திருவொற்றியூர்


பண் :

பாடல் எண் : 1

செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்றுசெருவெண் கொம்பொன்
றிற்றுக் கிடந்தது போலு மிளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்கு மாலொற்றி யூரனுக்கே.

பொழிப்புரை :

யானையைக் கொன்று அதன் தோலைப் போர்வைக்காகக் கொண்ட காலத்தில் போரிடுகின்ற அதனுடைய வெண்மையான தந்தம் ஒன்று ஒடிந்து கிடந்ததுபோல அமைகின்றது . அதனைச் சுற்றிப் பாம்பு கிடத்தல் தந்தத்துக்கிடுங் கிம்புரிப் பூண் போலாகிறது . திருநுதலில் உள்ள நெற்றிக்கண் அத்தந்தத்திலிருந்து தெறித்த முத்தினை யொப்பதாகின்றது திருவொற்றியூர்ப் பெருமானிடத்து .

குறிப்புரை :

திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானுக்குக் களிற்றைச் செற்று உரிகொள்கின்ற ஞான்று கொம்பு ஒன்று இற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை . அக்கொம்பினைச் சுற்றிக்கிடந்த கிம்புரி போலும் , அப்பிறையைச் சுற்றிக் கிடக்கும் பாம்பு . அக்கொம்பின் உளதாய் வெளிப்படும் முத்துப்போலும் சுடர் இமைக்கும் நெற்றிக்கண் . செற்று - அழித்து . களிறு - ஆண்யானை . உரி - தோல் . ஞான்று - நாளன்று என்பதன் மரூஉ . செரு - போர் . யானைப்போர்க்கு அதன் கொம்பே படையாதலின் , செருவெண் கொம்பு ஆம் . வெண்கொம்பு :- இயைபின்மை மாத்திரை நீக்கிய அடை . இற்று - இறுதலையுற்று . இறுதல் - ஒடிதல் . அதனை - அப்பிறையை . கிம்புரி - யானைக் கொம்பிற்கிடும் பூண் . ` வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள் கிம்புரிவயங்க ` ( கந்தபுராணக் காப்பு ). ` குழூஉக் களிற்றுக் குறும்புடைத்தலிற் பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே ` ( புறம் . 97) ` பொற்கோட்டியானையர் ` ( புறம் . 377), ` திரண்ட களிற்றையுடைய அரணை யழித்தலால் பரிய பிணித்தலையுடையவாகிய கிம்புரிகள் கழன்றன ` ( புறம் . 97. உரை . ` இரும்பு செய்தொடி ` ( அகம் . 26) எனலுமுண்டு . ஒற்றியூரன் திரு முடிமேற் பிறையானது களிற்று வெண்கொம்புக்கும் அப்பிறையைச் சுற்றிக் கிடக்கும் பாம்பானது அக்கொம்பைச் சுற்றிக்கிடக்கும் கிம்புரிக்கும் , அவரது சுடரிமைக்கும் நெற்றிக் கண்ணானது அக் கொம்பின்கண் உண்டாம் முத்துக்கும் உவமேயம் . சுடர் - தீ .

பண் :

பாடல் எண் : 2

சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற்றொண் டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி யலைகொண்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

கடலின் வளமான அலைகள் சங்குகளிலுள்ள முத்துக்களைக் கொண்டு மணம் வீசும் கரைகளிலே ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே ! நீ கேட்பதற்குத் திருச்செவி சார்த்துவாயாகில் அடியேன் கூற நினைக்கும் செய்தி ஒன்று உளது . அஃதாவது உனக்கு அடிமைகளாய் வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டே வாளா இருக்கும் நீ இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய் ?

குறிப்புரை :

அலையைக் கொண்ட கடலில் உள்ள வளத்தினையும் திரையினையும் உடைய சங்கங்களையும் முத்துக்களையும் கொண்டு நிலையின்மையையுடைய கரைக்கே விரைந்து கொணர்ந்து அலைகள் மோதுகின்ற திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் உத்தமரே . கேட்பீராகில் அடியேன் சொல்லக் கருதியது ஒன்றுண்டு ; தொண்டராய்த் தேவரீரைப் புகலடைந்தவர் அல்லற்படுகின்றனர் . அவர் அது படுதலைக் காண்கின்றீர் . இப்போது அதனைத் தீர்ப்பீரல்லீர் . பின்னர் என்ன கொடுத்தருள்வீர் ? நும் ஊரோ ஒற்றியூர் . நும் வாழ்வும் ஒற்றியூரில் . நும்மைத் தொண்டாயடைந்தார் படும் அல்லலை அகற்றாத நீர் பின் யாது கொடுப்பீர் ? வம்பு - நிலையின்மை . ` வம்பு நிலையின்மை மாதர் காதல் நம்பும் மேவும் நசையாகும்மே ` ( தொல் . சொல் . உரிச் . 18). ( தி .4 ப .86 பா .3.)

பண் :

பாடல் எண் : 3

பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை யிளந்திங்கள் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க மணிந்து குலாயசென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

பரந்து வருகின்ற அலைகளை உடைய கங்கை நீர் பாய்ந்து சிதறும்படிக்கான வன்மையதாயப் பலவாக உள்ள சடைத் தொகுதி மீது பாம்போடு பிறையையும் கொன்றை குரவம் கோங்கம் ஆகியவற்றின் நறுமலர்களையும் அணிந்து விளங்கும் திருமுடியினனாய்க் கடல் அலைகள் கடல்படு பொருள்களை மோதிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கின்ற திருஒற்றியூரில் வீற்றிருக்கும் உத்தமனே !

குறிப்புரை :

பரவை வருதிரைநீர்க் கங்கை - கடல் போலப் பெருக்கெடுத்து வருகின்ற அலைகளையுடைய கங்கை நீர் , பாய்ந்து -; உக்க - சிதறிய . உக்க சடை - கங்கை சிதறுதற்குத்தக்க வன்மைமிக்க சடை . பல்சடை :- ` பல் சடைப்பனிகால் கதிர்வெண்டிங்கள் `. ( சம்பந்தர் ), சடைமேல் அரவமும் கொன்றையும் திங்களும் குரவ மலரும் கோங்க மலரும் அணிந்து குலாய சென்னியையுடைய உத்தமன் . அரவம் - பாம்பு . அணிதரு கொன்றை - அழகைத் தருகின்ற கொன்றை மாலை . ` அணிந்து ` எனப் பின் வருதலின் , ஈண்டு வேறுபொருள் கொள்ளப்பட்டது . சூடியதொரு குரவமலர் ; நறுமலர் , மலர் என்பதைப் பிரித்துக் கோங்கத்தொடும் சேர்க்க . குலாய - குலவிய , சென்னி - தலையுச்சி . உரவு - கடல் . திரை - அலை , எற்று - மோதுகின்ற . தி .4 ப .86 பா .2 பார்க்க .

பண் :

பாடல் எண் : 4

தானகங் காடரங் காக வுடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி யூருறை வாரவர்தாம்
தானக மேவந்து போனகம் வேண்டி யுழிதர்வரே.

பொழிப்புரை :

உள்ளிடமெல்லாந் தேன்மணங் கமழுந் திருவொற்றியூரில் உறையும் பெருமான் தான் ஆடரங்காகக் கொள்வதும் காடு . தன்னை அடைந்தார் இடும் பலியை ஏற்பதும் உள்ளுரத் தசையின் முடை நாற்றம் வீசும் தலையோட்டில் . அவர் தானாகவே வீடு வீடாக வந்து உணவு வேண்டித் திரிபவரும் ஆவார் .

குறிப்புரை :

தேன் அகம் நாறும் திருவொற்றியூர் - பூத்தேன் மிக்குத் தன்னிட மெல்லாம் மணக்கும் வளமுடைய திருவொற்றியூரில் . உறைபவர் . தாமே வீடுதொறும் போந்து பிச்சையுண்டி வேண்டித் திரிவர் . ` தானே வந்தென்னைத்தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல் பாடிவந்தோர் `. ` இல்லங்கள் தோறும் எழுந்தருளி ` ` அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே ( தி .8 திருவா .). தான் அகமே வந்து என்பதில் உள்ள ஏகாரத்தைப் பிரித்துத் தானே அகம் வந்து என்றுரைக்க . உறைவார் தாம் தானே என்றதில் உள்ள பன்மை ஒருவரைக் குறித்த உயர்சொற்கிளவி . அரங்கு :- தான் அரங்காக உடையது காடகம் . தான் பலிகொள்வதும் தன்னை அடைந்தவரது ஊன் அகம் நாறும் உடைந்த தலையில் .

பண் :

பாடல் எண் : 5

வேலைக் கடனஞ்ச முண்டுவெள் ளேற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க் குறைவிட மாவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி யருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரையெப் போதுந் தொழுமின்களே.

பொழிப்புரை :

கடலிற் தோன்றிய நஞ்சை உண்டு இருண்ட கண்டத்துடன் வெள்ளை இடபத்தை ஊர்ந்தருளும் , அந்தி செவ்வானம் போன்ற சடையினரான சிவபெருமானுக்கு உறைவிடமாவது வருவாய் குறையாத ( ஆலைக் ) கரும்புகளோடு செந்நெல்லும் மிகும் வயல்களைச் சூழ்ந்து சோலைகள் விளங்கப்பெறுவதுமான திருவொற்றியூர் . அதனை எப்பொழுதுமே தொழுமின்கள் .

குறிப்புரை :

வேலைக் கடல் - கரையுடைய கடல் . வேலை - கடற்கரை . நஞ்சம் உண்டு வெள்விடையொடும் வீற்றிருந்தவர் . வெள்ளேறு - ` நரை வெள்ளேறு `. மாலைபோலும் செஞ்சடையார் . மாலை என்பது அப்பொழுது வானில் தோன்றும் நிறத்துக்கு ஆகுபெயர் . அது சிவபிரானது செஞ்சடைக்குவமையாயிற்று . அவர்க்கு இடம் ஆவது திருவொற்றியூர் . அது சோலையுடையது . அதன் அருகே கழனிகள் அணைந்துள்ளன . செந்நெல் விளையுங் கழனி . கரும்பும் விளையும் . ஆலையிற் புகவிட்டுச் சாறுவடிக்கும் இனிய கரும்பு . வாரி - வருவாய் , குன்றா - குறையாத , கரும்பொடு செந்நெல்லுடைய கழனி . நெற் கழனி .- இரண்டனுருபும் பயனுந் தொக்க தொகைநிலைத் தொடர் .

பண் :

பாடல் எண் : 6

புற்றினில் வாழு மரவுக்குந் திங்கட்குங் கங்கையென்னும்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு கண்ணிக்குஞ் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை யான்றன் விரிசடையே.

பொழிப்புரை :

இடப வாகனத்தை உடையவனாய் , தன்னைப் பற்றிச் சான்றோர்கள் பேசும் பொருள்சேர் புகழுரை தாங்குபவனாய் , என்னைத் தன் விருப்பப்படி விற்பதற்கும் உரிமை உடைய அடியவனாகக் கொண்டவனாய் ஒற்றியூரை உறைவிடமாக உடைய சிவ பெருமானுடைய விரிந்த சடை , புற்றில் வாழும் பாம்புக்கும் , பிறைச் சந்திரனுக்கும் , கங்கை என்ற பெயரை உடைய , சிறிய இடுப்பை உடைய நங்கைக்கும் , ஒற்றைப் பூந்தொடையாகிய முடிமாலைக்கும் இருப்பிடமாகும் .

குறிப்புரை :

அரவுக்கும் திங்கட்கும் சிற்றிடையாட்கும் கண்ணிக்கும் சேர்விடம் விரிசடையே ஆம் என்க . புற்றினில் வாழும் அரவு :- ` புற்றில் வாளரவன் - புற்றின் கண்ணவாகிய ஒளியையுடைய பாம்பை யுடையவன் ` ` வேள்வித்தீயிற் பிறந்து திருமேனிக்கண் வாழ்தலாற் புற்றையுடைய வல்லாத அரவு என்றுரைப்பினும் அமையும் ` ( தி .8 திருக்கோவையாருரை . 97). ` புற்றில் வாளரவும் அஞ்சேன் ` ( தி .8 திருவாசகம் 516) திங்கள் - பிறை . கங்கையைச் சிற்றிடையாள் என்றது வடமொழி வழக்கு . ` நதி பதி என்று கடலையும் ` சமுத்திர பத்தினி ` என்று யாற்றையும் வடநூலார் வழங்குவர் . செறிதருகண்ணி - தலைமேற் செறிக்கும் ஒற்றைப்பூத்தொடை . ` திங்கட் கண்ணி ` ` பிறைக்கண்ணி ` என்பன நினைக . சேர்வு - சேர்தல் ; சார்வு , தீர்வு , வேர்வு முதலியன நோக்குக . பெற்று :- பெற்றம் ; எருது . ` பெற்றேறும் பெருமானார் ` ( தி .3 ப .64 பா .10) ` பெற்றொன்றுயர்த்த பெருமான் பெருமானும் அன்றே ` ( தி .3 ப .54 பா .11). பெரும்பேச்சு - மகாவாக்கியம் . ` பெரும் பொருட் கிளவியான் ` ( தி .4 ப .74 பா .3) என்பதன் குறிப்பினைக் காண்க . எனைப் பிரியாதுடையான் ; எனை ஆளுடையான் . எனைவிற்றுடையான் ; ஆளாக்கிக்கொண்டு விற்றற்கும் உரிமையுடையான் . இத்தகு பெரியன் ஒற்றியூருடையான் . அவனது விரிசடையே அரவு முதலிய நான்குஞ் சேர்விடம் ஆம் .

பண் :

பாடல் எண் : 7

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை யிமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்டநா
ளன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை யுத்தமனே.

பொழிப்புரை :

இவ்வுலகில் முழுக்கண் உடையவர்களே காணப்படுகின்றனரே யன்றி அரைக்கண் உடையவர் ஒருவரும் இரார் . ஆனால் , இமவான் என்று போற்றப்படும் மலைத் தலைவனுக்கு வளர்ப்பு மகளாகக் கிட்டிய நல்ல மேன்மையை உடைய பார்வதிக்கு உடம்பைச் செம்பாதியாகப் பங்கிட்டுக் கொடுத்த காலத்திலே தன் முக் கண்களில் செம்பாதியான ஒன்றரைக் கண்கள் அவளுக்காயினதால் மீதியுள்ள ஒன்றரைக் கண்ணனாகவேயுள்ளார் திருவொற்றியூரில் உறையும் உத்தமனாம் எம்பெருமான் .

குறிப்புரை :

அரைக்கண் உடையார் எங்கும் இன்று இல்லை . கூறிட்ட அன்று ஒன்றரைக்கண்ணன் ஒற்றியூர் உறை உத்தமன் ; கண்டீர் ! இமயம் என்னும் குன்றர் ஐக்கு அண் நல்குலமகள் பாவைக்கு - பனிமலை ( இமாசலம் ) எனச் சிறப்பித்து வழங்கப்படும் குன்றருடைய தலைவனுக்குத் தோன்றாமல் வந்து கிடைத்த நல்ல மேன்மையுடைய உமாதேவியார்க்கு . கூறு இட்ட நாள் - தன் திருமேனியைப் பகுத்து இட்ட நாள் . நாள் அன்று - நாளன்று ; இங்கு நாளன்று எனப் பிரிக்காம லிருப்பதே தக்கது ; ` நாளன்று ` என்றதே ` ஞான்று `. அரைக்கண்ணும் அளித்து , அவ்வுமையாளையும் செம்பாகத்தில் வைத்துக்கொண்ட ஒன்றரைக்கண்ணன் ஆனான் ஒற்றியூருறை உத்தமன் . ` கண்டீர் ` முன்னிலையசை எனல் மரபு . குன்றர் ஐ கண் எனப் பிரித்துக் கண் போலும் மகள் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 8

சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் துதைந்திலங்கு
பெற்றிகண் டான்மற்றி யாவருங் கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் கைவிட் டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம் வேதியனே.

பொழிப்புரை :

வேதத்தால் பரம் பொருள் என்று போற்றப்படும் ஒற்றியூர்ப் பெருமானே ! வண்டுகள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு யாழ் போல ஒலிக்கும் பூஞ்சோலைகளும் பெருமரச்சோலைகளும் செறிந்து விளங்கும் உன் ஒற்றியூரின் சிறப்பினை நோக்கினால் அதனை யாவரும் விலைகொடுத்து வாங்கிக் கொள்வர் . அது கருதி நீ ஒற்றியாகப் பெற்று அனுபவிக்கும் இவ்வொற்றியூரையும் பிறரிடம் விற்று அதனைக் கைவிட எண்ணுதியேல் அது ஏற்புடையதன்று . இதனை ஒத்த சிறப்பான இருப்பிடம் பிறிது யாதுமில்லை என்பதனைத் தெரிந்து கொள்வாயாக .

குறிப்புரை :

வண்டு சுற்றி யாழ் செய்யும் சோலை . சோலையும் காவும் என்ற இவ்வாசிரியர்க்கு அவ்விரண்டும் வெவ்வேறாதல் புலப்படும் . பிற நூல்களும் இரண்டும் ஒரு பொருளவா யாளப் பட்டுள்ளன . ` இளமரக்கா ` என்பது காவினியல் புணர்த்தும் . வயல் சூழ்ந்த இளமரங் களையுடையதே இளமரக்கா எனப்படும் . ( பிங்கலந்தை . 2845) ஊரொடு சேர்ந்த மரங்களின் கூட்டத்தைக் காடு ( ? . 2841) என்பர் . மலையொடு சேர்ந்ததைச் சோலை ( ஆராமம் ) என்பர் . ( ? 2842) கழிக்கரையிலுள்ளதைக் கானல் ( ? 2843) என்பர் . செய்குன்று சேரத் தொகுத்தவற்றைத் தோப்பு ( தொகுப்பு என்றதன் மரூஉ ) என்பர் . ( ? 2844) குறுங்காடு ` இறும்பு ` பெருங்காடு ` வல்லை ` ? ` கடிமரந் துளங்கிய கா ` ( புறம் 23). ` காடு கால்யாத்த நீடுமரச்சோலை ` ( அகம் 109) என்பவற்றால் வேறுபாடு ஒரு சிறிது புலப்படும் . மலையி லுள்ளதைச் சோலை என்றும் , மலர்க்காவைச் சோலை எனலாகா தென்றும் , பொழில் முதலியன வெவ்வேறென்றும் பண்டைய நூல்களால் அறியலாகும் . துதைந்து - நெருங்கி . இலங்கு பெற்றி (- விளங்கும் தன்மை ) யைக் கண்டால் யாவரும் கொள்வர் . வேதியனே , நீ பிறரிடை ஒற்றிக்கொண்டாய் , ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி விற்றிகண்டாய் . இது ஒப்பது இடம் மற்று இல் . ஒப்பற்ற இடத்தைப் பிறரிடத்திலிருந்து நீ ஒற்றிக்கொண்டு விற்றி என்றது .

பண் :

பாடல் எண் : 9

சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன செய்தி யுலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன செய்யுமித் தீவினையே.

பொழிப்புரை :

என் தீவினையே ! திருவொற்றியூர்ப் பெருமான் என்றும் பிரியாது என் உள்ளத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டுள்ளான் . அவ்வாறாக , நீ என்னை , அடியொற்றித் திரிந்து கொண்டிருப்பதால் நீ சாதிக்கப் போவதென்ன ? நான் செல்லிடமெல்லாம் அடியொற்றித் திரிந்து தனக்கு வேட்டை வாய்க்காமையால் ஆத்திரமுற்று பல்லையும் நாவையும் மென்று கொண்டு சோக மிகுதியாற் கண் குழிந்து கால் தெற்றித் தானே சோர்ந்திருப்பதைவிட இத்தீவினையால் எனக்கெதிர் எதுவும் நேர்தற்கிடமின்றாம் .

குறிப்புரை :

ஒற்றியூரன் சுற்றிக்கிடந்து என்சிந்தை பிரிவு அறியான் ; நீ உலகம் எல்லாம் ஒற்றித் திரிதந்து என்ன செய்தி ? உலகமெல்லாம் பற்றித்திரிந்து பல்லோடு நாமென்று கண் குழித்துத் தெற்றித்திருப்பது அல்லால் இத் தீவினை என்ன செய்யும் ? என் சிந்தையைப் பிரியாமல் ஒற்றியூரன் ( அச்சிந்தையைச் ) சுற்றிக் கிடக்கின்றான் . அதனால் இத் தீவினை என்னை யாதுஞ் செய்யவல்லதன்று என்றதாம் , இத் தீவினை உலகமெல்லாம் பற்றித்திரிதலும் , பல்லையும் நாவையும் மெல்லுதலும் , கண்ணைக் குழித்தலும் , தெற்றித்திருத்தலும் , அல்லாமல் வேறு என்ன செய்ய வல்லது ? தெற்றுதல் - மாறுபடல் ; பிணங்குதல் ; பின்னுதல் ; தடுத்தல் . திரிதல் உழிதரல் புகுதரல் என்பன முதலிய வற்றில் , தரல் துணைவினையாய் வந்தது என்பர் . ஒற்றி - ஒன்றாகி , ஒன்றுபட்டு . இனி வினை ஒற்றி இடர்ப்படுத்த வழியில்லை ; ஒற்றியூரன் ஒற்றிக்காப்பதால் .

பண் :

பாடல் எண் : 10

அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவ முறுவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை யரவுக்குப் புற்றுக் கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி யூரர் திருமுடியே.

பொழிப்புரை :

திருவொற்றியூர்ப் பெருமான் திருமுடியானது அழகிய தேனை உடைய கொன்றை மலருக்கு , முல்லை நிலக்காடு ஆகவும் ( உத்தமமான ஆடவர் உடலில் இயல்பாகவே முல்லைப் பூவின் மணம் கமழும் . குறுந்தொகை - 193) சிரிக்கும் தலைமாலையா யிருந்து சிரிக்குங் கபாலங்களுக்குச் சுடுகாடாகவும் , பருத்த இரத்தினக் கற்களை அலைத்து வரும் கங்கைக்கு அது சென்று சேரும் கடலாகவும் , பாம்புக்கு அதன் உறைவிடமான புற்றாகவும் , பிறைக்கு அஃது உலவும் வானமாகவும் உள்ளதாகும் .

குறிப்புரை :

திருவொற்றியூரர் திருமுடி ஒன்றே , கொன்றைக்கு முல்லைக் கொல்லையாயும் , ` பல்லாடு தலை ` க்குச் சுடுகாடாயும் கங்கையாற்றுக்குக் கடலாயும் , பாம்புக்குப் புற்றாயும் , பிறைக்கு விண்ணாயும் நின்று வெவ்வேறு ( பல ) இடமாயிற்று . அம் - அழகு . கள் - தேன் . கடுக்கை - கொன்றை . புறவம் - முல்லை நிலம் . முல்லைப் புறவம் - முல்லை மலரும் நிலம் . முறுவல் - சிரிப்பு . பை கண் - பசிய கண்கள் . ` தலை ` ஈண்டுத் தலைக்கணிந்த தலைமாலையைக் குறித்தது . பல்லாடு தலை சடைமேல் உடையான் ( தி .6 ப .92 பா . 2 - 10), சுடலை - சுடலுடையது ; சுடுகாடு . களரி - காடு . களர் நிலம் பற்றிய காரணப்பெயர் . பருமணி - பரிய மணி ( முத்து , பவளம் முதலியன ), வேலை - கடல் . கலை நிரம்பாத் திங்கள் - பிறை . வானம் - வெளி .

பண் :

பாடல் எண் : 11

தருக்கின வாளரக் கன்முடி பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப் பிறப்பறுத் தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கினவா றென்செய்கே னொற்றி யூருறை பண்டங்கனே.

பொழிப்புரை :

ஒற்றியூரிலே உறைகின்ற பண்டரங்கக் கூத்தனான பெருமான் செருக்குக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலால் நெரித்தொடுக்கினது போலவே அடியேனுடைய பிறப்பையும் போக்கி அடியேனை அடிமையாகக் கொள்ளவல்லவன் . நெருங்கி நின்ற தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அவனையே பருகுமாறு செய்த வினை இருந்தவாறென் ? ஆ ! என் செய்கேன் நான் !

குறிப்புரை :

திருவொற்றியூருறையும் பாண்டரங்கம் என்னும் திருக்கூத்துடையான் அடியேனைப் பிறப்பறுத்து ஆளவல்லான் . வானவரும் தானவரும் கூடிப் பாற்கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினைப் பருகச் செய்தவாறு என்செய்வேன் ? தருக்கின அரக்கன் - செருக்கிய இராவணன் . பத்து முடியும் இற . இறல் - இறுதல் , ஒடிதல் . இற ஒருக்கினவாறு . ஒருக்குதல் - அழித்தல் ; பத்து முடியையும் ஒருமையுறச் செய்தல் . ஒருங்கல் :- தன்வினை :- ஒருக்கல் :- பிறவினை . ` பாதம் ` ஈண்டுத் திருக் காற்பெருவிரலின் நுனியைக் குறித்தது . அவ் விராவணன்முடி பத்தும் இற ஒருக்கியதும் பாதம் , அடியேன் பிறப்பறுத் தாள்வதும் பாதம் . நெருக்கின - நெருங்கப்பண்ணிய . நஞ்சைப் பருகினவன் பண்டங்கன் . பருக்கினவர் வானவரும் தான வரும் . பருகல் :- தன்வினை . பருக்கல் :- பிறவினை . தானவர் - அசுரர் . பாடல் - பாட்டல் என்பதுபோல் . ` பாட்டினாய் ` ( தி .4 ப .78 பா .3), ` பாட்டு வித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே `. ` காட்டி வைத்தார் தம்மை யாம் கடிப்பூப் பெய்யக் காதல் வெள்ளம் ஈட்டிவைத்தார் தொழும் ஏகம்பர் , ஏதும் இலாத எம்மைப் பூட்டிவைத்தார் தமக்கு , அன்பது பெற்றுப் பதிற்றுப் பத்து பாட்டிவைத்தார் பரவித்தொழுதாம் அவர் பாதங்களே ` ( திரு வேகம்ப முடையார் திருவந்தாதி 99) என்புழிப் பாட்டுதல் பாட்டு வித்தல் இரண்டும் உள்ளமை உணர்க . ` பாண்டரங்கம் பண்ட ரங்கம் எனநின்றது ` கலித்தொகை - கடவுள் வாழ்த்து . நச்சினார்க்கினியர் உரை . அது பண்டங்கம் என மருவிற்று . ` திங்கள் தங்கும் முடிப் பண்டங்கனே ` ` பண்டங்கன் வந்து பலிதா என்றான் ` ( பொன் வண்ணத் தந்தாதி . 32 - 33) ` பலிதிரிந்துழல் பண்டங்கன் ` ( தி .2 ப .6 பா .12) ` நெடியானொடு நான்முகனும் நினைவொண்ணாப்படியாகிய பண்டங்கன் ` ( தி .2 ப .35 பா .9) ` பாம்பரைச் சாத்தியோர் பண்டங்கன் ` ( தி .2 ப .44 பா .3) ` தோணி புரத்துறையும் பண்டரங்கர் ` ( தி .1 ப .60 பா .1) ` பாசத்தைப் பற்றறுக்கலாகும் நெஞ்சே பரஞ்சோதி பண்டரங்கா பாவநாசா ` ( தி .6 ப .31 பா .9) ` பற்றார்புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதிபண்டரங்கா என்றேன் நானே ` ( தி .6 ப .37 பா .6).
சிற்பி