திருவாலவாய்


பண் :

பாடல் எண் : 1

வேதியா வேத கீதா விண்ணவ ரண்ணா வென்றென்
றோதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

மறைமுதல்வனே ! மறைகளைப் பாடுகின்றவனே ! தேவர்கள் தலைவனே ! பார்வதிபாகனே ! பரவிய சடையிற் பிறையைச் சூடும் ஆதிப்பெருமானே ! திருஆலவாயிலுள்ள அப்பனே ! உன்திரு நாமங்களைப் பலகாலும் ஓதி மலர்கள் தூவி ஒருவழிப்பட்ட மனத்தோடு உன்திருவடிகளை அடியேன் காணுமாறு அருள் செய்வாயாக .

குறிப்புரை :

வேதியா - மறைமுதல்வா ; வேதகீதா - வேதத்தைப் பாடுதலுடையவா ; வேதப்பாடலாய் , விண்ணவர் அண்ணா - தேவாதி தேவா , என்று என்று :- பன்மைக்குறிப்பு . என்று ஓதியே மலர்களைத் தூவுதல் வேண்டும் . தூவுதல் தந்திரம் . ஓதுதல் மந்திரம் . அம்மந்திரத்தின் வாச்சியப் பொருளாக நினைத்தல் பாவனை . மந்திரம் தந்திரம் பாவனை ஆகிய மூன்றும் ஒருங்கு நிகழாதது நிறை வழிபாடன்று . ஏகாரம் ஓதாமையைப் பிரித்து நிற்றலின் பிரிநிலை . ` ஓதி மாமலர்கள் தூவி ` ( தி .4 ப .63 பா .1.) தேற்றமும் ஆகும் . ஓருங்கி - ` ஒன்றியிருந்து . படர்ந்த சடைமிசைப் பிறையைச் சூடும் முதல்வா , ஆலவாயில் - ஆலமரத்தின் கீழ் . இச்சுவாமிகள் அருளிய அடைவு திருத்தாண்டகத்தில் ( தி .6 ப .71 பா . 7) நெய்தல் வாயில் , முல்லைவாயில் , ஞாழல் வாயில் , மதுரை நகர் ஆலவாயில் , புனவாயில் , குடவாயில் , குணவாயில் என்றவற்றை நோக்கின் , திருவிளையாடற் புராணத்திலே திருவாலவாய் ஆன படலத்திற் (19 - 26 பா .) கூறிய பெயர்க்காரணம் எத்தகையது என்றும் உணரலாம் . வாயும் வாயிலும் ஒன்றோ ? முல்லைவாயில் , ஞாழல் வாயில் முதலியவற்றிலுள்ள ` வாயில் ` என்பது வாயாகிய உறுப்பினைக் குறிக்குமோ ? ஆலவாயிலும் ஞாழல் வாயிலும் மரத்தைக் குறித்து வந்த பெயராதலை இந்நாயனார் திருவாக்கைக்கொண்டு நன்குணர லாகாதோ ? ` வாயில் புகுவார் ` என்று அத்திருத்தாண்டகம் உணர்த்தும் ஒன்றே , ஆலம் (- நஞ்சு . அது ) பாம்பிற்கு ஆகுபெயராய் , வாலை வாயில் வைத்து எல்லை காட்டிற்று என்றதைக் கட்டு என்று காட்டும் . இத்திருப்பாடலிலும் ` ஆலவாயில் அப்பனே ` என்றதன்றி , ஆலவாய் என்னாமை அறிக . ` அப்பன் `:- ` அம்மையப்பன் ` எல்லா வுயிர்க்கும் இவன் ஒருவனே அப்பன் , ` அம்மையே அப்பா `.

பண் :

பாடல் எண் : 2

நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே யீசா வென்றென் றேத்திநா னேசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பப்படுபவனே ! நான்கு முகங்களை உடையவனே ! தலைவனே ! ஞான வடிவினனே ! என் பொன் போன்றவனே ! எல்லோரையும் ஆள்பவனே ! அன்பனே ! ஆலவாயில் அப்பனே ! உன்னைப் பலகாலும் துதித்து அடியேன் மனத்திரிபுகளை நீக்கி , பொறிபுலன்களின் வழியே சென்று பிறவாத வண்ணம் நாயேனுக்கு அருள் செய்வாயாக .

குறிப்புரை :

நம்பனே - எல்லாவுயிர்களும் உறும் நசைக்குரியனே . ` நம்பும் மேவும் நசையாகும்மே ` ( தொல் . உரி ) ` நான்முகத்தாய் ` - நான்கு முகங்களை யுடையவனே . ` நாலு கொலாம் அவர்தம் முகம் ஆவன ` ( தி .4 ப .18 பா .4.) குறிப்பிற் காண்க . மலரவனே எனல் ஈண்டுப் பொருந்தாது . நான்முகத்திற்குத்தக ` எண்டோள் ` உண்மை பயின்ற வழக்கு . ` எண்டோள் வீசிநின்றாடும் பிரான் ` ` எட்டுக் கொலாமவர் தோளிணை யாவன ` ` எண்டோள் முக்கண் எம்மானே `. நாதன் - இயவுள் . ஞானமூர்த்தீ - அருளுருவினனே ; துரியநிலை . இன்புருவம் துரியாதீய நிலை . என் பொனே - எனக்குப் பொன்னாயிருந்து நிலைத்த பயனைச் செய்பவனே . ஏனைய பொன் தானும் நிலையாது . தன்னால் எய்தும் பயனும் நிலையாது . அஃது அனைவர்க்கும் உரிய பொன் . இது பெற்றோர்க்கே உரித்து . ஆதலின் ` என்பொன் ` என்றார் . ஈசா - உடையாய் . ` என்று என்று `:- ( தி .4 ப .62 பா .1.) குறிப்பு . ` ஏசற்று - மனமுதலிய விகாரங்களை அகற்றல் . ` பூசித்துப் பரமசிவன் பூசனையைப் போல் உளத்துள் ஏசற்று வலஞ்செய்து பணிந்து குவிந்து இருகரமும் தேசுற்ற தேசிகனே சிவஞானதானவினை ஆசற்று நிறைவேற அநுமதம் செய்க ` ( சிவதருமோத்தரம் . சிவஞான தானவியல் . 27 உரை ). இதற்குரிய பிற பொருள் ஈண்டுப் பொருந்தா , என்றும் பின்பினே திரிந்து :- ` தோள்மேல் நீறுகொண்டு .... இட்ட ...... நெற்றி நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று ` ( தி .5 ப .13 பா .7). ` பண்மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல ...... வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே ` ( தி .6 ப .58 பா .1) ` குழகனா .... ரைக் கண்டு அடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத் தம்முடைய பூதம் சூழ வா வா என உரைத்து மாயம் பேசி வலம்புரமேபுக்கு அங்கே மன்னினாரே ` ( தி .6 ப .58 பா .4) என்று பிறாண்டும் ஆண்டான் பின்னே அடிமை போதலை யுணர்த்தியதறிக . ` உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே `. குழந்தை ( அடிமை ) யான உயிரின் பின் , ஆண்டு அருளிய தாயுமானார் போதலையும் ,` புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம் புறமே திரியாதே போது நெஞ்சே` ( தி .6 ப .31 பா .10) என்று பொறிபுலன் பின்னே நெஞ்சம் போதலையும் குறித்தல் அறிந்து , பிறவாமைக்குத தக்க போக்கைக் கடைப்பிடிக்க பேர்த்துப் ( பெயர்த்து ) மீண்டு . இனிப் பேர்த்து என்க . பேர்த்துப் பிறத்தலின் எதிர் மறையாதலின் , பேர்த்து என்னும் வினையெச்சம் பிறத்தல் என்னும் தொழிற்பெயரின் முதனிலை கொண்டது . பிறவாவண்ணம் அருள் செய்யாய் . அன்பனே :- ` அன்பே சிவம் `. ` எந்தை ; யாய் ; எம் பிரான் மற்றும் யாவர்க்கும் தந்தை ; தாய் ; தம்பிரான் . தனக்கு அஃது இலான் ` ( தி .8 திருவாசகம் ).

பண் :

பாடல் எண் : 3

ஒருமருந் தாகி யுள்ளா யும்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளா யாளும்வல் வினைக டீர்க்கும்
அருமருந் தால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தேவாமிருதமாய் உள்ளவனே ! தேவர் களுக்கும் மக்களுக்கும் தலையான மருந்தாக உள்ளவனே ! சிறந்த அமுதின் சுவையாய்ப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகி உள்ளவனே ! எங்கள் வலிய வினைகளைப் போக்கி எங்களை அடிமை கொள்ளும் அருமருந்தாய் ஆலவாயில் உறையும் தலைவனே ! அருள் செய்வாயாக .

குறிப்புரை :

ஒரு மருந்து - தனி மருந்து . ஒப்பொன்றும் இல்லாதது . பெருமருந்து - ஏனைய மருந்துகட்குத் தலையான மருந்து . கருமருந்து - பிறவிப்பிணிதீர்க்கும் மருந்து . ` சிவஞானாமிர்தம் ` ` ஞானாமிர்தம் ` ` சிவானந்தாமிர்தம் ` ` ஆனந்தாமிர்தம் ` ` ஞானமயமாய்ப் பிரிப்பின்றி நின்று அநாதியே தொடர்ந்து வரும் பிறவிப்பிணியினை அறுத்தற்கு ஓர் மருந்தாந்தன்மையினையுடையவன் அக்கடவுள் . அதற்கு ஐயம் இல்லை . அதனை எஞ்ஞான்றும் இடைவிடாது அன்புடன் நினைப்பீராக ` ( நிரம்ப வழகிய தேசிகர் உரை ) ` உன்னும் .... மன்னுபவந்தீர்க்கும் மருந்து ` ( திருவருட்பயன் . 1-10). ` மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை உன்னுவார் வினையாயின ஓயுமே ` ( தி .5 ப .87 பா .2). ஒன்றே பிறவிநோய் தீர்க்கவல்ல பெறலரும் பெருமருந்தாதலின் , ஒருமருந்து , பெருமருந்து , கருமருந்து , அரு மருந்து என்றார் . உம்பருலகு - இம்பருலகு எல்லாவற்றிற்கும் பெரியதொரு மருந்து பிறிதில்லை . பேரமுதின் சுவை ( - பேரின்பச் சுவை ) யாதலின் ` கரு மருந்து ` ம் வல்லினைகள் தீர்க்கும் அருமையால் ` அருமருந்து ` ம் ஆயிற்று . தி .8 திருவாசகம் 618. 620. 624. 632.

பண் :

பாடல் எண் : 4

செய்யநின் கமல பாதஞ் சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே மான்மறி மழுவொன் றேந்தும்
சைவனே சால ஞானங் கற்றறி விலாத நாயேன்
ஐயனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

தேவர்தேவனே ! நீலகண்டனே ! மான்மறியையும் மழுப்படையையும் ஏந்தியுள்ளவனாய சைவ சமயக்கடவுளே ! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே ! ஆலவாயில் உறையும் அப்பனே ! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக .

குறிப்புரை :

செய்ய - சிவந்த ; ` செம்மை ` யதாகிய . கமல பாதம் - தாமரைப்பூப்போலுந் திருவடி . சேரும் ஆ - இடை விடாது நினையும் ஆறு . சேருமா அருள் செயாய் என்க . தேவர்தேவே - தேவர்க்கெல்லாம் தலைமைத் தேவாயுள்ளவனே . மை - நீலவிடம் , பண்பாகு பெயர் . ` நீலவிட அரவணிந்த நிமலா `; ` நீலகண்டன் `, மான் மறி - மான் கன்று , மழு - மழுப்படை , சைவனே - ( சிவசம்பந்தனே ) சைவ சமயத்தின் கடவுளே . சாலக்கற்றறிவு . ஞானம் கற்றறிவு , ஞானம் சாலக் கற்றறிவிலாத நாயேன் . நாயேனுடைய ஐயனே . ( என்னையனே ), திருவாலவாயில் அப்பனே நின் கமலபாதம் சேருமாறு அருள் செயாய் .

பண் :

பாடல் எண் : 5

வெண்டலை கையி லேந்தி மிகவுமூர் பலி கொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லி லுண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப் பளகனே னுளம தார
அண்டனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

உலகத் தலைவனே ! ஆலவாய் அப்பனே ! வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி மிகவும் ஊர்களில் பிச்சையெடுத்தும் அப்பிச்சை உணவை உண்ணாது விடம் ஒன்றையே உண்டவன் என்று சொல்லப்படும் உன்னை அடியேன் வாழ்வின் முற்பகுதியில் விருப்புற்று நினைக்காத குற்றத்தினேன் . அத்தகைய அடியேனுடைய உள்ளம் நிறையும்படி அருள்செய்வாயாக .

குறிப்புரை :

வெள்தலை - பிரமகபாலம் , மிகவும் கொண்டு , மிகவும் உண்டதும் இல்லை எனல் சிறவாது , பலிகொண்டு உண்டதும் இல்லை . பலியைக் கொண்டே அன்றி உண்டதே இல்லை . நஞ்சினைத்தான் உண்டது . பண்டு - பலபிறவியாக . உன்னை நினையமாட்டாப் பளகன் . பளகு - குற்றம் . ` நெஞ்சே பளகறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே ` ( தி .8 திருவாசகம் 39) ` பளகறும் இட்டியாதி பசு தருமங்கள் காலத்தளவையிற் கழியும் ` ( காஞ்சிப் புராணம் , சத்ததானப் 7) பளகனேன் - குற்றத்தினேன் , ` குற்றமே பெரிதுடையேன் ` உளம் ஆர , அது பகுதிப் பொருட்டு . அண்டன் - தேவன் , எல்லாவுயிர்களுக்கும் அண்டற்குரியவன் . அண்டதேவன் - எல்லா உயிர்களும் அண்டற்குரியவன் . ஆர அருள்செயாய் . ஆர - நிறைய .

பண் :

பாடல் எண் : 6

எஞ்சலில் புகலி தென்றென் றேத்திநா னேசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

விடத்தைக் கழுத்தில் அடக்கிய , சிவம் என்ற சொற் பொருளானவனே ! ஆலவாயில் அப்பனே ! என்றும் அழிவில்லாத அடைக்கலமாகும் இடம் என்று புகழ்ந்து நான் மகிழ்ந்து என்றும் வஞ்சனையின்றி உன் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் வண்ணம் நாயேனுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வாயாக .

குறிப்புரை :

எஞ்சல் - குறைதல் , இல் - இல்லாத , புகல் - புகும் இடம் ; அடைக்கலம் புகுதற்குரிய மெய்ப்பொருள் , இது - இத்திருவால வாயப்பன் மலரடி என்று ஏத்தி நான் ஏசற்று வஞ்சகம் ஒன்றும் ( சிறிதும் ) இன்றி மலரடி என்றும் காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட்பதமே , நாயேற்கு அஞ்சல் என்று அருள் செய்யாய் . நற்பொருள் = சிவம் . அச்சிவம் என்னும் பொருளைக் குறிக்கும் சிவமெனும் நாம பதம் நற்பொருட் பதம் . பதம் ( சொல் ) வேறு பதார்த்தம் ( சொற் பொருள் ) வேறு . ` நற்பதத்தார் நற்பதமே ... ... ... ... நால் வேதத்து அப்பால் நின்ற சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை ` என்றும் வஞ்சகம் இன்றி எனலுமாம் . என்றும் காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருட்பதம் எனல் சிறந்தது . ( தி .12 பெரிய . திருநீல . 4).

பண் :

பாடல் எண் : 7

வழுவிலா துன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்ட னேனுன்
செழுமலர்ப் பாதங் காணத் தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

தெள்ளிய அலையில் தோன்றிய விடத்தை உண்ட இளையோனே ! அழகிய வில்லை ஏந்தியவனே ! கூத்தனே ! மாற்றுயர்ந்த தங்கம் போன்றுள்ள அழகனே ! ஆலவாயில் பெருமானே! குறைபாடில்லாமல் உன்னைவாழ்த்தி வழிபடும் அடியவனாகிய யான் உன்னுடைய செழித்த மலர்போன்ற திருவடிகளைத் தரிசிக்குமாறு அருள்செய்வாயாக .

குறிப்புரை :

` வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடுந் தொண்டனேன் ` என்றது கொண்டு நாயனார்க்குச் சொக்கலிங்கமே ஆன்மார்த்த பூசா மூர்த்தி என்பர் . வழு - கேடு ; தவறு ; பாதகம் . கடவுளை வாழ்த்துவதிற் கேடும் தவறும் பாதகமும் உறலாகாது . வாழ்த்துதல் - வழுத்துதல் ; வாழ்க என நினைந்து சொல்லிக் கையாற் குறித்தல் . ` வழு ` ` வாழ் ` என்னும் இரண்டிற்கும் உரியது அம்முதனிலை , அது ` விழு ` ` விழை ` இரண்டிற்கும் ` வீழ் ` என்னும் முதனிலை யுரித்தாதல் போல்வது . வழிபாடு - அருள்வழி யொழுக்கம் . ` தொண்டன் ` என்னும் படர்க்கைப் பெயரைத் தன்மையாக்கித் தொண்டனேன் எனல் தொல் வழக்கு . ` பளகனேன் ` ( தி .4 ப .62 பா .5) என்றதும் அது உன்பாதம் . செழுமலர் - தாமரைப்பூ . மலர்ப்பாதம் - ` கமல பாதம் ` ( தி .4 ப .62 பா .4.) காண அருள் செயாய் , நஞ்சம் உண்டும் பொலிவு குன்றாமையாற் ` குழகன் ` ( அழகன் , இளமையன் ) என்றார் . கோலவில்லீ - அழகிய மேரு வில்லாளனே , கூத்தனே - கான்மாறியாடியவனே . மாத்து - பத்தரை மாற்றுத் தங்கம் , இது ` சொக்கன் ` என்னும் பெயர்ப் பொருளின் விளக்கம் . சொக்கு - அழகு , பொன் , மயக்கு . மாத்தாயுள்ள அழகன் என்றதும் அம் முப்பொருளும் பயத்தல் அறிக . ` ஆனாய் ` ( சங்கற்ப நிராகரணம் . 12;- 80-81) ` மாற்றிலாச் செம்பொனாவர் மாற்பேறரே `.

பண் :

பாடல் எண் : 8

நறுமலர் நீருங் கொண்டு நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை யங்க மாறும்
அறிவனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

கடல் நிறத்தவனான திருமாலை உடலின் ஒரு பாகமாக உடையவனே ! மேம்பட்ட வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அறிபவனே ! ஆலவாயில் அப்பனே ! நறியமலர்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாள்தோறும் புகழ்ந்து வாழ்த்தித் திருவடிகளைச் செறிதற்குரிய வழிகளை உள்ளத்துக் கொண்டு உன் திருவடிகளை அடியேன் சேரும் வண்ணம் அருள் செய்வாயாக .

குறிப்புரை :

நறுமலரும் நீரும் கொண்டு நாள்தோறும் ( நீர் ) ஆட்டியும் ( மலர் ) தூவியும் ஏத்தியும் வாழ்த்தியும் சித்தம் வைத்தும் திருவடி சேரும் வண்ணம் அருள் செய்யாய் . செறிவன - திருவடியிற் செறிதற்குரிய நெறிகள் பலவற்றால் ; யோகமார்க்கங்களால் . யோகம் - செறிவு . சீலம் (- சரியை ) நோன்பு (- கிரியை ) செறிவு ( யோகம் ). அறிவு ( ஞானம் ), ( தி .8 திருவாசகம் . 645) மறிகடல் வண்ணன் பாகா :- ` இடமால் தழுவிய பாகம் ` `( தி .4 ப .2 பா .4)` மையரிக் கண்ணியாளும்மாலும் ஓர் பாகம் ஆகிச் செய்அரிதில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே கையெரிவீசி நின்று கனலெரியாடுமாறு ,` ( தி .4 ப .22 பா .4). நால் வேதமும் ஆறங்கமும் அறிதலுடையவனே .

பண் :

பாடல் எண் : 9

நலந்திகழ் வாயி னூலாற் சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை யரச தாள வருளினா யென்று திண்ணம்
கலந்துடன் வந்து நின்றாள் கருதிநான் காண்ப தாக
அலந்தன னால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

நன்மைகள் விளங்குதற்குக் காரணமான தன் வாயினால் நூற்கப்பட்ட நூலினாலே சருகான இலைகள் விழுந்து தங்கி நிழல் தரும் பந்தலாக அமைத்த சிலந்தியை மறுபிறப்பில் அரசாளும் மன்னனாகப் பிறக்குமாறு அருள்செய்தாய் என்று உள்ளத்திலே உட்கொண்டு வந்து உன் திருவடிகளைக் காணவருந்தும் அடியேன் காணுமாறு ஆலவாயில் அப்பனாகிய நீ அருள்செய்வாயாக .

குறிப்புரை :

சிலந்தி வாயில் திகழும் நலம் , முழுமுதல்வனுக்கு உரியதான பந்தர் . சிலந்தி வாய்நூலாற் செய்த நிழல் , பந்தர் நிழல் போல்வதொரு நலம் விளைத்தது . ` சருகிலைப்பந்தர் `:- ` ஞானமுடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொற்றிருமுடிமேற்கானல் விரவுஞ் சருகுதிரா வண்ணம் கலந்த வாய்நூலான் மேனற்றிரு மேற்கட்டியென விரிந்து செறியப் புரிந்துளது , ` எம்பிரான்றன் மேனியின்மேற் சருகு விழாமை வருந்தி உம்பர் இழைத்த நூல்வலயம் ` ( தி .12 பெரியபுராணம் கோச்செங்கட் சோழ நாயனார் . 3,5) என்றதால் , சருகிலை விழாதவாறு செய்த பந்தர் ( சருகு இல்லையாகச் செய்த பந்தர் ) என்க .

பண் :

பாடல் எண் : 10

பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும் பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந் தெடுத்தலு மிருபது தோள்
அடர்த்தனே யால வாயி லப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

திருநீற்றைப் பூசி அழகில்லாத இந்த உடலிலே மனம் ஒரு வழிப்பட்டு உன் திருவடிகளைப் பற்றி என்றும் அவற்றின் பெருமையை அடைவுகேடாகப் பேசிய வண்ணம் காலம் போக்க இயலாதேனாய் உள்ளேன் . கயிலையைப் பெயர்ப்பேன் என்று கருதி இராவணன் வந்து அம்மலையை எடுக்க முயன்ற அளவில் அவனுடைய இருபது தோள்களையும் வருத்திய ஆலவாயில் பெருமானே ! அடியேனுக்கு அருள்செய்வாயாக .

குறிப்புரை :

இலங்கைக் கோன் ( திருக்கைலையை ) ` எடுப்பன் ` என்று வந்து எடுத்தலும் ( அவன் ) இருபது தோள் ( களையும் ) அடர்த்தலைச் செய்தவனே ! ஆலவாயில் அப்பனே நான் பொல்லாக் குரம்பையில் பொடிக் கொடுபூசிப் புந்தி ஒன்றி நின்தாள்கள் பிடித்து என்றும் பிதற்றியிருக்கமாட்டேன் . அவ்வாறு இராமல் நின் தாள்களைப் பிடித்துப் பிதற்றி என்றும் இருக்க அருள் செய்யாய் . திருநீறு இன்றிச் சிவவழிபாடு செய்தலாகாது . ` நீற்றினை நிறையப்பூசி நித்தலும் நியமஞ்செய்து ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனார் ` ` மந்திரம் நமச்சிவாய ஆக நீறணியப் பெற்றால் வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே ` ( தி .4 ப .77 பா .4.) ` திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன் ` ( தி .4 ப .94 பா .6).
சிற்பி