திருஇன்னம்பர்


பண் :

பாடல் எண் : 1

விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும் பேடலி யாணர் போலும்
வண்ணமா லயனுங் காணா மால்வரை யெரியர் போலும்
எண்ணுரு வநேகர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பரில் உறைந்து எல்லோரையும் ஆளும் தலைவர் , தேவர்களுடைய பல மகுடங்களும் நெருங்கிக் கலந்த திருவடிகளை உடையவர் . பார்வதி பாகர் . ஆண் பெண் அலி ஆனவர் . நல்ல அழகுடைய திருமாலும் , பிரமனும் அடிமுடி காணாத வகையில் பெரிய தீ மலையாகக் காட்சி வழங்கியவர் . அட்டமூர்த்தியாயும் அவற்றினும் பல வடிவத்தராயும் உள்ளவர் .

குறிப்புரை :

விண்ணவர் - தேவர் . மகுடகோடி - முடித்தொகை நிரல் . மிடைந்த - கலந்த . சேவடியர் - செய்ய தாளர் . திருவடியை முடியிற்பட வணங்கும் அமரர் தொகைக்கு அளவில்லை என்றதாம் . பெண்ணொருபாகர் - மாதியலும் பாதியர் , பேடு , அலி , ஆணர் - ஆணும் ( பெண்ணும் ) அலியும் பேடும் ஆகியவர் . வண்ணம் - அழகு . கார்வண்ணமுமாம் . மால் - திருமாலும் . அயனும் - பிரமனும் . மால் வரை எரியர் - பெரிய மலைவடிவான பேரொளியினார் . தீயுருவான மலை :- திருவண்ணாமலை . எண்ணுரு அநேகர் - எட்டுருவிற் பல வானவர் . எண்ணுகின்ற உருவத்திலளவிலாதவர் . எட்டுரு ( அட்ட மூர்த்தம் ) எனினும் ஒவ்வொன்றிலும் பல உள்ளன . திருவின்னம்பரில் எழுந்தருளிய உடையார் . ஈசனார் - உடையார் .

பண் :

பாடல் எண் : 2

பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலும்
துன்னிய சடையர் போலுந் தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும் மாதிட மகிழ்வர் போலும்
என்னையு முடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசர் வேதத்தை ஒலித்து , இடையில் ஆடைமேல் பாம்பைஇறுகக் கட்டி , செறிந்த சடையில் பிறையும் ஊமத்தம் பூவும் அணிந்து , மழுப்படை தாங்கிய கையராய் , பார்வதி பாகராய் , அடியேனையும் அடியவனாக உடையவர் .

குறிப்புரை :

பன்னிய - சொல்லிய , ஆராய்ந்த . மறையர் - வேத ( முதல்வ ) ர் . பாம்பு அரைஉடையர் - அரையிற்பாம்பினைக் கச்சாகக் கொண்டணிந்தவர் . துன்னிய - நெருங்கிய ; கற்றையான . தூமதி - வெண்பிறை . மத்தர் - சென்னியர் . ( மத்தகர் என்பதன் மரூஉ ). மன்னிய - பொருந்திய , மழுவர் - மழுப்படையுடையவர் . மாது இடம் மகிழ்வர் - உமாதேவியாரை இடப்பாற் கொண்டு மகிழ்பவர் . மாதிடத்தால் மகிழ்வர் . இடத்திலிருந்து மாது மகிழப் பெறுபவர் . என்னையும் ( ஆளாக ) உடையவர் , ` உடையார் ` என்றதால் அடிமை ( ஆள் ) என்பது பெறவைத்தார் .

பண் :

பாடல் எண் : 3

மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும்
செறிவுடை யங்க மாலை சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் பார்வதி பாகராய் , தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும்சமணத் தோற்றத்தை நீக்கி , அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய் , செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய் , அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன் .

குறிப்புரை :

மறி - மான் கன்று . ஒருகையர் - ஒருகையில் ஏந்தியவர் , மான்கன்றேந்திய ஒரு கையினார் எனலுமாம் . மாது உமை உடையார் - உமை மாதினை ( இடப்பால் ) கொண்டிருப்பவர் . பறிதலைப் பிறவி :- தலைமயிரைப் பறித்தலை வழக்கமாக உடைய சமண் தோற்றத்தை நீக்கிச் சூலைநோய் தந்து தடுத்தாண்டு . பணிகொள - பாமாலை பாடப் பயில்வித்துப் பணி கொள்ள . ( தி .12 அப்பர்புராணம் . 73) பணி செய்ய வல்லரல்லாரையும் ஈசனார் பணிகொள்ள வல்லர் . அங்கமாலை - தலைமாலை . கங்காளரூபம் வேறு . எறிபுனல் - கங்கை .

பண் :

பாடல் எண் : 4

விடமலி கண்டர் போலும் வேள்வியை யழிப்பர் போலும்
கடவுநல் விடையர் போலுங் காலனைக் காய்வர் போலும்
படமலி யரவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
இடர்களைந் தருள்வர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , நஞ்சு பொருந்திய கழுத்தினராய் , தக்கன் வேள்வியை அழித்தவராய் , பெரிய காளையைச் செலுத்துபவராய் , கூற்றுவனைக் கோபித்தவராய் , படம் எடுக்கும் பாம்பினை உடையவராய் , பரவிய புலித்தோலை உடுத்தவராய் , அடியார்களுடைய துன்பங்களைப் போக்கி அருள் செய்பவர் ஆவர் .

குறிப்புரை :

விடம் மலிகண்டர் - பாற்கடலின் எழுந்த நஞ்சு நின்று நிறத்தினை மிகக் காட்டிய திருக்கழுத்துடையவர் . வேள்வியை அழிப்பர் :- தக்கயாகசங்காரத்தைக் குறித்தது . கடவும் - செலுத்தும் . நல் விடையர் - அழகிய எருதுடையவர் . காலனைக் காய்வர் - மார்க் கண்டேயர்க்காக யமனை உதைத்த வரலாறு குறித்தது . படம் மலி அரவர் - ஐந்தலைநாகம் பூண்டவர் . பாய்புலி - இறந்த காலவினைத் தொகை . புலித்தோலுடுத்தவர் . இடர்களைந்து அருள்வர் :- இடர் - பாச பந்தம் . களைதல் - பாசவீடு . அருளல் பேரின்பந் தரல் . ( சிவப் பேறு ). ` நிறை யுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே `. ( தி 1 ப .52 பா .1)

பண் :

பாடல் எண் : 5

அளிமலர்க் கொன்றை துன்று மவிர்சடை யுடையர் போலும்
களிமயிற் சாய லோடுங் காமனை விழிப்பர் போலும்
வெளிவள ருருவர் போலும் வெண்பொடி யணிவர் போலும்
எளியவ ரடியர்க் கென்றும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் வண்டுகள் மொய்க்கும் கொன்றைப்பூமாலை பொருந்திய , ஒளிவீசும் சடையை உடையவராய் , மகிழ்ச்சியுறும் மயில் போன்ற மென்மையை உடைய பார்வதி பாகராய் , மன்மதனைச் சாம்பலாகுமாறு விழித்தவராய் , எல்லா அண்டங்களும் நிறைந்த விசுவரூபம் எடுத்தவராய் , திருநீற்றை அணிபவராய் , அடியவர்கள் எப்பொழுதும் வணங்கி வேண்டுவதற்கு எளியவராய் உள்ளார் .

குறிப்புரை :

அளி - வண்டுகள் . சாதியடை . அவிர்சடை :- செஞ் சடையொளி . களிமயிற்சாயல் - களிப்புடைய மயில் போலுஞ் சாயலை யுடைய உமாதேவியார் . காமனைவிழிப்பர் - மன்மதனைத் தீவிழியால் எரிப்பர் . பெண்ணின்பால் ஆசை நீத்தவரே காமத்தைக் கடந்தவர் ஆவர் . சிவபிரான் மாதொருபாகராயிருந்தே மன்மத தகனம் செய்தது பெருவியப்பென்றபடி . வெளிவளர் உருவர் :- அண்டபகிரண்டம் முழுவதும் நிறைந்த விசுவரூபி . ` உலகினுக்கு உயிரும் ஆகி உலகுமாய் நின்றது ` ( சித்தியார் .) வெண்பொடி - திருநீறு . அடியர்க்கு என்றும் எளியவர் . அடியரல்லாதார்க்கு என்றும் அரியர் என்பது அதனாற் பெறப்பட்டது . இப்பாட்டில் உள்ள பொருள் முரண் அறிதற்பாலது .

பண் :

பாடல் எண் : 6

கணையமர் சிலையர் போலுங் கரியுரி யுடையர் போலும்
துணையமர் பெண்ணர் போலுந் தூமணிக் குன்றர் போலும்
அணையுடை யடியர் கூடி யன்பொடு மலர்கள் தூவும்
இணையடி யுடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , அம்பு பொருந்திய வில்லினராய் , யானைத்தோற் போர்வையினராய் , பார்வதி பாகராய் , தூய மாணிக்கக் குன்றம் போல்பவராய் , உள்ளத்தில் தியானம் செய்யும் அடியார்கள் கூடி அன்பொடு மலர்களைத் தூவும் திருவடி இணையை உடையவருமாவார் .

குறிப்புரை :

கணை - திருமால் ஆகிய பாணம் . சிலை - மேரு மலையாகிய வில் . கரி - யானை . உரி - தோல் . கரியுரிஉடையார் - யானைத் தோலுடையார் . துணை அமர் பெண்ணர் - துணைவியாக இடப்பாலிற் பொருந்திய உமாதேவியையுடையவர் . தூமணிக் குன்றர் - தூய அரதனக்கிரியவர் . தூய மணிக்குன்று திருக்கயிலையுமாம் . அணையுடை அடியர் - தம் திருவடி நிழலை அணைதலையுடைய தொண்டர் . கூடி - பலர்கூடி . அன்பொடு பத்தியுடன் , மலர்கள் தூவும் - பூக்களைத் தூவிப் பூசனைபுரியும் . இணையடியுடையார் - திருவடித்துணைகளை யுடையவர் : இணையடிகளை அடைய மலர்கள் தூவும் அன்பர்கள் அடியார்கள் .

பண் :

பாடல் எண் : 7

பொருப்பமர் புயத்தர் போலும் புனலணி சடையர் போலும்
மருப்பிள வாமை தாங்கு மார்பில்வெண் ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும் உணர்விலார் புரங்கண் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் மலையை ஒத்த தோள்களை உடையவராய் , கங்கையை அணிந்த சடையினராய் , பன்றியின் கொம்பு , இளைய ஆமைஓடு எனும் இவற்றை அணிந்த மார்பில் வெண்ணூலைப் பூண்டவராய் , உருத்திர மூர்த்தியாய் , நல் உணர்வு இல்லாத அசுரர்களுடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய மேருமலையாகிய வில்லை உடையவருமாவார் .

குறிப்புரை :

பொருப்பு அமர் புயத்தர் - மலைபோலும் தோளினர் . மேருமலையாகிய வில் அமர்ந்த தோளார் . புனல் - கங்கைக்கு . அணி - அழகு செய்யும் . புனலை அணிந்த எனல் எளிது . இள ஆமை மருப்பு தாங்கும் மார்பில் - ` முற்றலாமை யிளநாகம் ` மருப்பு - கோடு , உருத்திர மூர்த்தி . மகாசங்காரகாரணனாகிய பரமசிவன் . அயன்மாலொடுங் குணதத்துவத்தின் வைகிப் பிரகிருதிபுவனாந்தம் சங்கரிக்கும் குணி ருத்திரனை அன்று . ( சிவஞானபாடியம் சூ . 1) மகாருத்திரனைக் குணி ருத்திரனாக வைத்து எண்ணுதல் கூடாது . ` நம்மவர் அவரே மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல் தேவர் என்றே இறுமாந்து என்னபாவம் திரிதவரே ` ( தி .8 திருவாசகம் திருச்சதகம் 4)

பண் :

பாடல் எண் : 8

காடிட முடையர் போலுங் கடிகுரல் விளியர் போலும்
வேடுரு வுடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலும்
கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , சுடுகாட்டைத் தங்கும் இடமாகக் கொண்டவராய் , கடுமையான குரலால் ஒலி உண்டாக்குபவராய் , அருச்சுனனுக்காக வேடர் வடிவு எடுத்தவராய் , பிறை சூடியவராய் , கிளைகளில் மலர்கின்ற கொன்றைப் பூவின் இதழ்கள் , தும்பை , வன்னி , கொக்கின் இறகு இவை அணியப்பட்ட சடையை உடையவராய் உள்ளார் .

குறிப்புரை :

காடு - சுடுகாடு . சுடுகாட்டை ஆடுதற்குரிய இடமாகக் கொண்டவர் . கடிகுரல் விளியர் - உலகையழித்து ஆடுங்கால் செய்யும் ஆரவாரத்தினர் . கடுமையான குரலால் ஒலியுண்டாக்குபவர் . அருச்சுனன் தவத்தில் இடையூறு நீக்கச் சென்ற வேட்டுவ வுருவத்தை யுடையவர் . மதிக்கொழுந்து - பிறைத்திங்கள் . கோடு அலர் - கொம்பில் மலர்கின்ற எருக்கு முதலிய பூக்கள் . வன்னி இலை , தும்பைப் பூ , கொக்கின் இறகு , அலர்ந்த கொன்றையின் இதழ் . இவைகள் பொருந்திய சடையை யுடையவர் ஈசனார் என்க . ஏடு - இதழ் .

பண் :

பாடல் எண் : 9

காறிடு விடத்தை யுண்ட கண்டரெண் டோளர் போலும்
நீறுடை யுருவர் போலும் நினைப்பினை யரியர் போலும்
பாறுடைத் தலைகை யேந்திப் பலிதிரிந் துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , கைப்புச்சுவையை உடைய நஞ்சினை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோள்களை உடையவராய் , திருநீறு அணிந்த வடிவினராய் , நினைப்பதற்கும் எட்டாதவராய் , பருந்துகள் நெருங்கும் மண்டை ஓட்டைக் கையில் ஏந்திப் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்று உண்பவராய் , காளை வடிவம் எழுதிய கொடியினராய் உள்ளார் .

குறிப்புரை :

காறிடுவிடம் - கைக்கின்ற நஞ்சு ( தி .4 ப .68 பா .4.) எட்டுத் தோளையுடையவர் . திருநீற்றுமேனியர் . நினைப்பினுக்கு அரியர் . ` நினைப்பினை யரியர் ` என்பது உருபுமயக்கம் . வாக்கு மனாதீதன் . பாறுடைத் தலை - சிதறுதலுடைய பிரமன் தலை . பலி - பிச்சை . ஏறுடைக் கொடியர் - ஆனேற்றுக் கொடியையுடையவர் .

பண் :

பாடல் எண் : 10

ஆர்த்தெழு மிலங்கைக் கோனை யருவரை யடர்ப்பர் போலும்
பார்த்தனோ டமர் பொருது படைகொடுத் தருள்வர் போலும்
தீர்த்தமாங் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தவே ழுலகும் வைத்தார் இன்னம்ப ரீச னாரே.

பொழிப்புரை :

இன்னம்பர் ஈசன் , ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை , மலையின் கீழ் நசுக்கியவர் . அருச்சுனனோடு போரிட்டு , அவனுக்குத் தெய்வப் படைகளைக் கொடுத்து அருளியவர் . தூய்மையை நல்கும் கங்கையைச் சடையில் வைத்தவர் . தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் சீவான்மாக்களை வாழ வைத்தவராவார் .

குறிப்புரை :

ஆர்த்து - ஆரவாரம் செய்து . அருவரை - அரிய கயிலாய மலை . வரையால் அடர்ப்பர் என மூன்றாவது விரிக்க . அடர்த்த லாவது மலைமேல் விரலூன்றி நெருக்கி வருத்துதல் . பார்த்தன் - அருச்சுனன் . படை - பாசுபதம் . தீர்த்தம் - தூய்மை . ` தன்னை ஏத்த ` என ஒரு சொல் வருவிக்க . வைத்தல் - படைத்தல் . ` உலகு ` என்றது உயிர்களை ஏத்துதல் . அவற்றிற் கன்றி ஏலாமை யறிக .
சிற்பி