பொது


பண் :

பாடல் எண் : 1

வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றே னீசனே னீச னேயோ
இன்றுளே னாளை யில்லே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

எல்லோரையும் ஆளும் பெருமானே ! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன் . வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலுஞ் சென்றேன் அல்லேன் . ஆதலால் நேர்மையான வழிக்கு அப்பாற்பட்டவனாய் , உள்ளூர வருந்துகின்றேன் . இன்று உயிருடன் இருக்கும் நான் நாளை உயிருடன் இருப்பேன் என்ற உறுதி இல்லை . அங்ஙனம் ஒருபயனும் எய்தாமையின் எதற்காகத் தோன்றினேன் நான் ?

குறிப்புரை :

வென்றிலேன் புலன்கள் ஐந்தும் - ஐந்து புலன்களையும் வென்றும் இல்லேன் . வென்றவர் வளாகம் தன்னுள் சென்றிலேன் - ஐம்புலனை வெல்லேனாயினும் , அவற்றை வென்ற பெரியோர் வாழும் இடத்திலேனும் சென்று வெல்லுமாறு உணரும் பேறுற்றேனோ ? அதுவும் செய்திலேன் . அடுத்த திருப்பாட்டில் , கலைகள் ஞானம் கற்றிலேன் ; கற்றவர் தங்களோடும் உற்றிலேன் ` என்றவாறு , இதிலும் வென்றவர் வளாகத்துள்ளும் சென்றிலேன் என்று உம்மை கூட்டியுரைத்துக்கொள்க . புலனடக்கமும் அடங்கினோ ரிணக்கமும் இல்லாமை காரணம் . செந்நெறிக்குச் சேயனாயது காரியம் `. செந்நெறி . ` சேறைச் செந்நெறிச் செல்வனார் `. செந்நெறிக் குஞ்சேயேனென்றதால் அந்நெறியிலொழுகியடையும் பேற்றுக் குஞ்சேயேனென்பது தானே விளங்கும் . இறந்ததுதழீஇய உம்மை . நீசனேன் நின்று உள்ளே துளும்புகின்றேன் - இழிந்தயான் செந் நெறிக்குஞ் சேயேனாகி நின்று , எனக்குள்ளே வருந்துகின்றேன் . அவ் வருத்தம் என்னுள் இருக்கும் நீயன்றிப் பிறர் அறியார் . துளும்பல் - வருந்தல் . அலைதல் அசைதல் முதலிய பிற பொருள் பொருந்துமேற் கொள்க . ` மைக்கண்ணீர் துளும்ப ` ( திருவிளையாடல் ) என்புழிப் போற்கொள்ளல் ஈண்டுப் பொருந்தாது . ` இன்றைக் கிருப்பாரை நாளைக்கிருப்பரென்றெண்ணவோ திடமில்லையே ` ( தாயுமானவர் ) என்செய்வான் - யாது செய்ய ? ஒரு பயனும் எய்தாதது என் தோற்றம் என்றது . ` நீசனேன் ஈசனேயோ ` ( தி :- 6 ப .47 பா .4, ப .11 பா .1-10.)

பண் :

பாடல் எண் : 2

கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே யுணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கட் பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளே னிறைவ னேநா னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

ஞானக் கலைகளைக் கல்லாத நான் அவற்றைக் கற்ற ஞானிகளோடு தொடர்பு கொள்ளாததனால் நல்லுணர்வுக்கு அப்பாற்பட்டு விட்டேன் . அத்தகைய நல்லறிவு இல்லாத நான் பெரிய நீண்ட கண்களை உடைய மகளிருக்கும் பொலிவு இல்லாதவனாய் உள்ளேன் . இறைவனே ! நான் எதற்காக இருக்கிறேன் ? இம்மை மறுமை வீடுகளுள் எதனையும் தேட இயலாதவனாயினேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

கலைகள் கற்றிலேன் - கலைகளைக் கற்றுக் கொண்டிலேன் . ஞானம் கற்றவர் தங்களோடும் உற்றிலேன் - கலைஞானத்தைக் கற்ற சான்றவர்களோடும் உறவாடல் கொண்டிலேன் . கலைகள் ஞானம் கற்றிலேன் , கற்றவரோடும் உற்றிலேன் எனலும் ஆம் . பொது சிறப்பென்னும் இருவகைக் கலைஞானத்துள் , உவமையிலாக் கலைஞானம் சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் ஆகிய சிறப்பு . ஏனைப் பொதுக்கலை ஞானத்துக்கு உவமையுண்டு . அவற்றைக் கற்றிலேன் என்னார் நம் அப்பர் . கற்றவர் என்பதும் பொதுக்கலை கற்ற புலவரைக் குறித்ததன்று . சிவஞானத்தை யுடையவரைக் குறித்தது . ` ஆதலாலே உணர்வுக்குஞ்சேயன் ஆனேன் ` என்றதை நோக்கின் அவ்வாய்மை விளங்கும் . உணர்வு - சிவஞானம் . ஆண்டுச் ` செந்நெறிக்குஞ் சேயேன் ` என்றார் . ஈண்டு ` உணர்வுக் குஞ்சேயன் ` என்றார் . செந்நெறியும் அந்நெறியுணர்வும் திருவருளின ஆதலின் உவமையுடைய பொதுக்கலையைக் குறித்ததன்று இது . உவமையிலாக் கலைஞானமாகிய சிறப்புடைய சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானத்தையே ஆகும் . பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் ஆகிய மெய்ஞ்ஞானம் உணர்வரியது . அதை உணர்ந்து சிவாநந்தத்தில் திளைப்பவர் நம் அப்பர் . ` கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் ` என்றதும் . அடுத்துக் ` கற்றார்கள் உற்று ஓருங் காதலான் `( தி .6 ப .84 பா .8) என்றதும் உணர்க . ` கலைபயில்வோர் ஞானக் கண்ணானான் கண்டாய் .` ( தி .6 ப .73 பா .2) ` திருவானைக் காவிலுறை சிவனே ஞானம் ஆனாய் `(6.62.2) ` கலைஞானம் கல்லாமே கற்பித்தான் ` ( தி .6 ப .11 பா .4) ` கலை பயிலுங்கருத்தன் ` ` கலையாரும் நூல் அங்கம் ஆயினான் ` ( தி .6 ப .87 பா .10) ` கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி ` ( தி .6 ப .32 பா .1) ` கற்றார் பயில் வகடனாகைக் காரோணத் தெங்கண்ணுதலே ` ( தி .4 ப .103 பா .2) என்பவற்றை நோக்கின் சிவசம்பந்தம் உற்ற கலையே உணரப்படும் . ` கல்லார் நெஞ்சினில்லான் ஈசன் ` என்றதும் உணர்க . ` கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோ டாடிப் பெற்றதேற் பெரிதுந் துன்பம் பேதையேன் பிழையினாலே ` ( தி .4 ப .52 பா .8) என்புழி , அப்பர்க்குக் கல்வி யில்லை என்பதோ பொருள் ? பெற்றிலேன் - அடைந்திலேன் . சிவஞானம் இன்றிச் சிவனைப் பெறலரிது . ` அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் .......... காட்டொணாதே ` ` காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக்காலே .` பெருந்தடங்கட் பேதை மார்க்கும் பொல்லேன் ; அவர்கண் பெருந்தடங்கண்ணாயினும் அவற்றிற்கு யான் பொலிவில்லேன் . பொல்லேன் - பொலிவில்லேன் . ` இமயப்பொருப் பகஞ் சேர்ந்த பொல்லாக் கருங்காக்கையும் பொன்னிறமாயிருக்கும் ` ( யாப்பருங்கலக் காரிகை ) என்பதில் , கருங்காக்கை பொலிவில்லாதது ( பொலம் போலொளி தராது ) அது பொலமேயான மலையைச் சார்ந்து பொன்னிற முற்றது என்பதே அதன் பொருள் . பொல்லாத ( தீய ) காக்கை எனல் ஆண்டுப் பொருந்தாது . எற்று - என்னது ; எத்தன்மையது . எற்றுளேன் - ஒன்றுமில்லேன் ; இம்மை மறுமை வீடுகளுள் எத்தன்மையதும் இல்லேன் என்றவாறு .

பண் :

பாடல் எண் : 3

மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை யுணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே முதல்வனே வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

என் மனத்தை இம்மையில் செலுத்தி , மறுமையை உணராது , வாழ்வின் தொடக்கத்திலேயே இறைவனை வணங்காது , பெருமை இல்லாத நாய் போல நின்று , உலகப் பற்றாகிய பாவத்தைத் தேடி , அதனை நீக்காதவனாய் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

மனத்தை மாட்டினேன் . என் மனத்தினை இம்மையிற் செலுத்தினேன் . ` வள்ளல்தான் வல்ல வெல்லா மாட்டினன் `. ( சிந்தா மணி . 1274 ) ` உலோக பாலன் தான்வல்ல விஞ்சைகளெல்லாவற்றையும் செலுத்தினான் ` என்பது நச்சினார்க்கினியர் உரை . முன்னே இம்மையிற் செலுத்துதன் முன்னரே . மறுமைப் பயன்களை மூட்டி . பொருத்தி , ஏவிவிட்டு . பற்றுச்செய்து . முன்னை நாளே - இளமையிலேயே . ` முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்றொரு பொருளைத் தப்பாமற்றன்னுட் பெறானாயிற் - செப்புங் , கலையள வேயாகுமாங் காரிகையார் தங்கண் முலையளவே யாகுமாம் மூப்பு ` என்னுங் கருத்து , மூட்டிநான் , முன்னைநாளே முதல்வனை வணங்கமாட்டேன் என்றதாலும் விளங்கும் . பாட்டினாய் என்பதற்குப் பெருமையில்லாதநாய் என்றனர் சிலர் . தி . 12 திருநாவுக்கரசு நாயனார் புராண உரை பக்கம் 708. சிவக்கவிமணி கோ . க . சு . அவர்கள் அப்பர் தேவாரப் பதிப்பு பக்கம் 456. பட்டிநாய் என்பது முதல் நீண்டதுமாம் . ` பாட்டரும் பகடு ` சிந்தாமணி (436) என்புழி நச்சினார்க்கினியர் பட்டு என்பது பாட்டென முதல் நீண்டது எனக் கொண்டு , பட்டு விகாரம் என்றார் . பட்டிநாய் - திருட்டுநாய் . பட்டி என்பது களவு நாய் முதலிய பல பொருள் உடையது . பாட்டிநாய் என்று தந்நகரம் உள்ளதாகக் கொண்டு பெண்ணாய் எனலாம் . ` பிடி பிணை பெட்டை மந்தி பிணாவோடானாகுபாட்டி ` சூடாமணி நிகண்டு 3:- 34, ` பாட்டு வித்தாலாரொருவர் பாடாதாரே ` ` ஆட்டினான் முன் அமணரொ டென்றனைப் பாட்டினான்றன பொன்னடிக் கின்னிசை வீட்டி னான்வினை மெய்யடி யாரொடும் கூட்டி னான்குரங் காடு துறையனே ` என்று பின்னர் இப்பெருமானது திருவாக்கில் வந்திருத்தலின் , ஈண்டும் அவ்வாறே பொருள் கொள்ளல் தக்கது , பாட்டினாய் போல நிற்றலாவது பாடச் செய்த சிவனாகிய நீயாய் நின்று எல்லா முன்செயலெனச் செய்து நிற்றல் . இதனை இறைபணி நிற்றல் என்பர் . பாசம் சாராதவாறு இறைபணி நின்று திருவடியைப் பெறாது , என் செயலாக எல்லாம் செய்துவரும் பற்றதாம் பாவத்தையே ஈட்டினேன் என்பது கருத்து . பருகினவாறு என்பதைப் பருக்கினவாறு என்றதும் அறிக . ஈட்டல் - ஈண்டுதல் என்றதன் பிறவினை ; திரட்டுதல்

பண் :

பாடல் எண் : 4

கரைக்கடந் தோத மேறுங் கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாக மசைப்பனே யின்ப வாழ்க்கைக்
கிரைக்கடைந் துருகு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

கரையைக் கடந்து வெள்ளம் பெருகும் கடலில் தோன்றிய விடத்தை உண்ட கழுத்தை உடைய சிவபெருமான் சொல்லையும் கடந்த பெருமையை உடையவன் . ஆதலின் அவனைப் பற்றிப்பேசும் தன்மை உணராதேன் . ஆதலின் இடையில் பாம்பினை இறுகக் கட்டிய அப் பெருமானை நோக்கி , சிற்றின்பம் விளைக்கும் உலக வாழ்விற்கும் , பசியைப் போக்கும் உணவிற்கும் அடையத் தகாதாரை அடைந்து நெஞ்சு உருகிப் பொழுது போக்கும் நான் எதற்காகப் பிறப்பெடுத்தேன் என்று கூறி அவன் அருளை வேண்டுகின்றேன் .

குறிப்புரை :

கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் :- கரையைத் தாண்டி அலை ( யீரம் ) ஏறுகின்ற கடலில் எழுந்த நஞ்சு . ஓதம் - அலை , ஈரம் , வெள்ளம் . ` எங்கோன் புரிதரு கருணையென்னும் ஓதத்தினொழுக்கு ` ( கந்த புராணம் . இந்திரனருச்சனைப் . 3) கடல் :- ஈண்டும் பாற்கடல் . கண்டன் - கழுத்தினன் . உரைகடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலன் :- ` வாக்குமனாதீதன் .` ` சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் .` ` உரையுணர்வு இறந்து நின்றுணர்வ தோருணர்வு ` ஆதலின் , அவற்றைக் கடந்து நின்று பரநாதத்தில் ஓதும் நீர்மையை உணர்ந்து ஓதல் வேண்டும் . ` ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி ` ( சிவஞானபோதம் . சூ . 9) ` ஈண்டு அம் முதலை ஞானக்கண்ணினாலே காண்க என்றது ; அவன் வாக்கு மனாதீதகோசரமாய் நிற்றலான் `. ( ? . பொழிப்பு ). அரை - இடை . அரையிற் கிடந்து அசையும் நாகம் - அசைகின்ற பாம்பு . ` ஆடு பாம்பு ` என்பதில் அடுதல் - கொல்லல் . அசைப்பனே - ( அப்பாம்பினைக் கச்சாகக் ) கட்டுதலுடையவனே . இன்ப வாழ்க்கைக்கு இரைக்கு - சிற்றின்பம் விளைக்கும் உலக வாழ்விற்கும் பசிதீர்க்க இன்றியமையாத இரைக்கும் . அடைந்து - அடையத் தகாதாரை அடைந்து . ( உருகுகின்றேன் ).

பண் :

பாடல் எண் : 5

செம்மைவெண் ணீறு பூசுஞ் சிவனவன் றேவ தேவன்
வெம்மைநோய் வினைக டீர்க்கும் விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

செம்மையான மேனியில் , திருநீற்றைப் பூசும் சிவபெருமானாகிய , கொடிய வினைகளைப் போக்கும் தேவ தேவன் ஆகிய அந்த விகிர்தன்பால் விருப்புற்று முற்பிறப்பில் அடிமை செய்யாத பயனற்ற வாழ்க்கைச் செயலை நினைத்து , இப்பிறப்பில் உருகுகின்றேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

செம்மை வெண்ணீறு பூசும் சிவனவன் - ` செம்மை ` எனப்பெறும் சிவாநந்த முத்திப்பேற்றை நல்கும் திருவெண்ணீற்றினை மெய்யெலாஞ் சண்ணிக்குஞ் சிவபிரான் . ` அவன் ` என்பது சுட்டுப் பெயராய் நில்லாது , ` சிவன் ` என்பதொடு சேர்ந்து அதன் பொருளாய் நின்றது . தேவதேவன் . ` தேவர்கோ அறியாத தேவதேவன் .` ` தலையாய தேவாதி தேவர்க்கு என்றும் சேயான் `. வெம்மை - பிறவிக்கோடை ; வெப்பம் . நோய் - இன்பதுன்பம் . ( பிராரத்தம் ) வினைகள் - ஆகாமியசஞ்சிதங்கள் . விகிர்தன் . இயல்பினன் . பசுபாசங்களின் வேறுபட்டவன் . வி + கிர்தன் - செயற்பாடில்லான் , விகிர்தம் - வேறுபாடு . ஆர்வம் - அன்பு . அம்மை - முற்பிறப்பில் . செய்யா - செய்யாமலே கழித்து . அம்மையிற் செய்யாது கழித்து இம்மையில் உருகுகின்றேன் . வடிவு இலா வாழ்க்கை ; முடிவு இல் வாழ்க்கை . பேரின்ப வாழ்க்கையல்லாதவற்றிற்கு வடிவும் உண்டு . அவ்விரண்டும் இல்லாத பேரின்ப வாழ்க்கையை ஆன்மா எய்தும் வரையில் உடலாகிய வடிவும் அவ்வடிவிற்கு முடிவும் உண்டு என்றுமாம் . (1) பசுக்கள் கேவலாவத்தையில் ஆணவமயம் (2) சகலாவத்தையில் மாயாமயம் . (3) ஆன்மாக்கள் சுத்தாவத்தையிலே சிவமயம் ஆதலின் , முதலாவதிலும் மூன்றாவதிலும் வடிவில்லை . இரண்டாவதில் வடிவும் அதற்கு முடிவும் உள . முன் இரண்டவத்தைக்கும் முடிவுண்டு . சுத்தாவத்தையில் ஆன்மாவிற்கு ஞானமே வடிவம் . அதற்கு முடிவில்லை . ஆனால் அந்த ஞானவாழ்வை வடிவிலா முடிவில் வாழ்க்கை என்றார் . சுத்தாவத்தையின்கண் எய்தும் சாக்கிராதியைந்தும் அத்தகையன . அவ்வுண்மையை நெஞ்சுவிடு தூது ` மேனியிலா வஞ்சவத்தையுங் கடந்தாயபெரும்பேரோளிக்கே தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சம் அறத் தானந்தமில்லாத தண்ணளியால் ஓங்கிவரும் ஆனந்தம் என்பதோர் ஆறுடையான் ` ( தி .4 ப .6 பா .4,6) என்றதால் உணர்க .

பண் :

பாடல் எண் : 6

பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளு மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே யென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலை நீங்காதேனாய் , கொடுமையை நீக்குமாறு அறியேனாய் , சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டேனாய் , இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன் . யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான் ?

குறிப்புரை :

பேச்சொடு பேச்சுக்கெல்லாம் :- தொடங்கியது முதல் முடியுமளவும் ஒவ்வொரு பேச்சுக்கும் . பிறர் தமை - பிறரை . புறம் பேசல் - புறங்கூறல் . கூச்சிலேன் - கூசுதல் இல்லேன் . கொடுமை :- சாதலினும் கொடியது . ` புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் ` ( குறள் ). விடும் ஆறு ஓரேன் - விட்டொழிக்கும் வழியைச் சிறிதும் ஆராய்ந்திலேன் ,` ஆராய்வதில்லேன் . உணரேன் என்பதன் மரூஉவே ஓரேன் என்பது . ஓர்ந்துணர்தல் ; ஓர்த்துணர்த்தல் ; ஓர்த்துள்ளம் உள்ளதுணர்தல் எனல் அம் மரூஉ வழக்கின் பிற்பட்டதே . எடுத்தல் என்பது ஏத்தல் எனமருவிய பின்னர் . ` எடுத்தேத்தல் ` எனலும் அன்னதே . மூர்த்தி - சிவமூர்த்தி . சிவமூர்த்தியாகிய நின்னால் ஆன்மாக்களுக்கு ( ம் அடியேனுக்கும் ) எய்தும் நன்மையை நாளும் நாவிற் சொல்லி ( உள்ளத்தால் உள்ளி ) உணர்வால் உணரமாட்டேன் . நாளும் உணரமாட்டேன் . சொல்லி உணரமாட்டேன் . ஏச்சுஉள் - இகழ்ச்சிக் கிடமான இவ்வுடம்பினுள் , இவ்வுலகினுள் . நின்று என்செய்வான் தோன்றினேன் . மெய்யே - மெய்யாக ., ` ஓரூர் பேச்சு ஓரூர்க்கேச்சு ` ( வழக்கு ). இழித்து என்பது இழிச்சு - ஈழ்ச்சு - ஏழ்ச்சு - ஏச்சு எனமருவியது . ` எம்பிரான் இழித்திட்டேனே ` ( தி .8 திருவாசகம் . 5.66) இழிச்சுதல் - இழிவுபடுத்தல் . இறக்குதல் . ` அட்டகறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி ` ( தி .12 பெரிய புராணம் , சிறுத்தொண்டர் . 66). இறக்கிப் பேசுதல் என்பது வழக்கு .

பண் :

பாடல் எண் : 7

தேசனைத் தேச மாகுந் திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப் புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை யறிய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

ஒளிஉடையவனாய் , உலகங்கள் புகழும் திருமாலை ஒரு பாகமாக உடையவனாய் , எல்லாராலும் வணங்கப்படுபவனாய் , தூயவனாய் , அடியாருடைய உள்ளத் தாமரையில் இருப்பவனாய் , அன்பனாய் , தீயை ஏந்தியவனாய் , செம்பொருளாய் உள்ள பெருமானை அறிய முடியாதவனாகின்றேன் . எதற்காகப் பிறந்தேன் நான் ?

குறிப்புரை :

தேசன் - ஒளியுருவினன் , ` தேசமிக்கான் ` ( தி .4 ப .61 பா .1) உலகாயிருப்பவனை . ` தேசனைத் தேசன்றன்னை ` ( தி .4 ப .33 பா .9), ` தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலின் பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண் வாசனை மலை நிலம் நீர் தீவளி ஆகாசமாம் ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே ` ( தி .4 ப .7 பா .6). ` தேசனைத் திருமால் பிரமன் செயும் பூசனைப் புணரிற் புணர்வாயதோர் நேசனை நெஞ்சினுள் நிறைவாய்நின்ற ஈசனைக் கண்டு கொண்டதென் னுள்ளமே ` ( தி .5 ப .98 பா .9). திருமாலோர் பங்கன் :- ` இடமால் தழுவிய பாகம் ` ( தி .4 ப .2 பா .14) மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகி ` ( தி .4 ப .22 பா .4) மாலுங் கொப்பளித்த பாகர் : ( தி .4 ப .24 பா .7) காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் ( தி .4 ப .32 பா .7) ` அரியலால் தேவியில்லை ` ( தி .4 ப .40 பா .5). பூசன் - பூச்சியன் ; அன்பன் , பூசல் , அன்பு , பூசலார் , ` புன்கணீர் பூசல் தரும் ` ( குறள் ). புனிதன் - தூயன் . புண்டரிகம் - தாமரை . ` அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் ` ( திருஞான சம்பந்தர் ). நேசன் - அன்பன் . நெருப்பன் - தீயாயிலங்குமவன் . நிவஞ்சகம் ( நிபஞ்சகம் ) - ஐந்தும் நீங்கிய நிலை . அவிச்சை , அகங்காரம் அவா , விழைவு , வெறுப்பு ( குறள் 38. பரி ) என்னும் ஐந்து குற்றமும் நீங்கிய நிலை , பஞ்சகம் - ஐந்தின் கூட்டம் . அதன் திரிபு வஞ்சகம் , இது ` வஞ்சகம் பேசேல் ` என்புழிக் கொள்வதன் வேறு காலம் , நியதி , கலை வித்தை , அராகம் என்னும் பஞ்சகஞ்சுகம் ( ஐந்துபோர்வையும் ) நீங்கிய நிலை எனலுமாம் . ` அராக முதலிய மூன்றும் ஆன்மாவின் இச்சா ஞானக் கிரியைகளை விளக்கிப் போகம் நுகர்தற் பொருட்டுப் புத்தி தத்துவத்திற் செலுத்தியும் , நியதி தத்துவம் இதனையே நுகர்க எனப்போகத்தின் கண்ணே ஆன்மாவை நியமித்து நிறுத்தியும் , காலதத்துவம் இதனை இத்துணைப் பொழுது மாத்திரையின் நுகர்க எனப் போகத்தின்கண் வரையறுத்து நிறுத்தியும் இவ்வாறு இவ்வைந்தும் ஆன்மாவுக்கு உபகாரமாய் ஏனைக் கருவிகள் போல அவத்தைப் படுதற்கு ஏதுவாய் இடையிடையே கூடுதலும் நீங்குதலும் இன்றி எக்காலத்தும் ஆன்மாவினுடனாய்க் கஞ்சுகம் போலப் பந்தித்து நிற்றலின் . இவை பஞ்சகஞ்சுகம் என்று உபசரித்துக் கூறப்படும் . ( சிவ ஞானபாடியம் சூ 2. அராகதத்துவ விளக்கம் ) அவை முதலிய தத்துவ மெல்லாம் சிவபிரானை அடைதற்குத் தடையாதலின் , அவை நீங்கிய நிலையிலே வியாபகமாக ஆன்மாவிற்கு விளங்கும் நிட்பிரபஞ்சப் பொருளை ` அகன்ற செம்மை யீசன் ` என்றருளினார் . ` நித்த நிர்மல சுத்த நிட்ப்ரபஞ்சப் பொருளை ` ` நிஷ்பஞ்சகம் ` வடமொழி . நிவஞ்சகத்து - வஞ்சகம் நீங்கிய விடத்து எனலும் கூடும் . செம்மை :- ( தி .4 ப .76 பா .2) பார்க்க . ` திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்றன் அடியார்க்கும் அடியேன் ` ஈசன் - உடையவன் .

பண் :

பாடல் எண் : 8

விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலே னியல வெள்ளம்
திளைக்கின்ற முடியி னான் தன்றிருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி யென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

இன்ப துன்பப் பயன்களை நல்கும் வினையை நினைத்து மயிர் வெளுத்த பிறகும் முளைத்து வளருகின்ற வினையைப் போக்குதற்கு முயலாது , கங்கை தங்கிய சடையை உடைய சிவபெருமானுடைய திருவடிகளை முன்நின்று வழிபட மாட்டாமல் , வீணாக இருமிக்கொண்டு , தடியை ஊன்றி இளைக்கும் நிலையினன் ஆகின்றேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

இன்ப துன்பப் பயன்களைத் துய்த்து இளைத்துத் தளர்ந்து மூத்தும் வினையொழிக்கும் வழியில் ஈடுபட்டிலேன் , விளைக்கின்ற வினையை - தன் பயனையும் புதிய வினையையும் தோற்றுகின்ற பிராரத்த கருமத்தை ( சித்தியார் . 102) நோக்கி - எண்ணி ; குறித்து ; வெண்மயிர் - நரைமயிர் . விரவி - கலந்து . இது , வயதாகியும் என்னும் பொருள் குறித்து நின்றது . உம்மை தொக்கது . மேலும் முளைக்கின்ற வினையை - ஆகாமியகருமத்தை . போக - அழிய . முயல்கிலேன் - முயலமாட்டேன் . இது முதுமையுணர்த்திற்று , அடுத்த திருப்பாடலை நோக்குக . மூத்து நரை முதிர்ந்தும் வினைதீர்க்க நினையேன் எனல் குறித்தது . இயல - ஒழுகுதலையுடைய . இயலல் - ஒழுகல் . நடத்தல் . ` மயில் கண்டன்ன மடநடை மகளிர் ` ( தி .11 திரு முருகாற்றுப்படை ), ` நடைமயிலே ` ( பிரயோக விவேகம் ). இயல வெள்ளம் - ஒழுகுதலையுடைய கங்கை . ` ஆறொழுகும் `. அது திளைக்கின்ற முடி . முடி - கங்கைச் சடைமுடி . முடியினான்றன் திருவடி - சிவனது சீபாதம் . பரவமாட்டாது - வாழ்த்த வலியின்றி . இருமி ஊன்றி இளைக்கின்றேன் . இருமலும் அஃதுற்றக்கால் பொறாதூன்றலும் இளைத்தலும் முதுமையின் விளைவுகள் . அவற்றால் நித்தியத்திற் புரியும் சிவபூஜை தடைப்படுதலுண்டு . அவ்வுண்மையைக் கூறியது அநுபவம் . ` முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக் கண்கண இருமி நாளும் கருத்தழிந்து அருத்தம் இன்றிப் பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் ` ( தி .4 ப .28 பா .1) ` இரக்கமாய் என் உடலுறு நோய்களைத் துரக்கனை ` ( தி .5 ப .4 பா .10) ` கேளுமின் இளமைய்யது கேடுவந்து ஈளையோடு இருமல்லது எய்தன்முன் கோளரவு அணி கொண்டீச்சுரவனை நாளும் ஏத்தித் தொழுமின் நன்காகுமே ` ( தி .5 ப .70 பா .5) விளைக்கின்ற வினையை நோக்கி மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் . வெண் மயிர் விரவி மேலும் முளைக்கின்ற வினை , வெண்மயிர் விரவல் - மூத்தற் குறிப்பு . ` பன்னருந் தவம்புரி பருவம் ஈதெனக் கன்னமூலத் தினிற்கழற வந்தென மின்னருங் கருமை போய் வெளுத்ததோர் மயிர் ` ( கம்பரா . அயோத் . தொடக்கம் )

பண் :

பாடல் எண் : 9

விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லே னெந்தாய் காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லே னெந்தா யென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

எந்தாய் ! பின் விளையும் பயனை அறியாமையால் வேதனையாகிய குழியிலே விழுந்து , ஆழ்ந்து பற்றுக்கோடு இல்லாது இருக்கின்றேன் . உன்னை வசீகரிக்கும் இசையைக் கற்றேனும் அல்லேன் . மாலையை அணிந்த பெண்களோடு இன்பமாக வாழ இளையேனும் அல்லேன் . அடியேன் எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

விளைவு - பின்விளையும் பயனை . அறிவு - அறிதல் . இலாமையாலே - இல்லாத காரணத்தாலே . வேதனைக்குழி துன்பக் குழி . ` வினைக்குழி ` ( தி .4 ப .67 பா .2; ப .77 பா .6; ப .79 பா .3) குழியில் ஆழ்ந்து . அதினின்றும் ஏற்றித் துன்பம்களையும் துணையும் இல்லேன் . களைகண் - களையுமிடம் . வினைத்தொகை . எந்தாய் எந்தையே ! காமரங்கற்றும் இல்லேன் - இசைப்பாட்டுக்களைக் கற்று ( ணர்ந்து ) மில்லேன் . சீகாமரம் என்னும் பண்ணும் எனலுமாம் . ஆயினும் . கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்றுமில்லேன் ` ( தி .4 ப .79 பா .5) எனப் பின்னுள்ளதைக் காணின் , அது பொருந்தாமை புலப்படும் . ` தும்பி காமரம் இசைப்ப ...... வேனிற் கோமகன் மகுடஞ்சூடியிருப்பது அக்குளிர் பூஞ்சோலை .` ( திருவிளையாடல் தருமிக்குப் . 20). தளை அவிழ் கோதை நல்லார் - கட்டு அவிழ்ந்து விரிந்து பூங்கோதையைச் சூடிய கூந்தலையுடைய அழகிய மகளிர் . நல்லார் தங்களோடு - நல்லாரோடு . இன்பம் எய்த இளையனும் அல்லேன் . எந்தாய் - எம் தாயே எனலுமாம் . ` அம்மையே அப்பா ` ` ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய் உடன் தோன்றினராய் ` ( தி .4 ப .94 பா .1). ` செவ்வாய்க் கருங்கட்பைந் தோகைக்கும் வெண்மதிச் சென்னியற்கும் ஒவ்வாத் திருவுரு வொன்றே யுள தவ் வுருவினை மற்றெவ் வாச்சியம் என்று எடுத்திசைப்பேம் இன்னருட் புலியூர்ப்பைவாய்ப் பொறியரவல்குல் எந்தாய் என்று பாடுதுமே `. ( சிதம்பரச் செய்யுட் கோவை . 73)

பண் :

பாடல் எண் : 10

வெட்டன வுடைய னாகி வீரத்தான் மலையெ டுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய வாதியை யோதி நாளும்
எட்டனை யெட்ட மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

கடும் போக்கு உடையனாகி , தன் வீரத்தைக் காட்டக் கயிலை மலையைப் பெயர்க்கத் தொடங்கிய தீயவனாகிய இராவணனின் செருக்கை அடக்கி அவன் வாயினின்றும் சுவையாகச் சாம வேதகீதம் கேட்ட அட்டமூர்த்தியாகிய சிவபெருமானுடைய பெருமையைச் சொல்லி அவனை எள்ளளவும் அணுகமாட்டேன் . எதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

வெட்டனவு - கடுமைக்குறிப்பு . ` வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் ` ( நல்வழி 33) உடையனாகி எடுத்த துட்டன் . வீரத்தால் எடுத்ததுட்டன் . துட்டு - அடங்காமை துட்டத்தனம் . வழக்கு . சுவை - செவிச்சுவை ; இன்பம் கீதம் - சாமகீதம் ; பாட்டு . அட்டமா மூர்த்தி - எட்டுருவுடைய சிவபிரான் கேட்ட ஆதி . ஆய ஆதி . ஆதியைநாளும் ஓதி எட்ட மாட்டேன் எள் + தனை = எட்டனை - எள்ளளவும் . உம்மை விரிக்க . ` இறையேயும் ஏத்தமாட்டேன் ` ( தி .4 ப .79 பா .5) எனப் பின்வருதலும் உணர்க . உள்ளே உயிர்க்குயிராய் எட்டி யிருப்பவனை , அக நோக்கம் எய்தி எட்ட வலியில்லேன் எனலுமாம் . எட்டனை எனப் பொதுவில் எண்மட்டுங் கூறியதால் எட்டுருவினனை என்பர் . எண்குணத்தனை எண்டிசையனை எனலும் இன்னும் எட்டாகச் சொல்லப்படுவனவும் பொருந்துமேற் கூறிக்கொள்க . இத்திருப்பதிகம் சிவவழிபாடில்லாத பிறவியின் பயினின்மையை உணர்த்திற்று . அடுத்த திருப்பதிகமும் இதனொடு சேர்ந்து ஒன்றெனக் கொள்ளலும் உண்டு . ` ஐயாறனடித்தலமே ` என முடியும் இருபதும் ஒரே தொகையவாகக் கொண்டு அதற்கு 19 ஆவதில் அடிமுடி தேடியதும் 20 ஆவதில் இராவணன் செய்தியும் அமைந்தவாறு காரணம் என்பர் . அதுபோல . ஈண்டு இல்லை . 10 ஆவது இராவணன் செய்தியைக் கூறுகின்றது .
சிற்பி