திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

குழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டுநீங்காக் கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையா னருட்கதி ரெறிக்கு மாரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான் றோன்றினார் தோன்றி னாரே.

பொழிப்புரை :

வேய்ங்குழல் ஓசையை வென்ற இனியசொல்லை யுடையவளாய் அழகிய வேல்போன்ற கண்களையுடைய பார்வதியின் திருவடிகளை வலம் வந்து நீங்காத அடியவர்களுடைய கண்கள் நிறைவுறும்படியாகத் தீயினை வலக்கையில் கொண்ட பெருமான் அருளாகிய ஒளியைவீசும் திருவாரூரைத் தொழுவதற்கும் வலம் வருவதற்கும் வாய்ப்புடையவராகப் பிறப்பெடுத்தவரே பயனுடைய பிறப்பினைப் பெற்றவராவார் .

குறிப்புரை :

குழல்வலங்கொண்ட சொல்லாள் - வேய்ங்குழலின் இன்னிசையை வெற்றிகொண்ட இனிய சொல்லினார் . கோலம் - அழகு . வேல்போலுங்கண் . கோலம் வேற்கும் ஏற்கும் . கழல் - திருவடி . வலங்கொண்டு நீங்காக் கணங்கள் : தி .4 ப .20 பா .3 திருப்பாடலிற் குறித்த கூட்டத்தினர் . ? ப .19 பா .3, 4 குறிப்பும் உணர்க . ` திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தால் பெருக்கிய சீர்த்திருவாரூர்ப் பிறந்தார்கள் ` ( தி .12 திருவா . பி . புரா .4164) ` ஆரூரிற் பிறந்தாரெல்லாம் நங்கணங்களான பரிசு காண்பாய் ` ( தி .12 பெரிய . 1897). அழல் வலங்கொண்ட கையான் :- ` வாய்மை மறைநூற் சீலத்தால் வளர்க்குஞ் செந்தீயெனத் தகுவார் ` ` கையில் விளங்கு கனலுடையார் ` ( தி ,12 பெரிய .1875; 1880). அருட்கதிர் :- ` சென்னிமிசை நீர்தரித்த பிரான் அருளே சிந்தை செய்து திரிமேல் நீர்வார்த்து நாடறிய எரித்த திருவிளக்கின் விட்டெழுந்த சுடர் ` ( சேக்கிழார் பெருமான் திருவாக்கு ). ` ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் , பாரூர் பரிப்பத்தம் பங்குனியுத்தரம் பாற்படுத்தான் , நாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி , நீரால் திருவிளக்கிட்டமை நீள்நாடு அறியும் அன்றே ` ( தி .4 ப .102 பா .2.) ` அந்தவளப்பொடி கொண்டணி வார்க்கிருளொக்கும் நந்தி புறப்படிலே ` ` நந்திபணி கொண்டருளும் நம்பன்றன்னை ... ... ஆரூர் மூலட்டானம் இடங்கொண்ட பெருமானை ... ... அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே ` ( தி .6 ப .34 பா .4). தொழல் வலங்கொண்டல் - தொழுதலும் வலங் கொள்ளுதலும் . செய்வான் - செய்தற்பொருட்டு . தோன்றினார் - பிறந்தவர் . ஏனையோர் பிறந்தும் இருந்தும் செத்தவரே என்றவாறு .

பண் :

பாடல் எண் : 2

நாகத்தை நங்கை யஞ்ச நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தி னுரிவை போர்த்து
பாகத்தி னிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாக மடங்குமா ரூர னார்க்கே.

பொழிப்புரை :

ஆரூரனிடத்தில் பாம்பைப் பார்த்துப் பார்வதி அஞ்ச , அப்பார்வதியை மயில் என்று கருதிப் பாம்பு தான் சீறிச் செயற்படும் உற்சாகத்தை நீக்கிச் சோர்வடைய , அப்பாம்பு தன்னை விழுங்கும் என்று அஞ்சிப்பிறை யானைத்தோலுள் மறைய ஒரு பகுதியும் நிமிர்ந்து பார்த்தலைச் செய்யாத சந்திரனை மின்னல் என்று கருதி அஞ்சி மார்பில் கிடந்த நாகம் சோர்ந்து கிடக்கிறது .

குறிப்புரை :

பாம்பு , நங்கை , திங்கள் மூன்றும் சிவபிரான் அணிந்திருத்தலைக் கருதிய கற்பனை இது . திருமுடிமேற் கிடந்த பாம்பினை அஞ்சினாள் கங்கை நங்கை . அந் நங்கையை மயில் என்று கருதி அஞ்சிற்று அப்பாம்பு . அப்பாம்பினைக் கண்டு தன்னை விழுங்கு மென்று திங்கள் அஞ்சி , யானைத்தோற் போர்வைக்குள் ஒளித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தலும் செய்யாதிருந்தது . அத்திங்களொளியை மின்னலென்று கருதி அஞ்சி அடங்கிற்று , சிவபிரான் திரு மார்பிற் கிடந்த பாம்பு . பாம்பினைக் கண்ட மெல்லியல் அஞ்சுதலும் மயிலைக் கண்ட பாம்பு அஞ்சுதலும் இயல்பு . திங்களை மின் என்று கருதி அஞ்சி அடங்குதலும் பாம்பின் செயல் . திங்கள் வேழத்துரியில் மறைந்து எட்டி எட்டிப் பார்ப்பது போல இடையிடையே தோன்றுதலால் மின்னெனும் எண்ணம் உண்டாயிற்று . ` மின் ` ஈண்டு இடிக்கு ஆகுபெயர் . ` விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேண் நின்றும் உட்கும் .` ( நாலடியார் )

பண் :

பாடல் எண் : 3

தொழுதகங் குழைய மேவித் தொட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றா ரவரவர் போலு மாரூர்
எழிலக நடுவெண் முத்த மன்றியு மேர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட் புதுமுகிழ் சூடி னாரே.

பொழிப்புரை :

தம்முள் ஒத்த தன்மை உடைய தொண்டர்கள் தொழுது மனம் உருகுமாறு விரும்பி அழுதனராக , ஆரூரிலே பல வேலிப்பரப்புடைய சோலையின் நடுவே விளங்கும் பூங்கோயிலின் மூலத்தானத்திலே உறைந்து முத்துக்களையும் பிறையையும் சூடிய பெருமான் அவ்வடியவருடைய உள்ளத்திலே புகுந்து நிற்குமாற்றால் , தாமும் அவ்வவ்வடியவர் போல்வாராநின்றார் .

குறிப்புரை :

திருவாரூர்த் திருமூலட்டானர் , புகுந்து நின்றார் . அதனால் அவரவர்போலும் என்க . திங்கட் புதுமுகிழ் சூடினார் - இளம் பிறை சூடிய திருமூலட்டானர் . தொண்டரகம் புகுந்து நின்றார் . நின்றதால் அவரவர்போலும் . தொழுதல் , அகம் குழைதல் , மேவுதல் தொட்டிமையுடைமை அழுதல் எல்லாம் தொண்டர் இயல்பு . அழுத + அகம் = அழுதகம் . அகரம் தொக்கது . தொண்டரது அகம் புகுந்து நிற்றலும் அவரவர் போறலும் திங்கட் புதுமுகிழ் சூடினார் தொழில் . முத்தம் அன்றியும் திங்கட் புதுமுகிழ் சூடினார் . ஆரூர் எழிலகம் நடுவெண் முத்தம் :- பூங்கோயில் ஆதலின் அப்பூவின் முத்தம் : ` சுரிவளை சொரிந்த முத்தின் சுடப்பெரும் பொருப்பு ` ( தி .12 பெரிய புராணம் . 73). ஆரூரின் அழகிய இடத்தின் நடுவானது பூங்கோயில் . அந்நடுவில் உள்ள முதல்வர் முத்தமும் சூடினவர் . திங்கட்புது முகிழும் சூடினவர் . அவர் சூடிய வெண் முத்தம் ஆரூர் எழிலக நடுவணது . வெண்டிங்கட் புதுமுகிழ் ஏர்கொள் பொழிலக நடுவண் விளங்குவது . எழில் , ஏர் - அழகு : எழுச்சி பொழில் - சோலை . வேலி . திருவாரூர்க் கோயில் , குளம் , செங்கழுநீர் ஓடை மூன்றும் அவ்வஞ்சுவேலியாகும் . ` அஞ்சணை வேலியாரூர் ` ( தி .4 ப .53 பா .7.) ` தொட்டிமை ` என்பதன் விளக்கம் சித்தாந்தம் மலர் 22, இதழ் 10 ( விரோதி - ஐப்பசி . 1949 அக்டோபர் ) இல் யாம் எழுதிய ` தமிழ்ச் சொல் ` என்னுங் கட்டுரையால் அறியப் பெறலாம் . சீவகசிந்தாமணி (1255, 2085, 2047) யில் , ` தொட்டிமையுருவம் ` ` காமன் தந்த தொட்டிமையுடைய வீணைச் செவிச்சுவை யமிர்தம் ` என்புழி , உருவத் தொற்றுமை , குரலொலி வீணையொலியின் ஒற்றுமை குறித்துநிற்றலறிக . விட்டிசைத்தலை விட்டிசை என்றும் , பக்கிசைத் தலைப் பக்கிசை என்றும் கூறுமாறு , தொட்டிமைத்தலைத் தொட்டிமை என்றனர் . கண்ணிமையிரண்டும் ஒன்றைனையொன்று தொட்டு ஒற்றுமையுற்றிமைத்தல் பற்றிய இத்தொடர் உவமையாய் நின்று , ஒற்றுமையுடைய உவமேயத்தைக் குறித்து வழங்கும் பண்டைய தொரு வழக்கு . இந்நாயனார் காலத்தும் இது வழக்கிலிருந்ததுபோலும் . அடியவர்க்கே சிறந்துரிய ஒற்றுமையைக் குறிக்க இதனை ஆண்டருளினார் . அடியவர் தம் இனத்தொடும் இறைவனொடும் உறும் ஒற்றுமையே பொய்யாது நிலைப்பது . ` உன் அடியவர் தொகை நடுவே ஓர் உருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக் கொண்டருள் ` ` இணங்கத் தன் அடியார் கூட்டமும் வைத்து , என்பன ` தொட்டிமையுடைய தொண்டர் ` களுக்கே உரிய ஒற்றுமை குறித்தன . ` கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர் ` ( கம்பரா . ) என்றதில் , ஒற்றுமையும் உணர்த்தப்பட்டது . ` தோட்டிமை ` என்றது பிழைபட்ட பாடம் .

பண் :

பாடல் எண் : 4

நஞ்சிருண் மணிகொள் கண்டர் நகையிரு ளீமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி விளங்கினார் போலு மூவா
வெஞ்சுடர் முகடுதீண்டி வெள்ளிநா ராசமன்ன
அஞ்சுட ரணிவெண்டிங்க ளணியுமா ரூரனாரே.

பொழிப்புரை :

அழியாத சூரியமண்டலத்தின் உச்சியைத் தொட்டுக் கொண்டுள்ள சடைமுடியில் வெள்ளிக் கம்பி இருந்தாற்போன்ற அழகிய ஒளி வீசும் பிறையை அணிந்த ஆரூர்ப் பெருமான் நஞ்சினால் இருண்ட நீலகண்டராய் , இருள்மிக்க சுடுகாட்டில் இரவிலே வெளிப் படுகின்ற சுடுகாட்டுத் தீயாகிய விளக்கு வெளிச்சத்திலே கூத்தாடி விளங்குபவராவார் .

குறிப்புரை :

நஞ்சு கொள் கண்டர் ; இருள் கொள் கண்டர் ; மணி கொள் கண்டர் ; நஞ்சுண்டு கறுத்து இருள்போலவும் நீல மணி போலவும் விளங்குங் கண்டத்தர் . நகையிருள் - விளக்கமுடைய இருள் ; ` இருள் உருவம் காட்டும் .` ஈமம் - சுடுகாடு . கங்குல் - இரவு . வெஞ்சுடர் விளக்கத்து ஆடி - வெவ்விய சுடுகாட்டுத் தீச்சுடர் விளக்கத்தில் நட்டம் ஆடி ( விளங்கினார் போலும் ). மூவா வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன திங்கள் - அழியாத வெவ்விய சூரிய மண்டலத்தைத் தொட்டு வெள்ளிக் கம்பியிருந்தாற்போன்ற பிறை . அம் சுடர் அணி திங்கள் - அழகிய நிலாச் சுடரும் அழகும் உடைய திங்களை . சிவபிரான் சடை வெஞ்சுடர் முகடு . அதிலுள்ள பிறை வெள்ளி நாராசம் . நிலாவின் தண்மை அஞ்சுடர் . வெயிலின் வெம்மை வெஞ்சுடர் .

பண் :

பாடல் எண் : 5

எந்தளிர் நீர்மை கோல மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந் தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளி ராகம் போலும் வடிவரா ரூர னாரே.

பொழிப்புரை :

எம்முடைய கற்பக மரத் தளிரின் தன்மையான அழகிய மேனியை உடைய ஆரூரன் என்று தேவர்கள் போற்றுமாறு , பசிய தளிரை உடைய காமவல்லி போன்று , தம் மேனிமீது படரும் கொடிபோன்ற பார்வதியால் தழுவப்பட்டு , தம்முடைய சடைத் தொகுதியினாலும் தம்முடைய தனிப்பண்பினாலும் அழகிய தளிரினது வடிவம் போன்றவர் ஆவார் ஆரூரனார் .

குறிப்புரை :

ஆரூரனார் இமையோர் ஏத்தக் கொடி பயிலப்பட்டு , தொத்தினாலும் நீர்மையாலும் அந்தளிராகம் போலும் வடிவர் . இமையோர் ஏத்துவது எம் தளிர் நீர்மையும் கோலமும் உடைய திருமேனி என்று ; அதற்கு ஏது கொடிபயிலப்படுதல் ; தம் சடைத் தொகுதியாலும் தம் நீர்மையாலும் ` எம் தளிர் ` என்று இமையோர் ஆறனுருபின் உடைமைக் கிழமையிற் கூறிக் கொண்டது , கற்பக மரமும் அதிற்படரும் காமவல்லி என்னுங் கொடியும் தமக்கே உரியன ஆதலின் . பைந்தளிர்க் கொம்பர் - பசிய தளிர்களையுடைய கற்பகப்பூங்கொம்பு ; அன்ன - அத்தகைய ; படர்கொடி - காமவல்லி என்னும் படருங்கொடி ; பயிலப்பட்டு . ( தன்கண் ) பயிலப்பெற்று ; தம் சடைத் தொத்தினாலும் - தமது சடைக்கற்றையாலும் ; தம்மதோர் நீர்மையாலும் - தம்முடையதொரு தன்மையாலும் ; அம் - அழகிய ; தளிர் - தளிரினது ; ஆகம் போலும் வடிவர் - வடிவுபோல்கின்ற வடிவினார் . பைந்தளிர்க் கொம்பர்களையுடைய அத்தகு சிறப்புடைய படர்கொடி என்று கொடியின் சினையாக்கியுங் கூறலாம் . சிவபிரான் பைந்தளிர்க் கொம்பர் . அம் முதல்வனைத் தழுவியுள்ள நாய்ச்சியார் படர் கொடி . கொடிப்பயிற்சியும் சடைத்திரளின் நிறம் முதலியனவும் அவ்விருவரது இயல்பும் ஒப்புக்குரியன . ` வெள்ளிவெற்பின் மேல் மரகதக்கொடியுடன் விளங்கும் தெள்ளு பேரொளிப்பவள வெற்பு ` என்றருளினார் சேக்கிழார் பெருமானார் . ` பொன்மலைக்கொடி ` ` மலைவல்லி ` என்றலும் நினைக .

பண் :

பாடல் எண் : 6

வானகம் விளங்க மல்கும் வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டி லுண்பது மொளிகொ ணஞ்சம்
ஆனகத் தஞ்சு மாடு மடிகளா ரூர னாரே.

பொழிப்புரை :

புலாலின் சுவடு நீங்கப்பெற்ற மண்டையோட்டில் பிச்சை எடுத்து , ஒளி பொருந்திய விடத்தை உண்டு , பஞ்சகவ்வியத்தில் நீராடும் ஆரூர்ப்பெருமான் வான்வெளி எங்கும் ஒளிபடருமாறு வளரும் பிறையைச் சூடி , பிச்சை இட வரும் இளைய மகளிருடைய மனம் பெண்மைக்குரிய பண்புகள் அழியுமாறு வந்து பிச்சை எடுத்துத் திரிவார் போலும் .

குறிப்புரை :

வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் என்றது சிவபிரானது சடைமேலுள்ள பிறை எல்லாத் தத்துவங்களுக்குள்ளும் தத்துவாதீதத்திலும் உள்ள வெளிகலெல்லாவற்றையும் விளக்கும் வளமுடைமை குறித்து . தான் :- அசை , அகம் - பாவம் ஈவோர் பாவம் அழிதல் ஏற்றலின் பயன்களுள் ஒன்று . ` புண்ணியம் ஆம் , பாவம்போம் , தீது ஒழிய , நன்மை செயல் ` என்னும் வாக்கியம் ( நல்வழி ) நான்கும் ஈண்டுணரத்தக்கன . ஊன் அகம் கழிந்த ஓட்டில் :- பிரமகபாலத்தில் , தேர்வதும் பலி ; உண்பதும் நஞ்சு . ` அருந்தும்விடம் அணியாம் மணிகண்டன் ` என்புழி 1. ` அருந்துமென்பது காலமயக்கம் `; 2. அருந்துதற்றொழில் முடிவதன்முன் நஞ்சம் கண்டத்து நிறுத்தப்பட்டு அணியாயிற்று ஆகலின் . நிகழ்காலத்தாற் கூறப்பட்டது எனினும் அமையும் ` ( தி .8 திருக்கோவையார் 272 உரை ) ஆனகம் அஞ்சும் - ` ஆனிடத்தைந்தும் `. ஆடும் - அபிடேகம் புரியப் பெறும் . அடுத்துவரும் திருப்பாடலில் ` அஞ்சணையஞ்சுமாடி ` என்றதும் உணர்க . அடிகள் - கடவுள் . இதுமுன் திருவடி ஞானம் பெற்றவர்களைக் குறிக்கும் பெயராயிருந்து , பின் இறைவனைக் குறித்தும் ஆளப் படுகின்றது .

பண் :

பாடல் எண் : 7

அஞ்சணை கணையி னானை யழலுற வன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை யமுதமா வணைந்து நக்கு
அஞ்சணை யஞ்சு மாடி யாடர வாட்டுவார் தாம்
அஞ்சணை வேலி யாரூ ராதரித் திடங்கொண் டாரே.

பொழிப்புரை :

ஐந்து வேலிப் பரப்புடைய திருவாரூர்க்கோயிலை விரும்பி உறையும் பெருமான் ஐங்கணைகளை உடைய மன்மதனைச் சாம்பலாகுமாறு ஒருகாலத்தில் நெற்றிக் கண்ணால் நோக்கி , ஐந்து விதமாக முடிக்கப்படும் ( ஐம்பால் ) கூந்தலையுடைய பார்வதியை அமுதமாகக் கருதி அவளோடு பொருந்தி , சிரித்து , பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் கொண்டு , ஐந்து தலைகளை உடையதாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பினை ஆட்டுபவராக உள்ளார் .

குறிப்புரை :

அஞ்சு அணைகணையினானை - அஞ்சு மலராக அணைந்த அம்புடைய மன்மதனை . அழல் உற - தீயை அடைய ; தீய ; எரிய . அழுதலையடைய எனல் இரதிக்குத் தகும் . அன்று - யோகிருந்த அக் காலத்தில் ; விண்ணோர் கருவேளை ஏவிய வேளையுமாம் . நோக்கி - நெற்றிக் கண்ணாற் பார்த்து ; யோகத்தையும் நம்மையும் மதியாது வந்தவாற்றைக் கருதி . அஞ்சு அணைகுழலினாளை - சுருள் , குழை , பனிச்சை , கொண்டை , முடி என்னும் ஐந்தும் பொருந்தும் கூந்தலாராகிய உமை ; கமலாம்பிகை ; அல்லியங்கோதை . அமுதம் ஆ - அமுதத்தினிமை போலும் இனிமை விளைய . நக்கு - சிரித்து . யோகி போகியாதல் பற்றி விளைந்த நகை . அஞ்சு அணை அஞ்சும் ஆடி :- ` ஆனகம் அஞ்சும் ஆடி `. அஞ்சு இரண்டனுள் முன்னது பஞ்ச கவ்வியம் . பின்னது ` ஆனைந்து ` எனப்படும் ` நறு நெய்யொடு பால் தயிர் `. ஆடரவு - ஆடுகின்ற பாம்பு . கொல்லும் பாம்புமாம் . அடுதல் - கொல்லல் . அஞ்சு அணை வேலி :- திருவாரூர்க் கோயில் , குளம் , நீரோடை மூன்றும் அவ்வஞ்சு வேலியளவின . ( தி .4 ப .53 பா .3)

பண் :

பாடல் எண் : 8

வணங்கிமுன் னமர ரேத்த வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர் மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி யாரூரெம் மடிக ளாரே.

பொழிப்புரை :

சந்திர மண்டலம் வரையில் உயர்ந்து அந்த வட்டமான பகுதியில் அடைந்து சந்திரனை அணுகுகின்ற அழகிய கொடிகள் உயர்த்தப்பட்ட மாடங்களை உடைய வீதிகளைக் கொண்ட ஆரூரில் உள்ள எம்பெருமான் தேவர்கள் தம்முடைய வலிய வினைப் பயன்கள் தீருமாறு முன் நின்று வணங்கித் துதிக்க ஒன்றோடொன்று கலந்து பின்னி முறுகிய சடைகளிடையே பிறையைச் சூடிய பெருமையை உடைய தலைவராவார் .

குறிப்புரை :

அடிகளார் அண்ணல் ; பாகர் . அல்லது அண்ணலும் பாகரும் அடிகளார் என்க . ஏத்தவும் தீரவும் வைத்தபிறை அமரர் முன் வணங்கி ஏத்த வைத்த பிறை , வல்வினையாயின தீர வைத்தபிறை , பிறையையுடைய பெருமையாவது வணங்காதாரையும் பிழைத் தாரையும் ஒதுக்காமற் சிறப்பித்துக் காத்தருளியது . ஆன :- வினையாலணையும் பெயர் . மணம் கமழ்ஓதி - நறுமணம் வீசும் கூந்தலாள் ; அன்மொழித்தொகை . பாகர் - இடப்பாகத்திலுடையவர் . மதிநிலா வட்டத்து - சந்திரமண்டிலத்தில் . ஆடி அண் அம் கொடி - அசைந்து அண்ணுகின்ற அழகிய கொடி . கொடியையுடைய மாடம் . மாடங்கள் உள்ள வீதிகள் . வீதியை ஆளுதலுடைய ஆரூரர் . ` வீதிவிடங்கர் ` என்பது கொண்டு வீதிச் சிறப்புணர்க . அணங்கு + கொடி (- அணங்கொடி ) என்று கொண்டுரைப்பின் , ஆடி என்பதன் முடிவிடம் இன்றாய்க் கெடும் . வினையான :- பலவின்பால் வினை ஈண்டும் பெயராய்த் தீர என்னும் வினைக்கு முதலாய் நின்றது .

பண் :

பாடல் எண் : 9

நகலிடம் பிறர்கட் காக நான்மறை யோர்க டங்கள்
புகலிட மாகி வாழும் புகலிலி யிருவர் கூடி
இகலிட மாக நீண்டங் கீண்டெழி லழல தாகி
அகலிடம் பரவி யேத்த வடிகளா ரூர னாரே.

பொழிப்புரை :

வீண் பேச்சிற் பொழுதுபோக்கி நல்லோர் இகழ்ச்சிக்கிடமாகும் நிலை ( அடியாரல்லாத ) பிறர்க்காக நான்கு வேதங்களையும் ஓதும் பக்தர்களுக்கு அடைக்கலமாகி வாழ்பவராய் , தமக்கு அடைக்கலம் தருபவர் பிறர் யாரும் இல்லாதவகையில் அனைவருக்கும் தாமே அடைக்கலமாகும் பெருமானாய் , திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து தமக்குள் மாறுபட்டு அடியும் முடியும் தேடும் தீப்பிழம்பாக நீண்டு , உலகத்தார் முன் நின்று துதித்துப் புகழுமாறு ஆரூர்த் தலைவர் விளங்குகிறார் .

குறிப்புரை :

பிறர்கட்கு நகலிடமாக நான்மறையோர் தம் புகலிடமாகி வாழும் புகலிலி ஆரூரனார் . கூடி இகல் இடம் ஆக நீண்டு ஈண்டெழிலாகி , அகலிடம் பரவி ஏத்த ஆரூரனார் . நகல் இடம் - நகைத்தற்குரிய இடம் . புகல் - அடைக்கலம் . புகல் இலி - தனக்குமேல் ஒரு புகலாக யாரையும் வேண்டாத தனி முதலாய் , எவ்வுயிர்க்கும் தான் புகலிடமான மெய்ப்பொருள் . இருவர் - மாலும் அயனும் . இகல் - மாறுபாடு . இகலும் இடம் . நீண்டு - வியாபித்து , ஈண்டு - செறிந்த , செறிந்து எனலுமாம் , எழில் - எழுச்சி , அழலது - அழலுதலுடையதீ , அகல் இடம் - உலகம் , பரவி - வாழ்த்தி , ஏத்த ஆரூரில் எழுந்தருளியுள்ளார் . ` நகலிடம் ` ` புகலிடம் `:- வேற்றுமைத்தொகை . ` இகலிடம் ` ` அகலிடம் ` வினைத்தொகை . ` பிறர் ` என்றது நான்மறையோர் அல்லாதவரை . நான்கு மறையும் கேட்டு நினைந்து தெளிந்தோர் அம் மறை நெறியில் நின்று இறைவன் திருவடியே புகலெனக் கொண்டு திருவருள் நெறியின் வழாது பேரின்பம் துய்ப்பர் . அவர் அல்லாதவர் ( பிறர் ) உலக நெறியில் உழன்று யாவரும் நகுதற்குரியராவர் .

பண் :

பாடல் எண் : 10

ஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி
ஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ
ஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர
ஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.

பொழிப்புரை :

நதிகள் பலவாக வந்து கலக்கும் அலைகளை யுடைய கடலில் தோன்றிய அமுதினைத் தேவர் நுகருமாறு வழங்கி , அசுரர் பலர் வாழும் அழகிய மதில்கள் மூன்றையும் வேவச் செய்து ஆயிரம் தோள்களையும் சுழற்றி ஆடிய களைப்புத் தீருமாறு தமக்குத் தொண்டு புரிய அடியவர் பலரைக் கொண்டுள்ளவர் ஆரூரனாகிய பெருமான் .

குறிப்புரை :

ஆயிர நதிகள் மொய்த்த கடல் என்றருளிய உண்மையை உணராது , நகரத்தை ஒற்றாகவும் திகர ககரங்கட் கிடையிலே ஙகரமெய் இருந்து மறைந்ததாகவும் , ( திங்கள் என ) எண்ணிக்கொண்ட பிழைபட்ட பாடமே எல்லாப் பதிப்பிலும் உளது , ஆயிரந்திங்கள் மொய்த்தாற் போன்ற வெண்ணிறமுடைய பாற்கடல் என்று கொண்டனர் போலும் . ஆயிரம் - பலப்பல , அசுரர் :- முப்புரத்தனர் . வேவ - தீவிழியால் வெம்மையுற்றழிய , மட்டித்து - மடித்து . ` மடித்தாடும் அடி ` அசைவு தீர - இளைப்பாற . ` ஆயிரமடியும் வைத்த ` து யாது எனப் புலப்படவில்லை . கங்கையைக் குறிப்பதோ . அடி - திருவடி வியாபகமோ ? அடி - அடியார் .
சிற்பி