திருச்சத்திமுற்றம்


பண் :

பாடல் எண் : 1

கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில்
மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

ஒலிக்கும் தீயினைக் கையில் ஏந்திய தேவனே ! திருச்சத்திமுற்றத்தில் உகந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தே ! தலைமை உடையவனாய் விரைந்து வந்து உயிரைப் போக்கும் திறமையை உடைய கூற்றுவன் என்னைத் துன்புறுத்துவதன் முன்னம் , தாமரைப் பூப் போன்ற திருவடிகளின் அடையாளத்தை என்மேல் பொறித்து வைப்பாயாக . அங்ஙனம் பொறிக்காது வாளா விட்டு விட்டால் அழியாத பழி முழுதும் உன்னைச் சூழ்ந்து கொள்ளும் என்பதனை நீ உணர்வாயாக .

குறிப்புரை :

கூற்றம் கோவாய்க் குமைப்பதன் முன் என்மேல் பூவார் அடிச்சுவடு பொறித்துவை . முடுகி அடுதிறல் . திறலையுடைய கூற்றம் . கோ - தலைமை ; தலைவன் . முடுகி - விரைந்து . அடுதல் - கொல்லல் . திறல் - வலிமை . குமைப்பது - அழிப்பது . பூ தாமரை மலர் . ஆர் - உவமவுருபு . சுவடு - குறி . போக விடில் - பொறிக்கப் பெறாது கழிய விட்டால் . மூவா முழுப்பழி - அழியாத பழிமுழுதும் . மூடும் - சூழ்ந்து கொள்ளும் . முழங்கும் தழல் - ஒலி செய்யும் தீ . தழற்கை - தீயேந்தியகை . கைத்தேவா - கையையுடைய தேவனே . திருச்சத்தி முற்றம் , முற்றத்து உறையும் - முற்றத்தில் எழுந்தருளியிருக்கும் . சிவக்கொழுந்தே - சிவமாகிய கொழுந்தே . சிவக்கொழுந்தே கூற்றம் ( என்னைக் ) குமைப்பதன் முன் ( நின் ) பூவடிச் சுவடு என்மேற் பொறித்துவை . விடில் மூவா முழுப்பழி ( நின்னை ) மூடும் என்றார் . ` காவாதொழியிற் கலக்குமுன்மேற்பழி ` ( தி .4 ப .109 பா .2).

பண் :

பாடல் எண் : 2

காய்ந்தா யனங்க னுடலம் பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தா யுயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பா யடியேற் கருளாயுன் னன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே ! மன்மதன் உடம்பு சாம்பலாகுமாறு அவனை வெகுண்டாய் . கூற்றுவனை அவன் உயிர்போகும்படி உதைத்தாய் . உன் திருவடிகளைப் பணிபவர்களின் பல பிறவிகளையும் அறுத்தருளுவாய் . உன்னை வழிபடும் அடியவர்களுடைய உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்ட நீ அடியேனுக்கு அருள்செய்வாயாக .

குறிப்புரை :

அனங்கன் உடலம் பொடிபடக் காய்ந்தாய் - மன்மதனது உடலை நெற்றிக்கண் ணெருப்பால் பொடிபட்டழிய நோக்கினாய் . காலனை முன் உயிர்செகப் பாய்ந்தாய் - எமனை உயிர் உடலின் நீங்கப் பாய்ந்துதைத்தாய் . பாதம் பணிவார்தம் பல் பிறவி ஆய்ந்து ஆய்ந்து அறுப்பாய் - திருவடிகளை வணங்கும் அன்பர்களுடைய பல பிறவிகளும் நுணுகி நுணுகி அறச் செய்தருள்வாய் . ` ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் .` ( தொல்காப்பியம் . 814). அடியேற்கு அருளாய் :- அம் மூன்றனுள் ஒரு திறத்திலேனும் அருள் செய்வாய் . உன் அன்பர் சிந்தை சேர்ந்தாய் - உன் அன்பராகிய அடியவர் உள்ளத்தை அகலாதவனே . திருச்சத்திமுற்றத்துறையும் சிவக் கொழுந்தே , காய்ந்தாய் , பாய்ந்தாய் , அறுப்பாய் , சேர்ந்தாய் என அழைத்து , அடியேற்கு அருளாய் என்று வேண்டினார் .

பண் :

பாடல் எண் : 3

பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம்
சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

தேவர்கள் உள்ளத்தில் இருப்பவனாய் உள்ள திருச்சத்திமுற்றச் சிவக் கொழுந்துப் பெருமானே ! பல துளைகள் உள்ள கூடாகிய இவ்வுடம்பில் புகுந்து ஐம்பொறிகளும் நாள்தோறும் அடியேனுக்குப் பற்றுக்கோடான உன் திருவடிப்பற்றினை அழிக்க , மத்தால் குழப்பப்படும் தயிர்போலச் சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக . தலைவனே ! அடியேன் உன் அடைக்கலம் என்பதனை நோக்குக .

குறிப்புரை :

பொத்து ஆர் குரம்பை - துளை ( ஒன்பது ) பொருந்திய குடில் ( உடம்பு ). ` பொத்தை ஊன் ` ` மலம் சோரும் ஒன்பது வாயிற் குடில் ` ( தி .8 திருவா .) ` ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும் போது உணரமாட்டேன் ` ( தி .6 ப .99 பா .1) ` ஒழுக்கறா ஒன்பதுவாய் ஒற்றுமை யொன்றுமில்லை .` ( தி .4 ப .52 பா .2) ` ஒன்பதுபோல் அவர் வாசல் வகுத்தன ` ( தி .4 ப .18 பா .9) ஐவர் குரம்பை புகுந்து - ஐம்பொறி வேடர் ( என் ) உடலிற் புகுந்து . நாளும் - நாள்தொறும் . புகல் அழிப்ப - எனக்குப் புகலிடமான நின் திருவடிப் பற்றை அழிக்க . மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை :- ` மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம் .` ( தி .4 ப .52 பா .9). மத்து பொருந்திய தயிர் போலக் கலங்கும் என் மனம் . சிந்தை மறுக்கு - மனக் கலக்கம் . மறுக்கு - ( மறுகலுடையது ) கலக்கம் . ஒழிவி - ஒழியச் செய் . ` மத்துறு தண் தயிரின் புலன் தீக்கதுவ வித்துறுவேன் ` ( தி .4 ப .14 பா .1) ` வல்மத்து இட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன் ` ( தி .4 ப .41 பா .10) ` மத்திடு தயிராகி ` ( தி .4 ப .5 பா .3) அத்தா - தலைவா ; ஆண்டவனே . அடியேன் நினக்கே அடைக்கலம் அமரர்கள் தம் சித்தா - தேவர்களுடைய சித்தியாக உள்ளவனே ; சித்தத்திலுள்ளவனே ; சித்தானவனே . திருச்சத்திமுற்றத்துறையும் சிவக்கொழுந்தே , என் சிந்தை மறுக்கு ஒழிவி என்க . ` இனி இடையாயினார் பெண் என்பது எற்புச் சட்டகம் ; முடைக்குரம்பை ; புழுப் பிண்டம் ; பைம் மறியா நோக்கப் பருந்து ஆர்க்கும் தகைமைத்து ; ஐயம் பித்தும் வளியும் குடரும் கொழுவும் புரளியும் நரம்பும் மூத்திர புரீடங்களும் என்றிவற்றது இயைபு . பொருளன்று . பொருளாயின் . பூவே சாந்தே பாகே எண்ணெயே அணிகலனே என்றிவற்றாற் புனைய வேண்டாவன்றே தான் இயல்பாக நன்றாயின் ? என்று அதன் அசுபத்தன்மை உரைப்பக்கேட்டு நீங்குவர் .` ( இறையனார் களவியல் . பாயிரம் ` காமம் ` பற்றிய ஆராய்ச்சி ) என்றதால் உடலின் இழிவு புலப்படுத்தினார் . ` மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற் பொரு மத்துறவே ` ( தி .8 திருவாசகம் . 133).

பண் :

பாடல் எண் : 4

நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

வில் போன்ற புருவத்தை உடைய பார்வதி கணவனே ! செல்வனே ! சிவக்கொழுந்தே ! நிலைபேறு இல்லாத உடம்பை நிலைபேறு உடையதாகக் கருதி இந்த நீண்ட உலகத்திலே பல துன்பங்களாகிய குழிகளில் விழுந்து சோர்வுறும் அடியேனை நீயாகவே வந்து அடிமை கொண்டுள்ளாய் . அடியேனைக் கை விட்டால் அழிந்துவிடுவேன் .

குறிப்புரை :

வில் ஏர் புருவத்து உமையாள் கணவா - வில்லை ஒத்த திருப்புருவத்தையுடைய உமையம்பிகையின் கண்போன்றவனே ; செல்வா - சென்றடையாத நிலையுடைய பெருஞ் செல்வனே , திருச்சத்தி முற்றத் துறையும் சிவக் கொழுந்தே , வந்து ஆண்டு கொண்டாய் . எத்தகைமையேனை ? நில்லாக் குரம்பை நிலையாக் கருதி இந் நீள் நிலத்து ஒன்று அல்லாக் குழி வீழ்ந்து அயர்வு உறுவேனை . நில்லாக் குரம்பை - நிலையில்லாத உடல் ஆகிய குடி செய் ( குடிசை . மரூஉ ). நில்லாத குடிசையை நிற்பது என்று எண்ணியது . ஒன்று அல்லாக்குழி ` பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறியில் சமண்நீசர் புறத்துறையாம் அவ்வாழ் குழியின் விழுந்தெழும் ஆறு அறியாது மயங்கி அவம்புரிவேன் ` ( தி .12 அப்பர் புராணம் . 73) ` பரசமய நெறிக்குழியில் விழுந்தறியாது மூளும் அருந்துயர் உழந்தீர் ` ( ? . 64) ` வினைப்பர சமயக்குழி நின்றும் எடுத்தாள வேண்டும் ` ( ? . 49) ஒரு பொருளாகக் கருதத் தகாத சமண் சமயக்குழி ; ஒன்று அல்லாத பல குழி . உலகப்பற்றால் விளையும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு துன்பக் குழியாகும் . இடறிய எல்லா இடமும் இடர்க்குழியே . ` பாவப் படுகுழி `. நரகக்குழி ` பிறவிக்குழி ` ` சித்தாந்தத்தே சிவன்றன் திருக்கடைக்கண் சேர்த்திச் செனன மொன்றிலே சீவன் முத்தராக வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிந்து வரும்பிறப்பை அறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்கராகிப் பித்தாந்தப் பெறும் பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங் குழியில் வீழ்ந்திடுவர் இது என்ன பிராந்தி ?` ( சித்தியார் ) விடிற் கெடுவேன் ( தி .4 ப .96 பா .5.) ` வெற்றடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் ` ( தி .8 திருவாசகம் . 127).

பண் :

பாடல் எண் : 5

கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியில்
தெருவிற் புகுந்தேன் றிகைத்தடி யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழு முமையாள் கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

வடிவால் விளங்கும் பார்வதி கணவனே ! செல்வத்தால் பொலிவுபெறும் சத்தி முற்றப் பெருமானே ! கருப்பையை அடைந்த காலத்தும் உன் திருவடிகளையே தியானித்தேன் . கருவில் இருந்து வெளிப்பட்டு வளர்ந்து தெருவில் புகுந்தபோது வியப்புற்ற அடியேனை உலகப்பொருள்களை வியப்போடு பற்றும் நிலையைப் போக்குவிப்பாய் . அடியேனை உலகப்பற்றில் விடுவாயானால் வீணாகக் கெட்டுவிடுவேன் .

குறிப்புரை :

உருவின் திகழும் உமையாள் கணவா - அழகின் விளங்கும் உமையம்பிகையின் கண்ணாவானே . திருவின் பொலிகின்ற சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே . சத்தி முற்றம் திருவாற் பொலிகின்ற சிறப்புணர்த்திற்று . திருச்சத்தி முற்றம் திருமகளாலும் பொலிகின்றது . கருப்புவியில் - கர்ப்பலோகத்தில் . கரு உற்று இருந்து - கருப்பையை அடைந்திருந்து . உன் கழலே நினைந்தேன் ;- ( தி .4 ப .94 பா .6) குறிப்பைப் பார்க்க . தெருவில் புகுந்தேன் திகைத்து :- கருவினின்றும் வெளிப்பட்டு வளர்ந்து தெருவில் முதன் முதலாக உலாவப் புகுந்தபோது திகைத்தல் குழவிகட்கு இயல்பு . அந் நிலைமையை முதியோர்க்கு உலக வாழ்க்கையிற் பொருத்தியுரைத்துக் கொள்க . திகைப்பு ஒழிவி - திகைத்தலை ஒழியச்செய் . ` மறுக்கொழிவி ` ( தி .4 ப .96 பா .3) விடில் கெடுவேன் :- ( தி .4 ப .96 பா .4) ` போகவிடில் மூவா முழுப்பழி மூடும் ` ( தி .4 ப .96 பா .1.) கருவில் நிரம்பியதும் பழைய உணர்வு கூடப்பெற்று , கடவுளை நினைந்திருத்தல் உயிர்க்கியல் பாதலைச் சிவதருமோத்தரம் , தணிகைப் புராணம் அகத்தியனுக்கு உபதேசித்த படலம் முதலியவற்றுட் காண்க . ( தி .4 ப .109 பா .2.)

பண் :

பாடல் எண் : 6

வெம்மை நமன்றமர் மிக்கு விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் றாளென்றன் னெஞ்சத் தெழுதிவை யீங்கிகழில்
அம்மை யடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

பேரின்பவீட்டை நல்கும் சத்திமுற்றச் சிவக்கொழுந்தே ! கொடிய இயமனுடைய ஏவலர் மிகுதியாகக் கூடி என்னைக் கீழே தள்ளுவதன் முன் இம்மை வாழ்விலேயே உன் திருவடிகளை என் நெஞ்சில் சுவடுபடும்படியாக வைப்பாயாக . இவ்வுலகில் என்னை நீ இகழ்ந்து புறக்கணித்து இருப்பாயானால் மறுமையிலே நீ அடியேனுக்கு அருளப் போகும் செய்தியை யாவர் அறிவார்கள்?

குறிப்புரை :

வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் - கொடுங்கூற்று வன்படைஞர் மிகுந்து என்னைக் கலந்து என்னுடலின் நீங்கி உடலை விழச் செய்தற்கு முன்பே , இம்மை - இப்பிறவியிலேயே உன்தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை - உன்திருவடியை என் உள்ளத்தில் எழுதிப் பதிவு செய்துவை . ` பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது பொறித்தான் ` என்று கீழ் வேளூரிற் கேடிலியைப் போற்றியக்கால் உணர்த்திய உண்மையை இங்கு நினைக . ஈங்கு இகழில் - இப்பொழுது அலட்சியம் பண்ணினால் , அம்மை - மறுமையில் , அடியேற்கு - அடியனேற்கு , அருளுதி - அருள்வாய் . என்பது - என்னும் நிலையை . இங்கு - இப்பிறவியில் , அறிவார் ஆர் - உணர்வார் எவர் ? ஒருவரும் இலர் . செம்மை - பேரின்பவீடு , சிறப்பு என்னுஞ் செம்பொருள் ` ( குறள் . 358) ` வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருள் ` ( பரிமேலழகருரை ). ` செம்மையுள் நிற்பராகிற் சிவகதி விளையும் ` ( தி .4 ப .76 பா .2.) என்றதன் குறிப்பை நோக்குக . ` திருச்சத்தி முற்றத் துறையும் சிவக் கொழுந்தே `.

பண் :

பாடல் எண் : 7

விட்டார் புரங்க ளொருநொடி வேவவொர் வெங்கணையால்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளும்
சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

வண்டுகள் நெருங்கும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே ! சிவக்கொழுந்தே ! பகைவருடைய மதில்கள் ஒருநொடியில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய் . அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக .

குறிப்புரை :

தும்பி - வண்டு வகையுள் ஒன்று . பம்பும் - நெருங்கும் . மட்டு - தேன் ; ஆர் - பொருந்திய . ( மலர் அணிந்த ) குழலி - குழலாள் ( உமையம்மையார் ). மலை - இமயம் . மலை மகள் - இமாசல குமாரி . திருச்சத்திமுற்றம் என்னும் பெயரின் காரணம் புலப்பட மலைமகள் பூசை மகிழ்ந்தருளும் சிட்டன் என்றார் . திருச்சத்திமுற்றத்துறையுஞ் சிவக்கொழுந்தே , மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளும் சிட்டா , பகைவர் புரங்கள் ஒரு நொடியில் வேவ ஒரு கணையால் சுட்டாய் என அழைத்து , என் பாசத் தொடர்பு அறுத்து ஆண்டுகொள் என்று வேண்டினார் . விட்டார் - பகைவர் . ஒரு நொடி - கைந்நொடிப் பொழுதாகிய ஒரு மாத்திரையில் . வெங்கணை - சுடுகணை ( - அம்பு ). பாசத் தொடர்பு - பாச சம்பந்தம் ; பாசப் பற்று . சிட்டா - நல்லறிவுருவினனே . ` குன்ற மகள் தன் மனக் காதல் குலவும் பூசை கொண்டருளும் என்றும் இனிய பெருமான் ` ( தி .12 பெரியபுராணம் . திருநா . 193).

பண் :

பாடல் எண் : 8

இகழ்ந்தவன் வேள்வி யழித்திட் டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட வன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த வடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

விளங்குகின்ற சத்திமுற்றச் சிவக்கொழுந்தே ! நீலகண்டா ! உன்னை அலட்சியம் செய்த தக்கனுடைய வேள்வியை அழித்து வேள்விக்கு வந்த தேவர்கள் தம்பிழையைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்ட உலகப் பிரசித்தமாக அந்நாளிலேயே வெற்றி கொண்ட உன் செயலைப் புகழ்ந்த அடியேனுடைய குறைபாடுகள் நீங்க விரும்பி அருளுவாயாக .

குறிப்புரை :

திருச்சத்தி முற்றத்துறையும் சிவக்கொழுந்தே , நீலகண்டா , அடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய் . திகழ்ந்த சத்திவிலாசம் மிக்க . இகழ்ந்தவன் - தக்கன் . சிவ நிந்தை செய்தவன் . வேள்வி - தக்கன் செய்த யாகம் . அழித்து இட்டு - வேள்வியை அழித்து , தக்கனுக்கு ஆட்டுத்தலை இட்டு , ஏனையோர்க்கு வெவ்வேறு தண்டனை விதித்திட்டு . இமையோர் - தேவர் . பொறை - பொறுத்தருள்க என்று இரந்து வேண்ட ; பொறை - குற்றம் பொறுத்தல் . நிகழ்ந்திட - பிரசித்தியாக . அன்றே - அந்நாளிலேயே . விசயமும் - பெருவெற்றியும் . கொண்டது - அடைந்தது . கொண்டதைப் புகழ்ந்த அடியேன் எனலாம் . புன்மைகள் - புல்லிய தன்மைகள் , குற்றங்கள் ; சிறுமைகள் . தீரப் புரிந்தருளாய் - ஒழியச் செய்தருள்வாய் . புரிதல் - விரும்புதல் . ( புரிந்து ) விரும்பி எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 9

தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன்
எக்காத லெப்பய னுன்றிற மல்லா லெனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னும்
திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

சான்றோர் வாழும் தில்லைநகரில் விருப்புடையவனே ! வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வடதிசைக்கு உரியவனே ! சிவக்கொழுந்தே ! பொருத்தமான விருப்பத்தைப் பொருந்திச் சமண் சமயத்தை விடுத்து உன் அடைக்கலமாக வந்து சேர்ந்தேன் . உன்னைப் பற்றிய செய்திகளைத் தவிர வேற்றுச் செய்திகளில் எந்த விருப்பமும் இல்லை . அவற்றால் எனக்கு எந்தப் பயனும் இல்லை .

குறிப்புரை :

தகு + ஆர்வம் = தக்கார்வம் . தக்க ஆர்வம் என்பதன் திரிபுமாம் . மீண்டும் சைவம் புகுதல் வேண்டும் என்னும் தக்க ஆர்வம் திருநாவுக்கரசு நாயனார் தம் மரபுக்குத் தக்க ஆர்வம் மீண்டு சைவம் புகக் கொண்டதும் தகாத ஆர்வம் சமண் சாரக்கொண்டதும் ஆம் . சமண் - சமண் சமயம் ; சமணர் உறவை . தவிர்ந்து - விட்டு . உன்றன் சரண் - ` உன் கழலே ` ( தி :-4 ப .94 பா .6, ப .96 பா .5.) ` உன் பாதமே ` ( தி .4 ப .99 பா .6). ` சரண் புகுந்தேன் ` என்றதால் அடைக்கலம் புக்கேன் எனலுமாம் . ` அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரணமாக , வந்த காலன்றன் ஆருயிரதனை வவ்வினாய் ` ( சுந்தரப்பெருமாள் ). எக்காதல் - எப்பற்று . எப்பயன் - யாது பயன் . உன் திறம் அல்லால் எக்காதலும் எப்பயனும் எனக்கு இல்லை என்றபடி ` உளதே ` என்ற ஏகாரம் எதிர்மறை . மிக்கார்தில்லை - மேலோர் வழிபடும் தில்லை . மிக்கார் - தில்லை வாழ்ந்தணர் ; பதஞ்சலி வியாக்கிரபாதர் முதலோருமாம் . எல்லாக் கோயிலினும் மிக்கு ஆர்தில்லையுமாம் . ` விருப்பன் ` என்பதன் விளி விருப்பா என்பது . மிக - மேலாக . வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் திக்குடையாய் , திருச்சத்தி முற்றத் துறையும் சிவக்கொழுந்தே .

பண் :

பாடல் எண் : 10

பொறித்தே ரரக்கன் பொருப்பெடுப்புற்றவன் பொன்முடிதோள்
இறத்தா ளொருவிர லூன்றிட் டலற விரங்கியொள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

பொழிப்புரை :

சிவக்கொழுந்தே ! இயந்திரத் தேரை உடைய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக அவனுடைய பொன்னாலாகிய முடிகளை அணிந்த தலைகளும் தோள்களும் நொறுங்குமாறு ஒரு விரலை அழுத்த அவன் அலற அவனிடம் இரக்கம் காட்டிப் பிரகாசமான வாளினை அவன் நலன் குறித்துக் கொடுத்தாய் . தீவினையை உடைய அடியேன் செய்த குற்றமாகிய கொடிய வினையின் பயனாகிய நோயினை அழித்தாய் .

குறிப்புரை :

திருச்சத்திமுற்றத் துறையும் சிவக்கொழுந்தே , கொடுத்தாய் , செறுத்தாய் . பொறித் தேர் - சூரனது இந்திரஞாலத்தேர் போன்றதோர் இயந்திரத் தேர் . அரக்கன் - இராவணன் . பொருப்பு - கயிலை . எடுப்பு - எடுத்தலை . உற்றவன் - அடைந்தவன் . ( இரா வணன் ). பத்துப் பொன்முடியும் இருபது தோளும் . இற - இற்றொழிய . தாள் ஒரு விரல் - திருத்தாளின் ஒரு விரலை . ஊன்றிட்டு - ஊன்றி யிட்டதால் . அலற - கதற . இரங்கி - திருவுள்ளத்தில் இரங்கி . ஒள் வாள் - ஒளியதாகிய வாள் . குறித்தே - பெயர்குறித்தே ; கருதி எனலும் ஆம் . கொடியேன் செய்த குற்றத்தின் பயனான நோய் . குற்றமாகிய கொடிய வினையின் பயனான நோய் . செறுத்தாய் - அழித்தாய் .
சிற்பி