திருச்சாய்க்காடு


பண் :

பாடல் எண் : 1

தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநா ளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலு மஞ்சிப் பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

இதழ்களை உடைய பூக்களால் அர்ச்சித்துத் தொழுது எழுந்த மார்க்கண்டேயன் இறக்கும் நேரம் அணுகிவிட்டது என்று அவன் பொய்யான உடலிலிருந்து மெய்யான உயிரைப் பிரித்து எடுத்துச் செல்ல வந்த கூற்றுவன் அவன் பக்கம் அணுக , அவன் பயந்து சிவபெருமானுடைய திருவடிகளே தனக்குச் சரணம் என்று சொன்ன அளவில் சாய்க்காட்டில் விரும்பி உறையும் பெருமானார் கூற்றுவன் மாயுமாறு உதைத்தார் .

குறிப்புரை :

தோடு - இதழ் . தூவி - அருச்சித்து . வீடும் - இறக்கும் . மெய்கொள்வான் - உடலிலிருந்து உயிரைவேறாக்கிக் கொள்ள . பாடு - பக்கம் . செலலும் - சென்றபோதே . சரணம் - கதி . சாடினார் - அழித்தார் . இது காலனை யுதைத்துச் சிவபூசைச் சீலனை வாழ்வித்த வரலாறு உணர்த்திற்று . தோடு உலாம் மலர்கள் என்றது புதிய பூக்களைக் குறித்தது . தொழுதெழுதல் :- ` சித்தம் ஆரத் திருவடியே நினைந்து உள்கி எழுவார் உள்ளம் ஏயவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி யேகம்பன்காண் அவன் என் எண்ணத்தானே ` என்றதிற் குறித்த வாறு எழுதல் . ` கொழு நற்றொழுதெழுவாள் ` என்புழிப் பரிமேலழகர் உரைத்தது ஈண்டுப் பொருந்தாது .

பண் :

பாடல் எண் : 2

வடங்கெழு மலைமத் தாக வானவ ரசுர ரோடு
கடைந்திட வெழுந்த நஞ்சங் கண்டு பஃறேவ ரஞ்சி
அடைந்துநுஞ் சரண மென்ன வருள்பெரி துடைய ராகித்
தடங்கட னஞ்ச முண்டார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

பாம்பாகிய கடை கயிறு கோக்கப்பட்ட மந்தர மலையை மத்தாகக்கொண்டு தேவர்கள் அசுரரோடு பாற்கடலைக் கடைய , எழுந்த விடத்தைக் கண்டு பல தேவர்களும் அஞ்சிச் சிவ பெருமானை அடைந்து ` நும்மையே அடைக்கலம் அருளுபவராகக் கொண்டுள்ளோம் ` என்று வேண்டப் பேரருள் உடையவராய் கடல் நஞ்சினை உண்ட பிரான் திருச்சாய்க்காட்டில் எழுந்தருளியுள்ளார் .

குறிப்புரை :

பாற்கடலிலே மந்தர மலையை மத்தாகக்கொண்டு வாசுகி என்னும் பாம்பினை வடமாகச் சுற்றி அமரரும் ( வானவரும் ) அசுரரும் ஒவ்வொருபால் உற்றுக் கடையும்பொழுது தோன்றிய நஞ்சத்தினைக் கண்டு அமரர் பலர் அஞ்சி , திருச்சாய்க்காட்டெம்பிரான் திருவடியே துணை என்று கருதி அடைந்து போற்றி , நஞ்சினால் அஞ்சிவந்தோம் யாம் துஞ்சிடாவாறு நெஞ்சிரங்கிக் காத்தருள்க என்று வேண்டினர் . அம் முழுமுதல்வரும் பேரருளுடையராகி , பிறர் எவராலும் உண்ணற்கு அரிய அந் நஞ்சினை உண்டு , அவ்வொரு தோழந் தேவர் விண்ணிற் பொலியும் வாழ்வளித்தருளினார் . ` நுஞ் சரணம் ` என்றது தேவர் கூற்று . ` பஃறேவர் ` என்றது , தகரம் வரும் வழி ஆய்தமாகத் திரிந்த லகரவீற்றுப் புணர்ச்சி . ` தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் புகரின்றென்மனார் புலமையோரே ` ( தொல்காப்பியம் ). தடங்கடல் - பெருங்கடல் ; பாற்கடல் . ` தடவும் கயவும் நளியும் பெருமை ` ( தொல்காப்பியம் ). இது நஞ்சுண்ட வரலாற்றைக் குறித்தது .

பண் :

பாடல் எண் : 3

அரணிலா வெளிய நாவ லருநிழ லாக வீசன்
வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்ன னாக்கித்
தரணிதா னாள வைத்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

காவல் அற்ற வெட்ட வெளியில் வளர்ந்த வெண்ணாவல் மரத்தின் குறுகிய நிழலில் சிவபெருமான் இருந்தானாக , தான் இறைவனுடைய அடிமை என்ற கருத்தில் மாறுபாடில்லாத சிலந்தி அம்மரத்தைச் சூழ்ந்து தன் வாய் நூலினால் வெயிலைத் தடுத்து நிழலைச் செய்யும் பந்தரை அமைக்க அச்சிலந்தியை அடுத்த பிறப்பில் முடிசூடும் மன்னனாக்கி உலகை ஆளுமாறு செய்தார் சாய்க்காடு மேவிய சிவபெருமான் .

குறிப்புரை :

அரண் இலா வெளியநாவல் - காவல் ( மதில் ) அற்ற வெள்ளிடையில் வளர்ந்த மரமாகிய நாவல் . அரு நிழல் - அதன் நிழல் கோடையில் வாய்த்தல் இல்லை . வரணியல் ஆகி - சூழ்கின்ற இயலதாகி . வரணம் - சூழ்தல் . சிலந்திப்பூச்சி தன் வாயின் நூலினால் , பந்தர் செய்ய . பந்தல் - பந்தர் . முரண் இலாச் சிலந்தி . நீங்கற் பொருட்டுப் பாசத்தொடு முரணுண்மையும் பதியாதற் பொருட்டு முரணின்மையும் உடைய சிலந்தி . முடியுடை மன்னனாக்கி - முன் கோச்செங்கட் சோழமன்னரும் பின் நாயனாருமாக்கி ( தி .4 ப .49 பா .4). தரணி - மண்ணுலகு ( சோழவளநாடு ) ( தி .4 ப .49 பா .4). சிலந்தி தன் வாய் நூலினாற் பந்தர் செய்வதற்குரிய ஏதுவை ` அரண் இலா வெளிய நாவலரு நிழலாக ` என்று குறித்தது உளங்கொளத்தக்கது . பந்தர் செய்ய முரணில்லாததுமாம் . ` அருநிழல் ` ` அருங்கேடன் ` ( திருக்குறள் . 210) என்பது போல்வது . ` நலந்திகழ் வாயினூலாற் சருகிலைப் பந்தர் செய்த சிலந்தியை அரசதாள அருளினாய் `. ( தி .4 ப .62 பா .9.) வரம் - வாள் முதலியன என்றலும் இசைவர் .

பண் :

பாடல் எண் : 4

அரும்பெருஞ் சிலைக்கை வேட னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி யொள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி யீந்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

பெரிய வில்லைக் கையில் ஏந்திய வேட உருவினராய் , ஆற்றல் மிக்க அருச்சுனனுக்கு அவன் தவம் செய்துகொண்டு இருந்த காலத்தில் தம்முடைய பேராற்றலை வெளிப்படுத்தி அவனொடு போர்செய்து , பின்னர்ச் சாய்க்காடு மேவிய பெருமான் அவனைப் பெருமை மிகவும் உடையவனாக்கிப் போர் முகத்தில் நிலைபெற அம்புகள் பொலிகின்ற அம்புப் புட்டிலை அவனுக்கு வழங்கினார் .

குறிப்புரை :

வேடன் ஆனவன் சிவபிரான் . அருஞ்சிலை ; பெருஞ் சிலை , சிலை - வில் , ` பிநாகம் ` ` காண்டீபம் `, ` காண்டீபன் ` என்பது விற்சிறப்பாற் பெற்ற பெயர் . அஃது அருச்சுனனது . அதுவும் ` பிநாகம் ` என்றது போல்வதொரு சிறப்புப் பெயர் . ` காண்டபிருட்டன் ` என்று கன்ணனைக் குறிப்பதும் அன்னதே . விறல் - வலிமை ; வெற்றி . பார்த்தன் - பிரதைக்குப் புத்திரன் . உரம் - வலிமை . ஒள் அமர் - வீரம் ஒளிரும்போர் . வரம் :- பாசுபதம் அருளப்பெற்றது . வாள் - ஒளி . சரம் அம்பு முதலிய கணைகள் . தூணி - அம்பறாத் தூணி .

பண் :

பாடல் எண் : 5

இந்திரன் பிரம னங்கி யெண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

இந்திரன் , பிரமன் , அக்கினி , எட்டு வசுக்கள் இவர்களோடு வேதமந்திரங்களை ஓதித் தேவர்கள் வணங்கி வாழ்த்த , எது செயற்பாலது என்பதனை அறியாத தக்கனுடைய வேள்வியை அழித்தபோது சந்திரனுக்கு அருள் வழங்கினவர் சாய்க்காட்டுப் பெருமான் .

குறிப்புரை :

அங்கி - தீ . எண்வகைவசுக்கள் - 1. அநலன் . 2. அநிலன் . 3. ஆபன் . 4. சோமன் . 5. தரன் . 6. துருவன் . 7. பிரத்தியூடன் . 8. பிரவாசன் . தேவ வகுப்புள் ஒரு சாரார் . எண் வகை என்றது எட்டு என்னும் பொருட்டாய் நின்றது . ( பாரதம் , குருகுலம் . 63) மந்திரங்களையுடைய மறையை ஓதி , தந்திரம் - செயற்பாலது ; செய்வகை . வேள்வி - யாகம் . தகர்த்த ஞான்று - தகரச் செய்த நாளன்று . சந்திரற்கு - சந்திரனுக்கு .

பண் :

பாடல் எண் : 6

ஆமலி பாலு நெய்யு மாட்டியர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் றாதை தாளைக்
கூர்மழு வொன்றா லோச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

பசுவிலிருந்து வெளிப்படும் வெண்ணெய்ப் பிடிப்புடைய பாலை அபிடேகம் செய்து அர்ச்சனைகள் சொல்லிப் பூக்களில் மேம்பட்ட கொன்றை மலர்களைத் தான் வழிபட்ட இலிங்கத்திற்கு விசாரசருமனார் சூட்ட , அவற்றைப் பொறாது பூசனையை அழிக்க முற்பட்ட தன் தந்தையின் காலை அவன் கூரிய மழுவினால் வெட்டவே , அவரை சண்டீசன் ஆக்கித் தாம்சூடிய கொன்றை மாலையை அணியும் உரிமையை அவருக்கு வழங்கினார் சாய்க்காடு மேவிய பெருமான் .

குறிப்புரை :

ஆ - பதி . ஆட்டி - ஆடப்பண்ணி . அர்ச்சனைகள் - மலர் தூவிப் பணிதல் முதலியவை . பூக்கள் மலிந்த கொன்றை மலர் மாலையை . பொறாத - உள்ளத்தே பொறுமையில்லாத . தாதை - அப்பன் . தாளை - காலை . கூர்மழு ஒன்றால் - ஒரு கூரிய மழுவால் . ஓச்ச - உயர்த்து வெட்ட . குளிர் சடைக் கொன்றைமாலைத் தாமம் - கங்கையுடைமையாற் குளிர்ந்த சடையிற் சூடும் கொன்றையங்கண்ணி ` திருமாலை ` யை . காமர் வண்ணமார்பிற் சார்த்தும் தாரினை . ` திருப்பள்ளித்தாமம் ` என்னும் மரபுணர்க . கொன்றையால் தாமம் புனைதல் எளிதன்று சிலர்க்கே எளிது . நல்சண்டிக்கு - பிறவிப்பிணிக்கு மருந்து ஆகிய திருவடி வழிபாட்டினை மறவாத சண்டேசுர நாயனார்க்கு ( அளித்தருளினார் ). ஆட்டி , செய்து , சூட்டப் பொறாத தாதை ஓச்சச் சண்டிக்கு ஈந்தார் மேவினார் என்க . முன்மூன்றும் சண்டீசர் தொழில் . பொறாமையும் ஓச்சலும் தாதை தொழில் . ஈதல் ஈசனது . ` பாதகம் என்றும் பழியென்றும் பாராதே , தாதையை வேதியனைத் தாளிரண்டும் சேதிப்பக் கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே தண்டீசர் , தஞ்செயலால்தான் ` - திருக்களிறு . 19.

பண் :

பாடல் எண் : 7

மையறு மனத்த னாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமி லமர ரேத்த வாயிர முகம தாகி
வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுந்
தையலைச் சடையி லேற்றார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

குற்றமற்ற மனத்தை உடைய பகீரதன் வரங்களால் வேண்டிய அளவில் , சிவபெருமானுடைய பேராற்றலில் ஐயம் ஏதும் இல்லாத தேவர்கள் போற்ற , ஆயிரம் கிளைகளை உடையதாகி இவ் வுலகமே நெளியுமாறு பாய்வதற்காக வானத்திலிருந்து இறங்கிய கங்கை என்ற பெண்ணை தம் சடையில் ஏற்றுள்ளவர் சாய்க்காடு மேவிய பெருமான் .

குறிப்புரை :

மை - குற்றம் . அறு - அற்ற , பகீரதன் தன்குலத்தோரைத் துறக்கம் அடைவிக்கத் தவம் புரிந்தவனாதலின் , மையறுமனத்தனானான் . பகீரதன் வரங்களை வேண்டியதாலும் அமரர் ஏத்தியதாலும் தையலைச் சடையிலேற்றார் . ` வேண்ட ` ` ஏத்த ` இரண்டும் ஏதுப் பொருளவாய வினையெச்சம் , கங்கை இழியுங்கால் எண்டிசையிலும் அளவிலாத முகத்ததாய் இழியும் இயல்புடையமையால் ` ஆயிர முகமதாகி இழி கங்கை ` எனப்பட்டது . நீர் மலைமேலிருந்து பள்ள மடையாய்க் கீழ் வீழுங்காலும் நிலத்தே ஒழுகுங்காலும் பலமுக மாதலை உணர்க . அது பாய்தலின் விரைவு வையகத்தை நெளியச் செய்யும் . பாய்வான் - பாய . பாய வந்து இழியும் கங்கை . தையல் - மெல்லியல் . வையகம் நெளியவந்திழியும் வன்மை சடைக்கெதிர் நில்லாது அகன்றமை தோன்றத் ` தையல் ` என்றார் . ` எழுத்தறிவார் - ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயும் சுரநீர் மிகை `. ( நன்னெறி ). வையகம் நெளியக் கங்கை வந்தது ; கங்கை நெளியச் சடையேற்றது . ஐயம் இல் அமரர் - இறைவன் இருக்கும் போது நமக்கு இடர் இல்லை என்னும் தெளிவுடையவானோர் .

பண் :

பாடல் எண் : 8

குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை யிறைச்சிப் பாரம்
துவர்ப்பெருஞ் செருப்பா னீக்கித் தூயவாய்க் கலச மாட்ட
உவப்பெருங் குருதி சோர வொருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

திரண்ட பெரிய தோளினை உடைய திண்ணனார் , ஒரு கையில் வளைந்த வில்லும் , மறு கையில் இறைச்சிப் பாரமுந் தாங்கியிருந்தமையால் காளத்திப் பெருமானுக்கு முன்பு சூட்டப் பட்டிருந்த பூக்களைச் செந்நிறம் பொருந்திய தம் காற் செருப்பினால் நீக்கித் தன் தூய வாயாகிய கலசத்தில் மொண்டு வந்த நீரினால் அப் பெருமானுக்கு அபிடேகம் செய்து பூசிக்க , அதனை உவந்த பெருமான் தம் கண்ணில் உதிரம் ஒழுகச் செய்ய , ஓரம்பினால் தம் கண்ணைப் பெயர்த்துக் குருதி சோரும் கண்ணில் அப்பவே , திண்ணனாரை மிகப் பெரிய தெய்வமாகச் செய்துவிட்டார் சாய்க்காடு மேவிய பெருமான் .

குறிப்புரை :

குவ - குவவு ; திரட்சி . தட - பெருமை . வேடருக்கு இன்றியமையாதது குவப்பெருந் தடக்கை . கொடுஞ்சிலை - வளைந்த வில் . இறைச்சிப்பாரம் - ஊன் ஆகிய பொறை . துவர் - செந்நிறம் . சேக்கிழார் ` பொற்செருப்பு ` என்றதும் இது நோக்கிப்போலும் , துவர் - விறகு எனக்கொண்டு ஏற்ப உரைத்தலுமாம் . குருதிக்கறை உற்ற செருப்பு . பெருஞ்செருப்பு :- தன்மை நவிற்சி . காட்டு நடைக்குரியது . கையில் வில்லும் ஊனும் இருந்தமையால் , காற்செருப்பால் நீக்கலாயிற்று . நீக்கப்பட்டது நிருமாலியம் . அகத்தன்பினிறைவால் வாயே அபிடேக கலசமும் அதிற் கொண்ட நீரே கங்கையினும் தூயதும் , அவரே ஆசாரியாபிடேகம் பெற்ற அருச்சகரினும் பெரியராய ஆட்டு பவரும் ஆய உண்மை தோன்றத் ` தூயவாய்க் கலசம் ஆட்ட ` என்றார் . ` அன்புமிழ்வார் போல விமலனார் முடிமேல் விட்டார் `. உவ - உவந்து . ` வரிப்புனை பந்து ` என்புழிப்போலக் கொள்க . உவந்து சோர . சோர - ஒழுக்க என்று பிறவினைப் பொருட்டாக்குக . சோரலால் இடந்து ( கண்ணை ) அப்ப . கணையால் இடந்து (- பேர்த்து ). கண்ணை இடந்து . கணையாலிடந்து என்றிருபொருள் படுமாறறிக . ( தி .4 ப .65 பா .9) தேவு - ` சிவமாந்தன்மைப் பெருவாழ்வு `. தவச் சிறுவேடரைத் தவப் பெருந்தேவராகச் செய்தருளினார் . தவ - மிகற்பொருட்டு . ` அயன் திருமால் செல்வமும் ஒன்றோ என்னச் செய்யும் தேவே ` ( சிவஞான சித்தியார் காப்பு ) என்புழிப்படும் பொருளே ( சிவத்துவமே ) ஈண்டுக் கொள்ளற் பாலதுணர்க . ` நரகரைத்தேவு செய்வான் ` என்புழிப்படும் பொருள் தேவர் என்பது . நரகர்க்குத் தேவர் மறுதலையாவர் . ஆண்டு அமரத்துவம் . ஈண்டுச் சிவத்துவம் . ( தி .4 ப .49 பா .7) நோக்குக .

பண் :

பாடல் எண் : 9

நக்குலா மலர்பன் னூறு கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான் மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்க ணென்றங் கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

விரிந்து மணம் வீசும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு சிவபெருமானைப் பரம் பொருள் என்ற அறிவினோடு மேம்பட்ட பூசனை புரியும்போது மென்மையான பூ ஒன்று குறையத் தம்கண் தாமரைப் பூவினை ஒக்கும் என்று திருமால் தம் கண் ஒன்றை அம்பினால் பெயர்த்து மலராகக் கொண்டு அர்ச்சிக்க அதனால் மகிழ்ந்த அவர் வேண்டிய சக்கிராயுதத்தை அத்திருமாலுக்கு வழங்கினார் சாய்க்காட்டில் உறையும் சிவபெருமான் .

குறிப்புரை :

நக்கு உலாம் மலர் - மலர்ந்து மணம் உலாவும் தாமரைப் பூக்கள் . ` நகை மலர் ` என்னும் ஆட்சியைக் கருதுக . பல் + நூறு = பன்னூறு . ` பூவான மூன்று முந்நூற்றறுபதுமாகும் எந்தை ` ( தி .4 ப .29 பா .9). மலர்கொண்டு செய்யும் பூசனைகளின் மிகையாற் பயனெய்த வேண்டுவார் நன்ஞானத்தோடு செய்யற்பாலர் . ` கிரியை என மருவும் அவை யாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம் எனக் கிளக்கும் ` ( சிவப்பிரகாசம் ). ` நன் ஞானம் , நற்காட்சி , நல்லொழுக்கம் ` என்னும் அமணர் வழக்குள் ஒன்றாகாது . ` சிவஞானம் ` என்னும் பொருட்டாதல் , நன்மைக்குச் சிவம் என்னும் பொருளுண்மையால் அறிக . திருமால் செய்த மிக்க பூசைகள் நன்ஞானத்தொடு நிகழ்ந்தமையால்தான் , கண்மலர்க்குக் கண்ணைப் பறித்திட உவந்து சக்கிரங்கொடுக்கப் பெற்றார் . மலர் குறையின் கண் இடல் பொருந்துமோ என்பார்க்கு விடையாக , மலர்க்கண் மலர்க்கும் ஒக்கும் என்று தேர்ந்து ஒரு கண்ணை இடந்து அப்பினார் என்றார் . மலர் - தாமரை . திருமாலின் உறுப்புட் சிற்சில மலர் போன்றவை . அங்கு - வழிபட்ட அப்போதே ; அவ்விடத்தேயே . ஒரு மலர் குறையக் கண்ட போதுமாம் . அங்கு - காலம் இடம் ஆகிய இருபொருட்டுமாம் .

பண் :

பாடல் எண் : 10

புயங்கமைஞ் ஞான்கும் பத்து மாயகொண் டரக்க னோடிச்
சிவன்றிரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற வெய்தி வீழ விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார் சாய்க்காடு மேவி னாரே.

பொழிப்புரை :

இருபது புயங்களும் பத்துத் தலைகளும் கொண்ட இராவணன் ஓடிச் சென்று சிவபெருமானுடைய கயிலைமலையைப் பெயர்க்க , அதனால் அழகிய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதி அஞ்ச , அப்போது அவன் வலிமை நிலை வேறுபாடெய்தி அவன் விழுமாறு சிவன் தம் விரலைச் சிறிது ஊன்றி , அவன் உளம் திருந்தி வழிபட்ட அளவில் அவன் வெற்றி பெறுமாறு அவனுக்குச் இராவணன் என்ற பெயரை வழங்கினார் சாய்க்காட்டுப் பெருமான் ஆகிய சிவனார் . புயங்கம் ஐந்நான்கும் - பாடம் .

குறிப்புரை :

புயங்கள் - தோள்களும் , தலைகளும் . ஐஞ்ஞான்கும் இருபதும் . ` தடக்கை நாலைந்தும் ` ( தி .4 ப .34 பா .9). இங்கு நாணஞ் சுகையன் ( தி .4 ப .52 பா .10.) என்புழிக்கொண்ட பொருளைக் காண்க . சிவன்மலை . திருமலை . திருமலைச் சருக்கம் ` என்பது முதலியவற்றை நோக்கிக் கயிலைக்கே ` திருமலை ` என்பது காரணச் சிறப்புப் பெயராதல் அறிக . பேர்க்க - பெயர்க்க . ` திருமலர்க் குழலி :- திருவை மலர்க்கும் குழற்கும் சார்த்துவதினும் குழலிக்குச் சார்த்துதல் சிறந்தது . ` குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் `. ( தி .7 ப .16 பா .1.) வியன் - வேறுபாடு ; மிகுதியுமாம் . ` வியன் கலவிருக்கை ` ( சிலப் . 5:- 7) வியன் பெற - திரு மலையை எடுக்கலாம் என்று துணிந்த நிலை வேறுபாடு அடைய ; எய்தி - நெருக்கலை உற்று . சிறிதூன்றியதன் விளைவே இத்துணைப் பெரியதாயின் , பெரிது மூன்றின் என்னாம் ? மீண்டு :- அவனது சாமகானத்துக்கு இரங்கியதன் குறிப்பு , சயம்பெற :- தோற்றவன் ஆயினும் , கொற்றவனாதலும் பெற்றநாளும் உற்ற பேரும் வெற்றிக் குறியாயின என்னும் குறிப்பு .
சிற்பி