திருச்சோற்றுத்துறை


பண் :

பாடல் எண் : 1

காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம் , நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளை உடைய திருச்சோற்றுத்துறையாம் . அங்கு உகந்தருளியிருக்கும் சிவ பெருமானுடைய நீண்ட சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன்அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது .

குறிப்புரை :

விண்ணிலுறை வானவர்கள் காலையில் துயிலெழுந்து தூயனவாகிய மணமலர் பறித்துக்கொண்டு போந்து மிக்க விருப்புடன் வழிபடும் சிவனிடம் திருச்சோற்றுத்துறை . அது மணத்தால் மிக்க சோலைகள் சூழ்ந்தது . மணம் கமழும் சோற்றுத்துறை . ` சோறு மணக்கும் மடங்களெலாம் ` ( சேக்கிழார் பிள்ளைத்தமிழ் ). அத் துறையுள் திருக்கோயில் கொண்டுறைகின்ற சிவபிரானது திருச்சடை மேல் விளங்கும் மாலைப் பிறையன்றோ எம்பிரானுக்கு அழகியது ? ` மாலை மதியம் ` - மாலையில் விளங்கும் மதியம் மாலையாகிய மதியம் . ` மாதர்ப் பிறைக் கண்ணியான் ` ( தி .4 ப .3 பா .1). இத்திருப் பதிகத்தில் ஐந்து பாட்டிலே மதியைக் குறித்துள்ளது . உறைவார் என்பது ` உயர் சொற்கிளவி `. மேல் வருவனவும் இன்ன . சோற்றுத்துறையுறைவார் என்றது அத்தலத்துச் சிவபிரானது திருப்பெயர் . அது பன்மை யொருமை மயக்கமாகாது .

பண் :

பாடல் எண் : 2

வண்டணை கொன்றையும் வன்னியு மத்தமும் வாளரவும்
கொண்டணைந் தேறு முடியுடை யான்குரை சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

தொண்டர்கள் , வண்டுகள் தங்கும் கொன்றை , வன்னி , ஊமத்தை , ஒளிபொருந்திய பாம்பு இவைகள் வந்து பொருந்தித் தங்கும் சடையையுடைய பெருமான் திருவடிக்கண் தொண்டர்கள் வந்து பொருந்தி , பேரின்பக் கடலாடித் திளைக்கும் திருச்சோற்றுத்துறை எம்பெருமானுடைய சடையின்மேல் காட்சி வழங்கும் வெள்ளிய தலைமாலை அல்லவோ அவருக்கு அழகான அணிகலனாக வாய்த்திருக்கிறது .

குறிப்புரை :

வண்டுகள் சேரும் கொன்றைமலர் மாலையும் வன்னியிலையும் மத்தமும் கொடும் பாம்பும் கூடிக் கொண்டு ஏறும் திருமுடியுடையவன் . தொண்டர் எல்லாரும் அவ் வெம்பெருமானது ஒலிசேர் கழலடிக்கே தொண்டு பொருந்திப் பேரின்பக் கடலுள் ஆடுவது போலத் திருச்சோற்றுத்துறைக் காவிரியுள் ஆடிமகிழ்வர் . அத்தகு பெருமை பொருந்திய தலத்துள் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபிரானது திருச்சடைமேல் விளங்கும் வெளிய தலைமாலை யன்றோ அவ் வெம்பெருமானுக்கு அழகியது ?

பண் :

பாடல் எண் : 3

அளக்கு நெறியின னன்பர்க டம்மனத் தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளக்குங் குழையணி சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
திளைக்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

எல்லோருடைய உள்ளப் பண்பையும் அளந்தறியும் முறைமை உடையவராய் , அடியவர்களுடைய மனத்தை உள்ளவாறு ஆராய்ந்து அறிந்து அவர்களை அடிமை கொள்பவராய் , தம்முடைய திருவடிப் பெருமையை உலகம் அறியச் செயற்படும் அடியவர் களுடைய பழைய வினைகளையும் புதியவினைகளையும் தீர்த்தருளும் , தேவர்தலைவராய் , ஒளிவீசும் காதணியை அணிந்திருக்கும் திருச்சோற்றுத்துறை எம் பெருமானுடைய சடை மேல் இருந்து மகிழ்ச்சியில் திளைக்கின்ற பிறைச்சந்திரன் அல்லவோ அப் பெருமானுக்கு அழகிய அணிகலனாக வாய்த்துள்ளது .

குறிப்புரை :

அளக்கும் நெறியினன் ; ஆய்ந்துகொள்வான் ; விண்ணவர் கோன் ; துறையுறைவார் . அவர் சடைமேல் திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியது ? அன்பர்களுடைய மனத்தை ஆய்ந்துகொள்வான் . அவர்களது அன்பினை அளக்கும் நெறியினன் . ஆண்டவன் திருவடிப் பெருமையையும் தம்மையும் விளக்கும் அடியவருடைய பழைய ( சஞ்சித ) வினையையும் புதிய ( ஆகாமிய ) வினையையும் தீர்த்திட்டாளும் தேவாதிதேவன் . துளக்கும் - ஒளி செய்யும் . குழை - காதிற் குண்டலம் . ` தோடுங்குழையும் ` ( தி .8 திரு வாசகம் ). குழையணிவார் ; சோற்றுத்துறையுறைவார் . அவர் சடை மேல் திளைக்கும் மதியாம் .

பண் :

பாடல் எண் : 4

ஆய்ந்தகை வாளர வத்தொடு மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானிட மாடுவர் பின்னு சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

கையிலே ஒளிபொருந்திய பாம்பினை ஆராய்ந்து எடுத்துக்கொண்டு , திருமாலாகிய காளையின்மீது இவர்ந்து , எல்லா விடத்தும் மானை ஏந்திய கையினை வீசிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவராய் , ஒன்றோடொன்று பிணைந்த சடைகளிடையே அடியார்கள் தம் கைகளால் அர்ப்பணித்த பூக்கள் தங்கும் சடைமுடியை உடைய சிவ பெருமான் கையில் ஏந்திய சூலம் மழு என்ற படைக் கருவிகள் அவருக்கு அழகிய அணிகலன்கள் ஆக அமைந்துள்ளன .

குறிப்புரை :

கைவாள் அரவம் - கையிற் பூண்ட கொலைப்பாம்பு ஆய்ந்த - நுணுகிய ; ஆராய்ந்த . அரவத்தொடு ஏறி ஆடுவர் . எங்கும் பேர்ந்த கை - எங்கணும் பெயர்ந்த கை . கைமான் - கையில் ஏந்திய மான் . மானுடன் நடம் ஆடுவர் . மால் நடம் ஆடுவர் எனலும் ஆம் . பின்னு சடையிடையே சேர்ந்த கைமலர் . ` கால் கொண்ட வண்கைச் சடை ` ( தி .4 ப .92 பா .8) என்றதும் இப்பொருட்டேபோலும் . ஆண்டுக் கொண்ட ஐயம் ஈண்டு நீங்கிற்று . கால்கொண்ட வண்கையால் ( தாள்தோய் தடக்கையால் ) சடையை விரித்து ஆடும் கழுமலவர் என்று ஆண்டுரைத்துக் கொள்க . ஈண்டுச் சடையிடையே சேர்ந்தகை என்றும் கொள்க . கைம்மலர் :- அன்பர் பூசனையில் கையால் தூவியிடச் சடை யிடையே சேர்ந்த மலர் . அம்மலர் ( நிருமாலியம் ) துன்னிய துறை . திருச்சோற்றுத் துறையுறைவார் ஏந்திய திருக்கைச் சூலமும் மழுவும் எம்பிரானுக்கு அழகியன .

பண் :

பாடல் எண் : 5

கூற்றைக் கடந்ததுங் கோளர வார்த்ததுங் கோளுழுவை
நீற்றிற் றுதைந்து திரியும் பரிசதும் நாமறியோம்
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப வலைப்புண் டசைந்ததொக்கும்
சோற்றுத் துறையுறை வார்சடை மேலதொர் தூமதியே.

பொழிப்புரை :

திருச்சோற்றுத்துறையில் உகந்தருளும் பெருமானார் கூற்றுவனை அழித்த செயலும் கொடிய புலித்தோல் ஆடையின் மேல் பாம்பினை இறுகக்கட்டித் திருநீற்றை முழுமையாக அணிந்து , சோற்றுத்துறைப் பெருமானது நீண்ட சடைமேல் விளங்கும் ஒப்பற்ற சந்திரன் அங்குள்ள கங்கையாற்றின் கரையிலே கிடந்து அவ்வாற்றின் அலை அலைக்கும்தோறும் தானலைந்தவாறிருக்கும் அழகையே நாம் அறிவோம் .

குறிப்புரை :

கூற்றை - காலனை . கடந்ததும் - வென்றதையும் . கோள் அரவு ஆர்த்ததும் - கொலைப் பாம்பைப் பூண்டதையும் . கோள் - கொலை , வலிமை கோள் உழுவை - ` கொல்புலியை ` திருநீற்றிலே துதைந்து (- நெருங்கி ). பரிசதும் - பரிசினையும் . அது :- சுட்டுப் பெயர் அன்று . பரிசு எனும் முன்மொழிப் பொருட்டேயாய் நின்றது . பிறர் பகுதிப்பொருட்டென்பர் . அது பகுதியாகாது . கடந்ததையும் ஆர்த்த தையும் பரிசதையும் நாம் அறியோம் . அறியோம் என்றது பார்த்தறியோம் , அவற்றை வீரச் செயலென மதியேம் , அவை வியப்பல்ல என்பன முதலிய பொருள் தரும் . திருச்சோற்றுத் துறையுறைவார் திருச் சடை மேலதாகிய ஒரு தூய பிறை , அச் சடையில் அடங்கிய கங்கை யாற்றிற் கிடந்து , அவ் யாற்றினலை அலைப்ப அலைப்புண்டு அசைந்ததுபோலும் . மதி அசைந்தது ஒக்கும் .

பண் :

பாடல் எண் : 6

வல்லாடி நின்று வலிபேசு வார்கோளர் வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்திறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத் துறையுறைவார்
வில்லாடி நின்ற நிலையெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

தங்கள் வலிமையை மிகுத்துக் காட்டிக்கொண்டு நின்று கொல்லப் போவதாகப் பயமுறுத்தும் கொலைஞர்களாய அசுரர்கள் அங்ஙனம் துன்புறுத்தி வருத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது தேவர் வந்து வணங்க , அவர்களோடு உரையாடிப் பயில்கின்ற சோற்றுத்துறைப் பெருமான் தமது கைவில்லைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை அவர்க்கு அழகிதாகும் .

குறிப்புரை :

வல்லாடி - வன்பு செய்து . வலி - வன்பு . கோளர் - வலியர் ; கொலைஞர் . கொல்லாடி - கொலைசெய்து . குமைக்கிலும் - அழித்தாலும் . வல்லாடி நின்று வலிபேசுவாரும் கோளரும் ஆகிய வல்லசுரர் கொல்லாடி நின்று குமைத்தாலும் , வானவர் ( தேவர் ) கள் விண்ணினின்று மண்ணில் வந்து வழிபட்டு உய்வார்கள் . சோற்றுத் துறையுறைவார் தம்மை இறைஞ்சும் வானவர்களுடன் சொல்லாடி நின்று பழகுவார் . அவ்வெம்பிரானுக்கு வில்லாடி நின்றநிலை அழகியது .

பண் :

பாடல் எண் : 7

ஆய முடையது நாமறி யோம்அர ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியு மெய்துந் துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் மானுக் கழகியதே.

பொழிப்புரை :

எம் பெருமான் முப்புரங்களை அழிக்க முற்பட்ட காலத்தில் அவருக்குச் சேனைத்திரள் இல்லையோ உண்டோ என்பதனை நாம் அறியோம் . முப்புர அசுரர்களைக் கோபித்து வலிய வில்லை வளைத்தும் அம்பு எய்தும் அவர்களை அழித்துத் தேவர்களுடைய சோர்வைப் போக்கிய திருநீறு அணிந்த மேனியராகிய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமுடியின்மேற் பரவும் வெண்ணிற அலைகளை உடைய கங்கை எம்பெருமானுக்கு அழகிதாகும் .

குறிப்புரை :

ஆயம் - கூட்டம் ; ` வெற்பர் ஆயம் ஓடி ` ( தி .12 பெரியபுரா . கண்ணப்பர் 77). உடையது - உடையதை . நாம் அறியோம் - திரிபுரத்தை அழிக்கச் சென்ற சிவபிரானுக்குப் படைத்திரள் உண்டோ இல்லையோ நாம் அறியோம் . அரணத்தவர் - முப்புரக்கோட்டையை யுடைய அசுரர் . காய - வேவ . கணை சிலை வாங்கியும் - அம்பை வைத்து வில்லை வளைத்தும் . எய்தும் - தொடுத்தும் . துயக்கு - அறிவின் திரிபு ; தடை ; சோர்வு ; தளர்ச்சி . துயக்கறுத்தான் - அவுணரால் அமரர்க்குற்ற சோர்வை நீக்கினான் . தூய திருநீற்றை அணிந்தவன் . திருச்சோற்றுத் துறையுறைவார் - அவர் சடைமேல் கங்கை அழகியது . சடைமேல் பாயும் கங்கை . வெண்ணீர்க்கங்கை ; திரைக்கங்கை . திரை - அலை .

பண் :

பாடல் எண் : 8

அண்ட ரமரர் கடைந்தெழுந் தோடிய நஞ்சதனை
உண்டு மதனை யொடுக்கவல் லான்மிக்க வும்பர்கள்கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

பகைவரான அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்து பரவிய விடத்தை உண்டு அதனைக் கழுத்திலே இருத்தவல்ல தேவர் தலைவராய் , மேலான இந்திரனும் திருத் தொண்டில் ஈடுபட்டுப் பயில்கின்ற திருச்சோற்றுத்துறைப் பெருமா னுடைய முடிமாலை போல விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

குறிப்புரை :

அண்டர் - பகைவர் ( அசுரர் ). ( பிங்கலந்தை 3055) அமரர் - தேவர் . அண்டரும் அமரரும் கடைந்து எழுந்து ஓடுவதற்கு ஏதுவான நஞ்சினை உண்டும் அதனால் தான் ஒடுங்காது அதனை ஒடுக்க வல்லவன் . ` வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்றப் பண்ணினார் எல்லாம் ` ( தி .3 ப .118 பா .4) என்றதிற்போல வானுளாரும் அமரரும் எனலுமாம் . மிக்க உம்பர்கள் கோன் - எண்ணில்லாத தேவர்க்கெல்லாம் முதல்வன் (` விண்ணவர் கோன் ` தி .4 ப .85 பா .3.) இந்திரன் தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை யுறைவார் எனலும் ஆம் . சடை மேல் இண்டை மதியம் அன்றோ அழகியது ? இண்டை மதியம் இண்டை மாலையும் பிறையும் . ` இந்திரன் வனத்து மல்லிகை மலரினிண்டை சாத்தியதென நிறைந்த சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண சைலனே கைலை நாயகனே ` ( சோண சைலமாலை 57 ) என்றவாறு . இண்டை பிறைக்கு உவமை . இண்டையாய் நின்ற மதியம் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

கடன்மணி வண்ணன் கருதிய நான்முகன் றானறியா
விடமணி கண்ட முடையவன் றானெனை யாளுடையான்
சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
படமணி நாகமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத்தினனாகிய திருமாலும் பிரமனும் அறியாத நீலகண்டராய் , எம்மை அடிமைகளாகக் கொள்பவராய்ச் சூரியன் ஒளி தம் திருமேனியில் பரவுமாறு கூத்து நிகழ்த்தும் திருச்சோற்றுத்துறை பெருமானுடைய சடைமீது இரத்தினமுள்ள படமுடையதாய்த் தங்கியிருக்கும் , பாம்பு அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

குறிப்புரை :

கடல் மணி வண்ணன் - கடல் வண்ணன் ; மணி வண்ணன் - கடல் போலும் நிறமுடையவன் , நீலமணிபோலும் நிற முடையவன் . கருதிய - திருமுடியை எளிதிற் கண்டு கொள்ளலாமென்று எண்ணிய . நான்முகன் - திசைமுகன் . ஈண்டுத் ` திசை` நான்கு என்னும் எண்ணுப் பொருள் மேலது . அறியா என்னும் பெயரெச்சம் உடையவன் என்னும் பெயர் கொண்டது . விடம் - நஞ்சு , அணி - அணியும் . ( அழகு செய்யும் ) கண்டம் - திருநீலகண்டத்தை யுடையவன் . தான் எனை ஆள் உடையான் :- ` தானே வந்தென்னைத் தலையளித்தாட்கொண்டருளும் வான்வார்கழல் ` சுடர் - வெயிலை . அணிந்து ஆடிய - அழகுறக் கொண்டு முழுகிய . இத்தலத்தில் இந்திரன் , சூரியன் , கௌதமர் , அருளாளர் முதலியோர் வழிபட்டனர் . ` செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத்துறையனாரே `. ( தி .4 ப .41 பா ,8) இக்காலத்திலும் ஆண்டுதோறும் இத் திருக்கோயிலுள்ளே எழுந்தருளியுள்ள சிவலிங்கத் திருமேனியில் சூரியனொளி வீசும் வியத்தகு காட்சி உண்டு .

பண் :

பாடல் எண் : 10

இலங்கைக் கிறைவ னிருபது தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி யவனைக் கருத்தழித்த
துலங்கன் மழுவினன் சோற்றுத் துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே.

பொழிப்புரை :

இராவணனுடைய இருபது தோள்களும் தலைகளும் நெரியுமாறும் அவன் மனம் கலங்குமாறும் கால்விரலை ஊன்றி அவன் மனமதர்ப்பை அழித்த , ஒளி வீசும் மழுவை ஏந்திய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமேல் விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

குறிப்புரை :

இலங்கைத் தலைவனாகிய இராவணனுடைய இருபது தோள்களும் பத்து முடிகளும் நெரியவும் , நெஞ்சம் கலங்கவும் திருக்காற்பெரு விரலால் ஊன்றி அழித்த மழுவினன் :- அவனது கருத்தழித்த மழுவினன் . துலங்கல் - ஒளிர்தல் . இலங்குமதியம் :- ` இலங்ங்கு வெண் பிறைசூ டீசனடியார்க்குக் கலங்ங்கு நெஞ்சமிலை காண் `. ( நன்னூல் சங்கர நமச்சிவாயப் புலவருரை . 92). தோளும் முடியும் நெரியக் கலங்க ஊன்றிக் கருத்தழித்த மழுவினனாகிய சோற்றுத்துறை யுறைவார் சடை மேல் இலங்கும் மதியம் அன்றோ அவ்வெம்பிரானுக்கு அழகியது ?
சிற்பி