திருவொற்றியூர்


பண் :

பாடல் எண் : 1

ஓம்பினேன் கூட்டை வாளா வுள்ளத்தோர் கொடுமை வைத்துக்
காம்பிலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ யுய்யக் கொள்ளா யொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பான வளைவான செய்திகளைத் தேக்கி வைத்துக் கொண்டு இவ்வுடம்பினைப் பயனற்ற வகையில் பாதுகாத்துக்கொண்டு , காம்பு இல்லாத அகப்பை முகக்கக் கருதியதனை முகக்க இயலாதவாறுபோல , உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதேனாய்ப் பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை விரைவில் தான் அழியப் போவதனை நினையாது வேறு என்னென்னவோ எல்லாம் நினைப்பதுபோல எண்ணாத பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை ஓம்பி அடியேன் உய்யும் வண்ணம் ஒற்றியூர்ப் பெருமானாகிய நீ அருளவேண்டும் .

குறிப்புரை :

கூட்டை :- உடம்பைக் கூடு என்பதும் தொல் வழக்கு , ` கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே காட்டுப் பள்ளியுளான் கழல் சேர்மினே ` ( தி .5 ப .84 பா .2). வருமுறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாதழுந்தி , உருவெனுந் துயரக்கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் , திருமணத்துடன் சேவித்து முன்செலுஞ் சிறப்பினாலே மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுட்புக்கார் ` ( தி .12 திருஞானசம்பந்தர் புராணம் 1249) என்னுஞ் சேக்கிழார் திருவாக்கால் , துயரங்கட்குக் கூடு உடல் என்பது விளங்கும் . ` தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டுப் போன இக் கூட்டையே காக்கை கவரில் ... ... என் ?` ( தி .10 திருமந்திரம் 167). வாளா - வீணில் . காம்பு இலா மூழை .- பிடித்தற் குரிய காம்பு இல்லாத அகப்பை . முகத்தலில்லாதது காம்பிலாத அகப்பை . எழுத்தறியும் பெருமானே , எண்ணாத பலபல எண்ண மெல்லாம் எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற என்னை ஓம்பி , யான் உய்யும் வண்ணம் நீ ஆண்டு கொள்வாய் .

பண் :

பாடல் எண் : 2

மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச்
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

பொழிப்புரை :

ஒற்றியூர் உடைய கோவே ! மனம் என்னும் தோணியைப் பொருந்தி , அறிவு என்று சொல்லப்படும் சவள் தண்டை ஊன்றிச் சினம் எனும் சரக்கை அத்தோணியில் ஏற்றிப் பாசக்கடலாகிய பரப்பில் அத்தோணியைச் செலுத்தும்போது மன்மதன் என்ற பாறை தாக்க அத்தோணி கீழ்மேலாகக் கவிழும்போது உன்னை அறிய இயலாதேனாய் வருந்துவேன் . அப்போது அடியேன் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக .

குறிப்புரை :

மனம் தோணி ; மதிகோல் ; சினம் சரக்கு ; ( பாசம் ) கடல் ; மனன் ( மன்மதன் ) பாறை ; மறியும்போது - கீழ்மேலாகும் பொழுது . ஒண்ணாது - ஒன்றாது ; பொருந்தாது . மனத்தோணி பற்றி மதிக்கோலை ஊன்றி , சினச் சரக்கை யேற்றி ( ப் பாச ) க் கடற் பரப்பில் ஓடும் வேளையில் , காமப்பாறை தாக்கிக் கவிழ்ந்து கீழ்மேலாகும் பொழுது , ஒற்றியூருடைய கோவே , உன்னை அறிய ஒன்றாது வருந்துவேன் , அப்போது என்னை மறந்து உன்னை உன்னும் உணர்வை நல்குவாய் . மனன் ( மநஸ் ) என்பது பழமையான பாடம் . மனன் - மன்மதன் . இத்திருப்பாடலை மறவாது எஞ்ஞான்றும் ஓதிவருதல் வீடுபேறு விழைவாரது கடனாகும் . ` மதன் ` என்பது பிழைபட்டபாடம் .
சிற்பி