திருப்புகலூர்


பண் :

பாடல் எண் : 1

பகைத்திட்டார் புரங்கண் மூன்றும் பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே பொறியிலே னுடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளு மைவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர் பெருமானே! பகையாயின அசுரர்களுடைய முப்புரங்களும் சிதறிச் சாம்பலாய் விழுமாறு தீக்கு இரையாக்கிய தேவர் தலைவரே! நல்வினை இல்லேனுடைய உடலிலே கிளைத்து அதனை நாடோறும் ஐம்பொறிகளும் செயற்படுத்ததனால் வருந்தி மயங்கி விட்டேன். யான் யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

பகைத்திட்டார் - பகைவருடைய, பாறி - அழிந்து, நீறு - சாம்பல். புகைத்திட்ட - எரித்த. பொறி - அறிவு. அகைத்தல் - அறுத்தல், எழுப்புதல், ஓட்டுதல், செலுத்தல், கிளைத்தல், முறித்தல், வருத்தல் ஆகிய எல்லாப் பொருளும் ஈண்டுப் பொருந்தும். `நீங்கருந் துயர் செய்வளி முதல் மூன்றன் நிலையுளேன் அவை துரந்திடு முன் வாங்கி நின் தன் வீட்டுறைகுவான் விரும்பி வந்தனன் நின் குறிப்பு அறியேன்` என்று வளி முதலியவற்றைக் குறித்துக் கூறிய துரத்தல் ஐம்பொறிக்கும் ஏற்கும். (தி:-4 ப.67 பா.1, 3, 5, 7, ப.69 பா.2, 4, 6.) ஐவர் - ஐம்பொறி, கொண்டு ஆட்ட ஆடி. `ஆட்டுவார்க்கு ஆற்றகிலேன்` (தி.4 ப.67 பா.4). திகைத்தல் - மயங்குதல். `திரு இங்கு வருவாள் கொல்லோ என்று அகம் திகைத்து நின்றான்` (கம்பரா. சூர்ப்ப. 59)

பண் :

பாடல் எண் : 2

மையரி மதர்த்த வொண்கண் மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே யடைக்கும்போ தாவி யார்தாம்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! மை தீட்டப்பட்டுச் செவ்வரி பரந்து செழித்த ஒளிபொருந்திய பெண்களின் பார்வையாகிய வலையில் அகப்பட்டுக் கையிலே நெருப்பையும் சூலத்தையும் ஏந்தும் கடவுளாகிய உம்மைத் தியானிக்க இயலாதேனான் கோழை திரண்டு சாய்ந்து கழுத்தின் உட்புறத்தை அடைக்கும்போது என் உயிர் என்ன பாடுபடுமோ அறியேன்.

குறிப்புரை :

மை - கண்ணிற்பூசும்மை, மணியின் கருமையையும் கோட்டின் செம்மையும் குறித்து மையரி என்றாருமாம். மையும் அரியும் மதர்த்தலும் ஒண்மையும் கண்ணிடத்துக்கொண்டு ஆடவரைத் தம் மயக்க வலையிற் படுத்துவர். அவர் வழிப்பாடு கடவுள் வழிபாட்டாலன்றித் தீராது. கடவுள் வழிப்பக்கமும் செலுத்தாது. கையில் ஏந்திய விர்த்த பல்கதிர் கொள்சூலம். எரிகின்ற சூலத்தை ஏந்துகின்ற கடவுள். ஐ - கோழை, சிலேட்டுமம். நெரிந்து - சாய்ந்து அகமிடற்றே - (மிடற்றகத்தே) கழுத்தினுள்ளே. அடைக்கும்போது ஆவியார்:- `ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போவதுமே` `ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும் போதுணரமாட்டேன்.

பண் :

பாடல் எண் : 3

முப்பது முப்பத் தாறு முப்பது மிடுகு ரம்பை
அப்பர்போ லைவர் வந்து வதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றா லுய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித் திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

செந்நிற மேனியை உடைய திருப்புகலூர்ப் பெருமானே! தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களால் அமைக்கப் பட்ட இவ்வுடம்பாகிய குடிலிலே தலைவர்களைப்போல ஆட்சிப் புரியும் ஐம்பொறிகளும் அவ்வப்போது தோன்றி அதனைக்கொடு, இதனை விடு என்று ஒருசேரத் துன்புறுத்தத் தொடங்கினால் அவற்றில் இருந்து தப்பிக் கடைத்தேறும் வழியை அடியேன் அறியமாட்டேன்.

குறிப்புரை :

முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடுகுரம்பை - முப்பத்தாறு தத்துவங்களும் அறுபது தாத்துவிகங்களும் அண்டத் திலுள்ளவாறே அமைந்த பிண்டமாகிய குடில். `இருகாற் குரம்பை இது` (தி.4 ப.113 பா.2). `ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டோட்டி அதில் இரண்டு கை வைத்த வீடு` (கந்தரலங்காரம்) குரம்பையப்பர் - குடிலின் தலைவர், `இல்ல முடையார்` `கள்ளரோடில்லம் உடையார்` ஐவர் - ஐம்பொறி, அது தருக. இது விடு(க). ஒப்பவே - ஒரு சேரவே; நலியல் - வருத்துதல், உய்யும் ஆறு - தப்பும் வழி, செப்பமே - செம்மை, `பவளம்போல் மேனி` `அந்தவண்ணன்` செந்நெறியிலேயே விளங்கும் சிவ ஞானமூர்த்தியுமாம்.

பண் :

பாடல் எண் : 4

பொறியிலா வழுக்கை யோம்பிப் பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றே னீதனே னீதி யேதும்
அறிவிலே னமரர் கோவே யமுதினை மனனில் வைக்கும்
செறிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! பொலிவில்லாத அழுக்கு உருவமான இவ்வுடம்பைப் பாதுகாத்துப் பொய்யான வழியையே மெய்வழியாகக் கருதிக் கீழ்மகனாகிய அடியேன் வழியல்லா வழியிலே வாழ்ந்தேன்! நெறிமுறையான செய்திகளை அறியும் ஆற்றல் இல்லேன். தேவர்கள் தலைவனே! அமுதமாகிய உன்னை மனத்தில் நிலையாகவைத்தற்குரிய யோகமுயற்சி உடையேன் அல்லேன். யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

பொறி - பொலிவு. அழுக்கு - மலம். ஈண்டு உடம்பிற்கு ஆகுபெயர். `அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்` (நம்பியாரூரர்) பொய் - நிலையில்லாதது. மெய் - நிலையானது. நெறியலா நெறிகள் - சைவ நெறியல்லாத வேற்றுச் சமய நெறிகள். அமுதினை மனனில் வைக்கும் செறிவு - விண்ணுலகத்து அமிர்தினை மனத்தில் வைத்தற்கு ஏதுவான யோகம். `மண்ணில்` என்றது பிழைபட்ட பாடம். ஏடுகளிலும் `மனனில்` என்றே உளது. எம் ஏட்டில் மண்ணில் என்று எழுதி மனனில் என்று திருத்தியிருக்கின்றனர். (தி.4 ப.54 பா.6) ஆவது திருப்பாடலில் `நீதனேன்` என்றுள்ளதுணர்க. (தி.6 ப.47 பா. 4) பார்க்க. நீதன் (-நீதிமான்) எனின், நீதியேதும் கல்லேன், நெறியலா நெறிகள் சென்றேன் எனல் ஒல்லுமோ?

பண் :

பாடல் எண் : 5

அளியினார் குழலி னார்க ளவர்களுக்கு கன்ப தாகிக்
களியினார் பாட லோவாக் கடவூர் வீ ரட்ட மென்னும்
தளியினார் பாத நாளுந் நினைவிலாத் தகவி னெஞ்சம்
தெளிவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! வண்டுகளால் மொய்க்கப் பெறும் கூந்தலை உடைய பெண்கள்பால் அன்பு செலுத்தி, சிவானந்தக் களிப்பினார்கள் பாடும் பாடல்கள் நீங்காத கடவூர் வீரட்டம் என்னும் கோயிலிலுள்ள அமுதகடேசராம் பெருமானை நாள் தோறும் விருப்புற்று நினைக்காததும், தகுதியற்றதுமான நெஞ்சம் தெளிவு பெறாத அடியேன் யாது செய்வேன்?

குறிப்புரை :

அளி - வண்டுகள். அளியின் ஆர்குழலினார்கள் - வண்டுகளின் நிறைந்த கூந்தலார். குழலினார்க்கு அன்பு - மாது நேசம். களியினார் பாடல் - சிற்றின்பக் களிப்புடையார் பாடும் பாடல்கள். ஓவா - நீங்காத. கடவூர் வீரட்டம்; திருக்கடவூர்க் கால சங்காரம் புரிந்த வீரட்டானம். தளி - திருக்கோயில். தளியினார்:- `அமுதகடேசர்` நாளும் - நாள்தோறும். நினைவு - மறவாதுன்னுதல், நினைவு இல்லாமையால் நெஞ்சம் தகவும் உயிர் தெளிவும் இல்லாதன ஆயின.

பண் :

பாடல் எண் : 6

இலவினார் மாதர் பாலே இசைந்துநா னிருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி நீதனே னாதி யுன்னை
உலவிநா னுள்க மாட்டே னுன்னடி பரவு ஞானம்
செலவிலேன் செய்வ தென்னே திருப்புக லூர னீரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! இலவம் பூப்போன்ற வாயும் பாதங்களும் உள்ள பெண்கள் பால் இசைந்திருந்து இன்னும் அவர்களோடு பல நாள்கள் கூடி இருக்கப் போகிறோம் என்று கருதிக் கீழ்மகனாகிய அடியேன் அப்பெண்டிர் பக்கமே உலாவிக் கொண்டு உன்னை விருப்புடன் நினையாதேனாய் உன் திருவடிகளை முன்நின்று வழிபடும் சிவஞானம் என் உள்ளத்தில் பொருந்தும் நிலையினேன் அல்லேனாய் வாழும் யான் யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

இலவினார் - இலவம் பூப்போலும் வாயும் அடியும் உள்ளார். சிந்தாமணி 482, 1588. மாதர்பாலே:- ஏகாரம் - அடியார் முதலிய நன்னெறியினரிடத்தில் இசை இன்மை குறித்து நின்றது. பிரிநிலை. பின்னும் நிலவு நாள் - மேலும். உடம்பொடு கூடி வாழுங் காலம். `ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுபகோடியும் அல்ல பல` (திருக்குறள்) ஆதி - முதல்வர், உலவி - உள்ளத்தில் உலவச் செய்ய. உலவியுள்க எனல் பொருந்தாது. செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. உன் அடி பரவும் ஞானம்:- நின் அடி பரவ நான் நீயாகி நிற்கும் மெய்யுணர்வு. `நீயான ஞான விநோதந்தனை என்று நீ யருள்வாய்?` (கந்தரலங்காரம்). செலவு - ஒழுக்கம். செல்லுதலுமாம். `அறிவு செல்லவில்லை` என்ற வழக்குணர்க. `நீதனேன்` (தி.4 ப.54 பா.4.) உன் திருவடியைப் பரவும் சிவஞானம் செலவு இல்லேன். செல்ல இல்லேன். சிவஞானத்திற் செல்லுதல் இல்லேன். சிவஞானம் செல்ல (- என் உள்ளே செல்ல, புக) இல்லேன். `செலவு` தன்மைக்கண் வழுவமைதி. உன்னடி பரவும் ஞானத்திற் செல்லுதல் இல்லேன் என்றுமாம்.

பண் :

பாடல் எண் : 7

காத்திலே னிரண்டு மூன்றுங் கல்வியே லில்லை யென்பால்
வாய்த்திலே னடிமை தன்னுள் வாய்மையாற் றூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புக லூர னீரே.

பொழிப்புரை :

பொய்கைகள் விளங்கும் திருப்புகலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளையும் அடக்கினேன் அல்லேன். ஞான தேசிகராற் பெற்ற அனுபவ ஞானம் அடியேன்பால் இல்லை. உம் தொண்டில் அடியேன் வாய்ப்புப் பெற்றேன் அல்லேன். வாய்மையோடு தூய்மை உடையேன் அல்லேன். அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பெருமானே! வழிபடுவோர்களுடைய தீவினைகளுக்குக் கழுவாயாகி உள்ளவரே! யான் யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

காத்திலேன் இரண்டும் மூன்றும் - ஐம்பொறிகளையும் அடக்கினேனல்லேன். `இரண்டும் மூன்றும்` என்றாற்போலக் குறிக்கும் வழக்கம் ஆசிரியர்பால் மிகுதியாயிருக்கின்றது. `மூன்று முந்நூற்றறுபதும் (-1080 மலர்`தி.4 ப.29 பா.9). `ஐயிரண்டும் ஆறொன்றும் ஆனார் போலும் அறுமூன்றும் நான்மூன்றும் ஆனார் போலும்` (தி.6 ப.16 பா.6) பத்துத் திசையும் ஏழுலகும் பதினெண் கணமும் பன்னிரு சுடரும் ஆனார் என்பன காண்க. `ஐயிரண்டும் ஆறொன்றும்` என்பது சோடசகலாப் பிரசாதத்தை யுணர்த்துவதென்பர். அப்பொருட்கு, ஐந்து இரண்டு ஆறு ஒன்று என்று கொண்டு பதினாறு கலை எனல் வேண்டும். ஆறும் ஒன்றும் ஏழு என்று உம்மைத் தொகையாகக் கொண்டுரைத்தது முன்னது. கல்வியேல் என்பால் இல்லை. அடிமை தன்னுள் வாய்த்திலேன். தன்னுள் - சிவபிரானிடத்தில், அடிமை வாய்த்திலேன். வாய்மையால் - வாயுரையால். முப் பொறி (திரிகரணம்) ஆகிய உள், வாய், மெய் என்னும் மூன்றனியல்பும் (சத்தியமும்) முறையே உண்மை, வாய்மை, மெய்ம்மை எனப்படும். தூய்மை - யாதொன்றும் தீமையிலாத சொல்லல். பரவுவார்கள் - வாழ்த்தி வழிபடுவோர். தீர்த்தம் - தீவினைக்குக் கழுவாய் ஆகிய தூநீர்.

பண் :

பாடல் எண் : 8

நீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி யிமையவ ரிறைஞ்ச 1நின்றார்
2ஆய்வதற் கரிய ராகி யங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவர் திருப்புக லூர னாரே. 

பொழிப்புரை :

நீராய்த், தீயாய், நிலனாய், வானமாய், அழகிய ஒளிப்பொருள்களாய்த் தேவர்கள் வழிபட நிற்பவராய், ஆராய்ந்தறிவதற்கு அரியராய்ப் பலப்பல இடங்களில் கூத்து நிகழ்த்தும் தேவதேவர் திருப்புகலூர்ப் பெருமானாவார்.

குறிப்புரை :

இமையவர் இறைஞ்ச நிலனும் நீரும் தீயும் (வளியும்) விசும்பும், தண்கதிரும் செங்கதிரும் ஆகி நின்று, ஆய்ந்துணர்வதற்கு எளியரல்லராகி, அவ்வத் தத்துவ புவனங்களில் முத்தொழில் புரியுந் தேவர்க்கும் அதிட்டான மூர்த்தியாய் எழுந்தருளி இயக்குவிக்கும் தனி முதற் பொருளாவார் திருப்புகலூரனார். சிவ பரஞ்சுடர். இமையவர் முதலிய இயமானர் நீர், நிலம், தீ, கார், விண், இருசுடர் ஆகிய எட்டுருவாய் நின்றுணர்த்தியும், சித்துப் பொருளாகிய இயமானர்க்கு அசித்துப் பொருளாகிய மற்றையேழன்கண்ணும் வைத்தும் தன்கண் வைத்தும் ஆய்வதற்கருமையும், அவ்வத் தத்துவாதிபதிகளை ஆட்டுவித்தலும் அறிவித்தவாறுணர்க. `விசும்பு` என்றதால், அதில் உலவும் வளியும் பெற வைத்தருளினார். இது படர்க்கைப் பரவல். `நின்றார்` `ஆவது` என்றும் பாடம் உண்டு.

பண் :

பாடல் எண் : 9

மெய்யுளே விளக்கை யேற்றி வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோ ருபாயம் பற்றி யுகக்கின்றே னுகவா வண்ணம்
ஐவரை யகத்தே வைத்தீ ரவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமானே! இவ்வுடம்பினுள்ளே சோடசகலாப் பிராசாத ஞான விளக்கை ஏற்றி, மும்மலங்களையும் கடத்தற்கு வேண்டிய அளவில் அதனைத் தூண்டிவிட்டுப் பிறவித் துன்பத்தினின்றும் தப்பிக்கொள்வதற்கு உரிய உபாயத்தை உறுதியாகப் பிடித்து மேலுயர்ந்து கொண்டிருக்கும் அடியேன் உயர முடியாதபடி ஐம்பொறிகளை அடியேன் உடலில் சால வலிமை உடையனவாக வைத்திருக்கின்றீர். ஆதலின், அடியேன் செய்வதறியேன்.

குறிப்புரை :

மெய் - உடம்பு. விளக்கு - ஒளிநெறிக்குரிய பிராசாத மந்திர ஞானதீபம். வேண்டு அளவு - மும்மலங்களையும் கடக்க வேண்டிய எல்லை வரையில். உயர - துவாதசாந்தத்தை எய்த. தூண்டி - பிராசாத யோகத்தால் உந்தி. உய்துவது ஓர் உபாயம் - பிறவித் துன்பத்தினின்று உய்ந்து வீடு பெறற்கேற்ற தோருபாய நிட்டை. அதை உறுதியாகப் பிடித்து, உகக்கின்றேன். உயர்த்துகின்றேன். உகவா வண்ணம் - உயர்த்தாத வகையில், அகத்தே ஐவரை வைத்தீர். அவரொடு யான்செய்யும் போரில் அவர்களே சாலவலியர். செய்யத்தக்கது ஒன்றும் அறியவல்லேனல்லேன்.

பண் :

பாடல் எண் : 10

அருவரை தாங்கி னானு மருமறை யாதி யானும்
இருவரு மறிய மாட்டா வீசனா ரிலங்கை வேந்தன்
கருவரை யெடுத்த ஞான்று கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப்புக லூர னாரே. 

பொழிப்புரை :

திருப்புகலூர்ப் பெருமான் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து உயர்த்திய திருமாலும், அரிய வேதங்களை ஓதும் பிரமனும் ஆகிய இருவரும் அறியமாட்டாத ஈசனாய் இலங்கை மன்னனான இராவணன் கயிலையைப் பெயர்த்தபோது அவன் கண்வழியே இரத்தம் பெருகுமாறு கால்விரல் ஒன்றைச் சிறிது வைத்தவராவார்.

குறிப்புரை :

இத் திருப்பதிகத்தில் எட்டும் பத்துமாம் இரண்டும் சிவபிரானைப் படர்க்கையிற் பரவுவன. அருவரை - பிறரால் எடுத்துக் குடையாகக் கவித்துப் பிடித்தற்கரிய கோவர்த்தனகிரி. தாங்கினான் - ஆக்களைக் காக்கத் தாங்கிய கண்ணனாகிய திருமால். அருமறை - கற்றும் கேட்டும் உணர்தற்கரிய வேதம். ஆதி - படைத்தற்றொழிற்கு முதல்வன். முதற்றொழிலனுமாம். இலங்கை வேந்தன் கரிய (பெரிய) மலையை எடுத்தநாளன்று, அவன் இருபது கண்களின் வாயிலாகவும் செந்நீர் ஒழுகச் சிறிது திருக் காற்பெருவிரலை ஊன்றினார் திருப்புகலூரனார். ஈசனார் - உடையார்: தமிழில் இறைவனை உடையான் என்பது தொல்வழக்கு. அப்பொருட்டாய ஈசன் என்பது வட மொழிக் கலப்புற்ற பின் வழங்கும் பெயராம். `உடையாள்` அம்பிகை. `இடையறா அன்பு உனக்கு என்னூடகத்தே நின்றுருகத் தந்தருள் எம் உடையானே` `உடையாள் உன்றன் நடுவிருக்கும்` (தி.8 திருவாசகம்) உடைமை உயிர்களும் உயிரில் பொருள்களும். அவற்றுள் உயிர்கள் அடிமையாதலும் உடையன. `நாளன்று` என்பதன் மரூஉவே `ஞான்று` என்பது. கல்வெட்டுக்களுள் `மகர ஞாயிற்று இரேவதி ஞான்று` என்பது முதலிய தொடர்களால் அதன் தொன்மை புலப்படும்.
சிற்பி