திருவதிகைவீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

மாசிலொள் வாள்போன் மறியு மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை யாடியங் கொண்சிறை யன்ன முறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத் தேயெந்தை வீரட்டமே.

பொழிப்புரை :

குற்றமற்ற ஒளிபொருந்திய வாள்போல ஏறி மடங்கும் , பளிங்கு போன்ற நீர் அலைகளின் தொகுதியாகிய ஊசலை ஆடி அங்கு ஒளி பொருந்திய சிறகுகளை உடைய அன்னம் உறங்கத் தொடங்கினால் பசிய இலைகளை உடைய கொடிகளில் உள்ள நீலமலர்களில் தேனைப் பருகி வண்டுகள் பண்ணினைப் பாடுதலைக் கேட்டுக் கெடிலநதி பரிசுப்பொருளாக மணி முதலியவற்றை அவற்றை நோக்கி வீசும் வடகரைக்கண் எம்பிரானுடைய அதிக வீரட்டம் உள்ளது .

குறிப்புரை :

எந்தை வீரட்டம் வடகரைத்தே என்று கொள்க . மாசு - குற்றம் ; ஈண்டுக் கூர்மை , தோற்றம் , நிறம் முதலியவற்றாற் குறைதலை யுணர்த்திற்று . அக்குறைவொன்றும் இல்லாதவாள் மாசில்வாள் ; ஒள்வாள் . மணிநீர்த்திரைத்தொகுதி மறியுந்தோற்றம் வாள்மறிதலைப் போன்றிருக்கும் . அந்நீர்த் திரைத்தொகுதி மறிதலே ஊசலாடுதல் . அதன் மேல் அன்னம் உளது . அஃது உறங்கலுறுகின்றது . அஃது உறங்கப் பண் பாடுவன வண்டுகள் . அவை கருங்குவளை மலர்த் தேனை உண்டு பாடும் . அக்குவளை ` பாசடை நீலம் `. ` பாசறை `- பச்சிலைக் குடில் ; பாடிவீடு . ஈண்டு அது பொருந்தாது . இது பாசடை என்றிருந்து பிழைத்ததே யாகும் . ` பாசடை நிவந்தகணைக் கானெய்தல் ` ( குறுந்தொகை . 9) ` சிறுபாசடைய நெய்தல் ` ( நற்றிணை . 27) ` நெய்தற் பாசடை புரையும் அஞ்செவி ` ( நற்றிணை . 47) ` பிடிச் செவியினன்ன பாசடை ` ( நற்றிணை . 310), ( குறுந்தொகை . 246). ஒண்சிறை அன்னம் அங்கு ஊசலை ஆடி உறங்கல் உற்றால் . வண்டு பண்பாடல்கண்டு கெடிலம் வீசும் . பாடற்பரிசிலாகத் தான் கொணரும் மணி முதலியவற்றை வீசும் . செயப்படுபொருள் உய்த்துரைக்க வேண்டி , முன்னரே ` மணி நீர்த்திரைத் தொகுதி ` என்று குறிக்கப்பட்டது . வண்டு பருக நீலம் கொடுத்த கொடையுமாம் . அதற்குப் ` பருகிய ` என்றதைப் பருக என வினையெச்சமாக்குக . கெடிலநதிக்கு வடகரையின் கண்ணது திருவதிகை வீரட்டம் . கரைத்து - கரையிலுள்ளது .

பண் :

பாடல் எண் : 2

பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர்
அங்காற் குவளைமே லாவி யுயிர்ப்ப வருகுலவும்
செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி லக்கரைத்தே
வெங்காற் குருசிலை வீர னருள்வைத்த வீரட்டமே.

பொழிப்புரை :

விரும்பத்தக்க அடிப்பகுதியை உடைய பொன்நிறமான மேருமலையாகிய வில்லினை உடைய வீரனாகிய சிவபெருமான் திரிபுரத்தை அழித்துத் தன் அருளை நிலைநாட்டிய அதிகை வீரட்டம் , பசிய கால்களை உடைய தவளைகள் பறை போல ஒலி செய்யப் பசிய இலைகளை உடைய நீர்தங்கும் பள்ளத்தில் அழகிய தண்டினை உடைய குவளை மலர்கள் மணம் வீச , அருகில் உலவும் சிவந்த கால்களை உடைய குருகுகள் குவளைமலர்களை அடையும் நீர் செறிந்த கெடிலநதியின் வடகரையில் உள்ளது .

குறிப்புரை :

வீரட்டம் கெடிலக்கரைத்து , வெங்கால் - வெய்ய அடி . குரு - செந்நிறம் ; ஈண்டுப் பொன் ( மேரு ) மலையைக் குறித்து ஆகுபெயர் . சிலை - வில் . சிலைவீரன் - வில்வீரன் ; சிவபிரான் . அருள் வைத்த வீரட்டம் - முப்புரம் எரித்து உயிர்களுக்கு மும்மலம் ஒழித்த திருவருளை வைத்த திருவீரட்டம் ; ` முப்புரமாவது மும்மலகாரியம் ` ( தி .10 திருமந்திரம் ). பைகால் தவளை - பசிய கால்களையுடைய தவளைகள் . பறைகொட்ட - பறையோசை என்னக் கத்த . பாசிலை - பசிய இலை . இலைநீர் - இலைகளுள்ளநீர் . நீர்ப்படுகர் - நீர் தங்கும் பள்ளம் . ஆற்றங் கரையில் தங்கி இருக்கும் நீர்ப்பகுதியைப் படுகர் என்பர் . அம் கால் குவளை - அழகிய தண்டுடைய குவளை மலர் . ( ஆகுபெயர் ). ஆவி உயிர்ப்ப - மணம்வீச , அருகு உலவும் குருகு . செங்கால் குருகு . ` இவை ` சுட்டன்று . குருகு என்றதன் பொருட்டாய் நின்றது . குருகுகள் சேர்தற்குக் குவளை மலர் இடம் . அதற்கு நீர்ப்படுகர் இடம் . அது கெடிலத்தினது . அதனால் , சேருங் கெடிலக்கரை என்றியைந்தது , பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது , சேர்தற்கு வினைமுதல் குருகுகள் , கரைத்து - கரையின் கண்ணது .

பண் :

பாடல் எண் : 3

அம்மலர்க் கண்ணிய ரஞ்சனஞ் செந்துவர் வாயிளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள்
தம்மருங் குற்கிரங் கார்தடந் தோண்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத் தேயெந்தை வீரட்டமே.

பொழிப்புரை :

அழகிய மலர் போன்ற மை எழுதிய கண்ணினராய்ச் சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய மகளிர் விரும்பத்தக்க முலைகளுக்குச் சந்தனமும் விலை மதிப்புடைய மாலைகளும் அணிந்தவராய் , தம் இடைக்கு இவை பாரமாகுமே என்ற இரக்கம் இல்லாதவராய்த் தம் பெரிய தோள்கள் நீந்துதலால் மெலிவு அடையும்படி நீராடுதலால் ஒலிக்கும் நீரை உடைய கெடிலநதியின் வடகரையில் உள்ளது எம்பிரானுடைய அதிகை வீரட்டம் .

குறிப்புரை :

அம் - அழகு . மலர்க்கண்ணியர் - செந்தாமரைப் பூவைப்போலுங் கண்ணுடையவர் . அஞ்சனம் - கண்ணிற்கிடும் மை . ` செந்துவர் வாய் ` ( தி .4 ப .103 பா .5). இளையார் - இளம்பெண்டிர் . வெம்மை - சூடு ; விருப்பம் . சாந்தம் - சந்தனம் . விலைபெறு மாலை - விலைமதிப்புடைய மாலைகள் . மருங்குற்கு இரங்கார் - இடைபடும் தளர்ச்சிக்கு வருந்தார் . தடந்தோள் மெலிய முழுகுவார் . குடைதல் :- ` மொய்யார்தடம் பொய்கைபுக்குமுகேர் என்னக் கையாற் குடைந்து குடைந்துன்கழல்பாடி ` இத்திருவாசகத்திற்குறித்த ` மொய்யார் தடம் பொய்கை ` திருப்பெருந்துறையில் உள்ள தீர்த்தம் ஆகும் . விம்முதல் - ஒலித்தல் . புனல் - வெள்ளம் ; நீர்ப்பெருக்கம் . ` புனல் சூழ் அதிகை ` ` புனலாட்டு ` ` சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி ` புனற் கெடிலம் - புனலையுடைய கெடிலநதி எந்தை - வீரட்டேசுவரர் ; தமிழ்ப் பெயர் மறைந்தது . கெடிலவாணர் ( தி .4 ப .10 பா .1-10) என்பது பழம் பெயராயிருக்கலாம் . கெடிலம் + வாழ்நர் . ` வாணர் ` மரூஉ . ` மன்றவாணர் ` ` அம்பலவாணர் ` ` அண்டவாணர் ` ` பாவாணர் ` ` தண்டமிழ் நூற் புலவாணர்க்கோரம்மானே ` ( தி .7 ப .96 பா .6) கடுநிலம் ( - வன்னிலம் ) கடிபுனலம் ( - விரைந்து வரும் புனலுடையது ) கடிபுலம் கேடில்புலம் என்றவற்றுள் ஒன்று மருவிக் கெடிலம் என்றாயிருக்கலாம் . மொழி முதலகரம் எகரமாதல் இயல்பு . வல்லம் - வெல்லம் . பலம் - பெலம் . சயம் - செயம் . கட்டியங்காரன் - கெட்டியங்காரன் ; கெட்டிக்காரன் . ரத்நம் - ரெத்நம் . ரங்கன் - ரெங்கன் என்பன முதலிய பற்பல இரு வழக்கிலும் உள . நெடில் குறிலாதலும் இயல்பே . வா , தா , காண் , தான் , நீன் முதலியன வ , த , கண் , தன் , நின் முதலியனவாகக் குறுகுதல் அறிக .

பண் :

பாடல் எண் : 4

மீனுடைத் தண்புனல் வீரட்ட ரேநும்மை வேண்டுகின்றதி
யானுடைச் சில்குறை யொன்றுள தானறுந் தண்ணெருக்கின்
தேனுடைக் கொன்றைச் சடையுடைக் கங்கைத் திரைதவழும்
கூனுடைத் திங்கட் குழவியெப் போதுங் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

மீன்களை உடைய குளிர்ந்த புனல் பாயும் அதிகையிலுள்ள வீரட்டரே ! உம்மை அடியேன் வேண்டுகின்ற சிறிய தேவை ஒன்று உள்ளது . குளிர்ந்த எருக்கம் பூ வொடு தேனை உடைய கொன்றைப் பூவை அணிந்த சடைக்கண் தேக்கி வைத்துள்ள கங்கையின் அலைகளில் தவழும் பிறைச் சந்திரனை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும் . அப்பிறை கங்கைவெள்ளத்தில் முழுகிப் போகாதபடி கவனிக்கவேண்டும் .

குறிப்புரை :

மீன்களைக் கொண்ட குளிர்ந்த வெள்ளத்தையுடைய கெடில நதிக்கரையில் உள்ள திருவீரட்டேசுவரரே , உம்மை யான் வேண்டுகின்றதாகிய சிறு குறை ஒன்று உளது . அது யாது என்னில் , நறிய தண்ணிய எருக்கம்பூவையும் தேனுடைய கொன்றைப்பூவையும் சூடிய சடையில் உடைதலையுற்ற கங்கையலையில் தவழும் வளைவுற்ற திங்கட்குழவியை எப்பொழுதும் கருத்திற் கொள்ளுதிர் என்பதேயாகும் . சில்குறை :- சின்மை சிறியதென்னும் பொருட்டு ` தண்புனல் ` ` தண்ணெருக்கு ` பண்புத்தொகை , புனல் வீரட்டம் ; புனல் வீரட்டா ; புனல் வீரட்டரே என்னும் முறையிற் கொள்க ; புனலுக்கும் வீரட்டர்க்கும் இயைபின்மையான் . கங்கைப் பேராற்றலையில் திங்கட்குழவி கெடாதவாறு எப்போதும் குறிக்கொண்டருளுக என்று குறையிரந்தார் . எருக்கின் தேனையுடைய சடை . கொன்றையை யுடைய சடை . சடையானது உடைய கங்கை ; இன் தேன் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 5

ஆரட்ட தேனு மிரந்துண் டகமக வன்றிரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி நீர்பரவைச்
சூரட்ட வேலவன் றாதையைச் சூழ்வய லாரதிகை
வீரட்டத் தானை விரும்பா வரும்பாவ வேதனையே.

பொழிப்புரை :

விரிந்த நீரை உடைய கடலில் சூரபதுமனை அழித்த வேலை ஏந்திய முருகனுடைய தந்தையாய் வயலால் சூழப்பட்ட அதிகை வீரட்டப் பெருமானைப் பண்டைப் பிறப்பில் வழிபட்டு உய்ய விரும்பாத கொடிய தீவினைப் பயனாகிய வேதனை இப்பிறப்பில் , வியர்வை சொட்டச் சொட்ட வீடு வீடாகத் திரிந்து யாவர் சமைத்த பொருளாயிருப்பினும் அதனைப் பிச்சை யேற்று உண்ணுமாறு செய்துள்ளது .

குறிப்புரை :

விரிநீர்ப்பரவை - பெருகிய நீரையுடைய பரவிய கடல் . பரவைச்சூர் - கடலுள் ஒளித்த சூரனை . அட்ட - கொன்ற . வேலவன் - வேற்படையையுடைய முருகக்கடவுள் . வேலவன்தாதை - வேற்கை யனுக்குத் தந்தையான சிவபிரான் . சூழ்வயல் - சூழ்ந்த வயல் . வயல் ஆர் - வயல்கள் நிறைந்த . அதிகை வீரட்டத்தானை - திருவதிகைக் கெடில வட வீரட்டத் துறையும் பெருமானை . விரும்பா - விரும்பித் தொழலில்லாத . அரும்பாவவேதனை - தீர்தற்கரிய தீவினைப் பயனாகிய துன்பம் . ` பாவவேதனை ` எழுவாய் . ` நிற்பித்திடுகின்றது ` பயனிலை . ஆர் அட்டது ஏனும் - யார் சமைத்ததெனினும் ; இன்னார் சமைத்தார் , யாம் உண்ணலாம் , யாம் உண்ணலாகாது என்று எண்ணும் நிலைமையின்றி , இழிந்தோர் அடினும் , அதை உட்கொண்டு பசித்தீயைப் போக்கும் நோக்குமட்டும் உடையராய் , வீடுதொறும் இரந்துண்டு திரியவும் , அவ்விரப்பும் அதனை விளைக்கும் நிரப்பும் வேர்ஊன்றி நிலைக்கவும் செய்கின்றது சிவவழிபாடு செய்யாத தீவினை . அகம் - வீடு , அகம் அகவன் :- வீடுவீடாகச் செல்பவன் . ` அகவன் ` அகவுதலையுடையவனாய் ; எனலும் மகவன் - மகவுடையனாய் எனலுமாம் . தி .11 பொன் வண்ணத்தந்தாதி 12. வலிவல மும்மணிக்கோவை முதலகவல் பார்க்க . ` அடுக்கிய சீலையராய் அகல் ஏந்தித் தசையெலும்பில் , ஒடுக்கிய மேனியோடு ஊண் இரப்பர் ஒள் இரணியனை , நடுக்கிய மாநரசிங்கனைச் சிம்புளதாய் நரல , இடுக்கிய பாதன்றன்தில்லை தொழாவிட்ட ஏழையரே .` ( கோயிற்றிருப் பண்ணியர் திருவிருத்தம் 36.) ` புகழ்மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண்டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் ; இனிச்சென்று இரவேன் ஒருவரை யாதொன்றுமே ; வருந்தேன் இறந்தும் பிறந்தும் ; மயக்கும் புலன்வழிபோய்ப் பொருந்தேன் . ( திருவிடைமருதூர் மும்மணிக்கோவை . 3, 21) பாடலையும் பார்க்க .

பண் :

பாடல் எண் : 6

படர்பொற் சடையும் பகுவா யரவும் பனிமதியும்
சுடலைப் பொடியுமெல் லாமுள வேயவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்ட ராவர்கெட் டேனடைந்தார்
நடலைக்கு நற்றுணை யாகுங்கண் டீரவர் நாமங்களே.

பொழிப்புரை :

அவர் தூய தெளிந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில் அமைந்த அதிகைப் பதியின் வீரட்டராவர் . பரவின பொன் போன்ற ஒலியுடைய சடையும் , பிளந்த வாயை உடைய பாம்பும் , குளிர்ந்த பிறையும் சுடுகாட்டுச் சாம்பலும் எல்லாம் அவருக்கு அடையாளங்களாக உள்ளன . அவருடைய திருநாமங்கள் அவரை அடைக்கலமாக அடைந்தவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் பெரிய துணையாகும் . அவ்வாறாகவும் அறிவுகெட்ட அடியேன் அவரைத் தொடர்ந்து பற்றிக் கொள்ள முயலாமல் விட்டு ஒழிந்தேனே .

குறிப்புரை :

அவர் தூய தெளிந்த நீருடைய கெடில நதிக் கரையில் திகழும் திருவீரட்டானேசுவரர் ஆவார் . அவர்க்கு உரிய அடையாளங்கள் சடையும் பாம்பும் பிறையும் சுடலைப் பொடியும் ஆகும் . அவர்க்கு அவை எல்லாம் உள்ளனவே . அவற்றைக்கண்டும் அவரைத் தொடர்ந்து பற்றிக்கொள்ள முயலாமல் விட்டொழிந்தேனே ! கெட்டேன் . அவர் திரு நாமங்கள் , அவரை அடைக்கலம் என்று அடைந்தவர் நடலையைத் தீர்ப்பதற்கு நல்ல துணையாவன . நடலை - வருத்தம் , துன்பம் . ` நடலைப் படாமை விலக்கு ` ( தி .4 ப .110 பா .6). திருநாமம் நற்றுணையாதலை , ` சாம் அன்று நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் உரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே ` ( தி .4 ப .103 பா .3.) ` உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின் என்னை மறக்கப் பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே .` ( தி .4 ப .112 பா .3) ` நற்றுணையாவது நமச் சிவாயவே ` ( தி .4 ப .11 பா .1) ` நடலைக்கு நற்றுணை `:- ` மறத்திற்கும் அஃதே ( அன்பே ) துணை ` ` துன்பத்திற்கியாரே துணையாவார் ` ( குறள் 76, 1299) என்புழிப்போல நடலையை நீக்குதற்கு நற்றுணை எனப் பொருளுரைக்க .

பண் :

பாடல் எண் : 7

காளங் கடந்ததொர் கண்டத்த ராகிக்கண் ணார்கெடில
நாளங் கடிக்கொர் நகரமு மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டும் யாழ்கொண்டுந் தாமங்ஙனே
வேளங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே.

பொழிப்புரை :

பார்வதியின் பொருட்டு விடத்தை இருத்திய நீலகண்டராகி , வானத்திலே உலவிச் செல்லும் திரிபுர அசுரரைத் திரிபுரத்தோடு அழித்த வீரத்தானத்தை உடைய பெருமானார் , நன்கு பொருந்திய தாளங்கள் , குழல் , யாழ் இவற்றைக் கொண்டு பாம்புகளைச் சூடி , காலையிலே விளக்கமாக உறைவதற்கு அதிகையாகிய ஒரு நகரமும் உடையராய் அவ்வாறே பாய்கால்களை உடைய கெடிலநதிக்கும் உரியவராவர் .

குறிப்புரை :

காளம் - நஞ்சு . கடந்தது - வென்றது . நஞ்சினது கொல்லும் ஆற்றலைக் கொன்று , அதனை உள்ளும் புகாமல் வெளியும் மீளாமல் , திருக்கழுத்தில் அடக்கிக் கொண்ட வெற்றியே கடத்தல் . ஓர் கண்டத்தர் - ஒப்பற்ற திருநீலகண்டர் . நஞ்சினை உட்கொள்ளலோ கான்றலோ செய்யாது தன்னுள் அடக்கிக் கொண்டது எவ்வாறு என்று கண்டோரும் கருதினோரும் ஓருங் கழுத்தினார் எனலுமாம் . ஓர் :- குறுக்கல் . கண் - ஆற்றுக்காற் பாய்ச்சலுக்குக் கரைக்கண் ஆங்காங்குளதாக்கும் நீர் புகுந்தோடும் புழை . கண் ஆர் கெடிலம் - அப் புழை பொருந்திய கெடிலநதி . ` நாளங் கடியும் அதற்கோர் நகரமும் . நாளங்கடி - நாளங்காடி , காலைக்கடை ? மாதிற்கு - உமையம்மையார்க்கு . தாளங்களும் குழலும் யாழும் கொண்டும் தாம் வேளங்கள் கொண்டும் விசும்புசெல்வார் . தாளம் முதலியன ஆடற்கேற்ப இயம்புதற்குக் கொள்ளப்பட்டன . வியாளம் - பாம்பு . அது வேளம் எனத் திரிந்தது . ` வேடங்கள் ` என்றது பிழை எனத் தோன்றுகின்றது . வேடம் என்ற அப் பாடத்திற்கு அவை இயம்புதற்கொப்ப ஆடற்பொருட்டு எனலாம் . விசும்பு செல்லல் - திரிபுரத்தை வெற்றிகொண்டு மீண்டு திருக்கயிலைக்குச் செல்லுதல் . அங்கு வெற்றிக் கூத்தாட , விசும்பில் ஆடிக் கொண்டே செல்கின்றார் . திருவதிகைத் திரிபுராந்தகர் எண்கையுடையாராதலின் , இத்தனையும் கொள்ளவல்லர் . கொடு கொட்டி யாடுங்கால் கொடிபுரை நுசுப்பினாள் சீரும் , பண்டரங்கம் ஆடுங்கால் தூக்கும் , காபாலம் ஆடுங்கால் பாணியும் தருவாள் என்றது ஏறமர் கடவுள் மூவெயில் எய்ததைக் குறித்த கலித்தொகைக் கடவுள் வாழ்த்து . இங்கு அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையையும் நோக்குக . இப் பாடலின் பொருள் நன்கு புலப்பட்டிலது .
சிற்பி