திருவாவடுதுறை


பண் :

பாடல் எண் : 1

மாயிரு ஞால மெல்லா மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

ஆவடுதுறையனாருடைய மலர் போன்ற திருவடிகளைப் பெரிய உலகத்தவர் யாவரும் வணங்குவர் . அப்பெருமான் பரவிய பெரிய கங்கா தேவியைப் பரந்த சடையில் வைப்பவர் . மரங்கள் தோறும் காய்கள் மலியும் பெரிய சோலைகளால் சூழப்பட்ட சீகாழி ஊரினராகிய ஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிறந்த ஆயிரம் பொன்களை அளித்தவர் ஆவர் .

குறிப்புரை :

மாய்ஞாலம் வினைத்தொகை . ` மாயிருஞாலம் மறுவின்றி விளங்கப் பல் கதிர் விரிந்தன்றொருமுகம் ` ( தி .11 திருமுருகா .) இத் தொடரிலே யகரமெய் இடை நின்றதன் அமைதியை நன்னூலி லே ( தி .4 ப .16 பா .7) சங்கரநமச்சிவாயப் புலவர் உரையாலறிக . ` ஆயிருதிணை ` ` இவன் ` என்பனவும் இதுபோல்வன . பொருள் கொடுப்பவரை இருளுலகம் எல்லாம் போற்றுமென்பார் , ` மாயிரு ஞாலமெல்லாம் வணங்கும் ` என்றார் . பொருட்காகச் செய்யாதன வெல்லாம் உலகம் செய்யுமென்பார் . ` அடி வணங்கும் ` என்றார் . வாங்கும் வலியரை மெலியராக்கவும் , மெலியரை வலியராக்கவும் வன்மையரேனும் கொடுப்பாராயின் , அவரை மென்மையாராக்கிப் பிறராற் போற்றப் படப் பண்ணவும் வல்லது பொருளாதலின் அது கொடுப்பாரடி வாங்கு வார்க்கு ` மலரடி ` யாகும் என்றார் . இவ்வுலகியலை அருளியலிலும் பொருந்துமா றுணர்த்தினார் . பாய்கங்கை ; இருங்கங்கை . படர்ந்த சடையில் வைப்பர் . காய்பொழில் இரும்பொழில் கழுமலவூரர்க்கு - திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு , ஆயிரம் பொன் கொடுப்பர் .

பண் :

பாடல் எண் : 2

மடந்தைபா கத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங் கொல்புலித் தோலர் போலும்
கடைந்தநஞ் சுண்பர் போலுங் காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

பார்வதி பாகராய் , மான்குட்டியை ஏந்திய கையினராய் , கும்பகோணப்பதியில் இளையவராய் , தம்மால் கொல்லப்பட்ட புலித்தோலை ஆடையாக உடுத்தவராய் , கடல் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்டவராய் , கூற்றுவனை வெகுண்டவராய்த் தம்மை அடைந்த அடியவருக்கு அன்பராய் அமைந்துள்ளார் ஆவடுதுறையனார் .

குறிப்புரை :

மடந்தை - உமாதேவியார் , மான்மறி - மான் கன்று , திருக்குடந்தைக் குழகர் , ` கொன்மலிந்த மூவிலை வேற்குழகர் போலும் குடந்தைக் கீழ்க் கோட்டத் தெங்கூத்தனாரே ` ( தி .6 ப .75 பா .1) கொல் புலியினது தோலையுடைவர் என்று விரிக்க . ` கொல்புலி ` என்னும் வினைத்தொகை , ` செய்யும் செய்த என்னுங் கிளவியின் மெய்யொருங்கியலும் தொழில் தொகுமொழியும் மருவின் பாத்திய ; புணரியல் நிலையிடையுணரத் தோன்றா .` ( தொல் . எழுத்து . 482) என்றவாறு நின்றது . பிரிந்து , தோலுக்கும் தோலர்க்கும் அடையாகாமை அறிக . கடைந்த - பாற்கடலில் அமரரும் அசுரரும் நின்று கடைந்த . அடைந்தவர் - புகலடைந்தவர் , போலும் எல்லாம் ஒப்பில்போலி .

பண் :

பாடல் எண் : 3

உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை யாவர் போலும்
செற்றவர் புரங்கண் மூன்றுந் தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி யேத்திக் கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

அடியார்கள் உற்ற துயரைத் தீர்ப்பவராய் அவர் களுக்கு மேம்பாடான துணைவராய் , பகைத்த அசுரரின் மும்மதில்களையும் தீக்கிரையாக்கியவராய் , ஞானதேசிகர்பால் உபதேசம் பெற்ற கல்வியாளராம் அடியவர்களாய்க் கூடிவந்து அலந்து பாடுவோராய்த் தம்மிடமே அற்றுத் தீர்ந்த பற்றினராய் அன்பர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறையனார் .

குறிப்புரை :

உற்ற நோய் :- சகசமாயும் ஆகந்துகமாயும் பொருந்திய மும்மல நோய் , பிறவி நோய் முதலிய பலவும் கொள்க . உறுதுணை :- திருவருளன்றி ஏனைய ( எல்லாம் இடையில் வந்துகழியும் உறாத் துணையே அன்றி , அநாதியாக என்றும் உற்றதுணை ஆகா .) உயிர்த் துணையே உறுதுணை . ( வேறு யாரும் துணையாக உறுவாரை இல்லா தார்க்குத் திருவடியே துணையாக வுறுவன ) ` உற்றாரிலாதார்க் குறுதுணையாவன ` ( தி .4 ப .92 பா .13). செற்றவர் - பகைவர் ; திரிபுரத்தசுரர் . செறுவர் - அழிப்பர் . கற்றவர் - கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிற்கக் கற்ற சிவஞானச்செல்வர் . ( கற்றவர் விழுங்குங் கற்பகக்கனி , கற்றல் கேட்டல் முதலிய ஐந்தும் உடையார் என்றலும் , கற்றல் கேட்டலுடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்த .....` மேவிய பெம்மான் இவன் ` கலத்தல் , உலத்தல் , அலத்தல் , பாடுதல் , அறுதல் ஐந்தும் உடையார்க்கு அன்பர் , கலத்தல் - உள்ளமும் , உயிரும் உணர்வும் கலத்தல் , உலத்தல் - பற்றுவற்றுதல் , அலத்தல் - பாசப்பற்றால் துயருறல் , அறுதல் - பற்றுமுற்றும் அற்றொழிதல் , ` அற்றவர்க்கற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ` இரண்டாவது திருமுறையில் , யாம் எழுதியுள்ளவற்றை உணர்க . ( தி .2 ப .11 பா .4.). திருவடியிற் கலந்து , நாக்கு வற்றி , இதுகாறும் வீண் போக்கிய காலங்குறித்துத் துயர்ந்து படும் பற்றற்ற பரமஞானிகளுக்கு அன்பர் .

பண் :

பாடல் எண் : 4

மழுவமர் கையர் போலும் மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும் என்புகொண் டணிவர் போலும்
தொழுதெழுந் தாடிப் பாடித் தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

கையில் மழுப்படையை ஏந்தியவராய் , பார்வதி பாகராய் , கூரிய நுனியை உடைய சூலத்தை ஏந்தியவராய் , எலும்பினை மாலையாக அணிபவராய் , தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரங்கள் பலவும் சொல்லி அழும் அடியவர்களுக்கு அன்பராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான் .

குறிப்புரை :

மழுப்படை அமர்ந்த கையர் . மாதுமைபாகர் . கூரிதா யெழுந்த துணையுடைய முத்தலைவேலர் . எலும்பையும் அணி யெனக்கொண்டு அணிவர் . மூலாதாரத்தினின்று தொழுது கொண்டு சுழுமுனை நாடி வழியாக மேலெழும் உயிர்ப்பொடும் எழுந்து , உடலை எழுப்பித் தானும் எழுந்து ஆடியும் பாடியும் தோத்திரம் அனைத்தும் சொல்லியும் உருகியழும் அன்புருவானார்க்கு அன்பர் . ` கழலடி தொழுது கைகளால் தூமலர் தூவி நின்று அழுமவர்க் கன்பன் ஆனைக்கா அண்ணலே ` ( தி .5 ப .31 பா .7) ` திருநாமம் மகிழ்ந்துரைத்து அழவல்லார்களுக்கு அன்பு செய்து இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் ` ( தி .5 ப .59 பா .7) ` தொழுதழு தாடிப்பாடும் அன்பலாற் பொருளுமில்லை ஐயன் ஐயாறனார்க்கே ` ( தி .4 ப .40 பா .6). ` அடிகளை நினைந்திட்டு அழுமலர்க் கண்ணிணையடியவர்க்கல்லால் அறிவரிது அவன் திருவடியிணை யிரண்டும் ` ( தி .7 ப .58 பா .10).

பண் :

பாடல் எண் : 5

பொடியணி மெய்யர் போலும் பொங்குவெண் ணூலர் போலும்
கடியதோர் விடையர் போலுங் காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும் வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை 1 ஆள்வர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

நீறணிந்த மேனியராய் , ஒளி வீசும் வெள்ளிய பூணூலை அணிந்தவராய் , விரைந்து செல்லும் காளை வாகனத்தவராய் , மன்மதனை வெகுண்டவராய் , சூட்டினால் வெடித்த தலை மாலையை உடையவராய் , விருப்பத்தோடு முன்நின்று துதிக்கும் அடியவர்களுடைய அடிமையை விரும்புபவராய் உள்ளார் ஆவடு துறைப் பெருமான் .

குறிப்புரை :

திருவெண்ணீற்றுப் பொடி பூசிய திருமேனியர் ; பவளம் போலும் செம் மேனியர் ; பால்போலும் வெண்ணீறு பூசியவர் ; வெண்மை பொங்கும் பூணு நூலணிந்த வேத முதல்வர் ; ( தி .4 ப .56 பா .7) விரைந்து செல்லும் ஒப்பற்ற விடையூர்பவர் ; கருவேளை எரியுண்ணச் செய்தவர் ; வெடித்தலைப்பட்ட தலைகளை மாலையாகப் பூண்டவர் ; பிரம கபாலமுமாம் . தலை மாலை தலைக்கணிந்தவர் சிவபிரான் . வேட்கை - சிவபக்தி , அடிமையை அளத்தல் :- அவரவர் அன்பிற்குத் தக அருளல் .

பண் :

பாடல் எண் : 6

வக்கர னுயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந் தானவர் தலைவர் போலும்
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

வக்கரன் உயிரைப் போக்குவதற்குத் திருமால் தன் கண்ணாகிய மலரை அர்ச்சித்து வழிபட அவருக்குச் சக்கரம் வழங்கியவராய் , தானம் புரிபவர்களுக்குத் தலைவராய் , அறிவற்றவர்களைத் துக்கம் தரும் பிறவித்துயரிலே வீழ்த்துபவராய் , அக்கு மணியை இடையிலே அணிபவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான் .

குறிப்புரை :

வக்கரன் :- ஓர் அசுரன் . அவனைக் கொல்ல வேண்டி , சக்கிராயுதம் பெற அர்ச்சித்த ஆயிர மலருள் , குறைந்த ஒன்றற்கீடாகக் கண் மலர் கொண்டு திருமால் போற்றி வழிபட்டமையால் அப் படையைக் கொடுத்தருளினார் திருவேகம்பனார் . தானவர் - தானம் புரிவோர் . சீவ போதம் அற்றுத் தானான சிவ போதத்தர் . ( தி .4 ப .37 பா .6; தி . 4 ப .38 பா .1) காண்க . அசுரர் தலைவர் எனல் சிறப்பினதன்று . வானவர் தலைவர் என்றது போலத் தானவர் தலைவர் என்றதாக கொள்வார் கொள்க . துக்கத்தையே அடையும் மகாமூடர்களை அத் துக்கம் விளைக்கும் பிறவித் துயரிலே விழுத்துவர் . ( மோட்ச சுகத்தையே நாடிப் பெற முயலும் மகா ஞானிகளை அச் சுகத்தை வளர்க்கும் வீட்டின்பத்திலே அழுத்துவர் ). அக்கு மணியை அரையிற் கட்டுவர் . ` அக்கு ஓட்டினைச் சேய் அரை கரங் கொண்டார்க்கு முலைச் சுவடு நல்குந் திருக்காமக் கோட்டியம்மை ` ( காஞ்சிப் புராணம் ).

பண் :

பாடல் எண் : 7

விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும் உலகமு மாவர் போலும்
அடைபவ ரிடர்க டீர்க்கும் ஆவடு துறையனாரே.

பொழிப்புரை :

காளை வடிவம் எழுதிய கொடியை உடையவராய் , வெள்ளிய பூணூலை அணிந்தவராய் , மழுப்படையை ஏந்தியவராய் , பாயும் இயல்புள்ள புலியின் தோலை உடுத்தவராய் , கீள் உடையை அணிபவராய் , உலகங்களை ஆள்பவராய் , தம்மை அடையும் அடியார்களின் துயரங்களைத் தீர்ப்பவராயுள்ளார் ஆவடுதுறைப் பெருமான் .

குறிப்புரை :

விடையுரு எழுதிய கொடி எடுத்தவர் . வெண்புரி நூல் பூண்டவர் . ` பொங்கு வெண் ணூலர் ` மழுப் படையேந்தியவர் ` மழுவமர் கையர் ` ( தி .4 ப .56 பா .5.) பாய் புலித் தோலுடுத்தவர் . ` கொல்புலித் தோலர் ` க்கு உரைத்தாங்கு உரைத்துக்கொள்க . ` சடையும் பிறையும் சாம்பற் பூச்சும் கீளுடையும் கொண்ட உருவம் `. ` எல்லா வுலகமும் ஆனாய்நீயே `. புகலடைந்தவரை இடர் தீர்த்தாட்கொள்ளும் அருளுருவினர் .( தி .4 ப .38 பா .3) காண்க .

பண் :

பாடல் எண் : 8

முந்திவா னோர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார் நடுவுடை யார்க ணிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார் திரிபுர மெரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

மாலையில் வானத்தில் தோன்றும் பிறையைச் சூடிய ஆவடுதுறைப் பெருமான் , முற்பட்டுத்தேவர்கள் வந்து முறைப்படி வணங்கித் துதிக்க , சிவபாதங்களைத் தம் நெஞ்சில் நடுதலாகிய செம்மையுள்ள நந்தி மாகாளர் என்பவர்களைத் தவிரத் தம்மை வழிபடாது வீணானவரான அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவராவர் .

குறிப்புரை :

வானவர்கள் முந்தி வந்து முறைமையுடன் வணங்கி யேத்தத் திரிபுரம் எரித்தார் . நந்திமாகாளர் என்பவர் நிற்ப எரித்தார் . சிந்தியாதே ஒழிந்தவர்களுடைய திரிபுரத்தை எரித்தார் . வானோர் ஏத்த , நந்திமாகாளர் நிற்ப எரிப்பர் என்க . சிந்தியாதே யொழிந்தது திரிபுரத்தசுரர்வினை . நடுவுடைமை - செம்மையுடைமை . ` செப்ப முடைமை ` ` திருநின்ற செம்மை ` சிவபாதங்களை நெஞ்சின் நடுவுடையவர் எனலும் பொருந்தும் . ` நாட்டினேன் நின்றன்பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே ` என ( தி .4 ப .23 பா .3) முன்னுரைத்தருளியதுணர்க . நந்தி , மகாகாளர் என்பார் சிவகணங்கள் . சிவ ( கிரியா ) பூசை புரிவார் அவரையும் வழிபடுவர் .

பண் :

பாடல் எண் : 9

பானம ரேன மாகிப் பாரிடந் திட்ட மாலும்
தேனமர்ந் தேறு மல்லித் திசைமுக முடைய கோவும்
தீனரைத் தியக் கறுத்த திருவுரு வுடையர் போலும்
ஆனரை யேற்றர் போலும் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

தம் பத்து அவதாரங்களுள் ஒன்றான பன்றி அவதாரத்திற் பூமியை அண்டவெளியிலிருந்து பெருவெள்ளத்தில் பெயர்த்தெடுத்த திருமாலும் , தேன் மிக்க தாமரையின் அகவிதழிலிருக்கும் பிரமனும் தாம் தீத்தம்பத்தின் அடியையோ முடியையோ காணமாட்டாத துயரத்தினராக அவர்கள் மயக்கத்தைப் போக்கிய அழகிய வடிவினை உடையராய் , வெண்ணிறக் காளை வாகனமுடை யவராய் உள்ளார் ஆவடுதுறைப் பெருமான் .

குறிப்புரை :

பான் - பத்துத் தோற்றம் ( தசாவதாரம் ). ஆகுபெயர் . அவற்றுள் ஒன்றாக அமர்ந்த ஏனம் . பான் அமர் ஏனம் வராகாவதாரம் , ஒருபான் , ஒன்பான் என்பவற்றுள் , ` பஃது ` பான் எனத் திரிந்தவாறறிக . பால் - பிரிவு , உயர்திணைப்பால் , அஃறிணைப்பால் , ஆண்பால் பெண்பால் முதலியன . வகை . நமர் - நம்மினத்தவர் . திருமாலும் நான்முகனும் நம்மைப்போலச் சகலர் , ` நம்மவர் அவரே மூவரென்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல் தேவரென்றே , இறுமாந்தென்ன பாவம் திரித ( ர் ) வரே ( தி .8 திருவாசகம் ) வகையால் நம்மவர் எனலுமாம் , பானமர் என்றதற்கு வேறு பொருளுமுளவேற் கொள்க . பால்நமர் - வகையால் நமருள் , ஏனம் - பன்றி , பார் - நிலம் , இடந்திட்ட - போர்த்திட்ட , தேன் - வண்டு , அமர்ந்து - விரும்பி , அல்லி - அகவிதழ்களைக் குறித்துத் தாமரைக்கு ஆகிய பெயர் . நாற்றிசைக் கொன்றாய முகத்தன் . கோன்மை அவனது தத்துவ புவனத்தெல்லை யளவுடையது . தீனர் - முழுமுதல்வனைக் காணுஞ் செல்வத்தை அடையாத வறியர் ; துயராளர் . காணமாட்டாத் துயரத்தினர் . தியக்கு - கலக்கம் . ஆன் + நரை + ஏற்றனர் - ஆன் வெள்ளேறூர்பவர் . ` நரை வெள்ளேறு `, ஏற்றர் - ஏறுடையவர் .

பண் :

பாடல் எண் : 10

பார்த்தனுக் கருள்வர் போலும் படர்சடை முடியர் போலும்
ஏத்துவா ரிடர்கள் தீர வின்பங்கள் கொடுப்பர் போலும்
கூத்தராய்ப் பாடி யாடிக் கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவா யலறு விப்பார் ஆவடு துறைய னாரே.

பொழிப்புரை :

ஆவடுதுறைப் பெருமானார் அருச்சுனனுக்கு அருள் புரிந்தவராய் , விரிந்து பரவிய சடைமுடியை உடையவராய் , தம்மை வழிபடுபவர்களுடைய துயரங்கள் தீர அவர்களுக்கு இன்பம் நல்குபவராய் , கூத்தாடுபவராய்ப் பாடியும் ஆடியும் விளங்குபவராய் உள்ளார் . அவர் , கொடிய வலிமையை உடைய இராவணனை , அவன் ஆரவாரித்துக் கொண்டு கயிலைமலையைப் பெயர்க்க வந்த அளவில் , அவனுடைய வாய்கள் துயரம் தாங்காமல் அலறுமாறு செய்தவராவர் .

குறிப்புரை :

பார்த்தன் - அருச்சுனன் , படர்ந்த சடைமுடியுடையவர் , ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் :- தி .4 ப .22 பா .8; ப .23 பா .6 ப .24 பா .4,9. வேண்டுவார் வேண்டுவதே ஈதலில் அவரவர் இடர் தீர்த்தலும் அடங்கும் , கூத்தரானார் . பாடினார் , ஆடினார் , கொடியவலியுடைய இராவணனை அலறச் செய்தார் . ஆர்த்தல் - ஒலித்தல் , ஆரவாரஞ் செய்தல் , ஆர்த்தவாய் பத்தும் அலறுவித்தார் . அலறல் - அழுதல் .
சிற்பி