திருக்கோடிகா


பண் :

பாடல் எண் : 1

நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கண் மூன்றுஞ் செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடைய பெருமான் நெற்றிக்கண்ணனாய் , நீற்றைத் திருமேனியிற் பூசியவனாய் , முறுகிக் கற்றையான சிவந்த சடையினனாய் , கடலில் தோன்றிய நஞ்சினைப்பருகியவனாய் , பகைவருடைய முப்புரங்களிலும் தீயைச் செலுத்தியவனாய் , குற்றமற்ற நற்பண்பினாய் உள்ளவனாவான் .

குறிப்புரை :

நெற்றியிற் கண்ணுடையவனே ; திருமேனியில் திரு நீற்றைப் பூசியவனே ; பொன்போலும் கற்றைச் சடையுடையவனே ; பாற்கடலில் எழுந்த நஞ்சுண்டவனே ; பகைவர் முப்புரமும் செந் தீயுண்ணத் தீயைச் செலுத்தியவனே ; குற்றம் இல்லாத எண் குணங்களை யுடையவனே ; திருக்கோடிகாவை உறைவிடமாகக் கொண்ட தலைவனே . ( தி .4 ப .51 பா .6) ஆவது திருநேரிசையை நோக்கின் எல்லாம் விளி எனல் புலப்படும் . புன்மை - பொன்மை ; மென்மை . செற்றவர் - சினந்தவர் ; பகைவர் . செவ்வழல் - செந்தீ . அழல் செலுத்தல் - எரி கொளச்செய்தல் .

பண் :

பாடல் எண் : 2

கடிகமழ் கொன்றை யானே கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத் தானே
அடியிணை பரவ நாளு மடியவர்க் கருள் செய்வானே
கொடியணி விழவ தோவாக் கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கொடிகள் ஏற்றப்பட்டுத் திருவிழாக்கள் நடத்தப் பெறுதல் நீங்காத கோடிகாப் பெருமான் நறுமணம் கமழும் கொன்றைப் பூவினனாய் , கையில் ஏந்திய மண்டையோட்டை உடையவனாய் , அழகிய பார்வதியைப் பாகமாக மார்பில் கொண்டவனாய்த் தன் திருவடிகளை வழிபடுமாறு நாள்தோறும் அடியவர்களுக்கு அருள் செய்பவனாவான் .

குறிப்புரை :

கடி - மணம் , கபாலம் - பிரமகபாலம் . வடிவுடை மங்கை :- திருக்கோடிகாவில் உள்ள அம்பிகையின் திருப்பெயர் . மார்பில் ஓர் பாகத்தான் :- ` மலைமகளை மார்பத்து அணைத்தார் ` ( தி .6 ப .21 பா .6) ` மார்பிற் பெண் மகிழ்ந்த பிரமாபுர மேவிய பெம்மான் ` ( தி .1 ப .1 பா .4.) ` வடிவுடைமங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார் `. அடிஇணை - திருவடித்துணை . பரவ - வாழ்த்தி வணங்குதலால் , அடியவர்க்கு நாளும் அருள் செய்பவனே . கொடி அணி விழவு திருக்கோடிகாவில் இடைவிடாது நிகழும் காலம் பதிகம் பாடப்பட்ட காலம் .

பண் :

பாடல் எண் : 3

நீறுமெய் பூசி னானே நிழறிகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே யிருங்கட லமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேத மறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகாப் பெருமான் நீற்றைத் திருமேனியில் பூசியவனாய் , ஒளிவீசும் மழுப்படையினனாய் , காளையை விரும்பி ஏறிஊர்ந்தவனாய் , பெரிய கடலில் தோன்றிய அமுதத்தை ஒப்பவனாய் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகிய அறத்தை உபதேசித்தவனாய் , பார்வதி பாகனாய் உள்ளான் .

குறிப்புரை :

நீறு மெய்பூசினானே :- ( தி .4 ப .51 பா .1) நிழல் - ஒளி , மழு - ஒருபடை . ` கனல்மழு ` ஏறுகந் தேறினான் :- ? ப .4 பா .3, இருங்கடல் அமுது :- பாற்கடல் கடைந்தெடுத்த அமிர்தம் . அமுதினை ஒப்பவனே . வேதம் நான்கும் அங்கம் ஆறும் ஆகிய அறத்தை உரைத்தருளியவனே . ஓர் கூற்றிற் பெண்ணுடையவனே . ஓர் பெண் கூறுடையவன் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 4

காலனைக் காலாற் செற்றன் றருள்புரி கருணை யானே
நீலமார் கண்டத் தானே நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே நளிரிளந் திங்கள் சூடும்
கோலமார் சடையினானே கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடைய பெருமான் காலனைக் காலால் ஒறுத்து மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த கருணையாளனாய் , நீல கண்டனாய் , நீண்டமுடிகளை உடைய தேவர்களுக்குத் தலைவனாய் உலகம் முழுதும் பரவிய பெருமானாய் , குளிர்ந்த பிறைசூடும் அழகிய சடையினை உடையவனாய் உள்ளான் .

குறிப்புரை :

காலன் - இயமன் . காலால் - திருவடியால் . செற்று - உதைத்து , அருள் - இரங்கிச் செய்த வண்மை . திருநீலகண்டன் நீள்முடி - நீண்ட மணிமுடி . அமரர்கோ - தேவர்கோ அறியாத தேவதேவன் . ஞாலம் ஆம் பெருமையான் :- ` ஞாலமாம்தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே நீலஞ் சேர்கண்டனார் ` ( ? ப .22 பா .10) ஞாலம் உலகம் என்னும் பொதுப் பெயர்ப் பொருளதாகக்கொண்டு ` எல்லா உலகமும் ஆனாய் நீயே ` என்னுங் கருத்ததாக்கி , ` அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்த ` சருவ வியாபகம் உணர்த்திய தென்க . நளிர் - குளிர்ச்சி , கோலம் - அழகு .

பண் :

பாடல் எண் : 5

பூணர வாரத் தானே புலியுரி யரையி னானே
காணில்வெண் கோவ ணம்முங் கையிலோர் கபால மேந்தி
ஊணுமோர் பிச்சை யானே யுமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடைய தலைவன் பாம்பை மாலையாகப் பூண்டு புலித்தோலை இடையில் உடுத்து வெண்கோவணம் தரித்து , கையில் மண்டையோட்டை ஏந்தி , பிச்சை ஏற்ற உணவையே உண்பவனாய்ப் பார்வதிபாகனாய் வளைந்த வெள்ளிய பிறையைச் சூடியவனாய் உள்ளான் .

குறிப்புரை :

பூண் அரவு ஆரத்தான் - பூண்ட பாம்பணியுடையவன் . புலியுரி அரையினான் - புலித்தோலை உடுத்த இடையுடையவன் . காணில் - கண்டால் . வெண் கோவணமும் ( உடுத்து ), கையில் ஒரு ( பிரம ) கபாலமும் ஏந்தி , ஊணும் உணவும் . ஓர் பிச்சையான் - சிறு பிச்சையன் . ஒருமை சிறுமைப்பொருட்டு , தனிமையுமாம் . கோணல் - வளைவு .

பண் :

பாடல் எண் : 6

கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பி னானே
ஏழையே னேழை யேனா னென்செய்கே னெந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள் வலைதனின் மயங்கு கின்றேன்
கூழையே றுடைய செல்வா கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடைய பெருமானே ! பன்றியின் வெண்ணிறக் கொம்பினை அணிந்த ஒளிவீசும் மார்பினனாய் , குட்டையான காளையை உடைய செல்வனே ! எம் தந்தையாகிய தலைவனே ! அழகிய ஒளி பொருந்திய கண்களை உடைய மகளிரின் பார்வையாகிய வலையில் அகப்பட்டு மயங்குகின்றேன் . அறிவிலியாகிய அடியேன் யாது செய்குவென் ?

குறிப்புரை :

கேழல் - பன்றி , வெண்கொம்பு - வெள்ளைக் கொம்பு கிளர் - விளங்குகின்ற , ஏழையேன் ஏழையேன் நான் :- ` என்னானாய் என்னானாய் என்னினல்லால் ஏழையேன் என் சொல்லியேத்து கேனே ` செய் + கு + ஏன் = செய்கேன் . பிற்காலத்தார் ககரவொற்று எதிர் காலங்காட்டிற்று என்றனர் . செய்கு + யான் என்பதன் மரூஉ என்பர் சொல்லாராய்ச்சியாளர் . மாழை - அழகு . மாழைமைப் பாவிய கண்ணியர் . ( தி .8 திருவாசகம் 411) ஒண்கண் - ஒளிவிழி , வலை - மயக்கவலை .

பண் :

பாடல் எண் : 7

அழலுமி ழங்கை யானே யரிவையோர் பாகத் தானே
தழலுமி ழரவ மார்த்துத் தலைதனில் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங் கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

நெருப்பை ஏந்திய உள்ளங்கையை உடையவனே ! பார்வதிபாகனே ! நெருப்பைக் கக்குகின்ற பாம்பினைக் கட்டிக் கொண்டு மண்டையோட்டில் பிச்சை பெறுபவனே ! நிழலை வெளிப்படுத்துகின்ற சோலைகள் சூழ்ந்திருக்க அவற்றில் நீண்டகோடுகளை உடைய வண்டினங்கள் வேய்ங்குழல் ஒலிபோன்ற பாடல்களைப் பாடும் கோடிகாவை உடைய பெருமானே !

குறிப்புரை :

அழல் உமிழ் அம்கையான் - தீயை ஏந்திய அகங்கை யுடையவன் , அரிவை - உமாதேவியார் . தழல் - வெய்யநஞ்சு . நஞ்சாகிய தீ , ` நச்சுத்தீ `, அரவம் - பாம்பு . ஆர்த்து - கட்டி , தலை - பிரமகபாலம் . பலி - பிச்சை . நிழல் - தண்ணிழல் . குழல் - வேய்ங்குழல் . கீதம் - இசைப்பாட்டு . வேய்ங்குழலிசையை வண்டினங்கள் பாடுஞ் சோலை சூழ்ந்த கோடிகா .

பண் :

பாடல் எண் : 8

ஏவடு சிலையி னானே புரமவை யெரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாண் மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே யைவரா லாட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய் கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

அம்பை இணைத்த வில்லைக் கொண்டு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவனே ! மாவடுவின் பிளப்பைப் போன்ற கண்களை உடைய பார்வதிபாகனே ! ஆவடுதுறையில் உறைபவனே ! கோடிகா உடைய தலைவனே ! ஐம்பொறிகளாலும் யான் அவை விரும்பியவாறு செயற்படுத்தப்பட்டுள்ளேன் . பசுக்கொலைக்கு ஒப்பாகிய என் குற்றங்களைப் போக்குவாயாக .

குறிப்புரை :

ஏ - அம்பு , அடு - அடுத்த , கொல்லும் சிலை - வில் , சிலையினாலே எரிசெய்தான் எனலுமாம் . புரமவை - முப்புரம் ; மும்மதில் . மாவடுவகிர்கொள் கண்ணாள் :- ` வடுவகிர்க் கண்ணி யம்மை ` என்பது திருவலம்புரத்து நாய்ச்சியார் திருப்பெயர் . மாவடு வகிரன்ன கண்ணிபங்கா ` ( தி .8 திருவா .413) என்பது பாத்தளைக் கேட தாயினும் நம் பிறவித்தளை கெடுப்பதே . மலைமகள் - இமாசலகுமாரி `. திருக்கோடிகாவின் தென்பால் அணுகியது திருவாவடுதுறை . ஐவர் - ஐம்புலன் ; ஐம்பொறி . கோவடுகுற்றம் :- கோவை அட்ட குற்றம் , பசுக்கொலைக் கொப்பாகிய பாவம் . தீராய் - தீர்ப்பாய் .

பண் :

பாடல் எண் : 9

ஏற்றநீர்க் கங்கை யானே யிருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மே லேறு நான்முக னிவர்கள் கூடி
ஆற்றலா லளக்க லுற்றார்க் கழலுரு வாயி னானே
கூற்றுக்குங் கூற்ற தானாய் கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகாவில் உள்ள பெருமானே ! கங்கையைச் சடையில் ஏற்றவனே ! பெரிய உலகங்களை ஈரடியால் அளந்த திருமாலும் நறுமணம் கமழும் தாமரை மலர்மேல் தங்கும் பிரமனும் ஆகிய இருவரும் கூடித் தம் ஆற்றலால் அளக்க முயன்றவர்களுக்குத் தீத்தம்ப வடிவாயினவனே ! யமனுக்கும் யமனாயினாய் நீ .

குறிப்புரை :

ஏற்றம் - உயர்ச்சி , ஏறு + அம் = ஏற்றம் . உயர்ச்சியை யுடைய கங்கை நீரைச் சடைமிசை யுடையவனே . ஏற்ற கங்கை நீருமாம் . இருநிலம் - பெரும்பூமி , தாவினான் - தாண்டியவன் . நாற்றம் - மணம் , நாறு + அம் = நாற்றம் . ஏற்றம் போல்வது , மாமலர் - தாமரை , ` பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை `. தன் அன்னை யான திருமகட்கிடமாய மலருமாம் . ஆற்றல் - வலிமை ; சீவபோதம் . அழல் உரு - தீவண்ணம் . கூற்றுக்குங்கூற்று - காலகாலன் .

பண் :

பாடல் எண் : 10

பழகநா னடிமை செய்வேன் பசுபதீ பாவ நாசா
மழகளி யானையின் றோன் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே யரக்கன் றிண்டோ ளருவரை நெரிய வூன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா வுடைய கோவே.

பொழிப்புரை :

கோடிகா உடையகோவே ! ஆன்மாக்களின் தலைவனே ! பாவங்களைப்போக்குபவனே ! இளைய மதமயக்கமுடைய யானையின் தோலைப் பார்வதி அஞ்சுமாறு போர்த்த அழகனே ! அரக்கனாகிய இராவணனுடைய வலிய தோள்கள் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரியுமாறு கால்விரலை அழுத்திய அழகனே ! நின் தொண்டிற் பழகுமாறு நான் அடித்தொண்டு செய்வேன் .

குறிப்புரை :

பழக - பழக்கம் உற , நான் செய்து செய்து பழக வேண்டி அடிமைத் தொண்டு செய்வேன் . பசுபதீ - உயிர்க்கு இறைவா . பாவ நாசா - தீவினையை அழிப்பவனே , வினைக்கேடா . மழ களி யானை - இளமதகளிறு . மலைமகள் அஞ்சி வெருவ மழகளியானைத்தோல் போர்த்த அழகனே . அரக்கன் - இராவணன் . திண்தோள் - திண்ணிய தோள்கள் ( ஆகியவரை ). அருவரை - அளப்பரியமலை . குழகன் - இளைஞன் ; அழகன் . கோலம் - அழகு . பன்றிக் கொம்புமாம் . ` கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர்ஒளி மார்பினானே ` ( தி .4 ப .51 பா .6.).
சிற்பி