திருப்பெருவேளூர்


பண் :

பாடல் எண் : 1

மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக் கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்கு வேனே.

பொழிப்புரை :

வேதம் ஓதும் நாவினராய் , தம்மை மறவாதார் மனத்தில் உள்ளவராய் , நீலகண்டராய் , ஒளிவீசும் நெருப்பில் கூத்து நிகழ்த்துபவராய் , பிறையை அணிந்த சடையினராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை நறுமண மலர்களைத் தூவி நாள்தோறும் வணங்குவேன் நான் .

குறிப்புரை :

மறை - வேதத்தை , அணிநா - அணியாகப் பூண்ட நா . அழகிய நா , ` அருங்கலம் அருமறை ஆறங்கம் ` ( தி .4 ப .11 பா .5) வேதத்தைப் படைத்ததாதலின் மறையை அணிந்த நாவாயிற்று . மறப்பு - மறத்தல் . ` பிறப்பில் பெருமானைப் பின் தாழ்சடையானை மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே ` ( காழி வேந்தர் ) ` மறவாதே தன் திறமே வாழ்த்துந் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னிநின்ற திறலான் ` ( தி .6 ப .68 பா .8). கறை - நஞ்சின் கறுப்பு . பேணினான் - விரும்பிக் கோயில் கொண்டவன் . நறை - தேன் , மணம் , நாள்தோறும் மலர்கள் தூவி வணங்குதலைச் சைவர் மறவாராயின் அவர் மனத்துளான் ஏழண்டத் தப்பாலான் .

பண் :

பாடல் எண் : 2

நாதனா யுலக மெல்லா நம்பிரா னெனவு நின்ற
பாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி யுரைக்குமா றுரைக்குற் றேனே.

பொழிப்புரை :

தலைவனாய் , உலகிலுள்ளார் எல்லாம் நம்முடைய பெருமான் என்று கூறுமாறு நிலைபெற்ற திருவடிகளை உடைய மேம்பட்ட யோகியாய் , பலவகையாலும் ஒன்றோடொன்று ஒவ்வாப் பலவேடமும் தரித்துக் கொண்டு தோன்றுபவனாய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைத் தோத்திரிக்கும் நாவினை உடையேனாகிச் சான்றோர் உரைக்கும் வகையிலே உரைத்தலை உடையேன் நான் .

குறிப்புரை :

நாதனாய் - தலைவனாய் , உடையவனாய் , உலகம் எல்லாம் நம்பிரான் என்று போற்றவும் நின்ற பாதன் , நாதனாய் நின்ற பாதன் , பரமயோகி - யோகியர் தலைவன் . பலபல திறத்தினான் - ` பலபல வேடமாகும் பரன் ` ` அனைத்து வேடமாம் அம்பலக்கூத்தன் ` ` நவந்தருபேதம் ஏக நாதனே நடிப்பன் ` ( சித்தியார் ) பேதனாய்த் தோன்றினான் :- ` ஒன்றோடொன்றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு நின்றல் ` ( சித்தியார் ) ஓத நாவுடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்க உற்றேன் :- திருநாவுக்கரசர் என்னுந் திருப்பெயரின் காரணம் புலப்படுதல் உணர்க . ` ஓத நாவுடையன் `:- நாவுடைமைக்குத் தக்க செயல் சிவ கீர்த்தனம் ஓதுதலே என்க `. ` நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே ` ` நமச்சிவாயவே நா நவின்றேத்தும் ` ` நாக்கொண்டு பரவும் அடியார் வினை போக்க வல்ல புரிசடைப் புண்ணியன் ` ` கூத்தா நின் குரையார் கழலே அலது ஏத்தா நா எனக்கு `.

பண் :

பாடல் எண் : 3

குறவிதோண் மணந்த செல்வக் குமரவே டாதை யென்றும்
நறவிள நறுமென் கூந்த னங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப் பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி யுணருமா றுணர்த்து வேனே.

பொழிப்புரை :

குறத்தியாகிய வள்ளியின் தோள்களை மணந்த செல்வனாகிய குமரவேளுடைய தந்தையாராய் , என்றும் மணமுள்ள கூவிளம் பூவை அணிந்த நறிய மெல்லிய கூந்தலை உடைய இளைய நங்கையாகிய பார்வதி பாகராய்ப் பிறவிப் பிணியைப் போக்குபவராய்ப் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானை அவரிடத்து அடியேன் கொண்ட உறவினால் உணர்ந்த வண்ணம் உணர்த்துவேன் நான் .

குறிப்புரை :

குறவி - குறவர் மகளாராய்த் தோன்றிய வள்ளி நாய்ச்சியார் . தோளைப்புணர்ந்த செல்வக் குமரவேள் :- சிவ பிரானுடைய புதல்வருள் , முருகப்பிரானே தாய் தந்தை நடுவில் உள்ளவர் . சோமாஸ்கந்த ரூபத்திற் காண்க , ` கடவுட் பிராட்டி யுடங்கிருப்பக் கதிர் வேற்காளை நள்ளிருப்ப , நடலைப் பிறவிமருந்தாகி வைகும் நாதன்றிருவுருவம் ` ( காஞ்சிப் . சிவபுண்ணிய . 7) தாதை - ` தாதா ` என்னும் வடசொற்றிரிபு ; ஆவீறு ஐயீறாதல் விதி . சபா - சபை . சிவா - சிவை . நறவிளம் - மணமுடைய கூவிளம் . கூவிளம் என்பதன் முதற்குறை . விள - விளா எனின் , விளாவை அணியும் வழக்குளதாதல் வேண்டும் . நறவு இளநங்கை எனக்கூட்டி அனிச்சம்போலும் மென்மையையுடைய இளம்பெண் , என்றலுமாம் . நறுமை (- நன்மை ) யும் மென்மையும் கூந்தலுக்கு , நறவும் இளமையும் கூந்தலாட்கு , பிறவியைப் போக்குவான் , உறவினால் - இடைவிடா துற்றுற்று நோக்கியடைதலால் , உணரும் ஆறு உணர்த்துவேன் :- சிவபிரானைத் தாம் உணரும் வண்ணம் தம்மை உணரச் செய்வேன் , ` தொண்டனேன் புணருமாபுணர் ` என வேண்டிப் புணர்த்துக்கொள்ளல் போன்று , உணருமாறுணர் என்று வேண்டி உணர்த்திக் கொள்ளல் . இது ( யான் ) உணருமாறு உணர்த்துவேன் , முற்றவுணர்ந்தவர்களைப்போல உணர்ந்து என்னால் உணர்த்தல் இயலாது என்றதாம் .

பண் :

பாடல் எண் : 4

மைஞ்ஞவில் கண்டன் றன்னை வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவின் மானி னோடுங் கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை யந்தண் பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா வறிவி லேனே.

பொழிப்புரை :

நஞ்சுண்ட கருமை படர்ந்த நீல கண்டனாய் , வலக்கையில் ஒரு மழுவை ஏந்தி , இடக்கையிற் பொருந்திய மானோடு ஒளி வீசும் தீயிடை ஆடுபவனாய் , தலைக்கோலம் அணிந்தவனாய் , அழகிய பெருவேளூரில் விரும்பி உறையும் பெருமானைப் பொய்ம்மை நீங்க நினைக்க இயலேனாய் நினைதற்காம் நல்வினையும் அறிவும் இல்லாதவன் நான் .

குறிப்புரை :

மை + நவில் = மைஞ்ஞவில் , மை - நஞ்சுண்ட கறுப்பு , நவில் - பயின்ற , கண்டன் ( திருநீலகண்டர் ) வலங்கையின் (- வலக்கையில் ) மழுப்படையொன்றுதாங்கி , கை - கையில் . நவில் - பழகிய . மான் - மான்கன்று , பிஞ்ஞகனை ; அழகும் குளிர்ச்சியும் பொருந்திய பெரிய வேளூர் பேணினானைப் பொய் நெக மெய்நிக நினைந்து வழிபட மாட்டாதேன் ; பொறியிலேன் ; அறிவிலேன் , ` பொறியிலா வழுக்கை ( இலச்சினையில்லாத உடலை ) யோம்பிப் பொய்யினை மெய்யென்றெண்ணி நெறியிலா நெறிகள் சென்றேன் ` ( தி .4 ப .54 பா .4.) பொறியிலா (- ஒளியில்லாத ) என்னும் எதிர்மறை ` அறிவின்மை ` என்னும் பெயர் கொண்டது . பொறி - இலச்சினை , ஒளி .

பண் :

பாடல் எண் : 5

ஓடைசேர் நெற்றி யானை யுரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப் பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங் குறுகுமா றறிகி லேனே.

பொழிப்புரை :

நெற்றிப்பட்டம் அணிந்த யானைத் தோலைப் போர்த்தவராய் , அடியார்களுக்கு வீடுபேறு வழங்குபவராய் , நான்கு வேத வடிவினராய் , பேடையொடு கூடிய புறாக்கள் நீங்காது உறையும் பெருவேளூரை விரும்பி உறையும் பெருமானைக் கூடவல்ல , உலகியலுக்கு மாறுபட்ட வழியாகிய இறை நெறியிலே சென்று அவனை நெருங்கும் முறையை அறியேன் .

குறிப்புரை :

ஓடை - நெற்றிப்பட்டம் . உரிவை - தோல் . மூடினான் - போர்த்தான் . வீடதே - முத்தியையே . நான்கு வேதம் ஆயினான் . பேடை - பெண்புறா . பேணிய கடவுளைக் கூடவல்லமாற்றம் குறுகும் வண்ணம் நான் அறிகிலேன் . வீடதே :- அது பகுதிப் பொருள் விகுதி . யானையுரிவையை மூடினானும் வீடேகாட்டுவானும் நால் வேதம் ஆயினானும் பெருவேளூர் பேணினானும் ஆகிய கடவுளைக் கூடுமாறும் அதற்கு வல்லதாய் ஒரு மாற்றம் குறுகுமாறும் நான் அறிகிலேன் .

பண் :

பாடல் எண் : 6

கச்சைசேர் நாகத் தானைக் கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக் கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப் பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானு மிறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.

பொழிப்புரை :

நாகத்தைக் கச்சாக அணிந்து , கடல் விடத்தைக் கழுத்தில் இருத்தி , காஞ்சியில் ஏகம்பத்தில் உறைபவராய் , ஒளிவீசும் தீயில் கூத்து நிகழ்த்துபவராய் , பிச்சை எடுப்பதற்கு அலைபவராய் , பெருவேளூரை விரும்பித் தங்கும் பெருமானை என் இச்சை நிறைவுற வழிபடும் வழியாலே வழிபடுவேன் நான் .

குறிப்புரை :

கச்சை - இடையிற்கட்டும் பட்டை , நாகக்கச்சை , ` அரவக்கச்சு ` ` கச்சைசேர் அரவர் ` ( தி .4 ப .66 பா .1) கடல் - பாற்கடல் . விடம் - நஞ்சு . கண்டத்தான் - திருநீலகண்டர் . திருக்கச்சியேகாம்பர நாதர் . உழல்வினான் - திரிதலையுடையவர் . உழல்வு - சுழல்வு . திரிவு . இச்சை - பக்தி . ` இச்சை சேர்ந்தமர - துரிய நிலையும் துரியாதீதநிலையும் ( சிவஞானபோத மாபாடியம் . சூ . 11) உணர்ந்தார்க்கு . ஏற்ற பொருளும் கொள்ளலாம் . ஆண்டுச் சிவஞானமாமுனிவர் விளக்கி இருக்கும் ` முத்தி நிலை ` யை உணர்க . ` இறைஞ்சுமாறு இறைஞ்சுவேன் ` என்பதும் ` உணருமாறு உணர்த்துவேன் ` என்பதும் ஒரு நிகரனவல்ல .

பண் :

பாடல் எண் : 7

சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப் பெருவேளூர் பேணி னானை
மெத்தநே யவனை நாளும் விரும்புமா றறிகி லேனே.

பொழிப்புரை :

ஞானிகளாய் வந்து தம் திருவடிகளை வணங்குபவர்களுக்கு முத்தியை வழங்குபவராய் , ஞானமூர்த்தியாகிய முதல்வராய் , எல்லா உலகமும் தாமேயாகிய பித்தராய் , மற்றவர் யாவரும் தம்மைத் துதிக்குமாறு பெருவேளூரை விரும்பிய மிக்க அன்புடைய பெருமானை நாளும் விரும்பும் திறத்தை அறியாதேன் நான் .

குறிப்புரை :

சித்தர் - ஞானிகள் ; சித்திகளில் வல்லவர்கள் . தன்னை வணங்குவார்கள் . தந் திருவடியை வணங்குவார்கள் . வணங்குவார்களுக்கு முத்தியைத் தந்தவனை . ஞானமூர்த்தி . முழுதும் ஆயபித்தன் - முழுப்பித்துள்ளவன் . பிறரும் - வணங்கப் பழக்கமில்லாதவரும் . அண்டம் - ( பல்கோடி ) அண்டங்கள் . மெத்த - மிகுத்த . மரூஉ . நே - அன்பு . நேயவன் - அன்பினன் . நே + அம் = நேயம் + அன் = நேயவன் . விரும்பும் ஆறு - திருவுள்ளம் உவக்கும் வண்ணத்தை . விரும்பும் ஆற்றில் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 8

முண்டமே தாங்கி னானை முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே யாயி னானைப் பெருவேளூர் பேணி னானை
அண்டமா மாதி யானை யறியுமா றறிகி லேனே.

பொழிப்புரை :

தலைமாலையைப் பூண்டவராய் , பூரண ஞான முடையவராய் , வண்டுகள் உலவும் கொன்றை மாலையையும் பிறையையும் முடிமாலையாக உடையவராய் , என் உடலாகவும் உள்ளவராய்ப் பெருவேளூர்ப் பெருமானாய் எல்லா உலகங்களுமான முதற் கடவுளாய் உள்ள பெருமானை அறியும் வழியால் அறிய இயலாதேனாய் உள்ளேன் நான் .

குறிப்புரை :

முண்டம் - தலை , தலைமாலை பூண்டவன் , அயன் தலையைக் கையிற் பிச்சைப் பாத்திரமாகத் தாங்கியவன் . முற்றிய ஞானத்தான் - பரிபூரணஞான சொரூபன் , வண்டு உலாம் கொன்றை மாலை :- சாதியடை , ` வண்டு உண்டிடுங்கொன்றையணி அண்டர் நாயககயிலையுறைகின்ற பரதெய்வமே ` ( தக்ஷிணாமூர்த்தி திரு வருட்பா 10) என்று பிற்காலத்தும் அவ்வாறு அடை கொடுத்தல் அறிக . மதிக்கண்ணியான் - மாதர்ப் பிறைக்கண்ணியான் ` வளர்மதி - பிறை . பிண்டமே ஆயினான் - ` என் ஊனே ஊனின் உள்ளமே ` ` ஊனாகி உயிராகி ` ` பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை ` ` பிண்டத்தைக் காக்கும் பிரானார் ` ` பிண்டத்தைக் கழிக்கவேண்டிற் பிரானையே பிதற்றுமின்கள் ` என்று பிறாண்டுரைத்த ஆசிரியர் ஈண்டு அவனையே ` பிண்டமாயினான் ` என்றதன் உண்மையை உணர்க . ` வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே ` ( தி .9 திருவிசைப்பா . 117) என்னும் கருத்துப்பற்றியதுமாம் . ` எல்லா வுலகமும் ஆனாய் நீயே ` ஆதலின் , ` அண்டபிண்டம் அவை சமம் ` என்னும் உண்மைக்குத் தக்கவாறு பிண்டமாகிய உலகமும் நீயே ஆனாய் என்ற கருத்தும் உணர்க .

பண் :

பாடல் எண் : 9

விரிவிலா வறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனு மெம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே.

பொழிப்புரை :

விரிவடையாத சிற்றறிவுடையவர்கள் புதியதொரு சமயத்தை உண்டாக்கி வயிற்றெரிச்சலால் அச்சமயத்துக்குப் பிரசாரம் செய்தாராகிலும் அதுவும் பெருமானுக்கு ஏற்புடைய செயலேயாகும் . பெரியோர்கள் அன்போடு துதிக்கும் பெருவேளூர்ப் பெருமானைப் பொருந்தி அடியேன் வாழ்த்திப் பிறவிப் பிணியிலிருந்து விடுபடும் வழியை விருப்புற்று நினைக்கின்றேன் நான் .

குறிப்புரை :

விரிவிலா அறிவினார்கள் - மெய்ப்பொருளிருக்கும் எல்லையளவும் ( தத்துவ ) ஆராய்ச்சி புரியத் தக்க விரிவுறாத சிற்றறிவுவுடைய புறச்சமயத்தவர்கள் , வேறு - ` சைவ சமயமே சமயம் ` என்னும் உண்மைச் சமயத்திற்கு வேறாக . ஒரு சமயம் செய்து - உலகாயதம் முதலியவற்றுள் ஒன்றனைப்போலப் புதியதொரு சமயம்செய்து , எரிவினால் - வயிற்றெரிச்சலால் ; நெருப்பையொத்த சினத்தால் . செய்து சொன்னாரேனும் ஏற்றதாகும் எம் பிரானுக்கு . பரிவு - அன்பு , பெரியோர் :- ` கற்றல் கேட்டலுடையார் பெரியார் ` மருவி - கூடி , உய்யும் வகையது நினைக்கின்றேன் - ` உய்வினை நாடுகின்றேன் `.

பண் :

பாடல் எண் : 10

பொருகட லிலங்கை மன்ன னுடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக் கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப் பெருவேளூர் பேணி னானை
உருகிய வடிய ரேத்து முள்ளத்தா லுள்கு வேனே.

பொழிப்புரை :

அலைகள் மோதும் கடலிடை அமைந்த இலங்கை மன்னனாகிய இராவணனுடைய உடல் நசுங்குமாறு தம் கால்விரலை அழுத்தியவராய் , நல்ல நீலகண்டராய் , ஒளிவீசும் பிறையைச் சூடும் பரந்த சடையினராய்ப் பெரு வேளூரில் உள்ள பெருமானாரை மனம் உருகிய அடியவர்கள் போற்றும் உள்ளத்தை அடியேனும் பக்குவத்தால் பெற்று அப்பெருமானை விருப்புற்று நினைப்பேன் நான் .

குறிப்புரை :

பொருகடல் - கரையை அலைதாக்கும் கடல் , பொருதற் கிடமான கடலுமாம் . கடலிற்போர் ; கடற்போர் ; கப்பற்போர் பொரு மன்னனுமாம் . உடல் கெடப் பொருத்தி :- நல்ல - அழகிய . கருகிய - நீலநிறமார்ந்த . கதிர் இளங்கொழுந்து - பிறைக் கொழுந்து . பெருகிய சடை - ` வளர் சடை ` ` கற்றைச் செஞ்சடை ` உருகிய அடியார் - நெஞ்சின் உருக்கம் உற்ற சிவஞானிகள் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேன் . உள்குதல் நினைத்தல் .
சிற்பி