திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி
அறிவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
செறிவித்தவாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைய குற்றமாகிய வினைகள் இப்பிறப்பில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டி என்னைக்குறுகச் செய்தன . அங்ஙனம் வினைப்பயனாக வந்த நோய்கள் என்னால் பொறுக்கும் அளவினவாய் அல்லாதபடி மிகுவிக்கப்பட்டன . அந்நிலையில் யான் உற்ற நோயாகிய வினைப் பயனைப் போக்க ஐயாறன் திருவுள்ளம்பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டுகள் செய்யுமாறு அறிவித்துத் தன் பொன்போன்ற திருவடிக்கீழ் , பொருந்துமாறு தொண்டனாக செய்தச் செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றி வேறு யாதாக இருத்தல் கூடும் ?

குறிப்புரை :

இத்திருப்பதிகம் முழுதும் பொருள் விளங்காத தாயுளது . பாடப்பெற்ற காரணம் முதலியன தெரியாமையும் அதற்கொருகாரணம் ஆகும் . குறுவித்தவா என்பது முதலியவற்றைக் குறுவித்தவாறு என்பது முதலியனவாகக் கொள்க . விளியாதல் பொருந்துமேற்கொள்ளலாம் . அடியேனை , தொண்டனேனை , எனை என்று இரண்டனுருபு மும்முறை வருதலின் பொருத்தம் புலப்பட்டிலது . அடிமைக்கணே என்பது இவ்வாறு பிழைபட்டதோ ? நோய் வினையைக் காட்டிக் குற்றம் குறுவித்ததோ ? குற்றம் நோயைக் குறுவித்ததோ ? குறுவித்த நோய் என்று பின்னுள்ளது . அது வினை முதலா ? செயப்படுபொருளா ? குறுவித்தல் - குறுகச் செய்தல் ; குற்றச் செய்தல் ; குறுகுவித்தல் . உறுவித்தல் - மிகுவித்தல் . வினைகாட்டிக் குற்றம் நோயைக் குறுவித்தவாறு . குற்றத்தால் எய்தும் நோயை . குற்றங்கட்கிடமாக்கும் நோய் . குற்றமாம் நோய் . குற்றத்தால் எய்தும் நோயும் அந்நோய்க்கு ஏதுவான வினையும் குறுவித்த நோய் ; குற்ற நோய் . உறுவித்த நோய் ; உற்ற நோய் . ` அடிமைக்கள் ` என்றே கொண்டு , வலித்தல் ஆகிய திரிபு எய்தியதும் என்றலும் ஆகும் . உறுவித்த நோய் மிகச்செய்த நோய் . உற்ற நோய் - மிக்க நோய் . தீர்ப்பான் :- முற்றுவினையும் எச்ச வினையும் , வினையாலணையும் பெயருமாம் . நோய் ` சூலை ` ஆயின் , அறிவித்தல் ` கூற்றாயினவாறு விலக்ககிலீர் ` எனத் தொடங்கிப் பாட அறிவித்ததாகும் . தன்வினை பிறவினைகளைப் பற்றிய நுட்ப வேறுபாட்டைக் கேரளபாணினீயம் பக்கம் . 253 -4 பார்க்க . ஓட்டுதல் , ஓட்டுவித்தல் இரண்டும் ஓடுதல் என்னுந் தன் வினையை நோக்கப் பிறவினையே ஆகும் . ஆயினும் , ஆண்டவன் வினையை ஓட்டினான் என்புழி உடன் ஓடுவான் அவனோ ? ` ஓட்டுவித்தான் ` எனில் ஓட்டுவான் ஓடமாட்டான் . எனைக் குறுவித்தவா என்று விற்பூட்டாகக் கொள்ளலும் இதில் அமையும் . குற்ற நோயை வினை காட்டிக் குறுவித்தவா ! குறிவித்த நோயை உறுவித்தவா ! உற்ற நோய் வினையைத் தீர்ப்பான் உகந்தருளி அடியேனை ஐயாறன் அடிமைக்களே அறிவித்தவாறு . அடிமைக்கள் என்றதற்கு - அடிமையின்பம் எனலும் பொருந்தும் . அடுத்த பாடலிலும் , ` அடிமைக்களே ஆர்வித்தவாறு ` எனப் பொருந்துகின்றதுணர்க . முதல் இரண்டிலும் சூலை நோயும் , அடுத்த இரண்டில் நாயனார் கடலில் மிதந்ததுமாம் .

பண் :

பாடல் எண் : 2

கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங் கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைய குற்றமாகிய வினைகள் இம்மையில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டித் துயரை மிகுவித்தன . அங்ஙனம் வந்த நோய்கள் என்னைத் தவறான வழியில் செல்லச் செய்தன . அந்த நிலையில் அடியேன் உற்ற நோயைத் தீர்க்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டுகளில் பொருத்துவித்துத் தன் பொன்னடிக் கீழ்த் தொண்டனாகச் சேருமாறு ஐயாறன் செய்த செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றிப் பிறிதில்லை .

குறிப்புரை :

தன் பொன்னடிக் கீழ் எனைக்கூர்வித்தவா . குற்ற நோய் வினைகாட்டியும் கூர்வித்தவா . கூர்வித்த நோய் ஊர்வித்தவா . உற்றநோய் வினைதீர்ப்பான் ( தீர்ப்பவன் , தீர்க்க ) உகந்தருளி அடியேனை ஆர்வித்தவாறு ஐயாறன் அடிமைக்களே . தொண்டனேனைச் சேர்வித்தவா என்க . கூர்தல் , கூர்வித்தல் . ஊர்தல் , ஊர்வித்தல் . ஆர்தல் - ஆர்வித்தல் . சேர்தல் - சேர்வித்தல் . இவை முறையே தன் வினையும் பிறவினையுமாகும் . சூலை நோயையே யன்றிச் சமணர் செய்த நோயையும் குறித்ததாகக் கொள்ளலாம் . ஆர்வித்தல் : நுகர்வித்தல் ; ` மாசில் வீணை ` ` மாலை மதியம் ` ` வீசு தென்றல் ` ` வீங்கிளவேனில் ` ` மூசுவண்டு அறை பொய்கை ` ` ஈசன் எந்தையிணையடிநீழல் ` என ஆர்தலைச் செய்தல் . அடிமைக்களே கூர்வித்தன ; ஆர்வித்தன ; சேர்வித்தன எனலாம் .

பண் :

பாடல் எண் : 3

தாக்கின வாசல மேவினை காட்டியுந் தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைய வினை என்னைத் தண்டித்தற்கு உரிய சூலை நோயால் தாக்கியது . பின் சமணர்களின் வஞ்சனைச் செயல்களைக் காட்டி என் உயிரைப் போக்க முற்பட்டது . அந்நிலையில் ஐயாறன் என்னைக் கடலினின்றும் கரையேறச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத் தொண்டு செய்ய அடியேனை வழுக்களைந்து கொண்டு திருவடிக் கீழ்த் தொண்டனாகச் செய்த செயல் நிர்ஹேதுக கிருபையாலாகியதே .

குறிப்புரை :

அடிமைக்களே தன் பொன்னடிக்கீழ் எனைத் தாக்கினவா ; நீக்கினவா ; ஆக்கினவா ; நோக்கினவா என்க . சலமே - கடல் நீரே ; சலமதனால் நெருக்கினவா . ( மாறுபாடென்றார்கள் ; திரு . கோ . க . சுப்பிரமணிய முதலியார் அவர்கள் . தி .12 அப்பர் புராண உரையில் . பக்கம் 642). தண்டித்த நோய் - சூலை நீற்றறையிலிட்ட நோய் ; கல்லினோடு பூட்டி ஒல்லை நீர்புக நூக்கிய நோய் ; சூலை நோய் எல்லாம் . சமண் புக்கதற்குத் தண்டனையுமாம் . நெடுநீரின் நின்று ஏறல் :- அக் கடலில் ஆழாது கல்லே புணையாகக் கரையேறித் திருவைந்தெழுத்தின் சிறப்பைத் தெரிவித்தல் . ஆக்குதல் - மறுபிறப்பு என்னும்படி , சமண் செய்த கொடுமைக்கெல்லாம் மாய்தல் உறாமே உய்ந்து வாழச் செய்தல் . பெருக்குதல் - மிகுத்தல் .

பண் :

பாடல் எண் : 4

தருக்கின நான்றக வின்றியு மோடச் சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின் றேற நினைந்தருளி
உருக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே
பெருக்கின வாதொண்டனேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

நான் வினைப் பயனைத் தாங்கும் ஆற்றலில்லேனாய்த் தடுமாறி ஓடுமாறு செருக்குற்ற என் முன்னைவினை வஞ்சனையாக என்னை நெருக்க அடியேனைத் துன்பக் கடலிலிருந்து கரையேறச் செய்யத் திருவுள்ளம் பற்றி ஐயாறன் தன் அடிமைத் தொண்டில் உருகச் செய்து அடியேனைத் தன் பொன்னடிக் கீழ் தொண்டனாக மேம்படுத்திய செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும்

குறிப்புரை :

அடிமைக்களே தன் தன்பொன்னடிக்கீழ் என்னைப் பெருக்கினவா ( இன்பம் ). ` நாம் ஆர்க்கும் குடியல்லோம் ` ` பணிவோம் அல்லோம் ` ` துகிலுடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொற்கேட்கக் கடவோமோ துரிசற்றோமே ` ` பகடேறி வருவார் சொல்லும் பணி கேட்கக் கடவோமோ ` பற்றற்றோமே ` ` என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம் இருநிலத்தில் எமக்கு எதிரா வாருமில்லை ` ` காவலரே ஏவிவிடுத்தாரேனும் கடவோம் அலோம் ` வந்து ` ஈரார் மன்னவன் ஆவான் தான் ஆரே ?` எனல் முதலிய பல சொல்லி இறுமாந்திருப்பவ ` ராதலின் , ` தருக்கின நான் ` என்றார் . நெடுநீர் - முந்நீர் , கடலேற விட்ட கருணைத்திறம் . உருக்குதல் - ` உள்ள முதலனைத்தும் ஒன்ற ஒருவல் `. ( திருக்களிறு ) பெருக்குதல் - பேரின்பத்துள் ஆராமை .

பண் :

பாடல் எண் : 5

இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி யிடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளி
அழிவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைவினை எனக்கு நோயைக் காட்டி என்னை நிலையிலிருந்து இறங்கச் செய்து துன்புறுத்தி உயிரைப் போக்க முற்பட்ட அளவில் , ஐயாறன் அடியேனுடைய துயரம் போக்கித் தன் திருவடிக்கண் தொண்டனாகத் தன்னைத் தொழுமாறு செய்த செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும் .

குறிப்புரை :

தன் பொன்னடிக் கீழ் எனைத் தொழுவித்தவாறு அடிமைக்களே தொழுவித்தவாறு . இட்டநோய் வினை காட்டி இழிவித்தவாறு . காட்டி இடர்ப்படுத்துக் கழிவித்தவாறு . கட்ட நோய்வினை தீர்ப்பான் ( தீர்ப்பவன் , தீர்க்கக் ) கலந்தருளி , ( அவை ) அழியச் செய்தவாறு . அடியேனைக் கலந்தருளி அழிவித்தவாறு அழிதல் - நோய்வினை அழிதல் . அழிவித்தல் இறைவனது . அழிவித்தற்பயன் நாயனார்க்குரியது . இட்டநோய் - ஊழின்படி இட்ட நோய் . கட்டநோய் - துன்பந்தரும் நோய் . கட்டம் (- கஷ்டம் ). தொழுதல் ; தொழுவித்தல் , தொழுவிப்போன் தொழமாட்டான் . கலந்தருளித் தீர்ப்பான் எனலுமாம் . இழிதல் இழிவித்தல் ; கழிதல் , கழிவித்தல் ; அழிதல் அழிவித்தல் ; தொழுதல் தொழுவித்தல் எனத் தன்வினையும் பிறவினையும் உறும் வேறுபாடுணர்க .

பண் :

பாடல் எண் : 6

இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி யிடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி
அடைவித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னைவினை எனக்கு நோயைத் தந்து வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தி உயிரைப் போக்கும் நிலையினதாக , ஐயாறன் அடியேனுக்குத் துயரம் தந்த வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி , அடியேனைத் தன் அடிமைத் தொண்டில் சேர்த்துத் தன் திருவடிக்கண் தொண்டனாகத் தொடர்ந்து பணி செய்யுமாறு செய்த செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவே யாகும் .

குறிப்புரை :

இட்ட நோய் வினைகாட்டி இடைவித்தவாறு . தன் பொன்னடிக்கீழ் எனை இடைவித்தவாறு . காட்டி இடர்ப்படுத்து உடைவித்தவாறு . உற்றநோய் வினைதீர்ப்பான் உகந்தருளித் தீர்ப்பான் எனலுமாம் . அடியேனை அடைவித்தவாறு , அடிமைக்களே தொடர்வித்தவாறு . இடைதல் - ஒதுங்குதல் . இடைவித்தல் - ஒதுங்கச் செய்தல் வன்மை குறைவித்தலும் வருந்தச் செய்தலுமாம் . உடைதல் , உடைவித்தல் . அடைதல் , அடைவித்தல் . தொடர்தல் , தொடர்வித்தல் .

பண் :

பாடல் எண் : 7

படக்கின வாபட நின்றுபன் னாளும் படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியுந் தீவினை பாவமெல்லா
மடக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே
தொடக்கினவா தொண்டனேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னை வினை பலநாளும் துயருறுமாறு என்னைத் தாழ்த்தி நோயினால் என்னைச் செயலற்றவன் ஆக்கிய நிலையில் ஐயாறன் அடியேனுடைய வினைப்பயனாகிய பாவங்களை எல்லாம் செயலற்றன ஆக்கித் தன் அடிமைத் தொண்டில் அடியேனைத் திருப்பித் தன் பொன்னடித் தொண்டனாகத் தொடக்கி , திருத்தொண்டு செய்யுமாறு செய்த செயல் அவன் கருணையின் விளைவேயாம் .

குறிப்புரை :

படநின்று படக்கின என்றதால் , படச்செய்தல் என்ற பொருளதாதல் அறிக . படக்கின - தாழ்த்திய எனலுமாம் . நோய் அடக்கினவாறு . அது அன்றியும் தீவினையெல்லாம் பாவம் எல்லாம் மடக்கினவாறு . அடக்கினவாறு என்று பிரித்தும் பதித்தனர் பின்னோர் . பழம் பதிப்பிலுள்ளவாறு ` மடக்கினவாறு ` என்றே இருப்பின் மகரமேனும் அகரமேனும் முதலாய் நிற்கப் பிரித்துக் கொள்ளலாம் . தொடக்கின - தொடக்குறச் செய்தன .

பண் :

பாடல் எண் : 8

மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பா னுகந்தருளி
இறப்பித்த வாறடி யேனையை யாற னடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னை வினை எனக்கு நோயைக் காட்டி என் அறிவு நிறைவு ஓர்ப்பு கடைப்பிடி என்பனவற்றை மறக்கச்செய்ய , அங்ஙனம் மறக்கச் செய்த நோய் என் உயிர் உடலைத் துறக்கச்செய்ய முற்பட்ட நேரத்தில் ஐயாறன் அடியேனுடைய வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டில் ஈடுபட்டுப் பண்டைத் துயரங்களைக் கடக்கச் செய்து , தன் திருவடிக்கண் தொண்டனாகுமாறு சிறப்பித்த செயல் அவன் கருணையின் விளைவேயாகும் .

குறிப்புரை :

வல்லை - கடுப்பு , வலிமை . நோயின் கடுப்பும் வலிமையும் கொள்ளலாம் . விரைவு எனக் கொண்டு மறப்பித்தலின் காலவிரைவினையுங் கூறலாம் . மறப்பித்ததும் துறப்பித்ததும் நோயே . துறத்தல் நாயனாரது தொழில் . துறக்கப்பட்டது பற்று . நோய் துறப்பித்தல் அநுபவத்திற் பலர் கண்டதும் காணத் தக்கதுமாம் . இறுத்தல் - கடத்தல் . இறப்பித்தல் - கடக்கச் செய்தல் . சிறத்தல் - உள்ளது மிகுதல் . சிறப்பித்தல் - உள்ளது மிகுவித்தல் .

பண் :

பாடல் எண் : 9

துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித் துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பா னிசைந்தருளி
அயக்கின வாறடி யேனையை யாற னடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

என் முன்னை வினை எனக்கு நோயைத் தந்து சோர்வடையச் செய்ய , அந்நோய் தான் விரும்பியபடி அடியேன் உடலைச் செயற்படுத்த அந்நிலையில் ஐயாறன் அடியேனுடைய நோயையும் அதற்குக் காரணமான வினையையும் தீர்க்கத் திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத் தொண்டில் , அடியேனை நோயிலனாக ஈடுபடுத்தித் தன் பொன்னடித் தொண்டனாகத் தன் திருத்தொண்டில் கலக்குமாறு செய்த செயல் அவன் கருணையின் விளைவேயாகும் .

குறிப்புரை :

துயக்குதல் - சோர்வித்தல் , தளர்வித்தல் , தடுப்பித்தல் , இயங்குதல் , இயக்குதல் . இயங்குவித்தல் . அயக்குதல் :- ` அயக்கமாய் அடக்கமாய ஐவர் ஆப்பாடியாரே ` ( தி .4 ப .48 பா .8). அயக்கம் - நோயின்மை . அசைக்குதல் என்பதன் மரூஉவாகக் கொண்டு உரைத்தலுமாம் . மயக்கினவாறு - மயங்கச்செய்த வண்ணம் . மயங்குதல் - கலத்தல் .

பண் :

பாடல் எண் : 10

கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற் கரந்தருளி
இறுத்துமிட் டாரிலங் கைக்கிறை தன்னை யிருபதுதோள்
அறுத்துமிட் டாரடி யேனையை யாற னடிமைக்களே
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.

பொழிப்புரை :

ஐயாற்றெம் பெருமானார் நீலகண்டராய் , கங்காதரராய் , இராவணன் இருபது தோள்களையும் நெரித்தவராய் , அடியேனைத் தம் அடிமைத் தொண்டில் வேற்றுப் பணிகளை அறுத்து அதன் கண்ணேயே ஈடுபடுமாறு செய்தவராய்த் தம் பொன்னடிக்கீழ் அடியேன் தொண்டனாகுமாறு அடியேனுக்கு ஆதாரமாக அமைந்து விட்டார் . இதற்குக் காரணம் என்னை ? அப்பெருமானுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவே அடியேனை அப்பெருமானுடைய திருத்தொண்டில் ஈடுபடுத்தியது .

குறிப்புரை :

கறுத்தும் - சினந்தும் . கண்டம் :- திருநீலகண்டம் . கரத்தல் - மறைத்தல் . இறுதல் + இறுத்தல் ` வில்லிறுத்தான் ` ` இறுதி ` ` ஈறு ` இறுதல் இடைக்கண்ணதுமாம் . முடிதல் - இறாது முடிவுறல் . இறுதிவேறு . முடிவு வேறு . இறை - இறைவன் ( இராவணன் ). இருபது தோள்களையும் அறுத்துமிட்டார் என்று இனைத்தென அறிந்த சினைக்கிளவிக்கு வினைப்படு தொகுதிக் கண் வேண்டும் உம்மை விரித்துரைக்க . பொறுத்தல் - தாங்குதல் ; பார்த்தல் ; தரித்தல் , ( ஆதாரமாயருளல் ) என்னைப் பொறுத்துமிட்டார் .
சிற்பி