திருநனிபள்ளி


பண் :

பாடல் எண் : 1

முற்றுணை யாயி னானை மூவர்க்கும் முதல்வன் றன்னைச்
சொற்றுணை யாயி னானைச் சோதியை யாத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி யுள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலு நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

நனிபள்ளிப் பெருமான் முதல் துணைவராய் , மூவர்க்கும் தலைவராய் , வேதத்துக்கு இணையானவராய்ச் சோதி வடிவமான தம்மை விரும்பி நன்கு உணர்ந்து உள்ளம் நெகிழ்ந்து உள்ளத்தில் பக்தி ஊறுதலால் நீராய் உருகிக் கண்ணீர் பெருக்கும் அடியவர்களுக்குப் பெரிய துணையாபவராய் உள்ளார் .

குறிப்புரை :

முற்றுணை - முன்துணை ; முன்னைத்துணை ` முன்னெறியாகிய முதல்வன் ` ( தி .4 ப .11 பா .9) முன்னானை மூவர்க்கும் ( தி .8 திரு வாசகம் . 193) அந்நெறியிற் செல்லும் உயிர்க்குத் துணையாதலிலும் முன்னவனே யாவன் . தோன்றுந் துணையான தாய்க்கும் தந்தைக்கும் முன்னதாய்க் கருவாய்க் கிடக்கத் தொடங்கும் முன்னரே உடனின்று காத்து வருந்தோன்றாத் துணை . மூவர்க்கும் முதல்வன் - ` மூவர் கோனாய் நின்ற முதல்வன் .` இவ்வுண்மையை ஆதாரயோகம் புரிவோரே அறிவர் . சொற்றுணை யாயினான் ( தி .4 ப .66 பா .3) - ` சொற்றுணை வேதி யன் .` ( தி . 4 ப .11 பா .1). ` மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள் `. ஆகமப் பிரமாணத்தாலறியப் பெறுபவன் எனலுமாம் . சொல் - ஆகமம் . துணை - அளவை . சோதி - உணர்வொளி , அருளொளி , சிவப்ரகாசம் . ஆதரித்து - விரும்பி உற்றுணர்தல் , உருகுதல் , ஊறி உள் கசிதல் எல்லாம் உடையவர்க்கு நற்றுணையாவர் . ( தி .4 ப .66 பா .3) ஒருமை யீறும் பன்மை யீறும் கலந்தமையால் ஒருமை பன்மை மயக்கம் என்பர் . இஃது ஒருவரைக்கூறும் பன்மையாய உயர் சொற்கிளவி . செய்யுட்கும் இவ்வழக்கு முன்னோராற் கொள்ளப்பட்டது . இரு வேறு முடிபு ஆதலாலும் குற்றமின்றாம் .

பண் :

பாடல் எண் : 2

புலர்ந்தகால் பூவு நீருங் கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயி னூலால் வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை யரைய னாக்கிச் சீர்மைக ளருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

அழகு விளங்கும் சோலைகளால் சூழப்பட்ட நனிபள்ளிப்பெருமான் , பொழுது விடிந்த அளவில் பூவும் அபிடேக தீர்த்தமும் கொண்டு திருவடியை வணங்க இயலாத பிறப்பினதாகையாலே , பெருமானைச் சுற்றி வலமாக வந்து தன் வாயிலிருந்து சுரக்கும் நூலினாலே வட்டமாகப் பந்தலை அமைத்து வழிபட்ட சிலந்தியை அரசனாக்கி , எல்லா நலன்களையும் அருளிய ஆற்றலுடையவராவர் .

குறிப்புரை :

புலர்ந்தகால் - பொழுது புலர்ந்த வேளையில் . காலில் என ஏழனுருபு விரிக்க . அத்துச்சாரியை குறைந்து நின்றது எனின் , காலம் என்றதன் அம் ஈறு குறைந்ததெனலும் வேண்டும் . அக்கால் இக்கால் , ஒருகால் எனக் கால் என்ற சொல்லே காலம் என்னும் பொருட்டாதல் அறிக . பூவும் நீரும் புலர்ந்தகால் கொண்டு எனினும் . புலர்ந்தகால் போற்ற எனினும் பொருந்தும் . மாட்டா - மாட்டாமல் . சிலந்தி வலஞ்செய்து , வாயின் நூலால் , வட்ட அணைப்பந்தர் செய்தது . செய்த சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாக்கிச் சீர்மைகள் அருள வல்லவர் அடிகளார் . வட்டம் + அணை = வட்டவணை , வட்டணை , வட்டமாக அணைந்து செய்த பந்தர் வட்டணைப்பந்தர் . வட்டணை - வட்டம் என்பது ( பிங்கலந்தை 2286). சீர்மை - புகழ் . ` குலத்திற்கும் மாசில் குடிமைக்கும் சீர்மைக்கும் ` ( தஞ்சை வாணன் கோவை . 241). நலம் திகழ் சோலை சூழ்ந்தது திருநனிபள்ளி . மாட்டாத சிலந்தி எனல் தூராந்வயம் .

பண் :

பாடல் எண் : 3

எண்பதும் பத்து மாறு மென்னுளே யிருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக் கலக்கநா னலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

செண்பகம் , விளங்கும் புன்னை , செழித்து ஓங்கி வளர்ந்த குரவம் வேங்கை இவை கலந்து காணப்படும் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளிப் பெருமானே ! 96 தத்துவ தாத்துவிகங்களும் என் உடம்பினுள்ளே நிலையாக இருந்து சிறிதும் கண்ணோட்டமின்றி என்னைக் கலக்கவே அடியேன் துன்பத்தாற் சீர்குலைந்தேன் .

குறிப்புரை :

எண்பதும் பத்தும் ஆறும் - தொண்ணூற்றாறும் ( தத்துவம் முப்பத்தாறும் தாத்துவிகம் அறுபதும் ). என்உளே - என் கண்ணே . உயிர்ச் சார்பாதலின் என்னுளே என்றார் . மன்னி - நிலை பெற்று . கண்பழக்கு - கண்ஓடிப்பழகிய பழக்கம் . கண்ணோட்டம் . ஒன்றும் - சிறிதும் . கலக்கக் கலங்கி அலைந்து வருந்தினேன் . அலைக்க அழிதல் , அழித்தல் - அலைக்கழித்தல் . அலக்கழிதல் மரூஉ . செண்பகம் , புன்னை , குரவம் , வேங்கைகள் நண்பு செய்யும் சோலை சூழ்ந்த நனிபள்ளி . நள் + பு = நண்பு - செறிவு .

பண் :

பாடல் எண் : 4

பண்ணினார் பாட லாகிப் பழத்தினி லிரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக் கருத்தொடு கற்ப மாகி
எண்ணினா ரெண்ண மாகி யேழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைக டீர்ப்பார் நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

நனிபள்ளிப்பெருமான் பண் அமைந்த பாடலாகவும் , பழத்தின் சுவையாகவும் , கண்ணிற் பொருந்திய பார்வையாகவும் , கருத்தில் அமைந்த காதல் நினைவாகவும் , எண்ணுகின்றவருடைய எண்ணமாகவும் ஏழுலகங்களாகவும் தம்மைச் சரணமாக அடைந்த அடியவர்களுடைய வினைகளைப் போக்குபவராகவும் உள்ளார் .

குறிப்புரை :

பண்ணின் ஆர் பாடல் - பண்களோடு பொருந்திய பாடல்கள் . பண்ணில் ( இன்னிசைப் ) பாடல் . பழத்தினிற் சுவை இரதம் - சுவை . கண்ணின் ஆர் பார்வை - கண்ணிற் பொருந்திய பார்வை ( புறநோக்கம் ). கருத்தொடு கற்பம் - கருத்திற் கற்பனை ; ` வாயானை மனத்தானை மனத்தில் நின்ற கருத்தானை ` என்றதிற்போல மனமும் நினைவும் கொள்க . கற்பம் - சங்கற்பம் . எண்ணின் ஆர் எண்ணமும் கருத்தொடு கற்பமும் வெவ்வேறாதல் அறிக . எண்ணம் - அறிவு . எண்ணங்கொள்வான் - அறிவைக் கொள்ளவேண்டி ( சிந்தாமணி 636). எண்ணினார் எண்ணம் - எண்ணியவரதெண்ணம் , எண்ணிற் பொருந்திய கணக்கும் ஆம் . ` கருதியது முடித்தலும் காமுறப் படுத்தலும் ` ( சிறுபாணாற்றுப் 213) என்புழி நச்சினார்க்கினியர் எழுதிய உரையை நோக்கின் , ` கருதல் ` என்றதே ` காதல் ` என்று மருவிற்று எனல் விளங்கும் . கருத்தொடு கற்பம் என்றற்குச் சவிகற்பம் நிருவிகற்பம் ; காதல் நினைவு என்றும் கூறலாம் . ஏழுலகு என்றபின் ` அனைத்தும் ` என்றது முழுமைப் பொருட்டு . ஆகி ஆறும் தீர்ப்பார் என்னும் முற்றைக் கொண்டன . நண்ணினார்தம் வினைகளைத் தீர்த்தற் பொருட்டுப் பாடல் முதலியன ஆனார் எனவே அவ்வடிகளாரைப் பாடிச் சுவைத்துப் பார்த்துக் கருதிக் கற்பித்து எண்ணி உலகைப் பாராது பரமே தரிசித்து வினைகளைப் போக்குதல் உயிர்களது கடனாயிற்று . ` உலகேழும் ஆயான் ` ( தி .8 திருவாசகம் . 181)

பண் :

பாடல் எண் : 5

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதி னாளு மரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

இருள் நீங்கும் காலையிலும் மாலையிலும் பெருமானுக்கும் தமக்கும் உள்ள உறவை மறக்காமல் திருவைந்தெழுத்தை ஓதினால், நாடோறும் சிவனடிக்கண் அன்பு பெருகி வளரும். அத்தகைய அன்பு வளருவதன் பேறாக, செய்யும் வஞ்சனையால் பாற்சோற்றை நஞ்சுடன் கலந்து சமைத்து, நல்ல வழக்கம் இல்லாத சமணர்கள் கொடுத்த அந்த நஞ்சை, அமுதமாக்கி அருளினார் திருநனிபள்ளியடிகள்.

குறிப்புரை :

இருள் துஞ்சு காலையும் மாலையும் `என்று நீ அன்று நான்` என்றபடி தோன்றாத் துணையாய் இடைவிடாது உயிர்க்குயிராய் உள்ளொளியாய்த் தொடர்ந்து புறம் புறம் திரிந்து காத்தருளும் செல்வத்தை மறந்திராமல், பின்பினே திரிந்து பிடித்துக்கொண்டு பேரா இன்பம் தீரா தெய்தத் திருவைந்தெழுத்தை விதிப்படி ஓதிவரின், நாளும் சிவனடிக்கு அன்பு பெருகி வளரும். அரனடிக்கன்பு விளைக்கும் பயனுக்கு அளவில்லை, தாலீபுலாக நியாயம் பற்றி ஓர் எடுத்துக்காட்டு:- நல்வழக்கம் இல்லாத தீய அமணர் வஞ்சனையால் பாற்சோறாக்கி அதிற் கலந்து கொடுத்த நஞ்சினை அமுதம் ஆக்கி நாயேனையும் காத்தருளினார் நனிபள்ளி யடிகளார். சிவபத்தியால் நலம் அனைத்தும் நண்ணலாம். தொடர்ச்சி என்னும் தலைப்பில் இத்திருப்பாடலின் விளக்கமாக எழுதிய எமது கட்டுரையைச் சைவ சித்தாந்த மகா சமாஜத்துப் பொன் விழா மலருட் காண்க.( தி.12 பெரிய. திருநா. 105.) பார்க்க.

பண் :

பாடல் எண் : 6

செம்மலர்க் கமலத் தோனுந் திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பா னாழியா னகழ்ந்துங் காணான்
நின்மல னென்றங் கேத்து நினைப்பினை யருளி நாளும்
நம்மல மறுப்பர் போலு நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

செந்தாமரைப் பூவிலுள்ள பிரமன் திருமுடியைக் காணவும் , சக்கரத்தை ஏந்திய திருமால் அகழ்ந்தும் , தாமரை போன்ற பாதங்களைக் காணவும் , இயலாதாராய்த் தம்மைக் களங்கமற்றவர் என்று போற்றும் எண்ணத்தை அவர்களுக்கு வழங்கி நம்முடைய களங்கங்களையும் போக்குபவர் நனிபள்ளி அடிகளார் .

குறிப்புரை :

செம்மலர் - செந்தாமரை . ஆழியான் - சக்கிராயுதத்தன் , பாற்கடலான் . சிவபக்தியிலாழ்தலை யுடையவன் . அகழ்ந்தும் - மண் இடந்தும் . நின்மலன் - மலமில்லான் . விமலன் . நினைப்பு - தியானம் . நம் மலம் - நமக்குள்ள மும்லங்களையும் . அறுப்பர் - அறச்செய்வர் . மும்மை மலம் அறுவித்து , ` காண்பான் அகழ்ந்தும் காணான் ` என்க . ஏத்தும் நினைப்பை அருளி நாளும் மலம் அறுப்பர் . போலும் , அசை . அவ்விருவர்மலமும் அறுக்காதார் , நம்மலம் அறுப்பர் என்றவாறு ( தி .8 திருவாசம் 404,367,399, 403,175,176,178,186,192,235 முதலியன ).

பண் :

பாடல் எண் : 7

அரவத்தால் வரையைச் சுற்றி யமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்று மாலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் மடிய ராகி வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார் நனிபள்ளி யடிக ளாரே.

பொழிப்புரை :

மந்தரம் என்ற மத்திலே வாசுகி என்ற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றித் தேவரும் அசுரரும் பேரொலி செய்து கடைந்த போது தோன்றிய நஞ்சத்தை அமுதாக உண்டவராய் , தம் அடியவருடன் கலந்து என்றும் தம் அடிமையில் நீங்குதல் இல்லாத அவர்களை நரகத்தில் வீழாமல் காப்பவராய் உள்ளார் நனிபள்ளி அடிகளார் .

குறிப்புரை :

அரவத்தால் - வாசுகி என்னும் பாம்பால் . வரையை - மந்தரமலையாகிய மத்தை . சுற்றி - சூழவளைத்து . அமரரோடு அசுரர் - தேவாசுரர் - இருதிறத்தரும் , அரவித்து - அரவம் ( பேரொலி ) செய்து . அரவம் என்னும் பெயரடியாகத் தோற்றிய தொருவினையெச்சம் . அரவித்துக்கடைய ஆலநஞ்சு தோன்றிற்று . அதனை அமுதாக உண்டு அழியா முதல்வன் என்றதனை விளக்கினார் . தம் அடியாராகி , விரவி ஆகி வீடு ( அழிவு ) இல்லாத் தொண்டர் வீழ ஒட்டார் . நரகத்தில் வீழ ஒட்டார் (- இசையார் ) சிவனடியாரெவர்க்கும் நரகம் புகல் இல்லை என்பது திண்ணம் :

பண் :

பாடல் எண் : 8

மண்ணுளே திரியும் போது வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன் புழுப்பொதி பொள்ள லாக்கை
* * * * * * * * *

பொழிப்புரை :

இவ்வுலகினில் சுற்றித் திரியும் போது பல குற்றங்கள் ஏற்படுகின்றன . புண்ணினுள்ளே பல துவாரங்களை உடையதாய்ப் புழுக்கள் உள்ளே மறைந்திருக்கும் பலதுளைகளை உடைய உடம்பு ...

குறிப்புரை :

மண்ணுலகில் திரியுங்காலமெல்லாம் குற்றங்களே உயிர்க்குப் பெருகிவரும் . புண்ணுளே புரைபுரை :- ` ஆக்கை புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கி ` ( தி .8 திருவாசகம் .) புழுப்பொதி பொள்ளல் ஆக்கை - புழுக்கள் பொதிந்த துளைகளையுடைய உடல் ; ` பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொ ளாக்கை , ` ( தி .4 ப .67 பா .5.) பொள்ளல் - துளைகள் . ` பொள்ளலுடலி னலந் தீது புந்தி செய்யார் ` ( ஞான வாசிட்டம் ).

பண் :

பாடல் எண் : 9

பத்துமோ ரிரட்டி தோளான் பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோ ரிரட்டி தோள்கள் படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப் பரிந்தவற் கருள் கொடுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்து நனிபள்ளிப் பரம னாரே.

பொழிப்புரை :

பக்தர்கள் முன் நின்று துதித்துப் புகழும் நனிபள்ளிப் பெருமான் இருபது தோள்களை உடைய இராவணன் தன் பெருமையைப் பரக்கச் சொல்லிக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட , இருபது தோள்களை உடைய அவன் உடல் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றிப் பின் அவன் தன் பத்து வாய்களாலும் இசைப் பாடல்களைப் பாட அவனுக்கு அருள் செய்தவர் ஆவர் .

குறிப்புரை :

பத்தும் ஓர் இரட்டி - இருபது . பாரித்து - பரக்கச் சொல்லி , ( சிந்தாமணி ) அடியிட்டு ( தி .8 திருக்கோவையார் . 132) அடர - தாக்க . பத்துவாய்களாலும் சாம கீதம் பாடினான் . பரிந்து - இரங்கி பத்தர் - தொண்டர் .
சிற்பி