திருவாலங்காடு


பண் :

பாடல் எண் : 1

வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங் குகப்பவர்க் கன்பர் போலும்
கள்ளமே வினைக ளெல்லாங் கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய வாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

வயல்களில் சேறு நிரம்பிய பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய் , விரும்புபவர்களுக்கு எளியவராய் , உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய் , நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார் .

குறிப்புரை :

வெள்ளநீர் - கங்கை நீர்ப்பெருக்கம் . நீரை அடக்கிய சடையினார் . விரும்புவார்க்கு எளியர் - நச்சுவார்க்கு அரியரல்லாராய் மிக எளியராயருள்வார் . உள்ளுளே - உள்ளத்துள்ளே . உருகிநின்று அங்கு உகப்பவர்க்கு . கசிந்து நின்று , பாசத்தின் நீங்கியுயர்ந்து நினையுமவர்க்குத் தம்பால் அவர் வைத்த அன்பாயிருப்பவர் . உயிர்கள் செய்யும் எல்லா வினைகளையும் அவை நுகர்ந்து தீர்க்கற் பாலன . தீர்க்கும்போதும் வினை செய்தலால் முற்றுந்தீரா . செய்யாமை செய்து செயலறுப்பார்க்கு எதிர்வினையும் இல்லை . நுகர்வினையும் தீரும் . தீருங்காற் செய்யும் புதுவினை இல்லாமையால் , வினைமுற்றுந் தீர்ந்துவிடும் . செய்யாச் செயல் செய்து கரிசறத் தீர்த்தல் எல்லார்க்கும் விளங்காது . அதனால் அது வெள்ளம் அன்று . கள்ளமே . அள்ளல் - சேறு . பழனை திருவாலங்காட்டருகிலுள்ளதோரூர் பழையனூர் எனப்படுவது . அதன் மரூஉவே பழனை என்பது . மேய ( மே + ய் + அ ) எழுந்தருளிய . இது போய , ஆய முதலியவை போலும் பெயரெச்சம் .

பண் :

பாடல் எண் : 2

செந்தழ லுருவர் போலுஞ் சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற்ப ழனை மல்கிய வள்ளல் போலும்
அந்தமி லடிகள் போலு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

ஆலங்காட்டு அடிகளார் செந்தழல் நிறத்தவராய் , கோபம் உடைய காளையை உடையவராய் , வெண்ணீற்றைத் திருமேனியில் அணிபவராய் , தென்றல் வீசும் சோலைகளை உடைய பழையனூரில் உறையும் வள்ளலாராய்த் தமக்கு ஒரு காலத்தும் இறுதி யில்லாத பெருமானாய் உள்ளார் .

குறிப்புரை :

செந்தழல் உருவர் - செந்தீ வண்ணர் . சினவிடையுடையர் - செங்கண் விடையினையூர்தியாக உடையவர் . சுட்ட திருவெண்ணீற்றினைக் கொண்டு திருமேனிக்கு அணிசெய்திடுவார் . மந்தம் ஆம் பொழில் - தென்றல் உலாவும் சோலை . பொழிலையுடைய பழனை . மல்கிய - மிக்க . வள்ளல் . கொடையாளர் . அந்தம் - ஈறு ; முடிவு . இல் - இல்லாத . அடிகள் - உடையவர் ; காட்டிலுள்ள துறவியார் .

பண் :

பாடல் எண் : 3

கண்ணினாற் காம வேளைக் கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கண் மூன்று மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேய
அண்ணலா ரெம்மை யாளு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

நம்மை அடிமை கொள்ளும் ஆலங்காட்டுப் பெருமான் நெற்றிக்கண்ணால் கருவேள் ஆகிய மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு விழித்தவரும் , பகைவருடைய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு சிரித்தவரும் , பண்ணுக்கு ஏற்ப ஒலிக்கும் முழாவின் ஒலி நீங்காததும் , சோலைகளை உடையதுமான பழையனூரில் விரும்பித்தங்கிய தலைவரும் ஆவார் .

குறிப்புரை :

காமவேளை - மன்மதனை . கண்ணினால் - நெற்றிக் கண்ணினால் கனல் . எழ - தீப்பறக்க . விழிப்பர் - விழித்தெரிப்பர் எண் இலார் - எண்ணுதலில்லாதவர் ; பகைவர் . எரி உண - தீய . சிரிப்பர் - நகைப்பர் . ( தி .4 ப .4 பா .4) அதற்கு இது முரண்படும் . பண்ணின் ஆர் முழவம் - பண்ணிசைக்குத் தகப்பொருந்திக் கொட்டப்படும் முழவு . இசைக்கு ஆகுபெயர் . ஓவா - நீங்காத . பைம்பொழில் - பைஞ்சோலை . அண்ணலார் - பெருமையார் . எம்மை - எங்களை . நம்மை ஆள்வார் . ( தி .4 ப .68 பா .10.)

பண் :

பாடல் எண் : 4

காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோளர் போலும்
தூறிடு சுடலை தன்னிற் சுண்ணவெண் ணீற்றர் போலும்
கூறிடு முருவர் போலுங் குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த , கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார் .

குறிப்புரை :

காறிடு விடத்தை - கொல்கின்ற நஞ்சினை . உண்டவர் உயிரைப் போக்கும் விடமுமாம் . உண்டகண்டர் - ( நஞ்சு ) அருந்திய திருநீலகண்டர் . தூறு :- ` பற்றை ` என்பர் ; சுடலையில் கரிசாம்பல் முதலியன தூறாகும் . சுண்ணம் - பொடி . திரு வெண்ணீற்றர் . கூறு - பாகம் . உருவர் திருமேனியர் . அர்த்த நாரீசுவரர் , குளிர் பொழில் , நிகழ் கால வினைத்தொகை . ஆறு - கங்கை . கங்கையை அடக்கியிட்ட சடை யுடையவர் .

பண் :

பாடல் எண் : 5

பார்த்தனோ டமர் பொருது பத்திமை காண்பர் போலும்
கூர்த்தவா யம்பு கோத்துக் குணங்களை யறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி யம்பொடுங் கொடுப்பர் போலும்
தீர்த்தமாம் பழனை மேய திருவாலங் காட னாரே.

பொழிப்புரை :

பழையனூரையடுத்த , பாவத்தைப் போக்கும் தூய்மையை உடைய ஆலங்காட்டுப் பெருமான் பார்த்தனோடு போரிட்டு அவனுடைய பக்தியைக் கண்டவராய் , கூர்மையான நுனியை உடைய அம்புகளைக் கோத்து அவன் குணங்களை அறிந்தவராய்ப் பின்னும் ஒரு அம்புப் புட்டிலை அத்திரத்தோடு அவனுக்கு வழங்கியவராய் உள்ளார் .

குறிப்புரை :

பார்த்தன் - அருச்சுனன் . அமர் - போர் . பொருது - தாக்கி . பத்திமை - ` தொண்டராங்குணம் ` காண்பர் - அறிவர் . கூர்த்த - கூரியதாகிய . வாய் - முனை . அம்பு - மால்கணை . கோத்து - வில்லிடைச் சேர்த்துத் தொடுத்து . குணங்களை - தவத்திற்கேற்ற இயல்புகளை . அறிவர் - உணர்வர் . பேர்த்தும் - பெயர்த்தும் ; மீண்டும் . ஓர் - ஒப்பற்ற . ஆவம் நாழி - அம்பறாத்தூணியை . அம்புகளொடும் கொடுப்பர் . தீர்த்தம் - பரிச்சுத்தமுடையது ; பாவம் போக்குவது .

பண் :

பாடல் எண் : 6

வீட்டினார் சுடுவெண் ணீறு மெய்க்கணிந் திடுவர் போலும்
காட்டினின் றாடல் பேணுங் கருத்தினை யுடையர் போலுங்
பாட்டினார் முழவ மோவாப் பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினா ரரவந் தன்னை யாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

ஆலங்காட்டுப் பெருமான் இறந்தவர்களைக் கொளுத்திய சாம்பலை உடலில் பூசியவராய்ச் சுடுகாட்டிலிருந்து கூத்தாடுதலை விரும்பும் கருத்தினை உடையவராய்ப் பாம்பினை ஆட்டுபவராய்ப் பாடுதலை உடையவராய் , முழாவின் ஒலி நீங்காததும் , பசுமையான சோலைகளை உடையதுமான பழையனூரை விரும்பி உறைகின்றார் .

குறிப்புரை :

வீட்டினார் - இறந்தவர் . சுடுநீறு - வெண்ணீறு . ` மெய்க்கு அணிந்திடுவர் ` ( தி .4 ப .68 பா .2). காட்டில் - சுடுகாட்டில் . நின்று ஆடுதலைப் பேணும் கருத்தினை உடையவர் . பேணுதல் - விரும்புதல் . ` பாட்டினார் முழவம் ஓவாப் பைம்பொழிற் பழனை ` - ` பண்ணினார் முழவம் ஓவாப் பைம்பொழிற் பழனை ` ( தி .4 ப .68 பா .3). மேயார் - மேவியவர் ( தி .4 ப .68 பா .1). அரவம் - பாம்பு . அரவத்தை ஆட்டினார் . பாம்பாட்டிய பரமன் . ` பாம்பாட்டிச் சித்தர் பாடல் ` என்னும் வழக்குணர்க . ஆலங்காட்டடிகள் பாம்பாட்டடிகள் .

பண் :

பாடல் எண் : 7

தாளுடைச் செங் கமலத் தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ வுதைசெய்த நம்பர் போலும்
கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரை அடுத்த ஆலங்காட்டுப் பெருமான் தண்டினை உடைய செங் கமலப்பூப் போன்ற பெருமை பொருந்திய திருவடிகளை உடையவராய் , தனக்கு உயிர்வாழ வேண்டிய நாள்கள் இன்னும் பலவாக உடைய இயமன் அழியுமாறு உதைத்த , நம்மால் விரும்பப்படும் தலைவராய் , யாம் வினைவயத்தாற் கொள்ளுதற்குரிய பிறவிகளைப் போக்குபவராய் நம்மை அடிமையாகக்கொள்ளும் தலைவராக உள்ளார் .

குறிப்புரை :

தாள் - தண்டு . செங்கமலச் சேவடி . தடம்கொள் சேவடி . தட - பெருமை . நாள் உடைக் காலன் - அவ்வவ்வுயிர்க்கு உடலொடு நிற்கவைத்த நாள்களைக் கருத்தில் உடைய காலன் . தொடர்ந்த உடலையும் உயிரையும் பிரிக்கும் நாளையுடையனுமாம் . உதை செய்த - உதைத்தலைச் செய்த . ` உதை கரணம் செய்துகந்த சிவமூர்த்தி ` ( தி .4 ப .13 பா .10). நம்பர் - விரும்பப் படுபவர் . பெறுபவர் எனின் , விரும்புதலை விரும்புவராவர் . கோள் - துன்பம் . ` பிறவித் துன்பம் ` என்னும் வழக்குணர்க . ஆள் உடை அண்ணல் - ஆளுதலை உடைய தலைவர் . என்னையாளுடைய வள்ளல் .

பண் :

பாடல் எண் : 8

கூடினா ருமை தனோடே குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண வாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

பசுமையாகிய சோலைகளை உடைய பழையனூரை விரும்புபவராகிய ஆலங்காட்டுப் பெருமான் காதற் குறிப்புடைய வேடத்தைக் கொண்டு பார்வதி பாகராகிக் கங்கையைச் சூடி அதன் பெருக்கைக் குறைத்த சடையினராய்ச் சாமவேதம் பாடினவராய்க் காளிதேவி காண ஆடிய பெருமானாராவார் .

குறிப்புரை :

குறிப்பு - காதற்குறிப்பு . வேடங்கொண்டு உமையோடு கூடினார் . கங்கையாளைச் சூடினார் . சுவறிடு சடையர் :- கங்கை மிகப் பெரிதாயினும் , சடையின் நுனிக்கும் அஃது ஆற்றாது சுவறிட்டது ( வற்றியது ) என்றதாம் . கங்கையைச் சடைசுவறிற்று ( உறிஞ்சிற்று ) எனலுமாம் . சாமவேதம் பாடினார் . ` மேயார் ` ( தி .4 ப .68 பா .6). காளிகாண ( ஆலங்காட்டில் ) ஆடினார் அடிகள் .

பண் :

பாடல் எண் : 9

வெற்றரைச் சமண ரோடு விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார் குணங்களை யுகப்பர் போலும்
பெற்றமே யுகந்தங் கேறும் பெருமையை யுடையர் போலும்
அற்றங்க ளறிவர் போலு மாலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

ஆலங்காட்டு அடிகளார் ஆடையற்ற சமணர்களோடு விலைமதிப்புடைய ஆடைகளைப் போர்க்கும் புத்தர்கள் பேசும் ஒன்றும் பாதியுமாகிய சொற்களை ஏற்றுக் கொள்ளாத சிவனடியார்களுடைய குணங்களை விரும்பியவராய் , விரும்பிக் காளையை வாகனமாகக் கொள்ளும் பெருமையை உடையவராய்ப் பிறர் அறியாதவாறு மறைத்துச் செய்யும் பாவங்களை அறியும் ஞான முடையவராய் உள்ளார் .

குறிப்புரை :

வெற்றரைச் சமணர் - திகம்பர சைனர் . விலையுடைக் கூறை போர்க்கும் ஒற்று - தேரர் ; சுவேதாம்பரசைனருமாவர் . ஒன்றும் அரையும் ஆம் சொற்கள் ஒற்றரைச் சொற்கள் . ` ஒண்ணும் பாதியுமாஞ் சொல் ` என்பது உலக வழக்கு . அரைச்சொல் - பொருள் நிரம்பாப் பொய்யுரை . பொருளில் வறுஞ்சொல்லுமாம் . புறச்சமயத்தார் சொற்களைக் கொள்ளாதவர் குணங்களை உகப்பர் (- விரும்புவர் ). பெற்றம் - எருது . உகந்து - உயர்ந்து . ஏறும் பெருமை . அற்றங்கள் அறிவர் - பந்த நிவிர்த்திகளை அறிபவர் . எல்லாப்பற்றும் ` அற்றவர்க்கு அற்ற சிவன் `. அற்றங்கள் - பிறர் அறியாவாறு மறைத்துச் செய்யும் பாவங்கள் . பூதங்கள் அஞ்சும் அறிந்து அகத்தே நகும் . ` அற்றம் மறைக்கும் பெருமை ` ( குறள் 980) ` அற்றம் மறைத்தலோ ` ( குறள் 846)

பண் :

பாடல் எண் : 10

மத்தனாய் மலையெ டுத்த வரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலா லூன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும் பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வா ராலங்காட் டடிக ளாரே.

பொழிப்புரை :

ஆலங்காட்டுப் பெருமான் செருக்குற்றவனாய்க் கயிலையைப் பெயர்த்த இராவணனைக் கைகளோடு தளருமாறு விரலை ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்தவராய் , பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராய் , பசுமையான சோலைகளை உடைய பழையனூரை விரும்பி உறையும் தலைவராய் நம்மை அடிமை கொள்பவராய் உள்ளார் .

குறிப்புரை :

மத்தன் - உன்மத்தன் . திருக்கயிலையையெடுக்க நினைந்ததே உன்மத்தம் அன்றோ ?. ஒல்க - தளர . ஒத்தினார் - ஒற்றினார் . திருவிரலால் ஒற்றி ஊன்றியிட்டருள்வர் . பத்தர் - தொண்டர் . அத்தனார் - தலைவர் . நம்மை ஆள்வார் :- ` எம்மை ஆளும் - அடிகளார் ` ( தி .4 ப .68 பா .3).
சிற்பி