திருப்பாதிரிப்புலியூர்


பண் :

பாடல் எண் : 1

ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.

பொழிப்புரை :

திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான் , அடியேனுக்குத் தாயாய் தந்தையாய் உடன்பிறந்த , சகோதர சகோதரியாராய் அமைந்து , மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாய் , அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான் .

குறிப்புரை :

எனக்கு ஈன்றாளுமாய் எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் :( தி .4 ப .29 பா .4; ப .32 பா .8; தி .5 ப .47 பா .5.) ஈன்றாள் - மாதினியார் . எந்தை - புகழனார் . உடன்தோன்றினர் - திலகவதியார் . எனக்குப் படைத்த உலகம் மூன்று உலகம் - உலகப் பற்று . திலகவதியாரே திருவருணெறிக்கு மீட்டவராதலின் , ` உடன் தோன்றினர் ` என உயர்த்துக்கூறிப் பத்தியும் நன்றியறிதலும் உணர்த்தினார் , தோன்றாத்துணை மனத்துள் இருக்க ஏன்றான் . ( பா .3) விழித்த கண்குருடாய்த் திரிவீரர் ஆகிய இமையவர்க்கு ` அன்பே சிவம் ` எனத் திகழ்பவன் . இமையவட்கன்பன் ` என்றிருந்து பிழைபட்டதோ ? அடுத்ததில் உமையவட்கன்பன் எனல் அறிக . தன் அடியோங்களுக்குத் தோன்றாத் துணையாயிருந்தனன் . அடியோங்களுள் எனக்கு அம் மூன்று தோன்றுந் துணையாயிருந்தனன் . ` ஆய் ஆய் ஆய் ஆய்ப் படைத்து உகந்தான் ` என்று இறந்த காலத்தாற் குறித்ததும் ` எனக்கு ` என்றதும் ` ஏன்றான் ` இருந்தனன் ` என்றனவும் நோக்கின் , மாதினியார் முதலிய மூவரையுமே குறித்தது எனல் உறுதிப்படும் . ` அடியோங்கள் ` என்றது தம்மையும் அங்கிருந்த அடியாரையும் குறித்தாகக் கொள்ளல் சிறந்தது . எல்லார்க்கும் தோன்றாத் துணையிருந்தனன் என்று இறந்த காலத்தாற் கூறியதறிக . திருப்பாதிரிப்புலியூர்ப் பிரானுக்குத் ` தோன்றாத்துணை ` என்னும் திருப்பெயருண்மையும் உணர்க . மனத்துள்ளிருக்க ஏன்றவன் தோன்றாத் துணையாயிருந்தனன் . உலகம் படைத்துகந்தவன் தோன்றிய துணையாயிருந்தனன் . ஈன்றாள் , எந்தை , உடன் தோன்றின ராயதே தோன்றிய துணையாதல் . மூன்றாய்த் தோன்றிய துணை எனக்கு . தோன்றாத் துணை அடியோங்களுக்கு என்ற துணைமையுள் முன்னது தமக்கே உரித்தாதலும் , பின்னது தம்மொடு பலர்க்கும் உரித்தாதலும் உணர்த்தினார் . ஏன்றான் - ஏல் + த் + ஆன் : ` இமையவர்க்கு அன்பன் ` ` அடியேனுக்கு அன்பன் ( தி .6 ப .19 பா .11) றன்னை அளவிலாப் பல்லூழி கண்டு நின்ற தீர்த்தனைத் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே `. தோன்றாத் துணை - எதிர்மறைப் பெயரெச்சம் . தோன்றாமை - உணர்விலும் உளத்திலும் தோன்றிப்புறத்தே விழிக்குத் தோன்றாமை . தோன்றுதல் - ஆணும் பெண்ணுமாகி , அம்மை நீ அப்பன் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பித்த திலகவதியார் நீ என மூன்றாய்த் தோன்றியமை .

பண் :

பாடல் எண் : 2

பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றும்
சுற்றா யலைகடன் மூடினுங் கண்டேன் புகனமக்கு
உற்றா னுமையவட் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே.

பொழிப்புரை :

நெஞ்சே ! இவ்வுலகை முழுதும் சுற்றிக்கொண்டு அலையை உடைய கடல் மூடிக் கொண்டாலும் நமக்கு உறுதுணையாய் உமாதேவிக்கு அன்பனாய்த் திருப்பாதிரிப்புலியூரில் பிறையைக் கண்ணியாகச் சூடிய சிவபெருமானுடைய எல்லா நலன்களும் செறிந்த திருவடிகளே நமக்கு அடைக்கலம் நல்குவன என்பதனை அறிந்துவிட்டேன் . ஆதலின் , அவற்றையே நமக்குப் பற்றுக்கோடாக எப்பொழுதும் நினைப்பாயாக . நினைந்திடு எப்போதும் - பாடம் .

குறிப்புரை :

நெஞ்சே , கழலே பற்றாய் நினைந்திடப் போது . இந்தப் பாரை முற்றும் சுற்றாய் அலைகடல் மூடினும் நமக்குப் புகல் கண்டேன் . அப்புகல் , உற்றானும் அன்பனும் மதிக்கண்ணியினானும் ஆகிய திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணைவன் கழலே ஆகும் . ( தி .4 ப .94 பா .9) பற்று - திருவடிப்பற்று . ` பற்றுக பற்றற்றான் பற்று , அப்பற்றைப் பற்றுக ( இப் ) பற்றுவிடற்கு `. ( குறள் ). ` ஒற்றை யேறுடையானடியே யலால் பற்றொன்றில்லிகள் மேற்படை போகலே ` ( தி .5 ப .92 பா .10). நினைந்து இட என்று வெவ்வேறு வினையாகக் கொண்டு , தியானம் அருச்சனை இரண்டும் பொருளாகக் கூறலாம் . நெஞ்சே நினைந்து போது இடக் கழலே புகலாகக் கண்டேன் எனலும் , பாரை முற்றும் கடல் மூடினும் நமக்குப் புகல் கழலே எனக் கண்டேன் எனலும் ஆம் . புகல் ; அடைக்கலம் ; கதி ; சரணம் ; போக்கு , வீடு என்பன ஒரு பொருளன . சுற்றாய் - சூழ்ந்து , சுற்று ஆகி ; சூழ்வதாகி . அலைகடல் - அலைகின்ற கடல் ; வினைத்தொகை . மூடுதல் பிரளயகாலக் குறிப்பு . நமக்குப் புகல் ; நமக்குற்றான் என்றிருபாலும் ஒட்டும் இடைநிலை விளக்கு எனலுமாம் . உற்றான் - உறுதுணை . உற்றான் ஒருமை . உற்றார் பன்மை . ` உமையவட்கன்பன் ` என்றதால் , மேல் ( தி .4 ப .94 பா .1) ` இமையவட் கன்பன் ` என்றிருந்ததோ என்றையுறலாகின்றது . முற்றாமதி ; முளை மதி ; பிறை . மதிக்கண்ணி - பிறையாகிய கண்ணி . ` தாரன் மாலையன் தண்ணறுங் கண்ணியன் ` ` கங்கை காணக் கொடார் முடிக் கண்ணியை ` ( திருக்குறுந்தொகை ). ` மாதர்ப்பிறைக் கண்ணியான் ` ( தி .4 ப .3 பா .1,5,8-11).

பண் :

பாடல் எண் : 3

விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங்
கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையா னடிய ரடியடி யோங்கட் கரியதுண்டே.

பொழிப்புரை :

காளை வாகனனாகிய பெருமான் விரும்பி அடியேன் உள்ளத்தில் இருக்கின்றான் . இனி நம்பக்கம் துயரங்கள் அடையா . தீவினைகள் நெருங்கா . கூற்றுவனுக்கு யாங்கள் அஞ்ச மாட்டோம் . பிரமனைப் போன்ற அந்தணர்கள் வாழ்வதும் நாற்பக்கங்களும் தாமரைகள் மலர்ந்திருப்பதுமாகிய திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானுடைய அடியவர்களுக்கு அடித்தொண்டர்களாகிய எங்களுக்குச் செய்ய இயலாத அரிய செயல் என்பது ஒன்று உண்டோ ?

குறிப்புரை :

விடையான் - ` எருத்துவாகனன் ` என் உள்ளத்து விரும்பி இருந்தான் . நமக்கு இங்கு இனி அவலம் அடையா ; அரு வினை சாரா ; நமனை அஞ்சோம் . அடியோங்கட்கு அரியது உண்டே ? இல்லை என்றவாறு . என் உள்ளத்து இருந்தான் - ` மனத்துள் இருக்க ஏன்றான் ` ( தி .4 ப .93 பா .1). ` நமக்கு ` ( தி .4 ப .94 பா .2.). அவலம் - மனக்கவலை . ` நன்றறிவாரிற்கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர் ` ( குறள் . 1072). அபலம் என்னும் வடசொல்லின் திரிபாகக் கொண்டு பலம் இன்மை எனலும் அழுகை எனலும் ஈண்டுப் பொருந்தா . அருவினை - நீங்குதற்கரிய வினை . ` இருவினை `. பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே `. ` அல்லல் என்செயும் ? அருவினை என் செயும் ?` நமனை அஞ்சோம் :- ` நாமார்க்குங் குடி யல்லோம் நமனையஞ்சோம் ` ( தி .6 ப .98 பா .1). புடை ஆர் கமலம் - பக்கத்தில் நிறைந்த தாமரை . ஊர்ப் பக்கத்து நில நீர் வளம் குறித்தது . அக் கமலத்து அயன் என்றது இனம் பற்றியது . அயன் (- பிரமன் ; மலரவன் ) போல்பவர் மறையவர் . வேதியர் வாழும் பாதிரிப்புலியூர் . உடையான் - ` சுவாமி `. அடியர் அடி . அவ்வடிக்கு அடியோங்கள் . அடியோங்கட்கு அரியது உண்டோ ? இல்லை . ஏகாரம் எதிர்மறைப் பொருட்டாய வினா .

பண் :

பாடல் எண் : 4

மாயமெல் லாமுற்ற விட்டிரு ணீங்க மலைமகட்கே
நேயநிலாவ விருந்தா னவன்றன் றிருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பாதிரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையு ணின்றனவே.

பொழிப்புரை :

மலைமகளாகிய பார்வதியிடத்தில் அன்பு நிலைபெற்றிருக்க உள்ளவனாகிய பெருமானுடைய திருவடிக்கண் உலகமெல்லாம் வந்து வழிபடுமாறு திருப்பாதிரிப்புலியூரில் விரும்பித் தங்கியிருக்கும் அப்பெரியவனுடைய தாமரை போன்ற திருவடிகள் மாயை எல்லாம் முழுதும் அகன்று ஆணவம் அகலுமாறு அடியேன் உடைய சிந்தையில் நிலையாக உள்ளன .

குறிப்புரை :

மாயம் எல்லாம் முற்றவிட்டு - மாயையெல்லாம் முழுதும் அகன்று . இருள் நீங்க - ஆணவம் அகல . மாயை நீங்கின் வினையும் நீங்கும் . நீங்கவே மும்மலமும் நீங்கினவாம் . அவை நீங்க மலைமகட்கே நேயம் நிலாவும் . ந - மாயை ( கன்மம் ). ம - ஆணவம் . வா - மலைமகள் . சி - தோன்றாத் துணை . ய - அப்பர் . மாயமெல்லாம் முற்றவிட்டது நகாரநீக்கம் . இருள் நீங்கியது ஆணவ நீக்கம் . மலைமகட்கே நேயம் (- அன்பு ) நிலாவியது , வகாரம் பற்றாக யகாரம் உறுதல் . இருந்தான் ( நல்லான் ) சிகாரம் . நல்லான் மலர்ப் பாதம் அப்பர் சிந்தையுள் நின்றது யகாரம் ஈசனில் ஏகமானதென்க . ஆசு - ஆணவம் . அகலுமா - நீங்குமாறு , அருளுமா - அருளுமாறு . ` ஆசுறு திரோதமேவா தகலுமா சிவமுன்னாக , ஓசைகொள் அதனின் நம்மேல் ஒழித்து அருள் ஓங்கும் . மீள வா சியை அருளுமா ய மற்று அது பற்றா உற்று அங்கு ஈசனில் ஏகம் ஆகும் இது திருவெழுத்தின் ஈடே ` ( சிவப்பிரகாசம் . 92) இதில் ` நம்மேல் ` என்றது நகாரத்தையும் அதன் வழி நின்ற மகாரத்தையும் என்னும் பொருளதாம் . ந + மேல் - நம்மேல் ; உம்மைத் தொகை . இதற்குப் பிறர் உரைத்தவை பொருந்தாமை உணர்க . தேயம் - உலகம் . மேய - மேவிய . நல்லான் - தோன்றாத் துணையாயிருந்து கடலினின்று கரையேறச் செய்த நலம் புரிந்தவன் . சிந்தையுள் பாதம் நின்றன :- ( தி .4 ப .94 பா .7).

பண் :

பாடல் எண் : 5

வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே.

பொழிப்புரை :

மெய்யுணர்தல் இல்லாத அறியாமையை உடைய மனமே ! நமக்கு என்று சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி அவனை மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது , செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ?

குறிப்புரை :

அறிவு இல்லாப் ` பேதை நெஞ்சே , நமக்கு வைத்த பொருள் ஆம் என்று சொல்லி , மனத்து அடைத்து , சித்தம் ஒருக்கி ` சிவாய நம ` என்று சொல்லிக் கொண்டிரு . அப்படி இருக்கின் அல்லால் அத்தன் அருள் பெறலாகுமோ ? ஆகாது . சிவாயநம என்று இரு . ` சிவனே என்று இரு ` என்று ஏவுதல் இயற்றுதல் இரண்டும் இன்றும் உலக வழக்கில் உள . நமச்சிவாயத் திருப்பதிகம் முதலியவற்றுள்ளே தூலவைந்தெழுத்தும் , ஈண்டும் ` சிவாய நம என்று நல்லம் மேவிய நாதன் ` என்பது முதலிய பிற இடத்தும் சூக்கும வைந்தெழுத்தும் , ` விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும் மண்ணினார் மறவாது சிவாய என்று எண்ணினார்க்கு இடம் எழில் வானகம் பண்ணினாரவர் பாலைத் துறையரே ` என்னும் திருக்குறுந்தொகையுள் , அதிசூக்கும வைந்தெழுத்தும் உபதேசித்தருளியவாறு காண்க . ` பேரெழுத் தொன்றுடையான் ` என்று திருவெறும்பியூர்த் திருத்தாண்டகத்தில் உபதேசித்தருளியதும் உணர்தற்பாலது . ` மொய்த்த கதிர் மதிபோல் வார் ` அந்தணர் . அறிவு , கடன்மை தவறாமை , காலந்தவறாமை முதலியவற்றால் இரு சுடரையும் போல்வார் அ ( க்காலத்து ) ந்தணர் . அவர் எனல் சுட்டன்று ; போல்வார் என்னும் முன்மொழிப் பொருளதாய் நின்றதாகும் . ` எழில் வானகம் பண்ணினாரவர் ` என் புழியும் அதுவே ஆகும் . இருக்கின் அருள் பெறலாம் . அல்லால் பெறல் ஆமோ ? ஆகாது . அறிவில்லாமையே பேதைமைக்கு ஏது . பேதைமை மயக்கம் ; சிவாய நம என்று இருந்து அருள் பெறல் வேண்டும் எனும் அறிவு இல்லாமை .

பண் :

பாடல் எண் : 6

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.

பொழிப்புரை :

திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே ! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன் . கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன் . வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக .

குறிப்புரை :

கருவாய்க் கிடந்து - கருவிற் கிடந்து . கழலே நினையும் கருத்து - திருவடியையே நினைக்கின்ற காதல் . ` கருதல் என்றதன் மரூஉவே காதல் என்பது . ` கருதியது முடித்தலும் காமுறப் படுதலும் ` என்ற ( பெரும்பாணாற்றுப்படை த் ) தொடரின்கண் உள்ள முற்பகுதிக்கு தன்னெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறைகிடவாமல் முடிக்க வல்ல தன்மையையும் ` என்று உரைத்ததும் ` ` நுகர்தற்குரிய மகளிரை நுகர்ந்து பற்று அறாக்கால் பிறப்பு அறாமையின் கருதியது முடிக்கவேண்டும் என்றார் ` என்று விளக்கியதும் நோக்கின் , இச்சொற்பொருளும் ` காதல் ` என்றதன் தொல்லுருவும் இனிது விளங்கும் . ` காதல் ` என்றதன் முதனிலை யாது ? இறுதிநிலை யாது ? காது + அல் எனல் பொருந்துமோ ? இங்குத் திருவடிக் காதல் உணர்த்தப்பட்டது . ` காதல் வழிபாடு ` ( தி .12 கழறிற்றறிவார் . 14). உருவாகித் தெரிந்து - கருவின் நீங்கி வெளிப்படற்குரிய உருவாய்த் தெரிந்து . தெரிதல் - ஆராய்தல் ; தேர்தல் . நாமம் ஆகிய திருவைந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றனுருவெனத் தெரிந்து . ` சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்தும் அவனெழுத்தஞ்சின் அடைவு ஆம் `. ( உண்மை விளக்கம் . 42). உருவாய்த் தெரிதல் செபித்துணர்தலுமாம் . செபித்தலை உருவேற்றுதல் என்று வழங்குப . ` உருவங் காண்டலும் நாடினேன் ` ( தி .4 ப .11 பா .7). நாமம் - திருநாமம் ; திருவைந்தெழுத்து . ` நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் ; சாம் அன்று உரைக்கத் தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே ` ( தி .4 ப .103 பா .3) ` விக்கி அஞ்செழுத்தும் ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே ` ( தி .4 ப .95 பா .4) ` துஞ்சும்போதும் நின்நாமத் திருவெழுத்தஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே ` ( தி .5 ப .27 பா .3). ` திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில் ... ... இறக்கின்றாரே ` ( தி .6 ப .95 பா .6). ` திருநாமம் அஞ்செழுத்தும் சோராமல் எப்பொழுதும் சொல் ` ( தி .11 கைலைபாதி , காளத்திபாதி . 100). பயின்றேன் - நாவாற் சொல்லிச் சொல்லிப் பயிலப் பெற்றேன் . நாவினுக்கு அருங்கலம் ஆக்கிக்கொண்டேன் . திருநீறு திருவாகிப் பொலியும் வண்ணம் சிவாய நம என்று சொல்லி அதனை அழகுறப் பூசினேன் . இவ்வாறு உள்ளம் கருத உரை பயில உடல் அணிய முப்பொறியாலும் தப்பொன்றாவாறு வழிபட்ட அடியேனுக்கு நீ சிவகதி தருவாய் . என் கடன் முடித்தேன் . நின் கடன் சிவகதி தருவது என்றவாறு . பாதிரிப் புலியூர் அரனே நீ சிவகதி தருவாய் . ` கருவாய் `:- ஏழனுருபேற்ற பெயர் . ` உருவாய் ` திருவாய் ` இரண்டனுள்ளும் ` ஆய் ` என்றது இறந்தகால வினையெச்சம் . திருவாய் பொலிய என்னும் பாடத்திற்கு அழகிய வாய் பொலியச் சிவாயநம என்று சொல்லி நீறு அணிந்தேன் எனல் வேண்டும் . ` பொலிய ` என்பது என்று என்பதனது சொல்லெனெச்சத்தொடு முடியும் . பொலியச் சொல்லி . ` தருவாய் ` என்றது ` தருசொல் வருசொல் ஆயிருகிளவியும் தன்மை முன்னிலை ஆயீரிடத்த ` என்றதற்குத் தக நின்றதாயினும் , தா என் கிளவி ஒப்போன் கூற்றே ` என்றதற்குத் தகுமோ எனின் , அதனாலும் தகும் என்க . தக்கவாறு யாதோ எனின் கூறுதும் . ` அறிவினுள்ளே என்றும் நின்றிடுதலாலே இவன் அவன் என்னலாமே ! ` சிவன் சீவன் என்ற இரண்டும் சித்து ஒன்றாம் `. ` அநந்நியமாய் இருக்கும் `. அநந்நியமாகக் காண்பன் ` என்னும் தமிழ்ச் சிவாகமம் ஆகிய சிவஞானசித்தி வசனத்தால் அதுவும் தக்கதாதல் அறிக . ` கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர் ` ( தி .6 ப .89 பா .9). ` கருவுற்றிருந்துன் கழலே நினைந்தேன் ` ( தி .4 ப .96 பா .5.) ` கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் ; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் ` ( தி .4 ப .99 பா .6).

பண் :

பாடல் எண் : 7

எண்ணா தமர ரிரக்கப் பரவையு ணஞ்சையுண்டாய்
திண்ணா ரசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழனங் கருத்தி லுடையனவே.

பொழிப்புரை :

முதலில் உன்னைத் தியானிக்காமல் , கடலில் விடம் தோன்றிய பின் அமரர்கள் உன்னை வேண்டக்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டாய் . வலிமை நிறைந்த அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவனே ! பண்ணின் பயனாம் நல்லிசைப் பாடல்கள் ஒலிக்கின்ற பாதிரிப் புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனே ! உன் திருவடிகள் எங்கள் உள்ளத்தில் உள்ளன .

குறிப்புரை :

உண்டாய் செற்றவனே , நுதலாய் என அழைத்து , ( நின் ) கழல் ( கள் ) நம் கருத்தில் உடையன என்றார் . எண்ணாதுண்டாய் என்றும் எண்ணாதிரக்க என்றும் இயைத்து எண்ணாமையை அமரர்க்கும் உண்டவனுக்கும் ஏற்றலாம் . தாம் அமரராயிருக்க எண்ணி , நஞ்சு உண்டானும் அமரனாயிருக்க எண்ணாமையும் இரந்தால் வரும் விளைவு யாது என எண்ணாமையும் பிறவும் அமரர் கண் முடியும் . திருநீலகண்டப் பெருமானார்க்கு நஞ்சுண்ணல் அருஞ்செயலன்று எண்ணாமையாவது மதியாமை . பரவை - பரந்தகடல் ; காரணப் பெயர் . திண்ணார் - வலியர் . திண்ணராகிய அசுரர் . திண் ஆர் எனப் பிரித்து வலிமை பொருந்திய என்றலுமாம் . செற்றவனே - அழித்தவனே . பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் :- ` வேதப் பயனாம் சைவம் `. அவ்வேதம் ` பண்ணின் பயனாம் நல்லிசை` நிறைந்து அமைந்த பொருள்களையுடைமையால் , அவற்றைப் பயில்கின்ற சிறப்பு அப்புலியூர்க் குறித்து . சாமகானம் பயில்கின்ற புலியூரான் எனலுமாம் கண்ணார் நுதலாய் - நுதலிற் பொருந்திய கண்ணுடையாய் . கழல் - திருவடி . இடப் பொருளாகு பெயர் நம் கருத்தில் உடையனவே :- கருத்தில் இருந்து நம்மை ஆளாக உடையன . நாம் உடைமை . அவை உடையன .

பண் :

பாடல் எண் : 8

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

பொழிப்புரை :

இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற , திருப்பாதிரிப் புலியூரில் உறையும் , செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் .

குறிப்புரை :

இவ் வையகத்தே தொழுவார்க்கு இரங்கியிருந்தருள் செய் ( கின்ற ) பாதிரிப் புலியூர்த் தீவண்ணனே , ( அடியேன் மறுமையில் ) புழுவாய்ப் பிறக்கினும் , புண்ணியா என் மனத்தே உன்னடி வழுவாதிருக்க வரம் தரவேண்டும் என்று இயைத்துணர்க . யான் புழுவாய்ப் பிறக்கினும் என் மனத்தே உன்னடி வழுவாதிருக்க வரந்தரவேண்டும் என்றதால் , எப்பிறப்பிலும் ஆண்டவனை அடிமை மறத்தலாகாது . ` தனக்குன்றமா வையம் சங்கரன் றன் அருள் அன்றிப் பெற்றால் மனக்கு என்றும் நஞ்சிற் கடையா நினைவன் ; மதுவிரியும் புனக்கொன்றையான் அருளால் , புழுவாகிப் பிறந்திடினும் , எனக்கு என்றும் வானவர் பொன்னுலகோடு ஒக்க எண்ணுவனே !` ( தி .11 பொன் வண்ணத்தந் .43) ` பொய்யா நரகம் புகினும் துறக்கினும் போந்து புக்கு இங்கு உய்யா உடம்பினொடு ஊர்வ நடப்ப பறப்ப என்று நையா விளியினும் நால்நிலம் ஆளினும் நான்மறை சேர் மையார் மிடற்றான் அடி மறவா வரம் வேண்டுவனே ` ( தி .11 பொன் வண்ணத்தந்தாதி . 98) ` படைபடு கண்ணி தன் பங்க , தென்றில்லைப் பரம்பர , வல்விடைபடு கேதுக . விண்ணப்பம் கேள் . என் விதிவசத்தால் , கடைபடு சாதி பிறக்கினும் நீ வைத்தருளு கண்டாய் , புடைபடு கிங்கிணித்தாட் செய்ய பாதம் என்னுள் புகவே ` ( கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் 17) அருள் தரு சீர்த்தில்லை யம்பலத்தான்றன் அருளின் அன்றிப் பொருள் தரு வானத்தரசு ஆதலின் , புழுவாதல் நன்றாம் . ` சுருள்தரு செஞ்சடையோன் அருளேல் துறவிக்கு நன்றாம் இருள் தரு கீழ் ஏழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே `. ( கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் . 23) ` புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே புழுவுக்கு இங்கு எனக்குள்ள பொல்லாங்கு இலை . புழுவினும் கடையேன் ` புனிதன் தமர் குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே `. ( தி .5 ப .91 பா .4). புண்ணியா என அழைத்தது ; தாம் செய்த புண்ணியத்தின் பயனாக உள்ளவனும் வழுவாதிருக்கும் வரமான பயனைக் கொடுப்பவனும் சிவபிரானே என்று குறித்தற்கு . ` புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே நண்ணிய ஞானத்தினால் இரண்டினையும் அறுத்து ` ( சித்தியார் . 283). ` செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் ` ( தி .12 பெரிய . 3644) என்றதில் , கொடுப்பான் சிவன் என்றது அறிக . புனற் கங்கையைச் செஞ்சடைமேல் வைத்த தீவண்ணன் . ` செய் ` வினை முதனிலை பாதிரிப்புலியூரன் என்னும் பெயரொடு கூடி வினைத் தொகை நிலையாயிற்று . ஏவலாகாது .

பண் :

பாடல் எண் : 9

மண்பாத லம்புக்கு மால்கடன் மூடிமற் றேழுலகும்
விண்பா றிசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சனெஞ்சே
திண்பா னமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.

பொழிப்புரை :

நெஞ்சே ! இவ்வுலகம் பாதல உலகுக்குப் போய் அழியுமாறு நிலநடுக்கம் உற்று உலகைக் கடல் வெள்ளம் மூட மற்ற ஏழுலகங்களும் வானத்திலே இருப்புக் குலைந்து சிதறச் சூரிய சந்திரர் தம் நிலையான இருப்பிடத்தைவிட்டுக் கீழே விழுந்தாலும் எதனைப் பற்றியும் அச்சம் கொள்ளாதே . திருப்பாதிரிப்புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனாய் ஞான ஒளியை உடைய பெருமானுடைய திருவடிகளாகிய திண்ணிய பகுதி நமக்குப் பாதுகாவலுக்கு உளது என்பதை நாம் அறிவோம் .

குறிப்புரை :

நெஞ்சே , அஞ்சல் . வீழினும் அஞ்சல் . நமக்குத் திண்பால் ஒன்று கண்டோம் . அத் திண்பால் கழலிணையே மண்ணுலகம் பாதலம் புக்கு அழிய நிலநடுக்கம் ( பூகம்பம் ) உற்றுப் பெருங்கடல் வெள்ளம் பெருக்கெடுத்து வந்து சூழ்ந்து , மற்றும் ஏழுலகும் வீழினும் விண்ணில் திசை தடுமாறி இருசுடரும் வீழினும் நமக்கு அச்சம் இல்லை . நீ அஞ்சாதே நெஞ்சே , அவ்வாறு உலகம் அழியினும் நமக்கு அழியாத இடம் உளது . திண்பால் - அழியாத இடம் ; உறுதியான இடம் ; திண்ணியதாயபால் . திண்பால் ஒன்று கண்டோம் . அவ்வொன்று எது ? கழலிணையே . திருப்பாதிரிப் புலியூரிற்றிருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள கடவுள் . கண்பரவிய நெற்றியையுடைய கடவுள் . நெற்றிக்கண்ணுடையவராகிய கடவுள் . கடவுட் சுடர் - சிவப்பிரகாசம் . கடவுட் சுடரான் - சிவப் பிரகாசன் , சுடரானது கழலிணை . ` வானம் துளங்கில் என் ? மண் கம்பம் ஆகில் என் ? மால்வரையும் தானம் துளங்கித் தலைதடுமாறில் என் ? தண் கடலும் மீனம்படில் என் ? விரிசுடர் வீழில் என் ? வேலை நஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே ! ( தி .4 ப .112 பா .8.) என்றதில் வான்துளக்கம் மண்கம்பம் மலைத் துளக்கம் மலையிடத்தின் தலைதடுமாற்றம் கடல் வறட்சி , விரிசுடர் வீழ்ச்சி முதலிய உலகழி காலத்தும் அழியாத சிவனுக்கு அடியர் ஆனார்க்கு அச்சம் சிறிதும் இன்றென்றவாறு அறிக . மண்பாதலம் புகுதல் - நிலம் நிலையின் இழிந்து ஆழ்தல் ; நிலம் நடுங்குதல் ; பிளத்தல் முதலியன . மால் கடல் மூடுதல் - ` பெருங் கடல் மூடி ` ` இருங் கடல் மூடி ` ( தி .4 ப .112 பா .7); நீர் பெருகுதல் , மண் பாதலம் புகின் நீர் மூடும் . விண்பால் திசை கெடுதல் - நாள் கோள் முதலிய விண் பொருள் வீழத் திசை கெடும் . எட்டுத் திசையிலும் உள்ள எல்லாம் கெடும் . ( தி .4 ப .112 பா .7, 8).

பண் :

பாடல் எண் : 10

திருந்தா வமணர் தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா வரக்க னுடனெரித் தாய்பா திரிப்புலியூர்
இருந்தா யடியே னினிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே.

பொழிப்புரை :

மலையைப் பெயர்க்க முற்பட்ட , நல்லறிவு பொருந்தாத இராவணனுடைய உடலை நெரித்தவனே ! திருப்பாதிரிப் புலியூரில் உறைபவனே ! மனம் திருந்துதல் இல்லாத சமணருடைய தீயவழியிலே ஈடுபட்டு மனம் மயங்கி , இப்பொழுது முத்தியைத் தரும் திருவடிகளில் சரணமாகப் புகுந்து விட்டேன் . இனி , அடியேன் பிறவி எடுக்காத வகையில் அடியேனை ஏற்றுக் கொள்வாயாக .

குறிப்புரை :

வரை எடுத்த பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் , பாதிரிப் புலியூர் இருந்தாய் என்று அழைத்து , ` முத்திதரும் தாளிணைக்கே சரணம் ( அடைக்கலம் ) புகுந்தேன் இனிப் பிறவாமல் வந்து ஏன்று கொள் என வேண்டுகின்றார் . அமணர் திருந்தாதவர் ; பகைவர் . அவர்நெறி தீ நெறி . அந்நெறியிற் படுதல் தீநெறிப் படுதல் . அது பட்டுத் திகைத்தேன் . அத் திகைப்பு ஒழிந்து தெளிந்தேன் . தெளிந்து முத்திதரும் தாளிணைக்கே சரணம் புகுந்தேன் . புகுந்தமையால் , யான் இனிப் பிறவாமல் நீ வந்து ஏன்று ( தாங்கிக் ) கொள் . ` கடையவனேனை ... ... சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே ` ( தி .8 திருவாசகம் ). வரை - கயிலை மலை , எடுத்த அரக்கன் ; பொருந்தா அரக்கன் . பொருந்தாமை - தனது சிவ பக்திக்கும் கைலையை எடுத்த செயலுக்கும் பொருத்தமில்லாமை . இதிற் பிறாவமை வேண்டினார் . மேல் ( தி .4 ப .94 பா .8.) பிறப்பு உண்டாயின் மறவாமை வேண்டினார் . மறவாமையும் சிவதரிசனமும் கிடைக்கப் பெற்றால் , மனித்தப்பிறவியும் வேண்டுவதென்றார் . ( தி .4 ப .81 பா .4.) எனினும் , ` வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை ` என்றதே குறிக்கோளாகும் .
சிற்பி