திருக்கொண்டீச்சரம்


பண் :

பாடல் எண் : 1

வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே யடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத் தண்ணலே யஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

அலைகள் உலாவுகின்ற வயல்களால் சூழப்பட்ட திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே ! ஐம்புல வேட்கையை நீக்கும் ஆற்றல் இல்லேனாய் , நீக்குதற்கு அரிய பிறவியாகிய வஞ்சனைப் படுகுழியிலே விழுந்து அதனினின்றும் கரையேறும் வழியைக் காணேனாய் உள்ள அடியேனுக்கு அஞ்சேல் என்று அருள் செய்வாயாக !.

குறிப்புரை :

` கடைக் கண்ணான் மங்கையையும் நோக்கா என்மேல் ஊனமது எல்லாம் ஒழித்தான் ` ( தி .6. ப .19 பா .4) என்றதனை உளங்கொண்டு , இத்திருப்பதிகத்தை உணர்வாராக . வரைகிலேன் - நீக்கிடும் ஆற்ற - லில்லேன் . புலன்கள் ஐந்தும் - ஐம்புலன்களையும் . ` அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு ` ( குறள் . 343). ` செவி முதலிய ஐம்பொறிகட்கும் உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வீடு எய்துவார்க்கு வேண்டும் . புலம் என்றது அவற்றை நுகர்தலை . துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள்மேல் அல்லது , வீட்டு நெறியாகிய யோக ஞானங்களில் மனத்தைச் செலுத்தாமையின் , அதனை அடல் வேண்டும் ` என்றும் , அஃது அப்பொருள்கள் மேற் செல்லின் , அந்நுகர்ச்சி விறகு பெற்ற தழல்போல முறுகுவதல்லது அடப் படாமையின் , வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல்வேண்டும் ` என்றும் கூறினார் ( திருவள்ளுவர் ) என்றார் பரிமேலழகர் . வரைகிலாப் பிறவிமாயப் புரையிலே அடங்கிநின்று புறப்படும் வழியும் காணேன் - நீக்குதற்கரிய பிறப்பிற்கு ஏதுவான வஞ்சக் கூறுபாடுகளிலே அகப்பட்டு ( ஒடுங்கி ) நின்று , அதனின் நீங்கிப் புறப்படும் வழியையும் அறிகிலேன் . ` பிறவிக்கு ஏதுவான மாயப்புரை ` புரை - கூறுபாடு ( சிந்தாமணி 1732). அடங்கி நிற்றல் - ஆசையால் அறிவு சென்று பொருந்துதல் . புறப்படும் வழி வேண்டவே அடங்கி நிற்றல் அகப்படுதலாயிற்று . அரை - இடை . நாகம் - அரவக்கச்சு . அஞ்சல் - அஞ்சாதே . என்னாய் - என்றருள்வாய் . திரை - அலைகள் . உலாம் - உலாவும் ; வந்து வந்து செல்லுதல் . பழனம் - வயல் . ஐந்தலைப் பாம்பினை அடக்கி அரையிற் கட்டிய அண்ணல் நீ . எனக்கு ஐம்புலனடக்கம் விளைத்தருளவல்லாய் என்றவாறு . புரையடக்கம் பனிமலர் கோதைமார் தம் மேலனாய்க் கிடத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 2

தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே யண்ட வாணா வறிவனே யஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

தேவனே ! உலகங்களில் பரந்து எங்கும் கலந்து வாழ்பவனே ! முக்காலமும் அறிபவனே ! தெளிந்த அலைகளை உடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரத்துப் பெருமானே ! உன் அடியேன் பிறவி எடுத்தபின் வீணாகப் பழைய வினைப் பயனாகிய குழியில் விழுந்து இந்த உடம்பைச் சுமந்து வருந்தி இத்துயரிலிருந்து தப்பிப் பிறவாமையை அடைவதற்குரிய வழியைக் காணேனாய் அஞ்சுகின்றேன் . அடியேனுக்கு அஞ்சேல் என்று அருளுவாயாக .

குறிப்புரை :

தெளிந்த நீர் அலைகளையுடைய வயல் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்தில் எழுந்தருளிய கடவுளே , தேவனே , அண்டங்களுள்ளும் புறம்பும் வாழ்பவனே . ஞான சொரூபனே , கொண்டனேன் பிறந்து வீணே , பிரவாகாநாதியாகத் தொடரும் வினையான குழியில் விழுந்து , அவ்வினைக்குத் தக்க ஊனாலான பிண்டத்தைப் பொறுத்துத் தேய்ந்து ( இதனினின்றும் ) பெயர்ந்துய்வதொரு வழியும் அறியேன் . அஞ்சாதே என்று சொல்லி என்னை ஆளாக்கிக்கொண்டு நின் திருவடி நிழலில் வைத்தருள்வாய் . ` தொண்டன் ` என்னும் படர்க்கைப் பெயர் , தன்மை யொருமையீறுஞ் சேர நின்று , அப்படர்க்கையின் நீங்கித் தன்மைக் குரியதாதலறிக . ` அடியனேன் ` ` பத்தனேன் ` என்று பயிறலும் நினைக . பிண்டம் - உடல் . அண்டம் - உலகம் ` அண்ட பிண்டம் அவை சமம் ` ( கோயிற்புராணம் ). வினைக்குழி `- வினைத்துடக்கிற்பட்டு மீளாத்துன்புறும் நிலையின் நீங்கிச் , சிவபெருமானுக்கு மீளா ஆளாகிப் பேரின்பம் உறுதல் பெரிதும் அரிதாம்படி , தன் கண் வீழ்த்தி அடக்கி யுயிர்களைச் சிறுமைப்படுத்துதலின் ` வினைக்குழி ` என்றார் . ஆன்மா வியாபகப் பொருள் . அது குழியில் வீழ்ந்து அவ்வியாபகமுறுதலின் , ` பிண்டமே சுமந்து ` என்றார் . ` உயிர் ஈரும் வாள் நாள் ` ஆதலின் ` நைந்து ` என்றார் ` அண்டவாணன் என்பது அண்ட வாழ்நன் என்றதன் மரூஉ . ` அஞ்சல் ` ( மகன் ) எனல் போல்வது , அஞ்சேல் என்றருள் என்றதன் தாற்பர்யம் .

பண் :

பாடல் எண் : 3

கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி யொளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

சேல் மீன்களை உடைய வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரப் பெருமானே ! இரண்டு கால்களைக் கொடுத்து எலும்புகளைப் பொருத்தி , விளங்கும் நரம்புகளை உடம்பினுள் இணைத்துத் தோலை மேலே போர்த்திக் குருதியை உள்ளே நிரப்பித் தொக்க மயிர்களால் வேய்ந்து அமைக்கப்பட்ட கூரையாகிய இவ்வுடம்பு நிலையாமையை அடையும்போது பக்கத்திலுள்ள உற்றார் உறவினர் ஒன்று கூடி இதன் பிரிவிற்கு வாய் விட்டுக் கதறிச் சுடுகாட்டில் குழி தோண்டிப் புதைப்பதற்கு அஞ்சுகின்றேன் .

குறிப்புரை :

சேல்களைக்கொண்ட வயல்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்தில் எழுந்தருளிய பெருமானே , இருகால் கொடுத்தும் எலும்புகளைப் பொருத்தியும் , விளங்கும் நரம்புகளை யாக்கையுள் ஆரச் செய்தும் , தோலை உடுத்தும் , குருதியை அட்டியும் ( சேர்த்தும் ) தொக்க மயிர்களால் வேய்ந்தும் அமைத்த இப் பொய்யுடம்பாகிய கூரையைப் பக்கத்துள்ள சுற்றங் கிளை கேள் எல்லாம் ஒன்று கூடி , ஓலம் எடுத்துக் கதறியழுதுவிட்டு , சுடுகாட்டில் குழிதோண்டிப் புதைத்தொளிக்கும் நிலைமை ... ... க்கு அஞ்சுகின்றேன் . மீண்டும் அது வாராத வழியை அருள்வாய் என்றது . கதிர்த்தல் - விளங்குதல் . யாக்கை ஆர்த்து - யாக்கையாகக் கட்டி எனலுமாம் . ` ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி ` என்றாற்போலுதிரமட்டி என்புழிக்கொள்க . ` மடம்படு முணர் நெய்யட்டி `. ( தி .4 ப .75 பா .4)

பண் :

பாடல் எண் : 4

கூட்டமா யைவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லே னாடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக வாடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

ஆடுகின்ற பாம்பை இடையில் இறுகக் கட்டிய தலைவனே ! சுடுகாட்டைக் கூத்தாடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் கடவுளே ! பெருமை பொருந்திய பரப்புடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரப் பெருமானே ! ஐம்பொறிகளும் கூடிவந்து கொடிய தொழில்கள் செய்வதனையே தம் பண்பாகக் கொண்டு என்னைத் தம் விருப்பப்படி செயற்படுத்த அவற்றின் தொல்லையைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

ஐவரும் ஒருங்கு கூடி வந்து , கொடிய தொழிலே தம் இயல்பாம் வண்ணத்தராகி , என்னைப் பலபட ஆட்டுகின்றனர் . அவர் ஆட்டும் அச்செயலைப் பொறுக்கமாட்டேன் . ஆடரவை அரையிற் கச்சையாகக் கட்டிய அண்ணலே , கள்ளிமுதுகாட்டில் அதனை நாடகசாலையாகக் கொண்டு ஆடிய கடவுளேயோ ? நன்மையும் பெருமையும் உற்ற கழனிகள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்துள்ள முதல்வனே . சேடு - நன்மை . இருமை - பெருமை . உள்ளானே , ஆற்றகில்லேன் என்றியைக்க . கொடுந்தொழிலும் கொடுங்குணமும் உடையர் . கொடுந்தொழிலே தம் குணமாக உடையர் எனலுமாம் . தொழிற் பண்புமாம் .

பண் :

பாடல் எண் : 5

பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொ ளாக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழு மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

செம்மேனி அம்மானாகிய கொண்டீச்சரப் பெருமானே ! நிலைபேறின்றிப் பொய்யாக அமைந்த அழகற்ற புழுக்கள் மிகக் கலந்த தீ நாற்றமுடைய இவ்வுடலிலே இணைந்து இருக்கின்ற ஐம்பொறிகளும் , 96 தத்துவ தாத்துவிகங்களும் அடியேன் சோர்வு எய்துமாறு செய்யும் கொடுஞ்செயல்களைத் தாங்க இயலாமல் துன்புற்றிருக்கின்றேன் .

குறிப்புரை :

பொக்கம் - பொய் . ` பொக்கம் பேசிப் பொழுது கழியாதே ` ` பொக்கமிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்குநிற்பன் அவர் தம்மை நாணியே ` ( தி .5 ப .90 பா .9). மிடை - கலந்த . முடை - புலால் நாற்றம் . ( தி .4 ப .67 பா .8.) ` முடை கமழ்ந்துதிரமுமிழும் ` ( கூர்ம புராணம் ) என்றதும் ஈண்டுக் கருதற்பாலது . தொக்கு - கூடி . துயக்கம் - சோர்வு , அறிவின் திரிபுமாம் . வேதனை - வாதை , துன்பம் . அலந்து - அலைந்து . துன்புற்று ( தி .4 ப .52 பா .8). செக்கர் - செவ்வான் . ` செவ்வானன்னமேனி ` ( அகம் . கடவுள் வாழ்த்து ) செய்யமேனி திருக்கொண்டீச்சரத்தானே , பொய்யான பொல்லாத புழுப்பொதிந்த புன்புலால் நாற்றத்தையுடைய இவ் வுடலிலே கூடிநின்ற ஐவரும் ( ஐம்புலக் கள்வரும் ) தொண்ணூற்று அறுவரும் ( தத்துவம் முப்பத்தாறு , தாத்துவிகம் அறுபது ) ஆகிய இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன் . யான் துயக்கம் எய்தச்செய்யும் வேதனை . மிக்கு நின்று செய்யும் வேதனை . துயக்கம் எய்துதல் அலந்துபோனார் வினை . தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த ஐவராய இவர்கள் செய்யும் வேதனை எனலுமாம் . ஆயின் , இகரச்சுட்டுக்கு அணியராவார் ஐவர் - தொண்ணூற்றறுவரல்லர் என்றாகும் . ( தி .4 ப .67 பா .7) ஆயினும் , ( தி .4 ப .67 பா .7.) இல் அங்ஙனம் கொள்ளல் பொருந்தாது .

பண் :

பாடல் எண் : 6

ஊனுலா முடைகொ ளாக்கை யுடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால நண்ணிலே னெண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

வண்டுகள் உலாவும் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! புலாலால் அமைக்கப்பட்ட நாற்றம் வீசும் உடம்புப் பாறையில் மோதி உடையும் மரக்கலம் போல்வது என்னும் எண்ணம் இல்லாதேனாய் , மான் கண்கள் போன்று மருளும் குளிர்ந்த கண்களையுடைய மகளிரோடு வாழும் வாழ்க்கையை உண்மையான வாழ்வு என்று எண்ணினேனாய் , அடியேன் இதுகாறும் உன்னை அணுகாது வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன் .

குறிப்புரை :

தசையுலாவும் புலால் நாற்றங்கொண்ட உடல் நடுக் கடலில் உடையும் மரக்கலம் போல்வதென்று எண்ணாது மான்போலும் குளிர்விழியவர்தம் வாழ்க்கையை அழியா வாழ்வென்று எண்ணி , நான் இவ்வளவு காலமும் திருக்கொண்டீச்சரத்துள்ளானை நண்ணலும் எண்ணலும் இல்லேன் . இனைய - இத்தன்மைய . நண்ணிலேன் - கிட்டிலேன் ; பொருந்திலேன் . நண்ணுதல் - கிரியை . எண்ணம் - தியானம் . யோகத்திற்குரியதுமாம் . தேன் - வண்டுகள் . நீருலாம் என்பது போலத் தேனுலாம் எனலுமாம் . யாக்கை என்றதன் மரூஉவே ஆக்கை . உடைகலம் - உடைகின்ற மரக்கலம் ; உடையும் மட்கலம் போல விரைந்தழிவதும் ஆம் . ` நண்ணிலேன் ` நின்னை என்க . மழைக் கண் - மழை போலுங் குளிர்ச்சி செய்யும் கண் .

பண் :

பாடல் எண் : 7

சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிக ரைவர் தொண்ணூற் றறுவரு மயக்கஞ் செய்து
பேணிய பதியி னின்று பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

வானளாவிய மாடங்கள் பலவாக உள்ள திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ! ஒரு முழம் நீளம் உடைய பொய்யான உடம்பாகிய ஊருக்கு ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கும் வாணிக நோக்கமுடைய ஐம்பொறிகளாகிய வாணிகரும் , தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களும் கலக்கத்தை உண்டாக்க அடியேன் விரும்பித் தங்கிய அவ்வூரிலிருந்து பிரிந்து போகக் கூடிய நாள் இன்னது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

சாண் அளவில் இருமடங்கு நீண்ட பதி சழக் குடையபதி . சழக்கு - பொய் . ` தக்க சொற்றிறம் உரைத்திலை சழக்கினன் எனப் பெயரிடும் இக்கருத்தை யினி விட்டுவிடு விட்டு விடெனக் கழறினான் `. ( அரிச்சந்திர புராணம் . நகர் நீங்கு . 124) ` இச் சழக்கின்று நான் இசைந்தாற் றருமந்தான் சலியாதோ ` ( சேக்கிழார் ) என்றவாறுரைத்தால் , நீதிக்கு விரோதம் என்ற பொருட்டாம் . ஐவரும் இப்பதியான உடலில் நாதராயிருந்து , உயிரை அடிமைப்படுத்தி , பொருளீட்டும் வணிகர்போல வினையீட்டுவராய் நீதிவிரோதமே புரிவர் . பொய்யே வளர்ப்பர் . ஐவரும் தொண்ணூற்றறுவரும் மயக்கஞ் செய்து பேணியபதி . பதிக்கு நாதர் பேணிய பதி . பதியினின்றும் பெயரும் போது - பொழுது . பொழுதை அறியமாட்டேன் . பொழுதில் நின்னை உணரமாட்டேன் . ` உன்னை நினைந்தே கழியும் என்னாவி ` ( தி .4 ப .112 பா .6.) ` நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் . சாம் அன்று உரைக்கத் தருதிகண்டாய் ` ( தி .4 ப .98 பா .2.). பெயர்தல் - உடலிற் புகுந்துறைந்து மீளல் . சேண் உயர்மாடம் நீடு திருக் கொண்டீச்சரம் என்றது திருக்கோயிற் சிறப்புணர்த்திற்று . அவ்வூரில் இருக்கும் மாடங்களினினுயர்ச்சி எனலாகாது . அக்காலத்தில் , திருக்கோயிலினும் உயர்த்தி வீடு கட்டும் எண்ணமே சைவர்க்கு உறுதலில்லை .

பண் :

பாடல் எண் : 8

பொய்ம்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து
பைம்மறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்று
கைம்மறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன்
செந்நெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

திருக்கொண்டீச்சரத்துப்பெருமானே ! பொய்களை வெளியே செல்லாதபடி தடுத்துத் திருப்பி அவற்றிற்கு வடிவுதந்து புலால் நாற்றம் வீசும் பொருள்களை அவற்றிற் பொருத்திப் பையை அழுக்குப் புலப்படாதபடி திருப்பி வைத்தாற்போன்று , எனக்குத் துணையாக உதவாத இந்த உடம்பிலிருந்து இது தகாது என்று கைகளால் குறிப்பிட்டுச் செல்வது போன்ற உயிர் நீங்கும் காலம் இது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேன் . உயிருக்கு உறுதி தேடி நேரிய வழியில் செல்லும் ஞான சாரத்தையும் உணரேன் .

குறிப்புரை :

பொய் யெல்லாவற்றையும் புறம் போகலொட்டாது தடுத்துத் திருப்பி , அவற்றாற் செய்துவைத்துப் புலால்கமழும் பண்டங்களை இட்டுப் பையை மறித்துச் செய்தாற் போன்ற அழகில்லாத உடற் குடிலினின்று , இனி இவ்வுடல் எனக்கு வேண்டா எனக் கைகவித்து விலக்கினாற்போன்ற ஆவி கழியும்பொழுது அறியகில்லேன் . திருநிறை செம்மை நெறியிற் செல்லும் செலவு ( ஞானசாரம் ) உணரேன் . பைம்மறியாப் பார்த்தல் :- தருமை ஆதீன வெளியீடு ` சாத்திரங்களும் தோத்திரங்களும் ` பக்கம் . 29, 30 பார்க்க . ` தொல்லுலகைப் பைம்மறியாப் பார்க்கிற் பரையாகும் . அப்பரையைப் பைம்மறியாப் பார்க்கிற் பரம் `. ( சிற்றம்பல நாடிகள் வெண்பா . 55). கைம்மறித்தல் - ` தக்காற்போற் கைம்மறித்த காந்தள் - காந்தள் நன்மக்களைப் போலே அந்தோ இதுதகாது என்று கைகவித்து விலக்கின ; ` தம் கைம்மறித்து ` - ( சிந்தாமணி . 1227. 1809) ` நளினக்கைம்மறித்து ` ( கம்பராமாயணம் . கடல்தாவு படலம் . 93).

பண் :

பாடல் எண் : 9

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.

பொழிப்புரை :

சேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே ! சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும் , குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும் , மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன் .

குறிப்புரை :

இளஞ்சேயாய் இருக்கக் கழிந்த நாளிலும் , ( காளையாய்க் ) குளிர்ந்த பூங்கோதைமகார் தம்மிடத்தனாகியிருக்கக் கழிந்த நாளிலும் , மெலிவும் மூப்பும் உற்றுக் கைக்கோல் ஊன்றிக் கொண்டு முக்காலுக்குத் தக்கானாகியிருக்கக் கழிந்த நாளிலும் , உயிர்த்துணையாகிய உன்னைக் குறியாகக் கொள்ளுதல் இல்லாமற் கெட்டேன் . சேல்மீன் உலாவும் வயல்களை வேலியாகவுடைய திருக்கொண்டீச்சரத்துள்ள முதல்வனே . இதில் குறிக்கோள் இல்லாது கழிந்த காலமும் , குறிக்கோளினின்றியமையாமையும்குறியாவதும் உணர்த்தியவாறுணர்க . குறிக்கோளிலாது கெட்டவாறுணர்தற்குச் சென்ற காலத்தின் நீட்சியை நோக்கின் , 81 ஆண்டிருந்தவர்க்கு அதுதகும் . சில்வாழ்நாளர்க்குத்தகாது . ` அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு போமாறமைமின் ` ( தி .8 யாத்திரைப் . 3) ` உன்றன் திருக்குறிப்புக் கூடுவார் ` ( தி .8 திருச்சதகம் . 55) ` என் குறிப்பே செய்து நின்குறிப்பில் விதுவிதுப்பேன் ` ( தி .8 திருவா . 6-34) ` திருக்குறிப் பருளுந் தில்லைச் செல்வன் ` ( தி .9 ப .4 பா .7) ` குறியிலேன் ` ( தி .7 ப .4 பா .57.) ` என்று வந்தாயென்னும் எம்பெருமான்றன் திருக்குறிப்பே ` என்றவாற்றால் , இறைவனதாய திருக்குறிப்பும் அடியாரதாய குறிக்கோளும் விளங்குதலறிக . ` குறியிலாக் கொடியேனை அடியேனாகச் செய்தானைத் திருநாகேச்சரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே ` ( தி .6 ப .66 பா .8).

பண் :

பாடல் எண் : 10

விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர விலங்கைக் கோமான் விலங்கலை யெடுத்த ஞான்று
பருவரை யனைய தோளு முடிகளும் பாறி வீழத்
திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.

பொழிப்புரை :

திருக்கொண்டீச்சரத்துப் பெருமான் நறுமணம் கமழும் கரிய மெல்லிய கூந்தலையும் விளங்குகின்ற அணிகலன்களையும் வேல்போன்ற ஒளிபொருந்திய கண்களையும் உடைய பார்வதி அஞ்சுமாறு இராவணன் மலையை எடுத்த போது அவனுடைய பருத்த மலைபோன்ற தோள்களும் முடிகளும் சிதறி விழுமாறு அழகிய கால் விரலை ஊன்றினார் .

குறிப்புரை :

விரை - மணம் . கருமையும் மென்மையும் கூந்தலுக் குரியன . கூந்தலும் இழையும் கண்ணும் உடைய அம்பிகை . வெருவர - அஞ்சுதல் உண்டாக . கோமான் - கோமகன் . மகன் என்பதன் மரூஉவே மான் . இலக்கண நூலார்க்கு அது விதி ஆயினும் சொல்லாராய்ச்சிக்கு அஃது ஒவ்வாது . மகள் - மாள் . மகவர் - மகார் - மார் என மருவியவையும் உணர்க . செட்டிமார் , குருக்கண்மார் , ஆசிரியன்மார் என்பவற்றில் அம் மகார் என்னும் பொருள் அன்றிப் பிறிதில்லை . மகார் என்பது மருவி மார் என்றாதல் ஒன்று . செய்மவர் , கொள்ளுமவர் முதலியன மருவி , செய்மார் கொண்மார் முதலியனவாதல் ஒன்று . ` மகார் ` ` அவர் ` இரண்டும் பெயர்ச்சொல்லாதலின் அவற்றின் மரூஉவும் வினை கொண்டு முடிகின்றன . மார்வினையொடும் முடிதற்கு ஏது யாது என்று ஆய்வார்க்கு இது விளங்காதிராது . ` பாடன்மார் எமர் ` என்புழிப்படும் இடர்ப்பாட்டிற்கு , மருவிய பின்னர் விகுதியெனக்கொண்டுரைத்ததே ஏது . பருவரை - பரியமலை . பாறி - சிதறி . ஞான்று நாளன்று என்பதன் மரூஉ .
சிற்பி