திருக்கழுமலம்


பண் :

பாடல் எண் : 1

பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளின மேந்தின வென்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்று முண்டோ வந்தணாழி யகலிடமே.

பொழிப்புரை :

இவ்வுலகினை ஊழிவெள்ளம் மூடி முழுகச் செய்த காலத்தில் உன் பாதங்களை எல்லாம் இருபது பறவைகள் சுமந்தன என்று கூறுவர் . குளிர்ந்த பிறை தங்குதலைக் கொண்டதாய் , கங்கைக்குத் தங்குமிடம் வழங்கிய வள்ளன்மையை உடைய சடையை விரித்துக்கொண்டு ஆடும் திருக்கழுமலத்துப் பெருமானே ! அழகிய குளிர்ந்த கடலாற் சூழப்பட்ட உலகத்துயிர்கள் உனக்கு அடிமையாதல் அன்றி வேறாதலும் உண்டோ ?

குறிப்புரை :

பார் - நிலம் . ஞான்று - நாளன்று , மரூஉ . நாள் இருபத்தேழு ; அசுவினி முதலியன . ` திருவோண ஞான்று `, ` ரேவதி ஞான்று ` என்னும் வழக்குண்மை கல்வெட்டு முதலியவற்றின் அறிக . நின்பாதம் எல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் :- இவ்வுண்மை வரலாறு நெடுங்காலத்தின் முன்னையதாயினும் , உலகில் வழங்கி வருதலின் , ` என்பர் ` என்றார் . தேவர் புள்ளினமாகித் தாங்கியிருப்பதாகப் புராணம் புகலும் . அமரர் மொய்த்துச் சுற்றிக்கிடந்து தொழ முந்நீரில் , மிதந்தது . ` தொல்பறவை சுமந்தோங்கு செம்மைத் தோணி புரம்தானே ` ( தி .3 ப .100 பா .9) என்று காழிவேந்தர் திருவாக்கும் இவ்வுண்மையை வெளியிட்டதறிக . நளிர் மதியம் - குளிர்பிறை , நளிர் ` என்பது சந்நிபாத சுரத்திற்குத் தமிழில் வழங்கும் ஒரு பெயர் . இது வடசொல்லன்று . ` கால்கொண்ட ` வண்கை ` ` தாள்தோய் தடக்கையோ `? ` தாள்தடவு கையன் ` ( தி .4 ப .19 பா .10) கங்கை என்றிருந்ததோ ? ` வண்கை ` க்கும் சடைக்கும் இயைபுயாது ? கையாற் சடை விரித்து எனல் பொருந்துமேற் கொள்க . மதியமும் கங்கையும் அணிந்த சடையை விரித்தாடும் கழுமலவர் . கால் - வலிமை . பெருக்கெடுத்து விரைந்து வந்த சடை . வலிமை கொண்ட கங்கை . கழுமலம் + அர் = கழுமலவர் . புலம் + அர் = புலவர் . சீகாழிக்குரிய பன்னிரு பெயருள் ஒன்று கழுமலம் . ` ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இது ` ( தி .1 ப .1 பா .3) ` துயர் இலங்கும் உலகிற் பல வூழிகள் தோன்றும் பொழுதெல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் ` ( ? .7) ` கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஓர் காலம் இது ` ( ? . 5) ` ஊருறுபதிகள் உலகுடன் பொங்கி யொலிபுனல் கொளவுடன் மிதந்த காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் ` ( தி .3 ப .118 பா .3). அம் தண் ஆழி அகல் இடம் - அழகும் தண்மையும் ஆழமும் உடைய கடலிடை அகன்ற இடம் . அந் நிலத்துறையும் உயிர்கள் எல்லாம் கழுமலவர்க்கு ஆள் ( அடிமை ) அன்றிப் பிறிதும் உண்டோ ? ` உயர் பசுபதியதன் மிசை வருபசுபதி ` ( தி .1 ப .22 பா .5). ` பாய ஆருயிர் முழுவதும் பசுபதியடிமை `. உலகெலாம் நீருள் அழுந்திய ஊழியில் ஒருவனே அழியாத் தோணி புரத்தில் விளங்கக் கண்டு , ஆண்டவன் இவனே என்றுணர்ந்து ஆளாயின உயிர்கள் . அப்போதும் ஆளாகாவேல் அவை சித்தெனப் படுமோ ?

பண் :

பாடல் எண் : 2

கடையார் கொடிநெடு மாடங்க ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ் சூடி யுகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன் வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க நாடொறு மாடுவரே.

பொழிப்புரை :

முகப்பிலே கொடிகள் கட்டப்பட்ட பெரிய மாடவீடுகள் வீதிகள் முழுதும் நெருக்கமாக அமைந்து விளங்க , எல்லா ஆன்மாக்களையும் தனக்கு அடிமையாக உடைய வேதியன் ஆகிய சிவபெருமான் தலைமாலையைச் சூடிக்கொண்டு மகிழ்ந்து காளை வாகனனாய்க் காட்சி வழங்கும் திருக்கழுமலத்தை அடையும் அடியவர்கள் தங்கள் நல்வினை தீவினைகள் யாவும் அஞ்சி அகலப் பிறவிப்பிணி தீர்ந்தோம் என்று நாடோறும் மகிழ்ந்து கூத்தாடுவர் .

குறிப்புரை :

கடை - புறவாயிலில் . ஆர் - பொருந்திய . கொடி மாடங்கள் ; நெடுமாடங்கள் . ( தி .4 ப .83 பா .1) எங்கும் மாடங்கள் கலந்து இலங்க உடையான் . மாடங்களெங்கும் கொடி கலந்து இலங்க எனலுமாம் . உடையான் - சுவாமி . உடைதலை - உடைந்த தலை . தலைமாலையும் சூடி . உகந்து - விரும்பி . உகந்து சூடியருளி ; சூடி உகந்தருளி . விடை - ` உயர்பசுபதி ` ( தி .1 ப .22 பா .5) விடையுடைய அவ்வேதியன் :- சிவபிரான் . வாழும் - கோயில்கொண்டுறையும் . கழுமலத்துள்ளடைவாக ஆடுவர் . வினைகள் எள்க . (- அஞ்சி அகல ) நாள்தொறும் ஆடுவர் . (- பரமாநந்தத்தில் முழுகுவர் ). பேரின்பக் கூத்து ஆடுவர் . ` வினைகளவை ` என்பதில் அவை சுட்டன்று . நிலைமொழிப் பொருளது .

பண் :

பாடல் எண் : 3

திரைவாய்ப் பெருங்கடன் முத்தங் குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக் கழுமலத் துள்ளழுந்து
விரைவாய் நறுமலர் சூடிய விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

பெரிய கடல் தன் அலை வாயிலாக முத்துக்களைக் கரையில் சேர்க்க நுரையோடுகரை சேர்ந்த அம் முத்துக்களை நெய்தல் நிலமகளிர் முகந்து கொண்டு ஓட , அத்தகைய வளம் நிறைந்த கழுமலத்துள் நிலையாக இருக்கும் , நறுமணம் கமழும் பூக்களைச் சூடிய சிவபெருமானுடைய திருவடிகளைச் சூடி , விண்ணவனாகிய அவர் திருவடிக்கே இவை நீக்கலாகாத பரிசுகளென அர்ப்பணிப்பர் . அத்திருவடிகள் நாடொறும் நம்மை ஆள்வனவாம் . ( நுளைச்சியர் முகந்து கொண்டோடிச் சூடி அர்ப்பணிக்கும் பரிசினவான திருவடிகள் நம்மை ஆள்வன என முடிக்க .)

குறிப்புரை :

திரை - அலை . வாய் - வழி என்னும் பொருட்டு . திரைவழியாற் குவிப்ப . பெருங்கடல் திரை வழியால் முத்தம் குவிப்ப , நுரைவாய் நுளைச்சியர் முகந்துகொண்டு ஓடி வரையாப் பரிசு என்க . ` ஓடி ` என்னும் வினையெச்சம் வரையா ` என்பதன் முதனிலை கொண்டது . கழுமலத்துள் அழுந்து விண்ணவன் ; மலர் சூடிய விண்ணவன் . விரைவாய் நறுமலர் . விரை - மணம் . வாய் - வாய்ந்த . விண்ணவனடிக்கே வரையாத பரிசு . விண்ணவன் - வெள்ளத்தின் மேல் நில்லாது விண்ணில் ஓங்கிக் கழுமலத்துள் அழுந்தியிருந் தருள்பவன் . ஈண்டு விண் தோணிபுரம் நின்றவான் ( வெளி ). வரைதல் - நீக்கல் . வரையா - நீக்காத , ஓடிச்சூடிய என்றும் ஓடி அழுந்து மலர் சூடிய என்றும் கூட்டலாகாமை உணர்க . நம் தம்மை நாள்தொறும் ஆள்வன . இவை இத் திருவடிகள் . ` ஆள்வனவே ` என்று முடியும் திருப்பாடல் பலவும் ஒரு தனிப்பதிகமாயிருந்தனவோ ?

பண் :

பாடல் எண் : 4

விரிக்கு மரும்பதம் வேதங்க ளோதும் விழுமியநூல்
உரைக்கி லரும்பொரு ளுள்ளுவர் கேட்கி லுலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள் பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங் கழனம்மை யாள்வனவே.

பொழிப்புரை :

வேதங்களின் சொற்களால் விரித்துரைக்கப் படுபவனாய் , மேம்பட்ட நூல்களாற் சிறப்பித்து ஓதப்படுபவனாய் , சொற்களால் மக்கள் விளக்கிச் சொல்லமுடியாத அரும் பொருளாய் , தன் பெருமையைக் கேட்பவர் தியானிக்கத்தக்கவனாய் , உள்ள கழுமலப் பெருமான் தன் ஓசையால் பலரையும் அச்சுறுத்தும் பறையின் ஒலியோடு பூதங்கள் பாடத் தான் பண்டு ஆடும் அந்த வகையிலேயே ஆடுவதற்குப் பயன்படுத்தும் திருவடிகள் நம்மை அடிமையாக ஏற்பனவாகும் .

குறிப்புரை :

பதம் - வேதத்தின் ஒர் உறுப்பு . உலகம் முற்றும் இரிக்கும் பறை . உலகம் முழுதையும் அச்சுறுத்துகின்ற வாத்தியம் . இரித்தல் - அச்சுறுத்தல் . பறையொடுபாட , பூதங்கள் பாட ஆடுங்கழல் . நிருத்தம் ஆடுங்கழல் . பழம்படி ஆடுங் கழல் . பழம்படி - பண்டைய வண்ணம் . ஆடுங்கழலை வேதங்கள் அரும் பதங்களை விரிக்கும் . அக் கழலை நூல் ஓதும் . அரும் பொருளை உள்ளுவர் உரைக்கில் வேதங்கள் விரிக்கும் . கேட்கில் நூல் ஓதும் . உரைத்தலும் கேட்டலும் அரும்பொருளை யுள்ளுவரது தொழில் . விரித்தல் வேதத்தினது . ஓதல் நூலினது . ` அரும் பொருளுள்ளுவர் ` இடைநிலை விளக்கு . விரிக்கும் அரும்பதம் வேதங்கள் ஓதுங்கழல் . விழுமிய நூலை யுரைக்கிலும் அரும் பொருளை யுள்ளுவர் கேட்கிலும் உலக முற்றும் தனக்கு வடிவாகக் கொண்டதாகும் கழல் ; பழம் படி நிருத்தம் ஆடுங்கழல் எனக் கூறலுமாம் . ` விரிக்கும் ` ` ஓதும் ` ` முற்றும் `, என முற்றாக்கினும் ` கழுமலவன் ` என்னும் பெயரொடு இயைத்துரைப்பினும் பொருந்தும் . பொருந்தினும் நன்கு பொருள் விளங்காதது இப்பாடல் என்பது புலப்படும் . வேதங்களையும் நூல்களையும் உரைக்கிலும் கேட்கிலும் உலகமுற்றும் அரும் பொருள் உள்ளுவர் . அப் பொருள் நம்மை ஆள்வனவாகிய ஆடுங் கழலே எனலுமாம் . உலகேழும் விளங்க விழுமிய நூல் ஆய்ந்தான் அடிநிழற் கீழதன்றோ என்றன் ஆருயிரே ` ( தி .4 ப .84 பா .9.) பதம் முதலிய ஐந்தும் பாட எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 5

சிந்தித் தெழுமன மேநினை யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்கவல் லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென் றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழ னாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

மனமே ! கழுமலத்தைத் தியானித்த அளவிலேயே நம்மைக் கட்டியிருக்கும் கொடிய வினைகளைப் போக்கவல்லவனாய் , ஆன்மாக்களுக்குத் தலைவனாய் உள்ள பெருமானைத் தரிசித்த அந்த நேரத்திலேயே வினையை நீக்கிவிடுவோம் என்று உறுதியாக எண்ணிக்கொண்டிருக்கும் அடியவர்கள் முற்பட்டுத்தொழும் திருவடிகளே நம்மை நாடோறும் அடிமையாக ஏற்பனவாகும் .

குறிப்புரை :

மனமே , கழுமலத்தை நினையா முன் ( நம்மைப் ) பந்தித்த வல்வினை தீர்க்கவல்லானை ; பசுபதியைச் சிந்தித்தெழு ! பசுபதியைச் சந்தித்தகாலம் மறுத்தும் என்று எண்ணியிருந்தவர்க்கும் முந்தித் தொழு ! அப் பசுபதியின் கழல் நம் தம்மை ஆள்வன . தொழுகழல் எண்ணியிருந்தவர்க்கு முந்திநந்தமை யாள்வன எனல் பொருந்து மேற்கொள்க . சிந்தித்து எழுதல் :- சித்தம் ஆரத் திருவடியே நினைந்து உள்கி ( தி .6 ப .64 பா .4.) எழுதல் . கழுமலத்தை வழிபட அத் தலப் பெயரை நினைத்தற்கு முன்னரே , அவன் நம் வல்வினை தீர்க்கும் . அவ்வினைவலியை வாட்டுதலில் அவன் வலியன் . அன்ன மென்னடை யரிவையொ டினிதுறையமரர் தம் பெருமானார் என்று முதலாந் திருப்பதிகத்திற் காழிவேந்தர் வினை நீக்கமே குறித்தமை அறிக . பசு பதி :- பசுக்களைப் பந்தித்த பாசந் தீர்த்தாளும்பதி . சிந்தித்து எழு முந்தித்தொழு என்னும் ஈரேவலும் மனத்தைக் குறித்தன . மறுத்தும் - வினையை நீக்குதும் என்று எண்ணி இருந்தவர்க்கு முந்தி நந்தமை ஆள்வன தொழுகழல் என்று பிற்கூறியதற்கேற்பவுரைக்க . ` அறுத்தும் ` எனப் பிரித்தலுமாம் . பசுபதியைச் சந்தித்தகாலத்தில் , ( நம்மைப் ) பதிந்த வல்வினையை அறுத்தும் என்று எண்ணியிருந்தவர்க்கு முந்தித் தொழு என்றாதல் முந்தியாள்வன என்றாதல் கொள்க . அறுத்தும் - வினையை அறுப்போம் .

பண் :

பாடல் எண் : 6

நிலையும் பெருமையு நீதியுஞ் சால வழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையிற் றிரிபுர மூன்றெரித் தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

என்றும் நிலைத்திருக்கும் உறுதியும் , அந்த உறுதியைப் பெறுவதற்குரிய பெருமையும் , உறுதிக்கும் பெருமைக்கும் அடிப்படையான அங்கு வாழும் நன்மக்களுடைய நேர்மையும் , மிகவும் அழகுடையனவாக , எங்கும் திரியும் அலைகளை உடைய ஊழிப் பெருவெள்ளத்தில் மிதந்த இத்தோணிபுரத்தில் உகந்தருளியிருப்பவரும் , வில்லால் முப்புரங்களையும் தீயூட்டி எரித்த பெருமானுமாம் அவருடைய மலர்ந்த , கழல்களை அணிந்த திருவடிகள் நாள்தோறும் நம்மை அடிமையாக ஏற்பனவாகும் .

குறிப்புரை :

நிலையுடையது ; பெருமையுடையது ; நீதியுடையது ; சால அழகுடையது ; நிலையும் பெருமையும் நீதியும் சாலுமாறு அழகுடையதாகி , அலையும் பெருவெள்ளத்தில் அன்று மிதந்த இத் தோணிபுரம் எனலுமாம் . தோணிபுரத்தில் வீற்றிருந்தருளும் கழுமலவர் . சிலையின் மேருமலையாகிய வில்லால் , திரிபுரம் - திரியும் புரம் . திரிபுரம் மூன்று என்றதால் , ` திரி ` என்பது தமிழ்ச் சொல்லாகிய வினையடியாதல் விளங்கும் . எரித்தார்தம் கழலடி , கழுமலவர் கழலடி , அலரும் அடி , மலரும் திருவடி , அலருங் கழல் - பரவுங்கழல் . எரித்தார்தங் கழுமலவர் எனல் பொருந்தாது ; ` தம் ` சாரியையாயினும் . ` தோணிபுரம் நின்று வற்றுவது போற் கிடப்பினும் பொருத்தியுரைத்தலில் இடர்ப்பாடின்று , இப்பாடலும் ( தி .4 ப .82 பா .4) ஆவது பாடலும் விளக்கமில்லாதன . ` தன் ` என்பது சிவத்தைக் குறிப்பது . தம் என்பது அதன் உயர்வுப்பன்மையாகக் கொண்டுரைத்தலும் பொருந்தும் . ` தன்னானந்தக்கொடி ` ( சிவகாமவல்லி ) திருவிளையாடற் புராணப் பாயிரம் பார்க்க . தன் - சிவம் , ஆனந்தம் - காமம் , வல்லி - கொடி .

பண் :

பாடல் எண் : 7

முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந் துன்றிவெண் டிங்கள் சூடும்
கற்றைச் சடைமுடி யார்க்கிட மாய கழுமலமே.

பொழிப்புரை :

எம் பெருமானுடைய திருமேனியைச் சுற்றிப் பாம்புகள் பின்னிக் கிடக்க , விரும்பத்தக்க கொன்றைமலர் பொருந்த , வெள்ளிய பிறையைச்சூடும் கற்றையான சடையை உடைய எம்பெருமானுக்கு உறைவிடமாகிய கழுமலத்திருத்தலம் எல்லா நலன்களும் நிரம்பப் பெற்றதாய் ஊழிப்பெருவெள்ளத்துள் கடலில் மிதந்து தேவர்கள் கூட்டமாக வந்து வணங்கித் தொழப்படும் சிறப்புடையது . கொன்றையும் துன்றி - பாடம் .

குறிப்புரை :

சூழ் அரவம் தெற்றிக் கிடந்து .... வண்டினங்கள் சூடும் கற்றைச் சடைமுடியார்க்கு இடம் ஆகிய கழுமலம் , முற்றிக் கிடந்து முந்நீரில் மிதந்து அமரர் உடன் மொய்த்துச் சுற்றிக்கிடந்து தொழப்படுகின்றது என்று கொள்க . அரவம் - பாம்பு . தெற்றி - பின்னி , ` வெங்கொன்றளந்துன்றி ` என்றது பொருள் புலப்பாடிலாதது . வெங்கோல் தளர்ந்து ஊன்றுகின்ற வெளிய திங்கள் எனப் பொருளுரைக்கலாம்படி வெங்கோன்றளர்ந் தூன்று என்னும் பாடம் இருந்தது போலும் . ` வெங்கோன்றளந் தூன்றி ` என்றும் சில பதிப்பில் உள்ளது . இஃது ஏட்டிலும் வெங்கொன்றளந்துன்றி என்றும் வெங்கோன்றளந்தூன்றி ` என்று முளது . வெண்கூதளந்துன்றி என்றிருந்து பிழைத்ததென்று தோன்றுகின்றது . ` வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் ` ( தி .11 தி .4 ப .89 பா .5) ( தி .11 திருமுருக - 192) ` வெண்கூதாளத்துத் தண்பூங் கோதையர் ` ( பட்டினப் பாலை 85) என்புழி ` வெண்டாளி ` என்றனர் நச்சினார்க்கினியர் . மலை யகராதி , ` நீர்த்தாளி ` என்னும் . ` காந்தளம் போதுவிராய்த் தொடு கூதளங் கண்ணியன் ` ( தணிகைப்புராணம் களவுப் 482) ` மல்லிகை கொடிமுல்லை மாதவி கூதாளம் பல்லிணர் மந்தாரம் ` ( ? வீராட்டகாசம் . 74) ` கூதளம் ` என்றது பொருந்தாதேல் , ` கூவிளம் (857) எனலாம் . ` தேன்றிகழ் கொன்றையும் கூவிள மாலை திருமுடிமேல் ஆன்றிகழ் ஐந்துகந்தாடும் பிரான் ` ( தி .4 ப .107 பா .10) எனப் பின்னர் உள்ள தறிக . ` வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னியன்ற சடையிற் பொலிவித்த புராணனார் ` ( தி .2 ப .7 பா .1.) கூவிளம் - வில்வம் . ` தண்ணறு மத்தமும் கூவிளமும் ` ( தி .4 ப .7 பா .6) அரவம் பின்னிக்கிடந்த இடமும் கூதளமோ கூவிளமோ துன்றிய இடமும் திங்கள் சூடியதும் சடை . அது கற்றைச் சடை . அச் சடையின்முடி . அம் முடியுடையார்க்குக் கழுமலம் இடம் . அது தொழப்படுகின்றது . தொழுவோர் அமரர் .

பண் :

பாடல் எண் : 8

உடலு முயிரு மொருவழிச் செல்லு முலகத்துள்ளே
அடையு முனைவந் தடைந்தா ரமர ரடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறு மல்குங் கழுமலத்துள்
விடையன் றனிப்பத நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

உடலும் அவ்வுடலைச் செலுத்தும் உயிரும் உலகியல் பொருள்களிலேயே புறப்பற்றும் அகப்பற்றும் கொண்டு வாழ்க்கையை நடத்தும் இவ்வுலகிலே , கூத்தும் திருவிழாக்களும் நாள்தோறும் மிகுதியாக நிகழும் கழுமலத்துள் , தேவர்கள் சென்று அடையத்தக்க சரணியன் ஆன உன்னை அணுகி உன் திருவடிக்கீழ்ச் சரணாக மக்கள் அடைந்துள்ளனர் . அத்தகைய காளை வாகனனாகிய உன் ஒப்பற்ற திருவடிகளே நாள்தோறும் நம்மை ஆள்வன .

குறிப்புரை :

உலகத்துள்ளே உடலும் உயிரும் ஒருவழிச் செல்லுதல் :- சடமான உடலும் சித்தான உயிரும் ஒருவழிச் செல்லுதல் ஒவ்வாது . சடத்துக்குச் செலவே இல்லை . சித்தான உயிர் சடமான உடலைச் செலுத்தவல்லது . புற ( பாச ) ப் பற்றும் அகப்பற்றும் விளைக்கும் வழியே ஈண்டு ` ஒருவழி ` என்றதாம் . அவ்வழியில் உயிர் உடலைச் செலுத்திச் செல்கின்றது . பசுப் பற்று அகப்பற்று . பாசப்பற்றும் பசுப்பற்றும் நீங்கியவரே பதிப்பற்றுள்ளவர் . அது பற்றற்றான் பற்று . அது பற்றுதற்குரிய பற்று . மற்றவை விடற்குரிய பற்று . இப் ` பற்று விடற்கு அப்பற்றைப் பற்றுக ` என்றது குறள் . அத்தகைய உலகத்துள்ளே உனை அமரர் அடைந்தார் வந்து . அடையும் உனை அடைந்தார் . அடியிணைக் கீழ்வந்து அடைந்தார் . ` பற்றற்றார் பற்றும் பவளவடி ` ( அப்பர் ). நடை - கூத்து . விழவொடு நடையும் மல்கும் கழுமலம் . நாள்தொறும் விழவும் கூத்தும் மல்கும் . அக் கழுமலத்துள் விளங்கும் விடையன் . விடையன் - விடையேறி . ` ஏற்றான் `, தனிப் பதம் - இணையில்லாத் திருவடி . ஒப்பிலாத்தாள் . நாள்தொறும் நந்தம்மை ஆள்வன தனிப்பதம் . ` அடியிணை ` ` தனிப்பதம் ` என்பனவற்றை ஆராய்க . தனிப்பதம் - சிவாநந்த முத்தியாகிய பேறு .

பண் :

பாடல் எண் : 9

பரவைக் கடனஞ்ச முண்டது மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார் கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

பரந்த கடலில்தோன்றிய நஞ்சினை உண்ணாமல் கழுத்திலேயே இறுத்திவிட்டாய் . அந்நீலகண்டம் இவ்வுலகத்தார் எல்லோராலும் வரிசையாக வணங்கித் தொழப்படுகின்றது . தீத்தம்பமாக நீண்ட வடிவெடுத்தாயாக , அத்தகைய உன் திருவடிகளைக் காணத் தம் முயற்சியால் திருமாலும் பிரமனும் முயன்று , பின் வழிபாட்டால் காண்பதற்கு வந்து சேர்ந்துள்ளனர் . அத்தகைய கழல்கள் ஒலிக்கும் திருவடிகளே நாளும் நம்மை ஆள்வன .

குறிப்புரை :

பரவை - பரத்தலையுடைய ( கடல் ). கடல் நஞ்சம் - பாற்கடலிற் றோன்றிய நஞ்சு . நஞ்சம் உண்டதும் இல்லை :- அந்நஞ்சத்தை உட்கொண்டதும் இல்லை . வெளிப்படுத்தியதுமில்லை . தன்பால் நிறுத்தி விட்டது திருநீலகண்டம் . அத்திருநீலகண்டம் இப்பார் முழுதும் நிரந்து கிடந்து தொழப்படுகின்றது . அத் திருநீல கண்டனது கழலடி ( யையும் திருமுடியையும் ) காண்பதற்கே மாலும் அயனுமாகிய இருவரும் கீழும் மேலும் நீண்டு தேடிச் சிரமப்பட வந்து சார்ந்தனர் . அத்தகு பெருமையையுடைய கழலடி நம்தம்மை ஆள்வன . அரவக் கழல் :- ` அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணல் ` ஆடரவக் கிண்கிணிக்காலன்னான் ஓர்சேடனை ஆடுந்தீக் கூத்தனை நான் கண்டதாரூரே ( தி .4 ப .19 பா .10) சிரமம் - வருத்தம் , ` சிரமத்தினை யின்றியுஞற்று சிறப்பு ` ( சேதுபுராணம் . அமுத தீர்த்தம் 11.)

பண் :

பாடல் எண் : 10

கரையார் கடல்சூ ழிலங்கையர் கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி யூன்றலு முள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன் கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறு நந்தமை யாள்வனவே.

பொழிப்புரை :

கரையை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனான இராவணனுடைய முடிகள் நெரியுமாறு , ஒருகாலத்தும் அழிவில்லாத மலர் போன்ற திருவடி விரலை ஊன்றிய அளவில் அவன் உள்ளம் நடுநடுங்கித் தலை பத்தும் வீழ்ந்து வணங்கிக் கிடக்குமாறு கயிலைமலைக்கண் உயர்ந்து விளங்கிய பெருமானுடைய திருக்கழுமலத்தலத்தைத் தரிசிப்பதனால் , பிறவிப் பிணியில் வருந்தாத தன்மையை வழங்கும் அப்பெருமானுடைய திருவடிகளாகிய இவை நம்மை நாள்தோறும் அடிமையாக ஏற்பனவாகும் .

குறிப்புரை :

இலங்கையர்கோன் முடி சிதற அடி ஊன்றலும் விதிர் விதிர்த்துத் தலையாய்க் கிடக்க உயர்ந்த சிவன் ( தன் ) கழுமலம் காண்பதற்கே ( ஊன்றிய அடியான ) அலையாப் பரிசிவை நந்தம்மை நாள்தொறும் ஆள்வன . ` தொலையாமலரடி ` ` அலையாப்பரிசிவை ` இரண்டும் திருவடியைக் குறித்தவை . தன் - சிவன் . தம் - ஆன்மாக்கள் . ( கோயிற்புராணம் பதஞ்சலி 5 .) ( தி .4 ப .82 பா .10.) ` பரிசிவை ` என்றதில் இவை சுட்டுப் பெயரன்று . பரிசு என்னும் முன்மொழிப் பொருள் மாத்திரையாய் நிற்பது . அலையாத தன்மையுடைய இவை எனக் கழலடியைக் குறித்ததுமாம் . கரை ஆர் கடல் - ஓசைமிக்க கடல் . கடற் கரையுமாம் . தொலையா மலர் அடி - தோல்வியுறாத பூநிகர்தாள் . முடி சிதறுவித்ததே வெற்றி . உள்ளம் இராவணனது . விதிர் விதிர்த்து - நடுநடுங்கி , தலையாய்க் கிடத்தல் - பத்துத் தலைகளும் ஒருசேர வீழ்ந்து கிடத்தல் . கிடந்து - கிடக்க . உயர்ந்தான் - கயிலைக்கண் உயர்ந்து விளங்கிய சிவபிரான் . அவன்றன் கழுமலம் . அதைக் காண்பதற்கே . ஆள்வன எனக் கொண்டு , காட்சி ஒன்றே ஆட் கொள்ளப் பெறும் பெரும் பயன் அளித்ததாகக் கொண்டுரைக்கலாம் . அலையாப்பரிசு திருவடி ஒன்றால் தான் எய்தும் . மற்றெல்லாம் அலையும் பரிசே எய்துவிப்பன .
சிற்பி