திருக்குறுக்கைவீரட்டம்


பண் :

பாடல் எண் : 1

நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணா ரருச்சுனற் கம்பும் வில்லும்
துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில் , சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற , பிரமனும் , நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர் . அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார் .

குறிப்புரை :

நீர் எனும் பிலயம் ஜலப்ரளயம் ( பாதலம் ?). பிரமன் முடிகாணான் . மால் அடிகாணான் . பிலயம் கொள்ள - ஜலப்ரளயம் ( பாதலம் ) வரையில் . அருச்சுனற்கு - அருச்சுனனுக்கு . அம்பும் வில்லும் கொடுத்தார் . வேடராகிக் கொடுத்தார் . மந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார் . துடி - துடிப்பு . உடுக்கை பொருந்து மேற்கொள்க . தூய மந்திரங்கள் :- பாசுபதாத்திர பிரயோகத்துக்குரிய மந்திரங்கள் . கொடித்தேர் , நெடுந்தேர் . பிலயம் என்பது பிரளயம் என்னும் பொருளது என்று லெக்ஸிகனிற் குறித்திருக்கின்றனர் . ` பெம்மானிடம் பிலயம் தாங்கி மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்திக் குன்றத் தருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே ` ( திருஞானசம்பந்தர் ) என்றதிற் ` பிலயம் ` என்றது பிரளயத்தைக் குறித்த தென்றனர் . ` அடிமுடி ` - ` பாதாளம் ஏழினும் கீழ் சொற் கழிவு பாத மலர் போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே ` ( தி .8 திருவாசகம் .).

பண் :

பாடல் எண் : 2

ஆத்தமா மயனு மாலு மன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமா னென்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமா மட்ட மீமுன் சீருடை யேழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

குருவிற்குத் தொண்டு செய்யும் பிரமனும் திருமாலும் ஏனைய தேவர்களும் ` எம்பெருமானே உனக்கு அஞ்சலி செய்கிறோம் ` என்று தொழுது தோத்திரங்களை மொழியக் குறுக்கை வீரட்டனார் பிரமோற்சவ வேள்வி நிகழும் அட்டமிக்கு முற்பட்ட ஏழு நாள்களும் கூத்தாடுபவராய்த் திருவீதி உலாவை நிகழ்த்தியவராவர் .

குறிப்புரை :

ஆத்தம் - குருசேவை , ( இலக்கியச் சொல்லகராதி . பக்கம் 21) அயனுக்கும் மாலுக்கும் சிவ ( குரு ) சேவையே நோக்கம் ஆதலின் , ஆத்தமாம் அயனும் மாலும் எனலாயிற்று . அவ்விருவரும் அல்லாத தேவர் பிறர் , சோத்தம் - அஞ்சலி , ` சோத்துன்னடியம் என்றார் ` ( தி .8 திருக்கோவையார் 173) ` சோத்தம் உன்னடியம் என்று ஒருகாற் சொன்னார் ` சோத்தம் - இழிந்தார் செய்யும் அஞ்சலி `. ( தி .8 திருக்கோவையார் ). ` மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக்கூறல் வீறிலி நடைக் கூடம் தொடர்ந்தெனை நலியத்துயருறுகின்றேன் சோத்தம் எம்பெரு மானே ` ( தி .8 திருவாசகம் 419) சோத்தம் என்று தொழுதல் :- காயத்தின் வினை . எம்பெருமான் என்று பாவித்தல் :- மனத்தின் வினை . தோத்திரங்கள் சொல்லல் :- வாக்கின் வினை , தீர்த்தம் - ( பிரமோற்சவ ) யாகம் . அட்டமீ திதிக்கு முன் ஏழுநாளும் என்க . திருவீதியுலாப் போதரல் பிரதமை முதல் அட்டமி முடிய எட்டுநாள் .
சிற்பி