கோயில்


பண் :

பாடல் எண் : 1

பாளை யுடைக்கமு கோங்கிப்பன் மாடம் நெருங்கியெங்கும்
வாளை யுடைப்புனல் வந்தெறி வாழ்வயற் றில்லைதன்னுள்
ஆள வுடைக்கழற் சிற்றம் பலத்தரன் ஆடல்கண்டாற்
பீளை யுடைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே.

பொழிப்புரை :

பாளையை உடைய பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்த மாடவீடுகள் நெருக்கமாக அமைய , வாளை மீன் குதிக்கும் தண்ணீர் அலை எறியும் வயல்களையுடைய தில்லை நகரிலே , நம்மை ஆட்கொள்ளுதலுக்காக அமைந்த திருவடிகளை உடைய சிற்றம்பலத்துப் பெருமானுடைய ஆடலைக் காணும் வாய்ப்பினைப் பெற்றால் , அதன்பின் பீளை ஒழுகும் கண்களால் , பிடித்ததனை விடாத பேய்போன்ற இயல்பை உடைய அடியார்கள் , தம் கண்களால் காணத்தக்க மேம்பட்ட பொருள் யாதுள்ளதோ !

குறிப்புரை :

இத்திருப்பதிகத்திலே பாதாதிகேசாந்தம் பாடி மீண்டும் பாதத்தைப் போற்றிய மரபுணர்ந்து கொள்ளலாம் . இது சிவதரிசன விதி . திருவடியிற்றொடங்கித் திருவடியின் முடிவதே சிவதரிசன கிரமம் . 1. ஆடற் காட்சி . 2. திருவடிக்காட்சி . 3. துகிற் காட்சி . 4. கச்சுக் காட்சி . 5. கவித்தகைக் காட்சி . 6. ஏனத்தெயிற்றுக் காட்சி . 7. சிரித்த திருமுகக் காட்சி . 8. நெற்றிக்கண் காட்சி . 9. தூமத்தமலர்க் காட்சி . 10. திருவடிப் பெருவிரற் காட்சி ஆகிய பத்தும் முறையே குறிக்கப்பட்டன . பாளையை உடைய கமுக ( பாக்கு ) மரம் . வாளைமீன் . எறி வயல் . புனல் எறியும் வயல் . வயலையுடைய தில்லை . இது தலப்பெயர் . வழிபடும் அன்பரை ஆளக் கழலுடையது திருவடி . கழல் திருவடிக்கு இடப்பொருளாகு பெயர் . சிற்றம்பலம் - தகராகாசம் . இத்திருக் கோயிலின் பொன்மன்றின் பெயர் . திருக்கூத்தனைக் கண்ட கண்கள் மற்றெவையுங்காணா . மெய்த்தொண்டர் திருக்கூத்தினைக் கண்ட கண்களால் மற்றெவற்றையுங் காணார் . திருக்கூத்தல்லாதவற்றைக் காண்போர் பேய்த்தொண்டர் . காணுங் கண்கள் பீளையுடைய கண்கள் . திருவிசைப்பாவிலே நாலாவது திருப்பதிகம் கண்ணும் வாயும் முறையே காணவும் பேசவும் தகாத பேயரைக் கூறிற்று . ` மூவாயிரவர் தங்களோடு முன்னரங்கேறி நின்ற கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவதென்று கொலோ ` ( தி .9 திருவிசைப்பா . 196) ` தென்றில்லை யம்பலத்துள் அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று கொலோ ( தி .9 திருவிசைப்பா . 197) ` தேவே தென்றிருத்தில்லைக் கூத்தாடீ நாயடியேன் சாவாயும் நினைக்காண்டல் இனி உனக்குத் தடுப்பரிதே `. ( தி .9 திருவிசைப்பா . 214) ` ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள ... ... இந்து வாழ்சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார் `. ( தி .12 பெரிய புராணம் ).

பண் :

பாடல் எண் : 2

பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கை மணாள னுலகுக்கெல்லாம்
திருவுடை யந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
றிருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய் , புலித்தோல் ஆடையனாய் , அழகிய பார்வதி மணாளனாய் , அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால் , காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ !

குறிப்புரை :

பொருவிடை - போரேறு . ஒன்று உடை புண்ணிய மூர்த்தி - தனித்ததொன்றனையுடைய அறவடிவினன் . புலி அதளன் - புலித்தோலாடையன் . உரு உடைய மலை மங்கை - அழகுடைய பார்வதி . அம் மலைமங்கை எனக் கொண்டு அழகிய பார்வதி எனின் , உருவை மேனியாகக் கொள்க . மணாளன் :- மணவாளன் என்பதன் மரூஉ . உலகுக்கு எல்லாம் - எல்லாவுலகங்கட்கும் . திரு :- பேரின்பச் செல்வ முதலிய யாவும் திரு எனப்படும் . தில்லைவாழந்தணர் ` பொங்கிய திருவினீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி மங்கலத் தொழில்கள் செய்து மறைகளாற்றுதித்து ... ... அங்கணர் கோயிலுள்ளா அகம்படித் தொண்டு செய்வார் ` ( தி .12 பெரியபுரா தில்லைவாழ் . 4) ` திருநடம் புரிவார்க் காளாந் திருவினாற் சிறந்த சீரார் ` ( ? 5). ` உலகெலாம் புகழ்ந்து போற்றும் மானமும் பொறையும் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார் ` ( ? 7). ` அகலிடத் துயர்ந்ததில்லை யந்தணர் அகிலமெல்லாம் புகழ்தரு மறையோர் ` ( ? 10) என்றருளிய சேக்கிழார் திருவாக்கால் அறியக் கிடக்கும் திருவை ஈண்டு நினைக . திருவடியைக் கண்ட கண்களால் மற்றவற்றைக் காண்டல் சிவபத்தர்க்கு வேண்டாதது .

பண் :

பாடல் எண் : 3

தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும்
அடுத்து வணங்கு மயனொடு மாலுக்குங் காண்பரியான்
பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

மாலையாகத் தொடுக்கப்பட்ட மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளிற் கொண்டு , எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தம் முயற்சியினாற் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்பவனாகித் திருநீறணிந்து பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் பெருமான் அணிந்த புலித்தோலாடையைக் கண்ட கண் கொண்டு காண்பதற்குப் பிறிது பொருள் யாதுள்ளதோ !

குறிப்புரை :

தொடுத்தமலர் - பூந்தொடையல் . மாலையும் தூபமும் ( தீபமும் ) சாந்தும் பிறவும் கொண்டு புரியும் பூசை சிவதரிசனத்திற்கு இன்றியமையாத சாதனம் . எப்பொழுதும் வணங்குதல் . அடுத்து வணங்குதல் . அயனும் மாலும் அம்பலவனைக் காணாமைக்கு அகந்தையே அன்றி , அவர் செய்த பூசை ஏதுவன்று . பொடி - திரு வெண்ணீற்றுப் பொடி . அணிந்தது வெண்ணீறு . அம்பலவன் . உடுத்த துகில் - திருக்கூத்திற்குரியதாக அசைத்த எழிலுடை .

பண் :

பாடல் எண் : 4

வைச்ச பொருணமக் காகுமென் றெண்ணி நமச்சிவாய
அச்ச மொழிந்தே னணிதில்லை யம்பலத் தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி யுந்தியின் மேலசைத்த
கச்சி னழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

பொழிப்புரை :

நமக்குச் சேமவைப்பாக இருக்கின்ற பொருள் திருவைந்தெழுத்தே என்று விருப்புற்று நினைத்துப் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன் . அழகான தில்லை நகரிலே உள்ள சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்றவனாய் , அடியவர் திறத்துப் பித்தனாய் , பிறப்பு அற்றவனாய் நந்தி என்ற பெயரினனாய் உள்ள பெருமானுடைய கொப்பூழின் மேல் இடுப்பைச் சுற்றிக்கட்டப்பட்ட உதரபந்தமாகிய கச்சின் அழகைக் காணப் பெற்றால் பின்னைக் காணவேண்டிய உயர்ந்த பொருள் யாதுள்ளதோ !

குறிப்புரை :

வைச்ச ( பொருள் ) - வைத்த ( பொருள் ) என்பதன் மரூஉ . பிற்பயக்கச் சேர்த்து வைத்த பழம்பொருள் . பின்னர் நமக்குப் பயன்படுவதாகும் என்று எண்ணி முன்னர் வைச்ச பொருள் நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்து . அப் பொருளே , வைப்புச் செல்வம் . அச் செல்வம் இருத்தலால் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன் . அழகிய தில்லையம் பலத்தில் ஆடுகின்ற பித்தன் , பிறப்பில்லான் ; ( இறப்புமில்லான் ); திருப்பெயர் , நந்தியெனப் பெற்றான் . அவன் திருவரையிற் கட்டிய கச்சினழகைக் கண்டால் , கண்ட அக்கண்ணைக் கொண்டு காணத் தக்கது பின்னை என்னுளதோ !

பண் :

பாடல் எண் : 5

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

பொழிப்புரை :

வயலிலே காண்கின்ற பூங்கொடியில் நீலோற்பல மலர்கள் மலரும் வளமுள்ள தில்லைப்பதியில் உறையுஞ் சிற்றம்பலவனாய் நெய்யில் நின்றெரியும் தீபச்சுடர் போன்று ஒளிவிடும் நீலமணி மிடற்றனுமாய பெருமான் , கருமை நிலைபெற்ற ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமியம்மையார் கண்டு மகிழ்ந்து நிற்க வைத்துச் செய்வதும் என்று வந்தாய் எனும் திருக்குறிப்புப் புலப்பட நின்று இயற்றுவதுமான ஆடலைக் கண்டபின் காணத்தகும் பொருள் வேறு யாதுளதோ !

குறிப்புரை :

நாலடியிலும் ` நின்ற ` என்பது ஞின்ற என்று ஆயிற்று . நகர ஞகரப் போலி . இத் திருவிருத்தத்தை ` ஐகான்யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகான் உறழும் என்மரும் உளரே ` ( நன்னூல் 124) என்பதன் உரையிற் காட்டினார் சங்கர நமச்சிவாயப் புலவர் . தி .4 ப .28 பா .6 குறிப்பிற் காண்க . செய் - வயல் . நீலம் - நீலோற்பலம் . கருங்குவளை . கரு நெய்தல் . மை - கண்ணிற்கிடும் மை . மலைமகள் - சிவகாமியம்மை . விளக்கொத்தமிடறு . மணிமிடறு . நீலமணிமிடறு . ` திருநீலகண்டன் `. கை நின்ற ஆடல் :- என்று வந்தாய் என்னும் திருக்குறிப்புணர்த்தும் திருக்கை நின்ற திருக்கூத்து .

பண் :

பாடல் எண் : 6

ஊனத்தை நீக்கி யுலகறி யவென்னை யாட்கொண்டவன்
றேனொத் தெனக்கினி யான்றில்லைச் சிற்றம் பலவனெங்கோன்
வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண் டத்திலங்கும்
ஏனத் தெயிறுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

பொழிப்புரை :

அவைதிக சமயத்தைச் சார்ந்தவனாயினேன் என்ற என் குறையைப் போக்கி , அடியேனைச் சூலைநோய் அருளி ஆட் கொண்டு , அடியேனுக்குத் தேனை ஒத்து இனியனாய்த் தில்லைச் சிற்றம்பலவனாய் உள்ள எம் தலைவன் , தேவர்கள் உயிர் பிழைக்குமாறு கொடிய விடத்தை உண்டு இருத்திய கழுத்தில் அணிந்திருக்கும் மகாவராகத்தின் கொம்பின் வனப்பைக் கண்டால் பின் , காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ !

குறிப்புரை :

ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட் கொண்டவன் :- பரசமயஞ் சென்றனன் என்னும் நீங்காத குறையை நீக்கி உலகோர் அறியுமாறு அடியேனைச் சூலைநோய் கொடுத்து ஆளாகக்கொண்ட குருநாதன் . எனக்குத் தேனை ஒத்து இனியவன் . எம் கோன் . வானத்தவர் உய்ந்துபோக , வலிய நஞ்சினை உண்டவன் . உண்ட நஞ்சு அடங்கிய இடம் கண்டம் . அவன் உட்கொண்டானல்லன் . ` பரவைக்கடல் நஞ்சம் உண்டதும் இல்லை ` ( தி .4 ப .82 பா .9.) வெளியேகான்றதும் இல்லை . திருக்கழுத்தளவில் நிறுத்தவல்ல திறத்தைக் காட்டினான் . ஆதலின் உண்ட கண்டம் என்றார் . அத்தகு மேன்மை உற்ற அக்கண்டத்திற்குப் பரிசில் ஏனத்தெயிறு . பன்றிக் கோடு . ` ஏனமுளைக் கொம்பு ` அது கழுத்திலணிந்துள்ளதொன்று . தளைகெடாதவாறு என்னே என்புழி விட்டிசைத்துக் கொள்க .

பண் :

பாடல் எண் : 7

தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ்செந் தீயின்மூழ்க
எரித்த விறைவ னிமையவர் கோமா னிணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

ஆராய்ந்து எடுத்த அம்பாலே வானத்தில் உலவிய மதில்கள் மூன்றும் நெருப்பில் மூழ்குமாறு தீக்கு இரையாக்கிய தலைவனாய் , தேவர்கள் மன்னனாய் உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம்முள் கொண்டு தாங்கும் மனத்தை உடைய அடியவர்கள் வாழ்கின்ற தில்லை நகரிலே சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுடைய சிரித்த முகத்தைக் கண்ட கண்களால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ !

குறிப்புரை :

தெரித்தகணை - ஆராய்ந்தெடுத்த அம்பு . ` திரிபுரம் மூன்றும் ` என்றதால் , திரிந்தபுரம் என்றிறந்தகாலப் பொருட்டாய வினைத்தொகையாகும் . செந்தீயில் மூழ்கியதால் முக்காலத்தது அன்று . மூழ்க எரித்த இறைவன் . ( தி .3 ப .64 பா .7, ப .65 பா .6.) பார்க்கின் முப்புரமெரித்தது மும்மலநீக்கமெனல் விளங்கும் . இமையவர் எல்லார்க்கும் கோமகன் . ` மகன் ` என்றது ` மான் ` என மருவிற்று . இதனையும் ` மகள் ` என்றதன் மரூஉவாகிய ` மாள் ` என்றதையும் நூலோர் இறுதிநிலையாக் கொண்டனர் . சேரன் மகன் - சேரமான் . மலையன் மகன் - மலைய மான் . மருமகன் - மருமான் . ` ஆன் என் இறுதி இயற்கையாகும் ` ( தொல் . சொல் . விளி . 15) என்பதற்கு உதாரணமாகச் சேரமான் மலையமான் , என்பன காட்டுதல் , சொல் ஆராய்ச்சியாளர்க்கு ஒவ்வாது . இணையடிகள் - ஒத்த தாள்களை . தரித்த மனத்தவர் - உள்ளத்திற் பொறுத்த அந்தணர் , அடியவர் முதலோர் . வாழ்கின்ற - சிவாநந்த வாழ்வு நடத்துகின்ற . தில்லை :- ஊர்ப் பெயர் . சிற்றம்பலம் , பேரம்பலம் , திருமூலட்டானம் முதலிய பல ( திருக்கோயிற் ) பிரிவுகளுள் ஒன்றான பொன்மன்றைக் குறிப்பது சிற்றம்பலம் . திருக்கோயிலின் எல்லாப் பிரிவுகளையும் ஒரு சேரக் குறித்து வழங்குந் திருப்பெயர் ` சிதம்பரம் ` என்பது . ` பெரும்பற்றப்புலியூர் ` என்பதும் தமிழ்ப்பழம் பெயர் . சிரித்த முகம் - புன்னகை முகிழ்த்த நன்னர் வாண்முகம் . அது கண்ட கண்ணாற் காணத் தக்கது வேறெது ?

பண் :

பாடல் எண் : 8

சுற்று மமரர் சுரபதி நின்றிருப் பாதமல்லாற்
பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங் கநங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவன்
நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

சுற்றிச் சூழும் தேவர்களும் , இந்திரனும் ` உன் திருவடிகளைத் தவிர எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை ` என்று கூறி ஆலகால விடத்தை அடக்குமாறு சிவபெருமானை வேண்டிய போது அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிக் கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாகி தில்லை நகரில் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமான் , மன்மதனை வெகுண்டு சாம்பலாகுமாறு விழித்த நெற்றிக்கண்ணைக் கண்ட கண்ணால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாது உளதோ !

குறிப்புரை :

பரவை - பாற்கடல் . சுற்றும் அமரர் - சூழ்ந்து தொழும் தேவர் . சுரபதி - சுரர்க்குப்பதி (- இந்திரன் ). அமரரும் சுரபதியும் அழைப்ப நஞ்சை உண்டான் . அமரர் சுரபதி என்னுந் தொடர் உம்மைத் தொகையாகா . ` தொகை ` ` ஒட்டு ` ` பெயரினாகிய தொகை ` ` இருபெயரொட்டு ` என்பவற்றை உணர்ந்தோர் ஒட்டாதவற்றைத் தொகை என்னார் . ` எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய ` ( தொல் . சொல் . எச்சவியல் . 24). ` உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர்சொல் நடைத்து என மொழிமனார் புலவர் ` ( ? 25). அதனால் , ` அமரர் சுரபதி ` என்னுந் தொடர் பலசொல் நடைத்தே அன்றி ஒரு சொல் நடைத்தன்று . தேவரும் இந்திரனும் தில்லையம்பலவனை நோக்கி , அழைத்துக் குறையிரந்தது :- ` நின் திருப்பாதம் அல்லால் பற்று ஒன்று இல்லோம் ` என்றுரைத்ததாம் . பரவை :- காரணப் பெயர் . அங்கன் - உருவுளி . அநங்கன் - உருவிலி . ந + அங்கன் = அநங்கன் . அங்கு - அக்கயிலையில் யோகியாயிருந்த இடத்தில் ; காலத்தில் . அநங்கனைச் செற்று - ( உருவிலியாகக் ) கருவேளை அழித்து . தீ விழித்துச் செற்றான் என்று இறுதி பிரித்துக் கூட்டியுரைக்க . தீ விழித்தது நெற்றிக் கண் . அது காமங்கடிந்த செயற்கருஞ் செயலைப் புரிந்த பெருமைக்குரியது . அதனைக்கண்ட கண் கொண்டு , காமங்கொடுக்கும் பிறவற்றைக் கண்டு பிறவிப் பெருங்கடலில் அழுந்தாவாறு , பேரின்பக்கடலில் அழுந்தி நிற்க , அதனையே கண்டுகொண்டு இருக்க .

பண் :

பாடல் எண் : 9

சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமு மாணிக்கம் தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

பொழிப்புரை :

உள்ளத்திலே முளைத்துச் செழித்து மலர்ந்த செழுந்தாமரை மலர்களை ஒத்த திருவடிகளை நிலையாக மனத்தில் இறுத்திய சான்றோர்கள் வாழும் தில்லையம்பதியில் உள்ள சிற்றம்பலத்தானுடைய முத்தும் வயிரமும் மாணிக்கமும் தூய மலர்களும் அணிந்த திருச்சென்னியின் மலரழகைக் கண்ட கண்களால் இனி மேம்பட்டதாகக் காண்பதற்குரிய பொருள் பிறிது யாதுள்ளதோ !

குறிப்புரை :

சித்தத்து எழுந்த செழுங்கமலத்து அன்ன சேவடிகள் :- புறத்துள்ள கமலம் சேற்றிற் பிறந்தொளிருந்தாமரை . அகத்தாமரை , உள்ளப்புண்டரிகம் , இதயகமலம் , ஆறாதாரகமலம் எல்லாம் பங்கயம் அல்ல . ` கருதுவாரிதயத்துக் கமலத்து ஊறுந் தேனவன்காண் ` ` என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றியெழுஞ்சுடர் ` ( தி .9 திரு விசைப்பா 49) என்று சிவபூசையுள் அகப்பூசை புரிவார் , உந்திக்கமலம் இதயகமலம் புருவநடுக்கமலம் மூன்றினும் தோன்றியெழுஞ் சுடர் என்க . சிவஞானபோதம் சூ . 9. மாபாடியம் பார்க்க . சித்தத்து எழுந்த செழுங்கமலத்து வைத்த மனத்தவர் . கமலத்தில் அக் கமலத்தை அன்ன சேவடிகள் . கமலத்துச் சேவடிகளை வைத்த மனத்தவர் . தில்லை வாழந்தணர் முதலோர் . ` நீலத்தார் கரியமிடற்றார் ` எனத் தொடங்குந் திருப்பாடலை நினைக . ( தி .3 ப .1 பா .3). முத்து , வயிரம் , மாணிக்கம் விளங்கிய தூய ( முடியணிந்த ) சென்னி . மத்தகம் (- சென்னி ) என்பது மருவி மத்தம் என்றாயிற்று . ` பாலொளியாமத்தனே மதுராபுரி யுமையாளத்தனே ஆலவாயா ` ( சிவபோகசாரம் ). மத்தம் - ஊமத்தை . ` மத்தமலர் ` சென்னியிலுள்ள ஊமத்தை மலர் எனலுமாம் . ஆயினும் , பாதாதிகேசமாதலின் சென்னியை இதிற்கொள்ளல் இன்றியமை யாதது . விளங்கிய என்னும் பெயரெச்சம் ( சென்னியென்னும் பொருட்டாயின் அம் ) மத்தத்தைக் கொள்ளும் .

பண் :

பாடல் எண் : 10

தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையை
வரைக்கைக ளாலெடுத் தார்ப்ப மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்து மணிதில்லை யம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே.

பொழிப்புரை :

இராவணன் செருக்கு மிகுந்துத் தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு பார்வதி கொழுநனாகிய தில்லைச் சிற்றம்பலவன் சிரித்து இராவணனுடைய கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ !

குறிப்புரை :

தருக்கு - உடற்றிமிர் . ( தி .1 ப .5 பா .7) மிக்கது தருக்கு . மிகுத்தவன் அரக்கன் . தோள்வலி ` புஜபலம் `. உன்னி - நோக்கி . தடவரை - பெருங்கயிலை . வரைக்கைகள் - மலைபோலுங் கைகள் வரையை எடுத்து ஆர்ப்ப - ஆரவாரஞ் செய்ய . கோ - கோமகன் ; கோமான் ; கோன் . அரக்கன் - இராவணன் . பத்து மணி முடியையும் நெருக்கி மிதித்த விரலைக் கண்ட கண் .
சிற்பி