திருக்கோவலூர்வீரட்டம்


பண் :

பாடல் எண் : 1

செத்தையேன் சிதம்பன் நாயேன் செடியனே னழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிட மறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கே னிருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே கோவல் வீரட்ட னீரே.

பொழிப்புரை :

திருக்கோவலூர் வீரட்டப்பெருமானே ! காய்ந்த செத்தையைப் போன்ற பயனற்றவனாய் , பண்பிலேனாய் , நாய் போன்றேனாய் , குற்றமுடையேனாய் , முடைநாற்றம் உடையேனாய் , அழுக்குப் பரவியிருக்கும் பொத்தலாகிய இவ்வுடம்பினையே விரும்பிப் பாதுகாத்து நாளும் சென்று சேரத்தக்க இடத்தை அறிய இயலாதேனாய் , இருள்தீர மனத்தால் உணரமாட்டாத மனக் குருடன் ஆகிய அடியேன் எதனைப்பற்றுதலால் நிலைபேறுடையேனாவேன் ? யாது செயற்பாலேன் ?

குறிப்புரை :

சிதம்பன் - பண்பிலேன் . நாயேன் - நாயினேன் . நாய்போல்வேன் . நாய் வேறு நாயன் வேறு ; பொன் வேறு பொன்னன் வேறானாற்போல . செடியனேன் - குற்றத்தினேன் ; முடைநாற்றத்தேன் . அழுக்குப் பாயும் பொத்தையே போற்றி :- ` பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன் ` ( தி .4 ப .41 பா .5). ` பொள்ளல் இக்காயம் ` ( தி .4 ப .42 பா .6). புகலிடம் அறியமாட்டேன் . நாளும் பொத்தையே போற்றியிருப்பதாற் புகலிடம் அறிய வாய்ப்பில்லை . நான் எத்தைப் பற்றிநின்றேன் ? அஃது , இஃது ; எஃது என்பன இரண்டன் உருபேற்று அஃதை , இஃதை , எஃதை என வழங்கி , அத்தை , இத்தை , எத்தை என மருவின . ` அத்தைத் தின்று ` ` இத்தை ஆயும் அறிவுடையன் ` ` இத்தில் வரும் நீர் ` ` எத்தைக் கொண்டு எத்தகை ஏழையமணொடிசைவித்து எனைக் கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்தென்னக்கோகு செய்தாய் ` ( தி .4 ப .99 பா .2). ` எத்தை ` என்று மருவியதற்கு வேறு இடம் ஏன் ? இருள் - அறியாமை . அற - நீங்க . நோக்கமாட்டா - கருதவலியில்லா . கொத்தை யேன் - குருடனேன் ; அறிவில்லேன் ( திருவருட்பயன் . 71 ). ` கை விளக்கின் பின்னே போய்க் காண்பார்போல் மெய்ஞான மெய் விளக்கின் பின்னே போய் மெய்காண்ப தெந்நாளோ ` ( தாயுமானவர் ).

பண் :

பாடல் எண் : 2

தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னு ணித்தலு மைவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி யெய்த்தேன்
குலைகள்மாங் கனிகள் சிந்துங் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

குலைகளாக மாங்கனிகள் பழுத்து விழும் திருக் கோவலூர்ப் பெருமானே ! தலையைச் சுமந்து கொண்டு , இருகைகளைத் தொங்கவிட்டுக் கொண்டு பூமிக்குப் பாரமாய் ஒரு நிலையில் நில்லாத உள்ளத்திலே நாள்தோறும் ஐம்பொறிகள் வேண்டுவனவற்றை வழங்கி அவற்றின் ஆதிக்கத்தை ஒழிக்க இயலாதேனாய் அவை வேண்டியவற்றையே யானும் விரும்பி இளைத்துப் பாழானேன் .

குறிப்புரை :

தலையைச் சுமந்து இரு கையைத் தொங்கச்செய்து , நிலத்துக்கே சுமையாகி , நிலையில்லாத நெஞ்சினுள்ளே , நாள்தொறும் ஐம்புலக் கள்வர் வேண்டும் விலைப்பொருள் தந்து அவர் தொடர் பறுக்க வலியில்லேன் . அவர் வேண்டியதே யானும்வேண்டியிளைத் தேன் . குலைகளைக்கொண்ட மாம்பழங்கள் சிந்துகின்ற கோவல் . நான் சுமந்தது தலையை . நிலம் சுமந்தது என்னுடலை . ` ஆரா இயற்கை - ஒரு காலும் நிரம்பாத இயல்பினையுடைய ( அவா )`. ` நிரம்பாமையாவது தாமேயன்றித் தம் பயனும் நிலையாமையின் , வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன்மேல் வளர்த்தல் ` ( குறள் 370. பரிமேலழகர் உரை ) ` அவாவினை ஆற்ற அறுப்பின் ` ( குறள் . 367) ` அவாவற்றார் ` ( ? 365) ` அவாவறுத்தல் ` என்னும் தொல்வழக்கு வழாது , ` அறுக்க மாட்டேன் ` என்றருளியதால் , விலைதீர்த்து நீக்க நிற்பது ` அவா ` எனல் விளங்கும் . ` ஐவர் ` ( தி .4 ப .67 பா .1). ` ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் ` ( தி .4 ப .99 பா .9.) ` நிலையிலா நெஞ்சந் தன்னுள் ` ( தி .6 ப .95 பா .4.)

பண் :

பாடல் எண் : 3

வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப் பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை யென்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

இருபுறமும் பல பொருள்களையும் அலைகளால் கரையில் சேர்க்கும் தெளிந்த நீரை உடைய திருக்கோவலூர்ப் பெருமானே ! சான்றோர் குறிப்பிடும் நல்வழியில் செல்லாதேனாய் , நாள்தோறும் உள்ளத்தைத் தூய்மையாக்கி உலகப்பற்றுக்களைப் பழித்து நீத்து மேம்பட்ட உன்னை முன் நின்று புகழமாட்டேனாய் , இப் பிறப்பை இழிவாகக் கருதேனாய் , யான் பொருத்தமில்லாத பலவற்றை நினைத்துக் காலத்தை வீணாகப் போக்குகிறேன் .

குறிப்புரை :

வழி + தலைப்படவும் + மாட்டேன் :- ` திருநெறி ` ` நன்னெறி ` ` முன்னெறி ` ( தி .4 ப .11 பா .9) எனச் சிறப்பித்துச் சொல்லப்படும் சிவநெறியைத் தலைப்படவும் வலியுடையேனல்லேன் . ` தம்மிற்றலைப் பட்டார்பாலே தலைப்பட்டுத் தம்மிற்றலைப்படுதல் தாம் உணரின் ..... தலைப்படுவர் தாம் அத்தலை .` ( திருக்களிற்றுப் படியார் . 2) ` தலைப் படல் .` ` தலைக்கூடல் .` வைகலும் தூய்மை செய்தல் :- மும்மலமும் அற்றுச்சுத்தாவத்தையிலே நின்று துரியா தீதத்தை எய்தி நாடோறும் பழகுதல் . கேவலாவத்தையும் சகலாவத்தையும் மிக்க அசுத்தம் ஆக்குவன . சுத்தாவத்தை தூய்மை செய்வது . ஆன்மாத் தன்னைச் சார்ந்த மூன்றழுக்கும் ( மலத்திரையம் ) நீங்கச் சகல தரிசனமும் கேவலா தீதமும் எய்தி ஞான தரிசனம் பெற்று , பரையதீதமும் சிவப்பேறும் எய்திப் பரமானந்த அவசம் உறுதலே தூய்மை செய்தல் , வைகலுந் தூய்மை செய்தல் ஞானாப்பியாசத்தால் அதற்கு யோகாப்பியாசமும் , அதற்குக் கிரியாகிரமங்களும் சரியை ஒழுக்கமும் வேண்டும் . பழித்திலேன் - தூடணம் பண்ணினேனல்லேன் . ` பூதப்பழிப்பு ` ` கலாதி ஞானநிராகரணம் ` ` சுத்த தத்துவதூடணம் ` என்பனவும் அவற்றிடைப் படும் ஞானாப்பியாசத்தின் அவசரங்களும் செய்திலேன் என்றவாறு . ` துகளறு போதம் ` பார்த்துணர்க . தாயுமானவர் துகளறு போதப் பொருளின் விளக்கம் எனப் பாடியருளிய ( எந்நாட் ) கண்ணியுள் யாக்கையைப் பழித்தல் , மாதர் மயக்கறுத்தல்கட்கு மேல் , ` தத்துவ முறைமை , தன்னுண்மை , அருளியல்பு , பொருளியல்பு , ஆனந்த வியல்பு அன்பு நிலைமை , அன்பர்நெறி ` என்னும் பகுதிகளையுணர்ந்த தொழுகுதல் , வேண்டும் . அஃது அத் தூய்மை செய்தலாம் . பிறவியை இழிந்ததாகக் கருதிலேன் எனில் . என்னதான் நினைத்திருக்க மாட்டேன் ? தெண்ணீர் - தெளிந்தநீர் . கொழித்து - பலவகைப் பொருள்களையும் கொழித்து .

பண் :

பாடல் எண் : 4

சாற்றுவ ரைவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவ ரலந்து போனே னாதியை யறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப்பெருமானே ! இவ்வுயிர் இவ்வுடலாகிய வீட்டில் ஒண்டிக் குடித்தனம் செய்வதால் இவ்வுடம்பில் ஆதிக்கம் செலுத்தும் உடைமையாளரைப் போல உள்ள ஐம்பொறிகள் தம் விருப்பத்திற்கு வேண்டியவற்றைக் குறிப்பிட்டுக் கண் , செவி , மூக்கு , வாய் என்ற தமக்கு அவற்றை வழங்கவேண்டும் என்று கடுமையாகப்பேசி என்னை நடத்துதலால் வருந்தினேனாய் மூலமாயுள்ள உன்னை அறியும் அறிவு இன்றிக் கூற்றுவனுடைய வாயில் அகப்பட்டுள்ளேன் .

குறிப்புரை :

ஐவர் - ` ஐம்புலக்கள்வர் ;` ` ஐம்பொறி வேடர் ` ` துன்னிய ஐம்புலவேடர் சுழலிற்பட்டுத் துணைவனையும் அறியாது துயருறுந் தொல்லுயிர் ` ( சித்தியார் ). சந்தித்த குடிமை - துச்சிலிருக்கும் தன்மை . உயிர் , பொறிகளும் வளியும் பித்தும் ஐயும் உறையும் உடலினுள் துச்சிலிருந்து துயருறுகின்றது . ` புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு ` ( குறள் ). சந்தித்த குடிமை - நேர்ந்த நுகர்ச்சி என்றாருமுளர் . சாற்றுவர் - சொல்லுவர் . காற்றுவர் - போக்குவர் . கனல - சுட . கனலப்பேசிக்காற்றுவர் - சுடச்சொல்லித் தொலைப்பர் . ` அடர்மல ஆற்றல் காற்றுஞ் செயல்தலை நின்ற இன்பத் திருவுருமுதன்மை போற்றி ` ( தணிகைப் . நந்தி . 129). ஐவர் வந்து சாற்றுவர் , சந்தித்த குடிமை வேண்டிக் காற்றுவர் ; கனலப்பேசிக் கண் செவி மூக்கு வாயுள் ஆற்றுவர் ; அலந்துபோனேன் . சாற்றுவர் - உயிர் அதோகதி அடையத் தக்கவற்றை நிறைப்பர் . ` குளங் கொளச்சாற்றி ` ( மதுரைக்காஞ்சி 246) காற்றுவர் - ( ஐவரும் சேர்ந்த குடிவாழ்க்கையை விரும்பி , உயிரைப் போக்குவர் . கனலப்பேசிக் கண்ணுள் , செவியுள் , மூக்குள் , வாயுள் ஆற்றுவர் ( - போம் ஆறு செய்வர் .) ` ஆற்றுதல் ,:- ஈட்டுதல் , செய்தல் , நடத்துதல் , நீக்கல் , வலியார்தல் முதலிய பல பொருள் பயக்கும் ஆதலின் , பழிபாவங்களை ஈட்டும் வழியாக கண் செவி முதலியன நிகழ்தலைக் குறித்ததுமாம் . ` அலந்தேன் ` - துன்புற்றேன் ; அலைந்தேன் . ( தி .4 ப .52 பா .8.) ` அலந்தேன் அடியேன் ` ( தி .4 ப .1 பா .6) ஆதியை அறிவு - நின் முதன்மையை உணர்தல் . ஒன்று - ஒரு செயல் ; சிறிதும் . கூற்றுவர் :- அந்த ஐவர் ; யமதூதர் .

பண் :

பாடல் எண் : 5

தடுத்திலே னைவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார வார்வலித் தன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் , எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு , அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பலமலர்களையும் பறித்துக் தொகுக்காதேனாய் , மனம் நிறைய அன்புகொண்டு அவ் வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே !

குறிப்புரை :

என் அகத்தைத் தம் வயப்படுத்தாவாறு ஐவரைத் தடுத்திலேன் . தத்துவம் - மெய்ப்பொருளாகிய சிவம் . தத்துவத்துயர்வு - சிவ வியாபகத்தினளவு . ஆன்மா வியாப்பியமாகும் நீர்மைபடும்படி செய்திலேன் . பரப்பு - பரை வியாபகம் . பல்மலர் - பல பூக்களை . பாதம் - திருவடிகளில் . முற்ற - முற்றும்படி . அடுத்திலேன் - அடுக்கும் படி தூவி வழிபட்டிலேன் . பூசிப்பவர்க்குத் திருவடி நிறைவு தெரிதல் இன்றியமையாதது . ` பரை உயிரில் யான் எனது என்று அறநின்றது அடி ` ( உண்மைநெறி விளக்கம் ) சிந்தை ஆர - சித்தம் ஆர , நிறைய . ஆர்வலித்து - ஆர்வலராகி , ஆர்வலம் செய்து . ஆர்வலம் - அன்பு . ஆர்வலித்து - அன்புற்று . ஆர்வலம் நம்மின் மிக்கார் ` ( தி .4 ப .61 பா .6) என்புழியும் பொருந்துமேல் இப்பொருளே கொள்க . அங்கு வேறுரைத்தாம் ; அஃது ஆண்டுப் பொருந்துவதால் . திண்ணம் - உறுதி . தடுத்தலின்மை முதலிய நான்கும் கொடியவாம் . இவற்றிற்குக் காரணம் ` நான் ` என்னும் அகந்தையே என்றவாறு . ஆ ! கொடிய நான் கொடுத்திலேன் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்த நாலு மைந்து நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னு ணித்தலு மைவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! ஐம்பெரும் பூதங்களால் அமைந்த உடம்பாகிய குடிசைக்கு உலகிலே நாவின் சுவையோடு ஒன்பது வாசல்களை அமைத்து உயிரைச் சுமக்கும் இவ்வுடலினுள்ளே நாள்தோறும் ஆட்சி செய்வனவாக , ஐம்பொறிகள் அழிவு செய்தலால் அவற்றின் தீங்குகளைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

மாச்செய்த குரம்பை - ஐம்பெரும் பூதங்களாற் செய்த குடில்செய் ( குடிசை ). நன்செய் - ( நஞ்சை ) புன்செய் - ( புஞ்செய் ) என்பனபோலும் மரூஉ . மண் - உலகப் பொருள் . எய்தும் நா - அடைவிக்கும் நாச்சுவை . ( ஆகுபெயர் ). நாலும் ஐந்தும் - ஒன்பது . ` ஒன்பது துளை ` ( தி .4 ப .44 பா .2) ` ஒன்பது வாயிற் குடில் ` ` ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் `. கா - சுமத்தல் . உயிரை உடல் சுமத்தல் . உயிரைச் சுமத்தலைச் செய்த காயம் ( - உடல் ). உடலுள் நித்தலும் ( - நாள் தொறும் ). கோ - தலைமை . குமைக்க - அழிக்க .

பண் :

பாடல் எண் : 7

படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்க னின்றும்
விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலே னென்செய் கேனா னிரப்பவர் தங்கட் கென்றும்
கொடையிலேன் கொள்வதே நான் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! வினைகள் என்னைத் தாக்கும் படைகளைப் போல வந்து பற்றி விடாமல் வருத்துவதால் , என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு ஒருநாளும் ஒன்றையும் கொடுத்து அறியாதேனாய்ப் பிறரிடம் எதனையாவது பெறுவதனையே தொழிலாகக் கொண்டுள்ள அடியேன் , பெருமானாராகிய உங்களை விரும்பித் துதிக்கும் வாய்ப்பினைப் பெறேனாய்ப் பயனற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .

குறிப்புரை :

வினைகள் நால்வகைப் படையும்போலத் தொடர்ந்து வந்து பற்றி என் பக்கத்தில் நின்றும் விடமாட்டா . ஆதலால் , கோவல் - வீரட்டத்து விகிர்தனீரை விரும்பியேத்தும் இடையிலேன் . நான் என்செய்வேன் ? இரப்பவர்க்கு என்றும் ஒன்றும் கொடுத்தல் இல்லேன் . நான் கொள்வதே ( அன்றிக் கொடேன் ). இடை - பொழுது . ` இரப்பதே ஈயமாட்டேன் `.

பண் :

பாடல் எண் : 8

பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னும்
துச்சுளே யழுந்தி வீழ்ந்து துயரமே யிடும்பை தன்னுள்
அச்சனா யாதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! அறிவற்றவனாகிய அடியேன் பிறவிப் பிணியை அடியோடு சிதறச் செய்து போக்கும் ஆற்றல் இல்லேன் . உயிர் தங்கியிருக்கும் இவ்வுடலின் பற்றிலே அழுந்திக் கிடந்து துயரமே நுகர்தற்குரிய இவ்வுடம்பில் உள்ள உயிரை ஆதிமூர்த்தியாகிய உமக்கு அன்புடையதாகச் செய்து வாழமுடியாத அகக்கண் குருடனாகிய அடியேன் செயற்பாலது யாது உளது ?

குறிப்புரை :

பேதையேன் பிறவியைப் பிச்சிலேன் - பேதைமை காரணமாக வரும் பிறப்பைப் பேதைமையுடையேன் ஆதலின் , பிய்த்துப் போக்கிலேன் . பிணக்கம் - மாறுபாடு . துச்சு ;- ` துற்று ` என்பதன் மரூஉ . துன்று + இல் = துன்றில் , துற்றில் , துச்சில் . ` உள் ` ஈறுபெற்றுத் ` துச்சுள் ` என்றாகும் . துய்த்துள் என்றதன் மரூஉவுமாம் . ` துய்ப்பு ` ` துப்பு ` என மருவியதுணர்க . ` துய்ப்பார்க்குத் துப்பாய துய்ப்பாக்கி ` என்பது மருவித் ` துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி ` என்று ஆயிற்று ( குறள் ). துய்ச்சுள் அழுந்தி வீழ்ந்து அதுவே தான் என்று துயரம் எய்த இடும்பையுள் ( அச்சனாய் - ) உயிராய் . அச்சு - உயிர் . தலைவன் எனலுமாம் . ` இச்சை ஞானம் தொழில் இவை மூன்றனொடு அச்சன் நின்று அனைத்தும் விளைத்தால் என ` ( தணிகைப் பிரமன் சிருட் . 23) அச்சன் - கடவுள் . அச்சனாய ஆதி மூர்த்திக்கு அன்பனாய் ( இடும்பைதன்னுள் ) வாழமாட்டாக் கொச்சையேன் . கொத்தை - குருடு . ` எனைக் கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்தென்னக் கோகுசெய்தாய் ` ( தி .4 ப .99 பா .2).

பண் :

பாடல் எண் : 9

நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை யாட்டம் பேசி மக்களே சுற்ற மென்னும்
கணத்திடை யாட்டப் பட்டுக் காதலா லுன்னைப் பேணும்
குணத்திடை வாழ மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

கோவலூர்ப் பெருமானே ! கொழுப்பை இணைத்து அமைக்கப்பட்ட இவ்வுடம்பினை விரும்பி நாடோறும் செய்யவேண்டிய வழிபாட்டுக் கடமைகளைச் செய்ய மாட்டேனாய் , திருமணத்திலே விருப்பம் கொண்டு பேசி மக்கள் சுற்றம் என்னும் கூட்டத்திலே தடுமாறுமாறு செயற்படுத்தப் பட்டு அன்போடு உம்மை விரும்பும் நற்பண்போடு வாழமாட்டாதேன் ஆயினேன் .

குறிப்புரை :

நிணம் - கொழுப்பு . நிணத்திடைக்கட்டிய வுடல் , நிணத் திடையாக்கை . பேணி - விரும்பி . நியமம் - சிவாகம விதிப்படி நாள் தொறும் செய்யும் ஒழுக்கம் முதலிய நித்திய நியமங்கள் . ` மணம் ` ` ஆட்டம் ` என்பன கலியாணம் மகிழ்ச்சி விளையாட்டுக்களைக் குறிப்பன . மக்கள் சுற்றம் என்னும் கணம் ( - கூட்டம் ) ஆட்டப் படுதல் - ஆட்டியலைக்கப்படுதல் . உன்னைக் காதலாற் பேணும் குணம் . நியமஞ் செய்யாதவாறு உடற்பற்றுத் ( தேகாபிமானம் ) தடையாயிற்று . சிவபக்தி செய்யாதவாறு மக்கட் சுற்றம் தடையாயிற்று .

பண் :

பாடல் எண் : 10

விரிகட லிலங்கைக் கோனை விரிகயி லாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களு நெரிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்ட னாரே.

பொழிப்புரை :

குரவ மரமும் கோங்க மரமும் சூழ்ந்த திருக்கோவலூர்ப் பெருமான் , விரிந்த கடலால் சூழப்பட்ட இலங்கை நகர மன்னனான இராவணனைப் பரந்த கயிலை மலையின் கீழே அவனுடைய இருபது தோள்களும் பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலை அழுத்திப் பின் அவன் முன் நின்று போற்றிய பாடல்களைக் கேட்டு அவனுக்கு வாட்படையைக் கொடுத்து அருளியவராவர் .

குறிப்புரை :

விரிகடல் - ` இந்து மகாசமுத்திரம் ` என்ற பெயர்ப் பொருளது . வியல் - அகலம் . பெருமை . இருபது தோளும் பத்துத் தலையும் நெரிய ஊன்றி . பரவிய - வாழ்த்திய . பாடல் - சாமகானம் . படை - வாள் . குரவும்கோங்கும் மரம் .
சிற்பி