பொது


பண் :

பாடல் எண் : 1

கடும்பக னட்ட மாடிக் கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக் கில்லந் தோறு முழிதரு மிறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங் கோவண மரைய தேயோ.

பொழிப்புரை :

நடுப்பகலிலே கூத்தாடிக்கொண்டு கையில் ஒரு மண்டையோட்டினை ஏந்தி வழங்கப்படும் பிச்சைக்காக வீடுகள் தோறும் உலாவித்திரிகின்ற பெருமானே ! இமவான் மகளாகிய சிறந்த அணிகலன்களையும் சுருண்ட மெல்லிய கூந்தலையும் , வளைந்த காதணியையும் உடைய பார்வதி உமக்கு மனைவியாக வந்தபோதும் , இடுப்பில் கோவணத்துடன்தான் இருந்தீரோ ?

குறிப்புரை :

` கடும்பகல் நட்டம் ` ` நள்ளிருளில் நட்டம் ` எனும் இரண்டும் புரிந்தருள்பிரான் நம் முழுமுதல்வன் . ` மானார் ... பகல் நட்டம் ஊனார் தருமுயிரான் ` ( தி .1 ப .13 பா .7) என்றும் எங்கும் எவ் வுயிருள்ளும் எப்பொருளிலும் அத்திருக்கூத்து நிகழ்தலின் , கடும் பகலும் நள்ளிரவு மட்டும் சிறப்பாக எடுத்துரைத்தல் என்னை யெனின் , இறைவன் ஆட்டுவிப்பவன் உயிர்கள் ஆடுவன . ஆட்டுவிப்பானுக்கு ஆட்டம் ஒழிவிலது . ஆடுவனவற்றிற்கும் அஃதே . ஆடுதல் உயிர்க்கு நல்வாழ்வு . ஆட்டுதல் பேரிரக்கத்தின் விளைவு . அவனது பேரிரக்கம் கடும் பகலிலும் உளது . நள்ளிரவிலும் உளது . எத்தொழில் புரிவாரும் கடும் பகலிலும் நள்ளிரவிலும் ஓய்வுறுவர் . கடவுளோ கடும் பகலிலும் ஆடுகின்றார் . துஞ்சிருளிலும் ஆடுகின்றார் . ஆட்டத்தின் பயனோ அவர்க்கில்லை , எல்லாப் பயனும் உயிர்கட்கேயாம் . ஆதலின் , ஓய்வுறும்போதிலும் ஓயாது கூத்தாடும் சிறப்பால் அவ்விரண்டும் விதந்தோதப்பட்டன . இடும்பலிக்கு இல்லந்தோறும் உழிதருதல் :- ` இல்லங்கள் தோறும் எழுந்தருளியபரனே .` ( தி .8 திருவாசகம் ) நெடும் பொறைமலையர் - இமாசலராசனார் . நெடுமலை . பொறைமலை . நெடும் பொறையுமாம் . அறை , பொறை , குன்று , மலை , பிறங்கல் , விலங்கல் முதலியவை தம்முள் வேறுபாடுடையன . அவற்றின் காரணத்தை உணரின் அவ்வேறுபாடு விளங்கும் . மலையர் பாவை - இமாசலகுமாரி . நேரிழை - நேரிய இழையினாள் , இழை - பணி , பூண் பாவை . இழை , கூந்தல் , குழை எல்லாம் உமாதேவியைக் குறித்தவை . பாவையும் , இழையும் , கூந்தலும் குழையும் என்னற்க . பாவை போல்வாளும் நேரிழையாளும் , நெறிமென் கூந்தலாளும் , கொடுங் குழையாளும் ஆகிய ஒருத்தி ( தனி முதல்வி ) புகுந்த அன்றும் அரையிற் கோவணம் இருந்ததோ ? போகியான பின்னரும் யோகியின் கோலம் பொருந்துமோ ?

பண் :

பாடல் எண் : 2

கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறும்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு விருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப் புலியுரி யரைய னாரை
ஏவணச் சிலையி னாரை யாவரே யெழுது வாரே.

பொழிப்புரை :

கோவணத்தை உடுத்து , கொடிய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி , தீப்போன்ற செந்நிற உடம்பில் சாம்பலைப் பூசி , அழகிய வடிவினராய் , செந்தாமரைக் காடு அனைய நிறத்தை உடையவராய் , புலித்தோலை இடையில் அணிந்தவராய் , அம்புக்கு ஏற்ற அழகிய வில்லை உடையவருமான பெருமானின் வடிவழகினை ஓவியத்தில் எழுதவல்ல ஆற்றல் உடையவர் யாவர் ?

குறிப்புரை :

அரையிற்கோவணம் உடுத்த சிவயோகரூபத்தையும் , கச்சாகப் பாம்பணிந்த வடிவத்தையும் , பவளம் போலும் செம் மேனியில் வெண்ணீறு சண்ணித்த திருவுருவத்தையும் , செந்தாமரைக் காடனைய அழகிய வண்ணத்தையும் , புலித்தோலை அரையில் உடைய தோற்றத்தையும் , மேருவில்லேந்திய மெய்யையும் எழுதிக் காட்டவல்லார் யாவர் ? கோவணவுடையும் புனித நீறும் பிறவும் உடைய வேடம்பூண்டு வந்த முதல்வனை நாவலூரர் தொடரலுற்றார் , மாலயன்தொடர அரிய ` ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்டவல்லார் ? ` ( தி .12 பெரிய . தடுத்தாட் . 44) தொடர்ந்தெட்ட வல்லமை யில்லாவிடினும் , பார்த்த வடிவைப் பார்த்தவண்ணம் எழுதுதலும் அரிதோ ? ` இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக்காட்டொணாதே !` ` அப்படியும் ` ` அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக்காணின் ` அகலாது காணலாம் . கண்டவாறு காட்டலாம் . எழுதியும் காட்டலாம் . அக் கண்ணில்லாமையால் , ஏவணச்சிலையினாரை யாவரே எழுத வல்லார் ! கண்டால்தானே எழுதலாம் ? ஏ - அம்பு . சிலை - வில் , மேருவில் . ` யாவரே எழுதுவார் ` என்றது எழுதவல்லார் ஒருவரும் இலர் என்றதாம் .

பண் :

பாடல் எண் : 3

விளக்கினார் பெற்ற வின்ப மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கினன் மலர்தொ டுத்தாற் றூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே.

பொழிப்புரை :

திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும் . ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால் , தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும் . கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர் . எல்லையில்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன .

குறிப்புரை :

விளக்கினார் - திருக்கோயிலைத் தூய்மையுறத் திருவலகினால் , துகள் முதலியவற்றை ஒரு சேரக் கூட்டியவர் , அவர் பெற்ற இன்பத்தினளவிற் பத்து மடங்கு மெழுகினார்க்கு வாய்க்கும் . மெழுகு :- முதனிலை , மெழுக்கு தொழிற்பெயர் . மெழுக்கினால் - மெழுகுதலால் . இதனை நோக்கி ` விளக்கினால் ` என்பாருமுளர் . அது ` விளக்கினாற் பெற்ற வின்பம் ` என்று பாடம் இருப்பின் அமையும் . அவ்வாறின்மையால் அப் பொருள் கூறல் பொருந்தாது . பதிற்றி - பத்து மடங்கு . துளக்கு - ஒளி . துளக்கின் நல்மலர் - ஒளியுடைய இனிய நல்ல பூக்கள் . துளக்கினன் என்று ஆண்பாற்பொருள் கோடல் பொருந்தாமை , ` விளக்கினார் ` ` இட்டார் `, ` சொன்னார் ` என்பவற்றை நோக்கி யுணர்க . தொடுத்தால் , அத் தொடையின் பயனாகத் தூயவிண் ( சிவலோகம் ) ஏறல் ( ஊர்த்துவகதியிற் சென்று அடைதல் ) ஆகும் . ` தூயவிண் ` என்றதால் ஏனையவிண் விலக்கப்பட்டன . விளக்கு - திருவிளக்குக்கள் . திருவிளக்கீடு . இட்டவர் எய்தும் பேறு . பெறுவது - பேறு ( இலாபம் ). சொல்லின் - ஆய்ந்துரைத்தால் . சொல் இல்லாத மெய்ஞ்ஞெறி - உண்மைவழி , பொய்வழிகளை நீக்கிற்று . சரியை , கிரியை , யோகம் ஆகிய சைவத்தவங்களின் நெறியே மெய்ந்நெறி . அவையே ` இறப்பில் தவம் .` ஏனைய இறப்புள் தவம் . அத்தவநெறி பொய்ந்நெறி , இறப்பில் தவத்தின் எய்துவதே ஞானம் . ` மேற்சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோக்ஷத்தைக் கொடாவாகலான் ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய் தவத்தான் ஞானம் நிகழும் என்றது ` ( சிவஞான போதம் சூ .8. அதி .1 .) இதனால் , தவநெறியும் , தவங்களும் , நன்னெறியும் , அது ஞானமாவதும் , ஞானமாகிய நன்னெறியின் வேறாவன வீடு பயவாமையும் குறிக்கப்பட்டன . ` தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே ` ( தி .7 ப .13 பா .1-9) ` ஞானமெய்நெறி தான் யார்க்கும் நமச்சிவாயச் சொலாம் ` ( தி .12 பெரிய . திருஞான . 1248) ` நன்னெறிக்குய்ப்பது ` ( சம்பந்தர் ). கீதம் - பாட்டு ; தோத்திரம் . ` தொடுக்குங் கடவுட் பழம்பாடல் ` சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறு அளப்பு இல . அருளும் வகை அளவிலாதன . ` ஆட் பாலவர்க்கு அருளும் வண்ணமும் ..... அளவில்லை .`( தி .3 ப .54 பா .4). இத்திருப்பாடல் , திருக்கோயிலிலே திருவலகிடுதல் , திருமெழுக்கிடுதல் , திருப்பள்ளித்தாமம் தொடுத்தல் , திருவிளக்கிடுதல் , சிவகீதம் பாடுதல் என்பன செய்தல் வேண்டும் என்பதும் , அதனதன் பயன் ஒன்றினொன்று பல்கும் என்பதும் உணர்த்திற்று . இதனைச் சரியா மார்க்கத்தது என்று எள்ளாது மேற்கொண்டு பயனெய்தற்பாலர் ஏனையமார்க்கத்தில் ஒழுகும் பலரும் . ஈண்டுத் திலகவதியார் , சங்கிலி நாய்ச்சியார் , சுந்தரமூர்த்தி சுவாமிகள் , நமி நந்தியடிகள் நாயனார் புராணங்களை உணர்க .

பண் :

பாடல் எண் : 4

சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மா னானல்வெள் ளூர்தி யான்றன்
மந்திர நமச்சி வாய வாகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையு நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே.

பொழிப்புரை :

பிறையைச் சடையில் சூடி , எல்லோருக்கும் நன்மை செய்யும் பெருமானாய் , சாம வேதம் ஓதுபவனாய் வானத்திலுள்ள தேவர்களுக்கும் தலைவனாய் , பெரிய வெண்ணிறக் காளை வாகனனாய் உள்ள பெருமானுடைய திருவைந்தெழுத்தை ஓதி , திருநீற்றை அணிந்தால் கொடிய நெருப்பில் இடப்பட்ட விறகு போல நம்முடைய நோய்களும் , வினைகளும் வெந்து சாம்பலாகும் .

குறிப்புரை :

சந்திரற் சடையில் வைத்த சங்கரன் - சந்திரனைச் சடையில் வைத்து , அவனுக்கு என்றும் வளராத தேயாத வாழ்வுண்டாக்கி யின்பஞ் செய்தவன் . சங்கரன் - இன்பஞ்செய்பவன் . சாம வேதி - சாமவேதப் பாடலன் . அந்தரம் - விண் . அமரர் பெம்மான் - தேவாதி தேவர்க்கும் பெருமகன் . ` தலையாய தேவாதி தேவர்க்கு என்றும் சேயான் `, ஆன்நல்வெள் ஊர்தியான் ; நல்வெள் ஆன் ஊர்தியான் . ` நரை வெள்ளேறு ஒன்றுடையான் `. மந்திரம் நமச்சிவாய ஆக . நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்து மந்திரம் ஆகத் திருநீறு அணியப் பெற்றால் இரு வினையும் அவ்வினையால் வரும் இன்ப துன்பங்களும் வெந்தீயிலே விறகிட்டால் வெந்தொழிதல்போல வெந்தொழியும் . அணிய - அழகுறப்பூச . மாயாவாதி முதலோர் பூச்சு அணிதலாகாது . சிவாகம விதிப்படி பூசுதலே அணிதலாகும் . இடத் தோள் முதலாக வலத்தோள் வரை வலக்கையாலொரே யீர்ப்பாகப் பூசும் வன்மையினர் இன்றும் உளர் . வெவ்வழல் விறகிட்டு :- உவமை . இட்டு - இட்டாற்போல . அன்றே - அப்பொழுதே . ` சிவாயநம ` என்று நீறணிந்த அப்பொழுதே தருவாய் சிவகதி என்று வேண்டிப் பெறலாம் . காலம் இடையீடுபடாமை , அன்றே வெந்தறும் வினையும் நோயும் என்றவாற்றால் உணர்க . ` விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே .` ( தி .4 ப .11 பா .3) என்பது ஈண்டுக் கருதற்பாலது . பண்ணியவுலகினில் - மாயா காரியவுலகில் . பயின்ற பாவம் - வினையும் நோயும் . இரண்டிலும் திருவஞ்செழுத்து வேறாகாமையும் ஏனையவும் ஒன்றுபடுதலுணர்க . ` சந்திரற் சடையில் ` என்றது இரண்டனுருபு உயர்திணையில் தொகுதல் , பொருள் வேறுபாட்டைத் தருதலின் , அதனைத் தவிர்க்க . சந்திரன் சடையில் வைத்த எனின் . வைத்தவன் சந்திரனாவான் . சடையில் வைக்கப்பட்டவன் சந்திரன் எனவேண்டி , னவ்வொற்றை றவ்வொற் றாக்குவது பாவலர் மரபாஞ் செய்யுள் வழக்கு நோக்கியதோரிலக்கண விதி . இதனை யுணரமாட்டாதார் இக்காலத்தில் , இத்தகைய தொடர்களைப் பிரித்தெழுதிப் பொருள் வேறுபாட்டிற்கு இடமுண்டாக்குகின்றனர் . வேதி :- ` வேதி தொடர .` ( தி .4 ப .4 பா .9) ஊர்தி - ஊருங் காரணத்தின் எய்திய பெயர் . அமரர் - விருப்பர் ; இறப்பிலார் .

பண் :

பாடல் எண் : 5

புள்ளுவ ரைவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்க டம்மை முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே.

பொழிப்புரை :

வேடர்களும் , திருடர்களும் போன்ற ஐம்பொறிகளும் என் உள்ளத்தில் புகுந்து நின்று மகிழ்வோடு துள்ளிக் கொண்டு , அடியேன் தூய வழியிலே செயற்பட ஒட்டாமல் என்னைக் கொள்ளையடிக்கின்றன . தீமை புரிவதில் நுண்மை உடைய அவற்றைச் சிவபெருமானுடைய திருவடி நிழலிலே , அவை காணாதபடி மறைந்து நின்று சிவஞானம் என்னும் அம்பினால் எய்து அழித்து விடலாம் .

குறிப்புரை :

புள்ளுவர் ஐவர் கள்வர் :- வேடரும் கள்வரும் ஆகிய ஐவர் . ` ஐம்புலவேடர் ` ( சிவஞான போதம் . சிவஞான சித்தியார் ). புனத்திடை என்பது ஈண்டுப் புந்தியில் என்க . அவரைவரும் புந்தியிற் புகுந்து நின்று துள்ளுவர் ; சூறை கொள்வர் ; தூநெறி விளைய வொட்டார் . சூறை - ஆறலைத்தல் , கொள்ளை . ` மானிலத் துயிர் சூறையிட்டருந்துற ` ( உபதேச காண்டம் . அயமுகி . 12) ` ஈறில் துன்பம் எனுங் கொடுங் கானகம் சூறை யாடுஞ்சுடரென ` ( வேதாரணிய புராணம் . தலவிசேட . 7. ) தூநெறி - திருவருள்வழி . முள்ளுடை யவர்கள் தம்மை - தீமை புரிவதில் நுண்மை ( கூர்மை ) யுடைவர் களாகிய அவ்வைம்புல வேடரை . முக்கணான் பாத நீழலுள்ளிடை மறைந்து நின்று அங்குணர்வினால் எய்யலாம் :- அவர் ஐவர் . அவர் செய்யுந் தீமையோ அளவிலாதது . அவற்றை அழித்துத் துன்ப நீக்கம் பெற நம்மையாளும் நாயகனான முக்கண்ணனே அமையும் . அவர் நம்மைச் சாராதிருக்குமாறு மறைந்து நிற்க அவன் திருவடி நீழல் உண்டு . நாம் காணாமல் மறைந்து நின்று நம்மை அவர் அம்பால் எய்யுமாறு போல , நாமும் முக்கணான் பாத நீழலுள்ளிடை மறைந்து நின்று , அவரைச் சிவஞானத்தால் எய்து வெல்லலாம் . உணர்வு - சிவஞானம் . ஒருவிழி தீயால் துள்ளலை யடக்கலாம் . ஒரு விழி நிலாவால் இருளை நீக்கிச் சூறைகொள்ளலை விலக்கலாம் . ஒருவிழி சுடரால் இருளை நீக்கி ( அருள் ) நெறியைக் காட்டலாம் . நம் மும்மலமும் போக்க முக்கண்ணுடையான் எனலுமாம் . மலமகன்றால் , புள்ளுவர் துள்ளல் எது ? பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி . 65.

பண் :

பாடல் எண் : 6

தொண்ட னேன்பிறந்து வாளாத் தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும் பெரியதோ ரவாவிற் பட்டேன்
அண்டனே யமரர் கோவே யறிவனே யஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடுந் திகழ்தரு சடையி னானே.

பொழிப்புரை :

தேவனே ! தேவர்தலைவனே ! முக்காலமும் அறிபவனே ! தெளிந்த அலைகளை உடைய கங்கையைச் சூடிய செவ்வொளி விளங்கும் சடையனே ! உன் அடியவனாகிய யான் , மனிதனாகப் பிறந்து வீணாகப் பழைய வினைகளாகிய குழியிலே விழுந்து இந்த உடம்பைச் சுமந்து கொண்டு நாள்தோறும் பெரிய ஆசையில் அகப்பட்டுத் தடுமாறுகின்றேன் . அடியேனை அஞ்சேல் ! என்று அருளுவாயாக .

குறிப்புரை :

இத் திருமுறையில் , சிற்சில திருப்பதிகங்களுள் சிலபல திருப்பாடல்கள் கிடைத்தில . சில ஒன்று போலமைந்து சிறிது வேறுபடுகின்றன . பற்பல இடங்களிற் சொல்லும் தொடரும் . குறைதல் , மிகுதல் , வழுவுதல் உற்றுள்ளன . தி .4 ப .67 பா .2 திருப்பாடற்கும் இதற்கும் சிறிதே வேறுபாடாகும் . இவ்வாறே ( தி .4 ப .113 பா .4) எண்ணுடையவற்றின் முதலடியில் உள்ள ஐயாறு என்பதில் ` ஐ ` இல்லை . முதலடியீற்றில் உள்ள ஆறெழுத்தும் இல்லை . ` செஞ்சடையான் ` என வேறு ஆறெழுத்துள்ளன . தொண்டனேன் எனத் தொடரும் இதனுள் , ` வாளா ` என்புழி வல்லெழுத்துமிகையே . ( ? ப .67 பா .2) நைந்து பேர்வதோர்வழி காணாமையும் இதில் நாளும் பெரியதோரவாவிற் பட்டமையும் உணர்த்தியவாறுணர்க . அங்குள்ள அண்டவாணனே இங்குள்ள அமரர்கோவாவான் . பழனஞ்சூழ்ந்த திருக்கொண்டீச் சுரத்தானே என்ற தொடரளவாய்க் கங்கை சூடுந் திகழ்தரு சடையினானே எனல் நின்றது . அருளாளர் , ` இது முன்வந்தது , மீண்டும் அதுவே வருகின்றது ` என்னும் ஏகதேச ஞானத்தை நீங்கியவராதலின் இன்னோரன்னவை அவர் திருவாக்கில் வருதல் இயல்பு . பாவலருட் பலர் மறதியாற் பாடுதல் போல்வதன்று இது . ` தொல் வினைக் குழி .` ( தி .4 ப .79 பா .6).

பண் :

பாடல் எண் : 7

பாறினாய் பாவி நெஞ்சே பன்றிபோ லளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயிற் சிவகதி திண்ண மாகும்
ஊறலே யுவர்ப்பு நாறி யுதிரமே யொழுகும் வாசல்
கூறையான் மூடக் கண்டு கோலமாக் கருதி னாயே.

பொழிப்புரை :

தீவினையை உடைய நெஞ்சமே ! பன்றியைப் போல இந்த உலகவாழ்வாகிய சேற்றில் அகப்பட்டு , பல திசைகளிலும் ஓடுகின்றாய் . உப்பு நீர் ஊறி நாற்றமெடுத்துக் குருதி ஒழுகும் துவாரங்கள் மேற்கூரையாகிய தோலாலே மூடப்பட்டு உள்ள உடம்பின் நிலையை நீ அழகாகக் கருதுகிறாய் . இதன் புன்மையைத் தெளிந்து நீ இறைவனை விருப்புற்று நினைப்பாயானால் உனக்கு நிச்சயமாகச் சிவகதி கிட்டும் .

குறிப்புரை :

பாறினாய் - ஓடினை நீங்கினை ; ` பயிலுறு பாவங்கள் பாறப்பெற்றுளாய் ` ( சிவரகசியம் - சிவனடியார் . 23) ` பட்டிமை யுருக்கள்கொடு பாறலரிது `. ( கந்த புராணம் . சத முகன் . 7) அடிப் பறிந்தனை என்னும் வழக்கும் ஈண்டுப் பொருந்தும் . ` பது முகனைக் கொடுபோகும் பத்து முகன்போற் பாறுதலும் ` ( சேது புராணம் . வேதாள . 14) என்புழிப் போலக்கொண்டு , சிவனடிக்கீழ் நீங்காது நின்று நினைந்து சிவகதியைத் திண்ணமாக நண்ணல் இன்றி ஓடினை எனலே சிறந்தது . பாவமே பயின்ற நெஞ்சம் பரனடியைத் தேறலும் நினைதலும் செய்யமாட்டாது என்பார் ` பாவி நெஞ்சே` என்றார் . அளறு - சேறு . அளற்றிற் பட்டுத்தேறுதல் பன்றிக்கில்லை , நெஞ்சிற்குள தாகலாம் . படுதற்கு மட்டும் பன்றி ஒப்பாயிற்று . தேறுதற்கன்று . மேலோர் நெஞ்சம் கல்வி கேள்விகளால் தேறும் . கயவர் நெஞ்சிற்குப் பட்டுத் தேறலும் அரிது . ` உற்றலாற் கயவர் தேறார் என்னுங் கட்டுரையோ டொத்தேன் ` ( தி .4 ப .31 பா .8). பட்டுத் தேறி :- ` பட்டறி , கெட்டறி , பத்தெட்டிறுத்தறி ` ( வழக்கு ). நினைதி - நினைவாய் . நினைவாயானாற் சிவகதி ( தி .5 ப .43 பா .8) திண்ணம் ஆகும் எனவே , நினையாயாயின் . பவகதி பாறா தென்றாராயிற்று . ஊறல் - வாய் முதலியவற்றில் ஊறும் நீர் . உவர்ப்பு - உப்புறைப்பு . வெறுப்பு . உவர்ப்ப ( - வெறுக்க ) என்று பாடம் இருந்ததோ ? உதிரம் - குருதி . வாசல் :- தி .4 ப .18 பா .9; ப .69 பா .6 ` ஊற்றுத் துறை ஒன்பதுள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போதுணர மாட்டீர் ` ( தி .6 ப .93 பா .5) கூறை - தோற்கூறை . நூற்கூறை . கோலம் - அழகு .

பண் :

பாடல் எண் : 8

உய்த்தகா லுதயத் தும்ப ருமையவ ணடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன் வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கண் மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று வாடிநா னொடுங்கி னேனே.

பொழிப்புரை :

இராவணன் , கயிலை மலையை எடுக்கத் தொடங்கிய காலத்தில் , பார்வதிக்கு ஏற்பட்ட அச்சம் தீர , பெருமான் தன்னுடைய கால் விரலை வைத்து அழுத்த அதற்கு இலக்காக இராவணன் , தன் பெரிய தலைகளைக் கொடுத்தான் . பிறை சூடிய மூர்த்தியாகிய பெருமானுடைய , வண்டுகள் மொய்க்கும் நறுமணம் உடைய மலர் போன்ற திருவடிகளை அப்பெருமான் கரடுமுரடான என் தலைமீது வைத்தால் அத்திருவடிகள் வருந்துமென்று அவை என் தலையைச் சாராதவாறு நான் தாழ்ந்து ஒடுங்கினேன் .

குறிப்புரை :

` பாவகஞ் செய்து தீட்டிப் பட்டிமை யோலையுய்ப்பான் ` ( திருவிளையாடல் மெய்நா . 13) உய்த்தகால் - ( இராவணன் திருக்கயிலையை எடுத்தலாகிய தொழிலைச் ) செய்த காலம் . உய்த்தல் - செய்தல் ` உய்த்திடு செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை ` ( சிவஞானசித்தியார் . சூ . 2:- 18) உதயம் - தோற்றம் . காலுதயத்து - காலோதயம் , காலத்தோற்றம் . காலத்தோற்றத்தில் , கயிலையை எடுத்த காலத்தில் என்றபடி . உம்பர் - அம்மலைமேல் . உய்த்தகால் உதயத்து என்பதற்கு எண்ணிலாவுயிர்களை வீடுறுத்திய திருவடியால் உதைத்த போது என்றுரைத்தலும் பொருந்தும் . உதையம் என்பது உதயம் என்றாதல் பயின்றதே ; அருகியதன்று . ` அ ஐ முதலிடையொக்குஞ் சஞயமுன் ` ( நன்னூல் ). ஐகாரம் அகர மாதலைப் பல சொற்களிற் காணலாம் . ` திருவிரலால் உதைகரணம் செய்துகந்த சிவமூர்த்தி ` ( தி .4 ப .13 பா .10) என்று இராவணனை உதைத்த வரலாறு குறித்தே முன்னுள்ளது காண்க . உய்த்தல் - வீடு பெறுத்தல் . ` உய்த்த வியோம ரூபர் ` ( சதாசிவ ரூபம் . 29) வைத்தகால் - ஊன்றிய திருவடி . தி .4 ப .49 பா .10; ப .69 பா .10 ; ப .70 பா .9.. முதலியவற்றிற் காண்க . நேர்ந்தான் - உடன்பட்டான் . மொய்த்தகால் முகிழ் வெண்டிங்கள் மூர்த்தி :- தேய்த்த திருவடியிற் பொடியாகிப் பின் வழிபட்டு வணங்கிய திங்கட் பிறையைத் திருமுடியிற் கொண்டு திகழும் சிவமூர்த்தி ` தக்கன்றன் வேள்வியினிற் சந்திரனைத் தேய்த்தருளி ` மொய்த்தகால் - வண்டுகள் மொய்த்த பூ . மிக்க நிலா என்றாருமுளர் . முகிழ் - அரும்பு . கான் - மணம் . ஆகுபெயராய்ப் பூவையுணர்த்தும் . ` கான்முகம் பொதிந்த தெண்ணீர் கவர்ந்து ` ( சிந்தாமணி . இலக்கணை . 38). கான் காடு . மொய்த்த காட்டில் முகிழ்திங்கள் . காட்டிலே காய்ந்த நிலா ` ( வழக்கு ), முகிழ்தல் - அரும்புதல் , ` முகிழ்மென் முலையாளுமைபங்கா `. குவிதல் . ` முகிழ்த்தகையினர் `, திங்களுக்கு அவ்விரண்டு முண்டு . அதனால் அப்பிறையைச் சூடி அவற்றை நீக்கி ஆண்டனன் . நேர்தல் - உடன்படல் , இசைதல் , ` மகிழ்வுடன் ஆங்கவை நேரா `, ( கூர்ம புராணம் அரியய . 8) இராவணன் தன் வன்றலையிற் சேவடிபட உடன்பட்டான் . தனது தலையின் வன்மைக்குக் கடவுளது தாளின் மென்மை தாங்காது என்று கருதி வருந்தித் தன்தலையைத் தாழ்த்தி ஒடுங்கிக் கொள்ளாமல் , தாங்கிக்கொள்ள நேர்ந்தான் . அடியேனோ என் உச்சியின்மேல் வைத்த மெல்லடி என்னுச்சி வன்மையால் வருந்தும் என்று கருதி வாடி , அத்திருவடியை வைத்தபோது , அஃது என தலையைச் சாராதவாறு , தாழ்ந்து ஒடுங்கினேன் . ` கருமலிகடல்சூழ்நாகைக்காரோணர்கமலபாதத் தொருவிர னுதிக்குநில்லா தொண்டிற லரக்கனுக்கான் இருதிற மங்கைமாரோ டெம்பிரான் செம்பொனாகம் திருவடி தரித்துநிற்கத் திண்ணநா முய்ந்தவாறே .` - தி .4 ப .71 பா .9 ` பெருவிர லிறைதானூன்றப் பிறையெயி றிலங்கவங்காந் தருவரை யனையதோளா னரக்கனன் றலறிவீழ்ந்தான் இருவரு மொருவனாய வுருவமங் குடையவள்ளல் திருவடி சுமந்துகொண்டு காண்கநான் றிரியுமாறே .` - தி .4 ப .75 பா .10
சிற்பி