திருநாகைக்காரோணம்


பண் :

பாடல் எண் : 1

வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய்
கடிகமழ்சோலை சுலவு கடனாகைக் காரோணனே
பிடிமதவாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொ லெம்மிறையே.

பொழிப்புரை :

அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர் வதன் காரணம் என்ன ?

குறிப்புரை :

வடிவுடைய மாமலைமங்கைபங்கா - அழகுடைய பெரிய இமாசல குமாரிபாகா . கங்கைவார் சடையாய் - கங்கையின் ஆற்றலைத் தடுத்த நீள்சடையானே . கடிகமழ் சோலை சுலவுகடல் நாகைக்காரோணனே - மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த கடல் அருகேயுள்ள திருநாகையிலே திருக்காரோணம் என்னும் திருக் கோயிலை உடையவனே . காரோணம் = காயாரோகணம் என்பதன் திரிபு என்றும் காயம் உடம்பு . ஆரோகணம் ஏற்றுக் கொள்ளுதல் என்றும் புண்டரிகமகாமுனிவரை இறைவன் தந் திருமேனியில் ஏற்றுக் கொண்டருளினான் என்றும் நாகம் ( ஆதிசேடன் ) பூசித்ததால் பெற்ற பெயர் நாகை என்றும் பெரிய புராண உரையில் சிவக்கவிமணி உரைத்தார் . ` ஒரு ரிஷியைக் காயத்தோடு வானுலகுக்கு ஆரோகணம் செய்யும்படி இறைவன் அருளியதால் காயாரோகணம் என்ப . அது மருவிக் காரோணம் எனத் தலப் பெயருட் சேர்ந்தது ` ( தலச்சிறப்பகராதி 165 அடங்கன் முறை . பக் . 1224 என்று அறிவு சான்ற திரு . ம . பால சுப்பிரமணிய முலியார் பி . ஏ ., பி . எல் ., அவர்கள் எழுதியிருப்பதறிக . ) கார் ஓணத்தான் என்னுந் தமிழ்ச் சொல்லிரண்டன் புணர்ச்சியாகத் தோன்றுகின்றது . ` ஓணத்தான் ` என்றதை எதுகையில் வைத்து , ` பாணத்தான் மதில் மூன்றும் எரித்தவன் பூணத்தான் அரவாமை பொறுத்தவன் காணத்தான் இனியான் கடல்நாகைக் காரோணத்தான் என நம் வினை ஓயுமே ` என்று பாடியருளியதால் , அது தமிழாதல் புலப்படும் . காஞ்சிப் . காயாரோகணப் . 6. பார்க்க . ` காரோணத்தான் ` என்பதன் முதலெழுத்தை ஈற்றில் நிறுத்தி , ரோணத்தான் என்று அடி முதலில் அமைப்பது கெடில் வீரட்டானாரடி சேருமவருக்கே ` என்பது போலும் . ` திருவோணம் `. ` ஓலமார் கங்கையாதி ஓணநீராடல் எல்லாம் ` ( சேதுபுராணம் . தோத்திர . 48) என்பவற்றால் ` ஓணம் ` என்னும் தமிழ்ச் சொல்லாட்சியை உணர்க . எம் இறையே - எம் கடவுளே . பிடி - பெண் யானை . மதவாரணம் - களிறு . பேணும் துரகம் - விரும்பப்படும் குதிரை . யானையும் குதிரையும் இருக்க எருதின் மேல் ஏறுவது ஏனோ ? எருதின் குரலோசையும் நிறமும் அறிவிப்பது இடிகுரல் வெள்ளெருது . திருநாவுக்கரசு சுவாமிகள் திருநாகைக்காரோணத்தில் இறைவன் விடையேறித் திருவீதி வலம் வரும் திருநாளில் சென்று இவ்வாறு பாடியருளினார்போலும் . ஓணப்பிரான் ( திருமால் ) வழிபட்டதாற் ` காரோணம் ` என்று கோயிலைக் குறித்தனர் போலும் , ( காஞ்சிப் . அந்தர் வேதிப் 36-38.)

பண் :

பாடல் எண் : 2

கற்றார் பயில்கட னாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே
விற்றாங் கியகரம் வேனெடுங் கண்ணி வியன்கரமே
நற்றா ணெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமே
செற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே.

பொழிப்புரை :

கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும் , நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை , வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே . நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே . இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் .

குறிப்புரை :

கற்றவர்கள் பெருகிய கடலருகேயுள்ள திருநாகைக் காரோணத்திலே எழுந்தருளிய கண்ணுதலே பெருமானே வில்லேந்திய திருக்கை வேற்கண்ணியாகிய என் தாயினுடைய அகல் தடக்கை யேயாகும் . அந் நெடுவில்லின் நாணை வலித்த திருக்கை நின் செங்கையேயாகும் . திரிபுரத்தை அழித்த வெற்றி எவர் கைக்கு உரியது ? கற்றார் - ` கற்றல் கேட்டல் உடையார் பெரியார் ` ( சம்பந்தர் ) பிறவியறுக்கும் திருவடியைத் தொழும் அறிவைத் தோற்றும் சிவாகமங்களைக் கற்றவர் . பயில் - பயின்ற ; மிக்க . கண்ணுதல் - நெற்றிக்கண்ணன் . அன் மொழித் தொகை ( கண்ணுதலான் ). வில் தாங்கிய கரம் - வில்லை ஏந்திய கை . வேல்நெடுங் கண்ணி - வேல்போலும் நெடிய கண்ணை யுடையவள் . வியன்கரமே - அகன்ற கையே ; தடக்கையே . நல்தாள் நெடுஞ்சிலை - நல்லதாளால் மிதிக்கப் பட்ட நெடியவில் . நன்று ஆள் நெடுஞ்சிலை என்று பிரித்துப் பொருள்கொள்ளலும் ஆம் . அது வில்லாண்மை குறிப்பது . வலித்தகரம் என்பதில் தகரம் விட்டிசைக்கப் படும் . படாதேல் தளைகெடும் . செற்றார் - பகைவர் . புரம் - திரிபுரம் . செற்ற - அழித்த . சேவகம் - வீரம் . என்னை - யாது ; எதனுடையது . கொல் அசை . செப்புமின் - சொல்லுமின் .

பண் :

பாடல் எண் : 3

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடனாகைக் காரோணநின்
நாமம் பரவி நமச்சிவாய வென்னும் மஞ்செழுத்தும்
சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே.

பொழிப்புரை :

தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்குவாயாக .

குறிப்புரை :

தூயமெல்லிய பூங்கணையைக் கோத்து எரியோங்குந் தொழிலை உண்டாக்கிய மன்மதன் சாம்பலாகும்படி சுட்டகடல் நாகைக்காரோண , உன் திருநாமத்தை வாழ்த்தித் திருவைந்தெழுத்தாகிய நமச்சிவாய என்னும் திருமந்திரத்தை , யான் உடலின் நீங்கும் அந்நாளில் உரைக்கும் ஆற்றலைத் தந்தருள்வாய் , எங்கள் சங்கரனே . தூ - தூய்மை . மென்மலர் - மெல்லியனவாகிய பூக்கள் . மலர்க்கணை - பூக்களாகிய அம்புகளை . கோத்து - கரும்பு வில்லின் நாணில் வைத்துத் தொடுத்து . தீ வேள்வி - அக்கினி காரியம் . தொழிற்படுத்த - தொழிற் படுத்திய ; தொழிற்படச் செய்த . வேள்வித்தொழில் என்றிருப்பது சிறந்தது . ` படுத்த காமம் ` பெயரெச்சத்தொடர் . பொடி - சாம்பல் . ` வெந்துபொடியான காமனுயிர் இரதி வேண்டப் புரிந்தளித்த புண்ணியனே ` ( தி .12 பெரிய புரா . 2379) காய்ந்த தீக்கண்ணால் எரித்த . நாமம் - திருப்பெயர் . பரவி - வாழ்த்தி . திருவஞ்செழுத்து - இந்த திரு விருத்தத்தில் கூறியது தூல பஞ்சாக்கரம் . சாம் அன்று - அடியேன் இவ்வுடலின் நீங்கும் அந்நாளில் ` வீடும் நாள் ` ( தி .4 ப .65 பா .1) ` சாதல்நாள் ` ( தி .4 ப .75 பா .8). உரைக்கத் தருதல் :- ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விடும் நிலையில் ஆவியார் தளர்ந்து நின்னை மறந்துவிடாதவாறு உனக்கு ஆளாகி அன்புமிக்கு உன் திருநாமம் அஞ்சும் சொல்லிக் கசிவினால் தொழச்செய்தல் . சங்கரன் - இன்பத்தை விளைப்பவன் . ` உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின் என்னை மறக்கப் பெறாய் ` ( தி .4 ப .112 பா .3). ` நான் துஞ்சும் போழ்து நின் நாமத் திரு வெழுத்தஞ்சுந்தோன்ற அருளும் ஐயாறரே ! ` மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப் பெற்றால் வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட்டன்றே ( தி .4 ப .77 பா .4). ` எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பிலிருக்கலாமே ` ( தி .6 ப .93 பா .10). ` செம்பவளத் திருமேனிச் சிவனே என்னும் நாவுடையார் நமை ஆளவுடையார் `. ` சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி யெம்மான் ..... அவன்றனை ..... பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால் இவன் எனைப் பன்னாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே ` ( தி .4 ப .112 பா .9) ` சிவாயநம என்றிருக்கினல்லால் ..... அத்தனருள் பெறலாமோ ` ( தி .4 ப .94 பா .5). ` சிவாயநம என்று நீறணிந்தேன் ` ( தி .4 ப .94 பா .6). ` மறவாது சிவாய என்று எண்ணினார்க் கிடமா எழில் வானகம் பண்ணினாரவர் பாலைத்துறையரே ` ( தி .5 ப .51 பா .6).

பண் :

பாடல் எண் : 4

பழிவழி யோடிய பாவிப் பறிதலைக் குண்டர் தங்கள்
மொழிவழி யோடி முடிவேன் முடியாமைக் காத்துக்கொண்டாய்
கழிவழி யோத முலவு கடனாகைக் காரோணவென்
வழிவழி யாளாகும் வண்ண மருளெங்கள் வானவனே.

பொழிப்புரை :

உப்பங்கழிவழியே கடலின் வெள்ளநீர் பாயும் கடல் நாகைக் காரோணனே ! எங்கள் தேவனே ! பழியான வழிகளிலே வாழ்க்கையை நடத்திய தீவினையாளர்களான , தலைமயிரை வலியப் போக்கும் மூர்க்கர்களான , சமணர்கள் சொற்களைக் கேட்டு அவற்றின் வழியிலே வாழ்ந்து அழிந்து போகக்கூடிய அடியேனை அழியாதபடி பாதுகாத்து உனக்கு அடியவனாகக் கொண்டாய் . வழிவழியாக அடியேன் உனக்கு அடிமையாகும் முறைமை யாது ? அதனை அடியேற்கு அருளுவாயாக .

குறிப்புரை :

பழியின் வழியே ஓடிய பாவிகளாகிய தலைமயிர் பறிக்கும் குண்டர்களுடைய சொற்படியொழுகி அழிவேனை அழி யாமல் காத்து ஆட்கொண்டருளினாய் . கழிவழியே ஓதம் உலவுகின்ற கடலருகே உள்ள நாகைக்காரோண ! வழி வழி ஆள் ஆகும் வண்ணம் என் ? வழிவழியாக நான் உனக்கு ஆளாகும் முறைமை யாது ? எங்கள் வானவனே அருள் . ` கருவேலை தன்னைக் கடப்பர் . உலகில் மருவாத இன்பத்துள் வைத்தகுருவின் அடியார் அடியார் அடியார் அடியார் அடியாரைச் சார்ந்த அவர் ` ( துகளறுபோதம் ) ` திருவாரூரில் மழவிடை யார்க்கு வழிவழியாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடியாரொடுங் கூடி யெம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே `. ( தி .9 திருப்பல்லாண்டு . 11) ` என்றும் என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்னநின் வணங்கவே வேண்டும் நின்கழற்கண் அன்பு `. ( தி .8 திருவாசகம் 78) ` சிறந்து உன்னைத் தெய்வமெனக் கொள்ளாத சீத்தை பிறந்த குலம் பிறவா நின்ற குலம் பீளினுறந்த குலத்து முமையொரு பால் மேயாய் மறந்தும் பிறவாத வாழ்வெனக்கு வேண்டுமால் `. ( காஞ்சிப் . தழுவக் . 238).

பண் :

பாடல் எண் : 5

செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை வெண்ணகைத் தேன்மொழியார்
வந்து வலஞ்செய்து மாநட மாட மலிந்த செல்வக்
கந்த மலிபொழில் சூழ்கட னாகைக்கா ரோணமென்றும்
சிந்தை செய்வாரைப் பிரியா திருக்குந் திருமங்கையே.

பொழிப்புரை :

சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும் , தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு , செல்வம் மிகுந்ததும் , நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள் .

குறிப்புரை :

செம்பவளம் போலும் வாயினையும் கரிய கண்ணினையையும் வெண்பற்களையும் தேன்போலும் இனிய மொழியையும் உடைய மகளிர் வந்து வலம்புரிந்து சிறந்த நடனஞ்செய்ய நிறைந்த செல்வத்தையுடைய மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த கடலையடுத்த நாகையிலுள்ள காரோணத்தை எப்பொழுதும் நினைத்தலைச் செய்கின்ற அன்பர்களைத் திருமங்கை பிரியா திருப்பாள் . துவர் - பவளம் ; ` வளை வளர்கையன் விழிவளர் பாற்கடல் வார்துவரின் - கிளைவளர் காட்சிய சேயரிக்கண் ` ( தணிகைப் . களவு . 206). இணை - இரண்டு . நகை - பல் . நகுதல் - விளங்குதல் பற்றிய காரணப்பெயர் . நகைத்தல் என்பதறிக . செந்துவர்வாய் கருங்கண் வெண்ணகை என்றது முரண் . தேன்மொழி உவமைத்தொகை . மாநடம் - அழகிய கூத்து . காரோணத்தில் வந்து வலஞ்செய்து நடமாடும் மகளிர் எழிலும் மொழியும் உணர்த்தப்பட்டன . திருமங்கை என்றது இலக்குமியை அன்று . பரமானந்தாவேசமாகிய மகாமோட்ச லட்சுமியை ` ( சிவாத்து வித சைவபாடியம் பக்கம் 555). சிவாலயங்களிலும் சிவபூசையிலும் மகாலட்சுமியென வழிபடப் பெறுவதும் இச் சிவமேபெறும் திருவே யாகும் . ` இருவரும் ஒருங்கே இறவருங்காலை எந்தையே ஒடுக்கி ஆங்கவர்தம் உருவம் மீதேற்றிக் கோடலாற் காயாரோகணம் ` மாலும் மலரவனும் , ` எம்மை .... நினது காயத்துறுத்துக என்று இறைஞ்சி நோற்றார் ..... அவ்வாறருளினன் . அதனால் காயாரோகணம் ` நோற்போர் கயிலையை மெய்யோடெய்திக் குடிகொளும் ஆற்றினானும் அப்பெயர் கொண்டது ` ( காஞ்சிப் . (1) காயா . 6. (2) அந்தரு . 37-8)

பண் :

பாடல் எண் : 6

பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரே
கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலே
மனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்க நீக்கி
எனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயுமிச்சைகளே.

பொழிப்புரை :

பனை மரத்தை ஒத்த துதிக்கையை உடைய மத யானையின் தோலைஉரித்த மேம்பட்ட சோதிவடிவினனே ! ஒலிக்கும் கடலால் ஒருபக்கம் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எம் நெற்றிக் கண்ணனே ! இல்லறவாழ்க்கையை விடுத்து இரவில் உண்ணாத வலிய சமணர்களாகிய மூர்க்கர்திறத்து அடியேன் கொண் டிருந்த மயக்கத்தைப் போக்கி அடியேனை விரும்பி ஆட்கொண்ட உனக்கு அடியேன் விரும்பிக் கைமாறாகச் செய்வது யாது உள்ளது ?

குறிப்புரை :

பனையையொத்த கையையுடைய களிற்றை யுரித்த மெய்யொளியே ! முழங்குகின்ற கடலடுத்த திருநாகைக்காரோணத்தில் உள்ள எம் கண்ணுதலே ! மனைதுறந்து இரவில் உண்ணுதலில் வல்ல அமணர்களாகிய மயக்குரையின் நீக்கி என்னையும் ஒரு பொருளாக எண்ணி ஆளாகக் கொண்டருளிய நினக்கு இனியான் செய்யும் இச்சைகள் என் ? ` மனைதுறந்து அல்லுணா வல்லமணர் ` ( தி .4 ப .101 பா .2) பனை :- மரம் . ` பனைக்கைமும்மத வேழம் உரித்தவன் ` பரஞ்சுடர் - மெய்யொளி . ` மெய்ச்சுடருக்கெல்லாம் ` ஒளிவந்த பூங்கழலுத்தர கோசமங்கைக்கரசே` ( தி .8 திருவாசகம் 119). கனைகடல் - முழங்குகடல் ; வினைத்தொகை . கண்ணுதல் - கண்ணுதலான் . அன்மொழித்தொகை . மனை துறந்து - வீட்டைத் துறத்தல் . மனைவியைத் துறத்தல் . அல் - இரவு . உணா - உண்டி . இரவிலுண்ணாதவர் அமணர் . குண்டர் - குண்டாக்கையர் ; மூர்க்கர் . மயக்கம் - மயக்குரை . ஆகுபெயர் . மயக் குரையின் நீக்கி . என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்து நின்னை நினையத் தந்து ஆட்கொண்ட நினக்கு இனியான் செய்யும் இச்சைகள் என் ? இச்சைகளால் ஆம் செயல் ( கைம்மாறு ) களைக் குறித்தலின் , இச்சைகள் என்றது காரண ஆகுபெயர் .

பண் :

பாடல் எண் : 7

சீர்மலி செல்வம் பெரிது டையசெம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு கடனாகைக் காரோணனே
வார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்து
ஊர்மலி பிச்சைகொ டுண்பது மாதிமை யோவுரையே.

பொழிப்புரை :

சிறப்புமிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன்மலை போன்றவனே ! மழையால் செழித்த சோலைகளால் சூழப்பட்ட கடல் நாகைக் காரோணனே ! கச்சணிந்த மென்மையான முலையை உடைய மகளிர் வந்து பிச்சையிடுமாறு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி ஊர்களில் கிட்டும் பிச்சை உணவை உண்பது பொருத்தமான செயல் ஆகுமா ? சொல்வாயாக .

குறிப்புரை :

கனம் மிக்க செல்வம் பெரிதும் உடைய செம்பொன் மாமலையே முகில் தவழும் சோலைகள் சூழும் கடலடுத்த திருநாகைக் காரோணனே ! வீக்கிய கச்சைத் தாக்கிய மெல்லிய கொங்கையை யுடைய மங்கையரும் வந்து பிச்சையிடப் போயிரந்து ஊர்தோறும் பிச்சைகொண்டு உண்பது மாதிமையோ ? சொல்வாயாக . மாதிமை - ?. மண்டலமாவோடலை மாதி என்பதால் , அத்தன்மையைக் குறித்த பண்புப் பெயர் எனினும் ஈண்டுப் பொருந்தாது . சீர் - கனம் ; மேன்மை . செல்வம் பெரிது - பெருஞ்செல்வம் . செம்பொன் மாமலையே என்று விளித்ததன் கருத்து விளங்காதோ ? சோலைமேலுறங்கும் கார் ( மேகம் ) மிகுதி நோக்கிக் கார்மலி சோலை என்றார் . சுலவு - சூழும் . வார் - கச்சு . வந்து பலி இடச் சென்று இரந்து பிச்சைகொண்டு உண்பது மாதிமையோ (- பெருமையோ ). ஊர்தொறும் கொண்ட பிச்சை யாதலின் பலி ( பிச்சை ) என்றார் .

பண் :

பாடல் எண் : 8

வங்க மலிகட னாகைக்கா ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானொர் விண்ணப்ப முண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாயக் கள்ளத்தை மெள்ளவுமை
நங்கை யறியிற்பொல் லாதுகண் டாயெங்க ணாயகனே.

பொழிப்புரை :

கப்பல்கள் நிறைந்த கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உள்ள எம் தேவரே ! எங்கள் பெருமானாரே ! அடியேன் வேண்டிச் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது . அதனைத் திருச்செவி சார்த்தி அருளுவீராக . எங்கள் தலைவரே ! கங்கையைச் சடையுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் . அந்தக் கள்ளச் செயலை மெதுவாகப் பார்வதிப் பிராட்டி அறிவாளானால் பொல்லாங்கு விளையும் என்பதைத் திருவுள்ளம் பற்றவேண்டும் .

குறிப்புரை :

வங்கம் - கப்பல் . மலி - நிறைந்த ; மிக்க . திருநாகைக் காரோணத்து எம்வானவனே ! எங்கள் பெருமானே ! எங்கள் நாயகனே ! ஒரு விண்ணப்பம் உண்டு . அதைக் கேட்டருள்வீர் . சடையுள்ளே கங்கையை மறைத்தாய் ; அம் மறைத்த கள்ளத்தை உமை நங்கையார் மெள்ளத் தெரிந்து கொண்டால் , பொல்லாங்கு விளையும் . இடப்பால் எழிலுடைய நங்கையொருத்தியிருக்க ; அவளறியாவாறு கங்கையென்னும் மற்றொருத்தியைச் சடைமறைவில் வைத்தொழுகுங் கள்ளம் அவ்வுமைநங்கையுள்ளம் அறியக்கூடும் . கூடின் உனக்குப் பொல்லாங்கு விளையும் , நலம் x பொலம் ; நன்று x தீது ; நன்மை x தின்மை ; தீமை ; நன்கு x தீங்கு ; நல்லாங்கு x பொல்லாங்கு என்பன இருவழக்கிலும் அறிக . ` அரும்பாசம் நன்மை தின்மை ஆகும் ` ( சொக்கநாத வெண்பா . 82) நல்லாங்கு ` தீங்கிதென நாடறியேன் ` ( சொக்கநாத வெண்பா . 53) ` இன்மை உயிர்க்குயிர் நீதியின்மை யிருந்தியற்றின் நன்மை தின்மைக் கேதுவோ நான் ` ( சிவபோகசாரம் . 83) ` நன்மை தின்மை ஆட்டுவது நாடாதறிவிலார்தஞ்செயலாய் நாட்டுதல் போல் உண்டோ நகை ` ( சிவபோகசாரம் . 90)

பண் :

பாடல் எண் : 9

கருந்தடங் கண்ணியுந் தானுங் கடனாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான்
பெருந்தலை பத்து மிருபது தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்தில னெம்மிறையே.

பொழிப்புரை :

கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .

குறிப்புரை :

இராவணன் , இறைவனும் இறைவியும் வீற்றிருந்த திருக் கயிலைமலையை , அவ்விருவரும் எழுந்தருளியிருக்கும் அருளிடம் எனக்கருதிப் போற்றி நன்றியறிதல் செய்யாது , அவர் அசைய அம் மலை அசைய எடுக்கத் தொடங்கினான் ; அன்று பத்துப் பெருந் தலைகளும் இருபது தோள்களும் பிதிர்ந்து அலறும்படி எம் இறைவன் செய்தது யாது எனில் , பிறிது யாதும் இல்லை . இருந்தருளிச் செய்ததே ஆகும் . ` கருந்தடங்கண்ணி ` என்னும் அழகிய தூய தமிழ்ப் பெயர் , அப்பர் அடிகள் காலத்தின் முன்னரே வழங்கியதென்பதுணர்க . அஃது இப்பொழுது நீலாயதாட்சி என்று வழங்குகின்றது . இவ்வாறு தமிழ் மொழி யிடத்தைக் கவர்ந்து , தாம் நின்று அவற்றை ஒழித்த வடமொழிக் களவில்லை . இரு மொழிக்கும் முதற்குரவர் ஆகிய கண்ணுதலார் , ஒரு மொழியால் மற்றொரு மொழி ஒழியப் படைத்தாரல்லர் .
சிற்பி