திருநல்லூர்


பண் :

பாடல் எண் : 1

அட்டுமி னில்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை கொள்ளும் வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமுங் கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல் லூரிடங் கொண்டவரே.

பொழிப்புரை :

ஒலிக்கப்பட்ட தாளங்களுக்கு ஏற்பக் கூத்து நிகழ்த்திய திருவடிகளும் கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பும் உடையவராய் , நிலையாக நடனமாடும் தலைவராய் , நல்லூரில் உகந்தருளியிருக்கும் பெருமான் ` உணவுக்குரிய பிச்சையிடுமின் ` என்று வீடுகளின் வாசல்தோறும் வந்து தேன் ஒழுகும் கூந்தலை உடைய மகளிருடைய வளைகளைக் கைப்பற்றும் செயல் யாது காரணம் பற்றியதோ ?

குறிப்புரை :

இல் - இல்லின் . பலி - பிச்சை . அட்டுமின் - இடுமின் என்று என்று :- பன்மைப் பொருள் குறித்து நின்றன . அகம் - வீட்டினது . கடைதொறும் - வாயிற் கடையெல்லாம் . தெருக்கடை , வாயிற்கடை , புழைக்கடை அறங்கடை முதலியவற்றை நோக்கி . அங்கங்கு ஏற்றதன் கடையாகக் கொள்ளற்பாற்று . வந்து கொள்ளும் வகை என் கொலோ ? மட்டு - கள் . அவிழும் - விரியும் . குழலார் - குழலினராகிய மகளிர் . தாருகவனத்து முனிவர் பன்னியராகிய பெண்டிர் . குழலார் வளை - குழலினாருடைய கைவளையல்கள் . கொட்டிய பாணி - கொட்டிய தாளம் . கையுமாம் . ` எடுத்திட்ட பாதம் `:- ( தி .4 ப .81 பா .10.) கோள் அரவு - கொலைப் பாம்பு . கோள் - கொலை . நின்று நட்டம் ஆடிய நாதர் . நல்லூரை இடமாகக் கொண்டவர் . நல்லூரில் இடத்தைக் கொண்டவருமாம் .

பண் :

பாடல் எண் : 2

பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை பெய்பலிக் கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகுந் தாருநல் லூரகத்தே
பண்ணிட்ட பாடல ராடல ராய்ப்பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரண முண்டு கறைக்கண்டரே.

பொழிப்புரை :

நீலகண்டப் பெருமானார் , பெண்கள் ஆசைப்படும்படி கொண்ட இவ்வடிவம் பண்டு கொண்ட வடிவமன்று ; பிறர் வழங்கும் பிச்சைக்காகத் திரிபவராய் வீடுகளை அணுகிப் புகுந்தவராய் நல்லூரில் பண்ணோடு கூடிய பாடல்களைப்பாடுபவரும் ஆடுபவருமாக வந்து எங்களை நோக்கிநின்று கண்ணால் சாடை காட்டிப் போயினதற்கு ஒரு காரணம் உண்டு .

குறிப்புரை :

பெண்ணாசை பண்டையது அன்று . இவை பெய்யும் பலிக்காக இன்று புதிதாகக் கொண்டதே ஆகும் என்று ( சொல்லிக் கொண்டு ) திரிவார் . பலிக்குழல்வார் . நல்லூரகத்தே வந்து மனையை நண்ணிட்டுப் புகுந்தாரும் கறைக் கண்டரே . கறைக் கண்டர் - திருநீல கண்டர் . கறை - நஞ்சின் கறுப்பு . பண்ணிட்ட பாடலர் . ஆடலர் . பாடலும் அப் பாடலுக்கு ஏற்ற ஆடலும் உடையவர் . பாடலருமாய் ; ஆடலருமாய்ப் பற்றி நின்று ; நோக்கிநின்று . கண்ணிட்டு - கண்ணடி செய்து . கண்ணாற் சாடை காட்டுதல் . கண்ணடித்துப் போயிற்று . அதற்குத் தக்க காரணம் உளது . ` போயிற்று ` வினையாலணையும் பெயர் . போயினதற்குக் காரணம் உண்டு என்று நான்கனுருபேற்றல் அறிக .

பண் :

பாடல் எண் : 3

படவே ரரவல்குற் பாவைநல் லீர்பக லேயொருவர்
இடுவா ரிடைப்பலி கொள்பவர் போலவந் தில்புகுந்து
நடவா ரடிக ணடம்பயின் றாடிய கூத்தர்கொலோ
வடபாற் கயிலையுந் தென்பானல் லூருந்தம் வாழ்பதியே.

பொழிப்புரை :

படம் எடுக்கின்ற அழகிய பாம்பு போன்ற அல் குலை உடைய பெண்களாகிய நல்லவர்களே ! பகல் நேரத்தில் ஒப்பற்ற பெருமானார் பிச்சை வழங்குபவர்களிடம் பிச்சை பெறுபவரைப்போல வந்து எங்கள் வீடுகளில் புகுந்து வீட்டை விட்டு நீங்காதவராக உள்ளார் . அவர் வடக்கே கயிலைமலையையும் தெற்கே நல்லூரையும் தம் உறைவிடமாகக் கொண்டு கூத்தினை விரும்பி ஆடிய கூத்தர் போலும் .

குறிப்புரை :

படஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் - படத்தையும் அதனொடு எழுச்சியையும் உடைய பாம்பு போலும் பின் புறத்தையுடைய பாவைபோலும் அழகினீர் . பகலே - பகலில் . ஏகாரம் ஏழனுருபின்பொருட்டு . ஒருவர் வந்து இல் புகுந்து நடவார் , அடிகளால் நடவார் . இடுவாரிடை - இடுமவரிடத்தில் . பலிகொள்வார்போல் - ஐயம் ஏற்பவரைப் போல . போலவந்து புகுந்து பயின்று ஆடிய கூத்தர் . நடவார் அடிகள் :- அடிகளால் நடவாதவாரகி ; நடத்தல் ஆர்ந்த அடிகள் . நடம் - திருக்கூத்து . பயின்று - மிகச்செய்து பழகி . கொல் ஓ இரண்டும் அசை . கூத்தர் தம் வாழ்பதி கயிலையும் நல்லூரும் . வடபாற் கயிலையும் தென்பால் நல்லூரும் என்றது இரண்டும் ஒன்றாம் பெருமையன . கயிலைக்காட்சி நல்லூர்க்காட்சி இரண்டும் ஒன்றாமாறு பெற்ற அநுபவ வாக்கு .

பண் :

பாடல் எண் : 4

செஞ்சுடர்ச் சோதிப் பவளத் திரள்திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டனல் லூருறை நம்பனை நானொருகால்
துஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு தேற்கவன்றான்
நெஞ்சிடை நின்றக லான்பல காலமும் நின்றனனே.

பொழிப்புரை :

சிவந்த சூரியன் போன்ற ஒளியுடையவனாய்ப் பவளத்திரளிலே விளங்கும் முத்துப்போல நீறணிந்து விடத்தை அழகாகச் சூடிய நீலகண்டனாய் நல்லூரில் உறையும் , நம்மால் விரும்பப்படும் பெருமானை அடியேன் ஒரு முறை உறக்கத்தினிடையே கனவில் கண்டு தொழுதேனாக அவன் தான் என் நெஞ்சினைவிட்டு அகலானாய்ப் பல காலமாக நெஞ்சில் நிலை பெற்றுள்ளான் .

குறிப்புரை :

செஞ்சுடர்ச் சோதிப்பவளத்திரள் திகழ்முத்து அனைய நஞ்சு அணிகண்டர் :- செய்ய சுடரொளியுடைய பவளத் திரட்சியிலே திகழ்கின்ற முத்துப் போன்ற நஞ்சுண்ட கண்டத்து நம்பன் . நஞ்சு அணி கண்டன் ( திருநீலகண்டன் ) முத்து அனைய நஞ்சு என்க . ` மேலாய தவத்தோர் வேடந்தனைப் பூண்டிங்கு ஏலாதனவே இயற்றினீர் மாதவத்தீர் பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவி கொள்ளும் ஆலால நீர்மைத்தே ஐயர் இயற்கையதே ` ( கந்தபுராணம் ; வள்ளியம்மையார் திருமணப் படலம் . ) என்பதில் , நஞ்சு , ` பாலாகித் தோன்றிப் பருகினார் ஆவி கொள்ளும் ` என்றதுணர்க . அதனால் , ` திகழ் முத்தனைய நஞ்சு ` எனல் பொருத்தம் . நல்லூரில் உறைகின்ற நம்பன் . நம்பு நசை , நம்பன் - நசையினன் . நசை அன்பும் அன்பருடையதுமாம் . நான் ஒரு கால் துஞ்சிடைக்கண்டு கனவின்றலைத் தொழுதேன் - ஒரு முறை நான் தூக்கத்திலே கனாவிலே கண்டு வணங்கினேன் . தொழுதேற்கு - வணங்கிய எனக்கு . அவன்தான் - அந்நல்லூர்ப் பெருமான் ( என் ) நெஞ்சிடை நின்று அகலான் ஆகிப் பல காலமும் நின்றனன் . தி .8 திருக் கோவையார் 355. ` கனவிழந்துரைத்தல் ` காண்க . ` கனவில் நெஞ்சிடை நின்றகலான் .` ( தி .4 ப .97 பா .9.) நனவில் கையகன்றான் .

பண் :

பாடல் எண் : 5

வெண்மதி சூடி விளங்கநின் றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாடல றாதநல் லூரகத்தே
திண்ணில யங்கொண்டு நின்றான் றிரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற் சேவடியே.

பொழிப்புரை :

வெண்பிறை சூடி உலகு விளங்க நிற்பவனாய்த் தேவர்கள் தொழுமாறு கூத்தாடும் காட்சி நீங்காத நல்லூரை உறுதியான இருப்பிடமாகக் கொண்டு நிற்கும் திரிபுர சங்காரியினுடைய வீரக்கழல்கள் அணிந்த சேவடிகள் அடியேனுடைய கண்கள்முன்னும் நெஞ்சினகத்தும் உள்ளன .

குறிப்புரை :

வெண்மதி ( - வெண்பிறை ) சூடி விளங்கி நின்றான் ; விண்ணோர்கள் தொழநின்றான் ; நல்லூரகத்தே திண் நிலயம் கொண்டு நின்றான் ; திரிபுரம் மூன்று எரித்தான் . ( தி .4 ப .84 பா .1.) அவன் கழற் சேவடியே ( என் ) கண்ணுளும் நெஞ்சத்தகத்தும் உள . நல்லூர் பாடல் அறாதது . அப்பாடல் நண் இலயத்தொடு கூடியது . நண்ணிய இலயத் தோடு பாடல் அறாத நல்லூர் . இலயத்தொடு நண் ( ணும் ) பாடல் எனலுமாம் . நண் + இலயம் - நண்ணிலயம் . திண் + நிலயம் = திண்ணிலயம் . நிலயம் - திருக்கோயில் . திரிபுரம் என்றது வினைத்தொகை . திரியும் புரம் மூன்று என்க . கண்ணுளும் நெஞ்சத்தகத்துளும் என்றது பிழையுற்ற பாடம் . கண்ணுளும் என்றது நோக்கி அகத்துளும் என்று எழுதி யிருக்கலாம் . ` அகத்தும் உளகழல் ` என்று இயற்சீர் வெண்டளை அமைய நின்ற தறிவார்க்கு அது பிழை எனல் புலப்படும் .

பண் :

பாடல் எண் : 6

தேற்றப் படத்திரு நல்லூ ரகத்தே சிவனிருந்தால்
தோற்றப் படச்சென்று கண்டுகொள் ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப்போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே.

பொழிப்புரை :

எல்லார் உள்ளத்தும் தெளிவு ஏற்படச் சிவ பெருமான் திருநல்லூரிலே நிலையாக உறைந்திருந்தால் தங்களுக்கு அவன் காட்சி வழங்குமாறு அடியவர்கள் அக்கோயிலுக்குச் சென்று அவனைக் கண்டு கொண்டு நெஞ்சு நிறைவுபெறாதவராய் , தம் பொருத்தமல்லாத புத்தியினால் , ஆற்றில் இழந்த பொருளைக் குளத்தில் சென்று தேடும் அறிவிலிகளைப்போல , எம்பெருமானைத் தரிசிப்பதற்குக் காற்றை விட வேகமாக உலகமெங்கும் சுற்றித் திரிவர் .

குறிப்புரை :

திருநல்லூரகத்தே சிவன் இருந்தால் தொண்டர் சென்று கண்டுகொள்ளார் ? கொள்ளாமை தொண்டராவார்க்குத் தக்கதாமோ ? அறிவின் கேட்டால் , ஆற்றிலே கெடுத்துக் குளத்திலே தேடிய அறிவிலோர் போலக் , காற்றினும் கடிது விரைந்து , உலகெல்லாம் திரிதருவர் . அச்சிவ பரஞ்சுடரைக் காண்பதற்கு . தேற்றம் - தெளிவு . தேற்றப்பட - தெளிவுற . சிவன் தேற்றப்பட இருந்தான் . தொண்டர் , தோற்றப்படச் சென்று கண்டுகொள்வர் . தோற்றப்பட - சிவபிரான் தோற்ற அடியர் பட . சிவபிரான் சந்நிதியில் அடியார் தோற்றப்படச் சென்று எனலுமாம் . தோற்றப்படல் - தோற்றத்தை அடைதல் . துன்மதி - கெட்ட புத்தி ; புல்லறிவு . ஆற்றிற் போட்டுக் குளத்தில் எடுத்தது சுந்தர மூர்த்தி நாயனார் தொண்டின் அருட் சிறப்புக்களுள் ஒன்று . இங்கு ஆற்றில் கெடுத்ததும் குளத்தில் தேடியதும் அறியாமையின் செயல் . போட்டு எடுத்ததும் , கெடுத்துத் தேடியதும் வெவ்வேறாகும் .

பண் :

பாடல் எண் : 7

நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங்கொர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே.

பொழிப்புரை :

காலையிலே மலர்கின்ற தாமரைப் பூக்களை உடைய குளங்கள் ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் நல்லூரிலே கீளோடு கூடிய இக்கோவணத்தைப் பத்திரமாக வைத்திருந்து பின்னர் யான் வேண்டும் போது கொடுப்பாயாக என்று சொல்லி வஞ்சனையாக அதனை மறைத்து , ஒளி பொருந்திய கண்களை உடைய அவன் மனைவியோடு அமர் நீதி என்ற வாணிகனை அடியவனாகக் கொண்ட புகழ்ச்செய்தியை இப்பரந்த உலகத்திலுள்ளவர்கள் சிறப்பாகப் பேசுகிறார்கள் .

குறிப்புரை :

நாள்கொண்ட தாமரைப் பூத்தடம் - காலை ( மலர்தலைக் ) கொண்ட தாமரைப் பூக்களையுடைய குளம் . கீள் கொண்ட கோவணம் :- ` கீளார் கோவணம் `. கோவணம் கா - கோவணத்தைக் காத்துவை . கிறி - பொய் . வாள் கொண்ட நோக்கி - வாள்போலும் கண்ணி . வாள் ஒளியுமாம் . ` வாட்கண் ` என்பது பயின்ற வழக்கு . ` வாட்கண் மட நல்லாய் ` ` வாட்டடங்கண் மாதே `. வாணிகன் - அமர்நீதி நாயனார் . ` அல்லிமென்முல்லை யந்தார் அமர்நீதிக்கு அடியேன் ` ( தி .7 திருத்தொண்டத் தொகை ) . ` பழையாறை அமர் நீதி நல்லூரின் முன் கோவணம் நேர் கொண்டு இங்கு அருள் என்று தன் பெருஞ் செல்வமும் தன்னையும் தன் துண்டமதி நுதலாளையும் ஈந்த தொழிலினனே ` ( திருத்தொண்டர் திருவந்தாதி . 7). ` வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும் முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுதிருக்கும் அழிவில் வான் பதம் கொடுத் தெழுந்தருளினார் ஐயர் ` ( தி .12 பெரிய புராணம் . அமர்நீதியார் . 47) என்பன ஆட்கொண்ட வார்த்தைகளுள் அடங்கும் . அகலிடம் :- ` வியனுலகம் `.

பண் :

பாடல் எண் : 8

அறைமல்கு பைங்கழ லார்ப்பநின் றானணி யார்சடைமேல்
நறைமல்கு கொன்றையந் தாருடை யானுநல் லூரகத்தே
பறைமல்கு பாடல னாடல னாகிப் பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின் றாடிய பிஞ்ஞகனே.

பொழிப்புரை :

பிறை ஒளி வீசும் சிவந்த சடைகள் தொங்குமாறு காலை ஊன்றி நின்று ஆடிய , தலைக்கோலத்தை உடைய பெருமான் , ஓசைமிக்க பசிய பொன்னாலாகிய கழல்கள் ஆரவாரிக்க நின்று , அழகிய சடை மீது தேன் நிரம்பிய கொன்றைப் பூமாலையை உடையவனாய் நல்லூரிலே பறை ஓசைக்கு ஏற்பப் பாடுதலையும் ஆடுதலையும் செய்தவனாகி அடியேனுடைய தன்மையை அழித்தவனாவான் .

குறிப்புரை :

அறை - ஓசை . மல்கு கழல் - மிக்க கழல் . பை கழல் - பசிய கழல் . ஆர்க்க - ஒலிக்க . நின்றான் - நின்று ஆடினான் . அணி - அழகு . நறை - தேன் , மணமுமாம் . தார் - மாலை . பறை - வாத்தியம் . பாடலன் - பாடலுடையவன் : ஆடலன் - ஆடலுடையவன் . பரிசு - தன்மை . அழித்தான் - கெடுத்தான் . காதல் விளைவித்துக் கருத்தை மயக்குதல் குறித்தது . பிறை மல்கு செஞ்சடை - பிறை நிறைந்து தோன்றும் சிவந்த சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகன் :- ` பின் தாழ் சடையான் ` பிஞ்ஞகன் - தலைக் கோலத்தன் .

பண் :

பாடல் எண் : 9

மன்னிய மாமறை யோர்மகிழ்ந் தேத்த மருவியெங்கும்
துன்னிய தொண்டர்க ளின்னிசை பாடித் தொழுதுநல்லூர்க்
கன்னியர் தாமுங் கனவிடை யுன்னிய காதலரை
அன்னிய ரற்றவ ரங்கண னேயரு ணல்கென்பரே.

பொழிப்புரை :

நிலைபெற்ற மேம்பட்ட வேதங்களை ஓதும் வேதியர்கள் மகிழ்ந்து துதிக்க , எங்கும் கலந்து பொருந்திய தொண்டர்கள் இனிய இசையைப் பாடித்தொழ , நல்லூரில் உள்ள திருமணம் ஆகாத மகளிர் கனவிலே தாம் விரும்பிய காதலராகிய நல்லூர்ப் பெருமானைக் கண்டு , பிறருக்குத் தொடர்பற்றவர் அல்லராக உள்ள அழகிய கருணையை உடைய அப்பெருமானைத் தமக்கு அருள் நல்குமாறு வேண்டுவர் .

குறிப்புரை :

மன்னிய - நிலைத்த . மாமறையோர் - பெருமையுடைய மறைகளை உணர்ந்த அந்தணர் . மன்னிய மறை - நித்திய வேதம் . மகிழ்ந்து ஏத்த - உள்ளத்தின் மகிழ்ந்து உரையிற் புகழ்ந்து உடலால் வழிபட . எங்கும் மருவித் துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி , தொழுது , அங்கணனே அருள் நல்கு என்பர் . பாடுதல் , தொழுதல் , நல்கல் மூன்றும் தொண்டர் வினைகள் . நல்லூர்க் கன்னியர் கனவிடை உன்னிய காதலர் என்றது அங்கணனை . காதலரை அங்கணனே என்பர் . அருள் நல்கு என்பர் . அங்கணன் - அழகிய கண்ணன் . கண்ணிற்கழகு கருணை . அற்றவர்க்கு அங்கணன் . அற்றவர் . பற்றற்றவர் . அவர்க்கே எவரும் அந்நியராதல் இல்லை . அந்நியர் - பிறர் . அஃது ஈண்டுத் தமிழின் சிறப்பெழுத்தால் அமைந்தது ; எதுகை நோக்கியதும் ஆம் . அன்னியரை அற்றவர் - எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணுபவர் .

பண் :

பாடல் எண் : 10

திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்
உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே.

பொழிப்புரை :

திருமகள் தங்கும் தாமரை , சிறப்பு வளரும் செங்கழுநீர் , பறித்துச் சூடும் நெய்தல் , நிறம் பொருந்திய கோங்கம் , குரா , மகிழ் , சண்பகம் , கொன்றை , வன்னி , நறுமணம் கமழும் நீண்ட கொடிகள் இவற்றால் சூழப்பட்ட மறையோர்களுடைய மாடவீடுகள் நிறைந்த நல்லூரில் அழகு நிறைந்தவளாய் உள்ள பார்வதி பாகனை நாம் தியானிப்போமாக .

குறிப்புரை :

திருவளர் தாமரை - ` திருவளரும் தாமரைப்பூ ` ` திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் ` ` திருமகள் தங்கும் தாமரை எனினும் அமையும் ` சீர்வளர் செங்கழுநீர் - அழகு வளரும் சிவந்த கழுநீர்ப் பூக்கள் . கழுநீர் - கல்லாரம் . நெய்தல் - நெய்தற்பூ . குருவளர் - நிறம் வளரும் . கோங்கம் - கோங்க மலர் . சண்பகம் , கொன்றை , வன்னி ( யிலை .) இவற்றின் மரு அமர்ந்த நல்லூர் - நீள்கொடி மாடங்கள் மலிந்த நல்லூர் - மறையோர் ( வாழும் ) நல்லூர் ( தி .4 ப .97 பா .9.) உரு அமர் பாகத்து உமையவள் பாகன் - ` உருவிற் றிகழும் உமையாள் கணவா ` ( தி .4 ப .96 பா .5) தாமரை முதலிய மலரையும் இலையையும் கொண்டு நல்லூர்ப் பெருமானை ஊழி வழிபடுவோம் என்பது கருத்தாகலாம் . முன்னீரடியும் கொண்டு முடிவது யாதென விளங்கிற்றிலது . உள்குதல் - நினைத்தல் . இதன் முதற் சீர் நான்கும் தி .8 திருக்கோவையார் முதற் பாட்டில் அமைந்தவாறே உள்ளன . இவ்வாறு இருவர் பாக்களையும் நோக்கின் மிக்க ஒற்றுமை காணப்படுகின்றது .

பண் :

பாடல் எண் : 11

செல்லேர் கொடியன் சிவன்பெருங் கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவு மதில்சூ ழிலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோளிறச் செற்ற கழலடியான்
நல்லூ ரிருந்த பிரானல்ல னோநம்மை யாள்பவனே.

பொழிப்புரை :

இடியை ஒத்து ஒலிக்கும் காளை வடிவு எழுதப்பட்ட கொடியை உடைய சிவபெருமானுடைய சிவபுரக் கோயிலகத்தும் புக வல்லேன் அடியேன் . மதில்களால் சூழப்பட்ட இலங்கை நகர மக்களின் தலைவனான இராவணனுடைய மலையை ஒத்த உறுதி யுடைய முடிகளோடு தோள்கள் நெரியுமாறு துன்புறுத்திய திருவடிகளை உடையவனாய் நல்லூரில் உறையும் பெருமானே நம்மை அடிமையாக ஆள்பவன் ஆவான் .

குறிப்புரை :

செல்லோ கொடியன் என்பது செல்லேர் கொடியன் என்று இருந்ததெனினோ இடிக்கொடியனாகிய இந்திரனைக் குறிப்பதாகும் . அவனை இங்குக் குறித்தல் பொருந்தாது செல்லோ கொடியன் என்பது விளங்காததாயுளது . நடக்கையோ கொடி தாயுள்ளேன் எனத் தாமே சொல்லிக்கொண்டதாகக் கருதலாம் . சிவபுரமும் புகவும் வல்லேன் - சிவன் பெருங்கோயிலாகிய சிவபுரம் மதில் சூழ்ந்திருக்கும் இலங்கை . இலங்கையர் காவலன் - இலங்கையர்க்கு மன்னன் . காவல் + அன் - காத்தலையுடையவன் . கா + வலன் காத்தலின் வல்லவன் ( பாவலன் , நாவலன் , புரவலன் , இரவலன் ) கல்லார் முடி . கல் - நவரத்தினம் . முடி - ( மணி ) முடி . தோள் இற . இற - இற்றொழிய . முடிகளும் தோள்களும் இற . இறச் செற்ற அடி - கழலடி . அடியனாகிய பிரான் . நம்மை ஆள்பவன் கழலடியானாகிய பிரான் அல்லனோ ? நல்லூர் இருந்த பிரான் . கல்லார் முடி என்றதால் நவரத்தினங்களை இழைத்துப் பதித்துச் செய்யப்பட்ட மணி முடி என இனிது விளங்கும் . முடி பத்தும் தோள் இருபதும் இறச் செற்ற கழலடியான் என்றதால் . அத் திருவடியின் கழலும் ( வெற்றிப்பாடும் ) அதற்குற்ற வருத்தமும் புலப்படும் .
சிற்பி