திருவின்னம்பர்


பண் :

பாடல் எண் : 1

மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின வன்புடைத் தொண்டர்க் கமுதரும்பி
இன்னல் களைவன வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பர் எம்பெருமானுடைய திருவடி இணைகள் இமவான் மகளாகிய பார்வதியின் கைகளால் அழுத்தித் தடவப் பட்டன. வேதங்கள் குறிப்பிடும் துறைகளை எல்லாம் பின்பற்றுவதற்குப் பற்றுக்கோடாம் பொருளாய் உள்ளன. தூய தாமரை போன்ற வடிவின; தம்மாட்டு அன்புடைய அடியவர்களுக்கு அமுது வழங்கி அவர்களுடைய துயர்களைப் போக்குவன.

குறிப்புரை :

இன்னம்பரான்தன் இணை அடியே மலைமகள் கையால் வருடின; மறைகள் சொன்ன துறைதொறும் பொருளாயின; கமலத்து அன்ன வடிவின; தொண்டர்க்கு அமுது அரும்பி இன்னல் களைவன அம்பர், இனிமை - அம்பர் = இன்னம்பர். `அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்டுறை அழுந்தூர் ஆறை` (க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகம். 4).
மன்னுமலை:- நிலையான இமயகிரி. மன்னுமகள் - என்றுமுள்ள தேவி. மலைமகள் - இமாசலகுமாரி. வருடின:- ... ... பாவை ... ... குழலி ... ... வளைக்கரம் கூப்பி நின்று வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் காந்தள் அணங்கும் அரவிந்தம் ஒக்கும்` (தி.4 ப.92 பா.18).

பண் :

பாடல் எண் : 2

பைதற் பிணக்குழைக் காளிவெங் கோபம்பங் கப்படுப்பான்
செய்தற் கரிய திருநடஞ் செய்தன சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங்கூற்றை யுதைத்தன வும்பர்க்கெல்லாம்
எய்தற் கரியன வின்னம்ப ரான்ற னிணையடியே.

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணை அடிகள் இளம் பிள்ளைகளின் பிணங்களைக் காதணிகளாக அணியும் காளியின் கொடிய கோபத்தைப் போக்குவதற்கு மற்றவர்களால் செய்தற்கு அரிய திருக்கூத்தினை நிகழ்த்துவன. சிறப்புடைய அந்தணனாகிய மார்க்கண்டேயன் உயிர் தப்புவதற்காகக் கொடிய கூற்றுவனை உதைத்தன. தேவர்களுக்கெல்லாம் கிட்டுதற்கு அரியன.

குறிப்புரை :

இன்னம்பரான் இணையடியே காளி கோபம் பங்கப் படுப்பான் திருநடஞ் செய்தன; மறையோன் உய்தற்பொருட்டுக் கூற்றை உதைத்தன; உம்பர்க்கெல்லாம் எய்தற்கு அரியன. பைதல் - இளமை. பிணக்குழை:- பிணக்கு - மாறுபாடு.
உழை - ஏழனுருபு. மாறுபட்டு ஆடிய திருக் கூத்தில். பணிக்குழை என்று இருந்தது ஆயின், பணிக்குழை - பாம்பாலாகிய குழை என்க. `சர்ப்ப குண்டலம்`. அரவக் குழை`.
வெம் கோபம் - வெய்ய சினம் . பங்கப்படுப்பான் - கேடுபடச் செய்ய. செய்தற்கு அரிய திருநடம் - காளியாற் செய்தற்கு எளிதல்லாத ஊர்த்துவதாண்டவம். அருமை:- நாணின் நீங்கிக் காலை மேலே தூக்கியாட ஒவ்வாமை.
சீர்மறையோன்:- மார்க்கண்டேய முனிவர். சீர் என்னும் அடை மறைக்கும் அவர்க்கும் உரித்து. உய்தற்பொருட்டு - (இறவா திறைவனடியிலிருத்தற்பொருட்டு) இறத்தலினின்றும் தப்புதற் பொருட்டு. வெங்கூற்று - வெய்ய கூற்றன். உம்பர் தேவர். எய்தற்கு - அடைதற்கு.

பண் :

பாடல் எண் : 3

சுணங்குநின் றார்கொங்கை யாளுமை சூடின தூமலரால்
வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின மன்னு மறைகடம்மில்
பிணங்கிநின் றின்னன வென்றறி யாதன பேய்க்கணத்தோ
டிணங்கிநின் றாடின வின்னம்ப ரான்ற னிணையடியே.

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள் தேமல் படர்ந்த கொங்கைகளை உடைய உமாதேவியால் சூடப்பட்டன; தேவர்கள் வணங்கிநின்று தூய மலர்களைத் தூவி வாழ்த்துதலைப் பொருந்தியன; என்றும் நிலைபெற்ற நான்கு வேதங்களும் தம்முள் கருத்து மாறுபட்டு உண்மையில் இத்தன்மையன என்று அறியப்படாதன; பேய்க் கூட்டத்தொடு கலந்து நின்று கூத்து நிகழ்த்தின.

குறிப்புரை :

சுணங்கு - தேமல். நின்று ஆர் கொங்கை - நின்று பொருந்திய கொங்கை. `கொங்கை` மரூஉ. கையாற் கொள்ளப் படுவது என்னும் பொருட்டு, அவையல் கிளவி. சொல்லலாகாமை குறித்துப் பெயரிட்டு வழங்கிய தமிழ்ச் சான்றோர் பெருமைகளை நினைந்து போற்றுக. `முதுக்குறைந்தனள்` என்பது முதலியவற்றை வழக்கிரண்டனுள்ளும் ஈண்டெண்ணுக. உம்பர் தூமலரால் வணங்கி நின்று வாழ்த்திய பெருமையுடையன இணையடி.
மன்னும் மறைகள்:- வேதம் நித்தியம் என்னும் பொருட்டு, தம்மில் பிணங்கி நின்று இன்னன என்று அறியாதன - தம்முள் முரண் உற்று, சிவபிரான் திருவடிகள் இத்தன்மையன என்று அறியமாட்டா தன. `மறையிலீறுமுன் தொடரொணாத நீ` (தி.8 திருவாசகம்). `வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்` (தி.8 திருவாசகம்) `நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்து அடியேன் பாலே புகுந்து பரிந் துருக்கும் பாவகத்தால்` (தி.8 திருவாசகம்) `நான்மறைகள் தாம் அறியா எம்பெருமான்` (தி.8 திருவாசகம்) `மிக்க வேத மெய்ந்நூல் சொன்னவனே சொற்கழிந்தவனே` (தி.8 திருவாசகம்). கணம் - கூட்டம். பேய்க் கூட்டத்தோடு இணங்கி நின்று ஆடின.

பண் :

பாடல் எண் : 4

ஆறொன் றியசம யங்களி னவ்வவர்க் கப்பொருள்கள்
வேறொன்றி லாதன விண்ணோர் மதிப்பன மிக்குவமன்
மாறொன்றி லாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன்றி லாதன வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள் ஆறு ஆறாக நான்கு வகைகளில் அடங்கிய சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு வேறாகாது அவ்வப் பொருள்களாக நின்று அருள்புரிவன; தேவர் களால் மதிக்கப்படுவன; தம்மை ஒப்பனவும் தம்மின் மிக்கனவும் இல்லாதன; நில உலகமும் மேல் உலகமும் அழிந்த காலத்தும் தமக்கு அழிவு இல்லாதன.

குறிப்புரை :

ஆறு ஒன்றிய சமயங்கள் - (தி.4 ப.100 பா.7, தி.5 ப.89 பா.6, தி:-6 ப.50 பா.7, ப.65 பா.7, ப.68 பா.5.) அறுவகைச் சமயம். `அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க் கங்கே ஆரருள் புரிந்து` (தி.7 ப.55 பா.9); ஆறாறாக நாற்றிறத்தில் ஒன்றிய சமயங்கள். அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்பன நாற்றிறம். அவ்வச் சமயங்களின் அவ்வவர்க்கு அவ்வப் பொருள்களேயாய் நின்று அருள் புரிவான் சிவபெருமான். `யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்` (சித்தியார்). அப் பொருள்கள் அன்றி வேறு ஒன்று இல்லாதனவாய் விளங்குவன.
விண்ணோர் - அச் சமயத்திற்கெல்லாம் மேலானவராய சுத்தாத்துவித சைவசித்தாந்த ஞானாநந்தச் செல்வர்கள். தேவருமாம். மதிப்பன - உணர்வன; உணரப்படுவன. உவமன் இலாதன. மிக்கு இலாதன. மாறு இலாதன. உவமன் ஒன்று மிக்கு மாறு இலாதன. தி.4 ப.100 பா.10. உவமன் வேறு. ஒப்பு வேறு. `ஒப்புடையன் அல்லன் ஓர் உரு வனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமன் இல்லி` `ஒப்பிலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் திருப்பாதத் தப்பன்` (தி.8 திருவாசகம்) `உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள் தந்து ... காட்டி ... அருள் புரிந்த என் தலைவன்`. இணையடிக்கு மிக்கதும் இல்லை உவமனும் இல்லை. மாறு (- ஒப்பு) மில்லை. `மாற்றுடை` என்னும் வழக்குணர்க. மண்ணும் விண்ணும் (இடவாகு பெயர்) மாய்ந்திடினும் இணையடி மாயாதன.

பண் :

பாடல் எண் : 5

அரக்கர்தம் முப்புர மம்பொன்றி னாலட லங்கியின்வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன கட்டுருவம்
பரக்கவெங் கானிடை வேடுரு வாயின பல்பதிதோ
றிரக்க நடந்தன வின்னம்ப ரான்ற னிணையடியே.

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணை அடிகள், அரக்கர் களுடைய முப்புரங்களும் அம்பு ஒன்றினால் அழிக்கும் நெருப்பிற்கு இரையாகி மறையுமாறு அக்காலத்தில் வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் நின்றன; எடுத்துக்கொண்ட வேடர் வடிவம் சிறக்குமாறு கொடிய காட்டிலே வேடர்களுடைய அடிகளின் வடிவின ஆயின; பல ஊர்கள்தோறும் பிச்சை எடுக்க நடந்தன.

குறிப்புரை :

அரக்கர் - திரிபுரத்தசுரர். முப்புரம் - `மூன்றூர்`. அம்பு ஒன்று:- `மால் கணை`. அங்கி - நெருப்பு. `மூவார் புரங்கள் எரித்த அன்று`. அங்கியின் வாய்க் கரத்தல் - எரிந்தொழிதல். வைதிகத் தேர் மிசை - வேதக் குதிரை பூட்டிய பூமியாகிய தேர்மேல். வேத சம்பந்தம் வைதிகம். ஈண்டுக் குதிரையை உணர்த்திற்று. கட்டு உருவம்:- வேடர் வடிவம் இயல்பானதன்று; கட்டிக்கொண்டது. கட்டுருவம் - கட்டொளி யுமாம். தடத்தம் என்றவாறு. பரக்க - பரந்து விளங்க. வெங்கான் - வெய்யகாடு. கான் இடை - காட்டில். வேடு உருவு ஆயின - வேட்டுவ வடிவாயின. பல்பதிதோறு - பல்லூர்தொறும். இரக்க - இரத்தல் செய்ய. `பத்தூர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி` (தி.7 ப.46 பா.1) இணையடி இரக்க நடந்தன. இணையடி தேர் மிசை நின்றன என்றதாற் பெருஞ்செல்வமும் பல்பதிதோறிரக்க நடந்தன என்றதாற் பொல்லா வறுமையும் உணர்த்தி, இறைவனது ஏரி நிறைந்தனைய செல்வத்தையும் விற்றூணொன்றில்லாத நல்குரவையும் குறித்தவாறறிக.

பண் :

பாடல் எண் : 6

கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழன்முன் றேடின கேடுபடா
ஆண்டும் பலபல வூழியு மாயின வாரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின் றாடின மேவுசிலம்
பீண்டுங் கழலின வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள், நிலத்தைக் கிழித்தும் கிளரியும் பொலிவை உடைய பன்றி வடிவெடுத்த திருமாலால் தேடப்பட்டன; எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஊழிகள் கடந்தாலும் கெடுதியை அடையாதன; வேதங்களின் விரும்பிய பொருள் புலப்படுமாறு திருக்கூத்து நிகழ்த்தின; விரும்பிய சிலம்பும் கழலும் அணிந்தன.

குறிப்புரை :

கீண்டும் - கிழித்தும்; நிலத்தைக் கிளறியும். கிளர்ந்தும் - கிண்டியும். கிளர்தல் - கிண்டல். கேழல் - பன்றி. பொன் - அழகு, திரு. திருமால் உருக்கொண்ட பன்றியாதலின், திருவையுடைய கேழல் என்றுமாம். ஏனைப் பன்றிக்குப் `பொன்` என்னும் அடை பொருந்தாது. அவை தம்மை வளர்ப்பார்க்குப் பொன் கிடைக்கத் தாம் கைம் மாறுதலும் கொலையுண்ணலும் அடைகின்றமையாற் பொருந்தும் போலும். கேடுபடா ஆண்டும் ஆயின. பல பல ஊழியும் ஆயின. இணையடி காலங் கடந்த உண்மையை உணர்த்தியவாறு. ஆரணம் - வேதம். வேண்டும் பொருள்கள் ஆரணத்தின் விளங்க இணையடி நின்று ஆடின. வேதங்களில் அவரவர்க்கு வேண்டும் பொருள்கள் விளங்க நின்று திருவடி ஆடின. திருவுருத்திரம் துறவினார்க்குரித்து; சீசூத்தம் துறவாதார்க்குரித்து என்றவாறு. அவரவர் வேண்டும் பொருள்கள் பற்பல வேதங்களில் உள. மேவு சிலம்பு ஈண்டும் கழலின - மேவிய சிலம்பும் ஈண்டிய கழலும் உடையன.

பண் :

பாடல் எண் : 7

போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை
ஆற்றுந் தகையன வாறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றுந் தகையன வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள், வழிபடத் தக்கன; கொடிய முயலகனுடைய வெகுளியால் ஏற்பட்ட இழிவைப் போக்கும் தன்மையன; அறு வகைச் சமயங்களைச் சார்ந்த அடியவர்களைத் தெளிவிக்கும் தன்மையன; தெளிவடைந்த அடியவர்களை மேம்பட்ட நெறிக்கண் உயர்த்தும் தன்மையன.

குறிப்புரை :

போற்றும் தகையன - உயிர்கள் எல்லாம் போற்றிப் பயன் கொள்ளும் தகைமையுடையன. பொல்லா முயலகன் - பொலி வில்லாத முயலகன் என்னும் அசுரன். `தருக்கிய முயலகன் மேல்தாள் வைத்தான்` (தி.6 ப.90 பா.9) `அடிகொண்டார் சிலம்பலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்`. (தி.6 ப.96 பா.3) முயலகனது கோபப் புன்மையை ஆற்றும் தகைமையுடையன. புன்மை - குற்றம்; புல்லிய தன்மை. ஆறு சமயத்தவரவரைத் தேற்றும் தகையன. (தி.4 ப.100 பா.1) உரை பார்க்க. தேற்றுதல் - தெளித்தல். தெளிவித்தல். `தெள்ளித் தெளிக்கும் புலவோர்` (சகலகலா வல்லிமாலை.3) தேறிய தொண்டரை - தெளிந்த தொண்டர்களை. செந் நெறிக்கே - செம்மையதான சிவநெறியிலே. ஏற்றும் - ஏறப்பண்ணும். இணையடியே போற்றுந் தகையன; புன்மை ஆற்றுந் தகையன; ஆறு சமயத்தவரவரை ஆற்றுந் தகையன; தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந் தகையன என்று இயைக்க. முயலகன் புன்மை ஆற்றுதல் ஆணவ மல நீக்கம். செந்நெறிக்கே ஏற்றுதல் திருவருளாக்கம் (சிவப் பேறு). போற்றுதல் - புகழ்(ந்து வழுத்து)தல். கன்ம மல நீக்கம். தேற்றுதல் - மாயாமல நீக்கம். மும்மல நீக்கம் (பாசவீடு).

பண் :

பாடல் எண் : 8

பயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமல ராகக் குலாவின கூடவொண்ணாச்
சயம்புவென் றேதகு தாணுவென் றேசதுர் வேதங்கணின்
றியம்புங் கழலின வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணை அடிகள், அச்சமும் கீழ்மையும் ஒரு சேர வழங்கும் பாவங்களைப் போக்குவன; பார்வதியினுடைய தனங்களாகிய பொலிவுடைய தாமரை மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாகிய தம் இனத்தனவாகக் கொண்டு நட்புச் செய்தன; அவன் அருளாலன்றித் தம் முயற்சியால் மாத்திரம் அடைய முடியாத தான்தோன்றி என்று சொல்லத் தகுந்த சிவபெருமானே அத்திருவடிகள் என்று நான்கு வேதங்களும் இயம்பும் சிறப்பினவாய்க் கழல்களை அணிந்தன, சிவபெருமான் செய்யும் அருள்களை அவன் திருவடிகளே வழங்கும் என்பதாம்.

குறிப்புரை :

இணையடி பாவம் தவிர்ப்பன; பார்ப்பதி ... குலாவின; சதுர் வேதங்கள் இயம்பும் கழலின. பயம் - அச்சம். புன்மை - குற்றம் (தி.4 ப.100 பா.7.) பாவம் அச்சத்தையும் குற்றத்தையும் தோற்றும். தவிர்ப்பன - நீக்குவன. பார்ப்பதி - பருவதராச புத்திரி. குயம் - கொங்கை. பொன்மை - பொன்னியல்பு; பொலியும் தன்மை. `பொற்றாமரை` என்னும் வழக்குணர்க. பொன்மை மாமலர் - பொன்போற் செய்ய அழகிய தாமரைப் பூ. மா - அழகு; பெருமை. குயத்திற்கு மா மலர் உவமை. இணையடியும் தாமரை குயமும் தாமரை. இரண்டும் இனமாய்க் குலாவின. கூடவொண்ணாமை - சேரவொன்றாமை. கூட வொண்ணாச் சயம்பு - அடைதற்கரிய தான்றோன்றி. தாணு - சிவன். கேநோபநிடத வரலாறு குறித்து நிற்பதொரு சிவநாமம். `தாணுவே உனையல்ல தாணுவே`. (சேதுபுராணம். சிவதீர்த்.91). சதுர்வேதங்கள் - நான்மறைகள். நின்று - தம் எல்லையில் அடங்கி. இயம்பும் - சொல்லும். சொல்வன வேதங்கள். சொல்லப்படுவன கழல்கள். அக் கழல்களையுடையன இணையடி.

பண் :

பாடல் எண் : 9

அயனொடு மாலிந் திரன்சந்த்ரா தித்த ரமரரெலாம்
சயசய வென்றுமுப் போதும் பணிவன தண்கடல்சூழ்
வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியனகர்க்கும்
இயபர மாவன வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரான் தன் இணையடிகள், பிரமன், திருமால், இந்திரன், சந்திரன், சூரியன் மற்றுள்ள தேவர்கள் எல்லோரும் சய சய என்று பல்லாண்டு பாடிக் காலை நண்பகல் அந்தி என்ற முப்பொழுதுகளிலும் பணியும் திறத்தன. குளிர்ந்த கடலால் சூழப்பட்ட பரந்த இந்த நில உலகத்தில் உள்ளவர்களுக்கும் தேவர் உலகத்தவருக்கும் நாகர் உலகத்தவருக்கும் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் நல்குவன.

குறிப்புரை :

இதன் முதலடியிலே `ஆதித்தர்` என்று நிற்குங் காய்ச்சீர் முன் `அமரரெலாம்` என்னும் நிரை முதற் சீர் வந்து வெண்டளை கெட்டு, ஓரெழுத்து மிகுங் குற்றம் தோன்றச் சிலர் பதித்தனர். `சந்த்ராதித்தர்` என்றோ `இந்த்ரன்` என்றோ கொண்டால் அக் குற்றம் தவிரும். மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை பதிப்பில், `சந்திராதித்தமரரெலாம்` என்றுளது. ஆதித்தய + அமரர் - ஆதித்தமரர் எனல் பொருந்தாது. (தி.4 ப.99 பா.7) சயசய - வெல்க வெல்க `சய சய போற்றி` (தி.8 திருவாசகம். 5. 66). முப்போதும் - காலை நண்பகல் மாலை. `கைப்போது மலர் தூவிக் காதலித்து வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வன்` (தி.4 ப.7 பா.3). பணிவன - பணியப்பெறுவன. தண் கடல் - குளிர்ந்த நீர்க் கடல். கடல் சூழ் நிலம். வியல் நிலம். `வியல் என் கிளவி அகலப் பொருட்டே` (தொல்காப்பியம்). முற்றுக்கும் - முழுவதுக்கும். வியல் + நகர். நாகர் நகர் - நாகருலகம். மண்ணோர், விண்ணோர், நாகர் என்னும் மூன்றுலகர்க்கும் இகமும் பரமும் ஆவன. இகம் - இம்மை. பரம் - மறுமை. இப்பிறப்பும் மறுபிறப்பும். இகபரம் - இருமைப் பயனுக்கு ஆகுபெயர். `இயபரம்` என்றது மரூஉ. `இகபரங் கெட்டவன்` என்பதை உலகர் வழங்குமாறறிக.

பண் :

பாடல் எண் : 10

தருக்கிய தக்கன்றன் வேள்வி தகர்த்தன தாமரைப்போ
துருக்கிய செம்பொ னுவமனி லாதன வொண்கயிலை
நெருக்கிய வாளரக் கன்றலை பத்து நெரித்தவன்றன்
இருக்கியல் பாயின வின்னம்ப ரான்ற னிணையடியே. 

பொழிப்புரை :

இன்னம்பரானுடைய இணையடிகள், செருக்குற்ற தக்கனுடைய வேள்வியை அழித்தன; தாமரைப் பூ, உருக்கிய செம் பொன் என்பனவும் தமக்கு உவமம் ஆகாத வகையில் அவற்றிலும் மேம்பட்டன; கயிலையைப் பெயர்க்க முற்பட்ட கொடிய இராவணனுடைய தலைகள் பத்தினையும் நெரித்து அவனால் பாடப்பட்ட வேதங்களின் இயல்பைத் தம் இயல்பாகக் கொண்டன.

குறிப்புரை :

தருக்கிய - செருக்கடைந்த. தக்கன் - தட்சன். வேள்வி - யாகம். தகர்த்தன - சிதைத்தன. `தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழ முன் சென்று அழித்தன` (தி.4 ப.92 பா.2). தாமரைப் போது - தாமரை மலரும். உருக்கிய செம்பொன் - தீயிலிட்டு உருக்கப்பட்ட செய்ய பொன்னும். இணையடிக்கு உவமன் இல்லாதவாறு தாமரை மலரும் செம்பொன்னும் இழிவுற்றன. `உவமன் இலாதன`. (தி.4 ப.100 பா.4.) உரை பார்க்க. ஒண்கயிலை - வெள்ளொளியுடைய திருமலை. அரக்கன்:- இராவணன். தலை பத்து நெரித்தவன் - சிவபிரான். அவனது இருக்கு. இருக்கு இயல்பு - மறையின் தன்மை. `ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலிசிறந்த வேதியர் வேள்வியும் ஆவன ... ... ஐயாறன் அடித்தலமே`. (தி.4 ப.92 பா.17). ஈண்டு இருக்கு என்றது மறையென்னும் பொதுப் பொருள் மேலதுமாம். திருவுருத்திரநாப்பணுள்ள திருவைந்தெழுத்தைக் குறித்ததாகக் கோடல் சிறந்தது. அதுவே வேதத்தியல்பாகும். உவமன் இலாதன என்றது குறித்து முன் (தி.4 ப.100 பா.4.) ` மிக்குவமன் மாறொன் றிலாதன` என்றதன் குறிப்புரையில் எழுதியதைக் காண்க.
சிற்பி