பொது


பண் :

பாடல் எண் : 1

தம்மானங் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை யமுதன் றன்னை யாதியை யந்த மாய
செம்மான வொளிகொண் மேனிச் சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

மகளிருக்கு அவமானம் உண்டாகாதவாறு காக்கும் முயற்சியில் ஈடுபட்டு , அவர்களுடைய கண்வலையிற்பட்டு , அதனால் , தலைவனாய் அமுதம் போன்று இனியனாய் , எல்லாவற்றுக்கும் ஆதியும் அந்தமும் தானாக உள்ளவனாய் , செம்மேனி அம்மானாய் , அடியேனுடைய உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் எம்முடைய தலைவனை விருப்புற்று நினையமாட்டேன் . யாது செய்வதற்காக இவ்வுலகிற் பிறப்பெடுத்துள்ளேன் நான் ?

குறிப்புரை :

மாதர் மயக்கிலழுந்திச் சிவசிந்தனையைச் சிறிதும் எய்தாமைக்கு வருந்துவது . தம்மானம் ; தையலார்தம்மானம் - தையலாருடைய மானம் . மானம் காப்பது - வெளிப்படை . மானங் காத்தல் - அவமானம் உளதாகாவாறு தடுத்தல் . ஆடை அணி முதலிய வற்றால் அது காக்க முயன்று ஆண்டவனை மறப்பது உலகியல் . குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தலரிது ( குறள் . 29). மானம் - வலி . இப்பொருட்கு ஆடவர் வலியை வெல்ல வொட்டாது மகளிர் வலியே தடுத்துத் தோல்வியுறுத்தி அவரை அவர்தம் வயப்படச் செய்கின்றதென்க . தையலார்தம் மானம் காப்பதாகி அவர் மாயவலையுள் வீழ்ந்து அம்மானும் அமுதனும் ஆதியும் எம்மானுமாகிய சிவபிரானை நினைய வலியில்லேன் ஆனேன் . என்செய்யும் பொருட்டுத் தோன்றினேன் ? அந்தம் - அழகு . எல்லாப் பொருட்கும் முடிவிடம் எனலுமாம் . ஆய - ஆன . செவ்வொளி மானவொளி . மானம் - பெருமை . செவ்வானம் என்பதன் மரூஉவாகிய செம்மானமும் ஆம் . ஒளி கொண்ட திருமேனியையுடைய எம்மான் . சிந்தையுள் ஒன்றி நின்ற எம்மான் . ஒன்றி நின்றவனை ஒன்றியிருந்து நினைய வலியில்லேன் . அதற்கு ஏது , ஒன்றாவாறு தடுக்கும் தையலார் மையல் வலையுள் ஆழ்ந்ததே ஆகும் என்று இரங்கியவாறு உணர்க .

பண் :

பாடல் எண் : 2

மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

மனைவி , மக்கள் , அவர்களுடைய மக்கள் ஆகியவர்களைப் பாதுகாக்கும் பாசப்பிணைப்பான வாழ்க்கைச் சிக்கலுக்குள் அழுந்தி எம்பெருமான் பற்றிய செய்திகளில் ஈடுபடாது , தவம் என்பதனை உணராது , நீர்க்குமிழி போலத் தோன்றிமறையும் பயனற்ற இவ்வுடம்பைப் பாதுகாப்பதற்கே முயல்கின்றேன் . யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

மனைவியையும் மக்களையும் அம்மக்கட்கு மக்களையும் அவரவர் மனைவியர் வயிற்றிற் பிறந்தவரையும் காக்கும் வாழ்க்கைச் சிக்கலுள் அழுந்திச் சைவத்திறம் பொருந்திலேன் . அத்திறத்துத்தவத்தை உணரேன் . நீர்க்குமிழி போலத் தோன்றியது இக்களேபரம் (- உடம்பு ). நீரிலே தோன்றி நீரிலே மறைவது குமிழி . அதுபோல மண்முதலிய பூதகாரியமாகித் தோன்றி அப்பூதங்களிலே மறைவது உடம்பு . தோன்றிய கணத்தினுள் மறைவது . வானவில் போலவும் மின் போலவும் தோன்றி மறையும் உடல் என்பதும் நினைக . ` வாங்கு சிலை புரையும் உடல் ` ( நால்வர் நான்மணிமாலை ) எனலும் உண்டு . ` படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றிக் கெடும் இதோர் யாக்கை ` ( நாலடியார் . 27) சிந்தாமணி 2754 - 2760 பார்க்க . ` மின்னும் மொக்குளும் என நனிவீயினும் வீயும் ` ( ? . 2754). ஓம்பல் :- ` குடிபுறங் காத்தோம்பிக் குற்றங்கடிதல் ` ( குறள் . 549) ` அகன்றிடா தோம்பிற் றன்றே ` ( கந்தபுராணம் . சூரபன் . மூன்றாம் . 167) ` குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர் ` ( நீதிநெறிவிளக்கம் . 29) என்று போற்றல் காத்தல் என்னும் பொருட்டாதலறிக . அதன் உள்ளே - தோன்றிய அக்கணத்துக்குள்ளே . அது - அக்கணம் . அப்பர் பாட்டனாரும் பூட்டனாருமாக இருந்தமை அறிக .

பண் :

பாடல் எண் : 3

கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலு மிறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணி னல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு மென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

கொடிய வினையின் பயனாகிய குழியில் விழுந்து எம்பெருமான் திருவடிக்கண் அன்பினால் குழையும் இயல்பு இல்லாதேனாய் , ஏழிசையால் இறைவன் பெருமையைப் பாடமாட்டாதேனாய் , இளைய ஒளி பொருந்திய கண்களை உடைய நல்ல பெண்களுக்கும் பொலிவு இல்லாதேனாய் அறிவற்றேனாய்க் காலத்தைக் கழித்தவனாயினேன் . என்ன செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

கூழையேனாகமாட்டேன் :- சிவபிரான் திருவடிக்கே ஆம் அன்பினாற் குழையும் இயல்புடையேனாக வலியில்லேன் . குழைமை - கூழைமை . கூழை - பின்பு . கூழைமை - பின் நிற்கும் வழிபாடு . ஆண்டானடிமைத்திறத்திற்குரியது . ` தில்லையம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ நந்தம் கூழைமையே ` ( தி .4 ப .84 பா .5). ` என்பு இருத்தி நரம்பு தோல் புகப்பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி இன்பு இருத்தி முன்பு இருந்த வினைதீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி அன்பு இருத்தி அடியேனைக் கூழ் ஆட்கொண்டு அருள் செய்த ஆரூரர்தம் முன்பு இருக்கும் விதியன்றி , முயல்விட்டுக் காக்கைப் பின்போனவாறே ` ( தி .4 ப .5 பா .2) ` பீழைமை பலவும் செய்து பிணிப்படை பரப்பி வந்து , வாழுயிர்ப் பொழித்து வவ்வி வலிந்துயிர் வாங்கி யுண்ணுங் கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்குஞ் சூழ்ச்சி பாழியந்தடக்கை வேந்தே பயின்றிலம் யாங்களென்றார் `. ( சூளாமணி . துறவுச் . 18) ` கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே ` ( நாலாயிர . பெரியாழ்வார் . மூன்றா . அஞ்சந .5) என்பவற்றில் உண்ணுங் கூழைமை . வாய்கொடுத்துக் கூழைமை செய்யாமே என்றதால் விளங்கும் கருத்து ஈண்டும் பொருந்தும் . கொடுவினைக் குழியில் வீழ்ந்து :- தி :-4 ப .78 பா .9, ப .77 பா .6 ஏழிசை . இன்னிசை . ஏழின் இசை . ஏழின் இன்னிசை . நம் அப்பர் காலத்திற்கு முன்னரே தமிழிசையால் இறைவனை வழிபடும் வழக்குண்மை யுணர்க . நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பியது புதிதன்று . இராவணன் இசையால் இறைவனை வழிபட்டதற்கு முன்பிருந்தே ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவனை அதனால் வழிபட்டனர் தமிழர் முதலோர் . மாழை - இளமை . ` மைபூத்தலர்ந்த மழைக்கண் மாழைமானேர் நோக்கு ` ( சிந்தாமணி . 2198) ` மாழைவாள் முகங்கள் ` - ` இளைய முகங்கள் ` ( சிந்தாமணி . 2536 உரை ). ` மாழை யொண்கண் பரவையைத் தந்தாண்டான் ` ( தி .1 ப .51 பா .10) மாழையை மான் என்றலும் உண்டு . கண்ணின் - கண்களையுடைய . நல்ல - அழகிய . மடந்தை - மடம் உடைமை . ` நாண் மடம் அச்சம் பயிர்ப்பு `. மடந்தை மகவர் என்பதன் மரூஉ மடந்தைமார் . ` மகார் ` பெயர் ஆதலின் வினைகொள்ளும் , நூல்களில் மார் ஈற்று வினையாகக் கொண்டது , சொல்லாராய்ச்சி முடிபின் வேறாகும் , பொல்லேன் , ( தி .4 ப .78 பா .2.) ஏழையேன் - அறிவில்லேன் . ` நுண்ணுணர்வின்மை வறுமை ` ( நாலடியார் ) ` பிணியன் ஏழை ` ( நன்னூல் ). ` பார்ப்பானை யேழை என்றலும் பசுவைச் சாது என்றலும் கூடா `. ( பழமொழி ).

பண் :

பாடல் எண் : 4

முன்னையென் வினையி னாலே மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப் பிதற்றுவன் பேதை யேனான்
என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

முற்பிறப்பில் செய்த என் வினைப்பயனாலே பெருமானை நினைக்க இயலாத அடியேன் உலகியலிலே ஈடுபட்டு இவ்வுலக இன்பங்களையே மேம்பட்டனவாகப் பிதற்றிக் கொண்டிருப்பேனானேன் . அறிவில்லாத அடியேன் என் உள்ளத்தினுள்ளே நிலை பெற்றிருத்தலை தமது சிறப்பியல்பாக உள்ள பெருமானை என்னுள் வைத்துத் தியானிக்க மாட்டாதேனாகின்றேன் . வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் தோன்றினேன் நான் ?

குறிப்புரை :

என் முன்னை வினையினாலே - யான் முன்பு செய்த தீவினையின் பயனை அநுபவித்தலாலே , மூர்த்தியை - சிவ மூர்த்தியை . நினைய - விடாது நினைந்து போற்ற . மாட்டேன் - வலியில்லேன் . பின்னை - கடவுளை வழிபடாதது பெருங்குற்றம் என்றும் பெரியதோரிழப்பு என்றும் இப்பிறவிக்கு அதுவன்றி வேறு பயனில்லை என்றும் அறிந்த பின்னர் , நான் பித்தனாகிப் பிதற்றுவன் . பித்து - சிவபெருமான் திருவடிக்கே பற்றுவைத்து அதையே எண்ணிக்கொண்டு பெற நாடும் உயரிய நோக்கம் . ` பித்துப் பத்தரினத்தாய்ப் பரன் உணர்வினால் உணரும் மெய்த்தவரை மேவா வினை ` ( சிவஞானபோத வெண்பா ) பிதற்றுவன் :- ` மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில் , பெற்றதோ ருபாயந்தன்னால் பிரானையே பிதற்றுமின்கள் ` ( தி .4 ப .41 பா .10) ` பிண்டத்தைக் கழிக்கவேண்டில் பிரானையே பிதற்றுமின்கள் ` ( தி .4 ப .42 பா .10) ` பேர்த்தினிப் பிறவாவண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன் ... றிறமே ` ( தி .4 ப .41 பா .6). நான் பிதற்றுவன் . நான் நினையமாட்டேன் . ( நான் ) என்செய்வான் தோன்றினேன் . என்னுளே மன்னிநின்ற சீர்மையதாயினான் :- ` உயிர்க்குயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளது ! ( கொடிப்பாட்டு ) என்னுளே நினையமாட்டேன் :- திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொணொத் தேவனை என்னுளே தேடாமல் , உலகமெலாம் தேடியுழல்வேன் . ` உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் கள்ளத்தே நிற்றி ` ( தி .4 ப .76 பா .7.) அக்கள்ளனைத் தேடல் போல உள்ளத்தே உன்னைத் தேடிப் பிடித்துக் கொள்ளேனானேன் . ` என்னுள்ளே நிற்கும் இன்னம்பரீசன் `. ` எம்பிரான் என்றதே கொண்டு என்னுள்ளே புகுந்து நின்று ` ( தி .4 ப .76 பா .3) தன்னிற் றன்னை அறியுந் தலைமகன் , தன்னிற் றன்னை அறியிற்றலைப்படும் , தன்னிற் றன்னை அறிவிலன் ஆயிடில் , தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே `.

பண் :

பாடல் எண் : 5

கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர் பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவி னாவி னானை மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

நீலகண்டனை வசப்படுத்த இசைத்துறைகளைக் கற்றேனும் அல்லேன் . பிறைபோன்ற நெற்றியை உடைய வளையலை அணிந்த பேதைமைக் குணத்தை உடைய மகளிரை வசப்படுத்தும் திறத்தேனும் அல்லேன் . வேதங்களை ஓதும் நாவினை உடைய எம் பெருமானை நிலையாக நின்று ஒருநாளும் சிறிதளவும் போற்ற மாட்டாதேனாகிறேன் . வேறு யாது செயல் செய்வதற்காக இவ்வுலகில் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

கறை - நஞ்சின் கறுப்பு . கண்டன் - ` திருநீலகண்டன் ` காமரம் கற்றும் இல்லேன் :- ( தி .4 ப .78 பா .9). பஞ்சமம் பாடியாடுந் தெள்ளியார் கள்ளந்தீர்ப்பார் ` ( தி .4 ப .29 பா .4). பிறைநுதல் - பிறைபோலும் நுதல் (- நெற்றி ). உமைத்தொகை . நுதலும் பேதைமையும் உடைய மாதர் . பெய்வளை - வினைத்தொகை . மாதரும் வளையாரும் ஆகியவர்க்கும் அல்லேன் . அல்லேன் - பொருத்தமுடையேனல்லேன் . தளையவிழ் கோதை நல்லார் தங்களோடின்பம் எய்த இளையனும் அல்லேன் ` ( தி .4 ப .78 பா .9). மறை நவில் நாவினான் :- மறையுங் கொப்பளித்த நாவர் ` ( தி .4 ப .76 பா .7) ` நாலுகொலாமறை பாடினதாமே ` ( தி .4 ப .18 பா .4) ` மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களும் எல்லாம் துறையும் தோத்திரத் திறையும் தொன்மையும் நன்மையும் ஆய ... ஆதி ` ( தி .7 ப .75 பா .1). ` விழையாருள்ளம் நன்கெழு நாவில் வினைகெட வேதம் ஆறங்கம் பிழையா வண்ணம் பண்ணியவற்றால் பெரியோரேத்தும் பெருமான் ` ( தி .1 ப .42 பா .7) ` வேத நாவினர் ` ( தி .2 ப .38 பா .7) மன்னி நிற்றல் - பற்றுட்படாது நீங்கி நிலைத்திருத்தல் . இறைஞ்சுதல் - வணங்குதல் . நாளும் - என்றும் . நாள்தோறும் . இறையேயும் - சிறிதேயும் .

பண் :

பாடல் எண் : 6

வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.

பொழிப்புரை :

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால் , எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க , அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன் . வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ?

குறிப்புரை :

கள்வர் ஐவரும் வந்து என்னை வளைத்து நின்று ( எனக்கு ) நடுக்கம் செய்ய இளைத்து நின்று ஆடுகின்றேன் . காரணம் தெளிவின்மையே . எதுபோன்றது அத்தெளியாமை ? தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழலுமெரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமைக்குத் தெளிவில்லாமை போன்றது எனக்குத் தெளிவில்லாமை . சூடு மிகுமுன் உலை நீரில் ஆமையை இடின் , அது மிக்க இன்புற்றுத் திளைக்கும் . சூடு ஏறஏற அதற்கு அழிவு அணுகும் . புலன்வழி யொழுகும் மாக்களும் அதனால் விளையும் பெருந் துன்பங்களை அறியமாட்டார் . புலனெறிநீத்து அருள்வழி போய்ப் பேரின்பம் நுகர்வதே மக்கட் பிறப்பின் பயன் . துன்பத்தில் வீழ்தலை இன்பத்துள் வாழ்தலாக நினைந்து . பிறந்திறந்து துயருறுந் தொல்லையின் நீங்கி எல்லையிலின்பத்துள் அழுந்தி நிற்கும் அழிவிலா வாழ்வை அடைய விரும்புவோர்க்கு இதன்கண் அமைந்த உவமை ஞானத் தெளிவுறுத்தும் . மாக்கள் உலகவலைப்பட்டு வருந்துவர் . மக்கள் அதனுட்படாவாறு அருள்வழியொழுகுவர் . பேதைமையால் தெளிவுண்டாகாது . நாலடியா (331) ரில் ` பேதைமை ` என்றதன் கீழ் அமைந்த ` கொலைஞர் உலை ஏற்றித் தீமடுப்ப ஆமை நிலை அறியாது அந்நீர் படிந்து ஆடி அற்றே , கொலைவல்பெருங் கூற்றம் கோட்பார்ப்ப ஈண்டை வலையகத்துச் செம்மாப்பார்மாண்பு `. என்னும் வெண்பாவின் முன்னீரடியில் ஆமையினியற்கை யொன்றனை உவமமாக்கிப் பின்னீரடியில் மாக்களினியற்கையைப் பொருளாக்கியதுணர்க . பிறவற்றைக் கொன்று , அவற்றின் ஊனைத் தின்று தம் ஊனைப் பெருக்கும் கொலைஞரே அவற்றைக் கொல்லும் முறைமையை உணர்வர் . ஆமையைக் கொல்வதரிது . நெருப்பு மூட்டி உலை நீரை அடுப்பில் ஏற்றி அதில் ஆமையை இடுவர் அதைக் கொல்லுமாறுணர்ந்தோர் . தீயும் சுடர்விட்டெரியும் . நீரும் சூடுற்றுக் கொதிக்கும் . ஆமையும் நீரில் இன்புற்றுத் திளைக்கும் . நீர் காயக்காய மாய்ந்துகொண்டே வரும் ஆமை . தான் அழிந்து வரும் நிலையை அறியாது அது . அதுவே முன்னீரடியிற் குறித்தது . ஆமைக்கும் மாக்களுக்கும் வாழ்க்கையின்பமும் அழியும் நிலையினை அறியாமையும் பொது . பின் அழிதலை முன் அறியாமை மாணாதது . அதனை மாண்பு என்றது இவ்வெண்பா . அஃது எதிர்மறை இலக்கணை . நம் அப்பர் சைன மதத்திற் சேர்ந்தொழுகி மீண்டுய்ந்த வராதலின் , அச் சைனர் குறித்ததோருவமையைத் தமது திறத்திற் கேற்றி , நமது திறத்தை நாடச் செய்தருளினார் . தொலைவிலிராது சூழ்ந்து ( வளைத்துக் ) கொண்ட கள்வர்க்கு நடுங்காதார் எவர் ? ஒருவர் அல்லர் ஐவர் . உயிர் உடலின் நீங்குவதிற் சிறிதும் வெறுப்பிலராயினும் , அஃது அதில் உள்ளபோதே உய்யப் பார்க்கும் விரைவினையுடைய உத்தமர்க்கு , அவ்வுய்தி எய்துமுன் உடற்குக் கேடுவருவதாயின் , அஞ்சாதிருத்தல் ஒல்லாது . ஐவரும் சூழ்ந்து நடுக்கம் விளைக்கினும் அவர் சூழ்ச்சிக்காளாகி , அவர் ஆட்டுமாறாடியும் ஓட்டுமாறோடியும் காட்டுமாறு கண்டும் ஊட்டுமாறுண்டும் , இளைப்புறினும் அவர் திறத்தில் ஓர் இன்பம் உண்டுபோலத் தோன்றும் . அவ்வின்பத்தையே நாடி , அவர் வலையிலே சிக்கி வருந்துவதற்கே மீண்டும் அவாவுறுதல் பேதைமையன்றி வேறில்லை . ஆமைக்குத் தெளிவிருப்பின் , வெந்நீரில் திளைக்குமோ ? அவ்வெப்பம் அதன் உடற்கினிதாயிருந்து , அதைத் தெளியாமை அக் களியாமைக்கு அழிவாக்கிற்று . மெய் வாய் கண் மூக்குச் செவி ஆய ஐந்தனாலும் முறையே உறும் ஊறு , சுவை , ஒளி , நாற்றம் , ஓசை ஐந்தும் பிறப் பிறப்பாகிய துன்பத்தை விளைக்கும் என்று தெளியாமையே பேரின்ப வாழ்வு பெறவொட்டாது தடையா யிருப்பது . பிறந்திறந்துழலும் பெருந்துன்பத்தைச் செய்கின்றது . தெளிந்து திருவருள் பெற்றுச் சிவமாதற்கே பிறந்தேன் . தெளியாமல் ஐம்புலத்தாசை வலையுட்பட்டுப் பிறவிப்பெருங் கடலில் விழுந்து துன்புறுதற்கும் பிறந்தேனல்லேன் என்று இத்திருப்பாடல் உணர்த்து கின்றது . பானுகோபன் வீரவாகுதேவர் திருமுன் போந்து போர்செய்த களிப்பில் முழுகித் திளைத்திருந்து , தான் தன்குலத்தொடு வேரறச் சாய்ந்தொழிய இருக்கும் பின் விளைவைச் சிறிதும் தெளிந்திலன் அதனால் , அவனை ` உலைபடும் இளவெந்நீரின் உளம்மகிழ் கமடம் ஒத்தான் ` எனத் தணிகைப் புராணத்திற் குறித்தருளினார் கச்சியப்ப முனிவர் . இதனொடு நாலாந் திருமுறையிலே திருநேரிசைப் பகுதி முற்றும் .
சிற்பி