திருவிராமேச்சுரம்


பண் :

பாடல் எண் : 1

பாசமுங் கழிக்க கில்லா வரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே நினைமினீர் நின்று நாளும்
தேசமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரம்மே.

பொழிப்புரை :

நீக்க வேண்டிய பாசத்தை நீக்கும் ஆற்றல் இல்லாத அரக்கர்களை அழித்து மேம்பட்ட சிவஞானத்தால் இராமனாய் அவதரித்த திருமால் அமைத்த கோயிலிலே ஒளிமிக்க சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திரு இராமேச்சுரத்தை வாசனை மிக்க பூக்களை அர்ப்பணித்து நாள்தோறும் நிலையாகப்பற்றுமிகுந்த அன்போடு எல்லீரும் விருப்புற்று நினையுங்கள் .

குறிப்புரை :

பாசமும் கழிக்ககில்லா அரக்கர் - கழிதற்குரிய பாசத்தையும் கழிக்கும் வன்மையில்லாத இராக்கதர் ( தி .4 ப .61 பா .5, 11) என்னும் எண்ணுடைய பாடலில் அன்றி மற்றை யொன்பதிலும் ` அரக்கர் ` என்பது பன்மை குறித்தலுணர்க . படுத்து - அழித்து . தக்க மலர்கள் ; வாச ( மண ) மலர்கள் ; மிக்க அலர்கள் மதியினான் - சிவ ஞானத்தால் , வினைதீர்க்கவல்ல வழியுணர்ந்த அறிவால் எனலுமாம் , மால் - திருமாலின் அவதாரங்களுள் ஒன்றான இராமமூர்த்தி , நேசம்மிக்க அன்பினால் , ( உலகீர் ) நீர் நாளும் நன்று நினைமின் . தேசம் மிக்கான் - ஒளிமிக்கவன் . ` தேசத்தார் பரவியேத்தும் ` ( தி .4 ப .39 பா .4). அலர்கள் கொண்டு செய் கோயில் இராமபிரான் , இலங்கையினின்று மீண்டு போந்து , இப்போதுள்ளது போன்ற பெரிய திருக்கோயிலை அப்போதே கட்டி வழிபட்டதாகக் கொள்ளல் பொருந்தாது . முதன் முதலிற் பூங்கோயில் கட்டிப் போற்றியதாகக் கொள்வதே பொருத்தம் . சொல்வேந்தர் அங்குற்ற காலத்தில் இருந்த நிலையிலேயே இராமபிரான் வழிபடத் தொடங்கிய நாளில் இருந்ததெனல் அசம்பவம் .

பண் :

பாடல் எண் : 2

முற்றின நாள்க ளென்று முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே யுணர்விலா வரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை யீசன் பாலே.

பொழிப்புரை :

நெஞ்சே ! அரக்கர்கள் உயிர்வாழ்வதற்கு வகுத்த நாள்கள் முடிந்து விட்டதனால் அவர்களை அழிப்பதனையே காரணமாகக் கொண்டு ஏற்பட்ட வலியபோரினால் மெய்யுணர்வு இல்லாத அரக்கர்களை அழித்த இராமன் ஆகிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை உகந்தருளியிருக்கும் , பரவிய சடையை உடைய சிவபெருமானிடத்துப் பற்றினைக் கொண்டு நீ முன் நின்று போற்றுவாயாக .

குறிப்புரை :

நெஞ்சே நீ பரவு . நாள்கள் முற்றின என்று முடிப்பதே காரணமாய், (கார ண(ம்)மாய் என்றும் வரும்), உற்றவன் போர்களாலே உணர்விலா அரக்கர் தம்மைச் செற்றமால் - அரைகோடியாண்டுகள் வாழ வரத்திற்பெற்ற ஆயுள் கடந்துவிட்டான் என்று , அவனையும் ஏனைய அரக்கரையும் மாய்ப்பதே காரணமாய் உற்ற வலிய போர்களாலே , தம் உயிருக்கும் கேடுண்டாக்கிக்கொள்ளும் அவ்வுணர்விலிகளை மாய்த்த இராமபிரான் ; அவன் செய்த திருக்கோயில் ஆகிய திருவிராமேச்சுரத்தைப் பற்றிப் , படர்ந்த சடையையுடைய ஈசன்பால் பரவு . நெஞ்சே நீ உலகிற் பரவிப் பிறப்பிறப்பிற்கென்னை யாளாக்காது , இராமேச்சுரத்தைப் பற்றிப் படர்சடை யீசன்பாலே பரவு . ஈசன்பாலே பரவு என்றதால் , அது வேற்றிடத்திற் பரவுதல் பெறப்பட்டது . நெஞ்சின் நினைவிற்குப் பற்றுக் கோடாவது இராமேச்சுரம் , நினைதலே பற்றுதல் . கோயில் திருவிராமேச்சுரம் , ஊர் பின்னர்த்தோன்றியது . இராமபிரான் காலத்தில் அங்கு ஊர் இல்லை . பரவுதல் - இறைவன் தங்கும் இடமாக விரிந்து நிற்றல் , ` நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் `. நீர்மிக்குப் பரவிய ஏதுவாலே பரவை என்று கடற்கொரு பெயர் உண்டாயிற்று . மனவெளி பூதவெளியினும் பெரியது . அதனால் , ஈசன்பாலே பரவு என்றார் . சிவ வியாபகத்தின் அளவு பரவும் ஆற்றலை யெய்துக என்று ஏவியவாறு .

பண் :

பாடல் எண் : 3

கடலிடை மலைக டம்மா லடைத்துமால் கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயிற் றிருவிரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டு நானே.

பொழிப்புரை :

கடலிடத்தை மலைகளால் அடைத்துத் திருமால் தம் செயலை முடித்துப் பின் கடலை அடுத்த மேட்டில் செய்த இராமேச்சுரத்தை , இவ்வுடம்பினின்றும் நீங்காத ஐம்பொறிகளால் தம் விருப்பப்படி செயற்படுத்தப்பட்டு தூய்மையின்றி , நாவிடை வைத்துப் போற்றுதலைச் செய்து தடுமாறுகின்றேன் . ( நாவில் தொடல் இடை - வாக்கு .)

குறிப்புரை :

மலைகள் தம்மால் கடலிடை அடைத்துத்திடலிடைச் செய்த கோயில் :- மலைகளைக் கடலில் அடைத்து , நீரகற்றி நில மாக்கிய அத்திடலிற் செய்த திருக்கோயில் ( ஆகிய திருவிராமேச்சுரம் ) மால் - இராமபிரான் . கருமம் - இராவணன் ஆதிக்கத்தை அழித்துச் சீதையை மீட்டுவரச் செய்த வினை . முற்றி - முடிந்து . அடைத்ததும் திடல் செய்ததும் கரும முற்றியதும் முன்னும் அத்திடலிடைக் கோயில் செய்தது பின்னும் ஆகும் . உடல் - திருநாவுக்கரசர் திருமேனி , உடலிடை நின்றும் பேரா ஐவர் :- ஐம்பொறிகள் . ஆட்டுண்ணல் - பொறிவழிப் போய் வருந்துதல் . பொறிவழிச் செல்லும் எவையும் உயிர்க்குத் தூய்மை விளைப்பன ஆகா . நாவில் தொடல் ஆம் வாக்கில் வைத்து . இடை - வாக்கு . ஐவர் ஆட்டுண்டு சுழல்கின்றேன் , தூய்மையின்றி வைத்து எனலும் தூய்மையின்றிச் சுழல்கின்றேன் எனலும் பொருந்தும் . தூய தன்மையன் என்னும் பொருளது சிவன் ` என்னும் பெயர் . அம் முழுமுதற் பொருளின் தூய்மையையும் தமது நாவின் தூய்மையின்மையையும் எண்ணித் தூய்மையின்றிவைத்துச் சுழல்கின்றேன் என்றார் . ` வாக்குத் தூய்மையிலாமையினாலே மாதவாவுனை வாய்க்கொள மாட்டேன் . நாக்குத்தான் என் சொல்வழி கேளா நான் அது ஒட்டேன் ` என்ற வைணவப் பெரியா ( ழ்வா ) ர் கருத்தும் இங்கு நோக்கத்தக்கது . அகத்தூய்மையின்றிப் புறத்தே பாடிக்கொண்டிருக்கின்றேன் என்றாராயிற்று . நெஞ்சம் ஐவரால் ஆட்டுண்டும் இராமேச்சுரத்தை நாவில் வைத்துச் சுழல்கின்றேன் எனலுமாம் ` இடை ` மூன்றும் ஏழனுருபின் பொருளன .

பண் :

பாடல் எண் : 4

குன்றுபோற் றோளு டைய குணமிலா வரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால் வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோ னெஞ்ச மேநீ நன்மையை யறிதி யாயில்
சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருவிரா மேச்சு ரம்மே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! நீ நன்மையை அறிவாயானால் மலைகளைப் போன்ற தோள்களையுடைய நற்பண்பு இல்லாத அரக்கர்களைக் கொன்று போரிடும் சக்கராயுதத்தை உடைய திருமால் விருப்பத்தோடு அமைத்த இராமேச்சுரக் கோயிலை , சென்று தொழுது கடைத்தேறுவாயாக . அறியாயாயின் நின் நிலை நன்றல்ல . ( நன்று போல் ).

குறிப்புரை :

குன்றுபோல் தோள் உடைய அரக்கர் , குணம் இலா அரக்கர் . குணத்தால் அன்றித் தோளின் வலிய தோற்றத்தால் மட்டும் அரக்கரைக்கொன்று . தம் சாரியை . போர் ஆழி - போர் வெற்றியைத் தரும் சக்கிரப் படையையுடைய ( மால் ). அம்மால் - அந்தமால் ; அழகியமால் , இராமன் - அழகன் ; இனியன் , வேட்கை - கொலைத் தீவினையைத் தீர்த்துக்கொள்ளும் பெருவிருப்பம் ; சிவபத்தியுமாம் . நெஞ்சமே , நீ நன்மையை அறிதி ஆயில் , திருவிராமேச்சுரமே சென்று தொழுது நீ உய் . நன்றுபோல் நெஞ்சமே - நன்று போலும் என்றது நன்று அன்று . தீதே என்றதாம் . தீதாதலின் , நன்மையை அறிதி ஆயின் , சென்று தொழுது உய் எனலாயிற்று . நீ என்பது இருமுறை நின்றது நெஞ்சொடுற்ற பேச்சு நடையாதலின் , நன்மை - சிவம் , சிவப்பேறு , ` அறிதல் ` ` ஈண்டு `, உயிர் அறிதற்குத் தான் கருவியாய் நின்று நினைதலையுணர்த்திற்று . அறிதற்றொழில் உயிர்கே உரித்து . ஏனைத் தத்துவங்களுக்கில்லை .

பண் :

பாடல் எண் : 5

வீரமிக் கெயிறு காட்டி விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று கொன்றுடன் கடற்ப டுத்துத்
தீரமிக் கானி ருந்த திருவிரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற் கூடுவார் குறிப்பு ளாரே.

பொழிப்புரை :

கடலைச் சேது கட்டித்தடுத்து , வீரம் மேம்பட்டுக் கோரைப் பற்களை வெளியே காட்டிக் கொண்டு வானளாவ உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குச் சென்று அங்கே கொன்று , மீண்டு பேராற்றலுடைய திருமால் கோயில் செய்து வழிபட்டிருந்த இராமேச்சுரத்தை , அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைவார் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர் .

குறிப்புரை :

வீரம் மிக்கு எயிறு (- கோரைப்பல் ) காட்டி , விண் உற நீண்ட ( ஓங்கி வளர்ந்த ) அரக்கன் என்க . கூரம் - கொடுமை . க்ரூரம் என்னும் வடசொல்லின் திரிபு ஆகும் . கூரமிக்கவன் - மிக்க கொடியன் . கூரமும் உளர் கொடுபடையினும் உயிர் உணவல கொடியார் , ( சிவதரு மோத்தரம் . 7:- 45) சென்று கொன்று உடன் கடற்படுத்துத் தீரம் மிக்கான் ( இராமபிரான் ). இருந்த - கோயில் செய்து வழிபட்டு இருந்த . நீண்ட அரக்கன் :- கல்லாது நீண்டவொருவன் ` உலகத்து நல்லறிவாளரிடைப்பட்டு மெல்ல இருப்பினும் நாய் இருந்தற்றே ` ( நாலடியார் ) என்புழி நீட்சி காலத்திற்கும் அவன் உடலின் நெடிய வளர்ச்சிக்கும் பொதுவாதல் போல்வது . நீண்டு கூர எனினும் பொருந்தும் . உடன் :- விரைவுப் பொருட்டு , ஏனைய அரக்கருடன் எனலுமாம் . கடற்படுத்தல் - கடலில் வீழ்த்தல் , மூன்றுலகிற்கும் அதிபதியாகிய பெரிய வீரனைக் கடற்படுத்தியது மிக்க தீரமாகும் . கோரம் மிக்கார் - அகோர மந்திர செபத்தின் மிகுதியாற் கொடுவினைகளைத் தவிர்த்துக்கொண்ட சிவ நல்வினையாளர் ` ஆனைந்துந்தான் பருகிக் கோரம் இருநூறு ` ( தணிகைப் , அகத் , 391). கோரம் - பூவரும்பு . ( சூடாமணி நிகண்டு 11. ரகரவெதுகை 6 ) அச்சம் எனக்கொண்டு , பிறப்பச்சம் மிக்கு அரிய தவத்தால் எனலும் ஆம் . கூடுவார் குறிப்புள்ளார் . குறிப்பு - சிவத்தையே பெறுதல் வேண்டும் என்னும் குறிக்கோள் . மால்செய்கோயிலை யார் சென்று வழிபடினும் தத்தம் குறிப்பு ( நினைப்பு ) நிறைவேறப் பெறுவர் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

ஆர்வல நம்மின் மிக்கா ரென்றவவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய் திருவிரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ செஞ்சடை யெந்தை பாலே.

பொழிப்புரை :

மட நெஞ்சமே ! ` நம்மை விட வலிமை மிக்கவர் யாவர் ` என்று செருக்குற்ற அவ்வரக்கர்கள் ஒன்று கூடிப் போரிலே வெற்றியைக் கருதி வலிமைமிக்குப் போரிட்டாராக , அவர்களை அழித்து அவர்களுடைய தேர்ப்படையின் வலிமையையும் போக்கிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை அணுகிச் செஞ்சடைப் பெருமான் பால் அடைவாயாக .

குறிப்புரை :

நம்மினும் வலம் மிக்கார் ஆர் ? ஆர் நம்மின் வலம் மிக்கார் ? என்ற அவ்வரக்கர் கூடிப் பொருதனர் . பொருத அவர் தம்மை வீட்டித் தேர்வலம் செற்ற மால் . மால் செய் ஈச்சுரத்தை நெஞ்சமே சேர் . எந்தைபால் சேர் . அரக்கராகிய பொருதவர் எனலும் பொருந்தும் . போர்வலம் - போர் வலிமை ; வன்போர் . மிக்கு - மேற்சென்று ; மண்டி . பொருதல் - தாக்குதல் ; போர்புரிதல் . வீட்டி - அழித்து . தேர்வலம் :- தேர்ப்படை வலிமையுமாம் . சென்ற - அழித்த . ஆர்வலம் - அன்பு . ( தி .4 ப .69 பா .5.)

பண் :

பாடல் எண் : 7

வாக்கினா லின்பு ரைத்து வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள் உயிர்தனை யுண்டு மாறான்
தேக்குநீர் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க ணோய்வினை நுணுகு மன்றே.

பொழிப்புரை :

இனிமையாகப் பேசுதற்கு அமைந்த வாயாலே இனிய சொற்களைப் பேசி வாழாத அரக்கர்களை அழிக்கத்தக்க படைகளால் தாக்கி அவர்கள் உயிரை உண்டு திருமால் கடல் நீரைத் தேக்கிய அணையின் கரையில் அமைத்த கோயிலாகிய இராமேச்சுரத்தை அகநோக்கிலும் புறநோக்கிலும் கண்டு தரிசித்துத் தலையால் வணங்குபவருடைய நோய்களும் வினைகளும் அழிந்து விடும் .

குறிப்புரை :

வாக்கினால் - இனியனவும் நல்லனவும் கூறிப் பழகத் தக்க வாயால் . இன்பு - இன்பம் விளைப்பனவாய சொற்களை . உரைத்து - சொல்லி . வாழ்கிலார் - வாழாத அரக்கர் . வாழ்கிலார் தம்மை யெல்லாம் - வாழமாட்டாத எல்லா அரக்கரையும் . போக்கினால் - போக்கத்தக்க படையால் . புடைத்து - தாக்கி , அவர்கள் உயிரை உண்டு செய்த கோவில் . மால் தான் செய்த கோயில் . தேக்கு நீர் - தேங்குதலுடைய கடல் நீரில் ; கட்டிய அணைக்கரையில் . ` தேக்கு ` தேங்கு என்னும் அடியாகப் பிறந்த பெயர் . ` போகு ` ` போக்கு `, தேக்கம் , ஒடுக்கம் , அடக்கம் என்பவற்றின் அடியும் உணர்க . நோக்கு - அக நோக்கம் , புறக்காட்சி இரண்டும் பொருளாகும் . நோய்வினை - நோயும் அதற்கேதுவான வினையும் . நுணுகும் - குறையும் . ` உள்ளதன் நுணுக்கம் `. நோய் - இன்ப துன்பம் ( பிராரத்தம் ). வினை - ஆகா மியம் , சஞ்சிதம் . மூலகன்மம் வேறு . இவை அதன் காரியம் .

பண் :

பாடல் எண் : 8

பலவுநா டீமை செய்து பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய வரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள் தாழ்வராந் தவம தாமே.

பொழிப்புரை :

பலகாலமாக இவ்வுலகில் கூட்டமாகத் தோன்றித் தீமைகளையே செய்து கொல்லும் வில்லை ஏந்திய கொடியவர்களான அரக்கர்களைக் கொன்று வீழ்த்திய வில்லை ஏந்திய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தலையினால் வணங்கும் அடியவர்கள் பின் உடம்பாலும் முழுமையாக விழுந்து வணங்குவார்கள் . அச் செயல் தவப் பயனால் நிகழ்வதாகும் .

குறிப்புரை :

பலவும் நாள் - பலநாளும் ; நாள் பலவும் . பார் - மண்ணுலகு . குழுமி - கூடி ; கொலைவில் ; கொலைவில்லார் ; கொலை விலார் . கொல்வார் செயல் கொல்லுங் கருவிக் கடையாயிற்று . வில்லாரும் கொடியரும் ஆய அரக்கர் . ` கொன்று விழுத்த சிலையினான் `:- கொலையும் விழுத்தலும் சிலையினான் வினை . அவனது கருவி சிலை . ` சிலை ` என்னும் மரத்தாற் செய்தலாற் பெற்ற பெயர் . ` தலையே நீ வணங்காய் ` தாழ்வர் - ` தாழ்வெனுந் தன்மை ` யுடையவர் ( தி .4 ப .60 பா .2). ஆம் தவம் - ஆதற்கு ஏதுவான தவம் . ` ஏகம்பம் மேவினாரைத் தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குத் தலைவர் தாமே ` ( தி .4 ப .44 பா .3). ` தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே ` ( தி .2 ப .77 பா .2).

பண் :

பாடல் எண் : 9

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தா லெறிந்துபின் னன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே.

பொழிப்புரை :

நெஞ்சே ! பல ஆண்டுகள் சிறந்த தவத்தைச் செய்து , ஒழுக்கக் கேடு உள்ள அரக்கர்களை எல்லாம் அவர்கள் அழியுமாறு சக்கரம் முதலிய படைகளால் அழித்துப் பின்தக்க இடத்தைத் தேடித் திருமால் அமைத்த இராமேச்சுரத்தை நீ விரும்பிச் சென்று வாழ்தி . அதுவே உனக்கு நன்னெறியாம் .

குறிப்புரை :

மாதவங்கள் கோடிசெய்து எறிந்துகொண்டு தேடிச் செய்த கோயில் . குன்றினார் - நல்லொழுக்கம் முதலியவற்றிற் குறைந்தவர் . ( அரக்கர் ). வீட - அழிய . சக்கரம் - மரூஉ . சக்கிரம் ` ` யரலக் கிகரம் `. ஈண்டுச் சக்கிரம் என்பது படை என்னும் பொருட்டாம் . எறிந்து - வீசிக்கொன்று . மால் என்றது - ஈண்டு இராமபிரானை . நெஞ்சமே நீ நாடிவாழ் . நல்நெறி ஆகும் . ` நன்னெறி `:- ` நன்னெறியாகிய ஞானம் ` ( சிவஞானபோதம் . சூ . 8. அதி . 1. ஏது ) ` நன்னெறியாகிய ` என ஞானத்தை விசேடித்தார் . நன்மையெனப்படுவன எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மையெனப் படுவது வீடுபேறு என்ப . அதனைத் தலைப்படுதற்கு ஏதுவாச் சிறந்த நெறியாகலின் , ஞானம் நன்னெறி யெனப்பட்டது . ( சிவஞான மாபாடியம் ). ( கோடி ) தனுக்கோடியில் எனலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 10

வன்கண்ணர் வாள ரக்கர் வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
தங்கணா லெய்த வல்லார் தாழ்வராந் தலைவன் பாலே.

பொழிப்புரை :

அகத்தில் உள்ள வன்மையைப் புறத்தில் காட்டும் கண்களை உடைய கொடிய அரக்கர்கள் வாழும் செயலை அறியாராய்த் துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்களைச் செய்ய , அவரை அழித்துச் சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தம் கண்ணால் தரிசிக்கும் நற்பேறு உடையவர்கள் சிவபெருமான் பக்கலிலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர் .

குறிப்புரை :

வன்கண்ணர் - அகத்தின் வன்மையைப் புறத்திற் காட்டுங் ( கொடுங் ) கண்ணுடையர் , தறுகண் , கடுங்கண் , இடுக்கண் , மென்கண் , புன்கண் , செங்கண் , கருங்கண் , வெங்கண் முதலிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்புணர்த்தி வருவன . வாள் - கொடுமை . வாளுமாம் . வாழ்வினை :- வாழ்வினை :- வினைத்தொகை . வாழ்வதற்கு உரியவினை , ஒன்று - சிறிது . புன்கண்ணர் - நோய் செய்வார் . துன்பம் விளைப்போர் . புன் கண் - துன்பம் , நோய் , மாட்டி - மாள் வித்து . ( மாள் + த் + இ முதனிலை யீறும் இடைநிலையும் டகரமாய்த் திரிந்தன ). கண்ணால் எய்தல் :- கண்டுபோற்றிவழிபடல் . தலைவன் பால் தாழ் ( தங்கு ) வர் என்றவாறு . ` ஆம் ` என்பது செய்யும் என்னும் முற்றன்று . அது பலர்பாற்படர்க்கைக்கு எய்தாது .

பண் :

பாடல் எண் : 11

வரைகளொத் தேயு யர்ந்த மணிமுடி யரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந் திருவிரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பா ருள்குவா ரன்பி னாலே.

பொழிப்புரை :

மலைகளை ஒத்து உயர்ந்த , மணிகள் வைத்து இழைக்கப்பட்ட கிரீடங்களை உடைய அரக்கர் தலைவனான இராவணனை விரைவாக அடியோடு அழித்துத் தமிழகம் திரும்பித் திருமால் செய்த கோயிலாய் அலைகள் முத்துக்களைச் சமர்ப்பித்து வணங்கும் திரு இராமேச்சுரத்தை முன்னைய இப்பத்துப் பாடல்களாலும் போற்றுபவர்கள் அன்பினாலே தியானித்து நற்பேறு பெறுபவராவர் .

குறிப்புரை :

வரைகள் ஒத்தே உயர்ந்த - மலைகளைப் போன்று ஓங்கிய . விரைய ஒடுக்கி ; முற்றும் ஒடுக்கி ; அற ஒடுக்கி . மீண்டு செய்த கோயில் . திரைகள் முத்துக்களைக் கரைக்கண் வீசி வணங்குந் திருவிராமேச்சுரம் . அடியார்கள் மலர் தூவி வணங்குதல் போன்று அலைகள் முத்துக்களைத் தூவி வணங்குந் தோற்றம் கண்கூடு . உரைகள் பத்தால் - முன்னைய பத்துப் பாடல்களால் . உள்குவார் - நினைப்பார் . அன்பினாலே உள்குவார் உரைப்பார் என்க .
சிற்பி