திருப்பூந்துருத்தி


பண் :

பாடல் எண் : 1

மாலினை மாலுற நின்றான் மலைமக டன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேல்
போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திம்மகிழும்
ஆலனை யாதிபு ராணனை நாமடி போற்றுவதே.

பொழிப்புரை :

திருமாலுக்கு அடியைக் காணமுடியாத மயக்கம் ஏற்படும்படி தீத்தம்பமாக நின்றவனாய் , பார்வதி பாகனாய் , வெள்ளிய பிறை சூடியாய் , பிறருக்குத் தீங்கு செய்தல் கூடாது என்ற பண்பினை உணராத திரிபுர அசுரர்களின் மதில்களை வெற்றி கொண்டு அழித்தவனாய் , போரிடும் காளையை ஊர்பவனாய்ப் பூந்துருத்தியுள் உறைபவனாய் , கல்லாலமரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தொன் மூதாளனுடைய திருவடிகளை நாம் வணங்குகிறோம் .

குறிப்புரை :

மாலினை - மயக்கத்தை . மால் உற - திருமால் அடைய . நின்றான் - தாருக வனத்து முனிவர் செருக்கடக்கற் பொருட்டுக் கொண்ட பிட்சாடனருருவத்தோடு நின்றவன் . மலைமகளுடைய இடப் பாலன் . பால் மதி சூடி - வெண்பிறை சூடியவன் . பண்பு - சிவ பரத்துவம் . உணரார் - அறியாத திரிபுரத்தசுரர் . மதில்மேல் போலன் - ` மூவெயின் மிசைப் புகலன் ,` ( தி .4 ப .88 பா .5.) ` புகலன் ` என்பது போலன் என்றாயிற்று மொழி முதற் குறிலிணை ஒரு நெடிலாகுஞ் சொற்கள் பல உள . அவ்வுண்மை , துகள் - தூள் ; நிகளம் - நீளம் ; அகழம் - ஆழம் ; பொழுது - போழ்து - போது ; விழுதல் - வீழ்தல் - வீதல் ; விழைதல் - வீழ்தல் ; மிகல் - மேல் ; புகுந்தான் - போந்தான் ; பொருவிடை - போர்விடை என்பன முதலியவற்றால் அறியப்படும் . ஏறி :- பெயர் . ஆலன் - கல்லாலின் புடையமர்ந்தவன் . ` ஆலதன் கீழன் ` ( தி .4 ப .88 பா .3). ஆதி புராணன் - தொன்மூதாளன் . நாம் அடி போற்றுவது பூந்துருத்தியாதிபுராணனை என்க .

பண் :

பாடல் எண் : 2

மறியுடை யான்மழு வாளினன் மாமலை மங்கையொர்பால்
குறியுடை யான்குண மொன்றறிந் தாரில்லை கூறிலவன்
பொறியுடை வாளர வத்தவன் பூந்துருத் திய்யுறையும்
அறிவுடை யாதிபு ராணனை நாமடி போற்றுவதே.

பொழிப்புரை :

மான் கன்று , மழுப்படை எனும் இவற்றை ஏந்திப் பார்வதி பாகனாய் , தன் பண்புகளைப் பிறர் உள்ளவாறு அறிய இயலாதவனாய்ப் புள்ளிகளை உடைய ஒளிபொருந்திய பாம்பினை அணிபவன் என்று எல்லோராலும் கூறப்படுபவனாய்ப் பூந்துருத்தியுள் உகந்தருளியிருக்கும் ஞானவடிவினனாகிய தொன் மூதாளனை நாம் திருவடிக்கண் பணிந்து வணங்குகிறோம் .

குறிப்புரை :

மறி - மான்கன்று . மழு வாளினன் - மழு வாளை யேந்தியவன் . மாமலை மங்கை - இமாசல குமாரி . குறி :- அடையாளம் . ஓர் பால் மங்கைக் குறியுடையான் . சிவ பிரான் குணம் ஒன்றும் அறிந்தாரில்லை . கூறில் - சொல்லின் . அவன் - அச்சிவபிரான் . பொறி - படப் பொறி . வாள் அரவம் - கொலைப் பாம்பு . அரவத்தவன் - பாம்பணிந்தவன் . ` சர்ப்பாபரணன் `, உறையும் - திருக்கோயில் கொண்டெழுந்தருளும் . அறிவு - சிவஞானம் .

பண் :

பாடல் எண் : 3

மறுத்தவர் மும்மதின் மாயவொர் வெஞ்சிலை கோத்தொரம்பால்
அறுத்தனை யாலதன் கீழனை யால்விட முண்டதனைப்
பொறுத்தனைப் பூதப் படையனைப் பூந்துருத் திய்யுறையும்
நிறத்தனை நீல மிடற்றனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

தெய்வ நம்பிக்கை கொள்ள மறுத்த அசுரர்களின் மும்மதில்களும் அழியுமாறு ஒருகொடிய சிலையில் ஓர்அம்பினைக் கோத்து அழித்தவனாய் , கல்லால மரத்தடியில் அமர்ந்தவனாய் , ஆல காலவிடத்தை உண்டு , அதனைக் கழுத்தில் தங்க வைத்தவனாய் , பூதப்படை உடையவனாய் , பூந்துருத்தியில் உகந்தருளியிருக்கும் செந்நிறத்து நீலகண்டனாகிய பெருமானை அடியேன் திருவடிக்கண் பணிந்து வணங்குகின்றேன் .

குறிப்புரை :

மறுத்தவர் - பகைவர் . மும்மதில் - மூவெயில் ( திரிபுரம் ). மாய - அழிய . சிலை - வில் . ( தி .4 ப .88 பா .5). ஆலதன் கீழன் :- ` ஆலன் ` ( தி .4 ப .88 பா .1). ஆல்விடம் - ஆல காலம் என்னும் நஞ்சு ; உண்டு அதனைத் திருநீலகண்டம் எனப் பல்லுயிரும் போற்றி வாழ அத் திருக்கழுத்திற் பொறுத்தலுடையவனை . பொறுத்து ( பொறு + த் + து ) :- துவ்வீறு பெற்ற தொழிற் பெயர் . ` தவளைப் பாய்த்து , என்பது போல்வது . பொறுத்து + அன் = பொறுத்தன் . ஆடலன் என்பது போல்வது பொறுத்தலன் என்பது . பொறுத்தலன் , பொறுத்தன் இரண்டும் தொழிற் பெயர்க்குரிய ஈற்றால் வேறுபட்டன . ` படைத்தன் ` ` துரந்தன் ` ( தி .4 ப .88 பா .4). நிறம் - நினைவு , பண்பு - ஒளி .

பண் :

பாடல் எண் : 4

உருவினை யூழி முதல்வனை யோதி நிறைந்து நின்ற
திருவினைத் தேசம் படைத்தனைச் சென்றடைந் தேனுடைய
பொருவினை யெல்லாந் துரந்தனைப் பூந்துருத் திய்யுறையும்
கருவினைக் கண்மூன் றுடையனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

ஞானவடிவினனாய் , எல்லா ஊழிகளையும் படைத்த முதல்வனாய் , வேதங்களை ஓதி எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் செல்வனாய் , உலகங்களை எல்லாம் படைத்தவனாய் , தன்னைப் பற்றுக்கோடாய் வந்து அடைந்த அடியேனை மோதுகின்ற வினைகளை எல்லாம் விரட்டியவனாய் , பூந்துருத்தி நகரில் உறையும் உலக காரணனாய் , முக்கண்ணனாய் உள்ள பெருமானை அடியேன் அடிக்கண் பணிந்து வழிபடுகிறேன் .

குறிப்புரை :

உருவினை - ஞான சொரூபத்தை ; தடத்த ரூபத்தை . ஊழி முதல்வன் - ` ஊழி முதற் சிந்தாத நன்மணி ` ( தி .8 திருவா .). ஓதி - மறை முதலியவற்றை ஓதி . ஓதல் ஓதுவித்தல் . கற்றல் கற்பித்தல் , என்பவற்றின் வேறுபாடுணர்ந்துரைக்க . ஓதல் ஓதுவித்தல் இரண்டும் வைகரி வாக்கால் நிகழ்த்துவன . ஓதி நிறைந்து நின்ற திரு - பூரண ஞானம் . ` கல்லாதன எல்லாம் கற்பித்தான் ` ( தி .6 ப .43 பா .1). சென்று அடைந்தேன் - இப் பிரபஞ்ச வாழ்க்கை யல்லகண்ட மெல்லாம் கடந்து சென்று , சிவபெருமான் திருவடியே தஞ்சம் என்று அடைந்தேன் . அடைந்தேனுடைய வினையெல்லாம் துரந்தன் - அடைந்த அடியேனுடைய எல்லா வினைகளையுந் துரத்தியவன் . துர + த் + து = துரத்து . அது மெலிந்து நின்ற தெனலுமாம் . துரப்பு - நீக்கம் . பொருவினை - தாக்கும் வினைகள் . ` போத மேலாகப் பண்டே புல்லிய மல நோய் தீர்ந்தும் வாதனை தாக்கும் ` ( காஞ்சிப்புராணம் ). கரு :- மூலப்பொருள் . ` கருவனே கருவாய்த் தெளிவார்க்கெலாம் ஒருவனே ` ` கருவனைக் கடல் நாகைக் காரோணனை ` ( திருக்குறுந்தொகை ); ` கருவை என்றன் மனத்திருந்த கருத்தை ` ( திருத்தாண்டகம் ). கண் மூன்றுடையன் - முக்கண்ணுடையவன் .

பண் :

பாடல் எண் : 5

தக்கன்றன் வேள்வி தகர்த்தவன் சார மதுவன்றுகோள்
மிக்கன மும்மதில் வீயவொர் வெஞ்சிலை கோத்தொரம்பால்
புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர் பூந்துருத் திய்யுறையும்
நக்கனை நங்கள்பி ரான்றனை நானடி போற்றுவதே.

பொழிப்புரை :

தக்கனுடைய வேள்வியை எம் பெருமான் அழித்தான் என்பது அவன் பேராற்றலைக் காட்டுவதற்கு உரிய செயல் ஆகாது . பிறரைத் துன்புறுத்துதலில் மேம்பட்ட அசுரர்களின் மும் மதில்களும் அழியுமாறு கொடிய வில்லில் அம்பினைக் கோத்துச் செயற்பட்ட , பூந்துருத்தியுள் உறையும் பொன்னார் மேனியனும் திகம்பரனுமாய எங்கள் பெருமானை அடியேன் அடி போற்றுகிறேன் .

குறிப்புரை :

வேள்வி - யாகம் . தகர்த்தவன் - அழித்தவன் . சாரம் அது அன்று . கோள் - வலிமை . வீய - அழிய .( தி .4 ப .88 பா .3) அம்பால் மும்மதில் வீய ( அதன்மேல் ) புக்கனன் . பண்புணரார் மதில்மேல் போலன் என்புழிப் புகலன் என்று உரைத்தது வாய்மைப் பொருளாதலை ஈண்டும் உணர்க . ` புகலன் ` ` புக்கனன் ` இரண்டும் ` புகு ` என்னும் முதனிலையிற்றோன்றியனவே யாகும் . பொன் திகழ்ந்தாற் போன்றதொரு பூ . பூந்துருத்திக்கும் அவ்வடை உரித்தாகலாம் . நக்கன் - ( நகு + அன் ) விளக்கமுடையவன் . நக்நன் என்னும் வடசொல் திரிபுமாம் .

பண் :

பாடல் எண் : 6

அருகடை மாலையுந் தானுடை யானழ காலமைந்த
உருவுடை மங்கையுந் தன்னொரு பாலுல காயுநின்றான்
பொருபடை வேலினன் வில்லினன் பூந்துருத் திய்யுறையும்
திருவுடைத் தேச மதியனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

அருகில் இடையிடையே பச்சிலைகளை வைத்துத் தொடுத்த மாலையை உடையவனாய் , அழகார்ந்த நாயகியாம் பார்வதி ஒருபாகம் பொருந்தப் பெற்றவனாய் , கலப்பினால் உலகெலாமாகி நிற்பவனாய் , போரிடும் படைக்கலன்களாகிய வில்லினையும் வேலினையும் உடையவனாய் , பூந்துருத்தியுள் உறையும் செல்வத்தை உடைய ஒளி வீசும் பிறைசூடியை அடியேன் அவனடிக்கண் பணிந்து வணங்குகிறேன் .

குறிப்புரை :

அருகு - அணிய இடம் . அடைமாலை - இடை யிடையே இலைவைத்துக் கட்டிய மாலை . இண்டையுமாம் . ` அழகால் அமைந்த உருவுடை மங்கை ` தலத்து அம்பிகையின் திருப்பெயர்க் குறிப்பு . ` அழகார்ந்த நாயகி `. ஒருபால் மங்கையாயும் மற்றொருபால் உலகாயும் நின்றான் . மங்கையாய் நிற்றல் சொரூபம் . உலகாய் நிற்றல் தடத்தம் . பொருபடை வேல் - சூலம் . பொருதல் - தாக்குதல் . வில் - பிநாகம் . திரு - அழகு . தேசமதி - ஒளியுடைய பிறை . தேசு - ஒளி . மதியன் - பிறைசூடி .

பண் :

பாடல் எண் : 7

மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்
பொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத் திய்யுறையும்
அன்றியும் செய்தபி ரான்றனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

தன்னால் ஒறுக்கப்பட்டும் மீண்டும் எதிர்த்துநின்ற முப்புர அசுரர்கள் அழியுமாறும் அவர்கள் இனமே ஒழியுமாறும் வெகுண்டு கொடிய வில்லை வளைத்துத் தீயைக்கக்கும் அக்கினியாகிய அம்பினால் அவர்கள் மதிலோடு அழிந்துபோகுமாறு செயற்பட்டுப் பூந்துருத்தியுள் உறைகின்ற , அழித்தற்றொழிலுக்கு மறுதலையாகிய ஆக்கச் செயல்களையும் செய்யும் பெருமானை அடியேன் அடிக்கண் பணிந்து வழிபடுகிறேன் .

குறிப்புரை :

நின்ற மதிலரை :- திரிபுரத்தசுரரை . மாயமன்றியும் - மாய்ந்தொழிய ஒறுத்தும் . மன்றுதல் - ஒறுத்தல் . ` அடிகெட மன்ற விடல் ` ( பழமொழி நானூறு . 288) ` முட்டில் ஐங்கழஞ்சு பொன் மன்ற வொட்டிக் கொடுத்தோம் `. மன்றிலிருந்து ஒறுத்தலும் தண்டம் விதித்தலும் செய்தலால் . அவற்றை ` மன்றல் ` என்றனர் . இது தூய தமிழ்ச்சொல் . அபராதம் என்போர் மன்றுதல் எனத் தமிழிற் சொல்லித் தம் மொழியையும் மறவாது பேணுவாராக . மாயவகை கெடுக்கக் கன்றியும் எனலும் ஆம் . மாயவகை - மாயங்களின் திறத்தை . கெடுக்க - தொலைக்க . கன்றியும் - சினந்தும் . கனல் அம்பு - தீக் கணை . பொன்றியும் - அழிந்தும் . அன்றியும் - அன்மையையும் ; நன்மை நன்றி ; அன்மை அன்றி . நன்மையும் நன்மை யன்மையும் . ` எல்லாமாய் அல்லதுமாய் இருந்தது ` ` ஒருவனே எல்லாம் ஆகி அல்லனாய் உடனும் ஆவான் `.

பண் :

பாடல் எண் : 8

மின்னிறம் மிக்க விடையுமை நங்கையொர் பான்மகிழ்ந்தான்
என்னிற மென்றம ரர்பெரியா ரின்னந் தாமறியார்
பொன்னிற மிக்க சடையவன் பூந்துருத் திய்யுறையும்
என்னிற வெந்தைபி ரான்றனை யானடி போற்றுவதே.

பொழிப்புரை :

மின்னல் போல ஒளி வீசும் இடையினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாக விரும்பிக் கொண்டவனாய் , தேவருள் மிக்கவரும் அவனுடைய உண்மையான நிறம் யாது என்று இன்றுவரை அறிய இயலாதவனாய்ப் பொன்போன்ற சடையை உடையவனாய்ப் பூந்துருத்தியில் உறைகின்ற சூரியன் போல ஒளிவீசும் எந்தை பெருமானை அடியேன் அடிபோற்றுகின்றேன் .

குறிப்புரை :

மின் நிறம் மிக்க இடை :- ` மின்னிடை ` உமை நங்கை . ஓர் பால் மகிழ்ந்தான் . அமரர் பெரியார் - அமரரும் பெரியாரும் . என் நிறம் - யாது நிறம் ?. என்று இன்னம் தாம் அறியார் . ` அப்படியும் அந் நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக்காணின் அல்லால் . இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே `, ( தி .6 ப .97 பா .10). பொன்னிறம் மிக்க சடை . பொன்னொத்த மேனியனாதலின் பொன்னிறமிக்க சடையன் எனலுமாம் . எல் நிற எந்தை - கதிரோன் ஒளியுடைய என் அப்பன் . ` பொன்னிறம் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் - செந்நிறத்தள் எந்நிறத்தளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்தளாயிருப்பன் ஆங்கு ` ( திருக்களிற்றுப் படியார் . 7) ` யானாகி நின்றான் ` ( தி .8 திருவாசகம் ) என்ற கருத்துமாம் .

பண் :

பாடல் எண் : 9

அந்தியை நல்ல மதியினை யார்க்கு மறிவரிய
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினைச் சென்றடைந் தேனுடைய
புந்தியைப் புக்க வறிவினைப் பூந்துருத் திய்யுறையும்
நந்தியை நங்கள்பி ரான்றனை நானடி போற்றுவதே.

பொழிப்புரை :

மூன்று அந்திநேரத்திலும் வழிபடுதற்கு உரியவனாய் , எல்லோருக்கும் நல்லபுத்தியை வழங்குபவனாய் , ஒருவராலும் அறிய முடியாதபடி தீயில் சுட்டுத் தூயதாக்கப்பட்ட செம்பொன் நிறத்தினனாய் , தன்னைத் தலைவனாகப் பற்றிய அடியேனுடைய உள்ளமாயும் உள்ளொளிரும் ஞானமாயும் இருப்பவனாய் , பூந்துருத்தியில் உறைகின்ற நந்தி என்ற பெயருக்குரிய நம் தலைவனை அடியேன் அடிக்கண் பணிந்து போற்றுகின்றேன் .

குறிப்புரை :

அந்தியை : ` சந்தியானைச் சமாதி செய்வார் தங்கள் புந்தியானைப் புத்தேளிர் தொழப்படும் அந்தியானை ஆமாத்தூர் அழகனைச் சிந்தியாதவர் தீவினையாளரே `. நல்லமதியினை - அந்தியில் விளங்கும் அழகிய பிறையை ; மதியை ஆர்க்கும் அறிவு அரிய பொன் . செந்தீயை வாட்டுஞ் செம்பொன் . தீ - தி . குறுக்கல் . சென்று அடைந்தேனுடைய புந்தி அப்புந்தியிற் புகுந்த அறிவை . நந்தி - சிவபிரான் . ` நந்தி நாமம் நமச்சிவாயவே `.

பண் :

பாடல் எண் : 10

பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே
வைக்கையும் வானிழி கங்கையு மங்கை நடுக்குறவே
மொய்க்கை யரக்கனை யூன்றினன் பூந்துருத் திய்யுறையும்
மிக்கநல் வேத விகிர்தனை நானடி போற்றுவதே.

பொழிப்புரை :

படம் எடுத்தலும் பதுங்கிப் பார்த்தலும் உடைய பாம்பினை , வானத்திலிருந்து இறங்கி வந்த கங்கையோடு சடையிலே வைத்து , கயிலைமலை அசைந்ததால் பார்வதி நடுங்க , அங்ஙனம் அசைத்த வலிய புயங்களை உடைய அரக்கனைத் திருவடி விரல் ஒன்றினால் அழுத்தி நெரித்துப் பூந்துருத்தியில் உகந்தருளி இருக்கும் மேம்பட்ட சிறந்த வேதங்களால் போற்றப்படுவோனும் , உலகியலில் இருந்து வேறுபட்ட இயல்பினனுமான பெருமானை , அடியேன் அடிக்கண் பணிந்து வணங்குகின்றேன் .

குறிப்புரை :

பைக்கை - (பைத்தல்) படத்தை விரித்தல். `பைத்த பாம்பின் துத்தியேய்ப்ப` ( பொருநராற்றுப்படை. 69) பைக் கையும் - படத்தை விரித்தலும். பாந்தி விழித்தலும், பாந்தி - பதுங்கி. ஆந்தை பாந்தியிருப்ப` ( கலிங்கத்துப் பரணி. 127). சடையிடையே பாம்பு பைக்கையும் பாந்தி விழிக்கையும், அச்சடையிடையே வான் இழி கங்கையை வைக்கையும் என்க. அக்கங்கையும் (இடப் பாலுள்ள) மங்கையும் நடுக்கம் அடைய அரக்கனை ஊன்றினன். மொய்க்கை அரக்கன் - மொய் - கூட்டம்; (வலி). இருபது கைகளின் கூட்டம். மிக்க நன்மை. நல்வேதம். விகிர்தன் - வேறுபாடுடையவன். பாந்தள் என்றதன் காரணமும் இங்குப் புலப்படும்.
சிற்பி