திருக்கச்சியேகம்பம்


பண் :

பாடல் எண் : 1

ஓதுவித் தாய்முன் னறவுரை காட்டி யமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாயுகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே ! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய் . பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய் . கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய் . அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய் . உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக . நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய் . அடியேனை , உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக .

குறிப்புரை :

ஓதுவித்தாய் - ஓதச்செய்தனை . முன் - இளமையில் ; அமண் சார்புறுமுன் எனலுமாம் . அறவுரை - தருமசாத்திரம் ; சமண் சமயத்துத் தரும போதம் . காட்டி - அறிவுறுத்தி . காதுவித்தாய் - கொல் வித்தாய் . அமணரோடே சேர்வித்து , அவர் என்னைக் கொல்லுமாறு முயலச் செய்தாய் என்றவாறு . கட்ட நோய் பிணி தீர்த்தாய் :- கட்டம் - துன்பம் . கலந்தருளி - என் உயிர்க்குயிராய்த் தோன்றாத் துணையாய்க் கலந்தருளி , போது வித்தாய் - சமண் சமயத்தின் நீங்கிய சைவ சமயத்திற் புகச் செய்தாய் . புகுது என்பதன் மரூஉவே போது என்பது . புகுதுக - போதுக . ` போ ` முதனிலையாயின் , பொருள் வேறுபடல் அறிக . நின் பணி - நின் திருவடித் தொண்டு . பிழைக்கின் - வழுவி னால் . புளியம் வளாரால் - புளியமரத்தின் வளாரினால் . மோதுவிப்பாய் - மோதச் செய்வாய் . ` வளாரினால் அடித்துத் தீய பந்தமும் இடுவர் ` ( சித்தியார் 2:- 15). உகப்பாய் முனிவாய் - விரும்புவாய் வெறுப்பாய் . ( விருப்பும் வெறுப்பும் கொள்வாய் ). ` காயத்திடுவாய் நின்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே ` ( தி .8 திருவாசகம் ). ` எல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும் இந்த நீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவும் என்றும் ` ( சித்தியார் . 2:- 16) ` தேசநெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்த ` ` சரிதப் பகுதிக்கும் சமண் சமயம் புகுந்த சரிதப் பகுதிக்கும் அகச் சான்று இதிற் காண்க `. ( திரு . சி . கே . எஸ் உரை ). அறவுரை என்று நம்பிச் சென்ற அப்பர் கொன்றன்ன இன்னா செய்யப் பெற்றார் ஆதலின் , ` அறவுரை காட்டிக் காதுவித்தாய் ` என்றார் . உகப்பு - அமணர் செய்த கொடுமைகளின் பயன் சமண் புக்க பாவத்தின் கழுவாய் ஆதலின் , அது திருவருளுவப்புணர்த்தும் . முனிவு :- அக்கொடுமைகளின் ஏது ஆதலின் சிவனார் முனிவாயிற்று . அவன் முனிவின்றேல் அமணர் அது செய்ய வல்லரோ ? சூலை தந்ததும் முனிவே . துன்பங்களின் உய்ந்தது உகப்பு .

பண் :

பாடல் எண் : 2

எத்தைக்கொண் டெத்தகை யேழை யமனொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னக் கோகுசெய்தாய்
முத்திற் றிரளும் பளிங்கினிற் சோதியு மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே ! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய் ?

குறிப்புரை :

முத்தின் திரள் - முத்துக் கொத்து . பளிங்கின் சோதி - பளிங்கொளி . பவளத் தொத்து - பவளத் திரள் . ` மொய்பவளத்தொடு தரளம் துறையாருங் கடற் றோணிபுரத்தீசன் ` ( சம்பந்தர் ). பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு . ஏய்க்கும் - ஒத்திருக்கும் . படியாய் - தன்மையனே . பொழில் - சோலை . கச்சியேகம்பனை , முத்தொளியும் பளிங்கொளியும் பவளத்தொளியும் ஒத்தொளிரும் இயல்பினனே , எத்தைக் கொண்டு எத்தகையேழை அமணோடு இசைவித்து என்னைக் கொத்தைக்கு மூங்கர் வழி காட்டு வித்தென்னக் கோகு செய்தாய் ? எஃது + ஐ = எஃதை , எத்தை , மரூஉ . அத்தை , இத்தை என்பனவும் அன்ன . பஃது பத்து என்றாயிற்று ` இத்தை ஆயும் அறிவு ` ( சித்தியார் . சூ . 1). ` இத்தையும் அறியார் ` ( ? . சூ :- 69) ` எங்கித்தைக் கன்ம மெலாஞ் செய்தாலும் ` ( ? . சூ . 10:- 6) ` அத்தின் அளவறியாது ` ( ? பரபக்கம் . சௌ . ம . 3) ` எத்தைக் கொண்டு ` என்றது . அமணரொடு இசைவித்ததன் காரணத்தை வினாயது . ` எத்தகை யேழையமண் ` என்றது இசையுமிடத்தின் இழிவுணர்த்தியது . ` கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்ன `. உவமம் . கொத்தை - குருடு . மூங்கர் - ஊமையர் . ` என்கண் கொத்தையாக்கினீர் ` ( சுந்தரர் ) ` கண்ணாற் கொத்தை ` ( தொல் . சொல் . வேற் . மூன்றாவது . ` இன்னான் ` என்றதற்குக் காட்டு ) ஏழை - நுண்ணுணர்வின்மை . ` நுண்ணுணர்வின்மை வறுமை ` ( நாலடியார் ) ` கோகு ` குறுகு என்றதன் மரூஉ . இழிவு என்னும் பொருளது . தி .4 ப .52 பா .6. குறிப்பு . எனைக்கோகு செய்தாய் . காட்டுவித்தென்ன - காட்டுவித்தாற்போல . காட்டுவித்தல் - காட்டச்செய்தல் . மூங்கர் :- அமணர் . வழி - கடவுள் நெறி .

பண் :

பாடல் எண் : 3

மெய்யம்பு கோத்த விசயனொ டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக் கயவர்நெஞ்சில்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

கச்சி ஏகம்பனே ! உண்மையாக அம்புகளை வில்லில் சேர்த்துப் போரிட்ட அருச்சுனனோடு அக் காலத்தில் ஒரு வேடன் வடிவினனாய்ப் பொய்யாக அம்பை வில்லில் சேர்த்து அவனோடு போரிட்டு அவனுக்கு அம்புறத் தூணியை அருளிச் செய்தவனே ! முப்புரமும் தீக்கு இரையாகுமாறு கைகளால் அம்பு எய்தவனே ! உன்னுடைய வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளைப் போற்றாத கயவர்களுடைய உள்ளத்தில் மாயையால் உண்மையை மறைத்தல் செய்தவனே ! குய்யம் - வஞ்சனை . ( சிந்தாமணி -253)

குறிப்புரை :

கொடிமா மதில்சூழ் கச்சியே கம்பனே , விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் ஆவம் அருளிச் செய்தாய் ; புரம் எரிய எய்தாய் . நுன் அடி போற்றாக் கயவர் நெஞ்சில் குய்யம் பெய்தாய் . மெய்யம்பு - மெய்க்கணை . விசயன் - வெற்றியன் ; அருச்சுனன் . அன்று - அக்காலத்தில் . ( அன்றுதல் - பகைத்தல் ). பகைத்து . அன்று வேடுவன் - பகைத்த வேடன் . பொய்யம்பு - பொய்க்கணை . எய்து - செலுத்தி . எய்து ஆவம் வினைத்தொகையுமாம் . அம்புறை தூணி ( அம்புறாத் தூணி ). தவவேடனான அருச்சுனன் மெய்யாக அம்பு எய்யச் சிவவேடன் பொய்யாக அம்பு எய்து ஆவம் அருளிச் செய்தான் என்றலுமாம் . பாசுபதம் அருளிய வரலாறுணர்க . கையம்பு - கைக்கணை , திருமாலாகிய அம்பு . நுன் - நின் என்றதன் மரூஉ . யான் ( தன்மை ), நீன் முன்னிலை , தான் படர்க்கை . யான் - யன் - என் என்றும் நீன் - நின் - நுன் என்றும் தான் - தன் என்றும் ஆயின . பிற்காலத்தில் நுன் என்பது உன் என்று வழங்கலாயிற்று . ` உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் ` என்றது பழம் பாடலன்று . ஒருகை முகன் தம்பி யாகக் கொண்ட ` நின்னுடைய ` காலத்தின் பின்னது ` போற்றாக் கயவர் ` என்று அப்பரும் சிவனடியே சிந்திக்கும் திருவை எய்தாத வரைக் கயவர் எனப் பழித்தலை அறிக . குய்யம் - இரகசியம் . குஹ்யம் என்றதன் மரூஉ . மறைப்பு . கயவர் அறியாவாறு கடவுள் தன்னை ஒளித்து நிற்றலே குய்யம்பெய்தல் ஆம் . கச்சிமதிலும் அம்மதிலின் கொடியும் தொல் புகழ் வாய்ந்தவை .

பண் :

பாடல் எண் : 4

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை யாயிரம் வைகல்வைகல்
நெறிப்பட விண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே.

பொழிப்புரை :

மதியின் கூறாகிய பிறையை அணிந்த நீண்ட சடையனே ! பெரிய காஞ்சி மாநகரில் உள்ளாயாய்த் தலைக்கோலம் என்ற அணியை அணிந்தவனே ! நாளும் ஆயிரம் பூக்களால் இண்டை மாலை தொடுத்துச் சிவபெருமானுக்கு அணிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து நாள்தோறும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் வரிசை அமைய இண்டை மாலையைத் தொடுக்கின்ற திரு மாலுடைய மனநிறைவை அழிப்பவன் போல நீலகண்டனாகிய நீ ஒரு பூவைக் குறையச் செய்து அப்பூவின் தானத்தில் செந்தாமரை போன்ற தன் கண்ணை இடந்து அவன் பூவாகத் தொடுப்பதற்காக அவன் கண் ஒன்றனைத் தோண்டி எடுக்குமாறு செய்தாயே .

குறிப்புரை :

பிறைத்துண்டம் - ` நிலாத் திங்கட்டுண்டம் `. இக் காலத்தில் அப் பெருங் காஞ்சித் திருவேகம்பத்துள் வடகீழ் மூலையில் நிலாத் திங்கட்டுண்டத்தான் என்னத் திருமால் திகழ்கின்றார் . ` பிறைத் துண்டவார் சடையாய் பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே ` என்றதறிக . குறிக்கொண்டிருந்தது - ஆழி பெறக் கருதி , சிவனடியே சிந்தைக் குறியாகத் தியாநம் புரிந்து , ஆயிரம் செந்தாமரை . ஆயிரம் வைகல் எனலாகாது . வைகல் வைகல் - நாள்தோறும் . நெறிப்பட - இண்டை கட்டும் முறைமையிற் பொருந்த . ` தொண்டர் அஞ்சுகளிறும் அடக்கிச் சுரும்பு ஆர் மலர் இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் ... ... கேதாரமே ` என்றதில் உள்ள நெறி . இண்டை புனைகின்ற திருமால் . ` முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக் கற்றையினாய் ` தி .4 ப .113 பா .2. நிறை - நெஞ்சில் நிறுத்திய உறுதி . ஆடவர்க்கு நிறையும் பெண்டிர்க்குக் கற்பும் உரியன . அழிப்பான் - அழித்தற் பொருட்டு . கறைக்கண்ட - திரூநீலகண்ட ( அண்மைவிளி ). நீ ஒரு பூ குறையச் செய்து . கண்ணைச் சூல்விப்பது தகுமோ ? எனல் ` சூல் விப்பதே ` என்று வினாவியதன் கருத்து : சூல்வித்தல் - தோண்டச் செய்தல் . ` பெருங்காஞ்சி `:- இன்றும் பெரிய காஞ்சிபுரம் சின்னகாஞ்சி புரம் என வழங்குதல் அறிக . பெரியவன் - மகாதேவன் .

பண் :

பாடல் எண் : 5

உரைக்குங் கழிந்திங் குணர்வரி யானுள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மாலெண் வசுக்களே காதசர்கள்
இரைக்கு மமிர்தர்க் கறியவொண் ணானெங்க ளேகம்பனே.

பொழிப்புரை :

சொற்களால் தன் பெருமையைச் சொல்ல இயலாதவனாய் , மனத்தாலும் உணர்வதற்கு அரியவனாய்த் தன்னை வணங்குபவர்களுடைய வினைகளைச் செயலற்றன ஆக்குவான் என்ற கருத்தொடு கையால் தொழுவதே அல்லாமல் , எங்கள் ஏகம்பப் பெருமான் பிரமன் , திருமால் , ஆதித்தர் பன்னிருவர் , வசுக்கள் எண்மர் , உருத்திரர் பதினொருவர் முதலாகத் தன்னை உரத்த குரலில் துதிக்கும் தேவர்களுக்கும் உள்ளவாறு அறிய இயலாதவன் ஆவான் .

குறிப்புரை :

எங்கள் ஏகம்பன் உணர்வரியான் . கைதொழுவது அல்லால் ( எவர்க்கும் ) அறியவொண்ணான் . உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் :- ` உரையுணர் விறந்து நின்றுணர்வதோருணர்வே ` ( தி .8 திருவா .). உள்குவார் வினையைக் கரைக்கும் - நினைப்பவர் வினையை ஒழிப்பான் . என - என்று உறுதியாகக் கருதிக் கொண்டு . கைதொழுவது அல்லால் :- கையால் மலரிட்டுத் தொழுது வழிபடும் அதனால் அல்லாமல் , மற்றெதனாலும் எவர்க்கும் அறிய ஒண்ணான் . கதிரோர்கள் - ஆதித்தர்ப் பன்னிருவர் . மலரவன் - நான்முகன் . மால் - திருமால் . எண் வசுக்கள் - வசுக்கள் எண்மர் . ஏகாதசர்கள் - உருத்திரர் பதினொருவர் . ( கந்தபுராணம் . கணங்கள் செல் .9. கூர்மபுராணம் பலவ . 14. உரை ). அமிர்தம் - அமுதுண்டுஞ் சாம் விண்ணோர் . முப் பத்துமூவர் தேவருள் பன்னிருவர் கதிரோர் , பதினொருவர் உருத்திரர் , எண்மர் வசுக்கள் இருவர் மருத்துவர் என்பர் . அமிர்தம் மருந்து எனப்படும் . படவே மருத்துவர் இருவரே இதில் அமிர்தர் எனப்பெற்றனர் . முப்பத்துமுக்கோடி தேவர்க்கும் முப்பத்துமூவர் தலைவர் என்பர் . ( பொருட்டொகை நிகண்டு 967). ` எங்கள் ஏகம்பன் ` என்றதாலும் பிற இடம் பலவற்றுள் ஏகம்பனைத் தனிச் சிறப்பிற் கூறுதலாலும் ஆசிரியர்க்கு ஆன்மார்த்த மூர்த்தி திருவேகம்பன் எனல் புலப்படும் . திருவாலவாய்ச் சொக்கநாதன் என்பாருமுளர் .

பண் :

பாடல் எண் : 6

கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு
உருகிற்றெ னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா
ஒருபற்றி லாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

திருவொற்றியூரா ! திருவாலவாயா ! திருவாரூரா ! கச்சிஏகம்பனே ! அடியேன் தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக உன் திருவடியைக் காண்பதற்கு அடியேனுடைய உள்ளம் உருகுகிறது . அடியேனும் கிடந்து வருந்தி இளைத்துச் செயலற்று விட்டேன் . அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்பதனையும் கண்டு அடியேன்மாட்டு இரக்கம் கொள்வாயாக .

குறிப்புரை :

கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு என் உள்ளமும் உருகிற்று ; நானும் கிடந்து அலந்து எய்த்து ஒழிந்தேன் ; ` கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியில் ` ( தி .4 ப .96 பா .5.) ` கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் ` ( தி .4 ப .94 பா .6.) ` கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தந்தளித்த கள்வர் போலும் ` ( தி .6 ப .89 பா .9). கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு உருகியது என் உள்ளம் ; கிடந்து அலைந்து எய்த் தொழிந்தது நான் என்றதால் , ` நினையாது ஒருபோதும் இருந்தறியேன் ` ` இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் ` ` சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் ` ` தமிழோடிசை பாடல் மறந்தறியேன் ` ` நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் ` என்றவை முரணாகாமை உணர்க . அப்பர் எச்சமயம் புகினும் அவர் நாட்டம் எல்லாம் மெய்ப்பொருளுணர்ச்சியிலேயே ஆதலின் , அப்பொருளை அவர் மறந்தாரல்லர் . திருவொற்றியூரா , திருவால வாயா , திருவாரூரா என்று அம் மூன்றனையும் எண்ணிச் சிவபிரானை அழைத்தது யாது காரணத்தால் ? ஒருபற்றிலாமையும் கண்டிரங்குவாய் என்று கச்சியேகம்பனை இரந்தது , அம்மைக்குப் பேரின்ப வீடு தந்தருளியது குறித்துப்போலும் . ` கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் ஊனமது எல்லாம் ஒழித்தான் ` ( தி .6 ப .19 பா .4) ` பற்று அற்றோமே ` ( தி .6 ப .98 பா .3). ` ஒண்கழலாற்கு அல்லால் எப்பற்றும் இலன் ` ( தி .5 ப .97 பா .7). ` கொண்டீச்சுரவனார் பற்று அலால் ஒருபற்று மற்று இல்லையே ` ( தி .5 ப .70 பா .2). ` ஒற்றையேறு உடையான் அடியே அலால் பற்று ஒன்று இல்லிகள்மேற் படைபோகல் ` ( தி .5 ப .92 பா .10)

பண் :

பாடல் எண் : 7

அரியய னிந்திரன் சந்திரா தித்த ரமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை யாருணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை யேகம்ப வென்னோ திருக்குறிப்பே.

பொழிப்புரை :

தீப் போன்ற ஒளியை உடைய சிவந்த சடைமுடியனாகிய ஏகம்பனே ! திருமால் , பிரமன் , இந்திரன் , சந்திரன் , சூரியன் முதலிய தேவர்கள் எல்லோரும் உரிய உன்னுடைய வெற்றி பொருந்திய கோயிலின் முதல்வாசலில் உன் காட்சியை விரும்பி வாடிக் கிடக்கின்றார்கள் . முறுக்கேறிய சிவந்த சடைகளை உடைய , சிவானந்த போகத்தைத் துய்க்க விரும்பும் முனிவர்களும் உன் காட்சி கிட்டாமையால் தனிமைத் துன்பம் உறுகின்றார்கள் . அவர்களுக்குக் காட்சி வழங்குவது பற்றி உன் திருவுள்ளம் யாதோ ? அருளுவாயாக .

குறிப்புரை :

தீயை ஒத்த செந்நிறத்தைக் கொண்ட சடையுடைய திருவேகம்பனே , நின்கடைத் தலையினராய் உணங்கிக் கிடந்தார் ; புலம்புகின்றார் . ( நின் ) திருக்குறிப்பு என்னோ ? அரியும் அயனும் இந்திரனும் சந்திரனும் ஆதித்தினும் அமரரும் மற்றெல்லாரும் தாம் புகலடைதற்குரிய நின் கடைத்தலை . கொற்றக் கடைத்தலை . அரி - திருமால் . அயன் - பிரமன் . ( தி .4 ப .100 பா .9.) உரிமை - அபயம் அளித்தலில் ஆண்டவனுக்கும் , அடைக்கலம் புகுதலில் அடிமைகட்கும் உண்டு . கொற்றக்கடை கற்றைச் சடையானுக்குரியதைக் குறித்ததுமாம் . கடைத்தலை - தலைக்கடை . முதல் வாயிற் கடை . கடைத்தலையார் - புறங்கடையாராகி . ` புரங் கடந்தானடி காண்பான் புவி விண்டுபுக்கறியா திரங்கி டெந்தா யென்றிரப்பத்தன் னீரடிக் கென்னிரண்டு கரங்க டந்தானொன்று காட்டமற்றாங் கதுங் காட்டிடென்று வரங்கிடந்தான்றில்லை யம்பலமுன்றிலம் மாயவனே ` ( தி .8 திருக்கோவை . 86) உணங்கா - உணங்கி ; வற்றி . ` புனல்காலே உண்டியாய் அண்டவாணரும் பிறரும் வற்றி யாரும் நின்மலரடி காணா மன்ன `. ( தி .8 திருவாசகம் ) ` வான் வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான் ` ( ? ) ` உலவாக் காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனைக் காண்பான் பலமா முனிவர் நனி வாடப் பாவியேனைப் பணி கொண்டாய் ` ( ? ) ` தொழுகையர் அழுகையர் துவள்கையர் ` ( ? பா . 965. 1062). புரி - முறுக்கு . போகம் - சிவாநந்தபோகம் . புலம்பு கின்றார் - வாடுகின்றார் . எரிதரு சடை . செஞ்சடை :- தீயைப் போன்ற சிவந்த சடை . திருக்குறிப்பு - திரு வுள்ளக் கருத்து . என்னோ - யாதோ ?

பண் :

பாடல் எண் : 8

பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பரைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி யேகம்பனே.

பொழிப்புரை :

பாம்பினை இடுப்பில் இறுகக் கட்டிப் பரவிய சடை முடியை உடைய பால் நிறத்தனே ! கச்சி ஏகம்பனே ! அடியார்கள் இரு கைகளையும் குவித்துக் கொண்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு அடியார் குழாத்துடன் கூடிப் பலநாள்களாகத் தரையில் புரண்டு உன் திருவடிகளே தங்களுக்கு அடைக்கலம் என்று கூறிவந்து அடைந்துள்ளனர் . அவர்களுக்கு நீ இரங்கி அருளுவாயாக .

குறிப்புரை :

பால்வண்ணனே , ஏகம்பனே , அன்பர்கள் கூடிப் பூசிப் புரண்டு சரண் என்று ஏம்பலிப்பார் ( கள் . அவர் ) கட்கு இரங்கு . பாம்பு அரை சேர்த்தி :- அரவக்கச்சு . படரும் சடை முடியையுடைய பால் வண்ணன் . கூம்பல் - குவிதல் . ( கூப்பல் - குவித்தல் ) கூம்பலைச் செய்த கரம் . கரதலம் - கைத்தலம் ; கையகம் . கைத்தலத்தைப் பெற்ற அன்பர்கள் . அன்பே கூம்பலைச் செய்த கைகளைப் பெறுவித்தது . ` கூம்பலங் கைத்தலத்தன்பர் என்பூடுருகக் குனிக்கும் பாம்பலங்காரப் பரன் ` ( தி .8 திருக்கோவையார் . 11). பல்நாள் - நெடுங்காலம் . சாம்பர் - திருநீறு . தரை - நிலம் . நின் தாள் சரண் - உன் திருவடியே புகல் ( தி .4 ப .96 பா .9.) ஏம் பலித்தல் - வருந்தி வந்தடைதல் . ஏம்பல் - ஏங்குதல் . ஏம்பல் என்னும் சொல்லினின்று ஏம்பலித்தல் என்பது தோன்றிற்று . கலக்கமுமாம் . சாம்பல் - சாம்பர் . ( பந்தல் - பந்தர் ). ஈற்றுப் போலி .

பண் :

பாடல் எண் : 9

ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி யல்லமென்னில்
சான்றுகண் டாயிவ் வுலகமெல் லாந்தனி யேனென்றெனை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய சுடர்வண்ணனே.

பொழிப்புரை :

கச்சி ஏகம்பத்தில் விரும்பி உறைகின்ற ஒளி வடிவினனே ! எம் பெருமானே ! அடியேனை உன் அடியவன் என்று ஏற்றுக் கொண்ட நீ இப்பொழுது அடியேனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால் , நீ அடியேனை ஏற்றுக் கொண்டதற்கு இவ்வுலகம் முழுதும் சாட்சி என்பதனை நினைத்துப்பார் . தன் உணர்வு இல்லாதவன் என்று அடியேனைப் பற்றி நின்ற ஐம்பொறிகளுக்கும் போக்கியப் பொருளாக வழங்கிப் பின் அந்தப் போக்கியப் பொருளா யிருந்த தன்மையிலிருந்து அடியேனை மீட்டுக் கொண்டாய் என்பதனை உளம் கொள்வாயாக .

குறிப்புரை :

கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே , என்னை ஏன்று கொண்டாய் . எனை - என்னை . என்னை என்ற பாடம் தவறு . இனி எம்பெருமான் , யாம் உன்னை ஏன்று கொண்டாம் அல்லம் எனில் , இவ்வுலகம் எல்லாம் ( கொண்டதற்குச் ) சான்று கண்டாய் . என்னை ஐவர் ஊன்றி நின்றார் . தனியேன் என்று கருதினர் அவ்வைவரும் . ஊன்றி நின்ற ஐவர்க்கும் என்னை ஒற்றிவைத்தாய் . பின்னை அவ்வொற்றியெல்லாம் சோன்று கொண்டாய் - சுவன்று கொண்டாய் . சூன்று என்பது சோன்று என மருவும் . சூன்று - தோண்டி . கைப்பற்றி என்றதாம் . சுவன்று என்றதன் மரூஉவுமாகும் . சுவறல் - உறிஞ்சல் . சோன்று - உறிஞ்சி . ஈண்டு அஃது ஒற்றியெல்லாம் மீட்டுக் கொண்டாய் என்ற கருத்ததாயிற்று . ஒற்றி நீக்கித் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளலாம் . கச்சி - திருக்கச்சி . ஏகம்பம் - ஏகாம்பரம் . மேய - மேவிய - எழுந்தருளிய . சுடர்வண்ணன் :- ` தீவண்ணன் `. என்னை ஏற்றுக் கொண்டாய் அடிமை என்று அதனால் நீ எம்பெருமான் . நான் உன் அடியேன் . இனி அல்லேன் எனல் இயலாது . அல்லம் எனில் , இவ்வுலகம் எல்லாம் சான்று . ஏன்றுகொண்டது மெய்மை என்பதற்குச் சான்று . சூலை நோய் தீர்த்து ஆட்கொண்டமையும் சமணர் செய்த கொடுமையனைத்தும் தாக்காதவாறு காத்தமையும் ஏன்று கொண்டதற்குத் தக்க சான்றாம் . அவ்வுண்மையை உலகம் எல்லாம் அறிந்துள .

பண் :

பாடல் எண் : 10

உந்திநின் றார்உன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல் பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலு மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி யெங்ஙன மோவந் திறைஞ்சுவதே.

பொழிப்புரை :

மதில்களை உடைய காஞ்சி நகரில் உறைபவனே ! உன்னுடைய திருவோலக்க மண்டபத்தின் வாயிலைப் பொருந்தித் தேவலோக அரம்பையர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நிற்கிறார்கள் . பழைய வானவர் கூட்டத்தினர் தமக்கு இடப்படும் திருத் தொண்டு யாது என்று அறிவதற்கு ஓலக்கத்தில் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார்கள் . பிரமனும் திருமாலும் அம்மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள் . இவ்விடத்தில் நிற்கின்ற அடியோங்கள் அவ்வளவு கூட்டம் நிரம்பிய உன் திருவோலக்க மண்டபத்தில் எங்ஙனம் வந்து உன்னைக் கண்டு வழிபடல் இயலும் ?

குறிப்புரை :

சூளைகள் - வேசிகள் . அரம்பையர் . உனது திருவோலக் கத்தில் . உந்தி - தள்ளி . நடனம் புரிந்து எனலுமாம் . தொல்லை - பழமை . வானவர் ஈட்டம் - தேவர் கூட்டம் . வாய்தல் பற்றி - கடை வாயிலைப் பற்றிக்கொண்டு . துன்றி நின்றார் - நெருங்கி நின்றனர் . பணி அறிவான் - கட்டளையை அறிந்து கொள்ளவேண்டி . அயனும் (- பிரமனும் ) திருமாலும் பணி அறிவான் வந்து நின்றார் . மதிற் கச்சி :- கச்சி மதில் மிக்க பெருமையுடையது ; பலராலும் பல நூலிலும் புகழப்படுவது . இந்த நின்றோம் - இவ்விடத்தில் நின்ற யாம் . இகரச் சுட்டின் திரிபு இந்த என்பது . அ - அந்த . உ - உந்த என்றதாலறிக . ` இந்தா ` என்பதற்கு மதுரைச் சங்கப் பதிப்பான தமிழ்ச் சொல்லகராதியில் உள்ள விளக்கத்தைக் காண்க . இந் நின்றோம் என்றதாம் . இனி வந்து இறைஞ்சுவது எங்ஙனமோ ? எங்கனமோ என்றதன் மரூஉவே எங்ஙனம் என்பது . அங்ஙனம் முதலிய சுட்டுமுதற் சொற்களும் யாங்ஙனம் என்பதும் மரூஉ மொழியே . சிந்தாமணி . கந்தபுராணம் முதலியவற்றில் எதுகைத் தொடரில் அமைந்த பாக்களாலும் அவ் வுண்மையை அறியலாம் .
சிற்பி