கோயில்


பண் :

பாடல் எண் : 1

கருநட்ட கண்டனை யண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச்செந் தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.

பொழிப்புரை :

கருமை நிலைபெற்ற நீலகண்டனாய் , உலகங்களுக்குத் தலைவனாய் , கற்பகம் போல அடியவர் வேண்டியன வழங்குபவனாய் , போரில் ஈடுபட்ட மும்மதில்களையும் அழிக்க வல்லவனாய் , அங்கையில் வைத்த செந்தீ ஒலிக்க அழகிய கூத்தாடுபவனாய் , தில்லை நகர்த்தலைவனாய்ச் சிற்றம்பலத்து மகாதாண்டவம் ஆடிய பெருமானைத் ` தேவர்கள் தலைவன் ` என்று வாழ்த்துவேன் .

குறிப்புரை :

கரு - கருநிறமுடைய நஞ்சினை . ` கருவார்கச்சி ` ` கருவமைந்தமாநகர் ` என்புழிக்கொள்ளும் பொருள்கொண்டு . தேவாசுரர் வாழ்விற்குரிய கருவை நட்ட கண்டன் எனலுமாம் . நட்ட - நிலைக்கப்பண்ணின . கண்டனை - திருநீலகண்டனை . அண்டத் தலைவனை - அண்டர் நாயகனை . கற்பகத்தை ;- ` புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே `. செருநட்ட மும்மதில் எய்ய வல்லான் :- ` மறப்பிலா அடிமைக் கண் மனம் வைப்பார் தமக்கெல்லாம் சிறப்பிலார் மதில் எய்த சிலை வல்லார் ` ( தி .3 ப .64 பா .7) என்றதில் , ஆளுடைய பிள்ளையார் மலநீக்கம் உறத்தக்கார் இன்னார் என்றருளியதுணர்க . திருநட்டம் - திருக்கூத்து . செந்தீயி லாடியது அது . ஆடி :- பெயர் . ` காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி ` என்புழியும் பெயராய் நின்ற ` வார்த்தை ` யைத் தழுவி ஆறனுருபேற்பதறிக . இறை - இறைவன் . அம்பலம் சிறிது . ஆட்டம் பெரிது . பெரு நட்டம் ` மகாதாண்டவம் `. வானவர்கோன் :- ` வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமான் `.( தி .4 ப .7 பா .2). வாழ்த்துவன் - பரவுவேன் , ` வாழ்த்துவதும் ... ... பரவுவனே ( தி .8 திருவாசகம் ). திருத்தில்லையம்பலத்தானை வாழ்த்தித் தங்கள் வாழ்வும் வைப்பும் ஆக அவனைக் கொண்டு பேரின்புறுவது பிரியாத அந்தணர் நெறி . ( கோயில் நான்மணி மாலை 34)

பண் :

பாடல் எண் : 2

ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே.

பொழிப்புரை :

வெகுண்டு வந்த கூற்றுவனை அடியவன் பொருட்டுக் காலால் ஒறுத்தவனாய்த் தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்தில் என்று வந்தாய் என்னும் குறிப்புத் தோன்றும்படி கவித்த திருக்கையுடன் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைச் சென்று தொழுமின்கள் . அக்கூத்தினையே மனம் பொருந்தி நினைமின்கள் . உங்களுக்குப் பிறப்பு இறப்பு அகலாமையாகிய குறைபாடு இனி இராது .

குறிப்புரை :

ஒன்றியிருந்து நினைதல் - சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சா யிடை விடாது நினைத்தல் ; அத்துவிதமாதல் , ஊனம் - குறை . பிறப்பிறப் பகலாமையே உயிர்க்குக் குறை . அதற்குத் தடை மும்மலச் சேர்க்கை . அஃது அற்றால் , சிவஞானப் பேறுண்டாம் . அஃதுண்டாமளவுக்கு மும்மலம் அறும் . கன்றிய - சினந்த . காலனை - இயமனை . காலால் - திருவடியால் . அடியவற்கு ஆய் - அடியவனாகிய மார்க்கண்டேய முனிவனுக்கு இரங்கியருள்வானாகி . கடிந்தான் - சினந்துதைத்த காலன் , தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் - தில்லை நகரில் , சிற்றம்பலத்திலாடுந் திருக்கூத்தினை . சென்று - அத்தில்லையுள் போய் , தொழுமின்கள் - தொழு ( துய் ) மின்கள் . ` உந்தமக்கு ` ` நினைமின்கள் ` ` தொழுமின்கள் ` என்னும் பன்மை உலகோரைக் குறித்தவை . நீயிர் சென்று தொழுது ஒன்றியிருந்து நினைமின் , எய்தும் பயனைப் பெறுவதுறுதி என முன்னரே நன்றுணருமாறு . எம்பெருமான் திருக்குறிப்பு ` என்று வந்தாய் ` என்னும்படி அவனது கவித்த திருக்கை காட்டுகின்றது , ` நாயேனைத் தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்று ` ( தி .8 திருவாசகம் 41) ` கோனே உன்றன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட ... புழுக்கூடு காத்து ... ... இருப்பதானேன் ` ( ? . 59) ` அவன்றன் திருக்குறிப்பே குறிக்கொண்டுபோமாறு அமைமின் ` ( ? . 605) ` கடிசேரடியே வந்தடைந்து கடைக்கொண்டிருமின் திருக்குறிப்பை ` ( ? .606)

பண் :

பாடல் எண் : 3

கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக் காண்பதென்னே
நன்மன வர்நவி றில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே.

பொழிப்புரை :

கல்போன்ற திண்ணிய மனமுடைய உலகமக்களே ! உங்கள் மனத்திடை அவ்வப்போது தோன்றும் விருப்பங்களை வெளியிட்டு அவற்றை நிறைவேற்றித் தரல் வேண்டும் என்று வேண்டி நல்ல உள்ளம் படைத்த சான்றோர்கள் வாழும் தில்லை நகர்ச் சிற்றம்பலத்தில் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைத் தரிசிப்பதனால் , ஆன்ம லாபத்தை விடுத்து இம்மையிற் கிட்டும் அற்பசாரங்களால் யாது பயன் ? தில்லைச் சிற்றம்பலத்திலே பொன்மலைமீது வெள்ளிமலை இருப்பது போல கூத்தப்பிரான் காட்சி வழங்கித் தான்புகுந்த சுவடு புலப்படாமல் அடியேனுடைய மனத்திலே உறுதியாக நிலைபெற்றவனாக வந்து சேர்ந்து விட்டான் .

குறிப்புரை :

கல்மனவீர் - கல்லைப் போலுந்திண்ணிய மனத்தீர் ; உருகாத நெஞ்சுடையீர் , கழியும் கருத்தே - நிலையாத கருத்தையே . சொல்லிக் காண்பது - சொல்லிக் கண்டு கொள்வது . கருத்தைச் சொல்லல் - விருப்பங்களை அறிவித்துக் கொடுத்தருள் என வேண்டுதல் . நட்டம் காண்பதென்னே ? காண்டல் :- கேட்டவரங்கள் கைகூடப் பெறுதலுமாம் என்னே - என்ன பயன் ? அவை பற்று வளர்த்து மீண்டும் பிறப்பிறப்புட்படுத்துவன ஆதலின் பயன் ( ஆன்மலாபம் ) இன்றென்றவாறு . ` நன்மனவர் நவில் ` என்றே பழம் பதிப்புக்களிலும் ஏடுகளிலும் உளது . நன்மனவர் - கன்மனமின்றி உருகும் நெஞ்சுடைய தில்லை வாழந்தணர் முதலோர் . நவில் - துதிக்கும் . பொன்மலையில் வெள்ளிக் குன்றதுபோலப் பொலிந்து இலங்கி ஒன்றிப் புக்கனன் . புகுந்த சுவடு இல்லை . புகுந்த என்பதன் மரூஉவே போந்து என்பது . ` சென்று அடைந்தேனுடைய புந்தியைப் புக்க அறிவு ` ( தி .4 ப .88 பா .9.) ` குழைவார் சிந்தை புக்கிருந்து போகாத புனிதன் ` ( தி .6 ப .79 பா .2) வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் ( தி .7 ப .21 பா .7) போந்த சுவடு - வெளியிற் போய சுவடு என்றலுமுண்டு . ஈண்டு அது பொருந்தாது . பொன்மலை - பொன்மன்று . வெள்ளிக் குன்று - வெண் ணீறு சண்ணித்த மேனியுடைய நடராசப்பிரான் . வெள்ளி வெற்பு - விடை . பவள வெற்பு - வள்ளலார் . மரகதக் கொடி - மாமலையாள் என்றதை நினைக . ( தி .12 பெரிய புராணம் . அப்பர் . 379.)

பண் :

பாடல் எண் : 4

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.

பொழிப்புரை :

வளைந்த புருவங்களையும் , கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும் , கங்கையால் ஈரமான சடைமுடியையும் , பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும் , பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும் .

குறிப்புரை :

குனித்த - வளைத்த . கொவ்வைச் செவ்வாய் - கோவைப் பழம் போலுஞ் செய்ய திருவாய் . குமிழ் சிரிப்பு - புன்னகை . ` வளர்குமிழ் மலரும் ` ( கோயிற் புராணம் நடராசச் . 14) என்றதால் , மலரது முன்னிலையான அரும்பைக் குமிழ் எனல் புலப்படும் . படவே , அரும்பும் நகையைக் குமிழ் சிரிப்பு என்பர் . ` குமிண் சிரிப்பு ` என்றதிற் குமிண் என்றது முதனிலையாதல் வேண்டும் . அவ்வாறொன்று தமிழில் வேறெங்கும் காணப்படவில்லை . ` முறுவலிப்பு ` ( தி .4 ப .81 பா .7). பனித்த சடை - கங்கை நீராற் குளிர்ந்த சடை . ` பவளம் போல் மேனி : ( தி .4 ப .112 பா .1) ` பேரொளிப்பவள வெற்பென ... ... வீற்றிருந்த வள்ளலார் ( தி .12 பெரிய . அப்பர் . 379) பால்வெள் நீறு - பால் போலுந்திரு வெண்ணீறு :- ` செய்ய திருமேனி வெண்ணீறாடி ` ( தி .6 ப .9 பா .7) இனித்தம் - இனிதாந்தன்மை . இனிது அம் . பேரின்பம் தரும் தூக்கிய திருவடி , ` வ + தனம் ` . வகாரமாகிய சென்றடையாத திரு ( துறைசையமகவந்தாதி 100). காணப்பெற்றால் :- பெற லரி தென்றது . மனித்தப்பிறவி . ` மனித்தனாகிய பூழியன் ` ( தடாதகை . திருவவ . 64) ` மனித்தருக்கரசு ` ( ? திருமணப் , 199) எனப் பரஞ்சோதி முனிவர் வாக்கிற் பயின்றுளது இச்சொல் . ` பொல்லா மனித்தர் ` என்றாருமுளர் . மன்றாடுந் திருக்காட்சி கிடைக்கப்பெறின் , வேண்டா என வெறுத் திழிக்கும் பிறவியும் வேண்டும் எனும் உயர்வுடையதாகும் . ` மருவாகி நின்னடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு காற் பிறப்பு உண்டேல் , மறவாவண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங்கூராய் செம் பொனேகம்பனே திகைத்திட்டேனே `. ` மேலும் இப்பூமிசை இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே ` ` வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின் ` ` திருநாவுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் ` ( தி .12 பெரிய புராணம் அப்பர் 312) ` மண்ணில் இருவினைக்குடலாய் வான் நிரயத் துயர்க்குடலாய் எண்ணிலுடல் ஒழிய முயல் அருந்தவத்தால் எழிற்றில்லைப் புண்ணிய மன்றினில் ஆடும்போது செய்யா நடம் காண நண்ணும் உடல் இது அன்றோ நமக்குடலாய் நயந்த உடல் ` ` மறந்தாலும் இனி இங்கு வாரோம் என்று அகல்பவர் போல் , சிறந்தார நடம் ஆடும் திருவாளன் திருவடிகண்டு இறந்தார்கள் பிறவாத இதில் என்ன பயன் ? வந்து பிறந்தாலும் இறவாத பேரின்பம் பெறலாம் ஆல் `. ` ஓதல் உறு மருந்தில்லை யொழியவொரு மருந்தில்லை `. ( கோயிற் புராணம் ) ` எவ்வுடல் எடுத்தேன் மேல்நாள் எண்ணிலாப் பிறவி தோறும் அவ்வுடல் எல்லாம் பாவம் அறம் பொருட்டாகும் அன்றோ தெவ்வுடல் பொடித்தாய் உன்றன் சேவடிக்கு அடிமை பூண்ட இவ்வுடல் ஒன்றே அன்றோ எனக்கு உடலானது ஐயா !` ( திருவிளையாடல் விடையிலச்சினை . 16). ` ஆலவாயுடையார் புகழ் பாடப்பெறுவேமேல் வேண்டுவதிம் மனித யாக்கை ( ? . திருவால வாயானபடலம் . 1) ` விரைவிடை யிவரும் நினைப்பிறவாமை வேண்டுநர் வேண்டுக மதுரம் பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும் பிறவியே வேண்டுவன் தமியேன் ` ( சோணசைலமாலை ). ` இந்த மாநிலத்தே ` ( தி .4 ப .106 பா . 2 - 3.).

பண் :

பாடல் எண் : 5

வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசு பதமருள் செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரந் தீவளைத் தான்றில்லை யம்பலத்துக்
கூத்தனுக் காட்பட் டிருப்பதன் றோநந்தங் கூழைமையே.

பொழிப்புரை :

சிவபெருமானுடைய அடியார்களே ! நமக்கு நல்வினை காரணமாக இந்த ஒப்பற்ற மனிதப் பிறவி நமக்குக் கிட்டியுள்ளது . இந்த மனிதப் பிறவியை மதித்துச் செயற்படுவீராக . அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் அருளிச் செய்தவனாய் , முப்புரங்களை அம்பு எய்து தீக்கு இரையாக்கியவனாய் , தில்லை அம்பலத்துள் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுக்கு அடியவராக இருப்பதன்றோ நம் அடிமைப் பண்பாகும் ?

குறிப்புரை :

நம் தமக்கு ஈது ஓர் பிறவி வாய்த்தது . இப் பிறவியை மதித்திடுமின் . அவமதியாதீர் . இப்பிறவியின் பயன் ? தில்லையம் பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ ? அதுவே நம் கூழைமை . நம் கூழைமை கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பது அன்றோ ? ஆம் ஆம் . ஆயின் , வாய்த்த இப்பிறவியை மிகப் பெரிதாக மதித்து அவனுக்கு ஆட்பட்டிருப்பதே இப்பிறவியின் பயனாகிய கூழைமை . பார்த்தற்கு - அருச்சுனனுக்கு , பிரதைக்குப் புதல்வன் என்ற காரணத்தால் வந்த பெயர் பார்த்தன் என்பது . பாசுபதம் அருள் செய்தவன் . ` அருச்சு னற்குப் பாசுபதங் கொடுத்தான் ` ( தி .4 ப .7 பா .10). பத்தருள்ளீர் - தொண்டருள்ளீர் . அவருள் ஒருவராயடங்கிய பெருமையீர் . ` சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் ` ( தி .9 திருப்பல்லாண்டு . 4) அன்று - ` மூவார் புரங்கள் எரித்த அன்று . கோத்து மேருவில்லிலே எரி காற்றீர்க்கரிகோலை ` வாசுகிநாணிலே கோத்து . தீவளைத்தான் - தீவளைந்து எரிக்கச் செய்தான் . செய்தவனும் வளைத்தவனுமாகிய கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பது அன்றோ நம் கூழைமை என்க . கூழைமை - ( தி .4 ப .79 பா .3.) குறிப்பினைக் காண்க . ` அவ்வவ் விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க் கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே ` ( பெரியாழ்வார் : - 2:- 5)

பண் :

பாடல் எண் : 6

பூத்தன பொற்சடை பொன்போன் மிளிரப் புரிகணங்கள்
ஆர்த்தன கொட்டி யரித்தன பல்குறட் பூதகணந்
தேத்தென வென்றிசை வண்டுகள் பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனிற் கூத்துவல் லாருள ரோவென்றன் கோல்வளைக்கே.

பொழிப்புரை :

பூத்துக் குலுங்குவது போன்ற பொலிவை உடைய செஞ்சடை கொன்றை மலரை அணிந்து பொன்போல ஒளிவீச , அடியார் கூட்டங்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்க , பூதக் கூட்டங்கள் வாத்தியங்களை ஒலிக்க , ` தெத்தே ` என்று வண்டுகள் ஒலிக்கும் தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்திற் கூத்தினை நிகழ்த்தும் சிவ பெருமானைப் போல , திரண்ட வளையல்களை அணிந்த என் மகளுடைய மனத்தைத் தம் நாட்டியத்தால் கவரவல்லவர் பிறர் உளரோ ? ( என்று முக்கணான் முயக்கம் வேட்ட பெற்றிகண்டு தாய் இரங்கிக் கூறியவாறு .)

குறிப்புரை :

பொற்சடை :- பொல் + சடை ; பொலிவுடைய சடை . பின்னர்ப் பொன்போல் மிளிர என்றலின் , இதனை உவமத் தொகையாகக் கொள்ளல் பொருந்தாது . பொல் என்பது ( பொல் + அம் =) பொலம் என அம்முப் பெறலும் , பொன் என ஈறு திரிதலும் உண்டு . ` பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ் செய்யுள் மருங்கிற்றொடரியலான ` ( தொல் . எழுத்து 356) என்றது சொல்லாராய்ச்சிக்கு ஒத்ததன்று . ஈறு கெடலாம் . லகாரம் மகாரம் தோன்றற்கு இயைபு யாது ? நிலம் என்பதில் அம்முப் பேறு நோக்கின் , இதன் பொருந்தாமை புலப்படும் . பொலிதல் - விளங்குதல் . விளக்கம் பல வகைத்து . பொன்னைப் போலும் விளக்கமே ஈண்டுக் கொள்ளற்பாலது . மிளிர்தல் - ஒளி செய்தல் ; பிறழ்தல் ; கீழ்மேலாதல் . மூன்றும் சடைக்கிருக்கின்றன . பூத்தல் - பொலிவுற்றன . பொற்சடை பொன்போற்பூத்தன , மிளிரப் பூத்தன . புரிதல் - விரும்புதல் . புரிகணம் - விரும்பும் கூட்டம் ; அன்பர் இனம் . அடியார் கூட்டம் . ஆர்த்தன :- குடவமுழவம் வீணை தாளம் குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்து ஆடுமே ` ( தி .6 ப .4 பா .5). ` மாக்கூத்து ` - மகாதாண்டவம் . அரித்தல் - சிறிது சிறிதாக எடுத்துச் சேறல் . ` அரித்தொழுகு வெள்ளருவி ` ( அப்பர் ). அஃது ஈண்டு எடுத்துச் செல்லற்பொருட்டு . பொன் தீமணி விளக்குப் பூதம்பற்றப் புலியூர்ச்சிற்றம்பலமே புக்கார்தாமே ` ( தி .6 ப .2 பா .9). கொட்டியரித்தன எனலுமாம் . பல்பூதம் குறட்பூதம் . பூதகணம் . குறள் ; சிந்து ; நெடில் ; கழிநெடில் என்பன உடலைக் குறித்த வேறுபாடு . குறளன் , சிந்தன் , நெடியன் , நீண்டோன் ( கழிநெடியன் ) என்னும் பெயர்களை நினைக . குறளர்க்கு ஆமை உவமம் . ( பெருங்கதை . க . 46:- 261 - 3 ) பார்க்க .

பண் :

பாடல் எண் : 7

முடிகொண்ட மத்தமு முக்கண்ணி னோக்கு முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே.

பொழிப்புரை :

தில்லை நகரில் சிற்றம்பலத்திற் கூத்து நிகழ்த்தும் எம் பெருமானுடைய ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திரு வடிகளோடு தலையில் அணிந்த ஊமத்தைப் பூவும் , மூன்று கண்களின் பார்வையும் , புன்சிரிப்பும் , உடுக்கையை ஒலிக்கும் திருக்கையும் , உடல் முழுதும் பூசிய திருநீறும் , பார்வதியை இடப்பாகமாகக் கொண்ட தனக்குரிய வலப்பாகமும் , இடுப்பு முழுதும் பரவி உடுக்கப்பட்ட புலித்தோலும் உலகப் பொருள்களிலே ஈடுபட்டுத் தீவினையை ஈட்டிய அடியேனுடைய பாவியான உள்ளத்தில் இப்பொழுது நிலையாக இடம் பெற்றுவிட்டன .

குறிப்புரை :

முடிகொண்ட மத்தம் - திருமுடியிற் சூடிக்கொண்ட ஊமத்தம்பூ . முக்கண்ணின் நோக்கு - செங்கதிர் , வெண்கதிர் , செந்தீயாகிய மூன்று கண்களின் பார்வை . இறைவன் விசுவரூபி யாதலின் , அவ் விசுவத்தில் ஒளிரும் அம் மூன்றும் அவனுடைய கண்களாயின . ` அருக்கனாவான் அரனுரு அல்லனோ ?` அவன் உருவமும் ஆண்டவன் அவ்வுருவில் உள்ள உயிருமாகக் கொள்க , ` அங்கதிரோனவனை அண்ணலாக் கருதவேண்டா வெங்கதிரோன் வழியே போவதற்கமைந்து கொண்மின் ` ( தி .4 ப .41 பா .8). முறுவலிப்பு :- முறுவல் (- பல் , சிரிப்பு ) என்பதனடியாக முறுவலித்தல் என்று தோன்றிய தொழிற்பெயர் . ` நகை என்பது சிரிப்பு ; அது முறுவலித்து நகுதலும் அளவே சிரித்தலும் பெருகச் சிரித்தலும் என மூன்றென்ப ` ( தொல் பொருள் . மெய்ப்பாடு 3 பேராசிரியம் ) ` நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க எண்ணாராத்துயர் விளைக்கும் இவையென்ன உலகியற்கை ` ( திருவாய்மொழி . 4. 2. 9 தி . பா . 1 ). முறுகல் என்பது கடுமையுறல் என்னும் பொருட்டு . அது முறுவல் என மருவிற்று . திருகல் திருவல் , கருகல் கருவல் , மறுகல் மறுவல் , சிறுகல் சிறுவல் முதலியன காண்க . பற்கள் கடியனவாதலை அவை தீயில் வெந்தழியாமையாற் காணலாம் . முறுவலிப்பு - சிரிப்பு . புன்முறுவல் . ` செவ்வாயிற்குமிழ் சிரிப்பு ` ( தி .4 ப .81 பா .4). துடி - உடுக்கை . கொண்ட கை - ஏந்திய திருக்கை . ` சேர்க்குந்துடி சிகரம் ` ` தோற்றம் துடியதனில் ` ( உண்மை விளக்கம் ) ` தமருகக் கரம் ` ( சிதம்பரச் செய்யுட்கோவை .1) ` துதைந்த வெண்ணீறு `:- ` தூவெண்ணீறு துதைந்த செம்மேனி ( தி .5 ப .65 பா .4) தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரும் ... ... உடையார் புகுந்தனர் வீதியுள்ளே ! ( அப்பர் புராணம் . 140) சுரி குழலாள் - சுரிந்த கூந்தலையுடைய உமாதேவியார் . சுரிகுழல் - வினைத்தொகை , சுரியல் :- ஆண் பெண்மயிர்ப் பொது . இது சுரிதல் என்னுந் தொழிற்பொருட்டு . படி - உருவம் . குழலாளதுருவம் . குழலாள்படி கொண்ட பாகம் . மங்கையுருவைக் கொண்ட இடப்பங்கு , பாய்புலித்தோல் :- ` பாய்புலி ` இறந்தகாலவினைத்தொகை . தோலுரிப்பதன் முன்னையது பாய்தல் . புலியினது தோல் . பாவி என் நெஞ்சில் எனமாற்றிப் பாவியாகிய என் நெஞ்சினுள் என்றுரைக்க . பாவி என நெஞ்சினைக் குணியாகக் கூறலும் பொருந்தும் . ` அழுக்காறென வொருபாவி ( குறள் . 168) ` இன்மை யெனவொருபாவி ` ( குறள் . 1042) என்புழிப் பரிமேலழகர் , பண்பிற்குப் பண்பில்லையேனும் தன்னை யாக்கினானை யிருமையுங் கெடுத்தற் கொடுமைபற்றி ... ... பாவியென்றார் ; கொடியானைப் பாவியென்னும் வழக்குண்மையின் ` என்றுரைத்ததுணர்க . குணத்திற்குக் குணமில்லை . குணிக்கே குணம் உண்டு . அழுக்காறும் இன்மையும் குணம் . அவற்றைப் பாவி எனக் குணியாக்கின் . அவற்றின் வேறாய்ப் பாவம் என்னுங் குணம் அவற்றிற்கு உண்டு என்றாகும் . ஆதலின் , பண்பிற்குப் பண்பில்லையேனும் ... ... கொடுமைபற்றிப் பாவி யென்றார் ` என்றுரைத்தார் . ஆண்டுப் பண்பியில்லை யேனும் என்றல்பிழை . குடிகொண்டவா - குடிகொண்டவாறு என்னே ! பெருவியப்பு . நெஞ்சில் அம்பலக் கூத்தன் குரைகழல் குடிகொண்டது .

பண் :

பாடல் எண் : 8

படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித் தூநீறணிந்துன்
அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.

பொழிப்புரை :

அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே ! என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன் . இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன் . எழுவகைப்பட்ட பிறப்புக்களில் எந்தப் பிறவி எடுத்தாலும் எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன் . அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பெயரேன் . எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் உள்ளேன் .

குறிப்புரை :

அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே உன் நாமத்து எழுத்து அஞ்சும் படைக்கலம் ஆக என் நாவில் கொண்டேன் ; இடைக்கலம் அல்லேன் ; உனக்கு எழு பிறப்பும் ஆள் செய்கின்றேன் ; துடைக்கினும் போகேன் ; தூநீறு அணிந்து தொழுது வணங்கி , உன் அடைக்கலம் கண்டாய் . என் நாவில் உன் நாமம் கொண்டேன் . உன் நாமத்து - உன் பெயர் பல்லாயிரங்களுள் , எழுத்தஞ்சு - திருவைந் தெழுத்துப் பெயர் . எழுத்தஞ்சும் கொண்டேன் என இனைத்தென அறிந்த கிளவிக்கு வினைப்படு தொகுதிக் கண் வேண்டும் உம்மை விரித்துரைத்துக் கொள்க . எழுத்தஞ்சும் படைக்கலம் ஆகக் கொண்டேன் . அப்படைக்கலம் ஆணவப் படையை அகற்றும் மாயைப் படையை வாராமே மாற்றும் . கருமப்படையைக் கழற்றும் . இம் மும் மலப்பகையும் போக்கும் படைக்கலம் திருவைந்தெழுத்து :- ` முதிரும் ஆணவப் பகையும் அம்முழுப்பகைதுமிப்பக் கதியும் மாயையும் கருமமும் , ( தணிகைப்புராணம் . 808) ` பகைசெய்யு முலகு ` ( ? . 708), இடைக்கலம் :- ` கலம் ` என்னும் சொல் அடைவேறு பாட்டாற் பொருள் வேறுபட நிற்கும் . அடைக்கலம் , அணி கலம் , அருங்கலம் , இடுங்கலம் , இலைக்கலம் , ஒற்றிக்கலம் , சேமக்கலம் , படிமக்கலம் , பரிகலம் , மரக்கலம் முதலியவற்றை நோக்குக . ` எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் ` என்றதால் , ` இடைக்கலம் அல்லேன் ` என்பது ஆட்செய்யாதொருகாலத்தும் இராமையைக் குறித்து நிற்றல் விளங்கும் . விளங்கவே , நாவிற்கொண்டது முதலாக எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் ; இடையில் ஒருபோதும் ஆட்செய்யா தொழிந்தேனல்லேன் ; திருவைந்தெழுத்தை நாவிற்கொள்ளா தொழிந்தேனுமல்லேன் . ` இடைநடுவே குறிக்கும் இச்செல்வம் ` என்றதுபோல , இடையில் வந்த பொருள் அல்லேன் என்ற பொருள தாகும் . உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் என்னளவே ! எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமன் உன்னளவே என்று பின்னரும் ( தி .4 ப .108 பா .4.) இடைக்கலத்தே எனக் காலம் இடப்பொருட்டாதல் , அறிக . ஆட்பட்டு இடைக்கலத்தே கிடத்தல் என்றதும் உணர்க . கலம் - மட்கலம் . அது மாயாகாரியமான மண்ணிலிருந்து தோன்றி அழியும் . மண்தோன்றியழிவதற்கு இடையில் மட்கலம் தோன்றியழியும் . அதுபோல் அல்லேன் . எழுபிறப்பும் ஆட் செய்கின்றேன் எனலும் பொருந்தும் . ` புல்லார் புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள் வில்லேற்றி இடைக்கலத் தெய்து விடல் ` ( பழமொழி நானூறு , 27) என்புழி ` மட்பாண்டம் ` என்று பொருள் கொண்டனர் ( லெக்ஸிகன் ). ` தோன்றா இடைக்கல மருதல் செய்யும் முலை ` ( கம்பர் . யுத்த . அணிவகுப்புப் . 16) என்புழிக் குற்றுகரப் புணர்ச்சியாகக் கொள்ளப் படும் . ஈண்டு அவ்வாறு பிரித்துக் கொள்ளல் பொருந்தாது . துடைக்கினும் - துடைத்தாலும் போதல் செய்யேன் . சிற்சிலவற்றைத் துடைத்துப் போக்குதல் பழக்கம் . அதுபோல , என்னை நீ என் அடியான் எனக்கொள்ளத்தக்காய் அல்லை என்று விலக்கினும் விலகேன் என்றவாறு . நீற்றைத் தொழுது வணங்கி அணிந்து எனலும் தூநீறணிந்து ( நின்னைத் ) தொழுது வணங்கி எனலும் பொருந்தும் . அணிந்து என்னும் வினையெச்சம் அடைக்கலம் என்பதன்கண் உள்ள முதனிலையொடு முடிந்தது . அணிதில்லை :- தில்லையின் அழகு , தில்லைச் சிற்றம்பலம் , தில்லைச் சிற்றம்பலத்தான் என்னும் இரண்டற்கும் ` அணி ` ஒட்டு உரித்தாகும் ,

பண் :

பாடல் எண் : 9

பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து புரிசடைகண்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கர்வேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்னத்த னாடல்கண் டின்புற்ற தாலிவ் விருநிலமே.

பொழிப்புரை :

பொன்னை ஒத்த செந்நிறமான உடம்பில் வெண்மையான திருநீற்றை அணிந்து , முறுக்குண்ட செஞ்சடைகள் மின்னலைப் போல ஒளிவீச , பிச்சை எடுத்துத் திரியும் , உளியால் செதுக்கப்படாது இயல்பான சிவ வேட அடையாளத்தை உடையவனாய் , வளம்மிக்க தில்லை நகரின் சிற்றம்பலத்தான் ஆகிய என் தலைவனாம் பெருமானுடைய திருக்கூத்தினைக் கண்டு இவ்வுலகம் இன்புறுகின்றது .

குறிப்புரை :

பொன் ஒத்த மேனிமேல் வெள்நீறு அணிந்து :- பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறு `( தி .4 ப .81 பா .4), ` வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே ` ( தி .4 ப .112 பா .1) ` சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி யெம்மான் `( தி .4 ப .112 பா .9) என்றதால் , ` சிவன் ` என்பதைச் செம் மேனியன் என்னும் பொருட்டாய தமிழ்ச்சொல்லாக்கியருளியதுணரப் படும் . தாங்கரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய் ` ( தி .6 ப .39 பா .8) என்றதும் உணர்க . புரிசடைகள் மின் ஒத்து இலங்க :- முறுக்குண்ட சடைகளின் தோற்றம் மின்னலைப் போன்று விளங்க . பலிதேர்ந்து உழலும் விடங்கர் - பிச்சையெடுத்துத் திரியும் சிவபிரான் . விடங்கர் - உளியால் செய்யப்படாதவர் ; இயல்பாய வடிவினர் . சத்த விடங்கத் தலத்தும் அவ்விடங்கரை வழிபட்டுய்யலாம் . விடங்கரது நட்டமாகிய ஆடல்கண்டு இன்புற்றது இவ்விரு நிலம் . வேடச் சின்னத்தினான் . சிவவேடமாகிய சின்னம் (- அடையாளம் ) ` சிவசின்னம் ` என்னும் வழக்குண்மையறிக . சின்னத்தினால் மலிந்ததில்லை . தில்லையுள் சிற்றம்பலம் . சிற்றம்பலத்து நட்டம் என் அத்தன் ஆடல் . அந் நட்டமாகிய ஆடல் . விடங்கரது நட்டம் . என் அத்தனது ஆடல் . விடங்கராகிய என் அத்தனது நட்டமாகிய ஆடல் . ஆடலைக்கண்டு இருநிலம் இன்புற்றது . நட்டம் - வட சொற்சிதைவன்று . தமிழ்ச்சொல் ` ஓரில் நெய்தல் கறங்க ஓரில் , ஈர்ந்தண் முழவின் பாணிததும்பப் , புணர்ந்தோர் பூவணியணியப் பிரிந்தோர் , பைதல் உண்கண் பனிவார் புறைப்பப் , படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன் , இன்னாதம்ம இவ்வுலகம் . இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே ` ( புறநானூறு 194) என்றதும் அதனுரையில் ,` கொடிது இவ்வுலகினதியற்கை ; ஆதலான் , இவ்வுலகின் தன்மையறிந்தோர் வீட்டின்பத்தைத் தரும் நல்ல செய்கைகளை அறிந்து செய்துகொள்க `. என்றெழுதியுள்ளதும் ஈண்டு நினைத்தற்குரியன . ` உய்ந்து போமாறே வலிக்குமாம் மாண்டார் மனம் `. நாலடியார் . 23.

பண் :

பாடல் எண் : 10

சாட வெடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை
வீட வெடுத்தது காலனை நாரணன் நான்முகனுந்
தேட வெடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
ஆட வெடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே.

பொழிப்புரை :

தக்கன் நிகழ்த்திய வேள்வியில் தனக்கு உரிய அவியைப் பெறுவதற்காக வந்து கலந்து கொண்ட சந்திரனைத் தேய்ப்பதற்காகத் தூக்கப்பட்டதும் , கூற்றுவனை அழிப்பதற்கு உயர்த்தப்பட்டதும் , திருமாலும் பிரமனும் காணமுடியாது தேடுமாறு பாதலத்துக்குக் கீழும் வளர்ந்ததும் தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்காக உயர்த்தப்பட்டதும் ஆகிய சிவபெருமானுடைய இடது திருவடியன்றோ நம்மை அடிமையாகக் கொண்டதாகும் .

குறிப்புரை :

தக்கனது வேள்வியிலே சந்திரனைச் சாடித்தேய்க்க எடுத்ததும், காலனை அழிக்க எடுத்ததும், நாரணனும் நான்முகனும் தேட எடுத்ததும், தில்லைச் சிற்றம்பலத்துள் நட்டம் ஆட எடுத்திட்டதும் ஆகிய பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டது. சாடல் - கொல்லல்; சாட - கொல்ல. வேள்வி - யாகம். தக்கயாக சங்காரம் கந்தபுராணத்திலே தட்ச காண்டத்திலே விரித்துணர்த்தப் படுகின்றது. வீடல் - சாதல். வீட - சாவ. நட்டம் ஆடல் - `கூத்தாட்டு`. தூக்கிய திருவடி; குஞ்சிதபாதம்; `வளைதாள்` `முத்திதருந்தாள்` என்பர். `அருள்தான் எடுத்து நேயமிகும் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத்தான் அழுத்தல்தான் எந்தையார் பரதம்` `முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு` ( உண்மை விளக்கம் ) என்பவற்றால், ஆட் கொள்ளும் பாதம் ஆட எடுத்திட்ட பாதம் எனல் இனிது விளங்கும். `மலம் சாய அமுக்கிய` ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்` என்புழி. ஆட்கொள்ளாத பாதம் என்பது கருத்தன்று. அது பாசவீடு குறித்தது. இது சிவப்பேறு குறித்தது. இரண்டனுள் சிவப்பேறு சிறந்தது. அதனால், எடுத்த திருவடியை எடுத்தேத்துவர்.
சிற்பி