பொது


பண் :

பாடல் எண் : 1

முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்கும்
கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை யமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

முத்து , மணி , பொன் , சிறந்த பவளக்கொத்து , வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய் , தேவர்கள் வழிபடும் வித்து , வேதவேள்வி , வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை , நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே !

குறிப்புரை :

மாயையைக் கடந்த முழுமுதல்வனுக்குவமையும் உருவகமும் அமைய மாயாகாரியப் பொருள்களைக் கூறுதல் உலகர் மரபு . அவருட்சிலர் , தம் அன்பும் அறிவும் ஆண்டவனது தூய நிலையும் தன்னொப்பின்மையும் அறிந்து , அம்மாயாகாரியப் பொருள் களையும் அடைமொழியால் வேறுபடுத்து , ஈயறியாப் ` பூந்தேனே ` என்பது போலக் கூறுந் திறம் மிக்கவர் . முத்து , மணி , பொன் , பவளம் , வயிரம் எல்லாம் சடம் . அவை சித்துப் பொருட்கு நிகாராகா . ` மன்னும் இருமாயையும் கடந்து வயங்கும் இறைவர்க்கு அம்மாயைத் துன்னும் மணி பொன் அமிழ்தாதி தொடுத்திட்டுவமை வழங்கி யாங்கென்னும் நிகராப் பொருள்களேயிதன்மாட்டுவமம் எடுத்த , எனக் கொன்னும் மதியிற் கூர்த்தவர்கள் குறிப்பர் இதற்கோர் நிகர் இன்றே ` ( தணிகைப் புராணம் 326). முழுமுதற் பவளக்கொத்து . வயிரக் கொழுந்து . அமரர் சூடும் வித்து :- தேவர்கள் தங்கள் முடிமிசையணியும் திருவடியை யுடைய ஞானசொரூபர் . ` உலகுக்கெல்லாம் வித்தவன்காண் ` வேள்வி - வழிபாடு . வேதக்கேள்வி - மறைச்சுருதி . அத்தன் - பொருளன் ; தலைவன் . நெஞ்சு நினைத்தது மட்டும் வியப்பன்று . அழகிதாக நினைந்ததும் வியப்பே .

பண் :

பாடல் எண் : 2

முன்பனை யுலகுக் கெல்லா மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை யிலங்கு சோதி யிறைவனை யரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த வெங்கள்
அன்பனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

வலியனாய் , உலகுக்கெல்லாம் தலைவனாய் , முனிவர்கள் துதிக்கும் இன்பனாய் , ஞான ஒளி வீசும் தலைவனாய் உள்ள , பார்வதி அஞ்சுமாறு தாருகவன முனிவர் யாகத்தில் புறப்பட்ட வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத்தோலை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

முன் x பின் ; முன்று x பின்று ; முன்பு x பின்பு ; முன்னர் x பின்னர் ; முன்றை x பின்றை ; முற்றை x பிற்றை ; முந்தை x பிந்தை ; முன்னை x பின்னை , முன்னது x பின்னது என்பனவும் பிறவும் ஆகமறுதலைச் சொற்கள் உள்ளன . அவற்றுட் பல ( பொருள் ) வேறுபாடுணர்த்துகின்றன . சிலவற்றின் வேறுபாடு புலப்பட்டிலது . ஈண்டு முன்பன் என்பது முன்னோன் என்னும் பொருள் பயக்கின்றது . உலகுக்கெல்லாம் முன்பன் :- ` முன்பாகி நின்ற முதலே போற்றி ` ` முன் பின் முதல்வன் ` ( தி .4 ப .90 பா .3.) ` முன்னவன் உலகுக்கு ` ` முன்னவன் காண் பின்னவன்காண் மூவாமேனி முதல்வன்காண் முடிவவன்காண் ` ` முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே ` முனிகள் - மனனசீலர்கள் . இன்பம் - பேரின்பவுருவினன் . இலங்கு சோதி யிறைவன் - புறத்தே செங்கதிர் வெண்கதிர் தீயாகத் திகழும் ஒளி முதல்வன் . அகத்தே உணர்வொளி யாயும் இன்பவொளியாயும் உணருமாறு விளங்கத் தங்கும் தலைவன் . அரிவை உமாதேவியார் . வல் + பனை + தட + கை = வலிய பனைபோலும் பெரிய துதிக்கையையுடைய ( களிறு ). வேள்வி தட்சயாகம் . எங்கள் அன்பன் :- ` அன்பே சிவம் `. ( தி .5 ப .17 பா .1)

பண் :

பாடல் எண் : 3

கரும்பினு மினியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை யிறப்பொடு பிறப்பி லானைப்
பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய் , சூரியன் போன்ற ஒளி உடையவனாய் , கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய் , பிறப்பு , இறப்பு இல்லாதவனாய் , மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள , பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

கரும்பினும் இனியான் :- ` ஆலையிற் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும் வேலையின் அமுதர் ` ( தி .4 ப .64 பா .2) ` கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மின் ( தி .5 ப .61 பா .5). ஆலைக்கரும்பின் இன்சாற்றை ` ( தி .4 ப .15 பா .7.) ` நினைவார்க் கெலாம் ஊற்றுத் தண்டொப்பர் ` (5.24.3). காய் கதிர்ச்சோதியான் - ` சிவசூரியன் ` காலையிற் கதிர் செய்மேனி ` ` அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ ?` இருங்கடல் அமுதம் - பெரிய பாற்கடலில் எழுந்த அமிர்தம் . ஆனவனை . ` கட லமுதே கரும்பே ` ( தி .8 திருவாசகம் 20.9) ` பேரா ஒழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலாமாளா இன்ப மாகடலே ` ( தி .8 திருவா . 480). ` அருளா ரமுதப் பெருங் கடல் வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த ` ( தி .8 திருவா . 487). இறப்பொடு பிறப்பிலான் - பிறப்பிலார் இறப்பிலார் ( தி .6 ப .10 பா .8) ` பிறவாதும் இறவாதும் பெருகினான் ` ( தி .6 ப .74 பா .6) பெரும் பொருட் கிளவியான் - மகா வாக்கியப் பொருளாயிருப்பவன் . பெயருக்கும் பொருளுக்கும் வேறுபாடில்லை என்னும்படி பொருளைப் பெயர் என்றும் பெயரைப் பொருளென்றும் ஆண்டனர் முன்னோர் . ` பெரும் பெயர்க்கடவுள் ` என ஞேயம் ஒன்றேபெரும் பெயருக்குப் பொருள் ஆகக் கூறினார் . ஏனையவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றலிற்றலைமை பற்றி என்று உணர்க . பெரும் பெயரெனினும் , மகா வாக்கியம் எனினும் , ஒரு வார்த்தையெனினும் ஒக்கும் . பெரும் பெயர்ப்பொருளே அஞ்செழுத்திற்கும் ஆதலின் , பெரும் பெயரோடு அஞ்செழுத்திடை வேற்றுமையின்மையுணர்க . ஈண்டிய பெரும் பெயர் - எல்லா நூற் பொருளும் திரண்டு கூடிய பெரும் பெயர் என்க . ` அருள் நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின் பொருள் நூல் தெரியப்புகின் ` என்பதனானும் உணர்க . ( இது சிவஞானபோதமாபாடிய வசனம் சிறப்புப்பாயிரத்துட் காண்க ). ` பெரும்பேச்சு உடையான் ` ( தி .4 ப .86 பா .6) என்று பின்னரும் வருதல் உணர்க . ` மகாவாக்கியம் ` ` பெரும் பேச்சு ` இரண்டும் ஒன்றாயிருத்தலை நோக்குக . ` பெரும் பெயர்க்கிளவி ` ` பெரும் பொருட்கிளவி ` என்னும் இரண்டும் வேறல்ல . ( தி .4 ப .74 பா .9) இல் விண்ணிலே மின்னல் மெய்யிலே பெரும் பொருள் கண்ணிலே மணி , இருளிலே சுடர் ஒப்பான் என்றதும் ஈண்டு உணரத்தக்கது . மெய்ம்மையே வழிபடா நிற்றலால் அம் மெய்ம்மையிற் பெரும்பொருள் ( சிவம் ) தோன்றப் பெறலாம் . அப்பெரும் பொருளைக் குறிப்பது பெரும் பெயர் . ஈண்டு ஒப்பான் என்றதால் மயக்கம் உளதாகலாம் . அப் பொருள் சொல்ல ஒன்றாதும் கருத வொன்றாதும் நிற்பதாதலின் பெரும் பொருள் ஒப்பான் என்றார் . மெய்க்கு ` அரும்பொன் `. வாய்க்குக் ` கரும்பினும் இனியான் `. கண்ணுக்குக் ` காய்கதிர்ச் சோதியான் `. மூக்கிற்கு ` இருங்கடலமுதம் `. செவிக்குப் ` பெரும் பொருட் கிளவியான் `. உயிர்க்கு ` இறப்பொடு பிறப்பிலான் `. நெஞ்சிற்கு அழகிதாக நினைதல் .

பண் :

பாடல் எண் : 4

செருத்தனை யருத்தி செய்து செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக் கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியு மருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.

பொழிப்புரை :

போரிடுவதில் விருப்பம் கொண்டு , நேராக அம்பைச் செலுத்தி முப்புரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அழித்தவனாய் , பொன்மேனி அம்மானாய் , தன்னைத் தியானிக்கும் தேவர்களுக்கு ஒப்பற்ற தலைவனாய் , பார்வதிபாகமாகியும் அவளிடத்து ஆசை நீங்காத கூத்தனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேரிதாகவே நினைந்தவாறு என்னே !

குறிப்புரை :

செரு + தனை = செருவை ; போரை , அருத்தி - விருப்பம் . செஞ்சரம் - செவ்விதிற் சென்றெய்துங்கணை ; தவறாது குருதியிற் படிந்து செந்நிறத்ததாகத்தக்க கணையுமாம் . ஊர் - மூன்றூர் ; திரிபுரம் . நிலையிலாவூர் மூன்று , ( தி .4 ப .64 பா .4.) ஊர் மேல் செலுத்தி என மாறுக . ஊர் மேல் கருத்தனை - முப்புரத்தின்மேல் குறிக்கோள் உடையவனை . கனக மேனி - செம்பொன் மேனி , ` பொன்னார் மேனியனே `. மேனியை யுடைய கடவுள் . கருதும் - தியானம் புரியும் . ஒருத்தன் - ஏகநாயகன் . ஒருத்தி - தனி முதல்வி . ` ஒருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா ( நிருத்தனை )` என்பது முற்றெதுகை நயம் பொருந்தியது . பொருத்தியும் - இடப்பாலில் திருமேனியில் ஒரு கூறாகப் பொருந்த வைத்திருந்தும் . அருத்தி - காதல் . நிருத்தன் - கூத்தன் .

பண் :

பாடல் எண் : 5

கூற்றினை யுதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளே
றேற்றனை யிமையோ ரேத்த விருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை யடிய ரேத்து மமுதனை யமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.

பொழிப்புரை :

கூற்றுவனை உதைத்த பாதங்களை உடைய இளையவனாய் , இளைய வெண்ணிறக் காளையை ஊர்பவனாய் , தேவர்கள் போற்றப் பெரிய சடைக் கற்றையில் கங்கையைச் சூடியவனாய் , அடியார்கள் போற்றும் அமுதமாய் , சிவாமுதம் நல்கும் திருநீற்று மேனியனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே .

குறிப்புரை :

கூற்று - காலன் . குழகன் - இளைஞன் . மழலை வெள்ளேறு ` மழவிடை ` ஏற்றன் - ஏறுதலையுடையவன் ; ஏற்றத்தனுமாம் . ஆற்றன் - கங்காதரன் என்னும் வடசொல்லுக்குத் தக்க தமிழ்ப் பழஞ்சொல் . அடியர் வழிபடும் அமுதமயமான இறவாத அமுதயோக நீற்றன் - சிவாமிர்தம் . நல்கும் திருநீற்று மேனியன் .

பண் :

பாடல் எண் : 6

கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை பங்கனை யங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.

பொழிப்புரை :

கரிய , பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனாய் , நீலகண்டனாய் , எல்லா ஆன்மாக்களையும் விரும்புபவனாய் , சோதி வடிவினனாய் , கயிலை மலையினனாய் , பார்வதி பாகனாய் , உள்ளங்கையில் நெருப்பை ஏற்பவனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே .

குறிப்புரை :

கருங்கை ; பனைக்கை ; தடக்கை வெம்பனைக் கருங்கை யானை ( தி .4 ப .61 பா .7) வேழக்களிறு - வேழமாகிய களிறு . இரு பெயரொட்டு , கண்டன் - வீரன் . தெவ்வர் புரம் எரிகண்டர் . ( கோயிற் புராணம் நடராசச் . 26) விருப்பன் - அடியார் விருப்பினை யுடையவன் . யாவரும் விரும்புதலை யுடையவன் . ` விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் பொருப்பன் தூய மால்வரைச் சோதி ` ( தி .12 பெரிய புராணம் . 7). பொருப்பன் - மலையரையன் , இமாசலராசன் . பொருப்பன் மங்கை - பார்வதி , மங்கைபங்கன் - மாதியலும் பாதியன் . அங்கை ஏற்ற நெருப்பன் - அழகிய கையிலே அழலேந்தியவன் , அன லேந்தி .

பண் :

பாடல் எண் : 7

நீதியா னினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்கவெண் ணீற் றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா விளக்கினை யளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

விதிப்படி தியானிக்கப்படுபவனாய் , சாதி மாணிக்கமாய் , சங்கைப்போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய் , வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய் , தூண்டா விளக்காய் உள்ள , ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

நீதியால் நினைப்பு உளானை - சிவாகம விதிப்படி புரியும் ( தியாதாவினது ) தியானத்துக்குத்தியேயமாக உள்ளவனை . தியாதா - நினைப்பவன் . தியாநம் - நினைப்பு . தியேயம் - நினைக்கப் படுகின்ற பொருள் . ஆதியாவான் , உயர்வினன் . சாதியரதனம் ச + ஆதி = சாதியுமாம் . சங்க வெண்ணீறு . சங்கத்தைப் போலும் வெளியநீறு . திருநீற்றுப் பொலிவுடைய அண்ணல் . விண்ணில் வானோர்க்கெல்லாம் ஒளியாயவன் . துளக்கம் - அசைவு . தூண்டலுமாம் . தூண்டா விளக்கு , தூண்டாமணி விளக்கே ` நுந்தா வெண்சுடரே ` அளக்கல் ஆகா ஆதியை - காட்சி முதலிய அளவைகளால் அளந்தறிய முடியாத முதல்வனை .

பண் :

பாடல் எண் : 8

பழகனை யுலகுக் கெல்லாம் பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானையின் றோன் மலைமக ணடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

உலகத்தாருக்கெல்லாம் பழகுதற்கு இனியவனாய் , பெருவடிவுடையவனாய் , மலையை ஒத்த இளைய மதயானையின் தோலைப் பார்வதி நடுங்குமாறு போர்த்த இளையனாய் , பிறையைக் குளிர்ந்த சடையிலே சூடிய அழகனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

பழகன் - பழக்கமுடையவன் , பழகு + அம் = பழக்கம் ஒழுகு + அம் = ஒழுக்கம் உலகம் . உணராமையாற்பொய்யனுமாம் . இன்னோரன்ன பலவுள . பருப்பனை - பருத்த பனைமரம் . பொருப்பு - மலை . ` பனைக்கை ` ` கைம்மலை ` ` வருங்குன்றம் ` மழகளிறு . களியானை - களிறு . மலைமகள் - பார்வதி . நடுங்கத்தோல்போர்த்த குழகன் . ( தி .4 ப .74 பா .5) குழவித்திங்கள் :- திங்கட்குழவி ` ` பிறைக் கொழுந்து ` ` திங்கட்பிஞ்சு ` திங்களைச் சூடுதலின் முன்னரே குளிர் சடை , குளிர்சடையில் , குழவித் திங்களை மருவ வைத்த அழகன் .

பண் :

பாடல் எண் : 9

விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக் கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா விருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

வானில் தோன்றும் மின்னலை ஒப்பவனாய் , தனக்குத் தானே ஒப்பாகும் பெரிய மெய்ப்பொருளாய் , கண்ணில் மணி போலவும் , செறிந்த இருளில் சுடர்போலவும் ஒளிதருபவனாய் , திருமாலும் , பிரமனும் தம் மனத்தில் எண்ணமுடியாத வகையில் அவர்கள் அஞ்சுமாறு நீண்ட தீத்தம்பமாகிய தலைமையுடைய பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

விண் - மேகம் ; வானுமாம் . மின்ஒப்பான் - மின்னலைப் போல்வான் . மின்னுக்கு இடம் காரும் வானுமாம் . மெய்ப்பொருள் . பெரும்பொருள் . மெய்ப்பெரும் பொருள் ஒப்பான் - தானே மெய்ப்பெரும் பொருளாயிருத்தலின் தானே தனக்கொத்த தலைமைத் தன்மையன் என்றவாறு . மெய் - சத்தியம் ( குணம் ). பெரும் பொருள் - சத்தியார்த்தம் ( குணி ) சத்தியவத்து வேறு . அதன் சத்தியம் வேறு . மெய்ம்மை - குணம் பெரும்பொருள் - குணி . கண்ணிடைமணி - ` கண்ணிற் கருமணியே பாவாய் காவாய் ` கடுவிருள் - செறியிருள் . சுடர் - ஒளி . விண்ணும் மின்னும் ; மெய்யும் பொருளும் ; கண்ணும் மணியும் ; இருளும் ஒளியும் . உணர்ந்தார்க்கும் உணர்வரியனாதலின் விண்ணில் மின்னாம் . பொய்யர்க்குப் பொய்யனும் மெய்யர்க்கு மெய்யனுமாம் . இயல்பினனாயினும் உண்மை வழிபாடுடையவர்க்கு மெய்ம்மையிற் புலனாகும் பெரும் பொருளாம் . எல்லாம் உடைய ராயினும் , சிவவழிபாடு இல்லாதார் கண்ணிருந்தும் மணியில்லாதார் போல வாழ்வை இழப்பர் ஆதலின் கண்ணுள் மணியாம் . சிவனை வழிபட அவன் உள்ள தூய நிலைக்கு ஏகல் வேண்டா ; அவன் உள்ளத்தே என்றும் திருக்கூத்தாடுகின்றான் ; அதனாலும் , அவன் ` உள்ளொளி ` யாதலாலும் , கடுவிருட்சுடர் என்றார் . எண்ணிடை - எண்ணத்திலே . எண்ணல் - கருதல் . கணக்கிடப்படுதல் . எண்ணல் ஆகா - நினைத்தற் கியலாத . இருவர் - அரியும் அயனும் . வெருவ - வாய்வெருவி அஞ்ச , நீண்ட அண்ணல் - ` சோதியாய்த்தோன்றும் உருவமே ` நீண்ட அண்ணல் - எங்கும் வியாபித்த தலைவன் .

பண் :

பாடல் எண் : 10

உரவனைத் திரண்ட திண்டோ ளரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கட் சடையிடைப் பொதியுமை வாய்
அரவனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.

பொழிப்புரை :

ஞான வடிவினனாய் , திரண்ட வலிய தோள்களை உடைய இராவணனை நசுக்கியவனாய் , மும்மதில்களையும் அழித்தவனாய் , மிக்க ஒளியும் , நீண்ட கிரீடமும் உடைய தேவர்களுக்குக் குருவாய் , குளிர்ந்த பிறையைச் சடையில் கொண்டவனாய் உள்ள , ஐந்தலைப் பாம்பை ஆட்டும் பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே .

குறிப்புரை :

உரவன் - ஞானசொரூபன் . ` உரனுறு திருக்கூத்து ` ( சேக்கிழார் ) திரண்டதோள் ; திரண்டதிண்டோள் . மூன்றூர் நிரவன் - திரிபுரத்தைத் தரையொடு தரையாய் நிரவல் செய்தவன் . நிமிர்ந்த சோதியமரர் . நீள்முடியமரருடைய குரவன் ; தலைவன் . எல்லா வுயிர்க்கும் உள்நின்று உணர்த்தும் இயல்பும் வேண்டின் வெளியிற் குருவாய் வந்துபதேசிக்கும் நிலையும் உடையன் சிவபிரான் ஆதலின் , குரவன் என்பது ஆசிரியன் என்னும் பொருளைத் தருதல் அமரர் திறத்திலும் அமையும் . ஐவாய் அரவன் - ஐந்தலைப் பாம்பினை யுடையவன் .
சிற்பி