திருப்பருப்பதம்


பண் :

பாடல் எண் : 1

கன்றினார் புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னா னீர்மையு நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமு மூர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

தம்மைவெகுண்ட பகைவர்களின் மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு கோபித்து , தாமும் பார்வதியுமாக இணைந்து ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிந்து நின்ற தம் வேடப் பாங்கால் பிச்சையிட வந்த மகளிரின் இயல்பையும் நிறை என்ற பண்பையும் கவர்ந்தவராய்ப் பின்னும் அருச்சுனனுக்கு உதவ வேண்டிப் பன்றிப் பின் வேடராய்ச் சென்றவருமாவார் . அப்பெருமான் திருப்பருப் பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் .

குறிப்புரை :

கன்றினார் - சினந்தபகைவர் . கனலும் எரி , சீறி நின்றதோர் உருவம் . நீர்மை - குளிர்ந்த இயல்பு , நீர்மை ஒளியுமாம் . நிறை - அருளால் நிறுத்தும் ஆற்றல் ,` நிறை - ஐம்பொறிகளையும் அடக்குதல் . ( தி .8 திருக்கோவை . 31) என்பது ஈண்டுப் பொருந்தாது . ஆங்கு உமையும் தாமும் ஒன்றி , ஊர் ( தொறும் ) பலி தேர்ந்து . அருச்சுனன் பொருட்டுப் பன்றிப் பின்வேடரான வரலாறு முன்னும் பின்னும் உண்மை அறிக . பன்றியது பின் ` பன்றிப் பின் `:- ` இகரவீற்றுப் பெயர் திருபிடனுடைத்தே ` ( தொல் . தொகைமரபு 12) ` இகரவிறுதிப் பெயர் நிலை முன்னர் வேற்றுமையாயின் வல்லெழுத்துமிகுமே ` ( தொல் . உயிர் மயங்கு , 33) உருபியலில் இகரவீறு கூறப்பட்டிலது . ( தொல் . இயல் 39.40.42.45.46 உருபிற்குச் சாரியை கூறுவன ) இப் பருப்பதம் அருச்சுனம் ( தலைமருது ) ஆதலின் , அருச்சுனனை நினைந்து , ஆண்டவனைப் பாடியதாயிற்று .

பண் :

பாடல் எண் : 2

கற்றமா மறைகள் பாடிக் கடைதொறும் பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையி னீரை யேற்றமுக் கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

முனிவர்களுக்குக் கற்பித்தல் வகையால் தாம் கற்ற வேதங்களைப் பாடி , வீட்டுவாயில்தோறும் பிச்சை எடுப்பவராய் , மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி , தேவர்கள் வணங்கி வாழ்த்துமாறு கங்கை முழுவதையும் தம் சடையில் ஏற்ற முக்கட்பெருமான் தம்மைப் பற்றிய அடியவர்கள்மாட்டு அன்பு செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் . ( காட்டிக் காண்டல் என்ற நயம்பற்றிக் கற்பித்துக் கற்ற எனப்பட்டது .)

குறிப்புரை :

கற்றமாமறைகள் :- முதல்வன் ` கல்லாதன எல்லாம் கற்பித்தான் ` ` கலைஞானங் கல்லாமே ` கற்பித்தான் ஆதலின் அவன் ஒன்றும் கற்றலின்று எனினும் , தான் கற்பிக்கத் தன்னைத் தம்முட் கொண்டு உயிர்கள் கற்குந் தொழிலைத் தனதாக்கிக் கோடலால் கற்றானுமாவன் . ` கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னை ` ` அடைவார் தம் பாவம் போக்கக் கற்றவன் ` ஆதலால் தனக்குங் கற்றற்றொழில் உண்டெனலுமாம் . கடை - வாயிற் கடை . வற்றல் தலை . ஒர் வற்றற்றலை , ` வற்றலோடு கலனாப்பலி தேர்ந்து எனதுள்ளம் கவர்கள்வன் `; ஓர் சடையிற் கங்கை நீரை முற்ற ஏற்ற முக்கண்ணர் . வணங்கி வாழ்த்த ஏற்ற முக்கண்ணர் . வாழ்த்த முற்ற ஏற்ற கண்ணர் . பற்றினார் - பற்று விடற்குப் பற்றற்றான் பற்றினைப் பற்றியவர் .

பண் :

பாடல் எண் : 3

கரவிலா மனத்த ராகிக் கைதொழு வார்கட் கென்றும்
இரவுநின் றெரிய தாடி யின்னருள் செய்யு மெந்தை
மருவலார் புரங்கண் மூன்று மாட்டிய வகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

இரவிலே தீயில் நின்று ஆடுபவராய் , பகைவருடைய மும்மதில்களையும் அழித்த செயலினராய் , வஞ்சனை யில்லாத மனத்தவராகிக் கையால் தொழும் அடியவர்களுக்கு என்றும் இனிய அருள்கள் செய்யும் எம் தந்தையாராகிய பெருமான் தம்மை முன்நின்று துதிப்பவர்களுக்குப் பல அருள்செய்து திருப்பருப்பதத்தைத் தம் உறைவிடமாகக் கொண்டார் .

குறிப்புரை :

கரவு - கரத்தல் ; குறை காட்டல் ; உள்ளதை மறைத்தல் , கரத்தல் ஒருவற்கு வேண்டுவதொன்று அன்மையின் நோய் ( இடும்பை ) ஆகும் என்பது ( திருக்குறள் 1056 உரை ) உணர்க . ` கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை ` ( தி .4 ப .7 பா .1). ` கைதொழுவார்க்கு என்றும் இரவு நின்று எரியது ஆடி இன்னருள் செய்யும் எந்தை ` என்றதில் உள்ள உண்மையைக் கூர்ந்துணர்வர்க்கு ` இருள் அடராது உள் உயிர்க் குயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது ` ( கொடிக்கவி ) என்னும் சைவ சித்தாந்தச் செம்பொருட்டுணிவுகளுள் ஒன்று தெளிவுறும் . மருவலார் - பகைவர் . மாட்டிய - எரிகொளுத்திய ; மாளச் செய்த , ` மாள் ` தன்வினை முதனிலை , ` மாட்டு ` பிறவினை முதனிலை , ` கொள் ` ` கொட்டு ; ` விள் ` விட்டு ` பூண் ` ` பூட்டு `. பரவுவார் - வாழ்த்துவார் .

பண் :

பாடல் எண் : 4

கட்டிட்ட தலைகை யேந்திக் கனலெரி யாடிச் சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிக் சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு வேறிருந் தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

பண்டு உடலோடு பொருந்தியிருந்து பின் நீங்கிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்தி , சாம்பலைப்பூசி , சுடுகாட்டில் தங்குபவராகி , உலகப்பற்றினை நீக்கிய அடியவர்களுக்குச் சிறப்பாக அருள்கள் செய்து பட்டுடையை அணிந்த பெருமான் பருப்பதம் நோக்கினாரே .

குறிப்புரை :

கட்டிட்ட - கட்டிய . எரியில் ஆடி , சுட்டிட்ட - சுட்ட . சுடுகாடு எனினும் காட்டைச் சுடுவதில்லை , பிணத்தையே சுடுப . ` சுடுபிணக்காடு ` என்றலே சிறந்தது . அக்கருத்தில் வழங்குவது ` சுடுகாடு `. காட்டிலாடுவாரைக் ` காடர் ` என்றார் . விட்டிட்ட - விட்ட ; நீங்கிய , வேட்கை விட்டவர்க்குத் தனிச் சிறப்பாக அருள்கள் செய்து . பட்டுஇட்ட :- இட்டபட்டுமாம் . ` ஊனுயிர்வேறு செய்தான் ` என்புழிப் போல , ஈண்டும் (` வேறு ` என்பதற்குப் ) பொருள்கொள்க .

பண் :

பாடல் எண் : 5

கையராய்க் கபால மேந்திக் காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல் விளங்கு வெண் ணீறுபூசி
உய்வரா யுள்கு வார்கட் குவகைகள் பலவுஞ் செய்து
பையரா வரையி லார்த்துப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

மண்டையோட்டை ஏந்திய கையினராய் , மன்மதனை நெற்றிக் கண்ணால் வெகுண்டு சாம்பலாக்கி , வடிவை எடுத்துக் கொண்டவராய் , உடம்பிலே விளங்கும் வெண்ணீற்றைப்பூசி , தாம் கடைத்தேறுபவர்களாய்ப் பெருமானாகிய தம்மைத் தியானிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்து , படம்எடுக்கும் பாம்பினை இடையில் இறுகக்கட்டிப் பெருமான் பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

கபாலத்தையேந்திய கையராகிக் காமவேளைத் தீக் கண்ணால் தீய்த்து , மெய்யராகவே திருமேனியராதலை நிறுவி , மேனியின்மேல் ( தி .4 ப .58 பா .10) விளங்குகின்ற திருவெண்ணீற்றைப் பூசி , பிறவிப்பகுதியில் விழுந்தழுந்தாது பேரின்பக்கரையேறியுய்யும் பேற்றினராய் , இடைவிடாது திருவடி நினைவார்க்கு இன்பங்கள் பலவும் செய்து . படத்தையுடைய பாம்பினை இடையிற் கட்டித் , திருப்பருப்பதத்தை நோக்கி வீற்றிருந்தருள்கின்றார் . பை - படம் , மெய்யுணர்வுடையார்க்கே காமத்தைக் கடிதலொல்லும் .

பண் :

பாடல் எண் : 6

வேடராய் வெய்ய ராகி வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா முழிதர்வ ருமையுந் தாமும்
காடராய்க் கனல்கை யேந்திக் கடியதோர் விடைமேல் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

பெருமான் , அருச்சுனன் பொருட்டு வேடன் வடிவம் எடுத்தவராய் , கொடியவராகி யானையைக் கொன்று அதன் தோலைப்போர்த்து , மண்டையோட்டை ஏந்தி உலகமெல்லாம் சுற்றித் திரிபவராய் , உமையம்மையும் தாமுமாய்ச் சுடுகாட்டில் உறைந்து , கையில் தீயை ஏந்தி , விரைந்து செல்லும் காளையை ஏறி ஊர்ந்து பாடிக்கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ திருப்பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

வேடர் - பலபலவேடமாகும் பரன் , அருச்சுனன் முதலோர்க்காக வேடனானவர் . வெய்யர் - கடியர் . வேழம் - யானை , உரிவை - தோல் , ( தி .4 ப .58 பா .7) ஓடர் - ஓட்டம் உடையவர் ; உலகமெல்லாம் ஓடராய் உழிதர்வர் , ( திரிதருவர் ), ` இழிதருகால் ` ` திரித ( ர் ) வரே ` ( தி .8 திருவாசகம் ) உமையம்மையாரும் தாமும் காட்டினைச் சார்ந்தவராய் வேடராய் உழிதர்வர் , கனல் ( தீ ) கையில் ஏந்திக் கடியதொரு விடையை ஊர்ந்து பூதகணத்தர் தமது பக்கத்தவராய்ச் சூழத் திருப்பருப்பதத்தை நோக்கினார் .

பண் :

பாடல் எண் : 7

மேகம்போன் மிடற்ற ராகி வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்ப மேவி னார்தா மிமையவர் பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக் கடியதோர் விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

கார்மேகம் போன்ற நீலகண்டராய் , யானையின் தோலைப் போர்த்து , ஏகம்பத்தில் விரும்பி உறையும் பெருமானாய் , தேவர்கள் முன்நின்று துதித்துப் புகழ , அவர்களைக் காப்பாற்றும் ஏகாம்பரநாதர் காலில் வீரக்கழலைப் பூண்டு பார்வதி பாகராய்க் காளையை ஏறி ஊர்ந்து பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

மேகம்போல் மிடற்றர் - நீலமுகில் போலும் ( நஞ்சுண்ட தால் ஆன ) திருநீலகண்டர் , ` கொண்டலும் நீலமும் புரை திருமிடறர் கொடுமுடியுறைபவர் ` ( தி .1 ப .79 பா .2) ` மிடற்றர் ` (564) ` வேழத்தி னுரிவை போர்த்து `. ( தி .4 ப .58 பா .6.) ஏகம்பம் - திருவேகம்பம் . ஏகாம்ரம் ( ஒருமா ) என்பதன் திரிபு . மேவினார் - விரும்பியுறைபவர் . இமையவர் பரவியேத்தக் காக்கின்ற கம்பர் , காகம்பர் :- வினைத்தொகை . கம்பம் - ` தாணு ` கேநோபநிடதம் பார்க்க . ` காவடி ` ` காவயிறு ` என்ற ( வினைத்தொகை ) வழக்கும் இது வினைத்தொகையாதலை நாட்டும் . கழல் + த் + அர் = கழறர் ; கழலையுடையவர் ; காலிற் கழலுடையவர் , கழல் அணிந்து விடையேறுவார் . கம்பர் - கம்பேந்தியவருமாம் .

பண் :

பாடல் எண் : 8

பேரிடர்ப் பிணிக டீர்க்கும் பிஞ்ஞக னெந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

பெரிய துயர்களைத் தரும் பிணிகளைப் போக்குபவரும் , தலைக்கோலத்தை அணிந்தவரும் எமக்குத் தந்தையாருமாகிய பெருமான் , நீலகண்டராய் , ஒரு கையில் மண்டையோட்டை ஏந்திச் சிறப்புப்பொருந்திய சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை ஏறி ஊர்ந்த செல்வராய்ப் பெரிய பூதங்கள் தாளம்போடப் பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

பேரிடர்ப் பிணிகள் - பெரிய இடர் விளைப்பனவாய்ப் பிணித்துவருத்துவனவற்றை . பிஞ்ஞகன் - தலைக்கோலத்தன் . காருடைக் கண்டர் :- மேகம்போல் மிடற்றார் ( தி .4 ப .58 பா .7.) ஓர் கையில் கபாலம் ஏந்தி , சீருடைய ஏறு , செங்கண் ஏறு , வெள்ளேறு ஏறு ஏறிய செல்வர் . ` ஏறுகந்தேறினானே `. ( தி .4 ப .51 பா .3) பாரிடம் - பூதம் . பாணி - பாட்டு , பூதங்கள் பாட ஆடுதல் :- ` பாடல் பயின்றபல்பூதம் பல்லாயிரங்கொள் கருவிநாடற்கரியதொர் கூத்து ` ( தி .4 ப .2 பா .8).

பண் :

பாடல் எண் : 9

அங்கண்மா லுடைய ராய வைவரா லாட்டு ணாதே
உங்கண்மால் தீர வேண்டி லுள்ளத்தா லுள்கி யேத்தும்
செங்கண்மால் பரவி யேத்திச் சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

சிவந்த கண்களை உடைய திருமால் முன்நின்று துதித்துப் புகழ்ந்து சிவனாதல் உணருமாறு நிலைபெற்ற செல்வத்தை உடைய பெருமானார் பசிய கண்களை உடைய வெண்ணிற இடபத்தை இவர்ந்து பருப்பதத்தை அடைந்து அங்கு உறைகிறார் . உடம்பாகிய அவ்விடத்திலே மயக்கத்தை உடைய ஐம்பொ களால் அவை விரும்பியபடி செயற்படுதலொழிந்து உங்களுடைய மயக்கம் நீங்கு தலை விரும்பினால் அப்பெருமானாரை மனத்தால் தியானித்துத் துதியுங்கள் .

குறிப்புரை :

பின்னீரடியை முன்னும் முன்னிரடியைப் பின்னும் கொண்டு பொருளறிதற்குரியது இது . செங்கண்மால் பரவியேத்திச் சிவன் என நின்ற செல்வர் :- ஏத்த நின்ற செல்வர் எனச் செயவெ னெச்சமாகத் திரித்துரைத்துக் கொள்க . சிவன் என நிற்றல் - குறைவிலா மங்கல குணத்தன் ; தூய தன்மையன் , முற்றுணர்வினனென விளங்குதல் . பைங்கண் வெள்ளேறது ஏறி ( ப் பருப்பதம் ) நோக்கினார் :- ` செங்கண் வெள்ளேறிய செல்வர் ` ( தி .4 ப .58 பா .8). ` ஏத்திச் சிவனே என ` எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

அடல்விடை யூர்தி யாகி யரக்கன்றோ ளடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட கறையணி கண்ட னார்தாம்
சுடர்விடு மேனி தன்மேற் சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப் பருப்பத நோக்கி னாரே.

பொழிப்புரை :

வலிய காளையை வாகனமாகக் கொண்டு , இராவணன் தோள்கள் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றி , கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலகண்டர் ஒளி வீசும் தம் திரு மேனியின் மீது திருநீற்றை அணிந்து , பரவிய சடையிலே பிறையைச் சூடிப் பருப்பதம் நோக்கினார் .

குறிப்புரை :

அடல்விடை - கொல்லேறு . ஊர்தி - ஊரப்படுவது . விடையூர்தியாதல் - இடபவாகனரூடராதல் . கடல் - பாற்கடல் . நஞ்சம் உண்டகறை - நஞ்சுண்டதால் ஆகிய கறுப்பு . அணி :- ` கறை மிடறணியலும் அணிந்தன்று , மேனிதன்மேல் ... பூசி `:- ( தி .4 ப .58 பா .5.) சுண்ண வெண்ணீறு :- ` சுண்ண வெண்சந்தனச்சாந்து ` ` சுண்ணநீறணி மார்பு ` ( தி .2 ப .111 பா .4), படர்சடை - படர்ந்த சடையில் . மதியம் - பிறை .
சிற்பி