திருக்கழிப்பாலை


பண் :

பாடல் எண் : 1

நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப் பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்
எய்தப் பெறினிரங் காதுகண் டாய்நம் மிறையவனே.

பொழிப்புரை :

நெய்தல் நிலத்திலுள்ள நாரை தன் பார்ப்பு என்று கருதி அணுகி வெண்தாழை மடலைத் தழுவும் அழகிய கழிப் பாலையில் உறைபவனே ! இளைய பிறைச் சந்திரனோடு தலையில் பாம்பையும் அருகில் வைத்த திறம் பற்றி யாம் அறியோம் . தன் அருகே பிறைவரினும் பிறை அருகே தான் அணுகப் பெறினும் பாம்பு இரக்கமின்றி பிறையை விழுங்கிவிடும் என்பதனை நம் தலைவனாகிய நீ அறிவாய் அல்லையோ ?

குறிப்புரை :

நம் ( எம் ) இறைவனே , கழிப்பாலையில் உறைவாய் . பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம் . தன் அருகே பிறை எய்தப் பெறினும் பிறையைத் தான் எய்தப் பெறினும் பாம்பு இரங்காது விழுங்கிவிடும் . அது தெரிந்தும் அவ்விரண்டனையும் உடன் வைத்தது எப்பரிசினாலோ ? அறிய மாட்டோம் யாம் . கழிப்பாலை ஆதலின் , கழிகளில் மேயும் குருகு கைதை மடலைத் தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிப்போய்ப் புல்கும் . ` நெய்தற்குருகு ` என்பது குறித்துக் கலித் தொகையுரைக்குறிப்பில் , இ . வை . அ . ஐயர் எழுதிய ஆராய்ச்சியை நோக்குக . கைதை - தாழை . பைதல் - இளமை ( தி .4 ப .100 பா .2). பைதற் பிறை - இளம்பிறை . ஒடு என்னும் மூன்றனுருபும் உடன் என்பது ஒருங்கே வருதலும் உண்மையால் , ஈண்டு ஆராய்ச்சி இன்று .

பண் :

பாடல் எண் : 2

பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை யானிப் பெருநிலத்தே.

பொழிப்புரை :

மலையை ஒத்த உயர்ந்த கடற்கரை மீது பெரிய மணி பவளம் முத்து என்பனவற்றைப் பரவிச் செலுத்தி அலைகள் கொண்டு வந்து சேர்ப்பதனால் விளங்கித் தோன்றும் கழிப்பாலை என்ற திருத்தலத்தில் உறையும் எம் தலைவன் , எந்தை பெருமான் ஆகிய நீல கண்டன் இப்பேருலகில் அடியேனை அடிமையாகக் கொண்டவன் ஆவான் .

குறிப்புரை :

கருமா மிடறுடைக்கண்டன் எம்மான் கழிப்பாலை . திரைகள் , மணியும் பவளமும் முத்தும் கொணர்ந்து பரந்து உந்திவரைபொரு கரைமேல் எற்றப் பொலிந்து இலங்கும் கழிப்பாலை . கழிப்பாலைப் பெருமான் , எந்தைபெருமான் , இப்பெருநிலத்தே அவன் என்னை ஆளுடையான் . இதன் முதலடியில் பவளமும் முத்தும் என்று கொண்டு வெண்டளை கெடப் பதித்ததுமுண்டு . பழம் பதிப்பில் , ` பவளமுத்தும் ` என்றே உளது . பவளமும் முத்தும் என்று கொண்டார் ` பரந்துந்திவரை ` என்பது விளங்காய்ச் சீராகாமை உணர்ந்திலர் . ` பரந்துவரை ` என்று கொண்டாற்றான ` பவளமும் முத்தும் ` எனலாம் . மணியும் பவளமும் முத்தும் பரந்து வரைபொரு மால்கரைமேல் திரை கொணர்ந்து எற்றப்பொலிந்து இலங்கும் கழிப்பாலை என்பதே நேரிது . பரத்தல் வரையைப் பொருதல் இரண்டும் கரைக்குரியன . வரை பொருகரை - மலையை ஒக்கும்கரை . கொணர்தலும் எற்றுதலும் திரையின் வினைகள் . மணி பவளம் முத்து மூன்றும் திரையாற் கொணரப்படுவன . அதனால் , ` உந்தி ` என்றது ஈண்டுப் பொருந்தாமற் போகும் . பரந்து பொருகரை என்று இயைதலின் அதன் இடையே உந்துதல் ஒல்லாது . உந்திக் கொணர்ந்து எற்றுவன திரை ஆதலின் , அம் முத்தொழிலுள் ஒன்று . ஆண்டு நில்லாது . பருத்த மாமணி ; கரிய அழகிய மிடறு (- கழுத்து ). எற்றுதல் - மோதுதல் . ` இப்பெருநிலத்தே ` என்றும் , ` இவ்வகலிடத்தே ` என்றும் முன் ( தி .4 ப .81 பா .4.) ` இந்த மாநிலத்தே ` என்றும் குறித்ததை நோக்கி இவ்வுலகின் சிறப்பை எண்ணிக் கொள்க . ` பல்யோனியெல்லாம் ஒழித்து மானுடத்து உதித்தல் கண்டிடிற் கடலைக் கையானீந்தினன் காரியங்காண் ` ` நரர்பயில் தேயந்தன்னில் நான்மறை பயிலா நாட்டில் விரவுதல் ஒழிந்து தோன்றல் மிக்க புண்ணியத்தானாகும் , தரையினிற் கீழைவிட்டுத் தவஞ்செய் சாதியினில் வந்து பரசமயங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே !` சைவமாஞ் சமயஞ்சாரும் ஊழ் பெறலரிது சால உயர் சிவஞானத்தாலே போழிள மதியினானைப் போற்றுவார் அருள் பெற்றாரே ! ` வானிடத்தவரும் மண்மேல் வந்து அரன்றனை அர்ச்சிப்பர் `. ` இந்தப் பார்மேல் நாட்டிய நற்குலத்தினில் வந்து அவதரித்துக் குருவால் ஞான நிட்டை அடைந்து அடைவர் நாதன்றாள் `. ( சிவஞானசித்தியார் ). கருமாமிடறுடைக் கண்டன் - திரு நீலகண்டன் . எம்மான் - எம் மகன் (- கடவுள் ). எந்தை - எம் அப்பன் . பெருமான் - பெருமகன் (- பெருங்கடவுள் ,) பெரும் பெயர்ப் பொருள் , பெரியோன் . பரத்துவப் பொருள் , என்னை ஆள் உடையான் :- அடியேனை ஆண்டவன் .

பண் :

பாடல் எண் : 3

நாட்பட் டிருந்தின்ப மெய்தலுற் றிங்கு நமன்றமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார் தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே.

பொழிப்புரை :

இப்பரந்த உலகில் பல காலம் உயிர்வாழ்ந்து சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொள்ளப்பட்டு அழிவதன் முன்னம் , குளிர்ந்த நீர் நிலைகளையும் , தண்டு நீண்ட தாமரைப் பொய்கைகளையும் உடைய அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி வல்லமை உடையோமாய் யமபயத்திலிருந்து விடுபட்டோம் .

குறிப்புரை :

குளிர் பொருந்திய நீர் நிலைகளில் தாளூன்றிய தாமரைப் பூக்களையுடைய பொய்கைகளைக்கொண்ட தண்ணிய திருக்கழிப்பாலையண்ணலாகிய முழுமுதல்வனுக்கு, இவ்வகன்ற மண்ணுலகிலே, வன்மையுடையேமாய் ஆட்பட்டு நின்றோம். வன்மை யாது எனில், நமன் தமரால் கொள்ளப்பட்டு ஒழிவதன் முந்திச் சிவனடிமையாகி நின்றதாகும். வன்மை இன்றேல், நமன் தமரால் கொள்ளப்பட்டொழிவது திண்ணம் என்றவாறு. நாள் பட்டிருத்தல் - நெடுங்காலம் வாழ்தல். இன்பம் எய்தல் உறுதல் - சிற்றின்பம் (உலகின்பம்) அடைய விரும்புதல், இங்கு - இவ்வுலகில், நமன் - எல்லாரும் நம்மவன் என்று கொள்ள நடுவனாயுள்ள இயமன். தமர் - எமதூதர். கோட்படுதல் - கொள்ளப்படுதல்; ஒழிவது - இறப்பது. முந்துறல் - முந்திக் கொள்ளல். `ஒழிந்தம்` `வல்லம்` இரண்டும் தன்மைக்கண் ஒருமையைப் பன்மையாகக் கூறும் உயர்சொற்கிளவி. அன்று ஏ அசை. வினாவுமாம். `வல்லமாய் ஆட்பட்டொழிந்தம்`.
சிற்பி