திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே லிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

பெரிய பள்ளமான கடல்போன்ற வயிற்றை நிரப்புவதற்குரிய செயல்களில் ஈடுபடும் வகையால் இந்த மனிதவாழ்வு பாழாகிறது . ஆதலால் இவ்வாழ்க்கையை நினைக்குந்தோறும் இதை விலக்க உதவுபவரை அழைக்கின்றேன் . இவ்வுடம்பினுள் அறிவற்ற முரடாகிய ஐம்பொறிகள் இருந்து என்னைத் தம் விருப்பப்படி செயற்படுமாறு தூண்டுகின்றன . ஆரூர் மூலட்டானத்துள்ள பெருமானே ! அடியேன் இவைகளோடு சேர்ந்து வாழும் ஆற்றல் உடையேன் அல்லேன் .

குறிப்புரை :

படுகுழிப் பவ்வத்து அன்ன பண்டி - பெரும்பள்ளமான கடல் போன்ற வயிறு . ` நிலத்திடைப் பொறை ` என்னுந் தொடக்கத்துப் பாடலில் , ` உடலிருங்கடல் ` அமைப்பை ( தி .11 ப .30 பா .8) நோக்குக . ஆற்றால் - விதத்தால் . கேதுகின்றேன் :- அழைக்கின்றேன் . கேதல் - அழைத்தல் . ` கேதல் உளைத்தல் இகுத்தல் விளித்தல் மாவெனல் கூவுதல் வாவெனல் மத்தல் கரைதல் ஆகருடணை இவையே அன்றி அகவல் என்பதும் அழைத்தல் ஆகும் ` ( பிங்கலநிகண்டு . 1996). உள் இருந்து ஐவர் முடுகுவர் . மூர்க்கர் . ஏல் - எனில் ; மரூஉ . அடியனேன் இவர்களோடும் இப் பண்டியில் வாழ மாட்டேன் . மூலட்டனீர் - மூலத்தானத்தீர் . மூலஸ்தாநம் - மூலத்தானம் - மூலட்டானம் . வடசொற்றிரிபு .

பண் :

பாடல் எண் : 2

புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலான் மூடி
ஒழுக்கறா வொன்ப துவா யொற்றுமை யொன்றுமில்லை
சழக்குடை இதனு ளைவர் சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

ஆரூர் மூலட்டனீரே ! புழுக்களை உள்ளே அடக்கி வைத்த வண்டியை வெளியே ஒரு தோலினாலே மறைத்து , திரவம் ஒழுகுதல் நீங்காத ஒன்பது வழிகள் ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத வகையில் அதன்கண் அமைய , இவ்வண்டிக்குள் குற்றமுடைய ஐம்பொறிகளும் பல துயரங்களை விளைக்க , அவற்றால் கலக்கமுற்று வாழ இயலாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

புழு பெய்த பண்டி - புழுக்கள் இட்டுவைத்த வயிறு . ` உன்னுதரத்தே கிடந்த கீடம் உறுவதெல்லாம் உன்னுடைய தென்னாய் ` ( திருக்களிறு . 87). ஒரு தோலால் மூடி . புறம் மூடி . பண்டியைத் தோலாற் புறத்தே மூடி . ஒழுக்கு அறாவாய் - ஒழுகுதல் நீங்காத வழி . ஒன்பது வாய் :- ( தி .4 ப .44 பா .2) ஒற்றுமை சிறிதும் இல்லை . சழக்கு - குற்றம் ; பொய் . சங்கடம் - துக்கம் . அழிப்பன் - கலக்கத்தை யுடையேன் . அழிப்பு - கலக்கம் .

பண் :

பாடல் எண் : 3

பஞ்சின்மெல் லடியி னார்கள் பாங்கரா யவர்க ணின்று
நெஞ்சினோய் பலவுஞ் செய்து நினையினும் நினைய வொட்டார்
நஞ்சணி மிடற்றி னானே நாதனே நம்பனே நான்
அஞ்சினேற் கஞ்ச லென்னீ ராரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

விடத்தை அணிந்த கண்டரே ! தலைவரே ! அடியவ ரால் விரும்பப்படுகின்றவரே ! பஞ்சினைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய பெண்கள்பக்கம் சேர்ந்துகொண்டு என் நெஞ்சில் நோய்கள் பலவற்றை உண்டாக்கி உம்மை விருப்புற்று நினைப்பதற்கும் இசையாது செய்யுங் கலக்கத்தைக் கண்டு அஞ்சுகின்ற எனக்கு , ஆரூர்ப் பெருமானாகிய நீர் அஞ்சேல் என்று அடைக்கலம் தருகின்றீர் அல்லீர் .

குறிப்புரை :

பஞ்சினும் மெல்லிய அடியையுடைய பெண்டிர் பக்கத்தராய் நின்று அவர்கள் (- அவ் வைவர் ) நெஞ்சில் நின்று நோய் பலவும் செய்து எனலுமாம் . பாங்கராய் நின்று செய்து நினைய வொட்டார் . நெஞ்சு நினைந்தாலும் ஐவர் ( அவர்கள் ) நினையவொட்டார் . திருநீலகண்டனே , உடையானே , நம்பனே , நான் அஞ்சினேன் . அஞ்சின எனக்கு அஞ்சல் என்று சொல்லி அபயம் அளித்தருளீர் . அஞ்சினேன் + கு . பஞ்சின் - பஞ்சு போல ` நெஞ்சின் ` நெஞ்சினது எனலுமாம் . நினையுங் கருவி நெஞ்சு , நோய் பலசெய்து , நெஞ்சு நினையினும் நினையவொட்டார் .

பண் :

பாடல் எண் : 4

கெண்டையந் தடங்க ணல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரிதந் தைவர் குலைத்திடர்க் குழியி னூக்கக்
கண்டுநான் றரிக்க கில்லேன் காத்துக்கொள்கறை சேர் கண்டா
அண்டவா னவர் போற்று மாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

நீலகண்டரே ! எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் போற்றும் ஆரூர்ப் பெருமானே ! கெண்டைமீன்போன்ற அழகிய பெரிய கண்களை உடைய மகளிரைத் தழுவுவிக்க விரும்பி மூர்க்கராய்த் திரியும் என் ஐம்பொறிகளும் என்னை நிலை குலையச் செய்து துன்பக் குழியிலே தள்ளுகையினாலே அவற்றின் செயல்களைப் பொறுக்கும் ஆற்றல் இலேனாகிய என்னைப் பாதுகாத்து உம் அடிமையாகக் கொள்வீராக .

குறிப்புரை :

கெண்டையங்கண் தடங்கண் - விசாலாட்சம் . நல்லார் - மகளிர் . கெழும - புல்ல . பொருந்த . குண்டர் - மூர்க்கர் ; குண்டுபோல உடற்கட்டுடையர் . திரிதந்து - திரிதரல் செய்து . ஐவர் - பஞ்சேந்திரியம் . குலைத்து - நிலைகுலையச் செய்து . இடர்க்குழி - துன்பப்படுபள்ளம் . நூக்க - தள்ள . ` ஒல்லை நீர்புக நூக்க ` ( தி .5 ப .72 பா .7). தரிக்க கில்லேன் - தாங்கமாட்டேன் . கறை - நஞ்சின் கறுப்பு . கண்டா - ( திருநீல ) கண்டனே . அண்டவானவர்கள் - அண்டங்களாகிய வானில் வாழ்கின்ற தேவர்கள் .

பண் :

பாடல் எண் : 5

தாழ்குழ லின்சொ னல்லார் தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளு மென்செய்கே னெந்தை பெம்மான்
வாழ்வதே லரிது போலும் வைகலு மைவர் வந்து
ஆழ்குழிப் படுக்க வாற்றே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

என் தந்தையாகிய பெருமானே ! ஆரூர் மூலத் தானத்தில் உறைபவரே ! தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும் உடைய மகளிரையே பற்றுக்கோடாகக்கொண்டு அறிவற்றவனாகி நாடோறும் யான் யாது செயற்பாலேன் ? நாள்தோறும் என் ஐம்பொறிகள் ஆழ்ந்த குழியில் என்னைத் தள்ள முயல்வதால் பொறுக்க முடியாத துயரினேனாய் உள்ளேன் . இவ்வுலகில் ஒருவர் தம் குறிக்கோளுக்கு நேர்மையாக வாழ்வதே அரிய செயல்போலும் .

குறிப்புரை :

தொங்குங் கூந்தலும் இனிய சொல்லும் உடைய அழகிய மகளிரையே புகலிடம் என்றுகொண்டு , அறிவிலேனாகி , நாள்தோறும் ( அலைந்து மயங்கித் துன்புறுகின்ற நான் ) என்ன செய்யவல்லேன் ? எந்தை பெருமானே , இனி , அம்மாயவலையின் நீங்கி நின் திருவருள் நெறியில் ஒழுகி வாழ்வது எளிதன்று போலும் . நாள்தொறும் ஐம்பொறிகளாரும் அணுகி நின்று ஆழ்ந்தகுழியிற் படுத்துகின்றனர் . அதில் அகப்படுத்தப் பொறுக்கும் வலியுடையேன் அல்லேன் , திருவாரூர்த் திருமூலட்டானாரே , அடியேனைக் காத்தருள்க . குழலைக் கண்டும் குழலின் மொழியைக் கேட்டும் மயங்கும் இயல்பு குறித்து , அவ்விரண்டும் கூறப்பட்டன . ` நாளும் என் செய்கேன் ` என்றதால் , பெண்ணாசைக் குரியன அன்றிப் பெண்ணாளும் பாகனடிமைக்குரியன செய்யவல்லேனல்லேன் என்றதாயிற்று . நாளும் நல்லாரைத் தஞ்சமென்று ஏழையாதற்குத் துணை யாகவந்து வைகலும் ஆழ்குழிப் படுத்துகின்ற ஐவர் , அருள் வாழ்விற்குத் துணையாகார் . அவர் செய்யுந் துன்பத்திற்கு ` ஆற்றேன் அடியேன் `.

பண் :

பாடல் எண் : 6

மாற்றமொன் றருள கில்லீர் மதியிலேன் விதியி லாமை
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர் சிக்கன வுடைய ராகிக்
கூற்றம்போ லைவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவுங் கில்லே னாயே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

ஆரூர் மூலத்தானத்துப் பெருமானே ! அடியேன் நல்லறிவின்மை காரணமாக நேரிய வழியில் செல்ல இயலாமை குறித்துத் தேவரீர் திருவுள்ளத்தில் எழுந்த கோபத்தைத் தணித்துக் கொள்ளுதலும் செய்யீராயினீர் . தம் விருப்பப்படி செயல் புரிவிப்பதில் உறுதியுடைய என் ஐம்பொறிகள் கூற்றுவனைப் போலவந்து என்னைச் சிதற அடித்துத் தோள்தட்டி ஆர்த்து நிற்க நாயேன் அவைகள் தரும் துயரைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் . யான் உய்வதற்கு உரிய ஒரு உபாயத்தையும் நீர் அருளுகின்றீரில்லை .

குறிப்புரை :

திருவாரூர்த் திருமூலட்டனீரே . மாற்றம் ஒன்று அருள்கிலீர் . அடியேனுக்கு மதியின்மை ஏதுவாக வேதாகம விதி வழி யொழுகுதல் இல்லையாயிற்று . அதனால் , தேவரீர்க்குச் சீற்றம் விளைந்தது . அதனைத் தீர்த்தருளீர் . ஐவர் உறுதியுடையவராய்க் கூற்றத்தைப் போலக் குறுகி , என்னைக் குலைத்திட்டு கோகு (- குறுகுதலை , சிறுமையை ) செய்கின்றனர் . நாயேன் அதனைப் பொறுக்ககில்லேன் . கோகு என்பது குறுகு என்பதன் மரூஉ . பொழுது - போது . துருசு - தூசு . முகடு - மோடு . தவறு - தாறு என்பவற்றிற்போல முதலிருகுறில் ஒரு நெடிதலாதல் உண்டு . அவற்றுள் இது முகடு - மோடு என்றாதல் போன்றது . கோகு என்பதற்குக் குடுமி , தோள் , கழுதை என்ற பொருளுரைப்பினும் அவை ஈண்டுப் பொருந்தாமை அறிக . போர்க்குத்தோள்தட்ட எனின் ஆம் . மாற்றம் - பரிகாரம் . மாறுவது மாற்றம் . சீறுவது சீற்றம் . கூறுபடுப்பது கூற்றம் . ஆற்ற - பொறுக்க . கில்லேன் - மாட்டேன் . ` எனைக் கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்தென்னக் கோகு செய்தாய் `. ( தி .4 ப .99 பா .2.)

பண் :

பாடல் எண் : 7

உயிர்நிலை யுடம்பே காலா வுள்ளமே தாழி யாகத்
துயரமே யேற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப்
பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழ்க்குநீ ரிறைத்து மிக்க
அயர்வினா லைவர்க் காற்றே னாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

ஆரூர்ப் பெருமானே ! உயிர் நிற்றற்குரிய இவ் வுடலைக் காலாக நிறுவித் துயரத்தையே ஏற்றமரமாக அமைத்து , உள்ளத்தையே ஏற்றச் சாலாகக் கொண்டு துன்பமாகிய , ஏற்றத்தோடு கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் கழியைப்பற்றிப் பயிர்கள் சுருண்டு போகுமாறு அவற்றை விடுத்துப் பாழான வீண்தரைக்கே நீரை இறைத்து மிக்க தளர்ச்சியோடு என்னைத் தீய வழியிலேயே செலுத்தும் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தைத் தாங்க இயலாதேனாய் உள்ளேன் ;

குறிப்புரை :

உயிர் நிற்றற்கு இடம் உடல் . அதுவே உயிர்நிலை . அன்பின் வழியது உயிர்நிலை ` ` அன்பு முதலாக அதன்வழி நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பாவது ` ( குறள் 80. பரிமேலழகருரை ). என்புழிக் குறித்த பொருளே இது . ` நீர்நிலை ` போல்வது ` உயிர்நிலை `. ` நிலை ` முதனிலைத் தொழிலாகு பெயராய் ஆண்டுக் குளத்தைக் குறிக்கும் . உடம்பு எனப் பின் உள்ளதால் ஈண்டு , உயிர்நிலையதாகிய உடம்பு என்று பொருள்கொள்ளப்பட்டு , நிலை என்னும் அடி நிலையது என்னும் முதலுக்காகிய பெயராம் . அன்றி நிலைத்த உடம்பென வினைத் தொகையுமாம் . உடம்பே கால் . உள்ளமே தாழி . துயரமே ஏற்றம் . துன்பமே கோல் . பாழுக்கே நீர் இறைத்தல் . பயிர்க்கோ பாய்வ தில்லை . அயர்ச்சி முயற்சியின் பயன் . இப் பயனில் செயல் ஐவரால் விளைவது . உடம்பின் பயன் , தன்னுள் ஒளிரும் உத்தமனைக் கண்டுற்று மீண்டும் தன்னொடு சாராது உயிர் வீடு பெறுதல் . அது நிகழாமையே பயிர்சுழியவிடல் . கால் :- நட்டிருக்கும் கால் . ஏற்றம் அக் கால்மேல் முன்பின் விட்டுப் பொருத்தியிருக்கும் நீண்டதொருமரம் . அது கருவி . கோல் :- அவ்வேற்றத்தொடு கட்டித் தொங்கவிட்டிருக்கும் ஒரு கழி . தாழி :- அதன் கீழ்முனையிற் கட்டி நீர்முகக்குஞ் சால் . பாழ்க்கு நீர் இறைத்தல் :- 309, 311 குறிப்பிலும் காண்க .

பண் :

பாடல் எண் : 8

கற்றதே லொன்று மில்லை காரிகை யாரோ டாடிப்
பெற்றதேற் பெரிதுந் துன்பம் பேதையேன் பிழைப்பி னாலே
முற்றினா லைவர் வந்து முறைமுறை துயரஞ் செய்ய
அற்றுநா னலந்து போனே னாரூர்மூ லட்ட னாரே.

பொழிப்புரை :

ஆரூர்ப் பெருமானே ! அடியேன் அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கற்றுக்கொண்டது ஏதுமில்லை . மகளிர் பின்னே அலைந்து அறிவற்ற நான் பெருந்துயரம் உற்றேன் . என் தவற்றினாலே ஐம்பொறிகளும் தம் ஆற்றலிலே நிறைவுற்றதனால் அவை தாம் விரும்பியவற்றைப் பெற்றுத்தருமாறு என்னை வருத்த அவற்றை எதிர்க்கும் ஆற்றலற்று அடியேன் துயருற்றவனானேன் .

குறிப்புரை :

திருவாரூர்த் திருவீரட்டனாரே , கற்றது யாதெனின் ஒன்றும் இல்லை . காரிகையாரொடு ஆடல் அன்றி மற்றொன்றும் இல்லை என்றவாறு . அது கற்றதாற் பெற்ற பயன் யாதெனில் , பெருந் துன்பமே பெற்ற பயன் . ` நெடுங்காமம் முற்பயக்குஞ்சின்னீர இன்பத்தின் ... பிற்பயக்கும் பீழைபெரிது ` ( நீதிநெறி விளக்கம் ). பேதையேன் - அறியாமையுடையேன் . பிழைப்பினால் - தவற்றால் . வாய்ப்புக்கு மறுதலையும் ஆம் . ` பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி ` ( தி .8 திருவாசகம் . 4:- 219 - 220) ` பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியேன் பித்து ஏறினாற்போல் அழைப்பதே கண்டாய் அடியேன் ` ( நக்கீரதேவ நாயனார் அருளிய கைலைபாதி காளத்திபாதி யந்தாதி . 98) என்பவற்றால் , பிழைப்பு வாய்ப்பு ஒன்றற்கொன்று மறுதலையாதலை உணரலாம் . முற்றுதல் - முதிர்தல் ; முழுதாதல் , முறைமுறை :- ஐவர்க்குத் தனித்தனி உரிய முறைமை . அற்று - எதிர்க்கும் ஆற்றல் ஒழிந்து .

பண் :

பாடல் எண் : 9

பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே யமரர் கோவே யாரூர்மூ லட்ட னாரே.

பொழிப்புரை :

தலைவரே ! தேவருக்கு அரசரே ! ஆரூர் மூலத்தானத்தாரே ! தீவினை செய்த அடியேன் பத்தனாக வாழ இயலாதேனாக , என் உள்ளம் முழுதும் பரவி ஐம்பொறிகள் தீய செயல்கள் பலவற்றையும் செய்ய அவை என்னை வருத்துவதனால் மத்தினால் கடையப்பட்ட தயிரைப் போல என் உள்ளம் நிலை சுழல்கிறது .

குறிப்புரை :

பத்தன் - தொண்டன் . பாவியேன் - பாவத்தைச் செய்துள்ள யான் . பரவிவந்து வாழமாட்டேன் என்க . மாட்டாமை ஐவரை வெல்லாமையின் பயன் . தீயவினை ; செய்வினை . ` செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா ` ` தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா ` ` மத்துறுதயிர் ` உள்ளம் மறுகுதற்கு உவமை . ` மத்தார் தயிர்போல மறுகுமென் சிந்தை மயக்கொழிவி ` ( தி .4 ப .96 பா .3.) உள்ளம் மறுகும் . அத்தன் அத்தை ; அப்பன் அம்மாள் ; ஆத்தன் ஆத்தாள் என்பன தமிழகத்து வழக்கு . ` ஆத்தானை அடியேன்றனக்கு ` ( தி .7 ப .20 பா .4) என்று ஆளுடைய நம்பிகளும் , ` பூத்தே யுலகம் புரப்பாளை ... ... மறைக்கு முதலாய் முளைத்தாளை ஆத்தே ஆத்தே எனுங் குமரா அடியேம் சிற்றில் அழியேலே அரசே விரிஞ்சைப்பகுதி வாழ்வே அடியேம் சிற்றில் அழியேலே ` என்று ( திருவிரிஞ்சைப்பிள்ளைத்தமிழ் ) வரகவி மார்க்க சகாயதேவரும் , ` ஆத்தாளை எங்களபிராமவல்லியை ` ( அபிராமி யந்தாதி ) என்று அபிராமிபட்டரும் ஆண்டமை அறிக .

பண் :

பாடல் எண் : 10

தடக்கைநா லைந்துங் கொண்டு தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க வோடி யிரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை பத்துந் தோளு முறிதர விறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே யாரூர்மூ லட்ட னீரே.

பொழிப்புரை :

ஆரூர்ப் மூலட்டானத்தாரே ! நீண்ட இருபது கைகளைக்கொண்டு பெரிய கயிலைமலையைப் பிடித்துப் பெயர்த்து எடுக்கமுயன்ற இராவணன் செயலால் பூதங்கள் எல்லாம் அஞ்சி ஓட , அவனுடைய முடிகள் அணிந்த தலைகளும் இருபது கைகளும் முறியுமாறு சிறிதளவு கால் விரல் ஒன்றனை ஊன்றி வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்த நும் செயல் இருந்தவாறென்னே !

குறிப்புரை :

தடக்கை - பெருங்கைகள் . நாலைந்தும் - இருபதும் . தடவரை - பெருங்கயிலைமலை . பேர்க்க - பெயர்க்க . பூதமெல்லாம் ஓடியிரிந்தன . பத்துத் தலையும் இருபது தோளும் முறியச் சிறிதூன்றி . அடர்த்து ( ப்பின் ) நாளும் வாளும் பேரும் பிறவும் அருள் செய்தது .
சிற்பி