடல் எண் : 3

நரிபுரி சுடலை தன்னி னடமலா னவிற்ற லில்லை
சுரிபுரி குழலி யோடுந் துணையலா லிருக்கை யில்லை
தெரிபுரி சிந்தை யார்க்குத் தெளிவலா லருளு மில்லை
அரிபுரி மலர்கொ டேத்து மையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

திருமால் விரும்பிய மலர்களைக் கொண்டு வழிபடும் ஐயன் ஐயாறனார் நரிகள் விரும்பி உலவும் சுடுகாட்டில் நடமாடல் தவிர மற்றொன்றுஞ் செய்வதில்லை . சுருண்ட முறுக்குண்ட கூந்தலை உடைய பார்வதியைத் தவிர வாழ்க்கைத் துணையாக வேறு ஒருவரையும் கொண்டு வாழ்தல் இல்லை . தன்னுண்மையை ஆராய்ந்து சிந்தித்தலையுடைய அடியார்களுக்கு உள்ளத் தெளிவினை வழங்குவதைத் தவிர எம்பெருமான் அருளக் கூடியதும் வேறொன்றும் இல்லை .

குறிப்புரை :

நரிபுரி சுடலை - நரிகள் விரும்புகின்ற சுடுகாடு . ஈண்டுச் சுடலையில் நவிற்றல் நடம் அல்லால் இல்லை என்றும் , ஆண்டு ஆடல் ( செய்யும் இடம் ) கான் அல்லாது இல்லை என்றும் கூறிய வேறுபாடுணர்க . கானில் அல்லாது ஆடல் இல்லை என்று ஆண்டுரைத்தல் பொருந்தாமை பிறவற்றை நோக்கியுணர்க . நவிலல் நவிற்றல் என்னும் இரண்டற்கும் உள்ள வேறுபாடுணர்க . ` சம்பந்தன்வாய் நவிற்றிய தமிழ் மாலை ` ( தி .2 ப .106 பா .11). சுரிபுரி குழலி - சுரிந்து புரிந்த கூந்தலாள் . புரி - முறுக்குண்ட . துணை - வாழ்க்கைத்துணை . குழலியாகிய துணை யோடல்லால் இருக்கை இல்லை . தெரி - தெரிதல் ; ஆராய்ச்சி . முதனிலைத் தொழிற்பெயர் . புரி - புரி ( செய் ) கின்ற . சிந்தையார்க்கு - சிந்தித்தலுடையவர்க்கு , கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிற்றல் என்னும் அறிவுத்தொழில் நான்கனுள் , இரண்டாவதன் பயன் மூன்றாவதே ; ஆதலின் , தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவு அல்லால் அருளும் இல்லை எனலாயிற்று . சிந்தையுட்டேறல் ( தெளிவு ) ( தி .4 ப .41 பா .5.) அரி - அழகு , திருமால் .

பண் :

பாடல் எண் : 4

தொண்டலாற் றுணையு மில்லை தோலலா துடையு மில்லை
கண்டலா தருளு மில்லை கலந்தபின் பிரிவ தில்லை
பண்டைநான் மறைகள் காணாப் பரிசின னென்றென் றெண்ணி
அண்டவா னவர்க ளேத்து மையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

பழைய நான்மறைகளாலும் உள்ளவாறு உணர இயலாதவர் என்று தியானித்துத் தேவர்களும் துதிக்கும் ஐயன் ஐயாறனார்க்குத் தொண்டர்களைத் தவிரத் துணையாவார் பிறர் இல்லை . தோல்களைத் தவிர வேறு ஆடைகள் இல்லை . அடியார்களின் அநுபூதியிற் கண்டாலல்லாமல் அவர் அவர்களுக்கு அருளுவதில்லை . அடியார்களோடு கூடிய பின்னர் அவர்களை அப்பெருமான் பிரிவதில்லை .

குறிப்புரை :

1. தொண்டு அல்லால் துணையும் இல்லை . 2. சுரிபுரி குழலியோடுந் துணையல்லால் இருக்கையில்லை . 3. தான் அல்லால் துணையும் இல்லை . 4. அரவம் பைம்பூண் தோள் அலால் துணையும் இல்லை என்பவற்றால் ` துணை ` யின் பொருள்வேறுபாடு புலப்படும் . தோல் - புலித்தோல் , மான்றோல் , சிங்கத்தோல் , யானைத்தோல் ; ` சிங்கமும் நீள் புலியும் செழுமால் கரியோடு அலறப் பொங்கியபோர் புரிந்து பிளந்து ஈருரிபோர்த்த தென்னே ` ( தி .7 ப .99 பா .6) ` மானைத் தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்குமிட்டு யானைத்தோல் போர்ப்பது ` ( தி .7 ப .18 பா .4). கண்டு அல்லாது அருளும் இல்லை . அநுமான அளவையான்நாடி , அநுபூதியிற்கண்டு பெறற்பாலது அருள் . ( சிவஞானபோதப்பாயிரவுரை ) ` வாக்குமன விருத்திகளைக் கடந்து அதீதமாய் , வேறற நின்றுணரும் அநுபவ ஞானமாத்திரையின் விளங்கிக் கோசரிப்பது . ` காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழலடி பூண்டுகொண்டொழிந்தேன் ` ( தி .4 ப .20 பா .1). காண்டலே கருத்தாகியிருப்பனே ` ( தி .5 ப .71 பா .8). கலந்தபின் பிரிவதில்லை :- ` கலந்தார்மனங் கவருங்காதலானே ` ` உள்ளம் உள்கலந்து ஏத்த வல்லார்க்கலால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அலன் ` ( தி .5 ப .82 பா .4) அண்டவானவர்கள் , பண்டைமறைகள் நான்கும் காணாப்பரிசினன் என்று பன்முறை சொல்லி ஏத்தும் ஐயன் . அண்டங்களில் உள்ள வானவர்கள் . அண்டவானவர்கள் .

பண் :

பாடல் எண் : 5

எரியலா லுருவ மில்லை யேறலா லேற லில்லை
கரியலாற் போர்வை யில்லை காண்டகு சோதி யார்க்குப்
பிரிவிலா வமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென் றேத்தும்
அரியலாற் றேவி யில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்கு நெருப்புருவம் தவிர வேற்றுருவமில்லை . காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர் ஏறுவதில்லை . யானைத்தோலைத் தவிர வேறு போர்வை இல்லை . காணுவதற்கு ஏற்ற ஞானப் பிரகாசம் உடைய அப்பெருமானுக்கு , பிரியாது தேவர்கள் கூடி ` மேம்பட்ட சிறப்பினை உடைய பெருமான் ` என்று துதிக்கும் திருமாலைத் தவிர வேறு தேவி இல்லை .

குறிப்புரை :

எரி - தீ , ` தீ வண்ணன் `. ஏறு - விடை , ஏறல் என்றதாற் பெயர்க் காரணம் அதுவாதலும் பெறப்படும் . ` எருதலாலூர்வதில்லை ` ( தி .4 ப .40 பா .6.) ` ஆனலாதூர்வதில்லை ` ( தி .4 ப .40 பா .1.) கரி - யானைத்தோல் , கரத்தை யுடையது கரி , காண்தகு . சோதி - காணத்தக்க மெய்யொளி . பிரிவு இல்லா அமரர் - நீக்கம் இல்லாத் தேவர்கள் . பெருந்தகைப் பிரான் :- ` மகாதேவன் ` அமரர்க்குப் பெருந்தகைப் பிரான் அரி . ஐயாறனார்க்கு அவ்வரி தேவி . ஏத்தும் வினை அமரரது ; ஏத்தப் பெறுதல் அரியின் வினை . அப் பெருந்தகைப் பிரானாகிய அரியே ஐயாறனார்க்குத் தேவி . திருவையாற்றிலுள்ள அம்பிகையை நோக்கினார்க்கு அரியே தேவி எனல் இனிது விளங்கும் . அரிக்குரியன தேவியின் திருமேனியில் அமைந்துள்ளன . ` அறம் வளர்த்தாள் ` திருவுருவம் ஆக விளங்கு கின்றது . திருவிளநகர்த் தேவியும் அரியே .

பண் :

பாடல் எண் : 6

என்பலாற் கலனு மில்லை யெருதலா லூர்வ தில்லை
புன்புலா னாறு காட்டிற் பொடியலாற் சாந்து மில்லை
துன்பிலாத் தொண்டர் கூடித் தொழுதழு தாடிப் பாடும்
அன்பலாற் பொருளு மில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்கு எலும்புகளைத் தவிர வேறு அணிகலன்கள் இல்லை . காளையைத் தவிர வேற்று வாகனங்களில் அவர் ஊர்வதில்லை . கீழான புலால் நாற்றம் வீசும் சுடுகாட்டுச் சாம்பலைத் தவிர வேற்றுப் பொருள்களைப் பூசுவதில்லை . உலகத் துன்பங்களில் அழுந்துதல் இல்லாத அடியவர்கள் ஒன்று கூடித் தொழுது , மனம் உருகிக் கண்ணீர் வடித்து ஆடிப்பாடும் அன்பினைத் தவிர அவர் வேறு எதனையும் குறிப்பிடத்தக்க பொருளாய்க் கருதுவதில்லை .

குறிப்புரை :

என்பு - எலும்பு , கலன் - பூண் . அணி , பணி , எருதலால் ஊர்வதில்லை :- ( தி .4 ப .40 பா .1,5.) புன் புலால் நூறு காட்டிற்பொடி அலால் சாந்தும் இல்லை :- காடுடைய சுடலைப் பொடி பூசி ` - ` சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு `. துன்பு இலாத் தொண்டர் :- ` இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ... சேவடியிணையே குறுகினோம் ` தொழுது அழுது ஆடிப் பாடும் அன்பல்லாற் பொருளும் இல்லை :- ` நாடி நம்தமராயின தொண்டர்காள் , ஆடுமின் , அழுமின் , தொழுமின் , அடிபாடுமின் , பரமன் பயிலும் இடம் கூடுமின் குரங்காடுதுறையே ` ( தி .5 ப .63 பா .8). ` மழுவலான் திருநாமம் மகிழ்ந் துரைத்து அழவலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் மாற்பேறு தொழவலார் தமக்கு இல்லைத் துயரமே ` ( தி .5 ப .59 பா .7). ` அன்பே அமையும் ` ( தி .4 ப .1 பா .9). ` அன்பு அளவில் உபகரணப் பூசைப்பரிசது ` ( ஞான பூசாவிதி ). ` அன்பன்றித் தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்வதெலாம் சார்த்தும் பழம் அன்றேதான் ` ( திருக்களிற்றுப்படியார் . 55 ).

பண் :

பாடல் எண் : 7

கீளலா லுடையு மில்லை கிளர்பொறி யரவம் பைம்பூண்
தோளலாற் றுணையு மில்லை தொத்தலர் கின்ற வேனில்
வேளலாற் காயப் பட்ட வீரரு மில்லை மீளா
ஆளலாற் கைம்மா றில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

அரை நாண் பட்டிகையோடு கூடிய கோவணமாகிய கீள் உடையைத் தவிர ஐயன் ஐயாறனார்க்கு வேறு உடையும் இல்லை . ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்புகளை அழகிய அணிகலன்களாக அணியும் தம் தோள்களைத் தவிர வேறு துணையும் இல்லை . பூங்கொத்துக்கள் மலரும் இளவேனிற்காலத்திற்கு அரசனாகிய மன்மதனைத் தவிர அவரால் நெற்றிக்கண் பொறியால் எரிக்கப்பட்ட வீரன் வேறு ஒருவனும் இல்லை . அப்பெருமானுக்கு அவரை விடுத்து என்றும் நீங்குதல் இல்லாத அடிமைத் தொழில் செய்வதனைத் தவிரக் கைம்மாறாக அடியார்கள் செய்யத்தக்கது பிறிதொன்றுமில்லை .

குறிப்புரை :

கீள் - கிழி , ` கீளார் கோவணம் `. சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங் கீளுடையுங் கொண்டவுருவம் `. பொறி - படப்புள்ளி . அரவம் - பாம்பு . பூண் - பூண்கின்ற கலன் . தொத்து - பூங்கொத்து , ` வேனில்வேள் மலர்க்கணை ` ( தி .8 திருவாசகம் ). காயப்பட்ட வீரர் - தீவிழியாற் காய்தலுற்ற வலியர் , ` வீரம் ` எதிர்வந்து நின்ற வீரம் . மீளா ஆள் :- ` மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடியிணையே குறுகினோமே ` ` மீளா ஆட்செய்து மெய்மையுள் நிற்கிலார் ` ( தி .5 ப .90 பா .3). மீளா ஆளாதலே உயிர்கள் இறைவனுக்குச் செய்யுங் கைம்மாறு என்றதுணர்ந்து வழிபட்டுய்க .

பண் :

பாடல் எண் : 8

சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லை
நகமெலாந் தேயக் கையா னாண்மலர் தொழுது தூவி
முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர்
அகமலாற் கோயி லில்லை யையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்கு உலக உயிர்களைத் தவிர அடிமையாவார் வேறு இல்லை . தமக்குத் தாமே ஒப்பாவார் அன்றி ஒப்பாவார் வேறு இல்லை . நகங்களெல்லாம் தேயுமாறு கைகளால் புதுமலர்களைக் கொய்து வணங்கி அவற்றை அவருக்கு அர்ப்பணித்து முகமெல்லாம் கண்ணீர் வழிந்துபரவ , அவர் திருமுன்னர் வணங்கித் துதிக்கும் தொண்டர்களின் உள்ளத்தைத் தவிர அவருக்கு வேறு இருப்பிடம் இல்லை .

குறிப்புரை :

சகம் அலாது அடிமை யில்லை :- ( தி .4 ப .40 பா .1). தான் - சிவபிரான் , துணை - உயிர்த்துணை , தாள் அலால் துணையும் இல்லை என்னும் பாடத்திற்குத் திருவடித் துணை என்க . நகம் எல்லாம் தேயக் கையால் நாண்மலர் ( கொய்து ) தூவித் தொழுது , முகம் எல்லாம் கண் நீர் மல்க , முன்பணிந்து ஏத்துகின்ற தொண்டர் அகமே கோயில் , ` நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் ` ` உள்ளம் பெருங் கோயில் ` சிவபூசை புரிபவர்க்கு அகத்தும் புறத்தும் இன்றிமையாது வேண்டுவன குறித்ததுணர்க .

பண் :

பாடல் எண் : 9

உமையலா துருவ மில்லை யுலகலா துடைய தில்லை
நமையெலா முடைய ராவர் நன்மையே தீமை யில்லை
கமையெலா முடைய ராகிக் கழலடி பரவுந் தொண்டர்க்
கமைவிலா வருள்கொ டுப்பா ரையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

ஐயன் ஐயாறனார்க்குப் பார்வதியொடு இணைந்த உருவமன்றி வேற்று உருவம் இல்லை . இவ்வுலகங்களைத் தவிர அவருக்கு வேறு உடைமைப் பொருள் இல்லை . அவர் அடியவராகிய நம்மை எல்லாம் தம் அடிமைகளாக உடையவர் . உயிர்களுக்கு அவரால் நன்மையே அன்றித் தீமை சற்றும் இல்லை . பகைவரையும் பொறுக்கும் பொறுமை உடையவராகித்தம் திருவடிகளை முன்நின்று துதிக்கும் அடியவர்களுக்குக் குறைவில்லாத அருள்களை அவர் நல்குபவராவார் .

குறிப்புரை :

சிவபெருமானுக்குச் சொரூபம் சிவஞானமே யாதலின் , ` உமையலாதுருவம் இல்லை ` என்றும் , உடைமை உலகம் , அடிமை உயிர்கள் , இரண்டும் உடைப்பொருள் . அவற்றுள் உடைமையை உலகலா துடையதில்லை என்றும் அடிமையை ` நமையெலாம் உடையர் ஆவர் ` என்றும் , அவனுடைமையான உலகம் , அவன் அருள் வழி நின்று ஒழுகும் அடிமைகளாகிய உயிர்கட்கு நன்மையே அன்றித் தீமை பயவாமையின் , ` நன்மையே தீமை யில்லை ` என்றும் , வினைப் பயனாக எய்தும் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு , மேலும் வினையேறாது திருவடித் தொண்டு பூண்டார்க்கு அளவிலாது அருள் கொடுப்பது ஆண்டானது கடமையாதலின் , ` கமை ( பொறுமை ) யெலாம் உடையராகிக் கழலடி பரவுந் தொண்டர்க்கு அமைவு இலா அருள் கொடுப்பார் ` என்றும் அருளினார் மொழி வேந்தர் . ` நாம் ஆர்க்குங் குடியல்லோம் ... இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை `. ` நன்றருளித் தீதகற்றும் நம்பிரான் ` ( தி .6 ப .30 பா .7) ` நன்றுடை யானைத் தீயதில்லானை `.

பண் :

பாடல் எண் : 10

மலையலா லிருக்கை யில்லை மதித்திடா வரக்கன் றன்னைத்
தலையலா னெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னு மையனை யாற னார்க்கே.

பொழிப்புரை :

அலைகளை உடைய காவிரி நிலையாக ஓடும் ஐயாற்றில் வாழ் பெருமானுக்குக் கயிலை மலையைத் தவிர வேறு சிறப்பான இருப்பிடம் இல்லை . தம்மை மதியாது கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலையைத் தவிர வேற்றவருடைய தலையை அவர் மலைக்கீழ் வருத்தி நெரித்தலை அறியாதவர் அவர் . நிலைபேறில்லாத அசுரர்களின் மும்மதில்களும் அழிய நெருப்பைப் பரப்பியதனைத் தவிர அவர் வேற்றுச் செயல் எதுவும் செய்யவில்லை .

குறிப்புரை :

திருக்கயிலாயமலையே சிவபிரானது இருக்கையாதலின் , ` மலையலா திருக்கையில்லை `, அம்மலையை ஒரு பொருளாகக் கருதாத அரக்கனது ( மதிக்கும் மதிக்கு இடமான ) தலையை நெரித்தார் . தடவரை - கயிலை . நிலையிலார் - திரியும் அசுரர் , விரித்தது நெருப்பே . அலையின் ஆர் பொன்னி - அலைகள் நிறைந்த காவிரியாறு .
சிற்பி