திருத்துருத்தி


பண் :

பாடல் எண் : 1

பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் பொழுதும் நெஞ்சு ளிறைவனை யேத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங் கொருத்தியைச் சடையுள் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

எம்பெருமான் இவ்வுயிருக்குச் செயற்பாட்டுச் சாதனமாம்படி தாதுக்களால் இணைத்துள்ள இவ்வுடலே காப்பாற்றத் தக்க உயர்ந்த பொருளாகக் கருதுதல் வேண்டா . எம் பெருமானை எப்பொழுதும் நெஞ்சத்துள் இருக்கச் செய்து அவனைத் துதியுங்கள் . பார்வதிபாகனாய்க் கங்கா சடாதரனாய் உள்ள திருத்துருத்தியின் ஞானச் சுடரை அடியேன் கண்டு உய்ந்தவாறு என்னே !

குறிப்புரை :

பொருத்திய குரம்பை :- ( தி .4 ப .31 பா .3) உயிர் பொருந்தும் இடமாக எழுவகைத் தாதுக்களாற் பொருத்திய குடில் , ` இருகாற் குரம்பை ` ( தி .4 ப .113 பா .2). ` சீவார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் ` ( தி .8 திருவாசகம் 418). இவ்வுடம்பை ஒரு பொருளாகக் கருதி , உடம்பின் பயனை இழத்தல் வேண்டா , திருத்துருத்தி இறைவனை நெஞ்சுள் எப்பொழுதும் இருக்க வைத்து வழிபட்டுய்மின்கள் . அவ்வாறேதான் , அடியேனும் , மலைமங்கையை இடத்திலும் அலை மங்கையைத் தலையிலும் அப்பெருமானைக் கண்டுய்ந்தேன் . துருத்தி - ஆற்றிடைக்குறை . இத்திருப்பதிகத்துள் யாண்டும் , கண்டவாறு என்னே என்று வியந்தபடியும் ஆம் . நான் கண்டவாறு கண்டு வழிபட்டுய்மின் என்று எச்சம் வருவித்துரைத்தலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 2

சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல விறைவனை யேத்து மின்னோ
அவைபுர மூன்று மெய்து மடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலுக்கான வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல என்றறிந்து எம் பெருமானையே துதியுங்கள் . மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்துப் பெற்ற இன்பம் இருந்தவாறு என்னே !

குறிப்புரை :

சவை - கூட்டம் , ஈண்டு மக்களைப் பெற்றுக் குடும்பத்தைப் பெருக்குதலைக் குறித்தது , சலம் - கலக்கம் ( துன்பம் ) பெண்ணை மணந்து பிள்ளைகளைப் பெற்றுவரும் வழியிற் கூட்டத்தைப் பெருக்கி உள்ளக் கலக்கத்தை வளர்த்து , அதில் அழுந்தி வருந்தும் இவ்வுலகப் பற்றுக்களை ஒரு பொருளாகா , இவற்றால் உயிர்க்குச் சிறிதும் நலம் இல்லை . முப்புரம் எரித்து , அடியவர்க்கு அருளிய இன்ப வடிவினனாகிய திருத்துருத்தி யாண்டவனை அடியேன் கண்டவாறு இறைவனை ஏத்துமின்கள் . அவைபுரம் :- ` புரமவை ` என்பது மொழிமாறி நின்ற தொடர் ` வைசாகி ` எழுத்து மாறியது போல் .

பண் :

பாடல் எண் : 3

உன்னியெப் போதும் நெஞ்சு ளொருவனை யேத்து மின்னோ
கன்னியை யொருபால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியி னடுவு தன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

பார்வதிபாகனாய்த் கங்கா சடாதரனாய்க் காவிரியின் இனிய நீரின் நடுவிலே விளங்கித்தோன்றும் திருத் துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் கண்ட மகிழ்வு இருந்தவாறு என்னே ! ஆதலின் என்னை ஒத்த மகிழ்வினை அடைய எப்பொழுதும் ஒப்பற்ற அப் பெருமானை உள்ளத்தில் இருத்திப் போற்றுங்கள் .

குறிப்புரை :

எல்லா வுலகுயிர்களையும் பெற்றும் கன்னியாயே திகழும் அம்பிகையை இடப்பக்கத்திலும் கங்கையைச் செஞ்சடையிலும் வைத்து , காவிரியாற்றின் இடையே பூம்புனல் வளம் பொலிந்து செறிந்த திருத்துருத்தி நகரிறைவனைத் தொண்டனேன் கண்டவாறே நீவிரும் அத்தனி முதல்வனை எப்போதும் நெஞ்சுள் உன்னி ஏத்துமின் . ` யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ` ( தி .10 திருமந்திரம் ). ` உலகுயிர் எல்லாம் ஈன்றும் பவன் பிரமசாரியாகும் பான்மொழி கன்னியாகும் ` ( சித்தியார் 2. 77 ).

பண் :

பாடல் எண் : 4

ஊன்றலை வலிய னாகி யுலகத்து ளுயிர்கட் கெல்லாம்
தான்றலைப் பட்டு நின்று சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி வானவர்க் கிறைவா வென்னும்
தோன்றலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

உலகத்தில் எல்லா உயிர்களுக்கும் அவற்றின் புலால் உடம்பிலும் கலந்து வலிமை தருபவனாகி , உயிர்களுக்குள்ளும் தான் உயிராய் நின்று , அவ்வுயிர்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்பத் தீயைப் போன்ற துன்பங்களில் அகப்பட அத்துயரம் தாங்காமல் வருந்தும் தேவர்கூட ` எங்கள் தலைவனே ` என்று தம் துயர்களைப் போக்குமாறு வேண்டும் மேம்பட்டவனான திருத்துருத்திப் பெருமானைத் தரிசித்து அடியேன் உய்ந்த சீர் இருந்தவாறு என்னே !

குறிப்புரை :

உலகத்துள் எல்லா உயிர்களுக்கும் ஊனுடம்பில் வலியுடையவனாகி , ( அவ் வுயிரோடு தலைப்பட்டு உயிர்க்குயிராய் நின்று ) அவ்வுயிர்அவ்வுடலிற்சாரும் தீயில் வீழ , அவ்வீழ்ச்சி தாங்கமாட்டாது வருந்தும் உயிர்த் தொகுதியுள் அடங்கும் வானோர் கூட்டம் தேவாதி தேவா மகாதேவா என்று அழைத்துக் குறையிரக்கும் போது அருள்செய்யத் தோன்றுகின்ற வள்ளலை , துருத்தி யிறைவனைத் தொண்டனேன் கண்டவாறு என்ன வியப்பு ? ஊன்தலை - ஊனின்கண் , ` தலை ` ஏழனுருபின் பொருட்டு , வன்மை உயிர்க் குயிராயிருந்து ஆட்டுவித்து ஆடுதல் . ` உன்னுடம்பிற் கீடம் ` ( திருக்களிறு ) காண்க .

பண் :

பாடல் எண் : 5

உடறனைத் கழிக்க லுற்ற வுலகத்து ளுயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிய வேண்டி லிறைவனை யேத்து மின்னோ
கடறனி னஞ்ச முண்டு காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய விடத்தை உண்டு மற்றவர்கள் தம்முயற்சியால் காண்பதற்கு அரியனாக இருக்கும் ஞானவடிவினனாகிய துருத்திப்பெருமானை அடியேன் தரிசித்து உய்ந்த பேறு இருந்தவாறென்னே !. உடல் தொடர்பை அடியோடு போக்கக் கருதும் உயிர்களாகிய உங்களுக்குள்ள துயர்களைப் போக்க நீர் விரும்பினால் அப்பெருமானைத் துதித்துப் போற்றுங்கள் .

குறிப்புரை :

பிறவியைத் தீர்க்க உற்ற உலகத்துளுயிர் எல்லா வற்றிற்கும் ஓர் உறுதிமொழி அறிவிக்கின்றேன் . இடர் தீர்க்க நினை வீரேல் , இறைவனை ஏத்துமின் . பாற்கடலில் எழுந்த நஞ்சையுண்டு , தேவாசுரர்களைச் சாவாது காத்தவனாயும் , எவரும் காண்டற்கரிய கடவுட் சுடராய திருத்துருத்தி யிறைவனைத் தொண்டனேன் கண்டவாறு ( கண்டு ஏத்துமின் ). சுடர் என்றதால் கசிந்துருகுவோர்க்குக் காண்பெளிதாய் நிற்பன் என்பது தோன்றும் . ` காண்டற்கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் `.

பண் :

பாடல் எண் : 6

அள்ளலைக் கடக்க வேண்டி லரனையே நினைமி னீர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட் புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங் காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

பலதுவாரங்களை உடைய இவ்வுடலிலே , இதயமாகிய தாமரையில் இருக்கும் வள்ளலாய் , தேவர்களுக்கும் தம் முயற்சியால் காண்பதற்கு அரியவனாக இருக்கும் , காளையை ஏறி ஊரும் பெருமானை , அடியேன் கண்டு உய்ந்த சீர் இருந்தவாறென்னே ! ஆதலின் இப்பிறவியாகிய சேற்றினை நீங்கள் தாண்டிச் செல்ல விரும்பினால் சிவபெருமானையே தியானம் செய்யுங்கள் .

குறிப்புரை :

ஒன்பது வாயில்களை உடைய இவ்வுடம்பினுள் அகத்தாமரை மலரில் வீற்றிருந்தருளும் வள்ளலும் , தேவர்கட்கும் காட்சிக்கு எளியனல்லாத வெள்ளேற்றுத் துள்ளலும் ஆகிய பிரானைத் தொண்டனேன் கண்டவாறு வழிபட்டு , நீங்கள் அரனையே நினைந்து இப்பிறவிச் சேற்றினின்றும் கடந்து பேரின்ப வரம்பில் இருந்து இன்புறுமின் . அள்ளல் - சேறு , ` அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகை வீரட்டனார் ` ( தி .4 ப .27 பா .6). பொள்ளல் - துளை , ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போதுணர மாட்டேன் ` ( திருத்தாண்டகம் ) ` ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளையுடைத்து ` ( தி .4 ப .44 பா .2). தி .4 ப .18 பா .9, குறிப்பு நோக்குக . காயம் - உடல் , தாமரை . உட்புண்டரீகம் - அகத் தாமரை . காண்பு - காண்டல் , துள்ளல் , ` வெள்ளேற்றுத் துள்ளல் ` ( தி .4 ப .27 பா .6).

பண் :

பாடல் எண் : 7

பாதியி லுமையா டன்னைப் பாகமா வைத்த பண்பன்
வேதிய னென்று சொல்லி விண்ணவர் விரும்பி யேத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ் சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

பார்வதிபாகன் , வேதியன் என்று தேவர்கள் விரும்பித் துதித்தவாறிருக்க , பிறப்பெடுத்த பிரமனும் திருமாலும் காணாத சோதியாகிய திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவாறென்னே !

குறிப்புரை :

தன் திருமேனிப் பாதியில் உமாதேவியாரை வாமபாகத்தில் வைத்த கலியாண குணத்தன் ; வேத முதல்வன் ; இவ்வாறு சொல்லி விண்ணோர்கள் விரும்பி வழிபட்டு நிற்க ஒளிரும் முதல்வன் . பிறப்புடையவராகும் நான்முகனும் ஆழியானும் செருக்குற்று முறையே அன்னமும் பன்றியுமாகிய முடியும் அடியும் தேடிக் காணாத அளவிலாப் பேரொளிப் பிழம்பினன் . திருத்துருத்தி யிறைவன் . அவனைத் தொண்டனேன் கண்டவாறு ( கண்டு வழி பட்டுய்மின் ). சாதி - பிறப்பு . அடை இருவர்க்கும் பொது .

பண் :

பாடல் எண் : 8

சாமனை வாழ்க்கை யான சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித் தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத் தொன்னெறி பலவுங் காட்டும்
தூமனத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

பிறையைச் சடையில் சூடி அடியார்கள் உய்வதற்குப் பழைய நல்ல வழிகளைக் காட்டும் தூய திருவுளங்கொண்ட திருத்துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த நலம் இருந்தவா றென்னே! ஆதலின் தொண்டர்களாகிய நீங்கள் அழிந்து போகக் கூடிய மனைவாழ்க்கை என்ற வஞ்சனையுள் அழுந்தாது எம்பெருமானுக்கு நறிய அகிற்புகையை அர்ப்பணித்துத் தலையால் தொழுது அவன் திருவடிகளை உடலால் வணங்குங்கள் .

குறிப்புரை :

சாம் மனை வாழ்க்கை - அழியும் இல்வாழ்க்கை . சலம் - அடைவு , கலக்கம் ( தி .4 ப .42 பா .2). உலக வாழ்க்கையை விரும்பித் துன்பத்தில் அழுந்திப் பிறவி நெறியில் திரிந்து வருந்துதல் வேண்டா . நல்ல அகிற்புகைக் காட்டி அடிதொழுது வணங்கி யுய்மின் . திங்களைப் பொங்கு சடையுள் வைத்துப் பண்டைய ( அருள் ) நெறிகள் அனைத்தும் உணர்த்தும் தூய திருவுள்ளத்தில் உறையும் திருத்துருத்தி நகரிறைவனைத் தொண்டனேன் கண்டவாறு கண்டு திருவடி தொழுது வணங்குமின் .

பண் :

பாடல் எண் : 9

குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள் கருத்தெண்ணா தொழிமி னீர்கள்
விண்டவர் புரங்க ளெய்து விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்க டுணையி னானைத் துருத்திநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

பகைவர்களுடைய மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருள்களை வழங்கி அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத் துருத்தியுள் தரிசித்து உய்ந்த சீர் இருந்தவாறென்னே ! உடல் பருத்த சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர் . ஆதலின் அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள் .

குறிப்புரை :

குண்டராகிய சமணரும் புத்தரும் . குறி - ` சிவலிங்கம் ` ( தி .4 ப .67 பா .9) குறிக்கோள் ` உண்மைநின்ற பெருகுநிலைக் குறியாளர் அறிவு ` ( தி .6 ப .84 பா .3) ` குறிகளும் ` ( தி .5 ப .90 பா .6) நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங் குறியே ( தி .7 ப .24 பா .9) ` குறியிலாக் கொடியேன் ` ( தி .6 ப .66 பா .8). அந்தக் கரணங்கள் அடக்கிக் குருவின் அருளினால் அறிவதொரு குறி `( சித்தியார் )` அருள் ஞானக்குறி ` ( ? ) இதயத்தே அரனைக்கூடுங் கொள்கைக்கு வாயிலான குறி ( ? ) சிவமேயாய் நின்றிடுவார் . அந்நெறியில் தம்மோடு அழியும் குறி ( ? ). அதைச் சைவத் திறத்தில் நின்றோழுகி அறியாமல் , கண்ணாற்கண்டதே கருதுவார்கள் புறப் பொருளாராய்ச்சி மட்டும் உடையர் ; அகப்பொருளாராய்ச்சியில்லாதார் . அவர் கருத்துக்களை ஒரு பொருளாகக் கொள்ளாதொழிமின் . பகைவர் மும்மதிலும் எரித்து வானவர்க்கு அருள்புரிந்த தொண்டர் துணைவனைத் தொண்டனேன் துருத்தியிற் கண்டவாறு ( கண்டு வழிபட்டுய்மின் ).

பண் :

பாடல் எண் : 10

பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட வடலரக் கன்ற னாண்மை
கண்டொத்துக் கால்வி ரலா லூன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.

பொழிப்புரை :

உலகங்களைக் கடந்த நீண்ட புகழை உடைய வலிய அரக்கன் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட ஆள்வினையை நினைத்து அவனைக் கால் விரலால் ஊன்றி நெரித்துச் செருக்கு அழித்து மீண்டும் அவனுக்கு அருள்கள் செய்தவரும் , மதியின் கூறாகிய பிறையை அணிந்தவருமான துருத்திப் பெருமானை அடியேன் கண்டு உய்ந்த சிறப்பு இருந்தவாறென்னே ! நீங்களும் இவ்வுடல் தொடர்பாகிய பிறவியை அடியோடு போக்க விரும்பினீர்கள் ஆயின் அப்பெருமான் பண்பு செயல்களையே அடைவு கேடாகப் பேசுங்கள் .

குறிப்புரை :

பிதற்றுமின் : ( தி :-4 ப .41 பா .6, 10, ப .42 பா .10.) பிண்டம் - உடல் . ` பிரானையே பிதற்றுமின் ` அண்டம் - உலகம் . கழித்தல் - பிறவி தீர்த்தல் . அண்டத்தைக் கழிய நீண்ட அடல் - அண்டங்களைக் கடந்து வென்ற பெருவலி . ஆண்மை - ஆளுந்தன்மை ; வீரம் . கண்டு - மலை யெடுத்தமையாற் கண்டு . அவனையும் ஒரு பொருளாகக்கொண்டு அடக்கவேண்டி நேர்ந்ததால் இசைந்து என்றார் . இசைந்தாலும் யுத்த சாதனம் வேண்டாமை தோன்றக் கால்விரலால் ஊன்றி என்றார் . சாமகானம் கேட்டு , அடக்கும் பெற்றியின் நீங்கி அருளும் பெற்றி உற்றதால் மீண்டு என்றார் . துண்டத்து - நிலாத்திங்கட்டுண்டத்தை யுடைய ; அரங்கம் .
சிற்பி