பொது


பண் :

பாடல் எண் : 1

எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை வாமுறையென்
றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட் டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுர மூன்றையு மோரம்பினால்
அட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

கிழக்கு தென்கிழக்கு முதலிய எட்டுத்திசைகளொடு மேல் கீழ் ஆக இருதிசைகள் ஆகப் பத்துத்திசைகளுக்கும் தலைவனே ! ` எங்களைத் திரிபுரத்து அசுரர்களிடமிருந்து காத்தல் நினக்கே உரிய செயலாகும் ` என்று தேவர்கள் வேண்டிய கூக்குரலைக் கேட்டுத் தீப்போல விழித்துத் தங்களோடு நட்புறவினால் பொருந்தாத கீழ்மக்களுடைய வானத்தில் உலவும் மும்மதில்களையும் ஓரம்பினால் அழித்த சிவபெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அல்லவோ என் அரிய உயிர் தங்கியுள்ளது .

குறிப்புரை :

எட்டாம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா - எட்டுத் திக்கிற்கும் மேல்கீழ் ஆகிய இரண்டு திக்கிற்கும் தலைவர் ; உலகநாதா முறையோ என்று அமரர் பூசல் இட்டார் . பூசல் - பேரொலி . தேவர்கள் அசுரர் செய்யும் கொடும் போரால் கடைவாயிலில் வந்து நின்று முறையிட்டனர் என்று கயிலைக் காவலர் சொல்லக்கேட்டு எனலும் ஆம் . வெம்பூசல் = வெய்ய பேரோலம் . பூசலை அசுரர்க்கு ஏற்றின் போர்த் தொழிலாகும் . ` பூசல் அவுணர்புள் விலங்கு பூத மனிதர் முதல் உலகு ` ( திருவிளையாடல் அட்டமாசித்தி 27). எரி விழியா - தீக்கண் விழித்து , விழியா என்றதால் எரி என்பது இடப்பொருளாகு பெயராய் நெற்றிக் கண்ணைக் குறித்தது . ஒட்டாக்கயவர் - ஒட்டாத கீழோராகிய அவுணர் . தி .4 ப .5 பா .9 பார்க்க . ` ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உருவறியோம் `. ( தி .8 திருவாசகம் ) ஒட்டாமை = அணுகாமை ; நண்ணாமை ; பகைமை . ` திரிபுர மூன்றையும் ` ( தி .4 ப .82 பா .6) குறிப்பைக் காண்க ஓர் அம்பினால் - ஒரு கணையால் . அட்டான் - எரித்த இறைவன் . வினையாலணையும் பெயர் . அடி நிழற் கீழது அன்றோ என்றன் ஆருயிர் :- ` சிற்றம்பலக் கூத்தா உருவள ரின்பச் சிலம்பொலி யலம்பும் உன்னடிக்கீழ தென்னுயிரே ` - ( தி .9 திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா 13.) என்றன் ஆருயிர் :- யான் வேறு உயிர் வேறென இரண்டல்ல . ` இராகுவினது தலை ` என்பது போலும் . இத்திருப்பதிகம் முழுவதும் திருவடி நிழற் கீழது என்றன் ஆருயிர் என முடிதலின் இதனை ஆருயிர்த் திரு விருத்தம் என்றனர் . இது சேக்கிழாருக்கு முன்னரே வழங்கிய பெயர் .

பண் :

பாடல் எண் : 2

பேழ்வா யரவி னரைக்கமர்ந் தேறிப் பிறங்கிலங்கு
தேய்வா யிளம்பிறை செஞ்சடை மேல்வைத்த தேவர்பிரான்
மூவா னிளகான் முழுவுல கோடுமண் விண்ணுமற்றும்
ஆவா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

பிளந்த வாயை உடைய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி , ஒளிவீசும் உருத்தேய்ந்த இளம் பிறையைச் சிவந்த சடையின்மேல் வைத்த தேவர்பிரானாய் , மூப்பும் இளமையும் இலாது என்றும் ஒரே நிலையனாய் , இந்நிலவுலகும் தேவருலகும் மற்ற உலகங்களுமாகி உள்ள சிவபெருமானுடைய திருவடி நிழலின் கீழ் அல்லவோ அடியேனது அரிய உயிர் நிலைத்துள்ளது .

குறிப்புரை :

பேழ்வாய் அரவின் - பிறழ்வாயினையுடைய பாம்பினை , ` பிறழ் ` என்பது பேழ் என்று மருவிற்று . ` பிறழ்வாய் - மறிந்த வாய் ` ( பெரும்பாணாற்றுப்படை 215 உரை ) ` பிறழ்பற் பேழ்வாய் ` ( தி .11 திருமுருகாற்றுப்படை . 47) என்புழிப் ` பெருமையினை யுடையவாய் ` என்றுரைத்தார் நச்சினார்க்கினியர் . அரவினை அரைக்கு அமர்ந்து ; இடையில் விரும்பிக் கச்சாகக் கட்டி . ( சடைமேல் ) ஏறிப் பிறங்குவதும் இலங்குவதும் தேய்தல் வாய்ந்ததும் இனித் தேயாது வளராது என்றும் இளமையொடிருப்பதுமான பிறையை அச் செஞ்சடைமேல் வைத்த தேவாதி தேவன் . மூவான் இளகான் - மூத்தலில்லாதவன் ; இளகுதலில்லாதவன் ; ` மூவாது யாவர்க்கும் மூத்தான்றன்னை முடியாதே முதல் நடுவு முடிவானானை ` ( தி .6 ப .74 பா .3.) ` மூவாய் பிறவாய் இறவா போற்றி ` ( தி .6 ப .55 பா .9.) ` மூவாதமேனி முக்கண்ணா போற்றி ` ( தி .6 ப .56 பா .1) இளகுதல் தழைத்தல் ; தளர்தல் , அசைதல் . தளர்ச்சி முதலியன இளமைப் பண்பு . மூப்பிற்குமுரிய . இளகும் - தளிர்க்கும் ; மெல்கும் . ( சிந்தாமணி . 718. 1778) முழுவுல கோடும் - உலக முழுதுடனும் ; எல்லா வுலகங்களுடனும் . மண்ணுலகும் விண்ணுலகும் மற்றைய உலகங்களும் ஆவான் . ` விசுவரூபி ` ` எல்லா வுலகமும் ஆனாய் நீயே ` ஆவான் - ஆமவன் ; எல்லாமாய் அல்லனு மாவான் இறைவன் . ` எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி ` ` எல்லாமா யல்லதுமாயிருந்ததனை .` ` முழுவேழுலகும் ` ( நம்மாழ்வார் திருவாய்மொழி 2.6.7.)

பண் :

பாடல் எண் : 3

தரியா வெகுளிய னாய்த்தக்கன் வேள்வி தகர்த்துகந்த
எரியா ரிலங்கிய சூலத்தி னானிமை யாதமுக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப் பானென்றுந் தன்பிறப்பை
அரியா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

தாங்குதற்கரிய சினம் கொண்டு தக்கன் செய்த வேள்வியினை அழித்து மகிழ்ந்தவனாய் , நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கிய சூலப்படையை உடையவனாய் , இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய பெரியவனாய் , மேம்பட்ட அடியார்களின் பிறவித்தொடர்பை அறுப்பவனாய் , தான் பிறவா யாக்கைப் பெரியோனாய் இருக்கும் சிவபெருமானுடைய அடி நிழல் கீழது எம் ஆருயிரே . ( பிறப்பை + அறியான் பிறத்தலை இல்லாதவன் . அருமை - இன்மை .)

குறிப்புரை :

தரியா வெகுளியன் - தாங்குதற்கரிய வெகுட்சி யுடையவன் . ` குணமென்னுங் குன்றேறி நின்றார் , வெகுளி கணமேயுங் காத்தலரிது . ( குறள் ). வெகுளியன் - வெகுளுதலை உடையோன் . வெகுளல் - சினத்தல் . ` உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளி நான்கே ` ( தொல் காப்பியம் , மெய்ப்பாடு 10) என்ற சுவைக்குரியது ஈண்டும் ஏற்கும் . ` தெரியா வெகுளி ` பிழை , வேள்வி - ஆபிசார யாகம் . ( திருவிளையாடல் . யானையெய்த . 10.) தகர்த்து - அழித்து . உகந்த - உயர்ந்த , எரி ஆர் இலங்கிய சூலத்தினான் - தீ ஆர்ந்த விளங்கிய சூலப்படையினன் ` எரியார் ` ` நரியார் ` என்பது போல் நின்றதுமாம் . ` தென்றலார்புகுந்துலவு திருத்தோணிபுரத் துறையும் கொன்றைவார் சடையார் ` ( தி .1 ப .60 பா .7.) எனக் காற்றைச் சொல்லுமாறு தீயைச் சொல்லலாம் . ` இமையாத முக்கட் பெரியான் `. ` இவன் முக்கண்ணனோ ` என்னும் வழக்கும் அப் பெருமை உணர்த்தும் . பெரியார் பிறப்பு அறுப்பான் :- கற்றல் கேட்டல் ( நினைத்தல் தெளிதல் நிற்றல் ) உடையார் பெரியார் ` இறைவன் கழல் ஏத்தப் பிறவியை வேரறுப்பவன் . ` பிறவியை வேரறுத்துப் பெரும் பிச்சுத்தரும் பெருமான் ` ` பிறவியை வேரறுப்பவனே ` ( தி .8 திருவாசகம் ). என்னும் தன் பிறப்பை அரியான் :- உயிர்க்காகப் படைப்பு முதலிய ஐந்தொழிலும் நிகழ்த்தத் தான் அருளுருக் கொள்ளுதலை அரியாதவன் . ஈண்டுப் பிறப்பு அவனது தடத்த ரூபங்கொள்ளுதலின் மேற்று . ஏனையோர்க்குள்ளவாறு ஊனுடலெடுக்கும் பிறவியின் மேலதன்று . அரியாதவனடிநிழல் . என்றும் அரியான் . அருமையை இன்மைப் பொருட்டாகக் கொண்டு , என்றும் பிறப்பையில்லான் எனலுமாம் . பிறப்பை அரிதலாது :- தொடர்ந்து வரும் பிறப்பை இடையீடுபடச் செய்யினும் , இடை யீடுபட்டதன் பின் எய்தும் பிறவிகள் தொடர் புடையன ஆகும் . அவ்வாறாகாமல் , வேரோடு அற்றொழியச் செய்தலே அரிதலாகும் . அறுத்தலும் அன்னதே .

பண் :

பாடல் எண் : 4

வடிவுடை வாணெடுங் கண்ணுமை யாளையொர் பான்மகிழ்ந்து
வெடிகொ ளரவொடு வேங்கை யதள்கொண்டு மேன்மருவிப்
பொடிகொ ளகலத்துப் பொன்பிதிர்ந் தன்னபைங் கொன்றையந்தார்
அடிக ளடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

பேரழகுடைய , மாவடு போன்ற மையுண்ட கண்களை உடைய பார்வதியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று , பொந்துகளை இருப்பிடமாகக் கொண்ட பாம்பினை வேங்கையின் தோலாகிய ஆடைமேல் இறுகச் சுற்றி , மேலே பூசப்பட்ட நீற்றின்மீது பொன்னைச் சிதறவிட்டாற்போன்ற பசிய கொன்றைமாலையை அணிந்த சிவ பெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

வடிவு - அழகு . உடை - உடைய , வாள்நெடுங்கண் - வாட்படைபோலும் நெடிய கண்ணினையுடைய ( உமையாள் ). ஓர்பால் - இடப்பக்கம் . உமையாளை மகிழ்ந்துகொண்டு ; அரவொடு வேங்கையதள் கொண்டு . அரவு - பாம்பு . அதள் - தோல் , வெடி கொள் அரவு - விடர்களை உறைவிடமாகக் கொள்ளும் பாம்பு . ` விரி நிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேண்நின்றும் உட்கும் . ( நாலடியார் ), மேல்மருவி - மேற்கொண்டு . மேலே மருவப் போர்த்து என்றவாறு . ( தி .4 பா .84 பா .9) கொண்டு மருவி . பொடி - திரு வெண்ணீறு . கொள் அகலம் - பூசிக்கொள்ளும் மார்பு . அகலத்தையும் தாரையும் உடைய அடிகள் . பொன் பிதிர்ந்தாற் பொன்ற பசிய கொன்றைத்தார் (- மாலை ). அடிகள் :- ` யாமெலாம் வழுத்தும் துறவி ` ( காஞ்சிப்புராணம் ).

பண் :

பாடல் எண் : 5

பொறுத்தா னமரர்க் கமுதருளி நஞ்ச முண்டுகண்டம்
கறுத்தான் கறுப்பழ காவுடை யான்கங்கை செஞ்சடைமேல்
செறுத்தான் றனஞ்சயன் சேணா ரகலங் கணையொன்றினால்
அறுத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

தேவர்களுக்கு அமுதம் வழங்க விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இருத்தி நீலகண்டனாய் அந்தக் கறுப்பினைத் தனக்கு அழகாகக் கொண்டவனாய் , கங்கையைச் சிவந்த சடைமீது அடக்கினவனாய் , அருச்சுனனுடைய பரந்த மார்பினை அம்பு ஒன்றினால் புண்படுத்திய சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

பொறுத்தா னமரர்க் கமுதம் அருளிநஞ் சுண்டு கண்டம் என்று இருந்தது போலும் . ` அமுத + ருளிநஞ்சம் ` என வகையுளி செய்து , புளிமா + ( நிரை நேர் நேர் ) புளிமாங்காய் என்றமைத்துக் கொள்ளினன்றி , இவ்வடி தளை கெடாததாகாது . நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தான் . ஏன் ! அமரருக்கு அமுது அருளியதால் . கறுப்பு அழகா உடையான் . கண்டத்திற்கு அந் நஞ்சாலுற்ற கறுப்பைத் திருவா யுடையவன் . திரு நீலகண்டன் . ` வானத்தவர் உய்ய வன்னஞ்சை யுண்டகண்டத் திலங்கும் ஏனத்தெயிறு ` ( தி .4 ப .80 பா .6.) செஞ்சடைமேலே கங்கையைச் செறுத்தவன் . செறுத்தல் - அடக்கல் . பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே ( தி .8 திருவாசகம் அடைக்கலப் 2.) தனஞ்சயன் ( அருச்சுனன் ) பகையரசரை வென்று பெற்ற பொருளினன் . வெற்றித் திருவினன் எனலுமாம் . தனம் சயமேயாகக் கொண்டவன் . சேண் ஆர் அகலம் - அகலம் பொருந்திய மார்பு . சேண் - அகலம் நீளம் . ` அகன் மார்பு ` ` நீண்மார்பு ` என்னும் வழக்குணர்க . அவனது மார்பை ஒரு கணையால் அறுத்தமை அறிதற் பாலது . ` அருச்சுனற்கு அம்பும் வில்லும் துடியுடைவேடராகித் தூய மந்திரங்கள் சொல்லிக் கொடி நெடுந்தேர் கொடுத்தார் ` ( தி .4 ப .50 பா .1) ` ருளிநஞ்சம் ` என்பதை விட்டிசைத்துக் கொள்ளலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

காய்ந்தான் செறற்கரி யானென்று காலனைக் காலொன்றினால்
பாய்ந்தான் பணைமதில் மூன்றுங் கணையென்னு மொள்ளழலால்
மேய்ந்தான் வியனுல கேழும் விளங்க விழுமியநூல்
ஆய்ந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயன் எமனாற் பகைத்துயிர் கவரப்படுதற்குரியனல்லன் என்று அவனைக் கோபித்தவனாகிய கூற்றுவனைத் திருவடி ஒன்றினால் பாய்ந்துதைத்தான் . பெரிய மதில்கள் மூன்றனையும் அம்பு என்ற ஒள்ளிய தீயினில் மூழ்கிச் சாம்பலாகச் செய்து , இடமகன்ற ஏழுலங்களும் விளங்கும்படியாக மேம்பட்ட நூல்களை ஆய்ந்துள்ள சிவபெருமான் அடிநீழற் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

செறல் - அழித்தல் . ` பாவடியாற் செறல் ` ( புற நானூறு ), செறற்கு அரியான் - கொல்லற்கு அரியவன் ( என்று காலனைக் கால் ஒன்றினால் காய்ந்தான் . காய்ந்து பாய்ந்தான் . ( பணை - பருமை ) பருமதில் மூன்று - மூவெயில் . கணை என்னும் ஒள் அழல் :- பாணம் எனப் பெயர் பெறும் தீக்கணை . ` அம்பு எரி கால் ஈர்க்குக்கோல் ` ` குன்றவார் சிலை நாண் அரா அரிவாளி கூர் எரிக்காற்றின் மும்மதில் , வென்ற வாறெங்ஙனே `. மும்மதிலும் ஒள்ளழற்கணையால் மேய்ந்தான் . மேய்தல் - பருகுதல் , வியல் - அகலம் . வியல் + உலகு = வியலுலகு ; வியனுலகு . உலகேழும் விளங்க ஆய்ந்தான் விழுமிய நூலை . அந்நூல் நான்மறை ஆறங்கம் . ` விரிக்கும் அரும்பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் .` ( தி .4 ப .82 பா .4). ஆய்ந்த அவனது அடி நிழல் . அந்நீழற் கீழது என்றன் ஆருயிர் . ` விழையா ருள்ளம் நன்கெழுநாவில் வினைகெட வேதம் ஆறங்கம் பிழையா வண்ணம் பண்ணிய வாற்றாற் பெரியோரேத்தும் பெருமான் ` ( தி .1 ப .42 பா .7.)

பண் :

பாடல் எண் : 7

உளைந்தான் செறுதற் கரியான் றலையை யுகிரொன்றினால்
களைந்தா னதனை நிறைய நெடுமால் கணார்குருதி
வளைந்தா னொருவிர லின்னொடு வீழ்வித்துச் சாம்பர்வெண்ணீ
றளைந்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

பிரமனுடைய தவறான செயலைக் கண்டு வருந்தினனாய் , அச்செயலுக்கு உரிய ஒறுப்புக்காக வெல்லுதற்கு அரிய அவன் தலையை நகம் ஒன்றினால் நீக்கியவனாய் , அம்மண்டையோடு நிறையுமாறு திருமாலுடைய உடம்பிலுள்ள குருதியை நிரப்பினனாய் , இராவணனை ஒருவிரலை அழுத்திக் கயிலைமலையின் கீழ் விழச் செய்தவனாய் , சாம்பலாகிய நீற்றினை உடல் முழுதும் பூசியவனுமான சிவபெருமானுடைய அடிநிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

உளைந்தான் - வருந்தினான் . செறுதற்கு அரியான் - செறற்கரியான் . ( தி .4 ப .84 பா .6.) நான்முகன் . உகிர் - கைந்நகம் . அதனை - அப் பிரமகபாலத்தை . நிறைய - நிறைக்க என்னும் பொருட்டு . ` நிறைய நெடுமால் கண் ஆர் குருதி வளைந்தான் :- ` தாமரையோன் சிரம் அரிந்து கையிற் கொண்டார் தலையதனிற் பலிகொண்டார் நிறைவாம் தன்மை வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார் . ( தி .6 ப .96 பா .1) கண் ஆர் குருதி - கண்ணில் நிறைந்த செந்நீர் ` ஒரு விரலினொடு வீழ்வித்து . வீழ் வித்தது விரல் . வீழ்ந்தது குருதி . சாம்பர் வெண்ணீறு அளைந்தான் - சாம்பராகிய திருவெண் ணீற்றிற் புரண்டவன் . அளைதல் - ஈண்டுப் புரளுதல் என்னும் பொருளது . ` தாதளைந்து இனவண்டு ` ( நைடதம் . அன்னத்தை 2.)

பண் :

பாடல் எண் : 8

முந்திவட் டத்திடைப் பட்டதெல் லாமுடி வேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப் புண்பதற் கஞ்சிக்கொல்லோ
நந்திவட் டந்நறு மாமலர்க் கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யானடிச் சேர்ந்ததென் னாருயிரே.

பொழிப்புரை :

என் இந்த வாழ்க்கையின் முற்பகுதியில் யான் செய்தனவற்றைஎல்லாம் உட்கொண்டு அரசர்களுடைய பரிசனங்களாகிய தொகுதியினரிடம் அகப்பட்டு அவர்களால் பலவகையாகத் துன்புறுத்தப்படுவதற்கு அஞ்சிப் போலும் நந்தியா வட்டப்பூவும் கொன்றைப் பூவும் ஒளிவீசும் சென்னியும் மாலை வானம் போன்ற செம்மேனியுமுள்ள அம்மானுடைய அடிநிழலைச் சேர்ந்தது என் ஆருயிர் .

குறிப்புரை :

முந்து இவ் வட்டத்திடைப்பட்டது எல்லாம் முடி வேந்தர் தங்கள் பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்பு உண்பதற்கு அஞ்சிக் கொல்லோ என் ஆருயிர் அந்திவட்டத்து ஒளியானடிச் சேர்ந்தது ? இவ்வட்டம் - இந்நிலவலயம் . வட்டத்திடைப்பட்ட தெல்லாம் அதனை ஆளும் வேந்தர் பந்திவட்டத்திடைப்பட்டு அலைப் புண்ணுகின்றன . சமண் சமயம் புக்கிருந்த காலத்தை ` முந்து ` என்றார் . முன் + து = முன்று , முந்து . மரூஉ . இவ்வட்டத்திடை :- சமணர் மலிந்த இம்மண்டலத்தில் . பட்டது எல்லாம் - பட்ட துன்பம் முழுவதும் சூலை நோய் உற்றமை ; நீற்றறையி லிட்டமை ; நஞ்சு கலந்தூட்டியமை ; மத களிறிடறு வித்தமை ; கல்லொடு கட்டிக் கடலி லிட்டமையெல்லாம் . அவற்றை அஞ்சியோ ஆருயிர் அடியைச் சேர்ந்தது ? இது வரலாற்றுக் குறிப்பு . யானைப்பந்தி குதிரைப்பந்திகளின் வட்டத்திடையே அகப்பட்டு அலைச்சல் அடைகின்றன . அடைதலை அஞ்சியோ ஆருயிர் அந்தி வண்ணன் திருவடியைச் சேர்ந்தது ? இங்கு ( தி .4 ப .113 பா .4, தி .5 ப .1 பா .9.) பார்க்க . நந்திவட்டம் நந்தியாவர்த்தம் என்னும் பூ . ` நந்தியாவட்டம் ` என்பது வழக்கு ` ` அந்தணனாறு மான்பால் அவியினை யலர்ந்தகாலை நந்தியாவட்டம் நாறும் நகைமுடி யரசனாயின் ` ( சிந்தாமணி 1287).

பண் :

பாடல் எண் : 9

மிகத்தான் பெரியதொர் வேங்கை யதள்கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவநல் லாளை நடுக்குறுப் பான்வரும்பொன்
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி னாலுகப் பானிசைந்த
அகத்தா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

மிகப்பெரிய வேங்கையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திப் பார்வதியை உள்ளம் அஞ்சி நடுங்கச் செய்பவனாய்த் தன்னை நோக்கி வந்த பொன் போன்ற பொலிவை உடைய கங்கையைத் தன் சடையில் முகந்து கொண்டதால் சடை குளிர அதனால் மனத்தில் மகிழ்வெய்தியவனாய் , என்னை அடிமையாக ஏற்றுக் கொள்ள இசைந்த சிவபெருமானுடைய அடிநிழல் கீழது அல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

மிகப் பெரியதொரு புலித் தோலைக்கொண்டு திரு மேனிமேற் போர்த்து , நல்லவளான உலகநாயகி அகத்தில் வெருவ நடுக்கம் அடைவிப்பான் . பொன் முகம் - பொலிவுடைய முகம் . முகத்தால் குளிர்ந்திருந்து . அகத்தால் இன்புறுதல் :- ` முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் ` ( குறள் . 93) உள்ளத்தினான் உகப்பான் இசைந்த அகத்தான் :- உள்ளத் தாலே உகப்ப இசைந்த அகத்தினான் . அகத்தானது அடி . உகப்பு - உயர்வு . விருப்பம் என்னும் பொருள் பிற்காலத்தது . வரும் பொன் முகத்தால் - வளர்கின்ற பொன் முகத்தினால் . பொன் முகம் குளிர்விக்கும் உள்ளம் உகப்புறுத்தும் . அவற்றால் குளிர்ந்திருக்கவும் உகப்பவும் இசைந்த அகம் ; நடுக்குறுப்பானும் உகப்பானுமாய் இசைந்த அகத்தவன் . நடுக்குறுப்பவும் உகப்பவும் இசைந்த அகத் தான்றன் அடி . ` அகத்தான் வெருவ ` - உள்ளே வெருவ . உருபு மயக்கம் . அகத்தானடி :- ஆறனுருபு விரித்துரைக்க .

பண் :

பாடல் எண் : 10

பைம்மா ணரவல்குற் பங்கயச் சீறடி யாள்வெருவக்
கைம்மா வரிசிலைக் காமனை யட்ட கடவுண்முக்கண்
எம்மா னிவனென் றிருவரு மேத்த வெரிநிமிர்ந்த
அம்மா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

படம் எடுக்கும் மேம்பட்ட பாம்பினை ஒத்த அல்குலை உடையவளாய்ச் சிறிய பாதங்களை உடையளான பார்வதி அஞ்சக் கையிலே மேம்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய மன்மதனை அழித்த தெய்வமாகிய முக்கண்ணனாம் எம்பெருமான் என்று பிரமனும் திருமாலும் புகழும்படி தீத்தம்பமாக ஓங்கி வளர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடைய அடி நிழல் கீழதல்லவோ எனதாருயிர் .

குறிப்புரை :

பை - படம் . மாண் அரவு - மாண்ட பாம்பு . மாள் ; மாண் இருமுதனிலையும் வினையாகுங்கால் இறந்த காலத்தில் ஒன்றுபடும் . பைம் ` மாண் ` இருபொருட்டு . மாளாநின்ற - மாணா நின்ற . மாளும் மாணும் எனப் பிறகாலங்களில் ஒன்றாமையுணர்க . அரவுபோலும் அல்குல் . ( கடிதடம் ) பங்கயம் . தாமரை . ` சேற்றிற் பிறந்திடுங் கமலம் ` ( குமரேச சதகம் ). சீறடி - சிறுமை + அடி . சிறிய காலடி , அடியாள் - உமைநங்கை . வெருவ :- கைச்சிலை , மாச்சிலை , வரிசிலை . கைம்மா - யானை . காமன் - மதன் . கைம்மாவையும் காமனையும் சீறடியாள் வெருவ அட்ட கடவுள் எனலுமாம் . முக்கண் எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரியாக நிமிர்ந்த அம்மான் . தீயாடிய கூத்தன் . ` இருவர் ` அயனும் மாயனும் . எரிநிமிர்தல் - தீப்பிழம்பாக எங்கணும் வியாபித்து நிற்றல் . ` இருவர்க்குங் காண்பரிய நிமிர் சோதி ` ( தி .4 ப .13 பா .8) ` இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலும் காற்றும் உரகம் ஆர்பவனம் எட்டும் திசை யொளி உருவம் ஆனாய் `. ( தி .4 ப .63 பா .7).

பண் :

பாடல் எண் : 11

பழகவொ ரூர்தியரன் பைங்கட் பாரிடம் பாணிசெய்யக்
குழலு முழவொடு மாநட மாடி யுயரிலங்கைக்
கிழவ னிருபது தோளு மொருவிர லாலிறுத்த
அழக னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

பொழிப்புரை :

ஊர்ந்து செலுத்தக் காளையை வாகனமாக உடையவனாய் , தீயவர்களை அழிப்பவனாய் , பூதங்கள் தாளம் போடக் குழலும் முழவும் ஒலிக்க மேம்பட்ட கூத்து நிகழ்த்துபவனாய் , மேம்பட்ட இலங்கை அரசனாகிய இராவணனுடைய இருபது தோள்களையும் தன் திருவடியின் ஒருவிரலால் நெரித்த அழகனாகிய சிவபெருமானுடைய அடிநிழலின் கீழல்லவோ அடியேனுடைய அரிய உயிர் பாதுகாவலாக உள்ளது .

குறிப்புரை :

பழகு அவ்வூர் ஊர்தி அரன் - பழக ஓர் ஊர்தி அரன்; பழகிய அவ்வூர்தியை யுடைய அரன். பழக ஓர் ஊர்தியை யுடைய அரன். பழக என்னும் வினையெச்சம் உடைய எனவிரித்த பெயரெச்சங்கொண்டதாகும். ஊர்தி - விடை. ஊர்ந்து செல்லப்படுவது. பைங்கட் பாரிடம் - பசிய கண்களையுடை பூதம். பாணி செய்ய - தாளம் இட. `உமை பாடத் தாளம் இட` (தி.2 ப.111 பா.1) `குழலும் முழவொடும்` என்றதில் உள்ள மூன்றனுருபைக் கூட்டிக் குழலொடும் என்க குழலொடும் முழவொடும் மாநடமாடி. `குடமுழவம் வீணை தாளம் குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்தாடுமே` (தி.6 ப.4 பா.5). `நடமாடி` பெயர்; `காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி` என்புழிப்போல. ஆடி இறுத்த அழகன் எனல் சிறவாது; விரலால் இறுத்தபோழ்து மாநடமாடியதாகப் பொருள் படுதலின், உயர் இலங்கைக் கிழவன் - உயரிய இலங்கைக்குரியவன். கிழமை - உரிமை. ` கோவூர்கிழார்` . `இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த அழகன்`:- இனைத்தென அறிந்த சினைக்கிளவிக்கு வினைப்படு தொகுதியின் வேண்டும் உம்மை பெற்று, இறுத்தது ஒரு விரல்; இற்றன இருபது தோளும் என்னும் நயத்தின் அமைந்தவாறறிக. சிறு முயற்சியாற் பெரு வெற்றியெய்துங்கால் உண்டாகும் அழகு என்பது தோன்ற `அழகன்` என்றார்.
சிற்பி