திருக்கயிலாயம்


பண் :

பாடல் எண் : 1

கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும்
உனகனா யரக்க னோடி யெடுத்தலு முமையா ளஞ்ச
அனகனாய் நின்ற வீச னூன்றலு மலறி வீழ்ந்தான்
மனகனா யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

பொன்னும் வயிரமும் முற்பட்ட சிறந்த இரத்தினங்களும் உடைய கயிலையைப் பார்த்தும் அதனைப் பெயர்த்துவிடும் அகந்தையுற்ற மனத்தானாய் அரக்கன் ஓடிவந்து அதனைப் பெயர்க்க முற்பட்ட அளவிலே பார்வதி அச்சம் கொள்ளப் பாவ மில்லாதவனாய் நிலைபெற்று எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமான் விரலைச் சற்று ஊன்றிய அளவிலே அரக்கனாகிய இராவணன் அலறிக் கொண்டு செயலற்றுக் கீழே விழுந்தான் . எம் பெருமான் நிலைபெற்ற உள்ளத்தனாய் விரலை அழுந்த ஊன்றி இருந்தானாயின் மீண்டும் இராவணன் கண்விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்க மாட்டாது .

குறிப்புரை :

உன் + அகன் = உனகன் - உன்னுகின்ற அகத்தை யுடையவன் . ` உனகன் - இழிந்தவன் ` ( லெக்ஸிகன் ) அரக்கன் - இராவணன் , அனகன் - கடவுள் ; இயல்பாகவே தூயன் , அகன் - பாவி . அநகன் - பாவமில்லாதவன் . மன் அகனாய் - நிலைபெற்ற உள்ளத்தனாகி . இரக்கம் உறாது , அழித்தல் வேண்டும் என்பது நிலையான அகத்தினனாகி . மறித்தும் - மீண்டும் .

பண் :

பாடல் எண் : 2

கதித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
அதிர்த்தவ னெடுத்தி டல்லு மரிவைதா னஞ்ச வீசன்
நெதித்தவ னூன்றி யிட்ட நிலையழிந் தலறி வீழ்ந்தான்
மதித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

மன எழுச்சியை உடைய இராவணன் கோபத்தாற் கண்கள் சிவக்கப் பெரிய கயிலைமலையை நோக்கி ஆரவாரித்துக் கொண்டு ஓடிப் பெயர்க்க முற்பட்ட அளவில் , பார்வதி அஞ்ச , எல்லோரையும் ஆள்பவனாகிய தவச்செல்வனான சிவபெருமான் விரலைச் சிறிது ஊன்றியிட்ட நிலையிலேயே அவன் ஆற்றல் அழிந்து கதறிக்கொண்டு விழுந்தான் . பெருமான் அவனை அழித்தலைக் கருதி விரலை அழுத்தமாக ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண் விழித்துப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது .

குறிப்புரை :

கதித்தவன் - மலையை எடுத்தற்பொருட்டு உற்ற எழுச்சியை உடையவன் . கண் சிவந்து என்புழியெல்லாம் ( தி .4 ப .47 பா .2, 9) சினத்தின் காரியமாகிய செந்நிறத்தை அடைந்து என்றுரைத்துக் கொள்க . கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருளவாதலும் நிறத்துரு வுணர்த்தலும் உண்மை தொல்காப்பியத்தில் அறிக . அரிவை - உமை யம்மையார் , நெதித்தவன் - தபோநிதி . நிதி - நெதி , தவன் - தவத்தோன் . ` விழுநெதி ` ( நற்றிணை . 16) மதித்து - கருதி . இறை - இறைவன் ; சிறிது .

பண் :

பாடல் எண் : 3

கறுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
மறித்தலு மங்கை யஞ்ச வானவ ரிறைவ னக்கு
நெறித்தொரு விரலா லூன்ற நெடுவரை போல வீழ்ந்தான்
மறித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

கரிய நிறத்தை உடைய இராவணன் வெகுண்டு கயிலையாகிய பெரிய மலையைக் கையால் புரட்ட முயன்ற அளவில் பார்வதி பயப்படத் தேவர் தலைவனாகிய சிவபெருமான் சிரித்து ஒருவிரலை மெதுவாக ஊன்றி அவனை நெரிக்கப் பெரியமலை கீழே விழுவதுபோல அவன் விழுந்தான் . மீண்டும் அவ்விரலை பெருமான் ஊன்றியிருந்தால் இராவணன் மீண்டும் கண்விழிக்கும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது .

குறிப்புரை :

கறுத்தவன் - கறுத்தநிறத்திராவணன் ; சினந்தவன் , மறித்தலும் - கீழ்மேலாக்க முயலுதலும் . வானவர் இறைவன் - தேவாதி தேவன் . நக்கு - நகைத்து . நெறித்து - நெறியச் செய்து , ` நெடுவரை ( மலை ) போல வீழ்ந்தான் ` என்றது அவனது உடல்நீட்சி குறித்தது . மறித்து - மீண்டும் . இறை . ( தி 4 ப .47 பா .2, 7, 10.)

பண் :

பாடல் எண் : 4

கடுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
எடுத்தலு மங்கை யஞ்ச விறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான் . கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

கடுத்தவன் - சினந்தவன் . இறையே - சிறிதே . நக்கு - நகைத்து . நொடிப்பளவில் - கைந்நொடிப்பொழுதில் . மடித்து : காலை , கால்விரலை மடியவைத்து .

பண் :

பாடல் எண் : 5

கன்றித்தன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
வென்றித்தன் கைத்த லத்தா லெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தா னக்கு நாத னூன்றலு நகழ வீழ்ந்தான்
மன்றித்தா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

வெகுண்டு கண் சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடி இராவணன் பல வெற்றிகளைப் பெற்ற தன் கைகளால் எடுத்தலும் பார்வதி அஞ்ச எம் பெருமான் நன்கு சிரித்துத் தன் கால் விரலை ஊன்றிய அளவில் அவன் துன்புற்று வீழ்ந்தான் . அவனைத் தண்டிக்கக்கருதி விரலைப் பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

கன்றி - சினந்து . நன்று - பெரிதும் மேல் ` இறையே நக்கு ` என்றதற்கேற்ப உரைக்கவேண்டி . நன்று - சிவம் எனலும் நன்று , எதுகை நோக்கி மிக்கது . நகழ்தல் - துன்புறல் . ` நகழ மால்வரைக் கீழிட்டு அரக்கர் கோனை நலனழித்து ` ( தி .6 ப .11 பா .10) ` நகழ்வொழிந்தார் அவர் நாதனையுள்கி நிகழ்வொழிந்தார் எம்பிரானொடுங்கூடி ` ( தி .10 திருமந்திரம் 2669) ` நகழ்வன சில ` ( கம்பர் , அதிகாய . 136) என்னும் பொருட்டுமாம் . நகழ்வாதனம் ( தத்துவப்பிரகாசம் , 107 உரை ) போலவீழ்ந்தான் எனலுமாம் . மன்றி - தண்டித்து ` மன்றி விடல் ` ( பழமொழி . 288)

பண் :

பாடல் எண் : 6

களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டல்லு நேரிழை யஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நெளித்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச , அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த , இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான் . விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

களித்தவன் :- மனக்களிப்பினன் . நெளித்தவன் :- காயத்துவளைவினன் . வெளித்தவன் :- அன்பர்க்கு மறையாது வெளிப்படுதலையுடையவன் . வெற்பு - கயிலைமலை . மளித்து - மடித்து . மீண்டும் எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 7

கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனா யெடுத்த வாறே யேந்திழை யஞ்ச வீசன்
திருத்தனாய் நின்ற தேவன் றிருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திரு விரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான் . இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றி யிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

கருத்தன் - இலங்கைக்குத் தலைவன் ; மலையை யெடுக்கக் கருதிய கருத்தினன் . எருத்தன் - காளைபோன்றவனாகி . கழுத்தையுடையவனுமாம் . ஏந்திழை - உமாதேவியார் . திருத்தன் - தீர்த்தன் ; திருத்தலையுடையவன் . ` சிந்தனையைத் திருத்தியாண்ட சிவலோகா `. வருத்துவான் - வருத்தும் பொருட்டு .

பண் :

பாடல் எண் : 8

கடியவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை யஞ்ச வெடுத்தலு மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரல்லா லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான் . விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

` வடிவுடைமங்கை ` :- அழகுடையவற்றிற்கெல்லாம் அழகுதந்த அழகிய உமையம்மையார் . மருவ - பொருந்த . செடி - தீங்கு . வடிவு - அடையாளத்துரு .

பண் :

பாடல் எண் : 9

கரியத்தான் கண்சி வந்து கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தா னெடுத்தி டல்லு மேந்திழை யஞ்ச வீசன்
நெரியத்தா னூன்றா முன்ன நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

உள்ளம் கரியக் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பற்றி அது உறுதிகெட்டுத் தளர இராவணன் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , ஈசன் இராவணன் உடல் நெரியுமாறு தன் கால்விரலைச் சிறிது ஊன்றாத முன்னரே கனத்தைத் தாங்கமுடியாத அவன் அலறியவாறு விழுந்தான் . அவன் இறக்குமாறு எம் பெருமான் விரலை ஊன்றியிருப்பின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .

குறிப்புரை :

கரிய - கரிந்திட ; கருமையுற . இரிய - ஓட . நெரிய - முறிய . மரிய - இறக்க .

பண் :

பாடல் எண் : 10

கற்றனன் கயிலை தன்னைக் காண்டலு மரக்க னோடிச்
செற்றவ னெடுத்த வாறே சேயிழை யஞ்ச வீசன்
உற்றிறை யூன்றா முன்ன முணர்வழி வகையால் வீழ்ந்தான்
மற்றிறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.

பொழிப்புரை :

சிவபெருமானுடய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான் . சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும் .

குறிப்புரை :

கற்றனன் - சிவபிரான் . செற்றவன் - நெருங்கியவன் . சேயிழை - செம்மை நிறத்தையுடைய இழைகளையணிந்த உமா தேவியார் . இறை - சிறிது ; இறைவன் .
சிற்பி