திருச்சோற்றுத்துறை


பண் :

பாடல் எண் : 1

பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா
ஐவரா லலைக்கப் பட்ட வாக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரா லுகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

வயல்களிலே வரால் மீன்கள் துள்ளித் திரியும் திருச்சோற்றுத்துறைப் பெருமானே ! வேதங்களால் பரம் பொருளாக உணரப்பட்டவரே ! வேதங்களை ஓதும் நாவினரே ! பொய்ப்பொருள்களே கலந்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பை நிலையான பொருளாகக் கருதி இதனைப் பேணுவதிலேயே காலத்தை வீணாக்கி மெய்ப் பொருளிலே பொருந்தும் சார்பு அற்றேனாய் ஐம்பொறிகளால் வருத்தப்பட்ட இவ்வுடம்பைக் கொண்டு மயங்கிக் காலத்தைக் கழித்துவிட்டேன் .

குறிப்புரை :

பொய்விராமேனி :- பொய்விராவும் மேனி , ` விராவும் ` என்பது செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் , ` செய்யும் என் எச்சவீற்றுயிர் மெய் சேறல் ` உற்றது . ` பொய் மறித்தியற்றி வைத்துப் புலால் கமழ் பண்டம் பெய்து பைம்மறித் தியற்றியன்ன பாங்கிலாக் குரம்பை ` ( தி .4 ப .67 பா .8). பொய்யுடலை மெய்யெனக்கருதி மெய்ப் பொருளை வழிபடாது பொழுதுபோக்கி , மெய்விராவும் மனத்தனா காமல் கெட்டேன் என்றவாறு . வீண்பொழுது போக்காது போற்றற் பொருட்டுப் பிழைகணிக்கும் பழக்கமுடையவர் இப்பெருமான் . ( தி .4 ப .41 பா .2,5,7) ` பொழுது போக்கிப் புறக்கணிப்பார் ` ` இனத்திற் சேர நல்லோர் விழையார் `. வேதியன் - வேதங்களை உணர்ந்தவன் . வேத நாவன் - வேதங்களை அருளிய திருநாவினன் . ஐவர் - ஐம்பொறிகள் . தி .4 திருப்பதிகம் 52, 54 பார்க்க . ஆக்கை - உடம்பு ( உடல் + பு ). செய் - வயல் . வரால் மீன்கள் . உகளும் - துள்ளும் . செம்மை ( செய்மை ) - நிலவளம் .

பண் :

பாடல் எண் : 2

கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி யெல்லிநின் றாடு வானை
அட்டகா மலர்கள் கொண்டே யானஞ்சு மாட்ட வாடிச்
சிட்டரா யருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

மலபந்தம் உடையோராய் உடற் கட்டினைப் பேணுவதில் நீங்கள் காலத்தைக் கழித்தல் கூடாது . தம் எண் கைகளையும் வீசியவராய் இரவில் ஆடுபவராய் உள்ளார் சோற்றுத் துறையரனார் . சோலைகளிலிருந்து கிட்டும் எட்டுப்பூக்களையும் நீங்கள் அர்ப்பணித்துப் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகிக்க அவ்வபிடேகத்தை ஏற்று சிட்டராய் உள்ள அப்பெருமான் உங்களுக்கு அருள்கள் செய்வார் .

குறிப்புரை :

கட்டர் - உடற்கட்டும் உயிர்க்கட்டும் உடையவர் . திரிமலபந்தரே தமிழிற் கட்டர் எனப்பட்டார் . கட்டு - பந்தம் , கட்டராய் நின்று காலத்தைக் கழிக்கவேண்டா எனவே வீடராய் நிலவிக் காலாதீதராய்ப் பேரின்பம் எய்துக என்பது பெற்றாம் , எட்ட ஆம் கைகள் :- ` எண்டோள் முக்கண் எம்மானே ( எண்டோள் வீசி நின்றாடும் பிரான் எட்டுக் கொலாமவர் தோளிணை )` ` யாவன `. ` மணிமிடற் றெண்கையாய் கேள் ` ( கலித்தொகை , கடவுள் வாழ்த்து ) எட்ட ஆம் - எட்டன ஆகும் , எல்லி - இரவு . அட்ட மலர் - எட்டுப்பூக்கள் , ` அட்டபுட்பம் ` கா - சோலை ` ஆன் அஞ்சும் - ( ஆனைந்து ,) பால் தயிர் நெய் முதலியன . ஆட்டுவோர் அன்பர் . ஆடுவோன் திருச்சோற்றுத் துறை முதல்வன் . சிட்டர் - வேதாசாரமுடையவர் , சிவாகமாசார முடையவர் . ஈண்டுச் சிவபிரானைக் குறித்தலால் , ` இறுதியாங் காலந்தன்னில் ஒருவனே ` என்ற பொருட்டாம் . ` சிட்டர்கள் வாழுந் தென்றில்லை ` ( தி .8 திருவாசகம் 213). ` சிட்டன் சிவன் ` ( தி .9 திருப்பல்லாண்டு 3).

பண் :

பாடல் எண் : 3

கல்லினாற் புரமூன் றெய்த கடவுளைக் காத லாலே
எல்லியும் பகலு முள்ளே யேகாந்த மாக வேத்தும்
பல்லில்வெண் டலைகை யேந்திப் பல்லிலந் திரியுஞ் செல்வர்
சொல்லுநன் பொருளு மாவார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் அழித்த பெருமானை அன்போடு தனித்திருந்து இரவும் பகலும் உள்ளத்தில் தியானியுங்கள் . பல்லில்லாத வெள்ளிய மண்டையோட்டை உண்கலமாக ஏந்திப் பல வீடுகளிலும் பிச்சைக்காகத் திரியும் செல்வராய் , வேதமாயும் வேதத்தின் விழுப்பொருளாயும் உள்ள அவர் உங்களால் தியானிக்கத்தக்க திருச்சோற்றுத்துறையனாரே .

குறிப்புரை :

கல்லினால் - மேருமலையாகிய வில்லால் . காதல் - சிவபக்தி , எல்லியும் பகலும் :- இராப்பகலாக ; உள்ளே - உணர்வினுள் , ஏக + அந்தம் = ஏகாந்தம் ; தனிமை ; ஒரு முடிபு . ` மாதேவற்கேகாந்தர் ` என்புழிக் காந்தர் என்னாது ஏகாந்தர் எனப் பிரித்துரைத்தலுமுண்டு . பின் ` அன்பர் ` என்றதால் காந்தர் என்பதே நேரிது . ஏத்தும் - ஏத்துங்கள் . முன்னிலை . பல் இல் ( லாத ) வெள்தலை ;- பிரம கபாலம் , பல் இலம் - பல வீடுகள் . ` மனைதொறும் பலிகொளும் இயல்பு ` ( தி .3 ப .92 பா .2). ` இல்லங்கள் தோறும் எழுந்தருளி ` பல் இலந் திரிவாரேனும் . சென்றடையாத திருவுடையார் என்பார் , ` செல்வர் ` என்றார் , ` சென்று அடையாத செல்வன் ` சொல்லும் பொருளும் ஆவார் :- ` சொல்லும் பொருளெலாம் ஆனார் ... தோத்திரமும் சாத்திரமும் ஆனார் ` ( தி .6 ப .78 பா .5). ` சொல்லானைப் பொருளானை ` ( தி .6 ப .74 பா .1).

பண் :

பாடல் எண் : 4

கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையரா யினிய ராகித் தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய்ப் புகுந்தென் னுள்ளச் சோர்வுகண் டருளி னாரே.

பொழிப்புரை :

நீலகண்டராய் , நெற்றிக்கண்ணராய்ப் பார்வதிபாகத் தலைவராய் , இனியராய் , ஒப்பற்றவராய் இருப்பாராய் , குளிர்ந்த வெண் பிறையைச் சூடியவராய் , பெருஞ்செயல்களையே செய்பவராய் உள்ள , என்றும் அழிதல் இல்லாத திருச்சோற்றுத்துறை இறைவர் அடியேனுடைய உள்ளத்திலே புகுந்து அதனுடைய தளர்ச்சியைக் கண்டு , அது நீங்க அருள் செய்தவராவார் .

குறிப்புரை :

கண்டம் கறையர் - திருக்கழுத்தில் நஞ்சின் கறுப்புடையர் கண்ட கண்ணர் எனல் சிறவாது . இறையர் - தங்குதலுடையவர் . ` வண்டிறை கொண்ட கமழ்பூம் பொய்கை ` ( மதுரைக் காஞ்சி 253 ). ` இம்மலையிறை கொண்டீண்டி ` ( சிந்தாமணி 538 .) ` ஈட்டிய வளநிதி யிறைகொள் மாநகர் ` ( சிந்தாமணி 1445 ). இனியர் பேரின்பத்துக்குக் காரணன் என்னும் பொருளும் பயக்கும் . சிவனார் , தனியர் - கேவலப் பொருள் . ` தான் தனியன் ` ( தி .8 திருவாசகம் ). ` ஏகமூர்த்தி ` (4.41.5) பனி வெண்டிங்கட்பிறையர் - ` சந்திரசேகரர் `, ` பிறைசூடி `. பீடர் - பெருமை யனவாக உடையவர் , உள்ளச் சோர்வு - மனத் தளர்ச்சி , உயிரிளைப்பு .

பண் :

பாடல் எண் : 5

பொந்தையைப் பொருளா வெண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே யேக மூர்த்தி யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகிப் பரம்பர மாகி நின்று
சிந்தையுட் டேறல் போலுந் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

பல ஓட்டைகளை உடைய இவ்வுடலைப் பேணத் தக்க பொருளாகக் கருதி விரைவாகக் காலத்தை , ` பற்றினையும் வீட்டின்பத்தையும் தருபவராய் மேலாருள் மேலாராய் நின்று உள்ளத்தில் தேன் போன்று இனிக்கும் திருச்சோற்றுத் துறைப் பெருமானே ! எம் தலைவரே ! தனிப் பெருந் தெய்வமே ` என்று துதியாதேனாய் , விரைந்தகலக் காலங் கழித்தேன் .

குறிப்புரை :

பொந்தை - பொள்ளத்த காயம் `, ( பொள் + து + ஐ = பொந்தை ) ` ஆநந்தப் பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ ` என்னுந் திருவாசகத்தில் இச்சொல்லின் பொருள் இனிது விளங்கும் . ஆண்டுச் சிவம் . ஈண்டுப் பவம் பற்றிய உடல் . பொருக்கெனல் - காலம் போன விரைவு குறித்தது . எந்தை - என் அப்பன் . ` ஏக மூர்த்தி ` - ` தனியர் ` ( தி .4 ப .41 பா .4). என்று நின்று :- ` சொல்லிய வண்ணம் செயல் `, பந்தமாய்வீடும் ஆகி :- ` பந்தமும் வீடும் படைப்போன் காண்க ` ( தி .8 திருவாசகம் திருவண்டப்பகுதி 52) ` பந்தமும்ஆய் வீடும் ஆயினார் ( தி .8 திருவாசகம் திருப்பொற்சுண்ணம் 20). பரம்பரம் - பராபரம் ; மேல வரின் மேலவன் , ` மேலையார் மேலையார் மேலாரே ` ( தி .7 ப .96 பா .7,10). சிந்தையுள் தேறல் :- தேறல் - தெளிவு . ( தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவலாலருளுமில்லை ` ( தி .4 ப .40 பா .3).

பண் :

பாடல் எண் : 6

பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுப தன்றி றமே
ஆர்த்துவந் திழிவ தொத்த வலைபுனற் கங்கை யேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

பார்வதிபாகராய் , அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பாசுபத வேடத்தினராய் ஆரவாரித்துக் கொண்டு வானிலிருந்து இறங்கிய அலையோடு கூடிய நீரை உடைய கங்கையைச் சடையில் ஏற்று உலகவருக்கு நீராடுதற்குரிய தீர்த்தமாகப் பெருகவிட்ட திருச்சோற்றுத் துறையனார் செய்திகளை , இனி மீண்டும் பிறவி எடுக்காத பேறு பெறுவதற்காகப் பலகாலும் அடைவுகேடாகக் கூறுங்கள் . ( அடைவு கெட - வாயில் வந்தவந்த படி .)

குறிப்புரை :

பேதை பங்கன் - ` ஏழை பங்காளன் `, ` மங்கை பங்கன் `. பார்த்தன் - அருச்சுனன் , பாசுபதன் - பாசுபதாத்திரத்துக்குரியவன் , அருள் செய்தவன் பாசுபதன் அது பெற்றவன் பார்த்தன் . இனிப் பேர்த்துப் பிறவாவண்ணம் பேதைபங்கனும் பாசுபதனும் ஆகிய திருச்சோற்றுத்துறையனார் திறமே பிதற்றுமின் ( தி .4 ப .41 பா .10). ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே ` ( தி .7 ப .45 பா .10). ` ஆட்டான் பட்டமையா லடியார்க்குத் தொண்டுபட்டுக் கேட்டேன் கெட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந் தேன் ` ( தி .7 ப .21 பா .2). ` பிழைத் தொருகால் இனிப்போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன் ` ( தி .7 ப .58 பா .4) ( தி .8 திருவாசகம் 375). மற்று ... நின் திருப்பாதமே மனம் பாவித்தேன் , ... இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன் ( தி .7 ப .48 பா .1) ஆர்த்து - இரைத்து , இழிவது - இறங்குவது . தீர்த்தம் - தூய ( புண்ணிய ) நீர் . போத - புகுத .

பண் :

பாடல் எண் : 7

கொந்தார்பூங் குழலி னாரைக் கூறியே காலம் போன
எந்தையெம் பிரானாய் நின்ற விறைவனை யேத்தா தந்தோ
முந்தரா வல்கு லாளை யுடன்வைத்த வாதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

விரைந்து ஊரும் பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய பார்வதியின் பாகரான , எங்கள் தந்தையாராய் , எங்கள் தலைவராய் உள்ள சிவந்த மகரந்தங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கும் திருச்சோற்றுத்துறைவனாரே ஆதிமூர்த்தியாவர் . அவரைத் துதிக்காமல் கொத்துக்களாக மலர்ந்த பூக்களைக் கூந்தலில் அணிந்த மகளிரைப் புகழ்ந்தவாறே எம் காலங்கள் வீணாகி விட்டனவே !

குறிப்புரை :

கொந்து - கொத்து , ஆர் - ஆர் ( நிறைந்த ) பொருந்திய , குழலினார் - கூந்தலார் . ஆகுபெயர் . மகளிர் திறத்தைக் குறித்தது . வீண் காலம் போக்கியதற் கிரங்கியவாறு , அந்தோ இறைவனை ஏத்தாது குழலினாரைக் கூறியே காலம்போன என்று இயைக்க . போன .- படர்க்கைப் பன்மை யிறந்த காலத் தெரிநிலை வினை முற்று . போ + ன் + அ = போன ; னகர மெய் இறந்த காலங் காட்டிற்று ; இது போயின என்பதன் சிதைவு . முந்து என்பது அராவுக்கும் அல்லற்கும் அடை யன்று . அல்குலாட்குரிய அடை . ` முன்னியவன் `, முன் + து = முன்று ; முந்து . ` முந்து நடுவு முடிவுமாகிய மூவரறியாச் சிந்துரச் சேவடியான் ` ( தி .8 திருவாசகம் 350). ` முந்திய முதல் நடு இறுதியுமானாய் ` ( தி .8 திருவாசகம் 373) அன்பர்க்கு முன்னியவள் ` ( தி .8 திருவாசகம் 170) ` முந்தனுடைச் செயல் என்று முடித்தொழுக வினைகள் மூளா அங்காளாகி மீளான் ` ( சித்தியார் ) என்பதில் இறைவனை ` முந்தன் ` என்றதால் இறைவிக்கும் அவ்வினையடியிற் தோன்றிய பெயர் பொருந்துமாறுணர்க . ஆதி மூர்த்தி - ` முதலுருப்பாதி மாதர் ஆவதும் உணரார் ` ( தி .4 ப .25 பா .9). செந்தாது - சிவந்த மகரந்தங்கள் ( சோலைகளைக் குறித்தன ).

பண் :

பாடல் எண் : 8

அங்கதி ரோன வனை யண்ணலாக் கருத வேண்டா
வெங்கதி ரோன்வ ழியே போவதற் கமைந்து கொண்மின்
அங்கதி ரோன வனை யுடன்வைத்த வாதி மூர்த்தி
செங்கதி ரோன்வ ணங்குந் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

அழகிய கிரணங்களை உடைய பிறையைக் கங்கை பாம்பு முதலியவற்றுடன் சடையில் வைத்த முதற்கடவுள் சூரியனால் வணங்கப்படுகின்ற திருச்சோற்றுத்துறையனாரே ஆதலின் அழகிய கிரணங்களை உடைய சூரியனைத் தலைமைக் கடவுளாகக் கருதாமல் அந்தச் சூரிய மண்டலத்தின் வழியாக அர்ச்சிராதி மார்க்கமாய் வீட்டுலகத்தை அடைவதற்கு உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள் .

குறிப்புரை :

அம் கதிரோனவனை - அழகிய சூரியனை , அண்ணல் - தலைவன் , ` அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ ?` ( தி .5 ப .100 பா .8). ` செஞ்சுடர்க்கோர் சோதிதானாம் ` ( தி .6 ப .15 பா .6). ` வெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்மின் `:- ` தூமாதி மார்க்கம் நற்சுத்த பஞ்சாக்கினி அக்காமாதி நீக்கக் கருது அர்ச்சிராதிமார்க்கம் மீளாக் கதியாகும் மெய்சிவத்தின் நல்லருட்கே ஆளாகக் காட்டும் இவை ` ( தருமை ஆதீனத்துச் சம்பிரதாய தீபம் 220 ). பிதிருயானம் முதலிய எல்லா வற்றினும் மேலானது சிவகதி . இவை யெல்லாம் அச்சிவகதிக்கு வழியாகும் . சிவகதியே மீளாக்கதி , ` அங்கதிரோனவனையுடன் வைத்த ஆதி மூர்த்தி `. இங்குச்சூரியன் வழிபடுவதை ஈற்றடி தோற்றுகின்றது .

பண் :

பாடல் எண் : 9

ஓதியே கழிக்கின் றீர்க ளுலகத்தீ ரொருவன் றன்னை
நீதியா னினைய மாட்டீர் நின்மல னென்று சொல்லீர்
சாதியா நான்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்
சோதியாய்ச் சுடர தானார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

` அவன் அருளாலே அவனைக் காணவேண்டும் ` என்பதனைச் செயற்படுத்தாமல் தம்முயற்சியால் எம் பெருமானைக் காணலாம் என்று முயன்ற பிரமனும் , திருமாலும் காணமுடியாத ஞான ஒளியினையுடையராய்த் தீத்தம்பமான திருச்சோற்றுத் துறையனார் ஆகிய ஒப்பற்ற பெருமானை நெறிமுறைப்படி தியானம் செய்ய மாட்டீராய் , அவரைத் தூயவர் என்று போற்றாதீராய் உலகமக்களாகிய நீங்கள் பயனற்ற நூல்களைப் பயின்றே காலத்தைக் கழிக்காதீர்கள் .

குறிப்புரை :

ஒருவனை ( சிவபிரானை ) ஓதி அறிதல் அரிது , உள்ளே தேடியுணர்தல் எளிது , உலகத்தீர் ஓதியே போழ்து கழிக்கின்றீர்கள் , அவனை வேதாகம நீதியால் உள்ளே நினைமின் , நினையமாட்டீர் . அந்நினைவுடன் வாயாலும் நின்மலா என்று சொல்லி நின்மலத்தீர் ஆகுமின் . தேடிக்காண்பேன் என்பதை கடைப்பிடிக்காத அயனும் சக்கிரம் ஏந்திய அரியும் காணாத பேரொளிப் பிழம்பாய்ச் சுடராய் விளங்கினார் .

பண் :

பாடல் எண் : 10

மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றதோ ருபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலையெ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே.

பொழிப்புரை :

மறுமையில் பிறப்பு ஏற்படாத வகையில் மறுமை என்பதனையே அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் , மற்றைப் பொருள்களிடத்தில் மனத்தை நிலையாக வைக்காமல் , பல நூல் களையும் கற்ற செருக்கோடு அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை ஒறுத்துப் பின் அவனுக்கு அருள்கள் செய்த திருச்சோற்றுத் துறையனை , அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டுப் பெற்ற முத்தி உபாயங்களால் பலகாலும் அடைவுகெடத் துதித்துப் பேசுங்கள் .

குறிப்புரை :

மறுமை உளதாகாதவாறு கழிக்க விரும்பினால் , நீவிர் மற்றொன்றை மனத்தில் வைக்காமல் , குரூபதேசத்தாற்பெற்ற முத்தி யுபாயங்களால் , சிவபிரானையே பிதற்றுங்கள் ( தி .4 ப .41 பா .6) அரக்கன் கற்று , அக்கல்வியின் பயனாகச் சிவனடி வணங்கிப் பிறவியறுக்காது , கயிலைமலை யருகு வந்து எடுத்தான் , எடுக்கவே துறையனார் அவனைச் செற்றார் . அவன் பாடிய சாமகானத்தை உகந்தார் , நாளும் வாளும் பேரும் பிறவும் அருளினார் . நீர் வையாதே பிதற்றுமின்கள் . ` வந்தவணம் ஏத்துமவர் வானம் அடைவாரே `.
சிற்பி