திருக்கண்டியூர் வீரட்டம்


பண் :

பாடல் எண் : 1

வானவர் தானவர் வைகன் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே.

பொழிப்புரை :

தேவர்களும் தேவகணத்தவரான வித்தியாதரர்களும் நாள்தோறும் மலர்களைக் கொணர்ந்து சமர்ப்பித்து வணங்க வைகுந்தத்திலும் சத்தியலோகத்திலும் உள்ள திருமாலும் பிரமனும் உள்ளபடி அறிய முடியாத தன்மையுடைய வியாபகப்பொருளாகி யவனாய் , காளைவாகனனாய் , மூலப் பழம்பொருளாய் , அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கக் கருதிய அன்று காட்டில் ஓடிய பன்றியை அம்பு எய்த வேடனாய் உள்ள பெருமானுடைய கண்டியூர்த் திருத்தலத்தை உலகில் உள்ள மக்கள் தொழுகின்றார்கள் . கண்டியூரைத் தேவர்களும் தானவர்களும் மண்ணவர்களும் தொழுகின்றனர் என்றவாறு .

குறிப்புரை :

வானவர் - தேவர் . தானவர் :- கொடைநர் , மண்ணோர் . ` வானவர்க்குந் தானவனே ` ( தி .4 ப .6 பா .1) ` தந்தையும் தாயுமாகித் தானவன் ஞானமூர்த்தி ` ( தி .4 ப .29 பா .4) ` தானவர் தனமும் ஆகித் தனஞ்சயனோடெதிர்ந்த கானவர் ` ( தி .4 ப .43 பா .5) என்பவற்றால் விளங்கும் பொருள் ` அசுரர் ` என்பதன்று . வானவர் - தேவர் . தானவர் - கொடைநர் , மண்ணோர் ; அசுரர் . ( தி .6 ப .44 பா .7.) வைகல் - நாள்தோறும் . மலர் கொணர்ந்து - ` யோசனை போய்ப் பூக்கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே பூசனை செய்து இனிதிருந்தான் புள்ளிருக்குவேளூரே `. இட்டு - திருவடி முதலியவற்றிலே தூவியிட்டும் அணிந்திட்டும் . இறைஞ்சி - வணங்கி . தானவர் - வைகுந்தமும் சத்தியலோகமும் ஆகிய தானங்களில் உறைபவராகிய . மால்பிரமன் - அரியும் அயனும் . அறியாத - அடிமுடி தேடிக் காணாதபடி . தகைமையினான் - அப்பாலைக் கப்பாலாய் நின்ற ஞானத்திரளாயும் , எப்பாலும் நிறைந்த ஒளிப் பிழம்பாயும் விளங்கிய வியாபகப் பொருளானவன் . இறைஞ்சி அறியாத தகைமையினான் என்க . ` வானவர் தானவர் ` என்றுள்ளதை நோக்கி அசுரர் எனல் ஈண்டுப் பொருந்தும் . அடுத்து , ` தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான் ` என்றுள்ளது . தான் மால் பிரமன் ஆகிய அவர் அறியாத தகைமையினான் எனக் கொள்ளலாம் . ஆதி - முதல் . புராணன் - பழையோன் ; தொல்லோன் . அன்று - அருச்சுனனது தவத்திற்குப் பயன் அருளச் சென்ற அந்நாளில் . ஆனவன் - விடையான் . ` ஆனணைந் தேறுங் குறி ` ( தி .4 ப .90 பா .5) ஆன அநாதி புராணன் எனற்குமிடமுண்டு . கானவன் :- அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளிய வேட்டுருவினன் . வாணர் - வாழ்நர் . மரூஉ . வீழ்நர் - வீணர் என்றது போல்வது . வாணர்க்கு வீணர் மறுதலையாகும் .

பண் :

பாடல் எண் : 2

வான மதியமும் வாளர வும்புன லோடுசடைத்
தான மதுவென வைத்துழல் வான்றழல் போலுருவன்
கான மறியொன்று கையுடை யான்கண்டி யூரிருந்த
ஊனமில் வேத முடையனை நாமடி யுள்குவதே.

பொழிப்புரை :

வானத்தில் இயங்கவேண்டிய பிறை , ஒளி பொருந்திய பாம்பு கங்கை இவற்றிற்குத் தன் தலையைத் தங்குமிடமாக வழங்கித் திரிபவனாய் , தீ நிறத்தினனாய் , காட்டில் வாழும் மான்குட்டியைக் கையில் ஏந்தியவனாய்க் கண்டியூரில் இருக்கும் , குறைவு ஒன்றும் இல்லாத வேதத்தை உடைய பெருமானை அவன் திருவடிக்கண் நாம் தியானிப்போமாக .

குறிப்புரை :

வானமதியம் - ` வானூர்மதியம் `. வாள் அரவு கொடிய பாம்பு . புனல் - கங்கை நீர் . சடைத்தானம் அது எனவைத்து - மதி முதலியவற்றிற்குச் சடையே இடம் என்று உலகுபோற்ற வைத்து , உழல்வான் - திரிபவன் . தழல்போல் உருவன் - ` தீவண்ணன் `. கான மறி - காட்டில் திரியும் மான்கன்று . ஒன்று கை - ஒன்றியகை . மறியொன்றனைக் கையில் உடையவன் என்னற்க . ஊனம் இல் வேதம் - குறைவிலாத பொருள் நிறைவையுடைய மறை . ` பூம் சிரம் கண்டி ` என்பது பிரசித்தம் . பிரமன் அறிந்த வேதம் அவனுக்குத் தலைபோகும் ஊனம் விளைத்தது . அதுவே ஊனமின்றி விளங்கும் உயர்வுற்றது முழுமுதல்வன்பால் . குற்றம் இல்வேதம் ` ( தி .4 ப .93 பா .5).

பண் :

பாடல் எண் : 3

பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத் தான்றலையை
உண்டங் கறுத்தது மூரொடு நாடவை தானறியும்
கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண் டீரண்ட வாணர் தொழுகின்றதே.

பொழிப்புரை :

பிரமன் தலையைப் பண்டு நீக்கிய கையை உடையவனாய் , விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் இறுத்திய அதனால் நீலகண்டனாய் உயிரினங்களின் அச்சத்தைப் போக்கிய செய்தியை ஊர்களும் நாடுகளும் அறியும் . அத்தகைய பெருமான் தொண்டர்கள் தலைவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்க அவனை அங்கே அண்டத்தில் வாழும் சான்றோர்கள் தொழுகின்றார்கள் .

குறிப்புரை :

பண்தங்கு அறுத்தது ஓர் கை உடையான் - ஓர் கையில் , இசைத்திறத்தில் இத்தனை எனவரையறுத்த பண்களுக்கெல்லாம் உறைவிடமான யாழை உடையவன் . ` மிக நல்ல வீணை தடவி ` யவனுமாம் . பண்டு அங்கு அறுத்ததோர் கை உடையான் என்று பட்டாங்குரைத்தலே தக்கதாயினும் , படைத்தான் தலையை அங்கு அறுத்ததும் உண்டு என்று அடுத்துக் கூறியதால் , இவ்வாறு பொருளுரைத்தாம் . பண்டே பிரமகபாலக் கையன் அவன் . பிரமன் சிரத்தைக் கண்டியூரில் அறுத்த வீரத்தை ஊரும் நாடும் அறியும் என்க . கறுத்த கண்டம் ஆகிய மிடறு கண்டமும் மிடறும் கழுத்தையே குறிக்கும் பெயர் . மிடல் - வலி , மிடல் + து - மிடறு . நஞ்சுட் கொண்டும் நஞ்சு போகாத மிடலுடையது . நஞ்ச நெஞ்சர்க்கருளும் நள்ளாறரே ` ( தி .5 ப .68 பா .7) தொண்டர் பிரான் - தொண்டர்க்குப்பிரியன் ; தொண்டரைப் பிரியான் .

பண் :

பாடல் எண் : 4

முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் றானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்ட ரில்லைகண் டீரண்ட வானவரே.

பொழிப்புரை :

அவன் செய்துமுடிக்க நினைத்தால் வெற்றிகரமாக முடியாத செயல் ஒன்றுமில்லை . எல்லாப் பொருள்களையும் அப் பெருமான் தன்பால் உடையான் . கொடியில் தன் உருவம் எழுதப்பட்ட வாகனமாக உடைய காளைமீது இவர்ந்து பார்வதி பாகனாய் , அடியார்களுடைய கொடியவினைகளை அடியோடு நீக்குபவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் அப்பெருமானுடைய திருவடிகளைத் தொண்டர்களே அடைந்தனர் . மேலுலகத்தேவர்கள் அடைய வில்லை .

குறிப்புரை :

முடியின் முற்றாதது ஒன்று இல்லை - முடித்தால் முற்றுறாதது யாதும் இல்லை . தான் எல்லாம் உடன் உடையான் - தானே எல்லாவற்றையும் தன்பால் உடையவன் . அஃதாவது எல்லாப்பொருளையும் எல்லாவுயிரையும் முறையே உடைமையும் அடிமையும் ஆக உடையவன் பரமசிவனே ஆதலின் , அவனே சருவ சங்கார காரணன் . அவன் முடித்தால் முடியாத தொன்றில்லை என்றதாம் . ஆக்கலும் அளித்தலும் ஆகிய தொழிற்கெல்லாம் முதல்வன் சிவபெருமானே . சிவஞானபோதம் முதற்சூத்திரம் பொருளை உணர்க . கொடியும் உற்ற விடை :- விடையெழுதிய கொடியும் உடையவன் இறைவன் , அவ்விடையை ஊர்தியாகக் கொண்டு ஏறுமவன் . ` கூற்று ` , ` பால் ` என்பன ஒரு பொருளன எனினும் . ஈண்டுக் கூற்று என்பது இடவாகு பெயராய் , அம்பிகையைக் குறிப்பதாகக் கொண்டு , அம்மையை ஒரு பக்கத்தே உடையவன் என்க . கடிய வினை நோய் முற்றக்களைவான் . கடிய முற்று அவ்வினை நோய் களைவான் எனலும் ஆம் . இருந்தானடி . தொண்டர் உற்றார் வானவர் இல்லை . அண்டங்களில் உள்ள வானவர் .

பண் :

பாடல் எண் : 5

பற்றியொ ரானை யுரித்தபி ரான்பவ ளத்திரள்போல்
முற்று மணிந்ததொர் நீறுடை யான்முன்ன மேகொடுத்த
கற்றங் குடையவன் றானறி யான்கண்டி யூரிருந்த
குற்றமில் வேத முடையானை யாமண்டர் கூறுவதே.

பொழிப்புரை :

ஓர் யானையைக் கீழ்ப்படுத்தி அதன் தோலினை உரித்த தலைவனாய் , பவளத்திரள் போன்ற மேனி முழுதும் திருநீறு அணிந்தவனாய் , கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த கண்ணனாக அவதரித்த திருமாலால் அறியப்படாதவனாய்க் கண்டியூரில் உறைபவனாய் , முன்னமே உலகுக்கு வழங்கிய குற்றமற்ற வேதங்களை உடையவனான அப்பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள் .

குறிப்புரை :

ஓர் ஆனைபற்றி உரித்தபிரான் - ஓர் யானையைப் பிடித்து அதன் தோலை உரித்துப் போர்த்து , அழிவின்றி நின்ற கடவுள் . யானைத் தோலைப் போர்த்துக் கொண்டவர் இறப்பர் . அது செய்தும் சாவாதான் நம் பெருமான் . அடுத்த திருவிருத்தத்திலே ` போர்ப்பனை யானை உரித்தபிரான் ` என்றதும் காண்க . ` பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும் ....... காணப் பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டுவதே ! ( தி .4 ப .81 பா .4) ` பவளத்திரள் போலும் திருமேனியில் முற்றும் அணிந்ததொரு நீறுடையான் . பவளத்திரள் மேல் ` என்று பாடம் இருந்து பிழைபட்டது போலும் , முன்னமே கொடுத்த கல் தங்கு உடையவன் தான் அறியான் :- காவியுடை அணிந்த அக் கடவுள் தனக்கு அது வந்த காலம் அறியான் என்ற கருத்தது போலும் , கல் - காவிக்கல் . குற்றம் இல் வேதம் :- ` ஊனம் இல் வேதம் ` ( தி .4 ப .93 பா .1). கூறுவது உடையானை ஆம் . யாமும் அண்டரும் கூறுவது உடை யானை எனலுமாம் . எல்லார்க்கும் அவனே உடையான் (- சுவாமி ).

பண் :

பாடல் எண் : 6

போர்ப்பனை யானை யுரித்த பிரான்பொறி வாயரவம்
சேர்ப்பது வானத் திரைகடல் சூழுல கம்மிதனைக்
காப்பது காரண மாகக் கொண் டான்கண்டி யூரிருந்த
கூர்ப்புடை யொள்வாண் மழுவனை யாமண்டர் கூறுவதே.

பொழிப்புரை :

யானையை உரித்த தோலைப் போர்க்கின்ற பிரானாய் , உடம்பில் புள்ளிகளைக் கொண்ட பாம்பினை உடலில் சேர்த்து அணிந்தவனாய் , வானளாவிய அலைகளை உடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தைக் காப்பதற்காகக் கூர்மையை உடைய மழுப்படையைக் கொண்ட கண்டியூர்ப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள் .

குறிப்புரை :

போர்யானை பனையானை . பனைக்கை மும்மத வேழம் `. யானை யுரித்தபிரான் . பொறி - படப் புள்ளி , வாய் - வாய்ந்த அரவம் - பாம்பு . வானத்திரை - வானோக்கி எழும் அலை . அரவம் சேர்ப்பது உலகம் :- ஆதிசேடன் உலகத்தைத் தாங்குதலைக் குறித்தது . உலகம் இதனை - இவ்வுலகினை , அரவத்தைச் சேர்ப்பதன் கருத்தும் அவன் தலைமேல் உள்ள உலகத்தைக் காப்பதைக் காரணண் ஆக்கிக் கொண்டதாம் . காப்பது காரணமாகச் சேர்ப்பது கொண்டான் , உலகினைக் காப்பது அரவம் . அக் காப்பது காரணம் ஆக அரவம் சேர்ப்பது கொண்டான் . சேர்ப்பதைக் கொண்டான் . கூர்ப்பு - கூரிய தன்மை . அதனையுடைய வாள் . ஒள்ளியவாள் . வாளாகிய மழு , மழுவுடையவன் மழுவன் .

பண் :

பாடல் எண் : 7

அட்டது காலனை யாய்ந்தது வேதமா றங்கமன்று
சுட்டது காமனைக் கண்ணத னாலே தொடர்ந்தெரியக்
கட்டவை மூன்று மெரித்த பிரான்கண்டி யூரிருந்த
குட்டமுன் வேதப் படையனை யாமண்டர் கூறுவதே.

பொழிப்புரை :

கூற்றுவனை அழித்து , வேதங்கள் , ஆறு அங்கங்கள் என்ற இவற்றை ஆராய்ந்து , மன்மதனைக் கண்ணிலிருந்து தோன்றிய தீயினால் சுட்டு , தொடர்ந்து எரிந்து சாம்பலாகுமாறு மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய தலைவனாய்க் கண்டியூரில் உறையும் கடல்போன்ற வேதங்களைத் தனக்குப் படையாக உடைய பெருமானையே தேவர்கள் போற்றுகின்றார்கள் .

குறிப்புரை :

அட்டது காலனை ,. ஆய்ந்தது வேதங்களையும் ஆறு அங்கங்களையும் . அன்று தொடர்ந்து எரியக் கண்ணதனாலே சுட்டது காமனை . கட்டவை மூன்றும் - முப்புரங்களையும் . ` எரித்தபிரான் ` என்றதால் எரிய எரித்தபிரான் எனல் பொருந்தாது . எரியச்சுட்டது எனல் சிறந்தது . கட்டு - மதில் . ` அவை ` முன்மொழிப் பொருளது . குட்டம் - கடல் . வேதம் கடல் எனப்படும் . கடல்போலும் வேதப்படையுடையவன் எனலும் பொருந்தும் . கட்டு - பந்தம் . ` மும்மல காரியம் ` ` முப்புரமாவது மும்மல காரியம் ` ( தி .10 திருமந்திரம் )

பண் :

பாடல் எண் : 8

அட்டு மொலிநீ ரணிமதி யும்மல ரானவெல்லாம்
இட்டுப் பொதியுஞ் சடைமுடி யானிண்டை மாலையங்கைக்
கட்டு மரவது தானுடை யான்கண்டி யூரிருந்த
கொட்டும் பறையுடைக் கூத்தனை யாமண்டர் கூறுவதே.

பொழிப்புரை :

உலகத்தை அழிக்கப் பேரொலியோடு வந்த கங்கையையும் பிறையையும் மலர்களையும் வைத்து உள்ளடக்கிய சடைமுடியை உடையவனாய் , இண்டைமாலையையும் , கையில் அணிகலனாக அணியும் பாம்பையும் உடையவனாய்க் கண்டியூரில் உகந்தருளியிருக்கும் , பறையை ஒத்த உடுக்கையை உடைய கூத்தப் பெருமானைத் தேவர்கள் போற்றுகின்றார்கள் .

குறிப்புரை :

அட்டும் ஒலிநீர் :- கங்கையின் பேரொலி செய்து வரும் வெள்ளம் . அட்டல் - அழித்தல் . அணிமதி - அழகிய பிறை . அலர் ஆன எல்லாம் - பூவாகிய யாவும் . நீரும் மதியும் மலரும் எல்லாம் இட்டுப் பொதியும் சடைமுடி இண்டைமாலையுடையான் . அங்கையில் கட்டும் அரவுடையான் . இண்டைமாலை போலக்கட்டும் அரவுடையான் எனலுமாம் . பறை - வாத்தியம் . கூத்துக்குத் தக இசைக்கும் பறை . ` பறையுடைக் கூத்தன் ` உடுக்கையே பறை எனலும் ஆம் ; கூத்தன் தன் கையில் உடையது அதுவே ஆதலின் .

பண் :

பாடல் எண் : 9

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கண் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டி யூரெம் பிரானங்க மாறினையும்
ஆய்ந்த பிரானல்ல னோவடி யேனையாட் கொண்டவனே.

பொழிப்புரை :

மன்மதனை வெகுண்டு அழித்த பிரான் , கண்டியூரை உகந்தருளியிருக்கும் பிரான் , ஆறு அங்கங்களையும் ஆராய்ந்தபிரான் ஆகிய சிவபெருமான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டுள்ளான் . அதனால் தீவினைகள் மறைந்தன ; நோய்கள் செயலற்று ஒளிகுறைந்தன ; கலங்கி விழுமாறு பாவங்கள் தேய்ந்து விட்டன . தீவினை நோய்கள் பாவம் என்ற இவைகள் இனி நம்மை அழிக்க வலிமை அற்றனவாகிவிட்டன .

குறிப்புரை :

அடியேனை ஆட்கொண்டவன் பிரான் அல்லனோ ? ஆம் . ஆதலின் , மாய்ந்தன . மங்கின . தேய்ந்தன . செறுக்ககில்லா . அநங்கைக்காய்ந்தபிரான் ; செற்றுக்காய்ந்தபிரான் , அநங்க : என்பது மன்மதன் பெயர் . அஃது இரண்டனுருபு ஏற்று அநங்கை என்று திரிந்து நின்றது . சம்பந்தர் அருளிய திருப்பதிகம் தி .2 ப .45 பா .5 இல் , ` அநங்கைக் காய்ந்த பிரான் ` என்றதும் , ` பெருந்திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் ` ( தி .3 ப .91 பா .9) என்றதும் ஈண்டு நோக்குக . அங்கன் - உருவன் . அநங்கன் - உருவிலி . அங்கம் ஆறு :- ( தி . 4 ப .93 பா .7). ஆய்ந்த - ஆராய்ந்து வகுத்தருளிய தீவினையின் மாய்வும் நோய்களின் மங்கலும் , பாவத்தின் தேய்வும் ஆட்கொண்ட காரணத்தாலான காரியங்கள் . மறுகி - கலங்கி . விழத்தேய்ந்தன . அதனால் நம்மைச் செறுக்ககில்லா ( - அழிக்க வலியில்லாதன ).

பண் :

பாடல் எண் : 10

மண்டி மலையை யெடுத்துமத் தாக்கியவ் வாசுகியைத்
தண்டி யமரர் கடைந்த கடல்விடங் கண்டருளி
உண்ட பிரானஞ் சொளித்த பிரானஞ்சி யோடிநண்ணக்
கண்ட பிரானல்ல னோகண்டி யூரண்ட வானவனே.

பொழிப்புரை :

தம் ஆற்றலால் மிக்குச்சென்று மந்தரமலையைப் பெயர்த்துச் சென்று அதனை மத்தாகக்கொண்டு வாசுகி என்ற பாம்பைக் கடைகயிறாகச் சுற்றித் தேவர்கள் கடைந்த கடலிலிருந்து புறப்பட்ட விடத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சி ஒடிவந்து தன்னை அணுகுமாறு செய்தபிரானாய் , அவர்களிடம் அருள்செய்து விடத்தை உண்ட பிரானாய்ப்பின் அது உள்ளே செல்லாதபடி கழுத்தில் அதனை ஒளிவீசுமாறு செய்த பெருமான் கண்டியூரிலுள்ள தேவர்தலைவன் அல்லனோ ?

குறிப்புரை :

கண்டியூர் அண்ட வானவன் , உண்ட பிரானும் நஞ்சொளித்தபிரானும் கண்ட பிரானும் அல்லனோ ? மண்டி - நெருங்கி , மிக்குச் சென்று எனலுமாம் . மலை - மந்தரமலை , மத்து - கடைதற்குரிய கருவி . வாசுகி - பாம்பு . தண்டி - சுற்று . ( மத்தைச்சுற்றும் கடைவதற்குரிய ) கயிறாக வாசுகியைத் தண்டி . அமரர் - தேவர் . அசுரரும் கொள்ளப்படுவர் . ` வடங்கெழுமலை மத்தாக வானவர் அசுரரோடு கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிதுடையராகித் தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே ` ( தி .4 ப .65 பா .2) என்றதுணர்க . அமரர் கடைந்த கடல் , கடல் விடம் - கடலில் எழுந்த நஞ்சு . விடம் உண்ட பிரான் என்றபின் , நஞ்சு ஒளித்தபிரான் என்றது என்னை ? உண்டது வயிற்றுள்ளும் போகாமல் வெளியும் கான்றொழியாமல் , கழுத்தில் ஒளியப் பண்ணிய பெருந்திறல் விளக்கற் பொருட்டு . ` பரவைக் கடல் நஞ்சம் உண்டதும் இல்லை ` ( தி .4 ப .82 பா .9.). அஞ்சு ஒளித்த பிரான் அஞ்சியோடி நண்ணக் கண்ட பிரான் எனக் கொண்டு , புலனைந்தும் அடக்கிய மார்க்கண்டேயர் , கூற்றினை அஞ்சியோடி வந்தடையக் கண்டு , காலனைக் காலால் உதைத்து அவன் வலியடங்கக் கண்ட பிரான் எனலுமாம் . தேவர் + அசுரர் அஞ்சியோட என்றலின் இது சிறந்தது .
சிற்பி