திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புன லாரூ ரவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி யான்றிரு மூலட்டானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

கழுவுதலும் ஒலித்தலும் உடையதாக வரும் தண்ணிய நீர்வளம் மிக்க திருவாரூரில் , விளங்குகின்ற சடைமுடியையும் சிலம்புகள் ஒலிக்கும் திருவடிகளையும் உடைய சிவபெருமானுடைய திருமூலத்தானத்தே , அப்பெருமானுடைய பேரிரக்கத்தையும் அதன் பயன்களையும் எண்ணி உருகுதலால் கண்ணீர் வடித்து வரும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப்பேறு , கூட்டமும் வலிமையும் பரவிய மூர்க்கர்களாகிய சமணர் காணுமாறு , அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்டுமோ ?

குறிப்புரை :

குலம் பலம் - குலமும் பலமும் ; கூட்டமும் வலிமையும் . பாவரு - பரவுதல் வந்த ; பெருகிய . குண்டர் - மூர்க்கர் . அலம்பு அலம்பு ஆ வருபுனல் ; தண்புனல் ; புனல் ஆரூர் . அலம்புதல் - ஒலித்தல் , கழுவுதல் , கழுவுதலும் ஒலித்தலும் உடையதாக வரும் நீர் . தண்ணீர் . நீர் வளம் மிக்க ஆரூர் . ஆரூரிற் கோயில்கொண்டுள்ள சிவபிரான் . அவிர் சடை - விளங்கும் சடை ; சடையான் - சடையுடையவன் . சடை யான் அடி , சேவடி . சிலம்பு அலம்பா வரு சேவடி - சிலம்பு ஒலித்து வருகின்ற செய்ய திருத்தாள் . ( தி .4 ப .92 பா .12) பார்க்க . சடையானும் சேவடியானும் ஆகிய ஈசுவரனது திருவாரூர்த் திருமூலட்டானம் . மூலட்டானம் , மூலஸ்தாநம் என்பதன் திரிபு . மூலாதாரத்தலம் . புலம்பல் அம்பு ஆவரு தொண்டர் . ஈண்டுப் புலம்பல் என்றது உடையவன் தம்பால் வைத்த பேரிரக்கத்தையும் அதன் பயன்களையும் எண்ணியுருகும் பெற்றியாலும் பல பிறவியாக நன்றி மறந்த குற்றத்தை யெண்ணி வருந்தும் வினையாலும் வாய்விட்டுப் புலம்புதல் என்ற பொருளதாயிற்று . கட்டின் நீங்கித் தனிமை உற்றவர்க்கே அது கூடுவது . அதனால் , ` புலம்பே தனிமை ` ( தொல்காப்பியம் ) என்ற பொருளும் அடங்கும் . அம்பு - நீர் . அது விழி நீர்ப் பெருக்கைக் குறித்தது . ` கண்ணீர் ததும்பி ` ( தி .8 திருவாசகம் ). புலம்பலால் , வெள்ளமாவருதல் . அத்தகு மெய்த்தொண்டர்க்குத் தொண்டராகும் புண்ணியம் . திருவாரூர்த் தொண்டருக்கு உறையுள் தேவாசிரிய மண்டபம் . அவர்க்குத் தொண்டராதல் சிவபூசாபலனாகும் . புண்ணியம் - சிவபூசை . ` புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே ` ( சித்தியார் ). புண்ணியம் - சிவபுண்ணியம் . புலம்பல் தொண்டர்க்குரிய இயல்புகளுள் மிகச் சிறந்தது . ` அழு வார்க்கு அமுதங்கள் ` ( தி .4 ப .92 பா .5) ` அழுமவர்க்கு அன்பன் ` ( தி .5 ப .31 பா .7) ` அழவலார்களுக்கு அன்பு செய்து இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் ` ( தி .5 ப .59 பா .7) ` அழும் அதுவே அன்றி மற்று என்செய்கேன் பொன்னம்பலத் தரைசே`. ` அழுதால் உன்னைப் பெறலாமே `. ( திருவாசகம் ). திருவாரூரில் அக்காலத்தில் அமணர் பெருகி யிருந்தனர் . தண்டியடிகள் , நமி நந்தியடிகள் நாயனார் புராணங்களின் உணர்க . தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் , குண்டர்க்கு முன்னே நமக்கும் உண்டு கொல் என்று வியந்து போற்றியவாறுணர்க . அலம்பல் அம்பாவரு - அலம்புதலும் அழகும் பரவலும் உடையதாய் வருகின்ற ( புனல் ) என்றும் ; புலம் - சிவஞானம் . பலம் - சிவஞானப் பயனாய பேரின்பம் என்றும் உரைக்கலாம் . நமக்கும் என்றும்மை விரித்துரைக்க . ( தி .4 ப .101 பா .3, 5, 6.) இலும் அங்ஙனம் விரிக்க .

பண் :

பாடல் எண் : 2

மற்றிட மின்றி மனை துறந் தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட் டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனொ டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் றொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

அருச்சுனனுடைய வில்லின் வலிமையைக் கவர்ந்து அக்காலத்தில் வேடுவனாய்க் காட்சி வழங்கிய திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமானுடைய அடியவர்களுக்கு அடியவராகும் நல் வினைப் பேறு , வீட்டினையும் துறந்து வேறு இடமும் இல்லாமல் இரவில் உண்ணுதல் இல்லாத உடல் வலிய சமணர்கள் கூறும் செய்திகளே உறுதியானவை என்று கருதிக் குற்றம் செய்த அடியேனுக்கும் கிட்டுமோ ?

குறிப்புரை :

மற்று - பிறிது . இடம் - உறையுள் . இன்றி - இன்றியும் . மனை - வீட்டை . துறந்து - விட்டு . அல் - இரவில் . உணா - உண்ணாத . வல் அமணர் - வலிய அமண் சமயத்தார் . சொல் - சொல்லிய ( மதக் ) கோட்பாடுகளை . திடம் - உறுதியுடையவை . என்று - எனக்கொண்டு . துரிசுபட்டேன் - சைவத்தினீங்கிச் சமணத்திற் புக்க குற்றம் அடைந்தேன் . துரிசு பட்டேனுக்கும் - குற்றமுற்றேனுக்கும் . எனக்கும் புண்ணியம் உண்டுகொல் ? வில் திடம் - வில்லை வலிமையால் . வாங்கி - வளைத்தவன் ( சிவன் ). விற்றிடம் - விசயனது விற்றிடம் . ( வில் வலிமை ). அருச்சுனனுடைய வில்லின் திடத்தை வாங்கி ; ` வாங்கல் ` கவர்தல் எனலுமாம் . விசயன் - அருச்சுனன் . அன்று - அவன் காட்டில் தவம் புரிந்த காலத்தில் . ஒரு வேடுவன் - தனி வேடன் . ` புற்றிடங் கொண்டான் ` திருவாரூர்ப் பிரானது தமிழ்த் தொல்பெயர் . வன்மீகநாதன் என்னும் மொழி பெயர்ப்பில் அத்தமிழ்ப் பெயரினது பொருளமைதி இல்லை . அமணர்க்கு இராவுண்டி இராவுண்டி . சொல் - அறிவுறூஉ . திடம் : - வடசொற்றிரிபு . அன்று ஒரு வேடுவனாகி விசயனொடு வில் திடம் வாங்கியாகிய புற்றிடங்கொண்டான் என்க . வாங்கி ஆய்க் கொண்டான் என்றியைத்தல் பொருந்தாது . விசயனொடு அன்றிய வேடுவன் எனலும் ஆம் . அன்றுதல் - பகைத்தல் . வேடுவனாய் வாங்கியாகிய புற்றிடங்கொண்டான் என்றாலன்றி ஆய் என்னும் எச்சத்திற்கு முடிபு பொருந்தாது . ` மனைதுறந்தல்லுணாவல்ல மண் குண்டர் மயக்கம் நீக்கி எனை நினைந்தாட்கொண்டாய் ` ( தி .4 ப .103 பா .6.)

பண் :

பாடல் எண் : 3

ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புர மட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்றிரு வாரூர்த் திருமூலட் டானன்செங்கண்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

போருக்காக வளைத்துக் கொண்ட மேருமலையாகிய வில்லினாலே மும்மதில்களையும் அழித்தவனாய் , தான் போய்த் தேடாமல் இயல்பாகவே மேம்பட்ட செல்வத்தை உடையனாய்த் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறைபவனான , திருமாலாகிய , சிவந்த கண்களை உடைய போரிடும் காளையை உடைய பெருமானுடைய அடியார்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு , ஆடைகளால் பொலிவு செய்யப்படும் வடிவழகின்றி நின்றபடியே உணவினை வாங்கி உண்ணும் மூர்க்கர்களாகிய சமணர் , தம் கண்களால் காணுமாறு , அவர்கள் முன்னிலையில் நமக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

புரம் அட்டவன் ; திருவுடையான் ; திருமூலட்டானன் ; விடையான் அடித்தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் , குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ ? ஒரு வடிவு இன்றி - சிறிதும் அழகில்லாமல் . வடிவு - அழகு , உருவம் கருத்தாலறியற்பாலது உருவம் . கண்ணாற் காணற்பாலது வடிவம் . நின்றுண்குண்டர் ; இருந் துண்தேரர் . குண்டர் - மூர்க்கர் . செரு - போரில் . அடி - அடிக்கும் . வில்லடித்தல் என்னும் வழக்குணர்க . வடித்துக் கொண்ட சிலை . வடி - கூர்மை . கூரிய அம்பிற்கும் ஆம் . வெஞ்சிலை - வெய்ய சிலை ( வில் ). கருவியின் ஆகும் செயலைக் கருவிமேல் ஏற்றியுரைத்ததாகும் . புரம் - முப்புரம் . அட்டவன் - எரித்தழித்தவன் . சென்று அடையாத் திரு உடையான் :- ` சென்றடையாத திருவுடையான் ` ( சம்பந்தர் ) ` சென்றடையாச் செல்வன் ` ( தி .6 ப .87 பா .1) எங்கும் நிறைந்த திருவருட் செல்வத்தை இருந்தாங்கிருந்து அறிந்தாங் கறிந்து கொள்ளல் திருவருட் செல்வப் பேறு . அது பெறப்புடை பெயர்ச்சி வேண்டா . ஏகதேசத்திலிருக்கின்ற செல்வம் சென்று அடையப்படும் . சிவனருளின்றேற் கிடையாத செல்வம் எனல் சிறவாது . ` செல்லாத செல்வம் உடையாய் போற்றி ` ( தி .6 ப .57 பா .3) என்பதற்கு அது பொருந்தலாம் . திருவாரூர்த் திருமூலட்டா னேசுவரர் . செங்கண் பொருவிடை . அவ்விடையை ஊரும் பிரான் . அவன் அடி . அடித்தொண்டர் :- ( தி .4 ப .102 பா .2, 4.)

பண் :

பாடல் எண் : 4

மாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு வேனுக்கு முண்டுகொலோ
தேசனை யாரூர்த் திருமூலட் டானனைச் சிந்தைசெய்து
பூசனைப்பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

ஞான ஒளி வடிவினனாகிய திருவாரூர் மூலத் தானப் பெருமானைப் பூசனை செய்யும் நில உலகத்தேவர்களின் அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப் பேறு , அழுக்கு ஏறிய உடம்பினராய் , அகத்து வன்மையைப் புறத்துக் காட்டும் கண்ணினராய் வழுக்கைத் தலையரான சமணர்களுடைய தொடர்பை விடுத்து , எல்லோரையும் அடக்கி ஆளும் பெருமானையே நினைத்து வருந்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

மாசு - அழுக்கு . ஏறிய - மிக்க ; ஏறி மேற் படிந்த . மேனியர் - கரிய மேனியுடையவர் . வன்கண்ணர் - அகத்து வன்மையைப் புறத்துக் காட்டும் கண்ணியர் . மொண்ணர் - வழுக்கைத் தலையர் . விட்டு - அகன்று . ஈசனையே - உடையவனையே . நினைந்து - எண்ணெயொழுக்குப்போல நீளத் தொடர்ந்துன்னி . ஏத்துவேனுக்கும் - எடுத்துரைத்து வழிபடும் எனக்கும் ( புண்ணியம் உண்டு கொலோ ?). தேசனை :- ` மெய்ச்சுடருக்கு எல்லாம் ஒளி வந்த பூங் கழலுத்தர கோசமங்கைக் கரேசே` ( தி .8 திருவாசகம் . 119). ஆரூர்த் திரு மூலட்டானனை . சிந்தை செய்து - நினைத்தலையாற்றி . பூசனை - பூசித்தல் . பூசனைப் பூசுரர் - பூசித்தலையுடைய பூதேவர் . பூசுரராகிய தொண்டர் . தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் . ` பூசுரர் ` பூசிக்கும் தொண்டரைக் குறித்தது .

பண் :

பாடல் எண் : 5

அருந்தும் பொழுதுரை யாடா வமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று வாழ்த்துவேற் குண்டுகொலோ
திருந்திய மாமதி லாரூர்த் திருமூலட் டானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

திருத்தமாக அமைந்த பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானனுக்கு உகப்பான தவத்தில் ஈடுபட்ட அடியவர்களுக்கு அடியவனாகும் நல்வினைப்பேறு , உண்ணும் போது யாரிடமும் பேசாதிருத்தலை விரதமாகக் கொண்ட அமணர் கூட்டத்தை விடுத்து , பழைய செயலுக்கு வருந்தி நின்று ` தீவினையை அழிப்பவனே ` என்று , அவனை வாழ்த்தும் அடியேனுக்குக் கிட்ட வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

அருந்தும் பொழுது உரை ஆடா அமணர் :- அமண் சமயத்தினர் உண்ணும் பொழுது பேசிடார் ; பிறர் பேசக்கேளார் ; பேசவிடார் . வெண்குன்றத்தில் ஒருவர் உண்ணும் பொழுது , அவர் வீட்டில் உள்ளாரோ ? என்று வாய்திறந்து நான் பட்டபாட்டை அவ் வெண்குன்றப் பெருமானே அறிவான் . அமணர் திறம் :- சமண் சமயக் கோட்பாடு . அகன்று - நீங்கி . வருந்தி - பரசமயம்புக்குப் போக்கிய வீண்காலங் குறித்து நொந்து . நினைந்து - சிவன் கழலே சிந்தித்து . அரனே என்று - அரகர என்று சொல்லி . வாழ்த்துவேற்கு - வாழ்த்தும் அடியேனுக்கும் . திருந்திய மாமதில் ஆரூர் :- திருவாரூர்த் திருமதில் பெரியதும் திருந்தியதும் மாமதில் ஆரூர் :- திருவாரூர்த் திருமதில் பெரியதும் திருந்தியும் ஆதலை உணர்த்திற்று . திரு மூலட்டானனுக்குப் பொருந்தும் தவம் :- சரியை கிரியை யோகமென்னும் இறப்பில்லாத தவம் , ( சிவ . போ . சூ . 8 அதி 1 ). முற்செய்தவத்தான் ஞானம் நிகழும் :- ` சரியை , கிரியா யோகங்களாகிய தவத்தினைச் செய்தவர் ` ( சிவஞான பாடிய வாசகம் ) தவம் இவ்வாறு சரியை முதல் நால்வகைப்பட்டு அவற்றுள்ளும் பல்வேறு வகைப்பட்டு நிகழ்தல் ( சிவஞானபாடிய லாசகம் ) தவம் உடைத்தொண்டர் :- சரியையாளர் கிரியையாளர் , யோகியர் . அத்தவத்தின் பயனாகிய ஞானத்தைப் பெற்றோரும் தொண்டருள் அடங்குவர் . அவர்க்குத் தொண்டராம் புண்ணியம் வாழ்த்துவேற்கு முண்டுகொல் .

பண் :

பாடல் எண் : 6

வீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணு மூடர்முன் னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் திருமூலட் டானன்செய்ய
பூங்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

மணம் கமழும் சோலைகளை உடைய அழகிய ஆரூரில் திருமூலத்தானத்து உறையும் சிவந்த மலர்போன்ற திருவடிகளை உடைய பெருமான் திருவடிகளில் தொண்டு செய்யும் அடியவர்களுக்கு அடியவராகும் நல்வினைப் பேறு , பருத்த தோள்களையும் கால்களையும் கொண்டு ஆடை உடுக்காதவராய் ஊமைகள் போல யாரிடமும் பேசாமல் உண்ணும் மூடர்களாகிய சமணர்கள் காணுமாறு நமக்குக் கிட்டும் வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

வீங்கிய தோள்கள் :- வீங்கிய தாள்கள் . தோள்களும் தாள்களும் மிக்க பருமையுடையன . அவற்றிற்கேற்பமற்றைப் பகுதிகளும் பருத்தன எனக்கொள்க . அப்பரிய உடம்பு மறைப்பின்றி நிற்றல் பார்ப்போர்க்கு வெறுப்பை விளைக்கும் . அன்றியும் ஊமையர்போல் பேசாமல் உண்ணுகின்ற நிலை அவ்வெறுப்பை மிகுக்கும் . அதனை வீங்கிய ... ... நின்று வெற்றரையே மூங்கைகள் போல் உண்ணும் மூடர் ` எனக்குறித்தார் . பிறர்க்கு வெறுப்புண்டாக்குவோர் அறிஞராகார் . மூங்கைகள் - ஊமையர் . ` மூடர் முன்னே நமக்குப் புண்ணியம் உண்டு கொலோ ` என்க . தேங்கமழ் சோலை - தேன்மணம் கமழும் சோலைகள் ; தென் ஆரூர் - அழகிய திருவாரூர் . சோலைகளையுடைய ஆரூர் ; திருமூலட்டானம் - திருமூலட்டானேசுவரர் ; செய்ய பூங்கழலான் - சிவந்த தாமரைப் பூவையொத்த பொலிவுடைய கழலணிந்த திருவடியினன் ; அடித்தொண்டர் - திருவடித்தொண்டர் ; அடித் தொண்டர் முடித்தொண்டர் - அடிமன்னர் , முடிமன்னர் என்னும் வழக்கினை தி .4 ப .102 பா .2 ஆவது திருவிருத்தத்திலும் தி .10 திருமந்திரம் 1601 லும் காண்க . ` தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொலோ `.

பண் :

பாடல் எண் : 7

பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்டரைவிட்
டெண்ணில் புகழீசன் றன்னருள் பெற்றேற்கு முண்டுகொலோ
திண்ணிய மாமதி லாரூர்த் திருமூலட் டானனெங்கள்
புண்ணியன் றன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

உறுதியான பெரிய மதில்களையுடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எங்கள் நல்வினை வடிவினனாகிய பெருமானுடைய அடித்தொண்டருக்குத் தொண்டராகும் புண்ணியம் , தாமாகவே புனைந்துரைத்த சாத்திரங்களை உபதேசிப்பவராய் , வலிய தலைமயிரை நீக்கிக் கொள்பவராய் உள்ள சமண மூர்க்கர்களை விடுத்துக் கணக்கிட முடியாத புகழை உடைய ஈசன் அருளைப் பெற்ற அடியேனுக்கும் உண்டோ ?

குறிப்புரை :

பண்ணிய சாத்திரப்பேய்கள் :- வேதாகமங்களைப் பழித்து அவற்றை முதலாகக் கொள்ளாமல் தாமே படைத்துக் கொண்ட சமய சாத்திரங்களை உடைய பேயர்கள் . அவை பூருவ பக்கப் பொருள்களைச் சித்தாந்தமாகக் கொண்டுரைத்த புனைந்துரை நூல்கள் என்றவாறு . கடவுளை வழிபடாதாரும் கடவுள் இல்லை என்பாரும் பேயர் எனப்படுவர் . சமணர்க்குக் கடவுள் வேறில்லை ; அருகனே கடவுள் . அருகன் மக்களுள் ஒருவனாய் இருந்து அமண் நெறியில் வீடு பெற்றவன் . ` நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த் திரிந்து எய்த்தேன் ` ( தி .7 ப .1 பா .2). ` நமச்சிவாய என்று உன்னடி பணியாப் பேயன் ` ( தி .8 திருவாசகம் 404) ` உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்தலகையா வைக்கப்படும் ` ( திருக்குறள் ) என்பவற்றால் கடவுளை நினையாதாரும் இல்லை என்பாரும் பேய ரெனப்படுதலை அறியலாம் . பண்ணிய சாத்திரங்களுள் ஒன்று தருக்கம் . அத் தருக்கமே பேசித் திரியும் பேய்கள் எனலும் ஆம் . சாத்திரம் கேட்கில் என் , ` சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் `. பறி தலைக் குண்டர் - ` தலையெலாம் பறிக்கும் சமண்கையர் `. சமணர் தலைமயிர்களைப் பறிப்பர் . தலைமயிர் பறித்தல் சுடுபாறையிற் கிடத்தல் முதலியன நிர்ச்சரமென்னும் தவம் என்பர் அருகதர் . எண் - அளவு ; திண்ணிய மாமதில் ஆருர் - ( தி .4 ப .101 பா .5); எங்கள் புண்ணியன் - எங்களுடைய சிவ புண்ணியத்தின் பயனாக உள்ளவன் . புண்ணிய சொரூபியும் ஆம் . புண்ணியன் அடித் தொண்டர் . தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொலோ .

பண் :

பாடல் எண் : 8

கரப்பர்கண் மெய்யைத் தலைபறிக் கச்சுக மென்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ
திருப்பொலி யாரூர்த் திருமூலட் டானன் றிருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

செல்வத்தால் பொலிவு பெற்ற திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் கயிலாயபதியிடம் விருப்பம் பொருந்திய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம் , ஒரோவழித் தம் உடம்பைப் பாயால் மறைப்பவராய்த் தலைமயிரை வலிய நீக்குவதே சுகம் என்று கூறும் சமண சமய மூர்க்கர்கள் உரைத்தன வற்றைக் கேளாமல் சிவபெருமான் பக்கல் கடைத்தேறுவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் உண்டோ ?

குறிப்புரை :

திருமூலட்டானனும் , திருக்கயிலைப்பொருப்பனும் ஆகிய சிவபெருமானுக்கு விருப்பு அமர்ந்த தொண்டர்க்குத் தொண்ட ராம் புண்ணியம் , குண்டர் உரைப்பன கேளாது ( அங்கு உய்யும் வழியின்றி ) இங்கு உய்யப்போந்தேனுக்கும் உண்டு கொல் என்க . மெய்யைக் கரப்பர்கள் - உடலைப் பாயால் மறைப்பவர்கள் . தலை - தலைமயிரை . சுகம் - இன்பம் . என்னும் - என்று கருதும் ; சொல்லும் . குண்டர் - மூர்க்கர் ; உரைப்பன - சொல்லும் உபதேசங்களை . கேளாது - பொருட்படுத்தாமல் ` கேளாம் புறன் ` ( சிவ . போதம் அவையடக்கம் ) அவர் வெள்ளறிவு இதுவென்றொழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் கேளாம் புறன் என்றார் . கேட்டல் - பொருளாகக் கோடல் . அது ` ஊறு கேளாது ` என்பதனாலும் , கேளாரும் வேட்ப மொழிவ தாம் என்பதனானும் அறிக . ( சிவஞானபாடியம் ) தியாகராசர் வீற்றிருப்பதாதலின் எல்லாத் திருவும் பொலியும் ஆரூர் என்பார் திருப்பொலி ஆரூர் என்றார் . செல்வத்திரு , கல்வித்திரு , ஞானத்திரு , பேரின்பத்திரு ( சென்றடையாததிரு ) சிவமேபெறுந்திரு , ` கடைக் கணித்து என் உளம் புகுந்த திருவந்தவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ , அடியோம் திருவைப்பரவி ` என்பனவற்றால் , சிவ பெருமானைத் திருவென்றதறிக . பொருப்பு - மலை , விருப்பு - பக்தி , பொருப்பன் விருப்பு - சிவபக்தி , அமர் தொண்டர் :- வினைத்தொகை .

பண் :

பாடல் எண் : 9

கையிலிடு சோறு நின்றுண்ணுங் காத லமணரைவிட்
டுய்யு நெறிகண்டிங் குய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ
ஐய னணிவய லாரூர்த் திருமூலட் டானனுக்குப்
பொய்யன் பிலாவடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

நம் தலைவனாய் அழகிய வயல்களை உடைய திருவாரூரின் திருமூலத்தானப் பெருமான் பக்கல் உண்மையான அன்புடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம் , கையில் வழங்கப்படும் சோற்றை நின்றபடியே உண்ணும் செயலில் விருப்பம் கொள்ளும் சமணரைவிடுத்து , பிழைத்தற்குரிய வழியைக் கண்டு சிவபெருமான் பக்கல் பிறவிப் பிணியிலிருந்து தப்புவதற்காக வந்து சேர்ந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

கையில் இடுகின்ற சோற்றை நின்று உண்ணும் விருப்பத்தை உடைய அமணர் . அமணரை விட்டு - சமணரை அகன்று ; உய்யும் நெறி - பிறவி தீர்த்துப் பேரின்பம் எய்த ஆம் சைவப்பெரு நெறி . கண்டு - திருவருளால் உணர்ந்து . அருள்சூலை நோய்வடிவில் வந்தது . ` முன்னமே முனியாகி யெனையடையத் தவ முயன்றான் அன்னவனை இனிச் சூலை மடுத்தாள்வன் என அருளி ` ( தி .12 பெரிய . திருநா . 48) ` பண்டுபுரி நற்றவத்துப் பழுதினள விறை வழுவுந் தொண்டரையாளத் தொடங்குஞ் சூலை வேதனை தன்னைக் கண்டரு நெற்றியரருளக் கடுங்கனல்போ லடுங் கொடிய மண்டு பெருஞ் சூலை அவர் வயிற்றினிடைப் புக்கதால் ` ( தி .12 பெரிய . திருநா . 49) ` மாமலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையும் இவ்வாழ்வு பெறத்தரும் சூலையினுக்கெதிர் செய்குறை யென்கொல் ` ( தி .12 பெரிய . திருநா . 73). இங்கு - இச் சைவ நெறியில் . உய்யப் போந்தேனுக்கும் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் உண்டு கொல் ? ஐயன் - தலைவன் , அடிகள் , தியாகராசன் , அணி - நீர்வளமும் நிலவளமும் உடைய பயிரழகு . பொய்யன்பில்லா அடித்தொண்டர் - திருவடிக்கு மெய்யன்புடைய தொண்டர்கள் .

பண் :

பாடல் எண் : 10

குற்ற முடைய வமணர் திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப்போந் தேனுக்கு முண்டுகொலோ
மற்பொலி தோளா னிராவணன் றன்வலி வாட்டுவித்த
பொற்கழ லானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய தோள்களை உடைய இராவணனுடைய வலிமையை அழியச் செய்த பொன்னாலாகிய கழலை அணிந்த சிவபெருமானுடைய தொண்டருக்குத் தொண்டராம் புண்ணியம் , குற்றமுடைய சமணர்கள் சமயத்தின் கூறுபாடுகளை விடுத்து நீங்கி , சைவ சமயத்தில் அடியேனுக்குச் செய்வதற்காக வகுக்கப்பட்ட செயல்களைச் செய்து பிறவிப் பிணியினின்றும் பிழைத்துப் போவதற்காக வந்தடைந்த அடியேனுக்கும் கிட்டும் வாய்ப்பு உளதோ ?

குறிப்புரை :

குற்றம் உடைய அமண் ; குற்றம் உடைய அமணர் . குற்றம் - அநேகாந்தவாதமும் பிறவும் . திறம் - சமயத்திறம் . கையகலல் - சார்பு விட்டு நீங்கல் . அகன்றிட்டு ( - நீக்கிட்டு ) என்றது நீக்கியதன் அருமை குறித்தது . உற்ற கருமம் :- சைவத்தினீங்கியக்கால் ஒரு கருமமும் உற்றிலது . சமணத்தின் நீங்கிச் சைவத்தின் மீண்டக்கால் உள்ள சூலை நோய் நீக்க , தமக்கையார்க்கு அறிவித்தல் முதலாகத் திரு வதிகையை வழிபட்டது முடிய உள்ள செயல்கள் . மல் - வலிமை . பொலி - விளங்கும் . தோளான் - இருபது தோள்களையுடையவன் . தோளானாகிய இராவணன் . இராவணனது வலியை வாடச் செய்த கழலான் . வாடுதல் , வாட்டுதல் , வாட்டுவித்தல் என்னும் மூன்றற்கும் உள்ள வேறுபாடறிக . பொற்கழல் - பொன்னாற் செய்யப்பட்ட வீரகண்டை . ` ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறனடித் தலமே ` ( தி .4 ப .92 பா .16) கழல் அதனை அணிந்த திருவடிக்கு இடப்பொருளாகு பெயர் ( தானி - இடப் பொருள் ). கழலானடிக்குத் தொண்டு பூண்டொழுகுவோர் கழலானடித் தொண்டர் . அவர்க்குத் தொண்டராம் புண்ணியம் உய்யப் போந்தேனுக்கும் உண்டு கொலோ என்க .
சிற்பி