திருநாகைக்காரோணம்


பண் :

பாடல் எண் : 1

மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகி லுய்யலா நெஞ்சி னீரே.

பொழிப்புரை :

மனமே ! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம் .

குறிப்புரை :

நெஞ்சினீரே , வினைப்பயனாக , எடுத்த உடலின் சார்பாக எய்தும் தாய் , தந்தை , மனைவி , மக்கள் மற்றுள்ள சுற்றம் என்னும் பாசக்கடற்குள் விழுந்தழுந்தித் துன்பத்துக்கு இடமாகாமல் , நினையுமாறு நினையவல்லீர் ஆகில் உய்யலாம் . முழங்கும் பெரிய கடல் சூழும் திருநாகையில் மன்னும் காரோணத்திறைவனை நினைய வல்லீராகில் உய்யலாம் . நினையும் ஆறு - நினையும் வண்ணம் . காயாரோகணம் என்பது காரோணம் என்று மருவிற்று என்பர் .

பண் :

பாடல் எண் : 2

வையனை வைய முண்ட மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற் றிசைமுகன் சிரமொன் றேந்தும்
கையனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.

பொழிப்புரை :

எருதை ஊர்பவனாய் , ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய் , செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே ! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும் .

குறிப்புரை :

வையனை - எருதூர்பவனை . வையம் - எருது . வையம் - மண்ணுலகம் . மால் - திருமால் . அங்கம் தோள்மேல் கொண்ட செய்யன் :- அம் மாலைத் தண்டத்தால் அடித்துத் தோலை யுதிர்த்து முதுகெலும்பைப் பிடுங்கித் தண்டமாகக் கையிற் கொண்ட கங்காள மூர்த்தம் . கங்காளம் - தசைகிழிந்த உடலின் எலும்பின் கூட்டம் . முழுவெலும்பு . ` கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடி `. ( தி .8 திருவாசகம் 265) செய்யபோது - செந்தாமரைப் பூ . திசை - நான்கு . ` திசைமுகன் ` எண்ணையுணர்த்தும் வடமொழியாட்சி முறை . சிரமேந்துங்கை - கபாலக்கை . ஐயன் - முதல்வன் . நினைந்த நெஞ்சு என்னும் பெயரெச்சம் , உய்திக்கு ஏதுக்குறிப்பு .

பண் :

பாடல் எண் : 3

நிருத்தனை நிமலன் றன்னை நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை விளைபொருண் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை யுணர்த லானா முய்ந்தவா நெஞ்சி னீரே.

பொழிப்புரை :

மனமே ! கூத்தனாய் , தூயனாய் , நீண்ட இவ்வுலகம் , தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய் , வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய் , தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே .

குறிப்புரை :

நிருத்தன் - கூத்தன் . நிமலன் - இயல்பாகவே தூய தன்மையன் . நீள் நிலம் - நீண்டவுலகு . ( மண்ணுலகு ). விண்ணின் மிக்க விருத்தன் - விண்ணோர் பலர்க்கும் மேலானவன் . விண் இடவாகு பெயர் . வேதவித்து - ( தி .6 ப .79 பா .3) வேதங்களைப்படைத்தவன் . விளை பொருள் மூலம் - விளைகின்ற எப்பொருட்கும் நிமித்த காரணமானவன் . மாயை முதற்காரணம் . தநுகரண முதலிய விளை பொருள் காரியம் . சிவசத்தி துணைக் காரணம் . பதி நிமித்த காரணம் . காரிய ` காரணங்கள் ... ஆக்குவன் அகிலம் எல்லாம் ` ( சிவஞான சித்தியார் . சூ . 1. 18) கருத்தன் - வினைமுதல்வன் . ` ஒருத்தன் ` ` ஒன்றேபதி ` சிவ ஞானபோதம் . ` பதிதான் ஒன்று என்று அறையும் ` ( சித்தியார் சூ . 1. 2.) உணர்தலான் நாம் உய்ந்தவாறு . ( தி .4 ப .69 பா .5) இல் நான் கொடியனாமாறு எனக் கொள்ளலாகாமை அறிக . நெஞ்சினீரே நாம் உய்ந்தவாறு ஒருத்தனை உணர்தலால் என்க .

பண் :

பாடல் எண் : 4

மண்டனை யிரந்து கொண்ட மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே யம்மநா முய்ந்த வாறே.

பொழிப்புரை :

உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தெளிந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே ! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும் .

குறிப்புரை :

மண்தனை - மண்ணுலகை இரந்துகொண்ட மாயவன் இது மாவலி மன்னனிடத்திலே மூவடி மண்ணிரந்த வரலாறு குறித்தது . வாமனனாகிச் சென்று சிறிது இரப்பான்போற்காட்டி மூவுலகும் பெற்றமையால் மாயன் என்றார் . அசுரர் x சுரர் . தெள் + திரை = தெண்டிரை , ஈண்டுப் பாற்கடல் . கடைய வந்த ஏதுப்பொருட்டாய வினையெச்சத் தொடர் . வந்த தீவிடம் பெயரெச்சத்தொடர் . தீவிடம் - பண்புத்தொகை . உண்ட கண்டன் , பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது . அண்டன் தேவன் ; அண்டவாணன் ; அண்டமுதல்வன் .

பண் :

பாடல் எண் : 5

நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ் சூடி
மறையொலி பாடி யாடன் மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த விடும்பைபோ யின்ப மாமே.

பொழிப்புரை :

கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி , வேதங்களைப் பாடிக்கொண்டு , சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய் , கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும் .

குறிப்புரை :

நிறைபுனல் - கங்கைநீரினை . அணிந்த - அழகுறுத்திய . சென்னி :- சடைமுடிக்கு ஆகுபெயர் . நீள் நிலா - நீண்டபிறை நிலாவும் . அரவம் - பாம்பும் . மறை யொலி - வேதமுழக்கம் . ` மயானத்து மறையொலிபாடி யாடல் மகிழ்ந்த மைந்தன் ` என்று மாற்றிக்கொள்க . கறை - ( நீல ) நிறம் . ` கருங்கடல் ` ` கருமலி கடல் ` ( தி .4 ப .71 பா .9) என்னும் வழக்குணர்க . இடும்பை - துன்பம் . இன்பம் - சிவப்பேறுமாம் . இடும்பை போதல் பாசவீடுமாம் .

பண் :

பாடல் எண் : 6

வெம்பனைக் கருங்கை யானை வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த காலனை ஞால மேத்தும்
உம்பனை யும்பர் கோனை நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணநா முய்ந்த வாறே.

பொழிப்புரை :

கொடிய , பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய் , கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய் , உலகங்கள் துதிக்கும் தேவனாய் , தேவர்கள் தலைவனாய் , நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த நெஞ்சே ! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று .

குறிப்புரை :

வெம்மை - கொடுமை . பனைக்கை - பனைமரம் போலப் பருத்த கை . கருங்கை . ` பனைக்கை மும்மதவேழம் ` வெருவ - அஞ்ச . அன்று - கயாசுரன் முன்வந்து நின்ற அந்நாளில் . உரிவை - தோல் . கம்பன் - கச்சித்திருவேகம்பநாதன் . காலற் காய்ந்தகாலனை - காலனைச் சினந்துதைத்தகாலனை . ` காலகாலன் `. ஞாலம் - உலகம் . உம்பன் - தேவன் . உம்பர்கோன் - தேவாதி தேவன் . செம்பொன் - ` செம்பொற்றியாகேசன் ` நாம் உய்ந்தவாறு திண்ணம் .

பண் :

பாடல் எண் : 7

வெங்கடுங் கானத் தேழை தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற் கடுசர மருளி னானை
மங்கைமா ராட லோவா மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப் பெற்றுநாங் களித்த வாறே.

பொழிப்புரை :

வெப்பம் மிக்ககொடிய காட்டிலே , பார்வதியோடு வேடன் வடிவில் சென்று , அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய் , பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே !.

குறிப்புரை :

வெங்கானம் , கடுங்கானம் ; காட்டின் வெம்மையும் கடுமையும் அறிய நின்றன . கானத்து - காட்டில் . ஏழை - உமா தேவியார் . ` ஏழைபங்காளன் ` எருதேறி ஏழையுடனே ..... வந்து என் உளமே புகுந்த ; அங்கு - அக்காட்டில் . அருச்சுனன் தவம்புரிந்த இடத்தில் . அமர் - போர் . மலைந்து - மாறுபட்டு , போராடி . பார்த்தற்கு - அருச்சுனனுக்கு . அடுசரம் - கொல்லும் பாணம் ( பாசுபதம் ). ஆடல் - ஆடுதல் . ஓவா - ஒழியாத . கங்குலும் பகலும் காணப் பெற்றுக் களித்தல் - இரவும் பகலும் இறைவனைக் கண்டு வணங்கி யின்பம் அடைதல் . ` நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும் . துன்றுமலர் இட்டுச் சூழும் வலஞ்செய்து , தென்றல் மணம் கமழும் தென் திருவாரூர் புக்கு , என்றன் மனம் குளிர என்று கொல் எய்துவதே ` ( தி .7 ப .83 பா .2)

பண் :

பாடல் எண் : 8

தெற்றினர் புரங்கண் மூன்றுந் தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர் சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலு நாகைக் காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்தி லாரே.

பொழிப்புரை :

மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய் , வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர் . மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார் .

குறிப்புரை :

தெற்றினர் - மாறுபட்டவர் ( பகைவர் ). செற்ற - அழித்த . வெஞ்சிலையர் - வெய்ய ( மேருமலை ) வில்லியார் . வஞ்சர் சிந்தையுள் - வலியரது மாய மனத்தில் . கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியான் . சேர்வு - அடைதல் . கற்றவர் - திருவடியை வணங்கக் கற்றவர் . ` கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன் ` ( சம்பந்தர் ) காரோணத்தைக் கருதி ஏத்தப் பெற்றவர் பிறந்தவராய்ப் பிறவியின் பயனை அடைந்தவராவர் . அவ்வாறு ஏத்தாத வகையிலே பிறந்தவர் இருந்தும் பிறவாதவரே . இறந்தவரே யாவர் . ` புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே ` ( தி .6 ப .1 பா .1) ` பிறந்தேன் நின் திருவருளே பேசின் அல்லாற் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே ` ( தி .6 ப .47 பா .10) மற்று வினைமாற்றின்கண் வந்தது .

பண் :

பாடல் எண் : 9

கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர்க மல பாதத்
தொருவிர னுதிக்கு நில்லா தொண்டிற லரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ டெம்பிரான் செம்பொ னாகம்
திருவடி தரித்து நிற்கத் திண்ணநா முய்ந்த வாறே.

பொழிப்புரை :

மனமே ! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான் . கங்கை , பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று .

குறிப்புரை :

கருமலிகடல் :- கறைமலிகடல் ` ( தி .4 ப .71 பா .5) கமலபாதம் - தாமரை மலர்போலுஞ் சேவடி . பாதத்து ஒருவிரல் நுதி - திருவடியின் ஒருவிரலது நுனி . ஒண்திறல் - ஒளியும் வலியும் . உக்கான் - அழிந்தான் . திருவடியின் ஒருவிரல் நுனியைத் தாங்கும் ஆற்றல் இன்றி அழிந்தான் அப்பெருவலியிராவணன் . தலைமேற் கங்கை , இடப்பால் உமை நங்கை , எம்பிரான் செம்பொற்றிருமேனி என்னும் மூவர் சுமையும் உடைய திருவடி முழுவதும் தாங்கி நிற்கின்றோம் வலியே இல்லாத நாம் ; ` நெஞ்சினீரே ` என்பது மேற்போந்தமையின் , ` நாம் ` என்று கூறினார் . நாம் உய்ந்தவாறு திண்ணம் . இதற்குத் திருவடி தரித்து நிற்றல் ஏது என்றவாறு .
சிற்பி