திருவீழிமிழலை


பண் :

பாடல் எண் : 1

வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலையுளீர்
நான்சட்ட வும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே

பொழிப்புரை :

வானத்திலே நிலவொளி ஒழுக ஒழுக நின்று ஒளிவிடும் பிறையோடு அதன் அருகில் தேன் ஒழுகஒழுக நின்று , அழகு செய்யும் கொன்றை மலரைச் சென்னியில் அணிந்தவரே ! பெண் மானின் பார்வை போன்ற மருண்ட நோக்கினை உடைய பார்வதியின் கணவரீர் ! பளிங்குமணி போன்ற தெளிந்த நீரை உடைய வீழி மிழலையில் உள்ள செம்மையீர் ! அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைத் தொண்டனாக மனத்துக் கொள்ளுங்கள் .

குறிப்புரை :

வான் - வானில் . சொட்டச் சொட்ட - நிலா ஒழுகஒழுக நின்று ; அட்டும் - இடும் ( மதி ), வளர்மதி - பிறை . தேன் சொட்டச் சொட்ட நின்று அட்டும் (- இடும் ) கொன்றை . திருக்கொன்றையைச் சென்னியில் வைத்தீர் சென்னி - தலையுச்சி . சடைக்கு ஆகுபெயராக்கலும் பொருந்தும் . மான்பெட்டை - பெட்டைமான் ; பெண்மான் ; ` பிணைமான் இனிதுண்ணவேண்டிக் கலைமாத் தன் கள்ளத்தின் ஊச்சும் சுரம் ` ( ஐந்திணையைம்பது . 38) என்புழி ஆணைக் கலை என்றும் பெண்ணைப் பிணை என்றும் குறித்தல் அறிக . மான்நோக்கி - அணிமுலையம்மை . ( சுந்தர குசாம்பிகை ). நோக்கி மணாளீர் - நோக்கியின் மணவாளரே . மணி நீர் மிழலையுளிர் :- அழகிய நீர்வளமிக்க திருவீழிமிழலைவாணரே , ` நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின் ` ( குறள் 17) என்னுங் குறளுரையில் , ` தன்னியல்பு குறைதலாவது நீர்வாழுயிர்கள் பிறவாமையும் மணி முதலாயின படாமையும் ஆம் ` என்ற பரிமேலழகர் விளக்கம் அறிக . இங்கே , ` மணி நீர் ` என்றதற்கு அப் பொருளுமாம் . நான் மறக்கினும் என்னைக் குறிக்கொண்மின் . ` சட்ட - செம்மையே ` ` சட்ட என்பது செப்பப் பொருட்டாயதோ ரகர வீற்றிடைச் சொல் . அது சட்டம் என இழிவழக்கில் மகரவீற்றாய் மரீஇயிற்று `. ( சிவஞானபோதமாபாடியம் . சூ . 9. அதிகரணம் . 2. வெண்பா . 2 ).

பண் :

பாடல் எண் : 2

அந்தமு மாதியு மாகிநின் றீர்அண்ட மெண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழ லோம்பு மிழலையுள் ளீர்என்னைத் தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

ஆதியும் அந்தமுமாக உள்ளவரே ! உலகங்களின் எட்டுத்திசைகளிலும் பற்றினையும் பற்று நீக்கத்தையும் உயிரினங்கள் இடையே பரப்புகின்றவரே ! காளையை இவர்தலை விரும்பு கின்றவரே ! விரும்பத்தக்க முத்தீயை அந்தணர் பாதுகாக்கும் மிழலை நகரில் உள்ளவரே ! அடியேனைக் கூற்றுவன் தென் திசையில் செலுத்தும் போது அடியேன் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும் .

குறிப்புரை :

அந்தமும் ஆதியும் ஆகிநின்றீர் - முடிவும் முதலுமாகி நின்றவரே , ` ஈறே முதல் ` ( சிவஞானபோதம் . சூ . 1 அதி . 3 ). அண்டம் எண் திசையும் பந்தமும் வீடும் பரப்புகின்றீர் - அண்டங்களில் எட்டுத் திசையிலும் கட்டும் வீடும் பரவச் செய்கின்றவரே . பந்தமும் வீடும் படைப்போன் காண்க . ( தி .8 திருவாசகம் . 3. 52) ` பந்தமும் ஆய் வீடும் ஆயினார் ` ( தி .8 திருவா . 214). பசு ஏற்று உகந்தீர் - விடையேறுதலை விரும்பினீர் . ` பசுவேறித் திரிவீர் ` ` பசுவேறும் எங்கள் பரமன் `. ஏறு - ஏற்று ; கூறு - கூற்று . நாறு - நாற்று . ஏற்றை (- விடையை ) ஏறினீர் எனலுமாம் . உகப்பு - உயர்வு . வெந்தழல் ஓம்பும் மிழலை - தீவேட்கும் செந்தமிழந்தணர் வாழும் திருவீழிமிழலை . மிழலையுள்ளீர் - மிழலையுள் உள்ளவரே , தென்றிசைக்கே - எமலோகத்துக்கே , என்னை உந்திடும் ( செலுத்திடும் ) போது மறக்கினும் என்னைக் குறிக்கொள்மின் .

பண் :

பாடல் எண் : 3

அலைக்கின்ற நீர்நிலங் காற்றன லம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர் கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கு மிழலையு ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

அலைவீசும் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகவும் உள்ளவரே ! மான்கன்று பொருந்திய கையை உடையவரே ! கலைகளினுடைய உண்மைப் பொருளாக உள்ளவரே ! யாரையும் புறக்கணிக்காமல் அருள் வழங்கும் மிழலைப் பெருமானே ! வாழ்க்கை இறுதிக் காலத்தில் உடம்பில் கைகளும் கால்களும் செயலிழக்க அடியேன் நும்மை மறந்தாலும் அடியேனை மனத்தில் குறித்துக் கொண்டு காக்கவேண்டும் .

குறிப்புரை :

அலைக்கின்ற நீர் - அலைதலைச் செய்கின்ற நீரும் ; நிலம் - மண்ணும் ; காற்று - காற்றும் ; அனல் - தீயும் ; அம்பரம் ஆகிநின்றீர் - விண்ணும் ஆகி நின்றவரே ! ` இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி ` ( தி .6 ப .94 பா .1). எல்லாமாய் அல்லனுமாய் இருப்பவனாதலின் , ` மண்ணல்லை விண்ணல்லை ... ... வாயுவல்லை ... ... எரியுமல்லை ` என எல்லாம் அல்லனாதல் உணர்த்தப்பட்டது . கலைக்கன்று - கலை மான் கன்று . சேரும் கரத்தீர் - பொருந்தும் கையையுடையவரே . ` கானமறியொன்று கையுடையான் ` ( தி .4 ப .93 பா .2). கலைப்பொருள் ஆகி நின்றீர் - கலைகளினுடைய உண்மைப் பொருளாகி நின்றீர் - ` கல்வி ஞானக் கலைப் பொருள் ஆயவன் ` ( தி .5 ப .76 பா .6). விலக்கு இன்றி நல்கும் மிழலையுளீர் - விலக்கலின்றி எல்லார்க்கும் எப்பொருளும் தருகின்ற திருவீழி மிழலையில் திருக்கோயில் கொண்டிருப்பவரே . மெய்யில் - உடம்பில் ; கையொடுகால் - கையும் காலும் ; குலைக்கும் இன்று . ` மெய்யிற் கையொடுகால் அசை யாத காலம் கூட்டினீங்கி உயிர்போங் காலம் . அக்காலம் நும்மை மறக்கலாகும் . அப்பொழுதும் மறவாது நும்மை நினைக்கச் செய்யுந் திறத்தை எனக்கு அருளக் குறிக்கொள்மின் .

பண் :

பாடல் எண் : 4

தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி யஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

தீயை ஓம்பும் தக்கனுடைய தலையைத் தீயிலிட்டு அவன் செய்த வேள்வியை அழித்தவரே ! பேய்களைத் தன் விருப்பப்படி ஏவல்கொள்ளும் காளியைத் தேவியாகப் பெற்றுள்ளவரே ! தம் கையில் முக்கோலாகிய மூங்கிலைச் சுமந்து திரியும் அந்தணர்கள் மிகுந்த மிழலையில் உள்ளவரே ! இறுதிக் காலத்தில் விக்கல் எடுப்பதனால் திருவைந்தெழுத்தை ஓதுதலை மறந்து அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொள்மின் .

குறிப்புரை :

தீத் தொழில் - தீயோம்பும் வேள்வி . ` அக்கிநிகாரியம் `. தீத்தொழிலான் :- ஈண்டு வேள்வி செய்த தக்கனைக் குறிக்கும் . தலை - அவனது தலையை . தலை தீயில் இட்டுச் செய்த வேள்வி செற்றீர் - அவன் செய்த வேள்வியில் அவன் தலையை அவியுணவாக இட்டு , அதனை அழித்தவரே . தக்கன் தலையைப் போக்கி ஆட்டுத்தலை ஆக்கிய செயலைக் கந்தபுராணம் தட்சகாண்டத்திற் காண்க . பேய்த் தொழிலாட்டியைப் பெற்றுடையீர் - பேயின் தொழிலை ஆள்பவளைப் பெற்றுடையவரே . ` பேய் எருதும் பெருச்சாளியும் என்று ஏசத்தகும்படி ஏறுவதே இமையாத முக்கண் கூசத்தகும் தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும் இந்தத் தேசத்தவர் தொழும் நாரைப் பதியுட் சிவக்களிறே ` ( திருநாரையூர்ப் பிள்ளையார் இரட்டைமணிமாலை . 4). ` ஏந்திய சீர் வீர னற்குடியேந்திழைக்கும் இருந்தேன் நாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை ... ... நாரைப் பதியுள் விநாயகனே ` ( ? . 14) என்பவற்றால் பேயூர்தியுடையாள் ஒரு பெண் விநாயகர்க்குத் தங்கை முறையிற் கொள்ளப்பெறும் வரலாறு உண்டு . ஈண்டும் ` பேய்த் தொழிலாட்டியைப் பெற்றுடையீர் ` என்று பெற்றுடைமை குறிக்கப்பட்டது . வேய்தொழிலாளர் - அந்தணர் . பிடித்துத்திரியும் வேய் - திரிதண்டு . அது மூங்கிற் கொம்பு . விக்கி - தொண்டை விக்கி . அஞ்செழுத்தும் ஓத்து - திருவைந்தெழுத்தோதுதல் . அது சிவனை மறவாமைக்கு உபாயமாவது .

பண் :

பாடல் எண் : 5

தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுற்றியும் பத்திமையால்
மேற்பட்ட வந்தணர் வீழியு மென்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தே னிறக்க நமன்றமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

தோள்களில் பொருந்திய பாம்புகளையும் கையில் சூலத்தையும் மகிழ்ந்து அணிந்தும் , தொண்டாம் தன்மையால் மேம்பட்ட அந்தணர்கள் வாழும் வீழி நகரையும் அடியேனையும் சிறப்பாக உடையீர் ! நெடுங்காலம் உயிர்வாழ்ந்து பின் இறக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இவ்வுலகில் பிறப்பெடுத்த அடியேன் இறக்குந்தருவாயில் இயமனுடைய ஏவலரால் கைப்பற்றப்பட்டு உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

தோள் பட்ட நாகமும் சூலமும் சுற்றியும் - திருத்தோளிற் படுதலுற்ற பாம்பையும் சூலப் படையையும் அணிந்தும் . சுற்றுதல் - அணிதல் . ` உச்சிமீது சுற்றினள் ` ( உபதேச காண்டம் . உருத்திராக்க . 13) பத்திமை - ( அன்புடைமை ) தொண்டாந் தன்மை . மேல்பட்ட - மேன்மை அடைந்த . அந்தணர் - செந்தமிழந்தணர் . வீழியும் - திருவீழிமிழலைப் பதியையும் . என்னையும் - அடியேனையும் . வேறு உடையீர் - சிறப்பாகக் கொண்டவரே . வேறுடைமை :- அம் முதல்வன் வீழியிலும் என்னுள்ளத்திலும் சிறந்து நிற்கின்றான் என்றவாறு . ` தில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான் ` ( தி .8 திருக்கோவையார் ). ` எந்தமாதவம் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடவை ஆய பராபரன் அந்தம் இல்புகழ் ஆரூர் அரனெறி சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே ` ( தி .5 ப .7 பா .2) ` நெஞ்சே தவம் என் செய்தா ... ... மாமயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்துளும் தங்கவே ` ( தி .5 ப .39 பா .6) ` அடியேனுடைய நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே `. ( தி .5 ப .73 பா .4) ` என்னமாதவம் செய்தனை ... ... செந்நெறி மன்னுசோதி நம்பால் வந்து வைகவே ` ( தி .5 ப .77 பா .2) ` வேறாவுன்னடியேன் விளங்கும் குழைக் காதுடையாய் தேறேன் உன்னையல்லால் சிவனே என் செழுஞ்சுடரே ` ( தி .7 ப .28 பா .8). நாட்பட்டு - நெடுங் காலம் கழித்து . ( தி .4 ப .106 பா .3.) இறக்கப் பிறந்தேன் . இறக்கக் கோட்பட்டு எனல் பொருந்துமேற் கொள்க .

பண் :

பாடல் எண் : 6

கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத் தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயி லுறக்கத்தி லும்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

உருத்திராக்கமாலை அணிந்த கழுத்தை உடையவரே ! சுடுகாட்டில் எரிந்து புலால் நீங்கிய மண்டையோட்டினை உண் கலமாக உடையவரே ! வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே ! உணவு உண்ட போதும் , உணவின்றிப் பட்டினியாய் இருக்கும் போதும் நோயுற்ற போதும் , உறங்கும்போதும் , ஐம்பொறிகளால் செயற்படுத்தப்படும் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

கண்டி - உருத்திராக்கமாலை . கண்டிகை பூண்டு . ( தி .4 ப .111 பா .9) கண்திகைக்கச் செய்வது . கரிகாடு - கரிந்த காடு . பண்டி :- தலையோட்டைக் குறித்து நின்றது . பரிகலம் - உண்கலம் . உண் பொருட்கு ஆகுபெயர் . ` தலையதனிற்பலி கொண்டார் ` ( தி .6 ப .96 பா .1) ` நல்ல பரிகலம் திருத்தி ` ( திருவிளை . விருத்த . 24). பரிகலத்தை யுடையீர் ; பதிவீழிகொண்டீர் - திருவீழிமிழலைப் பதியைக் கோயில் கொண்டெழுந்தருளும் இடமாகக் கொண்டீர் . உண்டியில் பட்டினியில் ; நோயில் உறக்கத்தில் நும்மை மறக்கினும் என்றதுணர்க . உண்டபோதும் , பட்டினியாயிருக்கும்போதும் , நோயுடைய காலத்தும் , உறங்கும் போதும் திருவடி நினைவு அமையாது மறத்தல் இயல்பு . வழிபடுங் காலங்களில் வழிபடுவோர் இருத்தற்குரிய முறைகளைச் சைவபத்ததிகள் விதித்தவாறு நோக்கிக்கொள்க . ` உலாவல் நிற்றல் உறக்கம் உணர்வு உண்டிபட்டினி ` ( சிவஞான சித்தியார் . 285) என்றவற்றை நோக்கி ஒன்றற்கொன்று மறுதலையாகப் பொருத்திக்கொள்க . ஐவர் கொண்டியிற் படுதல் - ஐம்புலக் கள்வர் கொள்கையிற் சார்தல் ; புலனெறியிற் போதல் . ` புலனெறி நீத்து அருள்வழிபோய்ப் போதமாம் தன்வலியைப் பொத்திநின்ற மலவலிவிட்டு ` ( திருவிளையாடற் புராணம் ) கொண்டி :- கொள் + தி = கொண்டி . உள் + தி = உண்டி . உள் உண் என்றாயிற்று . பெள் - பெண் ; எள் - எண் என்பனபோலும் .

பண் :

பாடல் எண் : 7

தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி மிழலை யிருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேற் சிவந்ததொர் பாசத்தால் வீசியவெம்
கூற்றங்கண் டும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

இவ்வுலகைப்படைத்த பிரமனுடைய தலை ஒன்றனைக் கொய்தவரே ! தூய வெள்ளிய காளையை வாகனமாகக் கொண்டவரே ! அழகிய வீழிமிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே ! கோபம் கொண்டு என்மேல் சிவந்ததொரு பாசக் கயிற்றை வீசும் கூற்றுவனைக் கண்டு அடியேன் உம்மை மறந்தாலும் என்னைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

தோற்றம் கண்டான் - ` உண்டாக்கும் வண்ணம் கண்டான் ` ( சகல கலாவல்லி மாலை . 1) சிரம் - தலை . ஒன்று - ஐந்தலையுள் ஒன்று . ` ஆதிக்கணான் முகத்தில் ஒன்று ... ... தன்கை வாளால் சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவான் `. ( தி .6 ப .20 பா .1). ` தாமரையோன் சிரம் அரிந்து கையிற் கொண்டார் ` ( தி .6 ப .96 பா .1). தூய வெள்ளெருது :- ` வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பிலேனே ` ( தி .4 ப .84 பா .7). ஏற்றம் - ஏறுந்தொழில் . ஏறு , நாறு , சீறு , மாறு , கூறு முதலியவை ஏற்றம் , நாற்றம் , சீற்றம் , மாற்றம் , கூற்றம் என அம்மீறுற்று நிற்றல் அறிக . தோற்றம் (+ தோன்று + அம் ). எழில் - அழகு . திருவீழிமிழலையில் எழுந்தருளி யிருத்தலையுடையீர் . கூற்றம் சீற்றம் கொண்டு . கொண்டு வீசிய கூற்றம் . சிவந்ததொருபாசம் (- கயிறு ) வெங்கூற்றம் - ` கொடுங்கூற்று `. இறக்கும்பொழுது இறைவனை இறையும் எண்ணுதலியலாது . ` நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் , சாம் அன்றுரைக்கத் தருதி கண்டாய் எங்கள் சங்கரனே `. ( தி .4 ப .103 பா .3).

பண் :

பாடல் எண் : 8

சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் சூடிச்சொக் கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலையுள் ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

நீர்ச் சுழிகளை உடைய கங்கையையும் சந்திரனையும் சூடிச் சுத்த நிருத்தம் என்ற ஆடலை நிகழ்த்துபவரே ! பிறரால் பழிக்கப்படும் பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றியவரே ! நெற்றிவிழியிலிருந்து தோன்றிய நெருப்பு காமனது உடலைச் சாம்பலாக்குமாறு செய்தவரே ! வீழிமிழலையில் உள்ளவரே ! அடியேன் பிறவிக்கடலின் சுழியில் அகப்பட்டு உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

சுழி - நீர்ச்சுழி , திங்கள் - பிறை , சொக்கம் - சுத்த நிருத்தம் ( சிந்தாமணி . உரை . 672). பொன்னனையாள் சுத்த நிருத்தம் ஆடிப் பூவணவாணரைச் சேவித்து அடியாரை அருச்சித்து அருத்தி அருந்தும் நியமம் உணர்த்திய திருவிளையாடற் பாடலினுரையில் , நூற்றெட்டுக் கரணங்களை உடைத்தாய்ச் சாந்திக்கூத்து நான்கனுள் ஒன்றாயுள்ள சுத்த நிருத்தம் ` என்றெழுதியதறிக . சொக்கம் பயின்ற காரணத்தாலும் சொக்கன் எனப் பெயர் பெற்றான் கால்மாறியாடிய பால் வெண்ணீற்றன் . ` சடைமேல் மதியும் சூடித் திண்தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசைசேர நடமாடி ` ( தி .6 ப .45 பா .1) பழிப்பட்ட - பழியைப் பட்ட . அரை - திருவரையில் . பற்று - பற்றுதலை ; முதனிலைத் தொழிற் பெயர் . படர் தீ - படர்கின்ற தீ ; இயல்படை . விழிப்பட்ட காமனை அவ்விழித்தீப் பருகவிட்டவரே . திருவீழிமிழலையில் உள்ளவரே . பிறவிச்சுழி - பிறவியென்னும் பெருங்கடல் நீர்ச்சுழியில் , பிறவிச்சுழிப்பட்டு மறத்தலாவது :- பற்றறாது , மண் பொன் பெண் என்னும் மூன்றன் வகையிலும் ஆசைகொண்டு பிறந்திறந்துழலுதல் . அதனால் , திருவடியில் நினைவு செல்லாது .

பண் :

பாடல் எண் : 9

பிள்ளையிற் பட்ட பிறைமுடி யீர்மறை யோத வல்லீர்
வெள்ளையிற் பட்டதொர் நீற்றீர் விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப் பிக்க நமன்றமர்தம்
கொள்ளையிற் பட்டு மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

இளைய பிறைச்சந்திரனை முடியில் அணிந்தவரே ! வேதம் ஓதவல்லவரே ! வெள்ளிய நீற்றை அணிந்தவரே ! நீர் விரிந்து பரவிய மிழலையில் இருப்பவரே ! ஐம்புலப்பொறிகளின் நடுவில் அகப்பட்டு அவை என்னைக் கண்டு சிரித்து என்னைப் பலகாலும் தேய்க்கும்படி இயமதூதுவருடைய கொள்ளையிடும் செயலில் அகப்பட்டு அடியேன் உம்மை மறப்பினும் அடியேனைக் குறிக் கொண்மின் .

குறிப்புரை :

பிள்ளையிற்பட்ட பிறை - பிள்ளைப் பிறை ; இளம் பிறை . ` பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான் ` ( தி .5 ப .20 பா .10). மறை ஓதவல்லீர் - வேதாகமங்களைத் தோற்றி அவற்றை ஓத வல்லரே . வெள்ளையிற்பட்டதொர் நீற்றீர் :- ` வெள்ளை நீறு ` ( தி .3 ப .120 பா .2). ` விரிநீர் மிழலையுள்ளீர் `:- நீர்வள மிகுதிகுறித்தது . ( தி .2 ப .95 பா .10) நள்ளை - நடு , ஐவர் நள்ளையிற்பட்டு - ஐம்புல வேடர் நடுவகப்பட்டு . நக்கர் - சிரித்தலுடையவர் . சிரிப்போர் அவ்வைவர் . பிக்க - பிய்க்க . இறக்குங்கால் ஐவரும் பிரிதலைக் குறித்தது . பிய்த்தல் - பிரித்தல் . நமன்தமர் - எமதூதர் . கொள்ளை - கொள்ளல் . ஐவர் நக்கு அரைப்பிக்க எனப் பிரித்து ஐம்புலவேடரும் நகைத்து , அரைத்தல் செய்ய . அரைத்தல் , அரைப்பித்தல் அரைபடுவது உயிர் . அரைப்பது துயரம் . அரைப்பிப் பவர் ஐவர் . அரைதல் - தேய்தல் . உயிர் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் விட்டு நீங்கி இறக்கும் நிலையில் அதுபடும் துன்பத்தை ஐவர் அரைப்பிக்க அரைபடுவதாகக் கூறினார் . ` நமன் தமர்தம் கோட்பட்டு நும்மை மறக்கினும் ` ( தி .4 ப .95 பா .5) ஐவர் கொண்டியிற் பட்டு மறக்கினும் ( தி .4 ப .95 பா .6) பிறவிச் சுழிபட்டு நும்மை மறக்கினும் ( தி .4 ப .95 பா .8.) என்று மேல்வந்தவாறே ஈண்டும் ` நமன்தமர்தம் கொள்ளையிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மின் ` என்றவாற்றால் , சிவபிரானை எளிதில் மறத்தற்குக் காரணம் கூறியவாறும் , அவன் குறிக்கொண்டாலன்றி அவன் திருவடி நினைவுண்டாதல் அரிதென்று குறித்தவாறும் உணர்க .

பண் :

பாடல் எண் : 10

கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

மனத்தில் ஆத்திரம் கொண்டு இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பயன்படுத்திய கைகளும் உடம்பும் நெரிக்கப்பட்டு நெறுநெறு என்ற ஒலியோடு அழியும்படி அவனை அழுத்திய திருவடிகளால் கூற்றுவனை அழித்தவரே ! நறுமணம் கமழும் கொன்றை மாலையை முடியில் அணிந்தவரே ! மிக்க நீர்வளமுடைய மிழலையில் உள்ளவரே ! உயிர் போகும் நேரத்தில் அடியேன் உம்மை மறந்தாலும் அடியேனைக் குறிக்கொண்மின் .

குறிப்புரை :

கறு - கறுவுதல் . ` கறுத்தானவர் தம் செயல் ` ( கந்த புராணம் தாரகன் வதை . 158); முதனிலைத் தொழிற்பெயர் . கறுக் கொண்டு . கறுவுதலையுற்று . அரக்கன் - இராவணன் . கயிலையைப் பற்றிய கையும் இற ; மெய்யும் இற ; நெருக்கென்று இற . மெய் - உடல் . நெருக்கு கனல் , சுருக்கெனல் முதலியன வழக்கு . இறல் - ஒடிதல் ; முரிதல் . சேவடியால் நீறு செய்தீர் . கூற்றை நீறு செய்தீர் . கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காய் ` ( தி .4 ப .81 பா .2). ` காலன்றன்னைக் கால்தனிற் பிதிரவைத்தார் ` (312). ` காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி ` ( தி .6 ப .56 பா .10) வெறி - மணம் . வெற்றிவேர் , வெட்டி வேர் மரூஉ . கொன்றைமலர் மாலையை முடியிலே அணிந்தவரே . ` விரி நீர்மிழலையுள்ளீர் `. தி .4 ப .95 பா .9. ` இறக்கு இன்று ` இறக்கின்று - இறக்கும் இன்று . ஆண்டும் குலைக்கும் இன்று ( தி .4 ப .95 பா .3.) எனல் வேண்டும் போலும் .
சிற்பி