பொது


பண் :

பாடல் எண் : 1

மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன்
இருளவா வறுக்கு மெந்தை யிணையடி நீழலெ ன்னும்
அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப்
பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே.

பொழிப்புரை :

அடியேன் மருளுகின்ற மயக்கமும் ஆசையும் உடைய மனத்தை உடையேனாய் அறிவில்லாதேனாய் மயங்கினேன். அஞ்ஞானத்தைப் போக்கும் எம்பெருமானுடைய திருவடி நிழல் என்னும் விரும்பிப் பெறவேண்டிய அருளைப் பெறாமல் பயந்து அஞ்சினேனாக, அத்தகைய அடியேனுக்கு எம் பெருமான் மெய்ப் பொருளிடத்து ஆசையை நல்கிய அளவில் அஞ்ஞான இருட்பொழுது நீங்கி ஞானஒளிபரவும் பகற்பொழுது தோன்றிவிட்டது.

குறிப்புரை :

நான் மருளும் அவாவும் உடைய மனத்தினேன் ஆகி, அம் மருளால் விளைவதும் அவ் வவாவை விளைப்பதுமான மயக்கத்தை உற்றேன். மருளும் மயக்கமும் அவாவும் முறையே ஒன்றற்கொன்று ஏதுவும் பயனுமாகும். மயக்கத்திற்கு ஏது மருள். அவாவிற்கு ஏது மயக்கம். மருளின் பயன் மயக்கம். அதன் பயன் அவா. அவா, மயக்கம், மருள் மூன்றும் மதியிலார் பால் நீங்கா திருப்பன. மதியுடையார்பால் ஒழிதற்பாலன. மருள் x தெருள்; இறுள் x ஒளி, தெருள் - தெளிவு. அருள், அறிவு, உணர்வு என்பன ஒரு பொருளன. சிவப்பிரகாசம் 70.75 பார்க்க. மருள் இருள் மயக்கம் என்பன வெவ்வேறு பொருளனவாயிருந்தும், ஒரு பொருளனவாக ஆளப்படுகின்றன. மருள வாமனம் அருளவாவுயிர். மனத்திற்கு மருள் இயல்பு. சார்ந்ததன் வண்ண மாதற்கண் உயிர்க்கு எய்தும் பேரா வியற்கையே அருள். அருளவாப்பேறு. மருளவா வியல்பு. எந்தை யிணையடி நீழல் வேறு அருள் வேறு அன்று. `அடிநீழல் என்னும் அருள்` என்னும் தொடரை நன்குணர்வார்க்குத் திருவடி நிழல் என்பது விளங்காதிராது. அத்திருவடி இருளவாவை அறுக்கும். இருளவா - பாசப்பற்றும் பசுப்பற்றும். அறுக்கும். அடி:- `பற்றை அறுப்பதோர் பற்று`; அறுக்கும் அடி. அறுக்கும் அருள். அருளை அவாவுதல் அருளவா. அவாவைப் பெறுதல் - அவாப் பெறுதல். பெறுதல் இன்றி - பெறாது. நான் அருளவாப் பெறுதல் இன்றி அஞ்சி அலமந்தேன். அலமந்தேற்கு = அலமந்தேனுக்கு. அலமந்த எற்கு என்றதன் மரூஉவு மாம். பொருள் அவா - பொருட்பற்று. தந்தவாறே - கொடுத்த வண்ணமே. போது - பொழுது; மரூஉ. போய்ப் புலர்ந்தது - சென்று விடிந்தது. அஞ்சி அலமந்தேன். அலமந்தேனுக்குப் பொருளவாத் தந்த வாறே போழ்து போய்ப் புலர்ந்தது. `இணையடி நீழலென்னும் அருள்` என்றதால் அடியும் அருளும் ஒன்றாமாறு புலனாகும்.

பண் :

பாடல் எண் : 2

மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித்
தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே. 

பொழிப்புரை :

சரியை முதலிய உண்மை வழிகளாகிய உழுதலைச் செய்து, விருப்பம் என்னும் விதையை விதைத்து, பொய்ம்மை ஆகிய களைகளை நீக்கிப் பொறுமை என்னும் நீரைப் பாய்ச்சிச் சிவரூபத்தால் ஆன்மதரிசனமும் சிவ தரிசனத்தால் ஆன்மசித்தியும் பெற்று, திருநீறு சிவவேடங்கள் முதலிய தகுதிகளாகிய வேலியை அமைத்துச் சிவத் தியானமாகிய செந்நெறியில் நிற்பார்களானால் சிவகதி என்ற பயிர் விளையும்.

குறிப்புரை :

1. மெய்மையாம் உழவைச் செய்தல். 2. விருப்பெனும் வித்தை வித்தல். 3. பொய்மையாங்களையை வாங்கல். 4. பொறையெனும் நீரைப் பாய்ச்சல். 5. தம்மையும் நோக்கிக் காண்டல் 6. தகவெனும் வேலியிடல். 7. செம்மையுள் நிற்றல். 8. சிவகதி விளைதல். இவ்வெட்டும் விளங்கவுணர்தல் இங்கு நல்லோர்க்குற்ற கடனாகும். இது குறிப்புரையாதலின், விளக்குதல் ஈண்டியலாது.
1. மெய்ம்மை யாம் உழவு:- சரியை கிரியை யோகம் ஞானம் ஆன மெய்ந்நெறி நான்கும் சிவகதியாகும். \\\\\\\"சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோக்ஷத்தைக் கொடா ஆகலான் ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய்தவத்தான் ஞானம் நிகழும் என்றது \\\\\\\" (சிவஞானபோதம். சூ 8. ஆதி. 1) `சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்.` (சித்தியார். சூ. 8:- 11) `ஞானநெறி யடைந்தடைவர் சிவனை` (௸) `ஞான மெய்ந்நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொலாம்` (தி.8 பெரியபுராணம் 7,8) `மெய்ஞ்ஞெறி ஞான மாகும்`
2. விருப்பு எனும் வித்து:- இச்சை மீதூர்தல் (சிவஞான போத மாபாடியம். சூ. 11. அதி. 2. பக்கம். 549) என்னும் சிவபக்தி. `அன்பு, காதல், பக்தி என்பன இச்சை மீதூர்தற் பொருள ஆகலின் அது பரமுத்தியினும் உண்டு. அதனை உணராதார், பத்தியாவது சீவன்முத்தி நிலைக்கே செய்யப்படும் ஒரு சாதகம் போலும் என மயங்கிக்கொண்டு தமக்கு வேண்டியவாறே உரைப்பர். பரமுத்தி நிலைக்கண் இச்சை நிகழாதவழிச் சிவபோகம் அநுபவம் ஆதல் செல்லாமையானும் சீவன் முத்தி நிலைக்கே கூறுவதொன்றாயின், `செம்மலர் நோன்றாள்` என்னும் சூத்திரத்து ஒருங்கு வைத்து ஓதலே அமையும் ஆதலின், சூத்திரம் வேறு செய்யவேண்டாமையின், அஃது ஆசிரியர் கருத்து அன்மையானும் அது பொருந்தாமை அறிக.` (௸. சூ. 11. அதி. 2) `கண்ணுக்குஏயும் உயிர் காட்டிக் கண்டிடுமா போல ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன். இத்தை ஆயும் அறிவுடையனாய் அன்பு செய்ய`லே விருப்பெனும் வித்தை வித்த லாகும். `மறவாது கடைப்பிடித்துச் செய்யும் அன்பானே அம்முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதியைத் தலைப்படும்` என்னும் பொருட்டாய, `அயரா அன்பின் அரன்கழல் செலும்` இயல்பே விருப்பெனும் வித்தை வித்தலாகும்.
3. பொய்ம்மையாங்களையை வாங்கல்:- மெய்மையுழவிற் பொய்மைக்களையன்றி மற்றில்லை. பொய்ம்மை - அசத்தியம். அதனை வாங்குதலாவது சத்தியத்தைக் கடைப்பிடித்து ஒழுகுதல். வாய்மை; உண்மை; மெய்மை மூன்றுமே சத்தியம். அவற்றுள் ஒன்று இன்றேனும் அசத்தியமாகும்.
4. பொறை யெனும் நீரைப்பாய்த்தல்:- பொறை - பொறுமை. அஹிம்ஸை. பொறாமை - ஹிம்ஸை, பொறுமையான நீரால், பொய்யான களையைப் பிடுங்கி, விருப்பான வித்து வளரச் செய்வதே மெய்யான ஞானவுழவு.
5. தம்மையும் நோக்கிக் காண்டல்:- `தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்` (சிவஞானபோதம்) `தன்னறிவறியுந் தன்மை தன்னாலே தனையறிந்தால் தன்னையும் தானே காணும் தான் அதுவாகி நின்றே` (சிவப்பிரகாசம். 72). சிவரூபத்தால் ஆன்ம தரிசனம். சிவதரிசனத்தால் ஆன்மசுத்தி. `நோக்குதல்` ஆன்ம தரிசனம், `காண்டல்` `சிவதரிசனம்` `அரன் தன்னாலே தன்னை யுங்கண்டு தமைக் காணார்` (சிவஞானபோதம். சூ. 9. வெ. 1) 1. கொல்லாமை (தகவு எனும் வேலியிடல்) 2, ஐம்பொறி யடக்கல் (பொய்மையாங்களையை வாங்கல்) 3. பொறுமை (பொறையெனும் நீரைப்பாய்ச்சல்) 4. இரக்கம் (செம்மையுள் நிற்றல்) 5. அறிவு (சிவகதி விளைதல்) 6. மெய் (மெய்மையாம் உழவைச் செய்தல்) 7. தவம் (தம்மையும் நோக்கிக் காண்டல்) 8. அன்பு (விருப்பெனும் வித்தை வித்தல்) என்று பொருத்தி ஞானபூசைக்குரிய எண்மலர் (அட்டபுட்பங்) களை உணர்த்தியவாறும் உரைக்கப்படும்.
6. தகவெனும் வேலியிடல்:- வேம்புதின்ற புழுப் போல நோக்கிற்றை நோக்கி நிற்கும் நிலையின் நீங்கிநிற்கும் சாதகங்களும் சிவ சாதனங்களும் சைவ பூடணங்களும் ஆகிய திருவைந் தெழுத்து, திருவடையாளமாலை (உருத்திராக்கம், கண்டிகை) திருநீறு, சிவ வேடங்கள் எல்லாம் சிவகதிக்குரிய தகவு என்னும் வேலியாகும். அவ் வேலியைப் போற்றாதார் சிவ கதியை எய்தாமை மட்டுமோ? அவகதி (அதோகதி)யும் எய்துவர்.
7. செம்மையுள் நிற்றல்:- `திரு நின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன்றனடி யார்க்குமடியேன்` (தி.7 ப.39 பா.4) `சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பவர்` `செம்மையாய சிவகதி சேரலாம்` `சிந்தையுட் சிவமாய் நின்ற செம்மை` `நிவஞ்சகத்தகன்ற செம்மையீசன்` சிவ முத்தியே செம்மையாகும். அதில் நிற்றலாவது ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பு ஒடுங்கத் தூங்குதல்.
8. சிவகதி:- `செம்மையாய சிவகதி` `பாறினாய் பாவி நெஞ்சே பன்றிபோல் அளற்றிற்பட்டுத் தேறி நீ நினைதியாயிற் சிவகதி திண்ணம் ஆகும்` . உழவுக்குரிய வேலியும் பார்வையும் நீரும் களை கட்டுதலும், வித்தும் ஞானவுழவுக்குரிய நெறியில் முறையே தகவும் சிவக்காட்சியும் பொறையும், பொய்யொழிவும், பத்தியாம் மெய்ந்நெறியும் கூறப்பட்டன. அதன் விளைவு போல் இவ்வுழவின் விளைவு சிவகதி. சிவகதி:- சிவாநுபவம் சுவாநுபூதிகமாதல்.

பண் :

பாடல் எண் : 3

எம்பிரா னென்ற தேகொண் டென்னுளே புகுந்து நின்றிங்
கெம்பிரா னாட்ட வாடி யென்னுளே யுழிதர் வேனை
எம்பிரா னென்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால்
எம்பிரா னென்னி னல்லா லென்செய்கே னேழை யேனே. 

பொழிப்புரை :

எம்பெருமான்! என்று அடியேன் அழைத்த ஒன்றனையே அடியேனுடைய தகுதியாகக் கொண்டு என் உள்ளத்தில் புகுந்து நின்று எம் பெருமான் செயற்படுத்தச் செயற்பட்டு, என்னைச் செயற்படுத்தும் தலைவனை எனக்குள்ளேயே தேடித் திரிகின்ற, அடியேன் தன்னை இன்னான் என்று கண்டு கொண்ட பிறகு எம் பெருமான் என்னைத் தன்னுள்ளே மறையச் செய்வான் என்றால் எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றலேயன்றி அறிவற்ற அடியேன் வேறு யாது செயற்பாலேன்?

குறிப்புரை :

`எம்பிரான்` என்றதையே கருத்துட்கொண்டு, என் உள்ளே புகுந்து நின்று, எம்பிரான் என்னை இவ்வுலகில் உடம்பில் ஆட்டுகின்றான். யான் ஆடுகின்றேன். என்னுள்ளே உழிதருகின்றேன். என்னுள்ளே புகுந்து நிற்கும் எம்பிரான் பின்னை என்னைத் தன்னுள்ளே கரத்தல் செய்வான். செய்வான் எனில், எம்பிரான் என்று சொல்லின் அல்லால் ஏழையேன் என்செய்வேன்? எம்பிரான் என்றேன்; என்ற அவ்வொன்றனையே உளங்கொண்டு என் உள்ளே புக்குநின்றான். இங்கு என்னை ஆட்டுகின்றான், யான் ஆடுகின்றேன். ஆடி என்னுளே ஆட்டுவானைத்தேடி உழிதருகின்றேன். பின்னை என்னைத் தன்னுளே கரக்கும் என்றால், ஏழையேன் எம்பிரான் என்னின் அல்லால் மற்று என் செய்கேன்? முன்னீரடியிலே சீவபோத நிலையும் பின்னீரடியிலே சிவபோத நிலையும் உணர்த்தப்பட்டன. முன்னது உள்ளே தேடிய நிலை. பின்னது தேடிக்கண்டு கொண்ட நிலை. உழிதரல் - நான் ஆட என்னை ஆட்டுவான் யாவன் என்று உள்ளே தேடி யலைதல். பின்னை - தன்னை இன்னான் என்று கண்டுகொண்ட பின்னர். தன்னுளேகரத்தல் - `நான் என ஒன்று இல் என்று தானே எனும் அவரைத் தன் அடிவைத்து இல் என்று தானாம் இறை` (சிவஞான போதம். சூ. 9. அதி. 1. வெ. 1) நிலை. எம்பிரான் எனல் - அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யாது எல்லாம் அவன் செயல் என்று இறைபணி வழுவாது நிற்றல். தன்னில் தன்னை ......அரியனே` (தி.5 ப.97 பா.29) `என்னை ஏதும் அறிந்திலன் எம் பிரான்....அறிந்தெனே` (தி.5 ப.91 பா.8) என்பவற்றை ஈண்டுக்கருதுக.

பண் :

பாடல் எண் : 4

காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப்
பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. 

பொழிப்புரை :

இந்த உடம்பையே கோயிலாகவும், உலகியலை நீக்கிய மனம் அடிமையாகவும், தூய்மை உடைய மனமே பரம்பொருள் தங்கும் கருவறையாகவும் எம்பெருமான் அருட்சத்தியான மனோன் மணியே அவன் இலிங்க உருவமாகவும் அமைய, அடியேனுடைய அன்பே நெய்யும் பாலுமாக அவ்விலிங்கமூர்த்தியை மனம் நிறைவு பெற அபிடேகித்துப் பூசிக்கும் அப்பெருமானுக்கு எங்கள் வணக்கங்களையே நிவேதனப் பொருள்களாகப் படைத்தோம்.

குறிப்புரை :

காயமே கோயில் ஆதல்:- `படமாடக் கோயில் பகவற் கொன்றீயின் நடமாடக் கோயில் நம்பற்கங்காகா.` `உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காளாமணி விளக்கே.` (தி.10 திருமந்.) புன்புலால் யாக்கை.... பொன் னெடுங் கோயில்` (தி.8 திருவா.) `ஓங்குடலம் திருக்கோயில் உள்ளிடம் உள்ளிடம்` (ஞானபூசாவிதி) கடிமனம் அடிமையாதல்:- சங்கற்ப விகற்பங்களைக் கடிந்த மனம் திருவடியை மறவாது நினைக்குந் தன்மையை அடைதல். வாய்மையே தூய்மையாதல்:- `தூஉய்மை என்பதவா இன்மை மற்றது வாஅய்மை வேண்டவரும்` (திருக்குறள் 364). `ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை. அவ்வவா இல்லாமைதான் மெய்மையை வேண்டத்தானே உண்டாம்.` `வீடாவது உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் (இது பாச வீடாகிய பாதிமுத்தியே சிவப்பேறாகிய மற்றைப் பாதிமுத்தியும் சேர்ந்தாற்றான் வீடு முற்றுப் பெறும்) ஆகலின், அதனைத் தூய்மை என்றும் காரணத்தைக் காரியமாக உபசரித்துத். தூய்மை என்பது அவாவின்மை என்றும் மெய்மையுடைய பரத்தை ஆகுபெயரான் மெய்மை என்றும் கூறினார். வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல் வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது! (பரிமேலழகர் உரை). மனமணியிலிங்கமாதல்:- `மனோன்மனி` என்பது மனமனி என்று குறிக்கப்பட்டிருந்து, அதை மனமணி எனப் பிழைபட எழுதியிருக்கலாம் போலும். என்னை? முன்னர் மனத்தை அடிமையாகக் குறித்ததால், மீண்டும் அம்மனத்தையே இலிங்கமாகக் குறித்தல் செய்யார். சிவபிரானுக்கு மனம் இலிங்கமாகாது. மணிலிங்கம், அணிலிங்கம், மணியிலிங்கம் என்று எவ்வாறு கொளினும் மனத்தொடு பொருந்தாது. சிவனுக்குச் சத்திமூர்த்தியாதலின் மனோன்மனியை மனமனி என்று குறித்தருளினார்போலும். சத்திமூர்த்தியாதலைச் சிவஞான சித்தி யா(300)ரில் `நாடுமிதயந்தானும்` எனத் தொடங்கும் திருவிருத்தத் தினுரையால் உணர்க. அதிற் சத்தி சிவலிங்க மூர்த்தியாதல் உணர்த்தப் பட்டது. நே + அம் = நேயம். நே - அன்பு. நெய்யும் பாலும் அகவழி பாட்டில் அன்பேயாகும். `விளைத்த அன்புமிழ்வார்போல விமலனார் முடிமேல் விட்டார்` எதனை? `வாயின் மஞ்சன நீர் தன்னை` எவர்? `சிலைமிசைப் பொலிந்த செங்கைத் திண்ணனார்` (தி.12 பெரிய புராணம். 123-4) `அன்பாம் மஞ்சன நீர்` (திருக்களிறு. 44) `அன்பு அன்றித் தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்வதெல்லாம் சார்த்தும் பழம் அன்றேதான்` (திருக்களிறு. 55) என்றதால், `நேயமே` என்று பிரி நிலையும் தேற்றமும் உணர்த்தும் ஓகாரத்தால் உணர்த்தினார். நிறைய ஆட்டி என்றதைச் சிவபூசை புரிவார் எல்லாரும் சிந்தித்தல்வேண்டும், போற்று அவி காட்டினோம், அவி - நிவேதனப் பொருள், இருக்கு ஆட்டினோம் என்றாருமுளர். போற்றாகிய அவி என்று உருவக மாக்கலும் பொருந்தும்.

பண் :

பாடல் எண் : 5

வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற் பூட்டி
அஞ்சலென் றாண்டு கொண்டா யதுவுநின் பெருமை யன்றே
நெஞ்சகங் கனிய மாட்டே னின்னையுள் வைக்க மாட்டேன்
நஞ்சிடங் கொண்ட கண்டா வென்னென நன்மை தானே.

பொழிப்புரை :

நீலகண்டனே! வஞ்சனையான செயல்களில் ஈடு பட்ட கீழ்மகனாகிய அடியேனைத் தீநெறி கெட நன்னெறியில் ஈடு படுத்தி அஞ்சேல் என்று அடிமை கொண்டாய். அதுவும் உன் பெருமையை வெளிப்படுத்தும் செயலாகும். அடியேனோ உள்ளம் உருகி உன்னை என் உள்ளத்தில் நிலையாக வைக்கமாட்டாதேனாய் உள்ளேன். எனது நன்மை அதாவது நான் பெற்ற நன்மைதான் யாதோ?

குறிப்புரை :

நஞ்சிடம் கொண்ட கண்டா, வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டிற் பூட்டி, அஞ்சல் என்று (சொல்லி அபயம் அருளி) ஆண்டுகொண்டாய், அதுவும் நின்பெருமை அன்றே! நெஞ்சகம் கனியவும் வல்லேனல்லேன். நின்னை உள்(ளத்தில்) வைக்கவும் வல்லேன் அல்லேன். என்னுடைய நன்மைதான் (உனக்கு) என்ன உள்ளன? வஞ்சகம் - வலியவுள்ளம். வலிது + அகம் = வல்+து = என்பதன் மரூஉவே வஞ்சு. அகம் - உள்ளம். வன்னெஞ்சு. அதனை யுடைய புலையனேன். வழி - வேத சிவாகம நெறி; சரியாதி மார்க்கம். அற - இல்லையாக. பூட்டி - பூணுமாறு செய்து. அஞ்சல்:- `அபயம்` நெஞ்சகம் - உள்ளிடம். கனிய - பழுக்க. உள் - உள்ளுந்தொழிற் கருவி யாகிய மனத்தில். என் என நன்மைதான் - என்னையோ என நன்மை தான்? என நன்மை ஆறன்றொகை. என் - `எவன்` (வினா வினைக் குறிப்பு) என்பதன் மரூஉ. என்னால் உனக்கு நன்மைதான் ஒன்றும் இன்றியொழிந்தும் என்னைத் தொண்டிற் பூட்டி அஞ்சல் என்று ஆண்டு கொண்டாய். நெஞ்சகம் கனிதல் நின்னை உள்வைத்தல் ஆகிய இரண்டும் செய்யமாட்டாத என்னால் யாது நன்மை உனக்கு உண்டு? ஒன்றும் இல்லையே!

பண் :

பாடல் எண் : 6

நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி யாண்டாய்
ஆயிர மரவ மார்த்த வமுதனே யமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகி னோக்கிநீ யருள்செய் வாயே. 

பொழிப்புரை :

பல பாம்புகளை அணிகலன்களாக அணிந்த, அடியேனுக்கு அமுதம் போன்றவனே! நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கி விட்டாய். நீ அப்படித் தங்கியிருக்கவும் அடியேனுக்குத் துயரங்கள் ஏற்படுமாயின் அடியேனுடைய துயர நிலையை நோக்கி, அது நீங்குமாறு அருள் செய்வாயாக.

குறிப்புரை :

நாயினும் கடைப்பட்ட என்னை நன்னெறியைக் காட்டி ஆளாக்கொண்டருளினை. ஆயிரம் பாம்பினை ஆர்த்த அமுத மயமானவனே. என் நெஞ்சினுள்ளே நீயும் அமுதம் ஒத்து நிலாவினை. (அங்ஙனம்) நீ நிலாவி நிற்கவும் என்னை நோயவை சாரும் ஆயின், அவை சாராதவாறு கடைக்கண்ணோக்கம் வைத்துக் காத்தருள் செய்வாய்.` `நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே`.(தி.6 ப.95 பா.4)

பண் :

பாடல் எண் : 7

விள்ளத்தா னொன்று மாட்டேன் விருப்பெனும் வேட்கை யாலே
வள்ளத்தேன் போல நுன்னை வாய்மடுத் துண்டி டாமே
உள்ளத்தே நிற்றி யேனு முயிர்ப்புளே வருதி யேனும்
கள்ளத்தே நிற்றி யம்மா வெங்ஙனங் காணு மாறே.

பொழிப்புரை :

விருப்பம் என்னும் பற்றுள்ளத்தாலே பாத்திரத்தில் இருக்கும் தேனைப் பருகுவதுபோல உன்னை வாயிற்புகுத்தி உண்ண இயலாதபடி நீ என் உள்ளத்தினுள்ளே இருக்கின்றாய் என்றாலும் என் மூச்சுக் காற்றினுள்ளே கலந்திருக்கின்றாய் என்றாலும் கண்களுக்குப் புலனாகாதபடி மறைந்திருக்கின்றாய். ஆதலின் உன்னைக்காணும் வழி இன்னது என்று வாய்விட்டுச் சொல்லச் சிறிதும் வல்லேன் அல்லேன்.

குறிப்புரை :

வாய்விட்டுச் சொல்லத்தான் சிறிதும் வல்லேன் அல்லேன். காணும் ஆறு எவ்வாறு? விருப்பு என்னும் வேட்கை என்றதால், இரண்டும் வேறல்லாமை பெறப்பட்டது. விருப்பால் வாய் மடுத்துண்டிடாமே கள்ளத்தே நிற்றி; உள்ளத்தே நிற்றி; உயிர்ப்புள்ளே வருதி. அவ்வாறு நின்றும் வந்தும் யான் காணும் ஆறு வெள்ளத்தே நில்லாமல், கள்ளத்தே நிற்கின்றாய். அங்ஙனம் கள்ளத்தே நின்றால் யான் எங்ஙனம் காணும் ஆறு? வள்ளம் - கிண்ணம். வள்ளத்தேன் போல வாய்மடுத்துண்டிடாமல்:- `மழக்கையிலங்கு பொற்கிண்ணம் என்று அலால் அரியை என்று உனைக்கருதுகின்றிலேன்` (தி.8 திரு வாசகம்) என்புழிப் பொற்கிண்ணத்தின் பெறலரும் பெற்றியும் விலையும் மழவறியாது என்பதும் அஃது அதன் கையிற் பொருந்தியவாறு இறைவன், மணிவாசகர் உணர்விற் பொருந்தி நின்றதும் அதனால், அரிதின் முயன்று பெறாத எளிமையும் புலனாகும். நம் அப்பர்க்கு, தம் உள்ளத்தே நின்றும் உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கு வந்தும், வள்ளத்தேன் போல வாய்மடுத்துண்ணும் வண்ணம் எளிதெய்த வெள்ளத்தே நில்லாது, அரிதின் எய்தவும் இயலாதவாறு கள்ளத்தே நிற்கின்றான் இறைவன். `என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே.` `கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்து தான் நோக்கி நக்குவெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே` என்னுந் திருவாக்குக்களிலும், உள்ளத்து நிற்றல், உயிர்ப்புள் வருதல், கள்ளத்தே நிற்றல், கூறப்பட்டமை உணர்க.

பண் :

பாடல் எண் : 8

ஆசைவன் பாச மெய்தி யங்குற்றே னிங்குற் றேனாய்
ஊசலாட் டுண்டு வாளா வுழந்துநா னுழி தராமே
தேசனே தேச மூர்த்தீ திருமறைக் காடு மேய
ஈசனே யுன்றன் பாத மேத்துமா றருளெம் மானே. 

பொழிப்புரை :

ஆசை என்ற கயிற்றால் கட்டப்பட்டு இயக்கப் படுதலின் மேல் உலக ஆசையால் ஒரு பக்கமும், இவ்வுலக இன்ப நுகர்ச்சி விருப்பினால் வேறொரு புறமுமாகச் சலனப்பட்டு ஒன்றும் உறுதியாகச் செய்ய இயலாதேனாய் வருந்தி நான் சுழலாதபடி, பேரொளி உடையவனும், எல்லா உலகிற்கும் தலைவனும் திருமறைக் காட்டில் விரும்பி உறைந்து உயிர்களை ஆள்பவனும் ஆகிய உன் திருவடிகளைப் போற்றும் செயலிலேயே அடியேன் ஈடுபடுமாறு அருள் செய்வாயாக.

குறிப்புரை :

ஆசையாகிய வலிய பாசம். `ஆசாபாசம்` எனினும் வழக்குண்மை ஓர்க. ஆசை - பற்று. பாசம் - கட்டு. `ஆசையெனும் பாசத்தால் ஆடவராம் சிங்கத்தை வீசு மனையாந்தறியில் வீக்கியே - நேசமிகும், மாயா மனைவியொடு மக்கள் எனும் வெறிய நாயாற் கடிப்பித்தல் நாடு.` (நீதி வெண்பா) அங்கு - அவ்வுலகம். இங்கு - இவ்வுலகம். உயிர்கள் செல்லத்தக்கவிண், நரகு முதலியவற்றைச் சேய்மையிடத்துச் சுட்டாலும் அவை தாம் இருக்கும் மண்ணுலகை அண்மையிடத்துச் சுட்டாலும் குறித்தார். எங்கும் எவரும் உறுதல் ஊசலாட்டுண்ணலாயிற்று. மண்விண் நரகுறலாற் பயனொன்று மில்லை யென்றுணர்ந்தாரே வாளாவுழத்தலை உணர்ந்துரைப்பர். உழிதரல் - திரிதல். அலைதல். உழிதராமே - திரியாதே, அலையாதே. தேசனே - தேயுரூபியே. தேசமூர்த்தி:- `உலகு அவனுரு` (சித்தியார்). திருமறைக்காடு மேய ஈசனே எம்மானே, உன் திருவடியைப் புகழும் வண்ணம் அருள். ஊசலாட்டு:- `உமையாளொருபாகனை அருத்தியாற் சென்று கண்டிட வேண்டுமென்று ஒருத்தியார் உளம் ஊசலதாடுமே` (தி.5 ப.40 பா.5) `பாசங் கழன்றார் பசுவுக்கிடம் பதியாம் ஊசல் வடம் கழன்ற தொவ்வாதோ நேசித்த பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் பாட்டுமக்கோ மற்றைச் சமயமெங்குமாம்` (ஒழிவிலொடுக்கம்).

பண் :

பாடல் எண் : 9

நிறைவிலே னேச மில்லே னினைவிலேன் வினையின் பாச
மறைவிலே புறப்பட் டேறும் வகையெனக் கருளெ னெம்மான்
சிறையிலேன் செய்வ தென்னே திருவடி பரவி யேத்தக்
குறைவிலேன் குற்றந் தீராய் கொன்றைசேர் சடையி னானே. 

பொழிப்புரை :

கொன்றைப்பூவினைத் தரித்த சடையை உடையவனே! எதிலும் மனநிறைவு இல்லாதேனாய், யாரிடத்தும் உண்மையான அன்பு இல்லேனாய், உன்னை விருப்புற்று நினைத்தல் இல்லேனாய், இருவினையால் கட்டப்பட்ட சூழலிலே அகப்பட்டுத் தடுமாறும் அடியேன் அதனை விடுத்துப் புறப்பட்டு வெளியேறும் நிலையை என் தலைவனாகிய நீ எனக்கு அருளுவாயாக. இவ்வுடலாகிய இருப்பிடத்தில் இருக்கும் அடியேன் யாது செயற்பாலேன்? உன் திருவடிகளை முன் நின்று போற்றி வழிபடும் திறத்தில் குறைபாடு ஏதும் இல்லேனாம் வகையில் என் குற்றங்களை எல்லாம் போக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

நேசம் - அன்பு. நினைவு - (தியாநம்). இடைவிடாது சேர்தல். வினையின் பாசம் - (கருமபந்தம்). இருவினைத்தளை. மறைவு - சூழல். வினை மறைவின் அகப்பட்டு இழியும், யான் அதனினின்றும் புறப்பட்டு ஏறும் வகையை அருள்வாய். என் எம்மானே! சிறையில்லேன் - சிறையாகிய (உடல்) இல்லத்தில் இருக்கின்ற யான். செய்வது யாது? திருவடிகளை வாழ்த்திப்புகழ ஒன்றும் குறை பாடில்லேன். கொன்றைச் செஞ்சடையினானே! அடியேன் குற்றம் போக்கியருள்வாய்.

பண் :

பாடல் எண் : 10

நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா
அடுவன வஞ்சு பூத மவைதமக் காற்ற லாகேன்
படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை
கெடுவதிப் பிறவி சீசீ கிளரொளிச் சடையி னீரே. 

பொழிப்புரை :

செந்நிற ஒளி வீசும் சடையை உடைய பெருமானே! நீதி உணர்வு இல்லாத கூற்றுவன் வந்து நெருங்கும்போது உம்மை அறிவதற்கு உடன்படாது என்னைவருத்தும் ஐம்பொறிகளும் என்னை வருத்துவதனைப் பொறுக்க இயலாதேனாய் உயிருக்குத் துணையாக உதவாத இந்த மனித வாழ்விலே பல குற்றங்களும் நிகழ் கின்றமையின் இதனை இகழ்ந்து இப்பிறவிப் பிணியை அடியோடு அழித்தொழிக்க வேண்டி உம் அருளை வேண்டுகின்றேன்.

குறிப்புரை :

கிளர் சடை, ஒளிச்சடை. சடையினீரே. நடுவு இல்லாக் காலன் - உள்ளத்தாமரையில் இல்லாத காலன். காலனை எவ்வுயிரும் எண்ணாமையின் இங்ஙனம் கூறினார். நணுகுதல் - குறுகுதல். அடியேன் ஆண்டவனாகிய - நின்னை அறிய அஞ்சு பூதங்களும் ஒன்றா. ஒன்றாமை - ஒண்ணாமை. மரூஉ. ஒன்றார் ஒன்னார் என்றலும் உண்டு. ஒன்று(ளே) ஒண்ணு(ளே) என்றலும் உண்டு. கன்று கண்ணு, பன்றி - பண்ணி. தின்று - திண்ணு. முதலிய மரூஉக்களிலும் அத்திரி புண்மை உணர்க. அடுதல் பூதகாரியம். அவை - அப்பூதங்கள். ஆற்றல் - பொறுத்தல். எதிர்ப்புத்தள்ளல். பாங்கிலாமனிதர் வாழ்வு குற்றம் பலவும் படுவன. இப்பிறவி கெடுவது.
சிற்பி